நடுநிலை வகிப்பு கிறிஸ்தவ அன்புக்கு முட்டுக்கட்டையா?
கிறிஸ்தவராக இருப்பது பைபிள் படிப்பதையும், ஜெபம் செய்வதையும், ஞாயிறுதோறும் கீர்த்தனைகள் பாடுவதையும் மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. கடவுளுக்காகவும் மக்களுக்காகவும் ஏதாவது செய்வதைக்கூட அர்த்தப்படுத்துகிறது. “வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” என பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:18) மற்றவர்கள் மீது இயேசு உண்மையான அக்கறை காட்டினார், கிறிஸ்தவர்களும் அவரைப் பின்பற்ற வேண்டும். ‘கர்த்தருடைய கிரியையிலே [“வேலையிலே,” NW] எப்பொழுதும் பெருகுகிறவர்களாய்’ இருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தன் சக வணக்கத்தாரை உந்துவித்தார். (1 கொரிந்தியர் 15:58) ஆனால், கர்த்தருடைய வேலை என்றால் என்ன? ஏழைகளின் நன்மைக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகவும் அரசாங்க கொள்கைகளை மாற்றியமைக்க முயலுவதை இது உட்படுத்துகிறதா? இதைத்தான் இயேசு செய்தாரா?
இப்படி செய்யும்படி மற்றவர்கள் இயேசுவை கட்டாயப்படுத்தினாலும், அரசியல் விவகாரங்களில் தலையிடவோ ஒரு சாராரை ஆதரிக்கவோ அவர் மறுத்துவிட்டார். உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஆளும் அதிகாரத்தை அவருக்கு அளிக்க சாத்தான் முன்வந்தபோது அதை ஒதுக்கித் தள்ளினார், வரி செலுத்துவதைப் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுபட மறுத்தார், அதுமட்டுமல்ல ஜனங்கள் கூட்டமாக சேர்ந்து அவரை ராஜாவாக்க முயன்றபோது அந்த இடத்தைவிட்டே விலகிப்போனார். (மத்தேயு 4:8-10; 22:17-21; யோவான் 6:15) என்றாலும், அவர் இப்படி நடுநிலை வகித்தது, மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை.
மற்றவர்களுக்கு நிரந்தர நன்மை அளித்த காரியங்களுக்கே இயேசு முக்கிய கவனம் செலுத்தினார். ஐயாயிரம் பேருக்கு அவர் உணவளித்ததும், வியாதியஸ்தர்களை குணமாக்கியதும் தற்காலிகமாய் சிலருக்கு பயனளித்தது உண்மைதான்; என்றாலும், அவருடைய போதனை முழு மனிதவர்க்கமும் நித்திய ஆசிகளைப் பெற வழி செய்தது. நிவாரணப் பணிகளின் அமைப்பாளர் என்று இயேசு எல்லாராலும் அறியப்படவில்லை, மாறாக ‘போதகர்’ என்றே அறியப்பட்டார். (மத்தேயு 26:18; மாற்கு 5:35; யோவான் 11:28) அவர் சொன்னார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.”—யோவான் 18:37.
அரசியலைவிட மேம்பட்ட ஒன்றை பிரசங்கித்தல்
இயேசு கற்பித்த சத்தியம் ஓர் அரசியல் கோட்பாடல்ல. ஆனால் அது, அவர் ஆளப்போகிற ராஜ்யம் சம்பந்தப்பட்ட சத்தியமாக இருந்தது. (லூக்கா 4:43) இந்த ராஜ்யம் ஒரு பரலோக அரசாங்கமாகும், இது அனைத்து மனித நிர்வாகங்களையும் நீக்கிவிட்டு, மக்களுக்கு நிரந்தர சமாதானத்தை கொடுக்கப் போகிறது. (ஏசாயா 9:6, 7; 11:9; தானியேல் 2:44) எனவே, இந்த ராஜ்யம்தான் மனிதவர்க்கத்திற்கு ஒரே உண்மையான நம்பிக்கை. பாதுகாப்பான எதிர்காலத்திற்கு மனிதர் மீது நம்பிக்கை வைக்கும்படி உற்சாகப்படுத்தாமல், வரவிருக்கும் ராஜ்யத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கையை அறிவிப்பது அல்லவா அன்பான செயல்? “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்” என பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 146:3-5) ஆகையால் அரசாங்கங்களை சீரமைப்பதைப் பற்றி பிரசங்கிக்குமாறு இயேசு தம் சீஷர்களிடம் கட்டளையிடவில்லை, மாறாக ‘ராஜ்யத்தைப் பற்றிய சுவிசேஷத்தை’ பிரசங்கிக்கவே அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.—மத்தேயு 10:6, 7; 24:14.
