வாழ்க்கை சரிதை
சிறிய தியாகங்கள் —பெரிய ஆசீர்வாதங்கள்
ஜார்ஜ் ஆல்ஜனும் ஆன் ஆல்ஜனும் சொன்னபடி
“டீச்சர்” என்ற வார்த்தையையும் “சுண்டெலி” என்ற வார்த்தையையும் குழப்பிக்கொள்வோம் என்று நானும் என் மனைவி ஆன்னும் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. அவ்வாறே, தொலைதூர கிழக்கத்திய நாட்டவர்களோடு பேசுவதற்காக, 60 வயதைத் தாண்டிய பிறகு விசித்திரமான எழுத்துக்களை இனங்கண்டுகொள்ள முயலுவோம் என்றும் நாங்கள் நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் 1980-களின் பிற்பகுதியில் நானும் ஆன்னும் இதைத்தான் செய்தோம். கடந்த பல வருடங்களாக நாங்கள் செய்திருந்த சிறிய தியாகங்களின் பலனாக எப்படி பெரிய ஆசீர்வாதங்கள் கிடைத்தன என்று சொல்கிறோம்.
ஆர்மீனிய வம்சாவளியில் பிறந்தவன் நான். ஆர்மீனிய சர்ச்சின் அங்கத்தினனாக இருந்தேன். ஆன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் அங்கத்தினளாக இருந்தாள். எங்கள் மத நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்துத்தான் 1950-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அப்போது எனக்கு 27 வயது, ஆன்னுக்கு 24 வயது. நாங்கள் அ.ஐ.மா., நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி சிட்டியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடிபுகுந்தோம்; அந்த அப்பார்ட்மென்ட்டிற்குக் கீழே என்னுடைய ட்ரை-க்ளீனிங் கடை இருந்தது. சுமார் நான்கு ஆண்டுகளாக நான் அந்தத் தொழிலை செய்து வந்தேன்.
1955-ல், நியூ ஜெர்ஸியிலுள்ள மிடில்டவுனில் மூன்று பெட்ரூம் கொண்ட அழகான ஒரு வீட்டை வாங்கினோம். அது என்னுடைய கடையிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது; வாரத்தில் ஆறு நாட்கள் நான் அங்கே வேலை செய்தேன். ஒவ்வொரு நாளும் இரவு லேட்டாகத்தான் வீடு திரும்பினேன். யெகோவாவின் சாட்சிகள் அவ்வப்போது என் கடைக்கு வந்து பைபிள் பிரசுரங்களை கொடுத்துவிட்டு சென்றார்கள்; அவர்களோடு எனக்கிருந்த தொடர்பெல்லாம் அவ்வளவுதான். ஆனால் அவர்கள் கொடுத்த புத்தகங்களை ரொம்ப ஆர்வத்தோடு படித்தேன். தொழிலுக்காக என்னுடைய நேரம் கவனம் அத்தனையையும் கொடுக்க வேண்டியிருந்தபோதிலும், பைபிள் மீது ஆழ்ந்த மரியாதை வைத்திருந்தேன்; அதை வளர்த்தும் வந்தேன்.
கொஞ்ச நாளுக்குள்ளாக, உவாட்ச்டவர் ரேடியோ ஸ்டேஷனான WBBR, பைபிள் பேச்சுக்களை ஒலிபரப்பி வந்ததை தெரிந்துகொண்டேன். நான் கடைக்குப் போகிற நேரத்திலும் திரும்பி வருகிற நேரத்திலும்தான் அது ஒலிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சுக்களையெல்லாம் மிக உன்னிப்பாக கேட்டேன். என் ஆர்வம் அதிகரித்தது. ஆகவே என்னை வந்து சந்திக்கும்படி சாட்சிகளிடம் கேட்டுக்கொண்டேன். நவம்பர் 1957-ல் ஜார்ஜ் ப்ளான்டன் என்பவர் என் வீட்டிற்கு வந்து எனக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.
எங்கள் குடும்பம்—மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டது
இதெல்லாம் நடந்தபோது ஆன் எப்படி உணர்ந்தாள்? அதை அவளே சொல்லட்டும்.
