வாழ்க்கை சரிதை
மிஷனரி ஆர்வத்தை விட்டுக்கொடுக்காததால் அபரிமிதமான ஆசீர்வாதம்
டாம் குக் சொன்னது
அமைதியான மத்தியான வேளையில் திடீரென்று துப்பாக்கிச் சத்தம் காதைப் பிளந்தது. குண்டுகள் எங்கள் தோட்டத்து மரங்களை துளைத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தன. என்ன நடக்கிறதென்று எங்களுக்கு புரியவில்லை. திடீர் அரசியல் புரட்சி நடந்ததாகவும், படைத் தளபதியான இடி ஆமின் உகாண்டாவில் ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் சீக்கிரத்தில் கேள்விப்பட்டோம். இது நடந்தது 1971-ம் ஆண்டில்.
எவ்வளவோ அமைதியாக இருந்த இங்கிலாந்தை விட்டுவிட்டு நானும் என் மனைவி ஆன்னும் ஏன் இந்த ஆபத்தான ஆப்பிரிக்க பகுதியில் குடிபுகுந்தோம் தெரியுமா? ஏனென்றால், எனக்கு கொஞ்சம் துணிச்சல் ஜாஸ்தி என்று நினைக்கிறேன்; அதைவிட முக்கிய காரணம், என் பெற்றோரின் முன்மாதிரிதான். ராஜ்ய பிரசங்க ஊழியத்தில் அவர்கள் வைராக்கியமாக ஈடுபட்டதைப் பார்த்துப் பார்த்தே நான் மிஷனரி ஆர்வத்தை வளர்த்துக்கொண்டேன்.
1946-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது; புழுக்கமான அந்த நாள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. வீட்டின் முன்வாசலில் நின்று மணிக்கணக்காக இரண்டு சாட்சிகளோடு அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பெயர் ஃப்ரேசர் ப்ராட்பெரி, மேமி ஷ்ரிவ். அந்த சாட்சிகள் அடிக்கடி வீட்டிற்கு வந்து போனார்கள். சில மாதங்களில் எங்கள் குடும்ப வாழ்க்கை அடியோடு மாறியது.
என் பெற்றோரின் தைரியமான முன்மாதிரி
என் பெற்றோர் பல விதமான சமூகப் பணிகள் செய்து வந்தார்கள். உதாரணத்திற்கு, பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முன்பு, வின்ஸ்டன் சர்ச்சிலின் போஸ்டர்களை எங்கள் வீட்டில் ஒட்டி வைத்திருந்தார்கள். போருக்குப் பிறகு தேசிய அளவில் நடந்த தேர்தல்களின்போது, எங்கள் வீடு கன்சர்வேட்டிவ் கட்சியின் மன்றமாக செயல்பட்டது. சர்ச்சிலும் சமுதாயத்திலும் இருந்த பெரும் புள்ளிகளோடெல்லாம் எங்கள் குடும்பத்திற்கு தொடர்பிருந்தது. அப்போது எனக்கு ஒன்பது வயதுதான்; இருந்தாலும் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாறிக்கொண்டிருந்ததைப் பார்த்து எங்கள் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தது எனக்குப் புரிந்தது.
எங்களோடு பழகிய சாட்சிகள் மனப்பூர்வமாகவும் தைரியமாகவும் சேவை செய்ததைப் பார்த்தது என் பெற்றோருக்கு உந்துதலாக இருந்தது; அவர்களும் பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில், என் அப்பா எங்கள் சொந்த கிராமமான ஸ்பான்டனில் இருந்த முக்கிய ஷாப்பிங் ஏரியாவில் மைக் மூலம் பேச்சுக்கள் கொடுக்க ஆரம்பித்தார்; பிள்ளைகளாகிய நாங்களோ எல்லார் கண்ணிலும் படும் விதத்தில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றோம். உண்மையைச் சொன்னால், பள்ளியில் என்னோடு படித்த பிள்ளைகளை பார்த்துவிட்டால் போதும், எங்காவது ஓடி ஒளிந்துகொள்ளலாம் போல் இருக்கும்.
என் பெற்றோரின் முன்மாதிரியைப் பார்த்து, என் அக்கா டாஃப்னி பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். அவர் 1955-ல் உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டு, மிஷனரியாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார்.a ஆனால் என் தங்கை ஸோயி யெகோவாவை விட்டு பிரிந்து போனாள்.
