உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 12/15 பக். 3-4
  • நினைவுகூர வேண்டிய ஒரு பிறப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நினைவுகூர வேண்டிய ஒரு பிறப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஸ்பெயின் நாட்டு கிறிஸ்மஸ்
  • “வருடத்தில் பெருமகிழ்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்கும் காலம்”
  • இயேசுவை மூன்று ராஜாக்கள் பெத்லகேமில் சந்தித்தார்களா?
    விழித்தெழு!—1999
  • கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கிறிஸ்தவர்களுடையதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இயேசு கிறிஸ்துவை எவ்வாறு நினைவுகூர வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • மூன்று சாஸ்திரிகள்—உண்மையா அல்லது கற்பனையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 12/15 பக். 3-4

நினைவுகூர வேண்டிய ஒரு பிறப்பு

“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு . . . பிறந்திருக்கிறார்.”​—⁠லூக்கா 2:⁠11.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெத்லகேம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. இந்தப் பிறப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அந்த ஊரில் வெகு சிலரே அறிந்திருந்தார்கள். ஆனால் மேய்ப்பர்கள் சிலர், இராத்திரி நேரத்தில் வயல்வெளியில் தங்கள் ஆட்டு மந்தைகளுடன் இருந்தபோது, திரளான தேவதூதர்கள் தோன்றி இவ்வாறு துதித்துப் பாடியதைக் கேட்டார்கள்: “உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியிலே நற்பிரியமுள்ள மனுஷர்மேல் சமாதானமும் உண்டாவதாக.”​—⁠லூக்கா 2:8-14, NW.

தேவதூதர்கள் சொன்னபடியே, மரியாளையும் அவரது கணவர் யோசேப்பையும் ஒரு தொழுவத்தில் மேய்ப்பர்கள் கண்டார்கள். அந்தக் குழந்தைக்கு இயேசு என மரியாள் பெயரிட்டிருந்தார்; அவரை முன்னணையில், அதாவது கால்நடைகளுக்குத் தீனி போடும் ஓர் இடத்தில் படுக்க வைத்திருந்தார். (லூக்கா 1:31; 2:12) இது நடந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன; இன்று மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பாகத்தினர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். அவருடைய பிறப்புடன் தொடர்புடைய சம்பவங்கள் சரித்திரத்திலேயே மிக அதிகமாக சொல்லப்பட்டுள்ள ஒரு கதைக்கு அடிப்படையாக விளங்குகின்றன.

கத்தோலிக்க பாரம்பரியத்திற்கும் தொன்மையான பண்டிகைகளுக்கும் பெயர்போனது ஸ்பெயின் நாடு; பெத்லகேமில் இயேசு பிறந்த தனிச்சிறப்புமிக்க அந்த இரவை நினைவுகூர பல்வேறு வழிகளை அந்நாடு உருவாக்கியிருக்கிறது.

ஸ்பெயின் நாட்டு கிறிஸ்மஸ்

13-⁠ம் நூற்றாண்டு முதல், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகள் ஸ்பெயின் நாட்டு கொண்டாட்டங்களில் சர்வ சாதாரணமாக காணப்படுகின்றன. அநேக குடும்பங்கள் இயேசு கிடத்தப்பட்டிருந்த தொழுவத்தைப் போல சிறிதாக ஒரு ‘மாடல்’ செய்கின்றன. மேய்ப்பர்கள், வானசாஸ்திரிகள் (அல்லது “மூன்று ராஜாக்கள்”), யோசேப்பு, மரியாள், இயேசு ஆகியோரை சித்தரித்துக் காட்டும் உருவங்களை களிமண்ணால் செய்கின்றன. கிறிஸ்மஸ் சீஸனில், இயேசுவின் பிறப்பை சித்தரித்துக் காட்டும் பெரிய ஸைஸ் ‘மாடல்கள்’ பெரும்பாலும் டவுன் ஹால்களுக்கு அருகில் வைக்கப்படுகின்றன. அஸிஸியைச் சேர்ந்த பிரான்ஸிஸ் என்பவர் இத்தாலியில் இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்ததாக தெரிகிறது; இயேசுவின் பிறப்பைப் பற்றிய சுவிசேஷ பதிவுக்கு மக்களுடைய கவனத்தைத் திருப்ப அவர் இப்படி செய்தார். பிற்பாடு, அவரது பிரிவைச் சேர்ந்த துறவிகள் இதை ஸ்பெயினிலும் இன்னும் பற்பல நாடுகளிலும் பிரபலமாக்கினர்.