“என் கணவர் பைபிளை படிக்க ஆரம்பித்தபோது நான் முதலில் கடுமையாக எதிர்த்தேன். பைபிள் படிக்கும் நேரத்தில் வேண்டுமென்றே நச்சு நச்சென்று பல தொந்தரவுகளை அவருக்கு கொடுத்தேன்; அதனால் பைபிளை வீட்டில் படிக்காமல் வேறொரு இடத்தில் வைத்துப் படிக்க ஜார்ஜ் முடிவு செய்தார். இப்படியே எட்டு மாதங்களாக படித்தார். படித்தது மட்டுமல்ல, ஞாயிறுதோறும் ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தார். தனக்கிருந்த அந்த ஒரேவொரு லீவு நாளில் அவர் கூட்டங்களுக்குப் போவதை பார்த்தபோதுதான் அவர் பைபிள் படிப்புக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்பது புரிந்தது. அதே சமயத்தில் அவர் நல்ல கணவராகவும் தகப்பனாகவும் இருந்தார்; சொல்லப்போனால் முன்பைவிட இன்னும் நல்ல விதமாக நடந்துகொண்டார். இதனால் என் மனம் மாற ஆரம்பித்தது. ஜார்ஜ் எப்போதுமே விழித்தெழு! பத்திரிகையை டீப்பாய் மீது விட்டுச் செல்வார். நான் டீப்பாயை துடைக்கும்போது யாருக்கும் தெரியாமல் அதை எடுத்துப் படித்ததுண்டு. நேரடியாக பைபிள் போதனைகளைப் பற்றி சொல்லாமல் படைப்பாளர் இருப்பதை மட்டும் சிறப்பித்துக் காட்டிய விழித்தெழு! கட்டுரைகளை சில சமயம் ஜார்ஜ் எனக்கு வாசித்துக் காட்டினார்.
“ஒருநாள் சாயங்காலம் சகோதரர் ப்ளான்டனுடன் என் கணவர் பைபிளைப் படிக்க சென்றுவிட்டார். எங்கள் இரண்டு வயது மகன் ஜார்ஜ் என்னுடைய படுக்கைக்குப் பக்கத்திலிருந்த டேபிளில் ஒரு பிரசுரத்தை போட்டுவிட்டு சென்றிருந்தான். அதை எடுத்துப் பார்த்தேன். இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை என்பதைப் பற்றிய ஒரு பிரசுரம் அது. ரொம்ப களைப்பாக இருந்தபோதும் அதை வாசிக்க ஆரம்பித்தேன். ஏனென்றால் என் பாட்டி கொஞ்ச நாளுக்கு முன்புதான் இறந்திருந்தார். அதனால் ரொம்பவே துக்கமாக இருந்தேன். இறந்தவர்கள் ஏதோவொரு இடத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதில்லை, எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதலின்போது அவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று அந்தப் புத்தகத்தில் வாசித்ததுமே அதுதான் சத்தியம் என்பதை உடனடியாக கண்டுகொண்டேன். படுத்திருந்தவள் எழுந்து நேராக உட்கார்ந்து இன்னும் மும்முரமாக வாசிக்கத் தொடங்கினேன். அதோடு, பைபிள் படிப்பை முடித்துவிட்டு ஜார்ஜ் வீட்டுக்கு வரும்போது, அவரிடம் காட்டுவதற்காக குறிப்புகளை கோடிடவும் ஆரம்பித்தேன்.
“வீடு திரும்பிய என் கணவரால் நம்பவே முடியவில்லை. வீட்டிலிருந்து புறப்பட்டபோது தன் மீது அந்தளவு சீறிவிழுந்த மனைவி இப்போது அருமையான பைபிள் சத்தியங்களை படித்தவளாக ஏக குஷியோடு இருப்பதை பார்த்து அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை; அது உண்மையிலேயே நான்தானா என்ற சந்தேகமே அவருக்கு வந்துவிட்டது! பிறகென்ன, விடியவிடிய நாங்கள் இருவரும் பைபிளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். பூமியைக் குறித்ததில் கடவுளுடைய நோக்கம் என்ன என்பதை ஜார்ஜ் என்னிடம் விளக்கினார். நானும் சேர்ந்து பைபிள் படிக்க விரும்பியதால், இனி வீட்டிலேயே பைபிள் படிப்பை வைத்துக்கொள்ள முடியுமா என ஜார்ஜிடம் கேட்டேன்.
