வெஸ்ட்ஃபேல்யாவின் சமாதானம் - ஐரோப்பாவில் ஒரு திருப்புமுனை
“இங்கே கூடிவந்திருக்கும் இத்தனை ஐரோப்பிய தலைவர்களையும் இன்று போல் ஒருமிக்கக் காண்பது உண்மையிலேயே வெகு அபூர்வமானது.” அக்டோபர் 1998-ல், ஜெர்மானிய கூட்டாட்சிக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ரோமான் ஹெர்ட்சோக் இப்படி சொன்னார். இதை அவர் சொல்லுகையில், நான்கு ராஜாக்களும் நான்கு ராணிகளும் இரண்டு இளவரசர்களும் பெரும் சீமான் ஒருவரும் அநேக ஜனாதிபதிகளும் அங்கிருந்தார்கள். ஐரோப்பிய கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி நவீன ஜெர்மனியின் 50 ஆண்டு கால சரித்திரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அது என்ன நிகழ்ச்சி?
அதுவே அக்டோபர் 1998-ல் நடைபெற்ற வெஸ்ட்ஃபேல்யா சமாதான உடன்படிக்கையின் 350-வது ஆண்டு விழாவாகும். சரித்திரத்தை மாற்றும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் சமயங்களில்தான் பெரும்பாலும் சமாதான ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன; இந்த விதத்தில் வெஸ்ட்ஃபேல்யா உடன்படிக்கை உண்மையிலேயே விசேஷித்த ஒன்று. 1648-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது அது முப்பதாண்டு கால போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது; தனி நாடுகள் அடங்கிய கண்டமாக நவீன ஐரோப்பா பிறப்பதற்கும் வழிவகுத்தது.
ஆட்டம்காணும் பண்டைய அமைப்பு முறை
இடைக்காலத்தின்போது ரோமன் கத்தோலிக்க சர்ச்சும் புனித ரோமப் பேரரசுமே ஐரோப்பாவில் மிகவும் வல்லமை வாய்ந்த அமைப்புகளாக விளங்கின. அந்தப் பேரரசின்கீழ் பெரிதும் சிறிதுமான எஸ்டேட்டுகள் நூற்றுக்கணக்கில் இருந்தன; தற்போதைய ஆஸ்திரியா, செக் குடியரசு, கிழக்கு பிரான்சு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இன்றைய பெல்ஜியம், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, இத்தாலியின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பேரரசாக அது பரந்து விரிந்திருந்தது. அதன் பெரும் பகுதி ஜெர்மானிய எஸ்டேட்டுகளாக இருந்ததால் அந்தப் பேரரசு ஜெர்மன் நாட்டின் புனித ரோமப் பேரரசு என அழைக்கப்படலாயிற்று. ஒவ்வொரு எஸ்டேட்டையும் ஓரளவு சுயாட்சி உரிமையுடன் ஓர் இளவரசர் ஆண்டு வந்தார். ரோமப் பேரரசரோ ஆஸ்திரியாவின் ஹேப்ஸ்பர்க் குடும்பத்தை சேர்ந்த ரோமன் கத்தோலிக்கராக இருந்தார். எனவே போப்பின் அதிகாரத்தாலும் ஆட்சி செய்த அந்த பேரரசாலும் ஐரோப்பா ரோமன் கத்தோலிக்க உடும்புப் பிடியில் இருந்தது.
எனினும் 16-ம், 17-ம் நூற்றாண்டுகளில் அந்த அமைப்பு முறையே ஆட்டங்கண்டது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் அத்துமீறிய செயல்களால் ஐரோப்பா எங்கும் அதிருப்தி நிலவியது. மார்ட்டின் லூத்தர், ஜான் கால்வின் போன்ற மத சீர்திருத்தவாதிகள் பைபிள் தராதரங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி பேசினார்கள். இதனால் லூத்தருக்கும் கால்வினுக்கும் பெருத்த ஆதரவு கிடைக்கவே, மத சீர்திருத்த இயக்கமும் புராட்டஸ்டன்ட் மதங்களும் பிறந்தன. இவ்வாறு மத சீர்திருத்த இயக்கம், கத்தோலிக்கர், லூத்தரன், கால்வினிஸ்ட் என அந்தப் பேரரசை மூன்றாக கூறு போட்டது.
