வாழ்க்கை சரிதை
இதயத்தைப் பிளக்கும் இழப்பிலும் மகிழ்ச்சியோடும் நன்றியோடும்
நான்ஸி இ. போர்ட்டர் சொன்னபடி
அது 1947, ஜூன் 5. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் தென்கிழக்கு கரைக்கு அருகேயுள்ள பஹாமா தீவுகளில் இதமான சாயங்கால வேளை. அன்று குடியேற்ற அதிகாரி என்னையும் என் கணவர் ஜார்ஜையும் காண வருவார் என துளியும் எதிர்பார்க்கவில்லை. அந்தத் தீவில் இருப்பதற்கு எங்களுக்கு இனிமேலும் அனுமதியில்லை என்றும் அந்த “தீவைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்!” என்றும் குறிப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை அவர் எங்களிடம் தந்தார்.
நானும் ஜார்ஜும் பஹாமாவிலுள்ள மிகப் பெரிய நகரமாகிய நஸ்ஸொவ்வுக்கு வந்த யெகோவாவின் சாட்சிகளின் முதல் மிஷனரிகள். வட நியூ யார்க்கிலுள்ள மிஷனரி பள்ளியாகிய கிலியட்டின் எட்டாவது வகுப்பில் பட்டம் பெற்ற பின்பு நாங்கள் ஊழியத்திற்கு இங்கு நியமிக்கப்பட்டோம். இங்கு வந்து மூன்று மாதங்களே ஆவதற்குள் எங்கள் மீது அத்தகைய கடும் நடவடிக்கை எடுக்குமளவுக்கு நாங்கள் என்ன செய்துவிட்டோம்? அது நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னமும் இங்கே நான் இருக்கிறேனே எப்படி?
ஊழியத்திற்கு பயிற்சி
என் வாழ்க்கைப் போக்கே மாறுவதற்கு என் அப்பா ஹாரீ கில்னர்தான் முக்கிய காரணம். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராவதற்கு அவர் பல தியாகங்களை செய்து எனக்கு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார். அவருக்கு அந்தளவு நல்ல உடல் ஆரோக்கியம் இல்லாதபோதிலும் முடிந்தமட்டும் எல்லா சனி, ஞாயிறுகளிலும் பிரசங்கிக்க செல்வதன் மூலம் ஆர்வத்துடன் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுத்தார். (மத்தேயு 6:33) எங்கள் பொருளாதார நிலை படுமோசமாக இருந்தபோதிலும் 1930-களில் கனடாவில், ஆல்பர்ட்டாவிலுள்ள, லெத்பிரிட்ஜ் என்ற இடத்திலிருந்த அவருடைய ஷூ கடை ஆவிக்குரிய நடவடிக்கையின் மையமாக திகழ்ந்தது. பயனியர்கள் என்று அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர ஊழியர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதே என் ஆரம்ப கால நினைவுகளில் சிறகடிக்கின்றன.
1943-ல் ஆரம்பத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஃபோர்ட் மக்லௌட்டுக்கு அருகிலும் க்ளார்ஸ்ஹோமிலும் பயனியர் ஊழியம் செய்தேன். இரண்டாம் உலகப் போரின்போது எதிரிகள் பொய்யான தகவலைப் பரப்பியதால் கனடாவில் எங்களுடைய பிரசங்க ஊழியம் தடை செய்யப்பட்டது. எங்கள் பிராந்தியம் 100 கிலோமீட்டர் நீளம் உடையது. ஆனால் இளமையும் தெம்பும் இருந்ததால் அந்தப் பகுதியிலுள்ள சிறிய தொகுதிகளுக்கும் பண்ணைகளுக்கும் சைக்கிள்களிலோ நடந்தோ செல்வதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இந்தச் சமயத்தில் கிலியட் பட்டதாரிகள் சிலருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடைய அனுபவங்கள் மிஷனரியாகும் ஆசை தீயை எனக்குள் மூட்டிவிட்டன.
1945-ல் கனடாவிலுள்ள சஸ்காட்செவானை சேர்ந்த ஜார்ஜ் போர்ட்டரை மணந்துகொண்டேன். அவருடைய பெற்றோர் 1916 முதற்கொண்டு ஆர்வமுள்ள சாட்சிகளாக இருந்து வந்தார்கள்; அவரும் முழுநேர ஊழியத்தை வாழ்க்கைப்பணியாக ஏற்றிருந்தார். கனடாவில் வட வான்கூவரிலுள்ள அழகிய லின் வேலி என்ற இடத்தில் முதன்முதலாக ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம். அதன் பின் சீக்கிரத்திலேயே கிலியட்டு பள்ளிக்கு வரும்படியான அழைப்பைப் பெற்றோம்.
கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு இறையியல் கல்லூரி பட்டதாரிகளிடம் பேசியிருக்கிறேன்; அவர்களுடைய இறையியல் பயிற்சி எப்படி கடவுளிடமும் அவருடைய வார்த்தையாகிய பைபிளிடமுள்ள அவர்களுடைய விசுவாசத்தை படிப்படியாக அரித்தழித்திருக்கிறது என்பதையும் கண்டிருக்கிறேன். அவற்றிற்கு முற்றிலும் மாறாக, கிலியட்டில் நாங்கள் கற்றவை எங்கள் சிந்திக்கும் திறமையில் முன்னேற்றம் செய்ய உதவின; முக்கியமாக, யெகோவா தேவனிலும் அவருடைய வார்த்தையிலும் எங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தின. எங்களுடன் பயிற்சி பெற்ற சக மாணவர்கள் சீனா, சிங்கப்பூர், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்கா, இன்னும் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். நாங்கள் பஹாமாவின் வெப்பமண்டல தீவுகளுக்கு செல்லவிருப்பதை அறிந்தபோது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷ உணர்ச்சி இன்னும் என் நினைவில் உள்ளது.
எங்கள் ஊழியத்தை தொடர முடிந்ததற்குக் காரணம்
எங்கள் சக மாணவர்கள் சென்ற இடங்களின் பயண தூரத்துடன் ஒப்பிடுகையில் பஹாமாவுக்கான எங்கள் பயண தூரம் குறுகியதே. சீக்கிரத்திலேயே இதமான உஷ்ணத்தையும், நீல வானங்களையும், இளம் பச்சை கலந்த நீல நிற தண்ணீரையும், இளம் வண்ண சாயங்கள் பூசப்பட்ட கட்டிடங்களையும், எண்ணற்ற சைக்கிள்களையும் கண்டுகளிக்க ஆரம்பித்தோம். எனினும், எங்கள் கப்பல் வந்து சேர்ந்தபோது வரவேற்க காத்திருந்த ஐந்து பேர் அடங்கிய தொகுதியினரே எல்லாவற்றிற்கும் மேலாக என் மனதை ஆழமாக தொட்டனர். அங்குள்ள கலாச்சாரம் நாங்கள் பழக்கப்பட்டதிலிருந்து பெருமளவு வேறுபட்டிருந்ததை சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டோம். உதாரணமாக, என் கணவர் ‘ஸ்வீட்ஹார்ட்’ என மற்றவர் முன் அழைப்பதை நிறுத்த வேண்டியிருந்தது; ஏனெனில் அது பொதுவாய், திருமணத்திற்குப் புறம்பே உறவு வைத்துக்கொள்பவர்களே உபயோகிக்கும் வார்த்தையாய் இருந்தது.
ஜனங்களோடு நாங்கள் சகஜமாக பழகுவதைக் கண்டு பயந்துபோன மதகுருமார்கள் சீக்கிரத்திலேயே எங்கள்மீது கம்யூனிஸ்டுகள் என பொய் முத்திரை குத்த ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக, அந்நாட்டைவிட்டு வெளியேறும்படியான கட்டளையைப் பெற்றோம். அந்தத் தீவுகளில் அப்போது 20 சாட்சிகள்கூட இல்லை; ஆனாலும், நாங்கள் அங்கு தங்க அனுமதி கோரி விண்ணப்பித்த மனுவில் உடனடியாக ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை சாட்சிகள் பெற்றுத் தந்தார்கள். இப்படித்தான் நாங்கள் வெளியேறும்படியான கட்டளை செல்லுபடியாகாமல் போனது.