இதற்கிடையே, படம் வரையும் கலையையும் க்ராஃபிக் ஆர்ட்ஸையும் படித்து முடித்தேன். அந்த சமயத்தில், என்னோடு படித்த மாணவர்கள் கட்டாய ராணுவ சேவை பற்றியே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மத நம்பிக்கையின் காரணமாக நான் அதில் சேர மாட்டேன் என அவர்களிடம் சொன்னபோது, சும்மா விளையாட்டுக்கு சொல்கிறேன் என்று நினைத்தார்கள். நிறைய சமயங்களில், இந்த விஷயத்தை வைத்தே அவர்கள் சிலரிடம் பைபிளிலிருந்து என்னால் பேச முடிந்தது. சீக்கிரத்திலேயே, ராணுவ சேவையை மறுத்ததற்காக எனக்கு 12 மாத சிறை தண்டனை கிடைத்தது. கலைக் கல்லூரி மாணவியான ஆன் பைபிளின் செய்தியில் ஆர்வம் காட்டினாள்; பிற்பாடு என் மனைவியுமானாள். அவள் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட அனுபவத்தை அவளே உங்களிடம் சொல்வதைக் கேளுங்கள்.
ஆன் சத்தியத்தை கற்றுக்கொண்ட விதம்
“என் வீட்டிலுள்ளவர்களுக்கு மதத்தில் ஈடுபாடில்லை, நானும் எந்த மதத்திலும் சேரவில்லை. ஆனால் மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை இருந்தது, அதனால் என் நண்பர்களுடன் சேர்ந்து எல்லா சர்ச்சுகளுக்கும் போனேன். சாட்சிகளாக இருந்த டாமும் அவரது நண்பரும் கல்லூரியில் மற்ற மாணவர்களோடு சுவாரஸ்யமாக பேசியதையெல்லாம் நான் கேட்டபோது பைபிளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ராணுவ சேவை செய்ய மறுத்ததன் காரணமாக டாமும் அவரது நண்பரும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டபோது நான் அதிர்ந்து போனேன்.
“டாம் சிறையில் இருந்தபோது நாங்கள் தவறாமல் கடிதம் எழுதிக்கொண்டோம். அதனால் பைபிளில் எனக்கிருந்த ஆர்வம் இன்னும் அதிகரித்தது. மேல்படிப்பிற்காக நான் லண்டன் சென்றபோது ம்யூரியல் ஆல்ப்ரெக்ட் என்ற சாட்சியோடு பைபிளை படிக்க ஒத்துக்கொண்டேன். அவர் எஸ்டோனியாவில் மிஷனரியாக இருந்தவர்; அவரும் அவரது அம்மாவும் எனக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்தார்கள். சில வாரங்களிலேயே கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தேன், அதோடு விக்டோரியா ஸ்டேஷனுக்கு வெளியே நின்றுகொண்டு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை கொடுக்க ஆரம்பித்தேன்.
“லண்டனின் தென் பகுதியில் இருந்த சௌத்வர்க் சபைக்கு நான் போய்வந்தேன். பல நாடுகளைச் சேர்ந்த ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அந்த சபையில் இருந்தார்கள்; அவர்களில் நிறைய பேர் வசதி வாய்ப்பு குறைந்தவர்கள். முன்பின் அறியாத போதிலும் சொந்த குடும்பத்தில் ஒருத்தியைப் போல் அவர்கள் என்னை நடத்தினார்கள். அந்தச் சபையில் நான் கண்கூடாக பார்த்த அன்புதான், இதுவே சத்தியம் என்பதை தெளிவாக எனக்கு உணர்த்தியது. 1960-ல் நான் முழுக்காட்டப்பட்டேன்.”