கத்தோலிக்கர்கள் புராட்டஸ்டன்டினரை சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள், புராட்டஸ்டன்டினர் தங்களுக்குப் போட்டியாக இருந்த கத்தோலிக்கர்களை அடியோடு வெறுத்தார்கள். இந்த சூழ்நிலையால் 17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புராட்டஸ்டன்ட் யூனியனும் கத்தோலிக்க லீக்கும் உருவாயின. இந்தப் பேரரசிலிருந்த சில இளவரசர்கள் யூனியனிலும் வேறு சிலர் லீக்கிலும் சேர்ந்துகொண்டார்கள். ஐரோப்பாவில், முக்கியமாக இந்தப் பேரரசில் சந்தேக சூழல் நிலவியது; காட்டையே கொளுத்திவிட ஒரு தீப்பொறி போதும் என்பது போல அங்கு பெரும் சண்டை வெடித்துவிட துளி கோபமே போதுமானதாக இருந்தது. இறுதியில் அப்படிப்பட்ட துளி கோபம் போராக உருவெடுத்து அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தொடர்கதை போல் ஆனது.
ஐரோப்பாவையே கொளுத்திய ஒரு கொடிய தீப்பொறி
கூடுதல் மத சுதந்திரம் அளிக்கும்படி கத்தோலிக்க ஹேப்ஸ்பர்க்குகளை தூண்டுவிக்க புராட்டஸ்டன்ட் ஆட்சியாளர்கள் முயன்றார்கள். அவர்கள் சலுகைகள் அளித்தார்கள், ஆனால் மனமில்லாமல். அத்துடன் 1617-18-ல் பொஹிமியாவிலுள்ள (செக் குடியரசு) இரண்டு லூத்தரன் சர்ச்சுகள் பலவந்தமாக மூடப்பட்டன. இது புராட்டஸ்டன்ட் உயர்குடியினரைப் புண்படுத்தியதால் அவர்கள் ப்ராக்கிலுள்ள ஓர் அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த மூன்று கத்தோலிக்க அதிகாரிகளைப் பிடித்து மாடி ஜன்னலிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள். இந்த செயலே தீப்பொறியாகி ஐரோப்பா முழுவதையும் கொளுத்திப் போட்டது.
சமாதானப் பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என சொல்லிக் கொண்டாலும் எதிரும் புதிருமான அந்த மதத்தார் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டார்கள். (ஏசாயா 9:6) ‘ஒயிட் மௌண்டன் போரில்’ கத்தோலிக்க லீக் புராட்டஸ்டன்ட் யூனியனை படுதோல்வி அடைய செய்தது; இதனால் அந்த யூனியன் பிளவுபட்டது. புராட்டஸ்டன்ட் உயர்குடியினர் ப்ராக்கின் சந்தைவெளியில் தூக்கிலிடப்பட்டார்கள். பொஹிமியா எங்கும், தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுக்காத புராட்டஸ்டன்டினரின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கத்தோலிக்கர்கள் மத்தியில் பங்கிட்டுக் கொள்ளப்பட்டன. 1648—கிரீக் யுண்டு ஃபிரீடன் இன் ஐரோப்பா (1648—ஐரோப்பாவில் போரும் சமாதானமும்) என்ற புத்தகம் இந்தப் பறிமுதலை இவ்வாறு விவரிக்கிறது: “மத்திய ஐரோப்பா இதுவரை கண்டிராத மிகப் பெரிய சொத்து கைமாற்றம்.”