“பைபிள் படிப்பின்போது பிள்ளைகளும் அதில் கலந்துகொள்வது நல்லதென்று சகோதரர் ப்ளான்டன் சொன்னார். ஆனால் புரிந்துகொள்ள அவர்களுக்கு வயது போதாது என நாங்கள் நினைத்தோம், ஏனெனில் ஒரு மகனுக்கு இரண்டு வயதும் இன்னொருவனுக்கு நாலு வயதும்தான் ஆகியிருந்தது. என்றாலும், சகோதரர் ப்ளான்டன் உபாகமம் 31:12-ஐ எங்களுக்கு காண்பித்தார்; அதில், ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் . . . கேட்டு, கற்றுக்கொள்ள’ ஜனங்களை கூடிவரச் செய்யுங்கள் என்றிருக்கிறது. அந்த ஆலோசனையை நாங்கள் மதித்துணர்ந்தோம்; அதுமட்டுமல்ல பைபிள் படிப்பின்போது பிள்ளைகளும் தங்கள் குறிப்புகளை சொல்வதற்கு ஏற்பாடு செய்தோம். பதில்களை நாங்கள் சேர்ந்தே தயாரித்தாலும், என்ன சொல்ல வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு ஒருபோதும் நாங்கள் சொல்லித் தரவில்லை. இப்படி செய்ததுதான் பிள்ளைகள் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொள்ள உதவியதென்று எங்களுக்கு தோன்றுகிறது. எங்களுடைய குடும்பம் ஆவிக்குரிய விதத்தில் வளருவதற்காக சகோதரர் ப்ளான்டன் அளித்த அந்த வழிநடத்துதலுக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.”
தியாகங்களை தேவைப்படுத்திய சவால்கள்
உண்மைதான், நாங்கள் பைபிள் படிப்பில் குடும்பமாக ஒன்றுபட்டுவிட்டோம், ஆனால் இப்போதோ புதிய சவால்களை சமாளிக்க வேண்டியிருந்தது. என்னுடைய கடை வெகு தூரத்தில் இருந்ததால், இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வழக்கமாக என்னால் வீடு திரும்ப முடிந்தது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கூட்டங்களுக்குப் போக முடிந்தது, வார நாட்களில் கலந்துகொள்ள முடியவில்லை. என்னால் கூட்டங்களுக்குப் போக முடியாவிட்டாலும், ஆன் எல்லா கூட்டங்களுக்கும் சென்றுகொண்டிருந்தாள்; படுவேகமாக முன்னேற்றம் செய்து வந்தாள். எல்லா கூட்டங்களுக்கும் போக வேண்டுமென்று எனக்கும் ஆசையாக இருந்தது, அதுமட்டுமல்ல அர்த்தமுள்ள குடும்பப் படிப்பை நடத்த வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. இதற்காக சில தியாகங்களை நான் செய்ய வேண்டியிருக்கும் என்பது புரிந்தது. அதனால் தினமும் என்னுடைய கடையை சீக்கிரமே மூடிவிட தீர்மானித்தேன், என்னுடைய கஸ்டமர்களில் சிலரை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை என தைரியமாக அந்த முடிவை எடுத்தேன்.
