யெகோவாவே நமக்கு உதவி அளிப்பவர்
“வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்.”—சங்கீதம் 121:1, 2, NW.
1, 2. (அ) சிலசமயங்களில் நம் எல்லாருக்குமே உதவி தேவை என ஏன் சொல்லலாம்? (ஆ) யெகோவா எத்தகைய உதவி அளிப்பவர்?
யாருக்குத்தான் உதவி தேவையில்லை? சொல்லப்போனால், நம் எல்லாருக்குமே சிலசமயங்களில் உதவி தேவைப்படுகிறது—பாரமான பிரச்சினையை சமாளிப்பதற்கு, நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் இழப்பை சகிப்பதற்கு, கடினமான சோதனையைத் தாங்குவதற்கு என எல்லாருக்குமே உதவி தேவைப்படுகிறது. உதவி தேவைப்படுகையில் ஆட்கள் பெரும்பாலும் அன்பான ஒரு நண்பரை நாடிப் போகிறார்கள். இத்தகைய நண்பரிடம் நம்முடைய மன பாரத்தை இறக்கி வைக்கும்போது அதை தாங்குவது நமக்கு எவ்வளவு இலகுவாக ஆகிவிடுகிறது! ஆனால் சக மனிதர் நமக்கு ஓரளவுக்குத்தான் கைகொடுக்க முடியும். அதோடு, எல்லா சமயத்திலும் அவர்களால் நமக்கு உதவிக்கரம் நீட்ட முடியாமலும் போகலாம்.
2 என்றாலும், நமக்கு உதவி அளிப்பதற்கு எல்லையற்ற சக்தியும் வளஆதாரங்களும் படைத்த ஒருவர் இருக்கிறார். மேலும், அவர் நம்மை ஒருகாலும் கைவிட மாட்டாரென உறுதியும் அளிக்கிறார். அவரைப் பற்றித்தான் சங்கீதக்காரன் முழு நம்பிக்கையுடன் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்.” (சங்கீதம் 121:2, NW) யெகோவா உதவி செய்வார் என ஏன் இந்தச் சங்கீதக்காரன் உறுதியாக நம்பினார்? இதற்குரிய பதிலை பெற நாம் இப்பொழுது சங்கீதம் 121-ஐ ஆராயலாம். நாமும் யெகோவாவை உதவி அளிப்பவராக நம்பிக்கையுடன் நோக்கியிருக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள இது உதவும்.
எப்போதும் உதவி அளிக்கும் ஊற்றுமூலர்
3. தாவீது தனது கண்களை எந்த மலைகளை நோக்கி ஏறெடுத்திருக்கலாம், ஏன்?
3 யெகோவாவே படைப்பாளர் என்று சொல்வதன் மூலம் நம்பிக்கை வைப்பதற்குரிய ஆதாரத்தை சங்கீதக்காரன் நமக்கு சுட்டிக்காட்டினார்: “மலைகளை நோக்கி என் கண்களை ஏறெடுக்கிறேன், எங்கிருந்து எனக்கு உதவி வரும்? வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்.” (சங்கீதம் 121:1, 2, NW) சங்கீதக்காரன் வெறுமனே ஏதோவொரு மலையை நோக்கி தன் கண்களை ஏறெடுக்கவில்லை. இந்த வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டபோது யெகோவாவின் ஆலயம் எருசலேமில் வீற்றிருந்தது. யூதாவின் மலைகளில் உயரத்தில் அமைந்திருந்த அந்தப் பட்டணம் அடையாள அர்த்தத்தில் யெகோவாவின் வாசஸ்தலமாக இருந்தது. (சங்கீதம் 135:21) உதவிக்காக யெகோவாவை நம்பிக்கையுடன் நாடி, அவருடைய ஆலயம் வீற்றிருந்த எருசலேம் மலைகளை நோக்கி சங்கீதக்காரன் தனது கண்களை ஏறெடுத்திருக்கலாம். யெகோவா தனக்கு உதவி செய்ய முடியும் என்பதில் ஏன் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார்? ஏனென்றால் அவரே “வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய”வர். ஆக, ‘எனக்கு உதவி செய்வதிலிருந்து எல்லாம் வல்ல படைப்பாளரை எதுவும் தடுத்துநிறுத்த முடியாது!’ என்றே சங்கீதக்காரன் சொல்லிக்கொண்டிருந்தார்.—ஏசாயா 40:26.
4. யெகோவா தமது மக்களுடைய தேவைகளைக் குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதை சங்கீதக்காரன் எப்படி தெரிவிக்கிறார், அது ஏன் ஆறுதல் அளிக்கிறது?
