இயேசு கிறிஸ்துவை எவ்வாறு நினைவுகூர வேண்டும்?
“இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகவும் செல்வாக்கு பெற்றவர்களில் நிச்சயமாகவே [இயேசு கிறிஸ்துவும்] ஒருவர்.”—“த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா.”
மாபெரும் மனிதர்கள் அவர்களுடைய அரும்பெரும் சாதனைகளுக்காக பொதுவாக நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் இயேசுவின் சாதனைகளுக்குப் பதிலாக அவருடைய பிறப்பையே அநேகர் நினைவுகூருகிறார்கள், ஏன்? கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு அவருடைய பிறப்புடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை விவரிக்க முடியும். ஆனால் எத்தனை பேர் மலைப் பிரசங்கத்தில் இயேசு சொன்ன சீரிய போதனைகளை நினைவுபடுத்திப் பார்க்கிறார்கள்? எத்தனை பேர் அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள்?
உண்மைதான், இயேசுவின் பிறப்பு ஓர் அசாதாரணமான பிறப்பு; ஆனால் ஆரம்பகால சீஷர்கள் இயேசு செய்தவற்றிற்கும் கற்பித்தவற்றிற்குமே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். வளர்ந்து முதிர்ச்சி அடைந்த மனிதராக இயேசு வாழ்ந்த வாழ்க்கையைவிட அவருடைய பிறப்பு அதிக முக்கியத்துவம் பெற வேண்டுமென கடவுள் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால் கிறிஸ்மஸ், கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றிய பாரம்பரிய கதைகளின் மூலம் கிறிஸ்து என்ற நபரையே திரைபோட்டு மூடிவிட்டது.
கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் சம்பந்தமாக நெருட வைக்கும் மற்றொரு கேள்வி எழுகிறது. இன்று இயேசு இந்தப் பூமிக்கு வந்தால், கிறிஸ்மஸ் ஒரு வியாபாரமாகவே ஆகியிருப்பதைப் பற்றி என்ன நினைப்பார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, எருசலேமிலிருந்த ஆலயத்திற்கு இயேசு விஜயம் செய்தார். அங்கு காசுக்காரர்களையும் வியாபாரிகளையும் கண்டு அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார்; ஏனென்றால் யூத மதப் பண்டிகையின் பெயரில் அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். “இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்” என்று சொன்னார். (யோவான் 2:13-16) வியாபாரத்தையும் மதத்தையும் ஒன்றாக கலப்பதை இயேசு அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
கிறிஸ்மஸ் வியாபார ரீதியில் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு நல்மனம் படைத்த ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்கர் பலர் கவலை தெரிவிக்கின்றனர். இருந்தாலும், இப்படி வியாபார ரீதியில் போய்க் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது; கிறிஸ்மஸ் பழக்கவழக்கங்கள் எவற்றின் மீது வேரூன்றியிருக்கின்றன என்பதை சிந்திக்கும்போது இந்த உண்மை புலப்படும். இதழாசிரியர் குவான் ஆரியாஸ் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்: “கிறிஸ்மஸ் ‘புறமத பண்டிகை’ போல் ஆகிவிட்டதாகவும், புசித்துக் குடித்து கும்மாளம் போடுவதற்கும் வியாபாரத்திற்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டதாகவும் விமர்சிக்கிற கிறிஸ்தவ மதத்தவர் ஒரு விஷயத்தை அறியாமல் இருக்கிறார்கள். . . . அதாவது, கிறிஸ்மஸ் முதன்முதலாக தோன்றிய சமயத்திலேயே ரோம பண்டிகையின் [சூரிய வழிபாட்டின்] பல அம்சங்களைப் பெற்றிருந்ததை அறியாதிருக்கிறார்கள்.”—எல் பாயீஸ், டிசம்பர் 24, 2001.
பாரம்பரியமாக கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் புறமதத்திலிருந்து தோன்றியவை என்பதையும், அவை வியாபாரமாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி சமீப ஆண்டுகளில் அநேக ஸ்பெயின் நாட்டு பத்திரிகைகளும் என்ஸைக்ளோப்பீடியாக்களும் எழுதியிருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் தேதியைப் பற்றி என்ஸேக்ளோபேடியா டி லா ரேலிகான் காட்டோலிக்கா வெளிப்படையாக இவ்வாறு கூறுகிறது: “[கிறிஸ்மஸ்] பண்டிகைக்கு இந்தத் தேதியை ரோமன் சர்ச் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே புறமத பண்டிகைகளுக்குப் பதிலாக கிறிஸ்தவ பண்டிகைகளைக் கொண்டு வருவதற்கே என தெரிகிறது. . . . ரோமில் அந்தச் சமயத்தில், புறமதத்தவர்கள் டிசம்பர் 25-ம் தேதியில் நாட்டாலிஸ் இன்விக்டி என்ற பண்டிகையை, அதாவது ‘வெல்ல முடியாத சூரியனின் பிறப்பைக்’ கொண்டாடி அந்த நாளை புனிதமாக்கினார்கள்.”
என்ஸைக்ளோப்பீடியா இஸ்பானிகா என்ற நூலும் இவ்வாறு குறிப்பிடுகிறது: “டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த சரியான தேதியல்ல, ஆனால் ரோமில் கொண்டாடப்பட்ட குளிர்கால சங்கிராந்தி பண்டிகைகளைக் கிறிஸ்தவமாக்குவதற்காகவே அத்தேதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஆரம்பமானது.” குளிர்காலத்தின் போது சூரியன் எழும்பியதை எப்படி ரோமர்கள் கொண்டாடினார்கள்? விருந்து, களியாட்டம், பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் மூலமே. இத்தகைய பிரபல பண்டிகையை அடியோடு ஒழிப்பதற்குப் பயந்து, சூரியனின் பிறப்பிற்குப் பதிலாக இயேசுவின் பிறப்பு என அழைப்பதன் மூலம் சர்ச் அதிகாரிகள் அதை “கிறிஸ்தவமாக்கினார்கள்.”
ஆரம்பத்தில், நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், சூரிய வழிபாட்டுடனும் அதோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களுடனும் இருந்த உறுதியான பிடிப்பை ஒழிப்பது கடினமாக இருந்தது. சூரியனுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் புறமதத்தவர்கள் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடியதைப் போல் கிறிஸ்தவர்கள் செய்யக் கூடாது என்பதை கத்தோலிக்க “செயின்ட்” அகஸ்டின் (பொ.ச. 354-430) சக விசுவாசிகளுக்கு உணர்த்த முயன்றார். இன்றும்கூட, பூர்வ ரோம பண்டிகையுடன் தொடர்புடைய பழக்கவழக்கங்களே மிகுந்த செல்வாக்கு பெற்றிருப்பதாக தெரிகிறது.
களியாட்டுக்கும் வியாபாரத்திற்கும் பெயர்போன பண்டிகை
கிறிஸ்மஸ் பண்டிகையைக் களியாட்டுக்கும் வியாபாரத்திற்கும் பேர்போன சர்வதேச பண்டிகையாக மாற்றுவதில், காலம்காலமாக அநேக அம்சங்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. மேலும், மற்ற குளிர்கால பண்டிகைகளோடு, முக்கியமாக வட ஐரோப்பாவில் கொண்டாடப்பட்ட பண்டிகைகளோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களும் ரோம பண்டிகைக்குள் படிப்படியாக புகுத்தப்பட்டன.a அதோடு, 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வியாபாரிகளும் மார்க்கெட்டிங் நிபுணர்களும் பெரும் லாபம் தரக்கூடிய எந்தவொரு சம்பிரதாயத்தையும் ஆர்வத்தோடு முன்னேற்றுவித்தார்கள்.
இதன் விளைவு? கிறிஸ்து எதற்காக பிறந்தார் என்பதன் முக்கியத்துவம் போய் கடைசியில் அப்பிறப்பின் கொண்டாட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் வந்துவிட்டது. அநேக சந்தர்ப்பங்களில், கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிடுவதும்கூட பாரம்பரிய கிறிஸ்மஸிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து போயிருக்கிறது. “[கிறிஸ்மஸ்] என்பது ஓர் உலகப் பண்டிகை, அது ஒரு குடும்ப பண்டிகை, ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான முறையில் அதை கொண்டாடுகிறார்கள்” என எல் பாயீஸ் என்ற ஸ்பானிய செய்தித்தாள் கூறுகிறது.
ஸ்பெயினிலும் பிற நாடுகளிலும் வளர்ந்துவரும் ஒரு மனப்பான்மையை இந்தக் குறிப்பு பிரதிபலிக்கிறது. ஒரு புறத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அதிக ஆடம்பரமாக மாறிவருகின்றன, மறுபுறத்தில் கிறிஸ்துவைப் பற்றிய அறிவு குறைந்து வருகிறது. சொல்லப்போனால், ரோமருடைய காலங்களில் எப்படி இருந்ததோ அதே நிலைமைக்குத்தான், அதாவது களியாட்டு, விருந்துண்ணல், பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளல் ஆகியவற்றிற்குத்தான் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இப்பொழுது திரும்பியிருக்கின்றன.
நமக்கு ஒரு பாலகன் பிறந்திருக்கிறார்
கிறிஸ்துவுக்கும் பாரம்பரிய கிறிஸ்மஸுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றால், கிறிஸ்துவின் பிறப்பையும் அவருடைய வாழ்க்கையையும் மெய் கிறிஸ்தவர்கள் எப்படி நினைவுகூர வேண்டும்? இயேசு பிறப்பதற்கு ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர், அவரைப் பற்றி ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்.” (ஏசாயா 9:6) இயேசுவின் பிறப்பும் அதைத் தொடர்ந்து அவர் வகிக்கும் பாகமும் மிக முக்கியத்துவமுடையவை என ஏன் ஏசாயா சுட்டிக்காட்டினார்? ஏனென்றால் இயேசு வல்லமைமிக்க ஓர் ஆட்சியாளராக ஆவார். அவர் சமாதானப் பிரபு என அழைக்கப்படுவார். மேலும், அவருடைய ஆட்சி “நியாயத்தினாலும் நீதியினாலும்” நிலைநிறுத்தப்படும்.—ஏசாயா 9:7.
இயேசுவின் பிறப்பைப் பற்றி மரியாளிடம் காபிரியேல் தூதன் தெரிவித்தபோது ஏசாயாவின் அறிவிப்பை எதிரொலித்தார். “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என்று முன்னுரைத்தார். (லூக்கா 1:32, 33) ஆகவே, கடவுளுடைய ராஜ்யத்தின் நியமிக்கப்பட்ட அரசராக கிறிஸ்து சாதிக்கப்போகும் செயல்களில்தான் அவருடைய பிறப்பின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது. கிறிஸ்துவின் ஆட்சியில் அனைவரும் பயனடையலாம், ஏன் நீங்களும் உங்களுடைய அன்பானவர்களும் பயனடையலாம். சொல்லப்போனால், அவருடைய பிறப்பு ‘பூமியிலே [கடவுளின்] நற்பிரியமுள்ள மனுஷர்மேல் சமாதானத்தை’ கொண்டுவரும் என தேவதூதர்கள் கூறினர்.—லூக்கா 2:14.
சமாதானமும் நீதியுமுள்ள உலகில் வாழ யாருக்குத்தான் ஆசையில்லை? ஆனால் கிறிஸ்துவின் ஆட்சியில் சமாதானத்தை அனுபவித்து மகிழ நாம் கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும், அவருடன் நட்புறவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடவுளையும் தம்மையும் பற்றி அறிவதே இத்தகைய உறவுக்கு முதல் படி என்று இயேசு கூறினார். “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” என அவர் கூறினார்.—யோவான் 17:3.
இயேசுவைப் பற்றி நன்கு அறிந்தவுடன், அவர் எப்படி நினைவுகூரப்பட விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமமே இருக்காது. பூர்வகால புறமத பண்டிகை கொண்டாடப்பட்ட அதே நாளில் புசிப்பது, குடிப்பது, பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் மூலமாகவா? அதை அவர் விரும்ப மாட்டார் என்றே தோன்றுகிறது. தாம் மரிப்பதற்கு முந்தைய இரவு இயேசு தமது சீஷர்களிடம் தமக்கு எது பிரியமானது என்பதை கூறினார். ‘என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருப்பேன்.’—யோவான் 14:21.
பரிசுத்த வேதாகமத்தை யெகோவாவின் சாட்சிகள் ஆழமாக ஆராய்ந்து படித்திருக்கின்றனர். இது, கடவுளுடைய மற்றும் இயேசுவுடைய கட்டளைகளைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி செய்திருக்கிறது. இயேசுவை நினைவுகூர வேண்டிய முறையில் நினைவுகூருவதற்கு அந்த இன்றியமையா கட்டளைகளைப் பற்றி நீங்களும் புரிந்துகொள்ளும்படி உங்களுக்கு உதவ அவர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
[அடிக்குறிப்பு]
a கிறிஸ்மஸ் மரமும் கிறிஸ்மஸ் தாத்தாவும் இதற்கு முக்கியமான இரண்டு உதாரணங்களாகும்.
[பக்கம் 6, 7-ன் பெட்டி/படங்கள்]
விருந்துண்பதையும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வதையும் பைபிள் கண்டனம் செய்கிறதா?
பரிசுகள் கொடுத்தல்
பரிசுகள் கொடுப்பதை பைபிள் அங்கீகரிக்கிறது, யெகோவாவே ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ கொடுப்பவர் என அழைக்கப்படுகிறார். (யாக்கோபு 1:17) நல்ல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பரிசுகள் கொடுப்பார்கள் என இயேசு கூறினார். (லூக்கா 11:11-13) யோபு சுகமடைந்தபோது, அவருடைய நண்பர்களும் குடும்ப அங்கத்தினர்களும் அவருக்குப் பரிசுகள் வழங்கினார்கள். (யோபு 42:11) என்றாலும், எந்தவொரு குறிப்பிட்ட பண்டிகைக்காகவும் அப்பரிசுகள் வழங்கப்படவில்லை. அவை அன்போடு மனமுவந்து கொடுக்கப்பட்டன.—2 கொரிந்தியர் 9:7.
குடும்பமாக ஒன்றுகூடி வருதல்
குடும்பமாக ஒன்றுகூடி வருவது குடும்ப அங்கத்தினர்களை ஒன்றுபடுத்த நல்ல சந்தர்ப்பமாக இருக்கலாம், முக்கியமாக அவர்கள் ஒரே வீட்டில் வசிக்காதபோது. இயேசுவும் அவருடைய சீஷர்களும் கானாவூரில் நடைபெற்ற கலியாணத்திற்குச் சென்றார்கள், அங்கே குடும்பத்தினரும் நண்பர்களும் திரளாக வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (யோவான் 2:1-10) கெட்ட குமாரனைப் பற்றி இயேசு சொன்ன உவமையில், தனது மகன் திரும்பி வந்ததைக் கொண்டாட தகப்பன் ஒரு விருந்து வைத்தார், அங்கே இசையும் நடனமும் இருந்தன.—லூக்கா 15:21-25.
சுவைமிகு உணவை உண்டு மகிழ்தல்
குடும்பம், நண்பர்கள், சக வணக்கத்தார் என கடவுளுடைய ஊழியர்கள் ஒன்று சேர்ந்து சுவைமிக்க உணவை உண்டு மகிழ்ந்ததைப் பற்றி பைபிள் அடிக்கடி பேசுகிறது. மூன்று தேவதூதர்கள் ஆபிரகாமை சந்தித்தபோது, அவர்களுக்கு அவர் ஒரு விருந்து படைத்தார், அதில் மாட்டிறைச்சியும், பாலும், வெண்ணையும், வட்ட அப்பங்களும் இருந்தன. (ஆதியாகமம் 18:6-8) ‘புசித்துக் குடித்து மகிழ்ச்சியாக இருப்பது’ கடவுளிடமிருந்து வரும் ஒரு பரிசு என சாலொமோன் விவரித்தார்.—பிரசங்கி 3:13; 8:15.
நாம் குடும்ப அங்கத்தினர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து சுவையான உணவை அனுபவித்து மகிழ வேண்டுமென்றே கடவுள் விரும்புகிறார். பரிசுகள் கொடுப்பதையும் அவர் அங்கீகரிக்கிறார். வருடத்தில் எந்தச் சமயத்திலும் இப்படி செய்ய நமக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.