உங்கள் ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி
“கடந்த பத்தாண்டில், வேலை செய்யுமிடத்தோடு சம்பந்தப்பட்ட ஆன்மீகம் பற்றிய 300-க்கும் அதிகமான புத்தகங்கள்—ஜீஸஸ் CEO முதல் டாவோ தலைமை வரை—புத்தகக் கடைகளுக்குள் வெள்ளம் போல் பெருக்கெடுத்து வந்துள்ளன” என யு.எஸ். நியுஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் கூறுகிறது. செல்வச் செழிப்பான நாடுகளில் ஆன்மீக பசி அகோர பசியாக அதிகரித்து வருவதையே இந்தப் போக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. இதைப் பற்றி குறிப்பிடுகையில், டிரெய்னிங் & டெவலப்மென்ட் என்ற பிஸினஸ் ஜர்னல் இவ்வாறு கூறுகிறது: “நம் வாழ்க்கையின் எல்லா அம்சத்தையும் தொழில்நுட்பம் ஆட்டிப்படைக்கும் ஒரு காலகட்டத்தில், வாழ்க்கையில் ஆழ்ந்த அர்த்தத்தையும், நோக்கத்தையும், அதிகமான திருப்தியையும் நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்.”
ஆனால் திருப்திகரமான ஆன்மீக வழிநடத்துதலை நீங்கள் எங்கே கண்டடையலாம்? வாழ்க்கையில் “ஆழ்ந்த அர்த்தத்தையும்” “நோக்கத்தையும்” கண்டுபிடிப்பதற்கு கடந்த காலத்தில் மக்கள் பாரம்பரிய மதங்களையே நோக்கியிருந்தார்கள். இன்றோ, ஸ்தாபிக்கப்பட்ட மதங்களை அநேகர் உதறித் தள்ளிவிட்டிருக்கிறார்கள். “மதத்தையும் ஆன்மீகத்தையும் மக்கள் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கிறார்கள்” என்பதை உயர்பதவி வகிக்கும் 90 மானேஜர்களையும் எக்ஸிகியூடிவ்களையும் வைத்து எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு காண்பித்தது. அந்தச் சுற்றாய்வில் கலந்துகொண்டவர்கள் மதத்தை “சகிப்புத்தன்மையற்றதாகவும் பிரிவினையுண்டாக்குவதாகவும்” கருதினார்கள், மறுபட்சத்தில் ஆன்மீகத்தை “அகில முழுவதற்குமுரியதாகவும் எல்லாவற்றையும் ஒன்றிணைப்பதாகவும்” கண்டார்கள்.
ஆஸ்திரேலியா, நியுஜிலாந்து, ஐக்கிய அரசு, ஐரோப்பா போன்ற அதிக மதப்பற்றில்லா சமுதாயங்களில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்களும் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே இதுபோன்ற வித்தியாசத்தைப் பார்க்கிறார்கள். யூத் ஸ்டடீஸ் ஆஸ்ட்ரேலியா என்ற நூலில் பேராசிரியர் ரூத் வெப்பர் இவ்வாறு அடித்துக் கூறுகிறார்: “பெரும்பான்மையான இளைஞர்கள் கடவுள் மீது, அல்லது ஏதோ இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள், ஆனால் சர்ச்-ஐ முக்கியமாகவோ தங்களுடைய ஆன்மீகத்தை வெளிப்படுத்துவதற்கு பயனுள்ள ஒன்றாகவோ கருதுவதில்லை.”
உண்மை மதம் ஆன்மீகத்தை வளர்க்கிறது
மதத்தைப் பற்றிய இத்தகைய நம்பிக்கையற்ற மனப்பான்மை புரிந்துகொள்ளத்தக்கதே. பெரும்பாலான மத அமைப்புகள் அரசியல் சதித் திட்டங்களிலும் ஒழுக்க மாய்மாலத்திலும் ஆழமாக மூழ்கியிருக்கின்றன; அதோடு, எண்ணற்ற மதப் போர்களில் ஈடுபட்டு அப்பாவி உயிர்களை பலிவாங்கியிருக்கின்றன. ஆனால் சிலர், போலி வேஷத்தினாலும் வஞ்சகத்தினாலும் கெட்டுக் கிடக்கும் மத அமைப்புகளை நிராகரிப்பதோடு, இப்படிப்பட்ட பழக்கங்களை பைபிள் கண்டனம் செய்வதில்லை என நினைத்து பைபிளையும் நிராகரிக்கிறார்கள். அது தவறான செயலாகும்.