ஒரேவித இலக்குகள்—பலவித சூழ்நிலைகள்
பிற்பாடு ஆன்னும் நானும் 1960-ல் திருமணம் செய்துகொண்டோம். மிஷனரி சேவை செய்வதே எங்கள் இருவரின் இலக்காக இருந்தது. ஆன் கர்ப்பமானபோதோ எங்கள் சூழ்நிலை மாறியது. எங்கள் மகள் சாரா பிறந்த பிறகும், ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு அதிக தேவையிருந்த ஒரு நாட்டிற்கு செல்ல ஆன்னும் நானும் விரும்பினோம். அநேக நாடுகளில் வேலை கேட்டு விண்ணப்பம் செய்தேன். கடைசியாக மே 1966-ல், உகாண்டாவின் கல்வி அமைச்சகம் எனக்கு வேலை போட்டுத் தருவதாக கடிதம் அனுப்பியிருந்தது. ஆனால் அதற்குள் ஆன் மறுபடியும் கர்ப்பமாகியிருந்தாள். அப்படிப்பட்ட சமயத்தில் குடிமாறிச் செல்வது நல்லதல்ல என்று சிலர் நினைத்தார்கள். நாங்கள் எங்கள் டாக்டரிடம் கேட்டோம்; “நீங்கள் போவதாக இருந்தால், உங்கள் மனைவிக்கு ஏழு மாதம் ஆவதற்குள் போய்விடுவதுதான் நல்லது” என்று அவர் சொன்னார். ஆகவே உடனடியாக உகாண்டாவிற்கு கிளம்பினோம். இதனால் எங்கள் இரண்டாவது மகள் ரேச்சலை இரண்டு வயதில்தான் என் பெற்றோர் பார்த்தார்கள். இப்போது நாங்களே தாத்தா பாட்டியாக இருக்கும் நிலையில், எங்கள் அன்பு பெற்றோர் செய்த தியாகத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
1966-ல் உகாண்டாவிற்கு போனபோது நாங்கள் பூரிப்படைந்தோம், அதேசமயம் திக்குமுக்காடிப் போனோம். விமானத்திலிருந்து இறங்கியவுடன் பளிச் பளிச்சென்ற விதவிதமான கலர்கள் எங்கள் கண்களைப் பறித்தன. நாங்கள் முதன்முதலாக குடிபுகுந்த வீடு, இகாங்கா என்ற சிறிய பட்டணத்திற்கு அருகே இருந்தது; அது, நைல் நதி உற்பத்தியாகும் இடத்தில் அமைந்திருந்த ஜின்ஜா என்ற பட்டணத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. ஜின்ஜாவில் ஒரு ஒதுக்குப்புற தொகுதியாக கூடிவந்த சாட்சிகள்தான் எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருந்தவர்கள். மிஷனரிகளான கில்பர்ட் மற்றும் ஜோன் வால்டர்ஸும், ஸ்டீவன் மற்றும் பார்பரா ஹார்டியும் அந்தத் தொகுதியினருக்கு உதவி செய்து வந்தார்கள். அவர்களுக்கு நாங்களும் உதவி செய்ய விரும்பியதால் ஜின்ஜாவுக்கு வேலை மாற்றல் கேட்டு விண்ணப்பித்தேன். ரேச்சல் பிறந்த கொஞ்ச காலத்திற்குள் நாங்கள் ஜின்ஜாவுக்கு குடிமாறிப் போனோம். அங்கே விசுவாசமிக்க சாட்சிகள் அடங்கிய சிறிய தொகுதியோடு சேவிக்கும் சந்தோஷம் எங்களுக்குக் கிடைத்தது; அத்தொகுதி வளர்ச்சியடைந்து, உகாண்டாவின் இரண்டாவது சபையாக ஆனது.
அயல்நாட்டில் குடும்பமாக சேவித்தல்
பிள்ளைகளை வளர்ப்பதற்கு மிகச் சிறந்த சூழலை தேர்ந்தெடுத்திருந்ததாக ஆன்னும் நானும் உணர்ந்தோம். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரிகளோடு ஊழியம் செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது; புதிய சபையின் வளர்ச்சிக்கு உதவவும் முடிந்தது. அடிக்கடி எங்களை வீட்டில் வந்து சந்தித்த உகாண்டா நாட்டு சகோதர சகோதரிகளின் கூட்டுறவை நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். குறிப்பாக ஸ்டான்லி மற்றும் எஸினாலா மாகூம்பா தம்பதியினர் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தந்தார்கள்.
எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சகோதரர்கள் மட்டுமே அல்ல, விதவிதமான வியக்கத்தக்க காட்டு மிருகங்களும்தான். ராத்திரி வேளைகளில் நீர்யானைகள் நைல் நதியிலிருந்து கரையேறி நேராக எங்கள் வீட்டுப் பக்கம் வந்ததுண்டு. ஒருமுறை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் 18 அடி மலைப்பாம்பை பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. சிலசமயங்களில் வனவிலங்கு சரணாலயங்களுக்கு நாங்களே போய், ஹாயாக சுற்றிக்கொண்டிருந்த சிங்கங்களையும் மற்ற மிருகங்களையும் பார்த்தோம்.