அப்படியானால், இதுதான் ‘கர்த்தருடைய வேலை.’ இந்த வேலையை செய்யும்படியே கிறிஸ்தவ பிரசங்கிப்பாளர்கள் கட்டளை பெற்றார்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டுமென்பதால், மனித வளங்களெல்லாம் அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும், இதனால் அந்த ராஜ்யம் வறுமையை வெற்றிகரமாக நீக்கிவிடும். (சங்கீதம் 72:8, 12, 13) இது ஒரு நல்ல செய்தி, இதை மற்றவர்களிடம் பிரசங்கிப்பது சாலத்தகும்.
இன்று, யெகோவாவின் சாட்சிகள் ‘கர்த்தருடைய இந்த வேலைக்காக’ 235 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுவின் கட்டளைக்கு இசைய இவர்கள் எல்லா அரசாங்கங்களுக்கும் மரியாதை காண்பிக்கிறார்கள். (மத்தேயு 22:21) என்றாலும், ‘நீங்கள் உலகத்தாராயில்லை, நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்’ என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்ன வார்த்தைகளை மதித்து, அவற்றிற்கு கீழ்ப்படிகிறார்கள்.—யோவான் 15:19.
ஒருகாலத்தில் அரசியலை ஆதரித்துப் பேசி வந்த சிலர், பைபிளை கவனமாக ஆராய்ந்த பிறகு தங்களையே மாற்றியிருக்கிறார்கள். இத்தாலி நாட்டு அரசியல்வாதி ஒருவர் சர்ச் நிர்வகித்து வந்த கேத்தலிக் ஆக்ஷன் என்ற ஒரு அமைப்பில் இருந்தார்; “சமுதாயத்தில் அரசாங்க மேம்பாட்டிற்கும் சமூக வளர்ச்சிக்கும் அதிகத்தை செய்ய வேண்டுமென்ற நினைப்பில்தான் நான் அரசியலில் கால் வைத்தேன்” என அவர் சொன்னார். யெகோவாவின் சாட்சியாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்க நகர மேயர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்; அரசியலில் ஈடுபடும் நல்மனமுள்ளவர்களின் முயற்சிகள் பலனற்றுப் போவதற்கான காரணத்தை அவர் விளக்கினார். “இந்த உலகம் இப்படி சீரழிந்து கிடப்பதற்கு, நல்நடத்தையுள்ள ஜனங்கள் சமூக நிலைமையை சரிசெய்ய முயற்சி எடுக்கவில்லை என்பது காரணம் அல்ல, ஆனால், சிலரது உள்ளார்ந்த முயற்சிகளை பலரது பொல்லாத செயல்கள் விஞ்சி விடுவதே அதற்கு காரணம்” என்றார்.
மனிதவர்க்கத்திற்கு இருக்கும் ஒரே உண்மையான நம்பிக்கையைப் பற்றி பிரசங்கிப்பதற்காக அரசியலிலிருந்து விலகியிருப்பது, மற்றவர்களுக்கு நடைமுறை உதவிகள் அளிக்க மெய்க் கிறிஸ்தவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதில்லை. கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக ஆவதற்கு அவர்கள் உதவும் ஆட்கள் தங்களுடைய மோசமான சுபாவங்களை மாற்றிக்கொள்வதற்கும், அதிகாரத்திற்கு மரியாதை காண்பிப்பதற்கும், தங்களுடைய இல்லற வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், பொருட்செல்வங்களைக் குறித்து சமநிலையான நோக்குடன் இருப்பதற்கும் கற்றுக்கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளோடு நெருக்கமான ஓர் உறவை அனுபவித்து மகிழ்வதற்கும் யெகோவாவின் சாட்சிகள் ஜனங்களுக்கு உதவுகிறார்கள்.