பொஹிமியாவில் ஆரம்பமான மத சண்டை, பதவிக்காகப் போட்டியிடும் பன்னாட்டு போராய் பூதாகரமாக உருவெடுத்தது. அடுத்த 30 ஆண்டுகளில் டென்மார்க், பிரான்சு, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகள் இந்தப் போரில் கலந்துகொண்டன. பேராசையும் பதவியாசையும் பிடித்த கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் ஆட்சியாளர்கள், அரசியலில் பெரும் புள்ளியாக திகழவும் வியாபாரத்தில் கொழுத்த லாபம் சம்பாதிக்கவும் சூழ்ச்சிகளைக் கையாண்டார்கள். அந்த முப்பதாண்டு கால போர் பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, அவை அந்தப் பேரரசரின் முக்கிய எதிரிகளின் பெயரால் அழைக்கப்பட்டன. அப்போரின் நான்கு கட்டங்களைப் பற்றி அநேக புத்தகங்கள் குறிப்பிடுகின்றன; அவை: பொஹிமிய மற்றும் பலத்தீனிய போர், டச்சு-லோவர் சாக்சனி போர், சுவீடன் போர், பிரான்சு-சுவீடன் போர். இச்சண்டைகளில் பெரும்பாலானவை புனித ரோமப் பேரரசின் பிராந்தியத்தில் நடைபெற்றன.
அந்தக் காலப் பகுதியின்போது கைத்துப்பாக்கிகள், காலாட்படையினரின் துப்பாக்கிகள் (muskets), சிறு பீரங்கிகள் (mortars), பீரங்கி வண்டிகள் (cannons) ஆகியவை உபயோகிக்கப்பட்டன; தேவையான ஆயுதங்களை சுவீடன் பெருமளவு விநியோகித்தது. கத்தோலிக்கர்களும் புராட்டஸ்டன்டினரும் போரில் ஈடுபட்டிருந்தார்கள். போர்வீரர்கள் “சாண்டா மரியா” என்றோ “கடவுள் எங்கள் பக்கம்” என்றோ கூவிக்கொண்டு போர்க்களத்தில் இறங்கினார்கள். ஜெர்மன் எஸ்டேட்டுகள் வழியாக செல்லுகையில் படையினர் கொள்ளையடித்து, சூறையாடினார்கள், எதிரிகளையும் பொதுமக்களையும் மிருகத்தனமாக நடத்தினார்கள். அந்தப் போர் படுமோசமடைந்து காட்டுமிராண்டித்தனமாக மாறியது. “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்ற பைபிள் தீர்க்கதரிசனத்திற்கும் இதற்கும் எவ்வளவு முரண்பாடு!—மீகா 4:3.
அந்த சமயத்தில் ஜெர்மனியிலிருந்தவர்கள் போரை மட்டுமே பார்த்து வளர்ந்தவர்களாய் இருந்தார்கள்; சோர்ந்துபோன மக்கள் சமாதானத்துக்காக ஏங்கினார்கள். ஆட்சியாளர்கள் மத்தியில் முரண்பட்ட அரசியல் நாட்டங்கள் மட்டும் இல்லாதிருந்தால் நிச்சயம் சமாதானம் சாத்தியமாகியிருக்கும். மத போராக அல்லாமல் அரசியல் காரணங்களுக்காகவே நடக்கும் போராக அது மெல்ல மெல்ல உருமாறியது. இத்தகைய மாற்றத்தை புகுத்தியவர் கத்தோலிக்க சர்ச்சின் முக்கியப் பிரமுகர் என்பதே இதில் வேடிக்கைக்குரிய விஷயம்.
கார்டினல் ரிச்சிலியு அதிகாரம் செலுத்துகிறார்
ஆர்மான் ஷான் டியு ப்லெஸி என்பவருக்கு கார்டினல் டி ரிச்சிலியு என்ற அதிகாரப்பூர்வ பட்டப்பெயர் இருந்தது. அவர் 1624 முதல் 1642 வரை பிரான்சின் பிரதம மந்திரியாகவும் இருந்தார். ஐரோப்பாவிலேயே அதிக வலிமை வாய்ந்ததாக பிரான்சை உருவாக்கும் குறிக்கோள் ரிச்சிலியுவுக்கு இருந்தது. அதை சாதிப்பதற்கு தன் சக கத்தோலிக்கர்களான ஹேப்ஸ்பர்க்குகளின் அதிகாரத்தை மட்டுப்படுத்த அவர் முற்பட்டார். அதை அவர் எப்படி செய்தார்? ஹேப்ஸ்பர்க்குகளுக்கு எதிராக போரிட்ட டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மானிய எஸ்டேட்டுகள் ஆகியவற்றிலிருந்த புராட்டஸ்டன்ட் படையினருக்கு பண உதவி அளிப்பதன் மூலம் இதைச் செய்தார்.