ஊழியத்திற்கு போனபோது, ஏதோ காணாததைக் கண்டதுபோல் மக்கள் எங்களைப் பார்த்தார்கள். குழந்தைகளுக்கான தள்ளுவண்டியை அவர்கள் அதற்கு முன் பார்த்ததே இல்லையாம். வீடு வீடாக போனபோது பொடிசுகள் பட்டாளம் வால் மாதிரி எங்கள் பின்னாலேயே வந்தது. எல்லாரும் எங்களை மரியாதையோடு, அதுவும் கண் இமைக்காமல் பார்த்தார்கள்; வெள்ளைக்கார குழந்தையை தொட்டும் பார்த்தார்கள். அவர்கள் மிகுந்த மதிப்பு மரியாதை காட்டியதால் சந்தோஷமாக சாட்சி கொடுக்க முடிந்தது. பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது மிக சுலபமாக இருந்ததால், எல்லாருமே சத்தியத்திற்கு வந்துவிடுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் பைபிள் கண்டிக்கும் பாரம்பரியங்களை கைவிடுவது அநேகருக்கு கஷ்டமாக இருந்தது. ஆனாலும் பைபிளின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை நிறைய பேர் ஏற்றுக்கொண்டார்கள்; சபை வளர்ந்தது. 1968-ல் ஜின்ஜாவில் நடந்த முதல் வட்டார மாநாடு ஒரு மைல்கல்லாக இருந்தது. எங்களோடு பைபிளை படித்தவர்களில் சிலர் நைல் நதியில் முழுக்காட்டுதலைப் பெற்றது மறக்க முடியாத சம்பவம். ஆனால் எங்கள் சமாதானம் சீக்கிரத்தில் பறிபோகவிருந்தது.
தடை—விசுவாசத்திற்கும் படைப்பாற்றலுக்கும் ஒரு பரீட்சை
1971-ல் படைத் தளபதி இடி அமீன் ஆட்சியைக் கைப்பற்றினார். ஜின்ஜா முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. நாங்கள் தோட்டத்தில் உட்கார்ந்து நிதானமாக டீ குடித்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் ஆரம்பத்தில் விவரித்த சம்பவம் நடந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஏராளமான ஆசிய சமுதாயத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்தார்கள்; ஸ்கூல்களும் ஆஸ்பத்திரிகளும் இருந்தும் இல்லாதது போன்ற நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, யெகோவாவின் சாட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கடும் அறிவிப்பு வந்தது. நாங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக, கல்வித் துறை எங்களை தலைநகரான கம்பாலாவிற்கு அனுப்பியது. அங்கே நாங்கள் போனது இரண்டு வழிகளில் பயனளித்தது. கம்பாலாவில் நாங்கள் அவ்வளவாக அறியப்படாததால் அதிக சுதந்திரமாக நடமாட முடிந்தது. அதோடு, சபை வேலைகளையும் வெளி ஊழியத்தையும் நிறைய செய்ய முடிந்தது.
எங்களைப் போன்ற அதே சூழ்நிலையில் இருந்தவர்கள் ப்ரையன் மற்றும் மெரியன் வாலேஸும் அவர்களது இரண்டு பிள்ளைகளும்; அவர்களும் உகாண்டாவில் தங்கிவிட முடிவு செய்தார்கள். அந்தக் கஷ்டமான காலங்களில் கம்பாலா சபையில் அவர்களோடு சேர்ந்து சேவை செய்தது ரொம்ப அருமையான அனுபவம். தடையுத்தரவின் கீழிருந்த மற்ற நாடுகளைச் சேர்ந்த சகோதரர்களின் ஊழியத்தைப் பற்றி நாங்கள் ஏற்கெனவே வாசித்திருந்த விஷயங்கள் அந்த சமயத்தில் விசேஷ உற்சாகமளித்தன. நாங்கள் சிறுசிறு தொகுதிகளாக கூடினோம்; மாதத்திற்கு ஒருமுறை என்டெபி தாவரவியல் பூங்காவில் சற்று பெரிய தொகுதியாக கூடினோம், ஆனால் பார்ட்டி நடத்துவது போல் காட்டிக்கொண்டோம். என் இரண்டு பிள்ளைகளுக்கும் அது சூப்பர் ஐடியாவாக தோன்றியது.
