செஸ்டர் பீட்டியின் பொக்கிஷங்களைப் பார்வையிடுதல்
“அழிந்துபோன அநேக நாகரிகங்களின் ஏராளமான பொக்கிஷக் குவியல் இது . . . எழில்மிகு சின்னஞ்சிறிய படங்களுடனும் ஓவியங்களுடனும் மிளிர்கிறது இது.” அயர்லாந்தில், டப்ளினிலுள்ள செஸ்டர் பீட்டி நூலகத்தைப் பற்றி இப்படித்தான் தொகுத்துரைத்தார் அதன் முன்னாள் பாதுகாவலரான ஆர். ஜே. ஹேஸ். மதிப்புமிக்க ஏராளமான பழம்பெரும் சின்னங்கள், கலைநயமிக்க படைப்புகள், அரிய புத்தகங்கள், விலைமதிக்க முடியா கையெழுத்து சுவடிகள் என எக்கச்சக்கமான சேகரிப்புகளின் குடியிருப்பாக விளங்குகிறது இந்த நூலகம். சரி, செஸ்டர் பீட்டி என்பவர் யார்? அவர் எத்தகைய பொக்கிஷங்களை சேகரித்து வைத்தார்?
ஆல்ஃபிரட் செஸ்டர் பீட்டி என்பவர் 1875-ம் ஆண்டு அ.ஐ.மா., நியு யார்க்கில் பிறந்தார்; இவரது மூதாதையர் ஸ்காட்லாந்தையும் அயர்லாந்தையும் இங்கிலாந்தையும் சேர்ந்தவர்கள். இவர் சுரங்க பொறியியலாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியதால் 32 வயதாவதற்குள் செல்வச் சீமானாக விளங்கினார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமளவு சொத்துக்களை, அழகும் சிறப்பும் வாய்ந்த அரும்பொருட்களை சேகரிப்பதிலேயே செலவிட்டார். 1968-ம் ஆண்டு 92 வயதில் இறந்தபோது அவர் சேகரித்த பொருட்கள் அனைத்தையும் அயர்லாந்து வாசிகளுக்கு விட்டு சென்றார்.
அவர் எதை சேகரித்தார்?
பீட்டி சேகரித்த பொருட்கள் பலதரப்பட்டவை, விதவிதமானவை. அவற்றில் சுமார் ஒரு சதவீத பொருட்கள் மட்டுமே ஒருசமயத்தில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. பல்வேறு காலப்பகுதிகளையும் வெவ்வேறு நாகரிகங்களையும் சேர்ந்த அரிய, மதிப்புமிக்க பொருட்களை அவர் சேகரித்தார்; அவை இடைக் காலத்திலிருந்து மறுமலர்ச்சி காலம்வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளை சேர்ந்தவை; அவற்றை பலதரப்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அவர் சேகரித்தார். உதாரணமாக, அவர் சேகரித்த மிகச் சிறந்த வேலைப்பாடுமிக்க ஜப்பானிய செதுக்கு மரப்பாளங்கள் பகட்டும் அழகும் ஒருங்கே இணைந்தவை; இவை உலகின் அரும்பெரும் பொருட்களுள் ஒன்றாக கருதப்படுபவை.
சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கலைநயம் படைத்த பொருட்களில், பூர்வ ஆப்பு வடிவ எழுத்துக்களைக் கொண்ட நூற்றுக்கும் அதிகமான பாபிலோனிய, சுமேரிய களிமண் பலகை துண்டுகளே தன்னிகரற்றவை. 4,000-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி நுணுக்கமான விவரங்களை ஈரமான களிமண் பலகை துண்டுகளில் வடித்தார்கள், பின்னர் அவற்றை சுட்டார்கள். அத்தகைய துண்டுகளில் பல இன்று வரை உள்ளன, இவை எழுத்து பிறந்த கதைக்கு தெளிவான அத்தாட்சியை நமக்கு அளிக்கின்றன.