1635-ல் முதன்முறையாக பிரெஞ்சு படைகளை ரிச்சிலியு போர் களத்தில் இறக்கினார். அதன் இறுதிக் கட்டத்தை விவாட் பாக்ஸ்—எஸ் லேபா டேயி ஃப்ரீடா! (நீடூழி வாழ்க சமாதானம்!) என்ற புத்தகம் இப்படியாக விளக்குகிறது: “முப்பதாண்டு கால போர் இனிமேலும் மதப் பிரிவுகளுக்கு இடையேயான சண்டையாக இருக்கவில்லை. . . . அந்தப் போர், ஐரோப்பாவில் அரசியல் உச்சாணியைக் கைப்பற்றுவதற்கான சண்டையாக மாறியது.” கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே ஆரம்பித்த மத சண்டை இவ்விருதரப்பினரும் சேர்ந்துகொண்டு மற்ற கத்தோலிக்கர்களைத் தாக்குவதில் முடிவடைந்தது. 1630-களின் ஆரம்பத்தில் ஏற்கெனவே பலமிழந்திருந்த கத்தோலிக்க லீக் 1635-ல் கலைக்கப்பட்டது.
வெஸ்ட்ஃபேல்யாவில் சமாதான மாநாடு
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வியாதி ஆகியவை ஐரோப்பாவை சூறையாடின. இந்தப் போரில் எத்தரப்பினரும் வெற்றி பெற முடியாதென்று மக்கள் உணர்ந்ததால் அவர்கள் மத்தியில் சமாதானத்திற்கான ஆவல் மெல்ல மெல்ல அதிகரித்தது. “1630-ன் முடிவில், தங்கள் குறிக்கோள் நிறைவேறுவதற்கு படை பலம் இனிமேலும் உதவாது என்பதை ஆட்சியிலிருந்த இளவரசர்கள் புரிந்துகொண்டார்கள்” என விவாட் பாக்ஸ்—எஸ் லேபா டேயி ஃப்ரீடா! புத்தகம் குறிப்பிடுகிறது. எல்லாருக்கும் சமாதானம்தான் தேவை என்றால் அதை எப்படி அடைவது?
போரில் உட்பட்டிருந்த அனைத்து தரப்பினரும் கூடிவந்து சமாதான நிபந்தனைகளைக் குறித்து பேச்சு வார்த்தை நடத்த ஒரு மாநாட்டைக் கூட்ட வேண்டுமென பரிசுத்த ரோமப் பேரரசின் அரசரான மூன்றாம் ஃபெர்டினான்டும் பிரான்சின் அரசரான பதிமூன்றாம் லூயிஸும் சுவீடனைச் சேர்ந்த ராணி கிறிஸ்டீனாவும் ஒப்புக்கொண்டார்கள். இந்தப் பேச்சு வார்த்தை நடத்த ஜெர்மனியைச் சேர்ந்த வெஸ்ட்ஃபேல்யா மாநிலத்திலுள்ள அஸ்நப்ரூக், மன்ஸ்டர் ஆகிய இரண்டு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சுவீடன், பிரான்சு ஆகியவற்றின் தலைநகரங்களுக்கு மத்தியில் இருந்ததால் அவை தேர்ந்தெடுக்கப்பட்டன. 1643 முதல், ஆலோசகர்கள் அடங்கிய சுமார் 150 குழுக்கள்—அவற்றில் சில பெரியவை—இந்த இரண்டு நகரங்களுக்கும் வந்து சேர்ந்தன; கத்தோலிக்க அரசியல் தலைவர்கள் மன்ஸ்டரிலும் புராட்டஸ்டன்ட் தலைவர்கள் அஸ்நப்ரூகிலும் வந்திறங்கினார்கள்.