இப்படி தீர்மானித்தது ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. ராஜ்ய மன்றத்தில் நடக்கும் ஐந்து வாராந்தர கூட்டங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்தளவு முக்கியத்துவத்தை குடும்பப் படிப்புக்கும் கொடுக்க வேண்டுமென்பதே எங்கள் அபிப்பிராயம். அதை எங்களுடைய ஆறாவது கூட்டம் என்பதாகவும் அழைத்தோம். அதற்காக குறிப்பிட்ட கிழமையையும் நேரத்தையும் ஒதுக்கி வைத்தோம், அதாவது ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8:00 மணிக்கு குடும்பப் படிப்பு நடத்த வேண்டுமென தீர்மானித்தோம். இரவு எல்லாரும் சாப்பிட்டு, பாத்திரங்களையெல்லாம் கழுவி முடித்ததுமே, “இப்போ ‘கூட்டம்’ ஆரம்பிக்கறதுக்கான நேரம் வந்தாச்சு!” என எங்களில் யாராவது ஒருவர் சொல்வோம். சில சமயம் நான் கடையிலிருந்து வர லேட்டாகி விட்டதென்றால், ஆன் படிப்பை ஆரம்பித்து விடுவாள், பிறகு வீட்டுக்கு வந்ததும் படிப்பை நான் தொடருவேன்.
எங்கள் குடும்பம் பலமான பிணைப்புடன் ஐக்கியப்பட்டிருப்பதற்கு மற்றொரு காரியம் எங்களுக்கு உதவியது, அதாவது தினவாக்கியத்தை அந்தந்த நாள் காலை வேளையில் சேர்ந்து படித்தது எங்களுக்கு உதவியது. ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை இருந்தது. காலையில் நாங்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு நேரத்தில் எழுந்ததே அந்தப் பிரச்சினை. இதை குடும்பமாக கலந்து பேசினோம்; பிறகு, எல்லாரும் ஒரே நேரத்தில் எழ வேண்டுமென்றும், காலை ஆறரை மணிக்கு டிஃபன் சாப்பிட வேண்டுமென்றும், அப்போது தினவாக்கியத்தை சிந்திக்க வேண்டுமென்றும் முடிவு செய்தோம். இந்த ஏற்பாடு மிகவும் பயனளித்தது. எங்களுடைய மகன்கள் வளர்ந்த பின்பு பெத்தேலில் சேவை செய்ய தீர்மானித்தார்கள். இத்தகைய தினசரி பைபிள் கலந்தாலோசிப்புகள்தான் அவர்களுடைய ஆவிக்குரிய தன்மைக்கு பெரிதும் உதவியதாக நாங்கள் நம்புகிறோம்.
முழுக்காட்டுதலுக்குப் பின் கிடைத்த சிலாக்கியங்களுக்காக மேலுமான தியாகங்கள்
1962-ல், நான் முழுக்காட்டுதல் பெற்றேன்; 21 வருடங்களாக நான் நடத்திவந்த கடையை விற்றேன்; குடும்பத்தோடு நெருங்கி இருந்து யெகோவாவை சேவிப்பதற்காக அருகிலேயே வேறொரு வேலையில் சேர்ந்தேன். இது பல ஆசீர்வாதங்களை எனக்கு தந்தது. நாங்கள் எல்லாருமே முழுநேர ஊழியத்தை இலக்காக வைத்தோம். அதன்படியே, முதலாவது எங்கள் மூத்த மகனான எட்வர்ட் 1970-களின் ஆரம்பத்தில், தன் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு முழுநேர ஊழியனாக, அதாவது ஒழுங்கான பயனியராக ஆனான். அதன் பிறகு கொஞ்ச காலத்திற்குள், எங்கள் இன்னொரு மகனான ஜார்ஜ் பயனியராக ஆனான். அதற்குப் பின், ஆன்னும் பயனியர் ஆனாள். அவர்கள் மூவரும் தங்கள் வெளி ஊழிய அனுபவங்களை என்னிடம் வந்து சொல்லுவார்கள், அதையெல்லாம் கேட்க கேட்க எனக்குள் பெரும் உற்சாகம் பிறந்தது. எல்லாருமே முழுநேர ஊழியம் செய்வதற்காக வாழ்க்கையை இன்னமும் எப்படி எளிமையாக்குவதென்று குடும்பமாக கலந்து பேசினோம். வீட்டை விற்பது என்ற முடிவுக்கு வந்தோம். 18 வருடங்களாக அந்த வீட்டில் குடியிருந்தோம், எங்கள் மகன்களை வளர்த்து ஆளாக்கியதும் அந்த வீட்டில்தான். எங்கள் அனைவருக்கும் அந்த வீடு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது, என்றாலும் எங்கள் முடிவை மாற்றவில்லை. யெகோவாவும் எங்கள் தீர்மானத்தை ஆசீர்வதித்தார்.