நாங்கள் பிரசங்க வேலையை மிக ஜாக்கிரதையாக செய்ய வேண்டியிருந்தது. உகாண்டா மக்களின் வீடுகளுக்கு வெள்ளைக்காரர்கள் போவது பளிச்சென்று எல்லார் கண்ணிலும் படும். ஆகவே கடைகளிலும், அப்பார்ட்மென்ட்டுகளிலும், சில கல்லூரி வளாகங்களிலும் பிரசங்கித்தோம். கடைகளில் நான் ஒரு உத்தியை பயன்படுத்தினேன். சர்க்கரை அல்லது அரிசி போன்ற தீர்ந்துபோன சரக்கை கேட்பேன். நாட்டு நிலவரத்தை குறித்து கடைக்காரர் புலம்ப ஆரம்பித்தால் ராஜ்ய செய்தியை சொல்ல ஆரம்பிப்பேன். இந்த உத்தி நன்கு வேலை செய்தது. அவ்வப்போது, கடைக்காரர் மறுசந்திப்புக்கு ஒப்புக்கொள்வதோடு கிராக்கியில் உள்ள சரக்கை கொஞ்சம் கொடுத்தும் அனுப்புவார்.
இதற்கிடையே, வன்முறை எல்லா இடங்களிலும் தலைவிரித்தாடியது. உகாண்டாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவு மோசமாகிக்கொண்டே போனதால் அதிகாரிகள் என் வேலை ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. ஆகவே உகாண்டாவில் எட்டு வருடங்கள் செலவிட்ட பிறகு, 1974-ல் சகோதரர்களிடம் பிரியாவிடை பெற வேண்டிய சமயம் வந்தது. இருந்தாலும் எங்கள் மிஷனரி ஆர்வம் குறையவில்லை.
நியூ கினியில் ஊழியம்
1975, ஜனவரியில் பாப்புவா-நியூ கினியில் ஊழியம் செய்ய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம். அந்த பசிபிக் பிராந்தியத்தில் எட்டு ஆண்டுகள் சந்தோஷமாக ஊழியம் செய்தோம். அங்கிருந்த சகோதரர்களோடு பழகியதும் ஊழியத்தில் ஈடுபட்டதும் மனநிறைவைத் தந்தன, பலனும் அளித்தன.
பாப்புவா-நியூ கினியில் நாங்கள் குடும்பமாக செலவழித்த காலத்தை நினைத்தாலே எங்கள் ஞாபகத்திற்கு வருவது பைபிள் நாடகங்கள்தான். ஒவ்வொரு வருடமும் மாவட்ட மாநாட்டு நாடகங்களில் பங்குகொண்டோம்; ஒத்திகை சமயங்களில் ஒரே கூத்துதான்! ஆவிக்குரிய சிந்தையுள்ள அநேக குடும்பங்களோடு நெருங்கிப் பழகி மகிழ்ந்தோம்; இதனால் எங்கள் பிள்ளைகளுக்கு அதிக உற்சாகம் கிடைத்தது. எங்கள் மூத்த மகள் சாரா, விசேஷ பயனியரான ரே ஸ்மித் என்பவரை மணந்தாள். இரியன் ஜாயாவின் (தற்போது பாப்புவா, இந்தோனேஷிய மாநிலம்) எல்லைக்கு அருகே அவர்கள் இருவரும் விசேஷ பயனியர்களாக சேவை செய்தார்கள். அங்கிருந்த கிராமத்தில் ஒரு ஓலைக் குடிசையில் தங்கினார்கள். அங்கே செய்த ஊழியம் தனக்கு சிறந்த பயிற்சி அளித்ததாக சாரா சொல்கிறாள்.
மாறும் சூழ்நிலைகளை அனுசரித்தல்
அந்த சமயத்திற்குள் என் பெற்றோரை கிட்டே இருந்து கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களே எங்களோடு வந்து தங்க சம்மதித்தார்கள், ஆகவே நாங்கள் மறுபடியும் இங்கிலாந்திற்கு போக வேண்டிய அவசியமில்லாமல் போனது. நாங்கள் எல்லாரும் 1983-ல் ஆஸ்திரேலியாவிற்கு குடிமாறிப் போனோம். ஜப்பானில் இருந்த என் அக்கா டாஃப்னியுடனும் என் பெற்றோர் கொஞ்ச காலம் தங்கினார்கள். அவர்கள் இறந்த பிறகு ஆன்னும் நானும் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தோம்; இதனால் எங்களுக்கு ஒரு விசேஷ வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
நாங்கள் பயனியர் சேவையை ஆரம்பித்து கொஞ்ச காலத்திற்குள்ளேயே வட்டார ஊழியம் செய்யும்படி அழைக்கப்பட்டோம். சிறு வயதிலிருந்தே வட்டார கண்காணியின் விஜயத்தை ஒரு விசேஷ நிகழ்ச்சியாக நான் கருதி வந்திருந்தேன். இப்போது நானே வட்டார கண்காணியாக சேவிக்க வேண்டியிருந்தது. அதுவரை நாங்கள் செய்த ஊழியத்திலேயே மிக சவாலான ஒன்றாக அது இருந்தது. ஆனால் நிறைய சமயங்களில் யெகோவாவின் உதவியை புதுப் புது விதங்களில் ருசித்தோம்.