உண்மையில் பார்த்தால், போலி வேஷத்தையும் நெறிகெட்ட செயல்களையும் பைபிள் வன்மையாக கண்டனம் செய்கிறது. தம்முடைய நாளில் வாழ்ந்த மதத் தலைவர்களிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”—மத்தேயு 23:27, 28, பொது மொழிபெயர்ப்பு.
மேலும், அரசியல் விவகாரங்கள் அனைத்திலும் நடுநிலை வகிக்கும்படி கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. ஒருவரையொருவர் கொலை செய்வதை அல்ல, ஆனால் ஒருவருக்கொருவர் மரிக்கவும் மனமுள்ளவர்களாக இருப்பதையே அது கற்பிக்கிறது. (யோவான் 15:12, 13; 18:36; 1 யோவான் 3:10-12) பைபிள் அடிப்படையிலான மெய் மதம் “சகிப்புத்தன்மையற்றதாகவும் பிரிவினையுண்டாக்குவதாகவும்” இருப்பதற்குப் பதிலாக, “எல்லாவற்றையும் ஒன்றிணைப்பதாக” இருக்கிறது. ‘தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்’ என அப்போஸ்தலன் பேதுரு கூறினார்.—அப்போஸ்தலர் 10:34, 35.
பைபிள்—ஆன்மீக ஆரோக்கியத்திற்கு நம்பகமான வழிகாட்டி
மனிதர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26, 27) மனிதர்கள் சரீர ரீதியில் கடவுளைப் போல இருக்கிறார்கள் என்பதை அல்ல, ஆனால் ஆன்மீக காரியங்களை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கடவுளுடைய குணங்களைப் பிரதிபலிக்கும் திறமையை பெற்றிருக்கிறார்கள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது.
அதனால், நமது ஆன்மீக தேவைகளைத் திருப்தியாக்குவதற்குரிய ஏதுக்களையும், ஆன்மீக ரீதியில் நமக்கு நன்மையானவை எவை தீமையானவை எவை என்பதை பகுத்துணருவதற்குரிய வழிநடத்துதலையும் கடவுள் தருவார் என நம்புவது நியாயமானதே. நோய்களை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாய் இருப்பதற்கு உதவுகிற நோய் எதிர்ப்பு சக்தி அமைப்புடன் அற்புதமாக நமது உடல்களை கடவுள் படைத்திருப்பதைப் போலவே, நமக்கு மனசாட்சியையும் அவர் கொடுத்திருக்கிறார்; இது சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கும் உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பதற்கும் நமக்கு உதவுகிறது. (ரோமர் 2:14, 15) நமது நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படுவதற்கு, தகுந்த போஷாக்கு தேவை. அது போலவே, நமது மனசாட்சி செயல்படுவதற்கு ஆரோக்கியமான ஆன்மீக உணவு தேவை.
ஆன்மீக ரீதியில் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவும் உணவை குறிப்பிட்டு, இயேசு இவ்வாறு கூறினார்: ‘மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.’ (மத்தேயு 4:4) யெகோவாவின் வார்த்தைகள் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:17) ஆகவே, இந்த ஆன்மீக போஷாக்கை உட்கொள்வதற்கு முயற்சி எடுப்பது நமது கடமை. எந்தளவுக்கு பைபிளைப் படித்து அதிலுள்ள நியமங்களை வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்கிறோமோ அந்தளவுக்கு ஆன்மீக ரீதியிலும் உடல் ரீதியிலும் நாம் நன்மை அடைவோம்.—ஏசாயா 48:17, 18.
முயற்சிக்கு பலன் உண்டா?