1972-ல் எட்வர்ட் பெத்தேலுக்கு வருமாறு அழைக்கப்பட்டான், ஜார்ஜ் 1974-ல் அழைக்கப்பட்டான். அவர்கள் இருவரும் எங்கள் கூடவே இல்லாதது எனக்கும் ஆன்னுக்கும் கஷ்டமாக இருந்ததென்னவோ உண்மைதான்; ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து குழந்தை குட்டிகளோடு எங்கள் பக்கத்திலேயே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்று சதா நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, எங்கள் மகன்கள் பெத்தேலில் யெகோவாவை சேவிக்கிறார்கள் என்பதை எண்ணி பூரிப்படைந்தோம்.a “என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்” என்ற நீதிமொழிகள் 23:15-ன் வார்த்தைகளை நாங்கள் ஆமோதிக்கிறோம்.
விசேஷ பயனியர் ஊழியத்தில் காலடி வைத்தோம்
எங்கள் இரு மகன்களும் பெத்தேலில் சேவித்துக் கொண்டிருக்க, நாங்கள் இங்கு பயனியர் ஊழியத்தை தொடர்ந்து செய்து வந்தோம். பிறகு ஒருநாள் 1975-ல், எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது; இல்லினாய்ஸ் என்ற இடத்தில் க்ளின்டன் கௌன்ட்டியிலுள்ள ஒரு புதிய பிராந்தியத்தில் விசேஷ பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்கச் சொல்லி வந்த ஓர் அழைப்பு அது. எவ்வளவு பெரிய ஆச்சரியம்! அப்படியென்றால், நியு யார்க்கிலிருந்த எங்கள் மகன்கள் அருகில் இருப்பதை விட்டுவிட்டு—இந்த நியு ஜெர்ஸியை விட்டுவிட்டு—நாங்கள் போக வேண்டியிருக்கும்; எங்கள் உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும். இருந்தபோதிலும், இதை யெகோவாவிடமிருந்து வந்த ஒரு நியமிப்பாகவே நாங்கள் எடுத்துக்கொண்டோம்; எனவே தியாகம் செய்து, அதன் பலனாக இன்னும் பல ஆசீர்வாதங்களை அனுபவித்தோம்.
அந்தப் புதிய பிராந்தியத்தில் பல மாதங்கள் ஊழியம் செய்த பிறகு, இல்லினாய்ஸிலுள்ள கார்லைல் என்ற இடத்திலிருந்த ஒரு கம்யூனிட்டி ஹாலில் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தோம். ஆனால் கூட்டத்தை நடத்த நிரந்தரமாக ஒரு இடம் எங்களுக்கு தேவைப்பட்டது. அங்கிருந்த ஒரு சகோதரரும் அவரது மனைவியும் சிறிய காட்டேஜுடன் இருந்த ஒரு இடத்தை தேடித் தந்தார்கள்; அதை நாங்கள் வாடகைக்கு எடுத்தோம். அந்தக் காட்டேஜையும் அதன் பின்புறம் இருந்த கழிவறை உட்பட அந்த இடம் முழுவதையும் சுத்தப்படுத்தி, அதை ஒரு சிறிய மீட்டிங் ஹால் ஆக்கினோம். அந்த இடத்தில் குதிரை ஒன்று இருந்தது; மீட்டிங் நடக்கும்போது அந்தக் குதிரை அடிக்கொருதரம் தன் தலையை ஜன்னல் வழியாக உள்ளே விட்டு அங்கு அப்படி என்னதான் நடக்கிறதென ஆர்வமாக பார்த்தது! அதை நினைத்தால் இப்போதும் எங்களுக்கு சிரிப்பு வருகிறது.
