வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வேசித்தனம் செய்ததற்காக ஒரே நாளில் 23,000 இஸ்ரவேலர் கொல்லப்பட்டதாக 1 கொரிந்தியர் 10:8 குறிப்பிடுகிறது, ஆனால் எண்ணாகமம் 25:9-ல் 24,000 பேர் என குறிப்பிடப்பட்டிருப்பதேன்?
இந்த இரு வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதற்கு அநேக காரணங்கள் உள்ளன. ஓர் எளிய காரணம், உண்மையான எண்ணிக்கை 23,000-க்கும் 24,000-க்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கலாம், ஆகவே குத்துமதிப்பாக இவ்விரண்டையுமே சொல்ல முடிந்திருக்கலாம்.
மற்றொரு சாத்தியத்தை சிந்தித்துப் பாருங்கள். சிற்றின்ப வாழ்க்கைக்குப் பேர்போன நகரமாகிய பூர்வ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு சித்தீமில் வாழ்ந்த இஸ்ரவேலரைப் பற்றிய இந்தப் பதிவை ஓர் எச்சரிக்கும் உதாரணமாக அப்போஸ்தலன் பவுல் எடுத்துப் பேசினார். அவர் இவ்வாறு எழுதினார்: “அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரே நாளில் இருபத்து மூவாயிரம் பேர் விழுந்து போனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம் பண்ணாதிருப்போமாக.” வேசித்தனம் செய்ததனிமித்தம் யெகோவாவினால் கொலை செய்யப்பட்டவர்களை வேறுபடுத்திக் காட்ட 23,000 என்ற எண்ணிக்கையை பவுல் கொடுத்தார்.—1 கொரிந்தியர் 10:8.
ஆனால் எண்ணாகமம் 25-ம் அதிகாரம், “இஸ்ரவேலர் பாகால் பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது” என நமக்குச் சொல்கிறது. ஆகவே, “ஜனங்களின் தலைவர் எல்லாரையும்” கொலை செய்யும்படி மோசேக்கு யெகோவா கட்டளையிட்டார். இந்தக் கட்டளையை நிறைவேற்ற மோசே நியாயாதிபதிகளிடம் உத்தரவிட்டார். கடைசியில், மீதியானிய பெண் ஒருத்தியை பாளயத்திற்குள் அழைத்துவந்த இஸ்ரவேலனை பினெகாஸ் உடனே கொலை செய்தபோது இந்த “வாதை நின்றுபோயிற்று.” இந்தப் பதிவு பின்வரும் கூற்றுடன் முடிவடைகிறது: “அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்து நாலாயிரம் பேர்.”—எண்ணாகமம் 25:1-9.
எண்ணாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில், நியாயாதிபதிகளால் கொலை செய்யப்பட்ட ‘ஜனங்களின் தலைவர்களுடைய’ எண்ணிக்கையும், யெகோவாவினால் நேரடியாக கொலை செய்யப்பட்டவர்களுடைய எண்ணிக்கையும் சேர்த்து சொல்லப்பட்டிருந்ததாக தெரிகிறது. நியாயாதிபதிகளுடைய கைகளால் செத்த அந்தத் தலைவர்களுடைய எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருந்திருக்கலாம், இதனால் அந்த எண்ணிக்கை 24,000 ஆனது. இந்தப் பண்டிகைகளில் கலந்துகொண்ட தலைவர்கள் வேசித்தனம் செய்திருந்தாலும்சரி, அல்லது அப்படி செய்தவர்களுக்கு அனுமதி அளித்திருந்தாலும்சரி, ‘பாகால் பேயோரைப் பற்றிக்கொண்ட’ குற்றத்திற்கு ஆளானார்கள்.
‘பற்றிக்கொண்ட’ என்ற வார்த்தை, “ஒருவரை மற்றொருவருடன் சேர்த்துக் கட்டுவதை” அர்த்தப்படுத்துவதாக பைபிள் ஆராய்ச்சி நூல் ஒன்று கூறுகிறது. இஸ்ரவேலர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜனங்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் ‘பாகால் பேயோரைப் பற்றிக்கொண்டபோது’ கடவுளுடன் தங்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவை முறித்துவிட்டார்கள். சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர், இஸ்ரவேலரைப் பற்றி ஓசியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இவ்வாறு கூறினார்: “அவர்கள் பாகால் பேயோர் அண்டைக்குப் போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.” (ஓசியா 9:10) இப்படி செய்தவர்கள் அனைவரும் கடும் தெய்வத் தண்டனைக்குத் தகுதியானவர்களாக இருந்தார்கள். ஆகவே, இஸ்ரவேல் புத்திரருக்கு மோசே இவ்வாறு நினைப்பூட்டினார்: “பாகால் பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது: பாகால் பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப் போட்டார்.”—உபாகமம் 4:3.