சகோதரர் தியோடர் ஜாரக்ஸ் 1990-ல் ஆஸ்திரேலியாவிற்கு மண்டல விஜயம் செய்தபோது, வெளிநாட்டில் முழுநேர ஊழியம் செய்யும் வயதை நாங்கள் தாண்டிவிட்டோமா என்று அவரிடம் கேட்டோம். “நீங்கள் சாலமன் தீவுகளுக்குப் போனால் என்ன?” என்றார் அவர். ஆகவே ஆன்னும் நானும் 50 வயதைத் தாண்டிவிட்ட அந்த சமயத்தில், முதன்முதலாக, முறைப்படி நியமிக்கப்பட்ட மிஷனரிகளாக சேவிக்க புறப்பட்டோம்.
“சந்தோஷ தீவுகளில்” சேவித்தல்
சாலமன் தீவுகள், சந்தோஷ தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன; கடந்த பத்து வருடங்களாக நாங்கள் இங்கு ஊழியத்தில் செலவிட்ட காலம் உண்மையில் சந்தோஷ காலமே. சாலமன் தீவுகளில் நானும் ஆன்னும் மாவட்ட ஊழியம் செய்தபோது அங்குள்ள சகோதர சகோதரிகளின் கனிவான அன்பை அனுபவித்தோம். அவர்களுடைய உபசரிக்கும் குணம் எங்கள் நெஞ்சைத் தொட்டது. எனக்குத் தெரிந்த அரைகுறை பிட்ஜின் பாஷையில் நான் பேசியதையெல்லாம் அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள்; சாலமன் தீவுகளின் பிட்ஜின் பாஷை, மிகக் குறைவான சொற்கள் உடைய உலக பாஷைகளில் ஒன்றாகும்.
நாங்கள் சாலமன் தீவுகளுக்கு சென்ற கொஞ்ச காலத்திற்குள்ளேயே, மாநாட்டு மன்றத்தை பயன்படுத்த விடாமல் தடுக்க எதிரிகள் முயன்றார்கள். ஆங்கிலிகன் சர்ச் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக குற்றம் சாட்டியது; ஹோனியாராவிலிருந்த சாட்சிகள், தங்களது மாநாட்டு மன்றத்தை அவர்களுடைய நிலத்திலும் சேர்த்து கட்டியிருந்ததாக புகார் செய்தது. அரசாங்கமும் அதற்கு ஆதரவு அளித்தது, ஆகவே உச்சநீதி மன்றத்திற்கு நாங்கள் மேல் முறையீடு செய்தோம். 1,200 இருக்கைகள் கொண்ட எங்கள் புதிய மாநாட்டு மன்றம் இடிக்கப்படுமா என்பது நீதிமன்றத் தீர்ப்பையே சார்ந்திருந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒரு வாரம் முழுவதும் நடந்தது. எங்களுக்கு எதிராக வழக்காடிய எதிர்தரப்பு வக்கீல் வெற்றி தனக்குத்தான் என்பதுபோல் கர்வம் தொனிக்க பேசினார். அதன் பிறகு நியுஜிலாந்தைச் சேர்ந்த எங்கள் வக்கீலான சகோதரர் வாரன் காத்கர்ட், எதிர்தரப்பு வாதங்கள் ஒவ்வொன்றையும் தவிடுபொடியாக்கும் விதத்தில் அடுக்கடுக்காக நியாயங்களை எடுத்துக்காட்டி திறமையாக வாதாடினார். வெள்ளிக்கிழமைக்குள், இவ்வழக்கு பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவியது; சர்ச் பிரமுகர்களும் அரசாங்க அதிகாரிகளும் நம் கிறிஸ்தவ சகோதரர்களும் நீதிமன்றத்தில் நிரம்பி வழிந்தனர். அதிகாரப்பூர்வ நீதிமன்ற அட்டவணை அறிவிப்பில் இருந்த ஒரு தவறு இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது இவ்வாறு குறிப்பிட்டது: “சாலமன் தீவுகள் அரசாங்கம் மற்றும் மெலனீசிய சர்ச் Vs. யெகோவா.” வழக்கு எங்கள் பக்கம்தான் ஜெயித்தது.