புதிய பிராந்தியத்திற்கு
கடவுளை நேசித்த இதயங்களில் பைபிள் சத்தியம் சீக்கிரத்திலேயே வேர்கொண்டது. அதனால் இன்னும் அநேக மிஷனரிகள் பஹாமா தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். பின்பு 1950-ல் கிளை அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பின்பு, நியூ யார்க், புரூக்லினிலுள்ள தலைமை அலுவலக அங்கத்தினரான மில்டன் ஹென்ஷல் இங்கு வந்தபோது, பஹாமா தீவுகளைச் சேர்ந்த மற்றொரு தீவுக்குச் சென்று யாராவது பிரசங்க ஊழியம் செய்ய முடியுமா என மிஷனரிகளைக் கேட்டார். அதற்கு நானும் ஜார்ஜும் விருப்பம் தெரிவித்தோம். இப்படித்தான் லாங் ஐலண்டில் அடுத்த 11 ஆண்டு கால வாழ்க்கையை ஆரம்பித்தோம்.
பஹாமா தீவுகளில் ஒன்றான இந்தத் தீவு, 140 கிலோமீட்டர் நீளமும் 6 கிலோமீட்டர் அகலமும் உடையது. அப்போதெல்லாம் நகரங்கள் என சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அங்கு எதுவும் இல்லை. தலைநகரான கிளாரன்ஸ் டௌனில் ஏறக்குறைய 50 வீடுகள் இருந்தன. அங்கு பழங்கால வாழ்க்கைப்பாணி நிலவியது: மின்சாரம் இல்லை, தண்ணீர் குழாய்கள் இல்லை, வீடுகளில் சமைக்க வழியில்லை, சாக்கடை போன்ற மற்ற வசதிகள் இல்லை. ஆகவே இத்தகைய தொலைதூர தீவில் வாழ்வதற்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. இந்த தீவினருக்கு அவர்களுடைய உடல்நலம் பற்றி பேசுவதென்றால் அலாதி பிரியம். ஒருவரை சந்தித்ததும், “நீங்க எப்படி இருங்கீங்க?” என்ற கேள்வியை தப்பித்தவறியும் கேட்கக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டோம். கேட்டுவிட்டால் அவ்வளவுதான் ஒருவர் தன்னுடைய மருத்துவ பிரச்சினை அத்தனையும் ஒன்றுவிடாமல் கொட்டி தீர்த்துவிடுவார்.
வெட்டவெளியில் வேயப்பட்ட புல்கூரைக்கு கீழே விறகடுப்பில் சமைப்பவர்களை சந்திக்க முடிந்ததால் நாங்கள் பெரும்பாலும் சமையலறைக்கு சமையலறை சென்று சாட்சி கொடுத்தோம். முக்கியமாய் அங்குள்ள ஜனங்கள் ஏழைகள், ஆனால் இளகிய மனம்படைத்த விவசாயிகளாகவோ மீனவர்களாகவோ இருந்தனர். இவர்களில் பெரும்பான்மையர் மதத்தில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்ததோடு பெரும் மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்களாகவும் இருந்தனர். அசாதாரண சம்பவங்களை பொதுவாக கெட்ட சகுனங்களாக கருதினர்.
மதகுருமார்கள் கொஞ்சமும் தயங்காமல் அழையா விருந்தாளிகள் போல் ஜனங்களுடைய வீடுகளுக்குள் புகுந்து நாங்கள் கொடுத்துவிட்டு வந்த பைபிள் பிரசுரங்களை கிழித்துப் போட்டனர். இப்படியாக பயந்த சுபாவமுடையவர்களை பயமுறுத்தினர், ஆனாலும் எல்லாருமே அவர்களுடைய பயமுறுத்தலுக்கு பணிந்துவிடவில்லை. உதாரணமாக, 70 வயது துணிவுமிக்க பெண்மணி பயமுறுத்தலுக்கு மசிந்துவிடவில்லை. அவர்கள் பைபிளைப் புரிந்துகொள்ள விரும்பினார்கள். இறுதியில் சாட்சிகளான பலரில் இவர்களும் ஒருவர். ஆர்வம் காட்டும் அநேகரை நாங்கள் கண்டுபிடித்ததால், இப்படிப்பட்டவர்கள் கூட்டங்களுக்கு வருவதற்கு உதவியாக சில ஞாயிற்றுக்கிழமைகளில் ஜார்ஜ் 300 கிலோமீட்டர் தூரம் வண்டியோட்ட வேண்டியிருந்தது.