4 யெகோவா தமது ஊழியர்களுடைய தேவைகளைக் குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதாக சங்கீதக்காரன் அடுத்து விளக்கினார்: “உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.” (சங்கீதம் 121:3, 4) தம் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ‘தள்ளாடவோ’ மீள முடியாமல் வீழ்ந்துபோகவோ கடவுள் அனுமதிக்க மாட்டார். (நீதிமொழிகள் 24:16) ஏன்? ஏனென்றால் கண்ணயராமல் தமது ஆடுகளைக் காக்கும் மேய்ப்பரைப் போல் யெகோவா விளங்குகிறார். இது நமக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது அல்லவா? தமது மக்களுடைய தேவைகளைப் பொறுத்தவரை, இமைப்பொழுதும் அவர் கண்மூடுவதில்லை. விழிப்புடனிருந்து அவர்களை இரவும் பகலும் கவனித்து வருகிறார்.
5. யெகோவா “வலது பக்கத்திலே” இருப்பது போல் சொல்லப்பட்டிருப்பது ஏன்?
5 யெகோவா தமது மக்களை உண்மையுடன் காப்பவர் என்பதில் நம்பிக்கை வைத்து சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.” (சங்கீதம் 121:5, 6) மத்திய கிழக்கில், சுட்டுப் பொசுக்கும் வெயிலில் நடந்து செல்கிற ஒருவருக்கு இதமான பாதுகாப்பு அளிப்பது நிழலே. யெகோவா தமது மக்களுக்கு துன்பம் எனும் வெயிலிலிருந்து பாதுகாப்பு தரும் நிழலாய் விளங்குகிறார். யெகோவா “வலது பக்கத்திலே” இருப்பதாக சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள். பண்டைக் கால போர்களில், படைவீரன் தன் இடது கையில் கேடயத்தைப் பிடித்திருந்ததால் அவனுடைய வலது கை ஓரளவு பாதுகாப்பின்றி இருந்தது. ஆனால் உற்ற நண்பர் அவனுடைய வலது பக்கத்தில் நின்று சண்டையிடுவதன் மூலம் அவனை பாதுகாத்தார். இத்தகைய நண்பரைப் போல், யெகோவா தமது வணக்கத்தாருக்கு உற்ற துணையாக, அவர்களுடைய பக்கத்தில் நின்றுகொண்டு உதவ எப்பொழுதும் தயாராக இருக்கிறார்.
6, 7. (அ) யெகோவா தமது மக்களை காப்பதை ஒருபோதும் நிறுத்திவிட மாட்டார் என்பதை சங்கீதக்காரன் எவ்வாறு நமக்கு உறுதி அளிக்கிறார்? (ஆ) சங்கீதக்காரனைப் போல நாமும் ஏன் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
6 யெகோவா தமது மக்களை காப்பதை எப்பொழுதாவது நிறுத்திவிடுவாரா? இப்படி செய்வாரென துளிகூட எண்ணிப் பார்க்க முடியாது. சங்கீதக்காரன் இவ்வாறு முடித்தார்: “கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இது முதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.” (சங்கீதம் 121:7, 8) 5-ம் வசனத்தில், ‘கர்த்தர் உன்னைக் காக்கிறவர்’ என சங்கீதக்காரன் நிகழ்காலத்தில் கூறினார். ஆனால் இந்த வசனங்களில், ‘கர்த்தர் உன்னை . . . காப்பார்’ என எதிர்காலத்தில் எழுதினார். ஆகவே, யெகோவாவின் உதவி எதிர்காலத்திலும் கிடைக்கும் என உண்மை வணக்கத்தாருக்கு உறுதி அளிக்கப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றாலும்சரி எந்தத் தீங்கை சந்தித்தாலும்சரி, அவருடைய உதவிக் கரம் எப்போதும் அவர்களுக்கு இருக்கும்.—நீதிமொழிகள் 12:21.
7 அக்கறையுள்ள மேய்ப்பரைப் போல கரிசனையுடனும் விழிப்புள்ள காவலரைப் போல கவனத்துடனும் சர்வ வல்லமையுள்ள படைப்பாளர் தமது ஊழியர்களை கவனித்துக் காக்கிறார் என்பதை சங்கீதம் 121-ஐ இயற்றியவர் உறுதியாக நம்பினார் என்பதில் சந்தேகமே இல்லை. சங்கீதக்காரனைப் போல நாமும் நம்பிக்கையோடிருக்க நல்ல காரணம் இருக்கிறது, ஏனென்றால் யெகோவா மாறாதவர். (மல்கியா 3:6) அப்படியென்றால், எப்பொழுதும் நமக்கு சரீர பாதுகாப்பு கிடைக்கும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை, ஆனால் நாம் அவரையே உதவி அளிப்பவராக நோக்கியிருக்கும் வரை, நமக்கு ஆன்மீக தீங்குண்டாக்கும் எல்லா காரியங்களிலுமிருந்து அவர் நம்மை பாதுகாப்பார். குறிப்பாக ‘எப்படி யெகோவா நமக்கு உதவுவார்?’ என கேட்பது இயல்பானதே. அவர் நமக்கு உதவும் நான்கு வழிகளை இப்பொழுது ஆராயலாம். பைபிள் காலங்களில் யெகோவா எப்படி தமது ஊழியர்களுக்கு உதவினார் என்பதை இந்தக் கட்டுரையில் சிந்திப்போம். இன்று எப்படி தமது மக்களுக்கு அவர் உதவுகிறார் என்பதை அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.