காலப்போக்கில், கார்லைல் நகரில் சபை ஒன்று உருவாக்கப்பட்டது; அதை உருவாக்கியதில் எங்களுக்கும் ஒரு பங்கு இருந்ததை எண்ணி சந்தோஷப்பட்டோம். அதே இடத்தில் எங்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய வந்திருந்த ஸ்டீவ், கரல் தாம்ஸன் என்ற ஓர் இளம் பயனியர் தம்பதியர் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். இவர்கள் பல ஆண்டுகள் இங்கேயே இருந்தார்கள், பிறகு கிலியட் பள்ளியில் கலந்துகொண்டு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு மிஷனரிகளாக சென்றார்கள்; அங்கு பயண வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சீக்கிரத்திலேயே எங்களுடைய சிறிய மீட்டிங் ஹாலில் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது, அதனால் ஒரு பெரிய ஹால் தேவைப்பட்டது. முந்தைய இடத்தை எங்களுக்கு பார்த்துக் கொடுத்த உள்ளூரிலிருந்த அதே தம்பதியர் இந்த முறையும் எங்களுடைய சிக்கலை தீர்த்து வைத்தார்கள், ஆம் ஒரு இடத்தை வாங்கிக் கொடுத்தார்கள்; ஒரு ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு இந்த இடம் முந்தைய இடத்தைவிட ஏற்றதாக இருந்தது. சில வருடங்களுக்குப் பிறகு, கார்லைல் நகரில் புதிதாக கட்டப்பட்ட அந்த ராஜ்ய மன்றத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்டபோது நாங்கள் எவ்வளவாய் சந்தோஷப்பட்டோம்! அந்த நிகழ்ச்சியில் பிரதிஷ்டை பேச்சைக் கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அங்கு ஊழியம் செய்வதற்கான நியமிப்பு எங்களுக்கு அருமையான ஓர் அனுபவமாக இருந்தது; யெகோவாவிடமிருந்து வந்த ஓர் ஆசீர்வாதமே அது!
ஒரு புதிய பிராந்தியம் எங்களுக்கு திறந்து வைக்கப்படுகிறது
1979-ல், நியு ஜெர்ஸியிலுள்ள ஹரிஸன் என்ற ஊரில் சேவை செய்வதற்கான புதிய நியமிப்பு எங்களுக்கு கிடைத்தது. அங்கு ஏறக்குறைய 12 வருடங்களுக்கு சேவை செய்தோம். அந்தச் சமயத்தில், ஒரு சீனப் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தினோம்; இது மேலும் பல சீனர்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வழிசெய்தது. இதற்கிடையே, எங்களுடைய பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கான சீன மாணவர்களும் சீன குடும்பங்களும் இருந்ததை தெரிந்துகொண்டோம். இதன் காரணமாக, சைனீஸ் மொழியை கற்றுக்கொள்ள நாங்கள் உற்சாகப்படுத்தப்பட்டோம். இதற்காக தினந்தோறும் சைனீஸ் மொழியை கற்றுக்கொள்ள நாங்கள் நேரத்தை செலவிட வேண்டியிருந்தாலும், அந்தப் பிராந்தியத்திலிருந்த சீனர்களுடன் ஏராளமான பைபிள் படிப்புகளை சந்தோஷமாக நடத்த அது உதவியது.
அந்த வருடங்களில், குறிப்பாக நாங்கள் சைனீஸ் மொழியில் பேச முயன்ற சமயங்களில், சிரிப்பூட்டும் பல சம்பவங்கள் நடந்தன. ஒருநாள் ஆன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது தான் ஒரு பைபிள் “டீச்சர்” என்று சொல்வதற்கு பதிலாக தான் ஒரு பைபிள் “சுண்டெலி” என்று சொன்னாள். அவ்விரு வார்த்தைகளும் ஒரே மாதிரியானவை. அதைக் கேட்ட அந்த வீட்டுக்காரப் பெண்மணி புன்னகைத்தபடியே, “தயவுசெய்து உள்ளே வாங்க. இதுவரைக்கும் நான் ஒரு பைபிள் சுண்டெலியோட பேசினதே இல்லை” என்றாள். சைனீஸ் மொழியில் பேசுவது இன்னமும் எங்களுக்கு பெரும் பாடாகத்தான் இருக்கிறது.
அதன் பிறகு, நியு ஜெர்ஸியிலுள்ள இன்னொரு பகுதியில் சேவை செய்வதற்காக நாங்கள் நியமிக்கப்பட்டோம்; இதனால் இவ்விடத்திலுள்ள சீன பிராந்தியத்திலும் எங்களால் தொடர்ந்து சேவை செய்ய முடிந்தது. பிற்பாடு, மாஸசூஸெட்ஸிலுள்ள பாஸ்டனில் சுமார் மூன்று வருடங்களாக சீன தொகுதி ஒன்று வளர்ந்து வந்ததால் அங்கு சேவை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். கடந்த ஏழு வருடங்களாக இந்தத் தொகுதிக்கு ஆதரவளித்து வருகிற சிலாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது, அதுமட்டுமல்ல ஜனவரி 1, 2003-ல் இது ஒரு சபையாக உருவாகியிருப்பதைக் காணும் சந்தோஷமும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
சுய தியாக வாழ்க்கைக்கு கிடைக்கும் ஆசிகள்
இடங்கொள்ளாமல் போகுமட்டும் யெகோவா தம்முடைய ஜனங்கள் மீது ஆசீர்வாதங்களை பொழியப் பண்ணுவதற்காக தங்கள் காணிக்கைகளையும் பலிகளையும் கொண்டு வரும்படி அவர் அழைப்பு விடுப்பதை மல்கியா 3:10-ல் வாசிக்கிறோம். எனக்கு மிகவும் விருப்பமாயிருந்த என் தொழிலை நான் கைவிட்டேன். எங்களுக்கு ரொம்பவும் பிடித்திருந்த எங்கள் வீட்டை விற்றோம். மற்ற காரியங்களைக்கூட நாங்கள் தியாகம் செய்தோம். என்றாலும், எங்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய ஆசீர்வாதங்களோடு ஒப்பிட அந்தத் தியாகமெல்லாம் சிறியதாகவே தெரிகின்றன.
ஆம், யெகோவா எங்கள் மீது அளவிலா ஆசீர்வாதங்களை பொழிந்திருக்கிறார்! எங்களுடைய பிள்ளைகள் சத்தியத்தை நல்ல விதத்தில் ஏற்றிருப்பதைக் காணும் திருப்தி எங்களுக்கு இருந்திருக்கிறது, உயிர்காக்கும் ஊழிய வேலையில் முழுநேரமாக ஈடுபடும் மகிழ்ச்சி எங்களுக்கு இருந்திருக்கிறது; அதோடு, எங்களுடைய தேவைகளை யெகோவா பூர்த்தி செய்து வந்திருப்பதையும் நாங்கள் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். உண்மையிலேயே, நாங்கள் செய்தது என்னவோ சிறிய தியாகங்கள்தான்; ஆனால் எங்களுக்குக் கிடைத்ததோ பெரிய ஆசீர்வாதங்கள்!
[அடிக்குறிப்பு]
a அவர்கள் இன்னமும் உண்மையோடு பெத்தேலில் சேவை செய்து வருகிறார்கள்—எட்வர்ட் மற்றும் அவரது மனைவி கானி, பாட்டர்ஸன் பெத்தேலிலும், ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி கிரேஸ் புரூக்ளின் பெத்தேலிலும் சேவை செய்து வருகிறார்கள்.
[பக்கம் 25-ன் படம்]
ஆன்னுடன் லூயிஸ் மற்றும் ஜார்ஜ் ப்ளான்டன், 1991
[பக்கம் 26-ன் படம்]
கார்லைலில் உள்ள ராஜ்ய மன்றம், ஜூன் 4, 1983-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது
[பக்கம் 27-ன் படம்]
பாஸ்டனில் புதிதாக உருவாக்கப்பட்ட சீன சபையோடு
[பக்கம் 28-ன் படம்]
எட்வர்ட், கானி, ஜார்ஜ், கிரேஸ் ஆகியோருடன்