வேறு சாட்சிகள் யாரும் இல்லாத ஆரம்ப மாதங்களில், கிறிஸ்தவக் கூட்டங்கள் எல்லாவற்றையும் தவறாமல் நடத்துவதன்மூலம் நானும் ஜார்ஜும் எங்கள் ஆவிக்குரிய நிலையை காத்துக்கொண்டோம். மேலும், ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையிலும் காவற்கோபுர படிப்பு மற்றும் பைபிள் வாசிப்புக்கான அட்டவணையை தவறாமல் பின்பற்றினோம். அத்தோடு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் வந்தவுடனேயே தவறாமல் எல்லாவற்றையும் வாசித்தோம்.
லாங் ஐலண்ட்டில் இருக்கையில் என் அப்பா இறந்துவிட்டார். அந்தக் கோடையில் 1963-ல், அம்மா எங்களுக்கு அருகிலேயே வசிப்பதற்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் வயதானவர்களாக இருந்தபோதிலும் 1971-ல் அவர்கள் மரணம் வரையில் முடிந்தளவுக்குத் திருப்தியாக லாங் ஐலண்டில் வாழ்ந்தார்கள். இன்று லாங் ஐலண்டில் புத்தம் புதிய ராஜ்ய மன்றத்தை உடைய ஒரு சபை உள்ளது.
நெஞ்சைப் பிளக்கும் சவால்
1980-ல், தன் உடல்நிலை மெல்ல மெல்ல மோசமாவதை ஜார்ஜ் உணர்ந்தார். என் வாழ்க்கையிலேயே பெரும் துயரமிக்க சம்பவம் இப்படித்தான் ஆரம்பமானது. சக ஊழியரும், நண்பருமான என் அன்பு கணவர் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்படுவதைக் கண்டேன். அவருடைய குணமே அடியோடு மாறிவிட்டது. சீரழிக்கும் அந்தக் கடைசி காலகட்டத்தை 1987-ல் தன் மரணத்திற்கு முன் நான்கு ஆண்டுகள் அவர் அனுபவித்தார். அவருக்கு முடியும்போது ஊழியத்திற்கும் கூட்டங்களுக்கும் சேர்ந்தே போனோம். எனினும் அதற்காக பல நாட்கள் அவர் பட்ட கஷ்டம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. அவருடைய மரணத்திற்குப் பின்பு என் கிறிஸ்தவ சகோதரர்கள் பொழியும் அன்பு உண்மையிலேயே ஆறுதலின் அருமருந்தாய் உள்ளது, ஆனாலும் அவர் இல்லாத குறையை நான் இன்னும் அனுபவிக்கிறேன்.
நானும் ஜார்ஜும் எங்கள் மண வாழ்க்கையில் பெரும் பொக்கிஷமாய் கருதிய அருமையான அம்சங்களில் ஒன்று நாங்கள் அடிக்கடி உரையாடி மகிழ்ந்த சமயங்கள். ஜார்ஜ் இப்போது இல்லாவிட்டாலும் யெகோவாவிடம் உரையாடி மகிழும் வாய்ப்புக்காக, அதாவது ‘இடைவிடாமல் ஜெபம்பண்ணும்படியும்,’ ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்கும்படியும்,’ ‘சகலவிதமான விண்ணப்பத்தையும்’ பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் தம்முடைய ஊழியரிடம் விடுக்கும் அழைப்புக்காக நான் பெரிதும் நன்றியுடையவளாய் இருக்கிறேன். (1 தெசலோனிக்கேயர் 5:17; ரோமர் 12:12; எபேசியர் 6:18) நம்முடைய நலனில் யெகோவா அக்கறை காட்டுகிறார் என்பதை அறிவது பெரும் ஆறுதலளிக்கிறது. “ஆண்டவர் [“யெகோவா,” NW] ஸ்தோத்திரத்திற்குரியவர், அவர் தினந்தினம் நமது பாரங்களைச் சுமக்கிறார்” என பாடிய சங்கீதக்காரனைப் போலவே நானும் உணருகிறேன். (சங்கீதம் 68:19, தி.மொ.) அந்தந்த நாளுக்குரியதை சிந்தித்து, என் வரையறைகளை ஒப்புக்கொண்டு, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பது இயேசு அறிவுரை கூறினதுபோல் வாழ்வதற்கு நிச்சயமாகவே மிகச் சிறந்த வழி.—மத்தேயு 6:34.