புத்தகங்களிடம் ஈர்ப்பு
கலைநயமும் வேலைப்பாடும் மிக்க புத்தகங்களிடம் செஸ்டர் பீட்டி தன் மனதைப் பறிகொடுத்ததாக தோன்றுகிறது. அவர் ஆயிரக்கணக்கான மதப் புத்தகங்களையும் பிற புத்தகங்களையும் சேகரித்தார்; அவற்றுள் புது விதமான அலங்கரிப்புடன் விளங்கிய குர்ஆனின் சில பிரதிகளும் உள்ளன. “கணித விகிதாச்சாரமான அளவுகளில் அரபிய எழுத்துக்கள் இருப்பதைக் கண்டு [அவர்] சொக்கிப்போனார், . . . தங்கம், வெள்ளி, ஒளிரும் பிற கனிமங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட நேர்த்தியான எழுத்துக்கள், நிறத்தின்மீது அவருக்கிருந்த காதலை தூண்டிவிட்டன” என ஓர் எழுத்தாளர் சொல்கிறார்.
பச்சை இரத்தினக்கல் (jade) ஆரம்ப நூற்றாண்டுகளில் சில சீன பேரரசர்களின் மனதைக் கொள்ளை கொண்டது போலவே செஸ்டர் பீட்டியின் மனதையும் மயக்கியது. நேர்த்தியான பச்சை இரத்தினக்கல் எல்லா கனிமங்களைவிடவும், ஏன் தங்கத்தைவிடவும் அதிக விலைமதிப்புமிக்கது என அந்தப் பேரரசர்கள் கருதினார்கள். எனவே அந்த ஆட்சியாளர்கள், பச்சை இரத்தினக்கல் பாளங்களை மென்மையான, மெல்லிய தகடுகளாக மாற்றும் பொறுப்பை திறமைமிக்க கைவினைஞர்களிடம் ஒப்படைத்தார்கள். இப்பணியில் கைதேர்ந்த கலைஞர்கள் அந்த பச்சை இரத்தினக்கல் தகடுகளின் மீது தங்கத்தால் மிக அழகிய கையெழுத்துகளையும் படங்களையும் பதித்தார்கள், இவ்வாறு இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புத்தகங்களைப் படைத்தார்கள். பீட்டியின் பொக்கிஷத்தில் இடம்பெற்றுள்ள இப்புத்தகங்கள் உலகப் புகழ் பெற்றவை.
விலைமதிக்க முடியா பைபிள் கையெழுத்து சுவடிகள்
பூர்வ காலத்தையும் இடைக் காலத்தையும் சேர்ந்த ஏராளமான பைபிள் கையெழுத்து சுவடிகள்தான் செஸ்டர் பீட்டியின் ஈடிணையற்ற பொக்கிஷமென பைபிளை நேசிப்போர் கருதுகிறார்கள். பளபளக்கும் வண்ண வண்ண வேலைப்பாடுமிக்க அழகிய கையெழுத்துப் பிரதிகள், அவற்றை கையால் பிரதி எடுத்த வேதபாரகர்களின் பொறுமையையும் கலைத் திறனையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆரம்ப காலத்தில் ஏடுகட்டுபவர்களும் அச்சடிப்பவர்களும் எந்தளவுக்கு திறம்பட்டவர்களாகவும் கலைநயமிக்கவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்பதை அச்சிடப்பட்ட புத்தகங்கள் சொல்லாமல் சொல்கின்றன. உதாரணத்திற்கு, பிப்ளியா லேட்டினா புத்தகம் 1479-ல் அன்டோன் கோபெர்கர் என்பவரால் நியுரம்பர்க்கில் அச்சிடப்பட்டது; இவர் ஏறக்குறைய யோஹானஸ் குட்டன்பர்க் காலத்தில் வாழ்ந்தவர், “ஆரம்ப கால அச்சடிப்பவர்களில், செயல்திறன் மிக்கவர், முக்கிய நபர்களில் ஒருவர்” என விவரிக்கப்படுகிறார்.
நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை சேர்ந்த தோல் கையெழுத்து சுவடி செஸ்டர் பீட்டி நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டவற்றுள் அபூர்வமானதாகும்; இது சிரியா நாட்டு கல்விமானாகிய இஃப்ராயிமின் படைப்பாகும். தீயடெஸரான் என்றழைக்கப்பட்ட இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தகத்திலிருந்து இஃப்ராயிம் பல மேற்கோள்களை உபயோகித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தின் எழுத்தாளரான டேஷன் என்பவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சரிதை அடங்கிய நான்கு சுவிசேஷங்களையும் சேர்த்து ஒரே தொகுப்பாக ஆக்கியிருந்தார். பிற்காலத்திய எழுத்தாளர்கள் தீயடெஸரான் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அதன் ஒரு பிரதிகூட பாதுகாத்து வைக்கப்படவில்லை. அத்தகைய புத்தகம் ஒன்று இருந்ததா என 19-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்விமான்கள் சிலர் சந்தேகிக்கவும் செய்தார்கள். ஆனால் 1956-ல் டேஷனின் படைப்பாகிய தீயடெஸரான் பற்றி இஃப்ராயிம் எழுதிய உரையை பீட்டி கண்டுபிடித்தார்; இந்தக் கண்டுபிடிப்பு, பைபிளின் நம்பகத்தன்மைக்கும் உண்மைத்தன்மைக்கும் மேலுமான அத்தாட்சியை அளித்தது.