முதலாவதாக, பட்டங்கள், அரசியல் தலைவர்களின் பதவி, உட்கார வைக்கும் வரிசை முறை, செயல்முறைகள் போன்ற விஷயங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தீர்மானிக்கப்பட்டன. பிறகு ஒரு குழுவிடமிருந்து மற்றொரு குழுவுக்கு மத்தியஸ்தர்களின் உதவியுடன் ஆலோசனைகளைப் பரிமாற்றம் செய்வதன் மூலம் சமாதான பேச்சு வார்த்தை ஆரம்பமானது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே சமாதான நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன; அந்தச் சமயத்தில் போர் நடந்துகொண்டிருந்தது. வெஸ்ட்ஃபேல்யா உடன்படிக்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. ஓர் ஒப்பந்தம் மூன்றாம் ஃபெர்டினான்டுக்கும் சுவீடனுக்கும் இடையேயும் மற்றொன்று அந்தப் பேரரசருக்கும் பிரான்சுக்கும் இடையேயும் கையெழுத்தாயின.
உடன்படிக்கை பற்றிய செய்தி எங்கும் பரவியபோது கொண்டாட்டங்கள் ஆரம்பமாயின. ஒரு கொடிய தீப்பொறியோடு ஆரம்பித்த போர் சொல்லர்த்தமாகவே வாணவேடிக்கையுடன் முடிவுற்றது. வாணவேடிக்கையால் பல்வேறு நகரங்களில் வானம் களைகட்டியது. ஆலய மணிகள் ஒலித்தன, அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பீரங்கி வண்டிகளிலிருந்து குண்டுகள் முழங்கின, தெருக்களில் ஜனங்களின் பாடல் ஒலி கேட்டது. இப்போதாவது ஐரோப்பா நிரந்தர சமாதானத்தை எதிர்பார்க்க முடியுமா?
நிரந்தர சமாதானம் சாத்தியமா?
வெஸ்ட்ஃபேல்யா உடன்படிக்கை பேரரசுக்குரிய நியதியை ஒப்புக்கொண்டது. அந்த உடன்படிக்கையில் உட்பட்டிருந்த ஒவ்வொரு தரப்பினரும் மற்றவருடைய பிராந்திய உரிமைகளை மதிக்கவும் அவர்களுடைய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருக்கவும் ஒப்புக்கொண்டார்கள். இவ்வாறு, தனி நாடுகள் அடங்கிய கண்டமாக நவீன ஐரோப்பா பிறந்தது. இந்த உடன்படிக்கையால் அந்த நாடுகளில் சில மற்றவற்றைவிட பெரிதும் பயனடைந்தன.
பிரான்சு முக்கிய வல்லரசாக ஏற்படுத்தப்பட்டது, நெதர்லாந்தும் சுவிட்சர்லாந்தும் சுதந்திர நாடுகளாயின. போரால் பாழாக்கப்பட்டிருந்த ஜெர்மானிய எஸ்டேட்டுகளில் பல அந்த உடன்படிக்கையால் பாதிக்கப்பட்டன. ஜெர்மனியின் எதிர்காலத்தை ஓரளவுக்கு பிற நாடுகளே தீர்மானித்தன. த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ஜெர்மானிய இளவரசர்களின் லாப நஷ்டங்கள், வலிமைமிக்க நாடுகளாக திகழ்ந்த பிரான்சு, சுவீடன், ஆஸ்திரியா ஆகியவற்றின் சௌகரியத்திற்கு இசைய தீர்மானிக்கப்பட்டன.” ஜெர்மன் எஸ்டேட்டுகள் அனைத்தும் சேர்ந்து ஒரே நாடாக ஆவதற்கு பதிலாக முன்பிருந்ததைப் போலவே பிரிவுற்றிருந்தன. மேலும் ஜெர்மனியின் முக்கிய ஆறுகளான ரைன், எல்ப், ஓடர் ஆகியவற்றின் பகுதிகள் உட்பட சில பிராந்தியங்கள் வேறு ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கத்தோலிக்க, லூத்தரன், கால்வினிஸ்ட் மதங்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. இது எல்லாருக்கும் பிடிக்கவில்லை. பத்தாம் போப் இன்னசன்ட் இந்த உடன்படிக்கையை கடுமையாக எதிர்த்தார், அது செல்லுபடியாகாது என்றும் அறிவித்தார். என்றாலும், வகுக்கப்பட்ட மத எல்லைகள் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு பெருமளவு மாறாமல் அப்படியே இருந்தன. தனி நபர்களுக்கு மத சுதந்திரம் இன்னும் வழங்கப்படாதிருந்தாலும் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு இருந்தது.