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பவர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்திற்கு நன்மை செய்கிறார்கள். ஆனால் அதைவிட, கடவுளை நேசிக்கிற அனைவருக்கும் நிரந்தர சமாதானத்தைத் தரப்போகிற மெய்யான ஓர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க ஜனங்களை வழிநடத்துகிறார்கள். எனவே, தங்களுடைய நடுநிலை வகிப்பின் காரணமாக, இந்தக் கிறிஸ்தவர்கள் காலாகாலத்திற்கும் நிலைக்கப்போகிற நடைமுறை உதவியை தாராளமாக, தங்கு தடையின்றி அளித்து வருகிறார்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
அன்று அரசியல் பேசினேன், இன்று கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கிறேன்
பிரேசிலில் பெலெம் என்ற நகரத்திலிருந்த சர்ச் பாதிரிகளிடமிருந்து ஆட்டீலா என்பவர் தன் சிறுவயதில் விடுதலை இறையியலை கற்றுக்கொண்டார். காலப்போக்கில் மனிதவர்க்கம் கொடுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் என்பதைப் பற்றிய பேச்சுக்களை ஆர்வத்தோடு கேட்டார்; புரட்சியாளர் கூட்டத்தில் சேர்ந்தார், அதில், அரசாங்கத்திற்கு எதிராக எப்படி ஊர்வலங்கள் நடத்துவதென்றும், எப்படி சத்தியாக்கிரகங்களில் ஈடுபடுவதென்றும் கற்றுக்கொண்டார்.
ஒருமுறை ஆட்டீலாவிடம் யாரோ ஒருவர் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்a என்ற புத்தகத்தை கொடுத்திருந்தார்கள். அந்தப் புத்தகத்திலிருந்து புரட்சியாளர் கூட்டத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு ஆட்டீலா ஆசையோடு கற்றுக்கொடுத்தார். நல்நடத்தையைப் பற்றியும் அதிகாரங்களுக்கு கீழ்ப்படிவதைப் பற்றியும் அந்தப் புத்தகம் கற்றுக்கொடுத்தது. எனவே, விடுதலை இறையியலை ஆதரிப்பவர்கள் ஏன் இயேசுவின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை கடைப்பிடிப்பதில்லை என்ற கேள்வி ஆட்டீலாவின் மனதில் எழும்பியது; அதுமட்டுமல்ல, சிலர் அதிகாரத்திற்கு வந்ததுமே ஒடுக்கப்பட்ட மக்களை மறந்துவிடுவது ஏன் என்ற கேள்வியும் அவர் மனதை குடைந்தது. இதனால் புரட்சியாளர் கூட்டத்தைவிட்டு அவர் விலகினார். பிற்பாடு, யெகோவாவின் சாட்சிகள் அவரது வீட்டுக்கு வந்து, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசினார்கள். சீக்கிரத்திலேயே அவர் பைபிளை படிக்க ஆரம்பித்தார், அதோடு மனிதவர்க்கம் அனுபவிக்கிற கொடுமைகளுக்கெல்லாம் உண்மையான தீர்வை பற்றியும் கற்றுக்கொண்டார்.
ஆட்டீலா பைபிளை படித்துக் கொண்டிருந்தபோது, மதம் மற்றும் அரசியல் பற்றிய கத்தோலிக்க கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டார். அந்தக் கருத்தரங்கின் போதனையாளர்கள் “ஒரு காசின் இரு பக்கங்கள் போலத்தான் மதமும் அரசியலும்” என்று விளக்கினார்கள். ராஜ்ய மன்றத்தில் நடந்த ஒரு கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! அங்கு யாரும் புகைபிடிக்கவில்லை, குடிக்கவில்லை, அசிங்கமான ஜோக்குகள் அடிக்கவில்லை. எனவே, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையில் தானும் ஈடுபட ஆட்டீலா தீர்மானித்தார், விரைவிலேயே முழுக்காட்டுதல் பெற்றார். ஏழைகளின் பிரச்சினைகளுக்கு விடுதலை இறையியல் ஏன் நிஜமான ஒரு தீர்வு அல்ல என்பதை இப்போது அவர் நன்கு தெரிந்திருக்கிறார்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் படங்கள்]
நடுநிலை வகிப்பது மற்றவர்களுக்கு உதவுவதிலிருந்து கிறிஸ்தவ ஊழியர்களை தடுப்பதில்லை