நாணற்புல் கையெழுத்து சுவடிகளின் பொக்கிஷம்
மத சம்பந்தப்பட்டதும் பிற விஷயங்கள் அடங்கியதுமான ஏராளமான நாணற்புல் கையெழுத்து சுவடிகளைக்கூட பீட்டி சேகரித்தார். அவற்றில் பொ.ச. நான்காம் நூற்றாண்டிற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாணற்புல் கோடெக்ஸுகள் இருக்கின்றன. இந்த நாணற்புல் சுவடிகளில் சில பெரும் நாணற்புல் சுவடி குவியல்களிலிருந்து கிடைத்தன; அதாவது குப்பை கூளங்களின் பெரிய குவியல்களில் இருந்து எடுத்து பாதுகாக்கப்பட்டன; இந்தக் குவியல்கள் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் நூற்றாண்டுக் கணக்கில் எகிப்திய பாலைவனத்தில் இருந்தன. இந்த நாணற்புல் ஆவணங்கள் விற்பனைக்கு வந்தபோது இவற்றில் அநேகம் முழுமை பெறாத துண்டுகளாக இருந்தன. வியாபாரிகள் நாணற்புல் துண்டுகள் நிறைந்த அட்டை பெட்டிகளை எடுத்து வருவார்கள். “அவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டுவோர் அந்தப் பெட்டிக்குள் வெறுமனே கையைவிட்டு கிடைக்கும் பெரிய துண்டை, அநேக வாசகங்கள் அடங்கிய துண்டை எடுத்துக் கொண்டார்கள்” என சொல்கிறார் சார்லஸ் ஹார்டன்; இவர் செஸ்டர் பீட்டி நூலகத்தின் மேற்கத்திய சேகரிப்புகளின் பாதுகாவலர் ஆவார்.
பீட்டி கண்டுபிடித்தவற்றிலே “மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு,” பைபிளின் அருமையான கோடெக்ஸுகள் ஆகும். அவற்றில் “கிறிஸ்தவ பழைய, புதிய ஏற்பாடுகளின் பிரபலமான ஆரம்ப கால சுவடிகள் சில இருந்தன.” அந்த கோடெக்ஸுகளின் மதிப்பை அறிந்த வியாபாரிகள் அவற்றை தனித்தனியாக கிழித்தெடுத்து வெவ்வேறு நபர்களுக்கு விற்பதன் மூலம் கொழுத்த பணம் சம்பாதித்திருப்பார்கள். இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவற்றை பீட்டியால் வாங்க முடிந்தது. இந்தக் கோடெக்ஸுகள் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை? கோடெக்ஸ் சினியாட்டிகஸ் என்றழைக்கப்படும் கையெழுத்து சுவடியை 1844-ல் டிஷன்டார்ஃப் கண்டுபிடித்ததற்கு பிறகு இந்தக் கண்டுபிடிப்பே இதுவரை உள்ளவற்றுள் “மிக முக்கியமானது” என சர் ஃபிரெட்ரிக் கென்யன் விவரிக்கிறார்.