உண்மைதான், பைபிளைப் படிப்பதன் மூலம் நமது ஆன்மீக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நேரம் அவசியம்; நேரம் கிடைப்பதோ குதிரைக் கொம்பு போல தோன்றுகிறது. ஆனால் எடுக்கும் முயற்சிக்கு நிச்சயம் பலனுண்டு! தங்களுடைய ஆன்மீக ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்குவதை பிஸியான புரொஃபஷனல் ஆட்கள் சிலர் ஏன் முக்கியமாக கருதுகிறார்கள் என்பதற்குரிய காரணத்தை இப்பொழுது அவர்களிடமே நாம் கேட்கலாம்.
மாரீனா என்ற மருத்துவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்யத் துவங்கி மற்றவர்கள் படும் கஷ்டங்களை எல்லாம் ரொம்ப உணர ஆரம்பித்த பிறகுதான் உண்மையில் என்னுடைய ஆன்மீகத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கினேன். வாழ்க்கையில் திருப்தியும் நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்றால், என்னுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்து அதை பூர்த்தி செய்ய வேண்டியிருந்ததை அப்புறம்தான் உணர ஆரம்பித்தேன். ஏனென்றால் வாழ்க்கையில் அரக்கபரக்க ஓடிக்கொண்டிருப்பதும் ஆட்களை கவனித்துக்கொள்வதும் என்னைப் போன்ற தொழில் செய்கிறவர்களை திக்குமுக்காடச் செய்துவிடலாம்.
“நான் இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய சிந்தைகளையும் செயல்களையும் பிரயோஜனமான விதத்தில் பரிசோதித்துப் பார்க்க இந்தப் படிப்பு எனக்கு உதவி செய்கிறது; அதோடு, நல்லதையே சிந்திக்கும் விதத்தில் என் மனதை பயிற்றுவிக்கிறது. அதன் மூலம் சமநிலையான வாழ்க்கை வாழ முடிகிறது. என்னுடைய வேலையில் எனக்கு அதிக திருப்தி கிடைக்கிறது. ஆனால் பைபிள் படிப்புதான் உணர்ச்சி ரீதியில் என்னுடைய ஆரோக்கியத்தை முன்னேற்றுவித்திருக்கிறது, வேண்டாத உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், டென்ஷனை குறைப்பதற்கும், மற்றவர்களோடு பொறுமையுடனும் கரிசனையுடனும் நடந்துகொள்வதற்கும் உதவி செய்திருக்கிறது. பைபிள் நியமங்களை வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பது என்னுடைய மண வாழ்க்கைக்கும் நன்மை அளித்திருக்கிறது. மிக முக்கியமாக, நான் யெகோவாவைப் பற்றி இப்போது தெரிந்திருக்கிறேன்; சிறிய அளவில், அவருடைய பரிசுத்த ஆவியை பெறுகிறேன், இது என்னுடைய வாழ்க்கைக்கு அதிக அர்த்தத்தை கொடுத்திருக்கிறது.”
நிக்கோலஸ் என்ற கட்டட வரைபடக் கலைஞர் இவ்வாறு கூறுகிறார்: “யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிப்பதற்கு முன்பு, ஆன்மீகத்தில் எனக்கு எந்தவித நாட்டமும் கிடையாது. வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளே என்னுடைய தொழிலில் வெற்றி பெறுவதுதான். வாழ்க்கை என்பது இது மட்டுமல்ல என்பதை பைபிள் படிப்பு எனக்கு கற்பித்திருக்கிறது. அதோடு, யெகோவாவின் சித்தத்தை செய்வது உண்மையான மகிழ்ச்சியை, நீடித்த மகிழ்ச்சியை தரும் என்பதையும் எனக்கு கற்றுத் தந்திருக்கிறது.