இருந்தாலும் சந்தோஷ தீவுகளின் அமைதி நீடிக்கவில்லை. மறுபடியும் கலவரமும் திடீர் ராணுவ புரட்சியும் வெடித்தன. இனப்பகைமை உள்நாட்டுப் போருக்கு வழிநடத்தியது. ஜூன் 5, 2000-ல் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது, தலைநகரை போராளிகள் கைப்பற்றினார்கள். சில வாரங்களுக்கு எங்கள் மாநாட்டு மன்றம், வீடுவாசலை இழந்தோரின் புகலிடமானது. எதிரும் புதிருமான இனத்தொகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ சகோதரர்கள் ஐக்கியப்பட்ட ஒரே குடும்பமாக மாநாட்டு மன்றத்தில் சேர்ந்து வசித்ததைப் பார்த்து அதிகாரிகள் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள். இது மிகச் சிறந்த சாட்சியாக அமைந்தது!
போராளிகள்கூட யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலைமையை மதித்தார்கள். இதனால், எதிரி படையின் எல்லையில் இருந்த சிறிய தொகுதியான சகோதரர்களுக்கு பிரசுரங்களையும் மற்ற பொருட்களையும் ஒரு லாரியில் அனுப்ப, படைத்தலைவர் ஒருவரின் அனுமதியைப் பெற முடிந்தது. சில மாதங்கள் எங்களை விட்டுப் பிரிந்திருந்த சாட்சிகளின் குடும்பங்களை நாங்கள் மறுபடியும் சந்தித்தபோது யாராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
யெகோவாவின் சேவையில் நாங்கள் செலவிட்ட காலத்தை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பெற்றோராக, எங்கள் இரு மகள்களும் அவர்களுடைய கணவர்களான ரே மற்றும் ஜானோடு சேர்ந்து யெகோவாவை தொடர்ந்து உண்மையோடு சேவித்து வருவதைப் பார்க்கும் சந்தோஷத்தைப் பெற்றிருக்கிறோம். மிஷனரி சேவையில் அவர்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.
கடந்த 12 ஆண்டுகளாக ஆன்னும் நானும் சாலமன் தீவுகளின் கிளை அலுவலகத்தில் சேவிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். இந்தக் காலப்பகுதியில் சாலமன் தீவுகளைச் சேர்ந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக, அதாவது 1,800-க்கும் அதிகமாக உயர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். சமீபத்தில், நியு யார்க், பாட்டர்ஸனில் கிளை அலுவலக குழு அங்கத்தினர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ளும் இன்னொரு பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. நிச்சயமாகவே, மிஷனரி ஆர்வத்தை விட்டுக்கொடுக்காததால் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெற்று, ஆத்மதிருப்தியுடன் வாழ்ந்திருக்கிறோம்.
[அடிக்குறிப்பு]
a ஆங்கில காவற்கோபுரம், ஜனவரி 15, 1977 இதழில், “நாங்கள் தள்ளிப்போடவில்லை” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 23-ன் படம்]
1960-ல் எங்கள் திருமண நாளின்போது
[பக்கம் 24-ன் படம்]
உகாண்டாவில், ஸ்டான்லி மற்றும் எஸினாலா மாகூம்பா தம்பதியினர் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் தந்தார்கள்
[பக்கம் 24-ன் படம்]
பக்கத்து குடிசைக்குள் சாரா நுழைகிறாள்
[பக்கம் 25-ன் படம்]
சாலமன் தீவுவாசிகளுக்கு கற்றுக்கொடுக்க படங்கள் வரைவது உதவியாக இருந்தது
[பக்கம் 25-ன் படம்]
சாலமன் தீவுகளில் உள்ள ஒதுக்குப்புற தொகுதியை சந்தித்தல்
[பக்கம் 26-ன் படம்]
இன்று எங்கள் குடும்பம்