இந்தக் கோடெக்ஸுகள் பொ.ச. இரண்டாம், நான்காம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை. கிரேக்க செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பிலுள்ள எபிரெய வேதாகம புத்தகங்களுள் ஆதியாகம புத்தகத்தின் பிரதிகள் இரண்டு உள்ளன. நான்காம் நூற்றாண்டை சேர்ந்த தோல் கையெழுத்து சுவடிகளான “வாட்டிகானஸ், சினியாட்டிகஸ் ஆகியவற்றில் [ஆதியாகம] புத்தகத்தின் பெரும் பகுதி இல்லாததால்” இவை விசேஷ மதிப்புமிக்கவை என்கிறார் கென்யன். கிறிஸ்தவ கிரேக்க வேதாகம புத்தகங்கள் மூன்று கோடெக்ஸ்களில் உள்ளன. ஒன்றில் நான்கு சுவிசேஷங்களிலும் அப்போஸ்தல நடபடிகளிலும் பெரும்பகுதி உள்ளது. இரண்டாவது கோடெக்ஸில், பீட்டிக்கு பின்னர் கிடைத்த பக்கங்களையும் சேர்த்து, அப்போஸ்தலன் பவுல் எபிரெயருக்கு எழுதிய நிருபம் உட்பட கிட்டத்தட்ட அவரது நிருபங்கள் அனைத்தும் உள்ளது. மூன்றாவது கோடெக்ஸில் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் சுமார் மூன்றில் ஒரு பகுதி உள்ளது. கென்யனின்படி இந்த நாணற்புல் சுவடிகள், “நம்மிடம் தற்போதுள்ள புதிய ஏற்பாட்டு வாக்கியத்தின் மீது நமக்கு ஏற்கெனவே இருந்த பலமான நம்பிக்கையை அதிக தெளிவான அத்தாட்சிகள் மூலம் இன்னும் பலப்படுத்தி இருக்கிறது.”
உபயோகிக்க கடினமாக இருந்த சுருள்களுக்கு பதிலாக, ஒருவேளை பொ.ச. முதல் நூற்றாண்டு முடிவதற்கு முன்பாகவே, கோடெக்ஸ், அல்லது தாள் புத்தகத்தை கிறிஸ்தவர்கள் பரவலாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம் என செஸ்டர் பீட்டியின் பைபிள் நாணற்புல் சுவடிகள் காட்டுகின்றன. எழுது பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருந்ததால் பிரதி எடுத்தவர்கள் பெரும்பாலும் பழைய நாணற்புல் தாள்களையே மீண்டும் பயன்படுத்தினார்கள் என்பதையும் அவை காட்டுகின்றன. உதாரணமாக, யோவான் சுவிசேஷத்தின் ஒரு பகுதி அடங்கிய காப்டிக் கையெழுத்து சுவடி, “பள்ளிக்குரிய கிரேக்க கணித பயிற்சிப் புத்தகமாய் இருந்ததில் [எழுதப்பட்டதாக] தோன்றுகிறது.”
இந்த நாணற்புல் ஆவணங்கள் பார்ப்பதற்கு உள்ளத்தை கொள்ளை கொள்பவையாக இல்லாவிட்டாலும் விலைமதிக்க முடியாதவை. இவை கிறிஸ்தவத்தின் ஆரம்பத்திற்கு காணக்கூடிய, உறுதியான பாலமாக அமைகின்றன. “ஆரம்ப கால கிறிஸ்தவ சமுதாயத்தினர் சிலர் பயன்படுத்தியதும், பொக்கிஷமாய் போற்றியதுமான புத்தகங்கள் எப்படிப்பட்டவை என்பதை இதோ நீங்களே நேரில் பார்க்கலாம்” என்கிறார் சார்லஸ் ஹார்டன். (நீதிமொழிகள் 2:4, 5) செஸ்டர் பீட்டி நூலகத்திலுள்ள இந்தப் பொக்கிஷங்களில் எதையாவது ஆராய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
[பக்கம் 31-ன் படம்]
காட்சூஷிகா ஹோக்யூசை என்பவரின் ஜப்பானிய செதுக்கோவிய மரப்பாளங்கள்
[பக்கம் 31-ன் படம்]
“பிப்ளியா லேட்டினா” அச்சடிக்கப்பட்ட ஆரம்ப கால பைபிள் பிரதிகளில் ஒன்று
[பக்கம் 31-ன் படம்]
டேஷனின் படைப்பாகிய “தீயடெஸரான்” பற்றி இஃப்ராயிம் எழுதிய உரை, பைபிளின் நம்பகத்தன்மைக்கு வலுவூட்டுகிறது
[பக்கம் 31-ன் படம்]
உலகின் மிகப் பழமையான கோடெக்ஸ், செஸ்டர் பீட்டி P45; இதில் நான்கு சுவிசேஷங்களிலும் அப்போஸ்தல நடபடிகளிலும் பெரும்பகுதி ஒரே தொகுப்பாக உள்ளது
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
Reproduced by kind permission of The Trustees of the Chester Beatty Library, Dublin
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
எல்லா உருவங்களும்: Reproduced by kind permission of The Trustees of the Chester Beatty Library, Dublin