முப்பதாண்டு கால போரும் அதன் போர் நடவடிக்கைகளும் அந்த உடன்படிக்கையால் முடிவுக்கு வந்தன. ஐரோப்பாவில் நடந்த மத போரில் இதுவே கடைசியான மிகப் பெரிய போராகும். எனினும் போர்கள் முடிவடையவில்லை, மத காரணங்களுக்காக போரிடுவதற்குப் பதில் அரசியல் அல்லது வியாபார காரணங்களுக்காக போரிடுவது தொடர்ந்தது. ஐரோப்பாவில் நடைபெறும் போர் நடவடிக்கைகளில் மதத்திற்கு துளியும் பங்கில்லை என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. முதலாம், இரண்டாம் உலகப் போர்களின்போது ஜெர்மானிய வீரர்கள், “கடவுள் எங்கள் பக்கம்” என்ற நன்கு பரிச்சயமான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெல்ட்டு பக்கிளை அணிந்திருந்தார்கள். அந்த பயங்கரமான சண்டைகளின்போது கத்தோலிக்கர்களும் புராட்டஸ்டன்டினர்களும் மீண்டும் ஒன்று சேர்ந்துகொண்டு எதிர் தரப்பிலிருந்த கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டினர்களுக்கும் எதிராக போரிட்டார்கள்.
வெஸ்ட்ஃபேல்யா உடன்படிக்கை நிரந்தர சமாதானத்தை அளிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் அத்தகைய சமாதானத்தை சீக்கிரத்தில் அனுபவிக்கும். தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேசியானிய ராஜ்யத்தின் மூலம் யெகோவா தேவன் நிரந்தர சமாதானத்தை மனிதகுலத்திற்கு அளிப்பார். அந்த ஆட்சியின்போது ஒரே மெய் மதம் ஐக்கியப்படுத்தும் சக்தியாக செயல்படும், அது பிரிவினையை உண்டுபண்ணாது. மத காரணத்திற்காகவோ வேறு எந்தக் காரணத்திற்காகவோ யாரும் போரிட மாட்டார்கள். ராஜ்ய ஆட்சி பூமி முழுவதன் மீதும் அதிகாரம் செலுத்தும்போது, எப்பேர்ப்பட்ட நிம்மதிப் பெருமூச்சு வெளிப்படும்! ‘அதின் சமாதானத்திற்கு முடிவே இராது’!—ஏசாயா 9:6, 7.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே ஆரம்பித்த மத சண்டை இவ்விருதரப்பினரும் சேர்ந்துகொண்டு மற்ற கத்தோலிக்கர்களைத் தாக்குவதில் முடிவடைந்தது
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
போர்வீரர்கள் “சாண்டா மரியா” என்றோ “கடவுள் எங்கள் பக்கம்” என்றோ கூவிக்கொண்டு போர்க் களத்தில் இறங்கினார்கள்
[பக்கம் 21-ன் படம்]
கார்டினல் ரிச்சிலியு
[பக்கம் 23-ன் படம்]
லூத்தருக்கும், கால்வினுக்கும், போப்புக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை சித்தரிக்கும் பதினாறாம் நூற்றாண்டு சித்திரம்
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
From the book Spamers Illustrierte Weltgeschichte VI
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
மதத் தலைவர்கள் போராடுதல்: From the book Wider die Pfaffenherrschaft; வரைபடம்: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck