உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• இயேசுவுக்கு சகோதர சகோதரிகள் இருந்தார்கள் என்பதை எது சுட்டிக்காட்டுகிறது?
மத்தேயு 13:55, 56 மற்றும் மாற்கு 6:3 அதை சுட்டிக்காட்டுகின்றன. அந்த வசனங்களில் காணப்படும் கிரேக்க வார்த்தை (அடெல்போஸ்) “மாம்சப் பிரகாரமான அல்லது சட்டப்பூர்வமான உறவை குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது; அது உடன்பிறந்த சகோதரரையோ ஒன்றுவிட்ட சகோதரரையோ மட்டும்தான் அர்த்தப்படுத்துகிறது.” (த கேத்தலிக் பிப்ளிக்கல் குவாட்டர்லி, ஜனவரி 1992)—12/15, பக்கம் 3.
• போரின் முகம் எப்படி மாறியிருக்கிறது, பெரும்பாலும் அதற்கு எவை அடிப்படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன?
சமீப ஆண்டுகளாக மனிதகுலத்தை பீடித்திருப்பது முக்கியமாக உள்நாட்டுப் போர்களே, அதாவது ஒரே நாட்டைச் சேர்ந்த எதிரெதிர் அணியினருக்கு இடையே நடக்கும் போர்களே. இனப் பகைமை, குலப் பகைமை, மத வேறுபாடுகள், அநீதி, அரசியல் குழப்பங்கள் ஆகியவை உள்நாட்டுப் போர்களுக்கு காரணமாக இருக்கின்றன. பணமும் பதவி ஆசையும்கூட காரணங்களாக இருக்கின்றன.—1/1, பக்கங்கள் 3, 4.
• கிறிஸ்தவர்கள் மாதிரி ஜெபத்தின் வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும்படி இயேசு அர்த்தப்படுத்தவில்லை என்பது நமக்கு எப்படி தெரியும்?
இந்த மாதிரி ஜெபத்தை மலைப் பிரசங்கத்தின்போது இயேசு அறிமுகப்படுத்தினார். சுமார் 18 மாதங்களுக்குப் பின்னர், அந்த ஜெபத்தின் முக்கிய குறிப்புகளை மறுபடியும் எடுத்துச் சொன்னார். (மத்தேயு 6:9-13; லூக்கா 11:1-4) ஆனால் அந்த ஜெபத்தை அவர் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே கூறவில்லை; இது கவனிக்க வேண்டிய விஷயம்; ஏனென்றால், மனப்பாடமாக திரும்பத் திரும்ப சொல்லும் ஓர் ஆராதனை ஜெபத்தை அவர் கற்பிக்கவில்லை என்ற குறிப்பு இதிலிருந்து தெரிய வருகிறது.—2/1, பக்கம் 8.
• ஜலப்பிரளயத்திற்குப் பின், பேழையிலிருந்து அனுப்பப்பட்ட புறாவுக்கு ஒலிவ இலை எங்கிருந்து கிடைத்தது?
பிரளய நீரின் உவர்ப்புத்தன்மை பற்றியோ அதன் வெப்ப நிலை பற்றியோ நமக்குத் தெரியாது. ஆனால் வெட்டப்பட்ட பிறகுகூட மீண்டும் தழைக்கிற குணம் ஒலிவ மரங்களுக்கு உண்டு என்பதாக சொல்லப்படுகிறது. எனவே, சில ஒலிவ மரங்கள் ஜலப்பிரளயத்திற்குப் பின்னர் மீண்டும் தழைக்க ஆரம்பித்திருக்கலாம்.—2/15, பக்கம் 31.
• நைஜீரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, பையஃப்ராவுக்குள் எதுவுமே போய்வர முடியாதபடி தடை விதிக்கப்பட்டிருந்ததால், அந்தப் பகுதியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் ஆவிக்குரிய உணவை எப்படி பெற்றுக்கொண்டார்கள்?
ஐரோப்பாவில் அரசு ஊழியர் ஒருவர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்; பையஃப்ராவிலிருந்த விமானத்தளத்தில் வேலை பார்க்க இன்னொருவர் நியமிக்கப்பட்டார். இந்த இருவருமே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர். பையஃப்ராவுக்குள் ஆவிக்குரிய உணவை கொண்டு செல்லும் ஆபத்தான வேலையை செய்ய இவ்விரு சாட்சிகளும் முன்வந்தனர்; இவ்விதத்தில் 1970-ல் போர் முடிவடையும் வரை ஏராளமான சகோதரர்களுக்கு நன்மை செய்தனர்.—3/1, பக்கம் 27.
• வெஸ்ட்ஃபேல்யாவின் சமாதான ஒப்பந்தம் எதை சாதித்தது, அதில் மதம் எவ்வாறு உட்பட்டிருந்தது?
மத சீர்திருத்த இயக்கமானது புனித ரோம பேரரசை கத்தோலிக்கர், லூத்தரன், கால்வினிஸ்ட் என்ற மூன்று பிரிவுகளாக கூறு போட்டது. 17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புராட்டஸ்டன்ட் யூனியனும் கத்தோலிக்க லீக்கும் உருவாயின. பிறகு, பொஹிமியாவில் மத சண்டை ஆரம்பித்தது, பதவிக்காகப் போட்டியிடும் பன்னாட்டுப் போராய் பூதாகரமாக அது உருவெடுத்தது. கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் ஆட்சியாளர்கள், அரசியலில் பெரும் புள்ளிகளாக திகழவும் வியாபாரத்தில் கொழுத்த லாபம் சம்பாதிக்கவும் சூழ்ச்சிகளைக் கையாண்டார்கள். கடைசியில், ஜெர்மனியிலுள்ள வெஸ்ட்ஃபேல்யா மாகாணத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1648-ல் வெஸ்ட்ஃபேல்யா ஒப்பந்தம் கையெழுத்தாகியது; அது முப்பதாண்டு கால போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது; தனி நாடுகள் அடங்கிய கண்டமாக நவீன ஐரோப்பா பிறப்பதற்கு வழிவகுத்தது.—3/15, பக்கங்கள் 20-3.
• “மூர்க்க மிருகத்தின்” (NW) முத்திரை—666 என்ற இலக்கம்—எதை அர்த்தப்படுத்துகிறது?
இந்த முத்திரையைப் பற்றி வெளிப்படுத்துதல் 13:16-18-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மூர்க்க மிருகம் மனித ஆட்சியைக் குறிக்கிறது; அது ‘மனுஷனுடைய இலக்கத்தை’ கொண்டிருப்பது அரசாங்கங்கள் தாழ்த்தப்பட்ட மனித நிலைமையை பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டுகிறது. 6 பிளஸ் 60 பிளஸ் 600 அல்லது 666 என எழுதுகையில் கடவுளின் பார்வையில் மனித ஆட்சி முற்றிலும் குறைவுபட்டிருப்பதையே அது வலியுறுத்திக் காண்பிக்கிறது. இந்த முத்திரையை தாங்கியிருப்பவர்கள் அரசாங்கத்திற்கு வணக்கத்தோடுகூடிய மதிப்பை கொடுக்கிறார்கள், அல்லது இரட்சிப்புக்காக அதை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.—4/1, பக்கங்கள் 4-7.