ஊழியம் தரும் மகிழ்ச்சியான பலன்கள்
கிறிஸ்தவ ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது, கடந்த காலத்தைப் பற்றி அளவுக்குமீறி சிந்திக்காமலிருக்க எனக்கு உதவுகிறது. இவ்வாறு மன ஊளைச்சலை என்னால் சமாளிக்க முடிகிறது. மற்றவர்களுக்கு பைபிள் சத்தியத்தைப் போதிப்பது பிரத்தியேக சந்தோஷத்தை அள்ளித் தந்திருக்கிறது. இது, ஆவிக்குரிய காரியங்களில் தவறாமல் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவிசெய்து, என் வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.—பிலிப்பியர் 3:16.
ஏறக்குறைய 47 ஆண்டுகளுக்கு முன்னால் நான் ராஜ்ய செய்தியைப் பகிர்ந்துகொண்ட ஓர் பெண்மணி ஒருசமயம் எனக்கு போன் செய்திருந்தார்கள். 1947-ல் பஹாமாஸில் காலடி பதித்தபோது எங்களோடு பைபிள் படித்தவர்களில் ஒருவருடைய மகள் அந்தப் பெண்மணி. இவர்களுடைய அம்மா, அப்பா, உடன் பிறந்த சகோதர சகோதரிகள் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளாயினர்; அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளில் பெரும்பாலானோரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். சொல்லப்போனால், இந்தப் பெண்மணியின் குடும்பத்தாரில் 60-க்கு அதிகமானோர் யெகோவாவின் சாட்சிகள். ஆனால் இந்தப் பெண்மணியோ பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒருவழியாக இப்போது யெகோவா தேவனுக்கு ஊழியம் செய்ய தயாராக இருந்தார்கள். பஹாமா தீவுகளுக்கு நானும் ஜார்ஜும் சென்றபோது விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இருந்த சாட்சிகள் இப்போது 1,400-க்கு மேலாக அதிகரித்திருப்பதைக் காண்பது எத்தனை சந்தோஷத்தை அளிக்கிறது!
எனக்கென்று பிள்ளைகள் இல்லாததைக் குறித்து கவலைப்பட்டிருக்கிறேனா என சிலசமயங்களில் ஆட்கள் கேட்பதுண்டு. பிள்ளைகள் இருப்பது உண்மையில் பாக்கியம்தான். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் பெற்றெடுத்த என் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் எப்போதும் என்னிடம் காட்டும் நேசத்தையும் பாசத்தையும், ஒருவேளை தாங்கள் பெற்ற பிள்ளைகளிடமிருந்தும்கூட எல்லா பெற்றோராலும் பெற முடியாது. மெய்யாகவே, ‘நன்மைசெய்வோரும்’ “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” இருப்போரும் எல்லையில்லா சந்தோஷத்தை அனுபவிப்பவர்கள். (1 தீமோத்தேயு 6:18) அதனால்தான், என் உடல்நலம் ஒத்துழைக்கும் அளவுக்கு ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறேன்.
ஒருநாள் பல் மருத்துவரிடம் சென்றிருந்தபோது, ஓர் இளம் பெண் என்னிடம் வந்து, “உங்களுக்கு என்னைத் தெரியாது ஆனா எனக்கு உங்களைத் தெரியும். நான் உங்களை நேசிப்பதை நீங்க தெரிஞ்சுக்கனும்னு சொல்றேன்” என்றாள். பின்பு, பைபிளிலிருந்து சத்தியத்தை எவ்வாறு அறிந்துகொண்டாள் என்றும், பஹாமா தீவுகளுக்கு மிஷனரிகளாக நாங்கள் வந்ததற்கு எவ்வளவு நன்றியுள்ளவளாக இருந்தாள் என்றும் சொன்னாள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், விடுமுறையிலிருந்து திரும்பி வந்தபோது, இப்போது நான் வாழும் நஸ்ஸொவ்விலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தில் என் அறை வாசலில் ஒற்றை ரோஜா ஒன்றைக் கண்டேன். அதில், “நீங்கள் வீடு திரும்பியதில் எங்களுக்கு சந்தோஷம்” என்ற வாசகம் எழுதப்பட்ட சீட்டு இருந்தது. இதையெல்லாம் நினைக்கையில் நன்றியினால் என் இருதயம் பொங்கி வழிகிறது! யெகோவாவுடைய வார்த்தையும், அமைப்பும், ஆவியும் பிறப்பித்திருக்கும் ஆட்களை நான் காண்கையில் அவரை இன்னும் அதிகமாய் நேசிக்கிறேன்! மெய்யாகவே, யெகோவாவின் அரவணைக்கும் கரங்களை நம் அருகில் உள்ளவர்கள் மூலம் அடிக்கடி காண்கிறோம்.
நன்றியினால் பொங்கி வழிதல்
வாழ்க்கையில் நான் மேடுபள்ளங்களை சந்திக்காமல் இல்லை, சில காரியங்கள் இன்றும் எளிதாக இருப்பதில்லை. ஆனால், நான் நன்றி தெரிவிக்க எக்கச்சக்கமான காரியங்கள் உள்ளன: ஊழியத்தில் பெறும் மகிழ்ச்சிகள், எண்ணற்ற கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் நேசமும் பாசமும், யெகோவாவின் அமைப்பின் அன்பான பராமரிப்பு, பைபிளிலிருந்து அருமையான சத்தியம், மரித்த அன்பானவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் அவர்களுடன் வாழும் நம்பிக்கை, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியருடன் கழித்த 42 வருட மண வாழ்க்கையின் மலரும் நினைவுகள். என்னை கரம்பிடிக்க இருந்தவர் முழுநேர ஊழியத்தை எப்போதும் தொடர விரும்பியதால் அவருக்கு உற்ற துணையாய் எப்போதும் இருக்க வேண்டும் என திருமணத்திற்கு முன்பு நான் ஜெபித்திருக்கிறேன். யெகோவா தயவாக அந்த ஜெபத்திற்குப் பதிலளித்தார். ஆகையால், எப்போதும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாக இருப்பதன்மூலம், அவருக்கு என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் பிரபலமான இடம் பஹாமா தீவுகள்; வெப்பமண்டல பிரதேசத்திற்கே உரிய இன்பங்களை அனுபவித்து மகிழ்வதற்கு ஆயிரக்கணக்கான டாலரை அவர்கள் அள்ளி இறைக்கிறார்கள். யெகோவாவின் அமைப்பு சொல்லும் இடத்தில் அவரைச் சேவிக்க தீர்மானித்ததால் இந்தத் தீவுகளில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதில் ஒரு முனையிலிருந்து மறுமுனை மட்டும் பயணம் செய்து பல சந்தோஷமான அனுபவங்களை பெற்றிருக்கிறேன். ஆனாலும் மிக முக்கியமாக, சிநேகப்பான்மைமிக்க பஹாமியர் சிலருடன் பழக முடிந்ததால் அவர்களுடைய ஈடிணையற்ற அன்பை பெற்றிருக்கிறேன், அதை பொக்கிஷமாய் கருதுகிறேன்.
என் பெற்றோருக்கு சத்தியத்தை அறிவித்தவர்களுக்கு அதிக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் பெற்றோரும் என்னுடைய பிஞ்சு மனதிலும் இதயத்திலும் முதலாவதாக கடவுளுடைய ராஜ்யத்தை தேடும் ஆவலை ஆழமாக பதிய வைத்தார்கள். இன்று யெகோவாவின் இளம் ஊழியர்கள் ஊழியத்தை விரிவுபடுத்தும் மகத்தான வாய்ப்புகளாகிய ‘பெரிதான கதவுக்குள்’ பிரவேசித்தால், அவர்களும் பல ஆசீர்வாதங்களைப் பெறலாம். (1 கொரிந்தியர் 16:9) ‘தேவாதி தேவனாகிய’ யெகோவாவைக் கௌரவிப்பதற்கு உங்கள் வாழ்க்கையை பயன்படுத்தினால், நீங்களும் நன்றியால் பொங்கி வழிவீர்கள்.—உபாகமம் 10:17; தானியேல் 2:47.
[பக்கம் 24-ன் படம்]
1944-ல், விக்டோரியா, பி.சி.-யில் தெரு ஊழியம்
[பக்கம் 24-ன் படம்]
1946-ல், நானும் ஜார்ஜும் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டோம்
[பக்கம் 25-ன் படம்]
1955-ல், பஹாமா தீவுகளில், நஸ்ஸொவ்விலுள்ள மிஷனரி இல்லத்திற்கு முன்னால் ஜார்ஜுடன்
[பக்கம் 26-ன் படம்]
1961-லிருந்து 1972 வரை நாங்கள் சேவை செய்த டெட்மான்ஸ் கேயிலுள்ள மிஷனரி இல்லம்