பிற நாடுகளின் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்மஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) பிரபலமாக இருப்பது போல் ஸ்பெயின் நாட்டில் வானசாஸ்திரிகள் முக்கிய பாகம் வகிக்கின்றனர். பிரபல நம்பிக்கையின்படி, குழந்தை இயேசுவுக்கு வானசாஸ்திரிகள் பரிசுகள் கொண்டுவந்தது போல, டியா டி ரேயிஸ் (ராஜாக்களின் நாள்) என்று அழைக்கப்படும் ஜனவரி 6-⁠ம் தேதியன்று வானசாஸ்திரிகள் ஸ்பெயின் நாட்டுப் பிள்ளைகளுக்குப் பரிசுகள் கொடுப்பதாக கருதப்படுகிறது. ஆனால் எத்தனை வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க வந்தார்கள் என்பதைப் பற்றி சுவிசேஷ பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை என்பது அநேகருக்குத் தெரியாது. அதோடு, அவர்கள் ராஜாக்கள் அல்ல, ஆனால் ஜோதிடர்கள்.a அதுமட்டுமல்ல, வானசாஸ்திரிகள் வந்துபோன பிறகு, இயேசுவைத் தீர்த்துக்கட்ட ஏரோது முயன்றான்; அதற்காக பெத்லகேமிலிருந்த “இரண்டு வயதுக்குட்பட்ட” எல்லா பையன்களையும் அவன் கொலை செய்தான். ஆகவே வானசாஸ்திரிகள் இயேசுவைப் பார்க்க சென்றது அவருடைய பிறப்புக்குச் சில காலத்திற்குப் பின்பே என தெரிகிறது.​—⁠மத்தேயு 2:11, 16.

12-⁠ம் நூற்றாண்டு முதற்கொண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள பட்டணங்கள் சில, இயேசுவின் பிறப்பு, பெத்லகேமுக்கு மேய்ப்பர்களின் விஜயம், பிற்பாடு வானசாஸ்திரிகளின் வருகை ஆகியவற்றை நாடக காட்சிகளாக நடித்து காட்டியிருக்கின்றன. இப்பொழுதெல்லாம், பெரும்பாலான ஸ்பெயின் நகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5-⁠ம் தேதி அன்று காபால்காட்டா என்ற அணிவகுப்பை ஏற்பாடு செய்கின்றன; அந்த “மூன்று ராஜாக்களை” அலங்கார வண்டிகளில் வைத்து நகரத்தின் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றன. பார்வையாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகிறது. பாரம்பரிய கிறிஸ்மஸ் அலங்காரங்களும் வேயேன்சீகோஸும் (அதாவது கிறிஸ்மஸ் பாடல்களும்) இந்தக் கொண்டாட்டத்தை கோலாகலமான நிகழ்ச்சியாக ஆக்குகின்றன.

பெரும்பாலான ஸ்பெயின் குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாளில் (அதாவது டிசம்பர் 24-⁠ல்) விசேஷ மாலை விருந்தை ஏற்பாடு செய்கின்றனர். அந்தப் பாரம்பரிய விருந்தில் டியுரான் (அதாவது பாதாம் பருப்பிலும் தேனிலும் செய்யப்பட்ட இனிப்பு), மார்ஸிப்பான் என்ற மற்றொரு இனிப்பு, உலர்ந்த பழங்கள், நெருப்பில் வாட்டிய ஆட்டுக்குட்டி இறைச்சி, கடல் உணவு போன்றவற்றை சாப்பிடுகின்றனர். இந்நிகழ்ச்சியில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும்​—⁠தூரத்தில் வசிப்பவர்களும்கூட​—⁠ஒன்றாக கூடிவர விசேஷ முயற்சி எடுக்கின்றனர். மற்றொரு பாரம்பரிய விருந்தின்போது, அதாவது ஜனவரி 6-⁠ம் தேதி அன்று, குடும்பத்தினர் ராஸ்கான் டி ரேயஸ் என்ற “ராஜாக்களின்” கேக்கை சாப்பிடுகின்றனர். வளையம் போன்ற வடிவிலுள்ள அந்தக் கேக்கிற்குள் ஒரு சர்பிரேஸா-வை, அதாவது சிறிய உருவத்தை மறைத்து வைக்கின்றனர். ரோமருடைய காலங்களில் இதுபோன்ற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது, கேக்கில் மறைத்து வைக்கப்பட்ட பொருள் எந்த அடிமைக்கு கிடைக்கிறதோ அந்த அடிமை ஒரு நாளைக்கு “ராஜா”வாக இருப்பான்.

“வருடத்தில் பெருமகிழ்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்கும் காலம்”

உள்ளூர் பழக்க வழக்கங்கள் எதுவாக இருந்தாலும் சரி, கிறிஸ்மஸ் இப்பொழுது உலகத்தின் முக்கிய கொண்டாட்டமாக மாறிவிட்டது. “உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களும் மற்றவர்கள் சிலரும் வருடத்தில் பெருமகிழ்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்கும் காலம்” கிறிஸ்மஸ் காலம் என த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா விவரிக்கிறது. இக்கொண்டாட்டம் பயனுள்ளதா?

கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமான ஒரு சம்பவம் என்பதில் சந்தேகமே இல்லை. ‘நற்பிரியமுள்ள மனுஷர் மேல் சமாதானம்’ வரப்போவதாக தேவதூதர்கள் அறிவித்தது அதன் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

என்றாலும், “கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தில், இயேசுவின் பிறப்பு ஒரு பண்டிகையாக கொண்டாடப்படவில்லை” என ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குவான் ஆரியாஸ் என்ற இதழாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அப்படியானால், கிறிஸ்மஸ் கொண்டாட்டம் எங்கிருந்து வந்தது? இயேசுவின் பிறப்பையும் வாழ்க்கையையும் நினைவுகூருவதற்கு மிகச் சிறந்த வழி எது? இந்தக் கேள்விகளுக்குரிய பதில்களை நீங்கள் அடுத்தக் கட்டுரையில் காணலாம்.

[அடிக்குறிப்பு]

a “பெர்சியர்கள், மேதியர்கள், கல்தேயர்கள் மத்தியில் இந்த வானசாஸ்திரிகள் ஓர் ஆசாரிய வகுப்பாராக இருந்து ஆவியுலகத் தொடர்பு, ஜோதிடம், பில்லி சூனிய மருத்துவம் போன்றவற்றை வளர்த்தார்கள்” என ஜெர்மானிய நூல் (பரிசுத்த வேதாகமம்​—⁠வசனமும் விளக்கவுரையும், இயேசுவின் சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர்களால் எழுதப்பட்ட நூல்) விளக்குகிறது. என்றாலும், இடைக் காலத்திற்குள், இளம் இயேசுவைப் பார்க்கச் சென்ற அந்த வானசாஸ்திரிகள் புனிதர்கள் என அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்; மெல்க்யார், காஸ்பார், பால்டாஸார் என்ற பெயர்களும் அவர்களுக்குச் சூட்டப்பட்டன. அவர்களுடைய எலும்புகள் ஜெர்மனியில் கோலாங்கிலுள்ள கத்தீட்ரலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்