“என்னுடைய வேலையின் மூலம் எனக்கு திருப்தி கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது, இருந்தாலும் ஆன்மீக காரியங்கள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ள பைபிள்தான் எனக்கு போதித்திருக்கிறது. இதன் மூலம், பொருளாசைமிக்க வாழ்க்கை வாழ்வதால் வரும் மனஅழுத்தத்தை நானும் என் மனைவியும் பேரளவு தவிர்த்திருக்கிறோம். வாழ்க்கையில் எங்களைப் போல ஆன்மீக நோக்குநிலை உடையவர்களுடன் கூட்டுறவு கொள்வதன் மூலம் உண்மையான நண்பர்கள் பலருடன் நட்பையும் ஏற்படுத்தியிருக்கிறோம்.”
வின்சென்ட் என்ற வழக்கறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு நல்ல வேலை ஓரளவு திருப்தியை தரலாம். ஆனால் மகிழ்ச்சியையும் திருப்தியையும் காண்பதற்கு இதைவிட அதிகம் தேவை என்பதை கண்டுகொண்டேன். இந்த விஷயத்தின் சம்பந்தமாக பைபிள் போதனையை அறிந்துகொள்வதற்கு முன்பு, வாழ்க்கை எவ்வளவு அர்த்தமற்றது என்பதை நான் திடீரென உணர ஆரம்பித்தேன்—பிறந்து, வளர்ந்து, கலியாணம் பண்ணி, குழந்தைகளைப் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு ஒரு வேலை செய்து, இவை அனைத்தையும் அவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, கடைசியில் வயசாகி மரிப்பதுதான் வாழ்க்கையா என சிந்திக்க ஆரம்பித்தேன்.
“யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் எனக்கு கிடைத்தது. யெகோவா தேவனை ஒரு நபராக அறிந்துகொள்வதற்கும் அவர் மீது ஆழ்ந்த அன்பை வளர்த்துக் கொள்வதற்கும் பைபிள் படிப்பு எனக்கு உதவி செய்திருக்கிறது. ஆரோக்கியமான ஆன்மீக கண்ணோட்டத்தைக் காத்துக்கொள்ள இது அடிப்படையாக இருக்கிறது; யெகோவாவின் நோக்கத்தை அறிந்து அதற்கு இசைய வாழ்வதற்கு கடினமாக முயற்சி செய்கிறேன். இப்பொழுது, நானும் என் மனைவியும் எங்களுடைய வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்தத் தெரிந்திருப்பது எங்கள் இருவருக்கும் திருப்தியை அளிக்கிறது.”
பைபிளை படிப்பதன் மூலம் நீங்களும்கூட வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் கண்டுகொள்ளலாம். உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மாரீனா, நிக்கோலஸ், வின்சென்ட் ஆகியோரைப் போல, யெகோவாவையும் மனிதவர்க்கத்திற்கான மற்றும் தனிப்பட்ட நபராக உங்களுக்கான அவருடைய நோக்கத்தையும் கற்றுக்கொள்வதால் வரும் திருப்தியை நீங்களும் பெறலாம். இப்பொழுது உங்களுடைய ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்வதால் வரும் மகிழ்ச்சியை மட்டுமல்ல, பூரண சுகத்துடன் முடிவில்லா வாழ்க்கையை—‘ஆன்மீக தேவைகளைக் குறித்து உணர்வுடையோருக்கு’ மட்டுமே கிடைக்கும் வாழ்க்கையை—அனுபவிக்கும் நம்பிக்கையையும் நீங்கள் பெறுவீர்கள்.—மத்தேயு 5:3, NW.
நமது ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு வழி ஜெபம். எப்படி ஜெபிப்பது என்பதை தமது சீஷர்களுக்குக் கற்பிக்க இயேசு நேரத்தை ஒதுக்கினார்; கர்த்தருடைய ஜெபம் என பொதுவாக அழைக்கப்படும் ஜெபத்தை சொல்லி கொடுத்தார். இன்று அந்த ஜெபம் உங்களுக்கு எதைக் குறிக்கிறது? அதிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம்? இதை அடுத்த இரண்டு கட்டுரைகளில் நீங்கள் காணலாம்.
[பக்கம் 6-ன் படங்கள்]
மாரீனா
[பக்கம் 7-ன் படங்கள்]
நிக்கோலஸ்
[பக்கம் 7-ன் படங்கள்]
வின்சென்ட்