தேவதூதர்களிடமிருந்து உதவி
8. கடவுளின் பூமிக்குரிய ஊழியர்களுடைய நலனில் தேவதூதர்களுக்கு ஆழ்ந்த அக்கறை இருப்பதில் ஏன் ஆச்சரியமில்லை?
8 கோடானுகோடி தேவதூதர்கள் யெகோவாவின் கட்டளையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். (தானியேல் 7:9, 10) இந்த ஆவி குமாரர்கள் உண்மையுடன் அவருடைய சித்தத்தைச் செய்கிறார்கள். (சங்கீதம் 103:20) தமது மானிட வணக்கத்தார் மீது யெகோவா பேரன்பு வைத்திருக்கிறார் என்பதையும் அவர்களுக்கு உதவ விரும்புகிறார் என்பதையும் இந்தத் தூதர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே, கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்கள் மீது அவர்களுக்கு ஆழ்ந்த அக்கறை இருப்பதில் ஆச்சரியமில்லை. (லூக்கா 15:10) அப்படியானால், மனிதருக்கு உதவ யெகோவா தங்களைப் பயன்படுத்துவதைக் குறித்து தேவதூதர்கள் நிச்சயமாகவே பெருமகிழ்ச்சி கொள்ள வேண்டும். பூர்வ காலங்களில் மானிட ஊழியர்களுக்கு உதவ என்னென்ன வழிகளில் தேவதூதர்களை யெகோவா பயன்படுத்தினார்?
9. உண்மையுள்ள மனிதர்களைப் பாதுகாக்க எவ்வாறு கடவுளால் தேவதூதர்கள் அதிகாரமும் வல்லமையும் வழங்கப்பட்டார்கள் என்பதற்கு ஓர் உதாரணம் தருக.
9 உண்மையுள்ள மனிதர்களைப் பாதுகாக்கவும் மீட்கவும் தேவதூதர்களுக்கு அதிகாரமும் வல்லமையும் கடவுளால் வழங்கப்பட்டது. சோதோம் கொமோராவின் அழிவிலிருந்து தப்பிப் பிழைக்க லோத்துவுக்கும் அவருடைய மகள்களுக்கும் இரண்டு தேவதூதர்கள் உதவினார்கள். (ஆதியாகமம் 19:1, 15-17) எருசலேமை அச்சுறுத்திய 1,85,000 அசீரிய படைவீரர்களை ஒரே தேவதூதன் வெட்டி வீழ்த்தினார். (2 இராஜாக்கள் 19:35) சிங்கங்களின் கெபியில் தானியேல் போடப்பட்டபோது, யெகோவா “தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப் போட்டார்.” (தானியேல் 6:21, 22) அப்போஸ்தலன் பேதுருவை சிறையிலிருந்து ஒரு தூதன் விடுவித்தார். (அப்போஸ்தலர் 12:6-11) தேவதூதர் அளிக்கும் பாதுகாப்பைப் பற்றிய இன்னும் பல உதாரணங்களை பைபிள் குறிப்பிடுகிறது; இவ்வாறு, “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” என சங்கீதம் 34:7 சொல்வதை உறுதிப்படுத்துகிறது.
10. தீர்க்கதரிசியான தானியேலை உற்சாகப்படுத்துவதற்கு யெகோவா எவ்வாறு ஒரு தூதனைப் பயன்படுத்தினார்?
10 சில சந்தர்ப்பங்களில், உண்மையுள்ள மனிதர்களுக்கு உற்சாகமும் பலமும் அளிக்க தூதர்களை யெகோவா பயன்படுத்தினார். இதயத்தைத் தொடும் ஓர் உதாரணம் தானியேல் 10-ம் அதிகாரத்தில் உள்ளது. அந்தச் சமயத்தில், தானியேலுக்கு சுமார் 100 வயதிருக்கலாம். அந்தத் தீர்க்கதரிசி மிகவும் சோர்ந்துபோய் இருந்தார்; எருசலேம் பாழாக்கப்பட்ட நிலையில் இருந்ததும் ஆலயத்தை திரும்பக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதுமே அதற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அச்சுறுத்தும் தரிசனத்தைக் கண்டதாலும் அவர் கலங்கியிருந்தார். (தானியேல் 10:2, 3, 8) அவருக்கு உற்சாகமூட்ட ஒரு தூதனை கடவுள் அன்புடன் அனுப்பினார். கடவுளுடைய பார்வையில் அவர் மிகவும் ‘பிரியமானவர்’ என ஒரு தடவைக்கும் மேல் தானியேலுக்கு அந்தத் தூதன் நினைப்பூட்டினார். விளைவு? “என்னைத் திடப்படுத்தினீரே” என்று தேவதூதனிடம் வயதான அந்தத் தீர்க்கதரிசி கூறினார்.—தானியேல் 10:11, 19.
11. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை வழிநடத்த தேவதூதர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதற்கு ஓர் உதாரணம் என்ன?
11 நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை வழிநடத்துவதற்கும் தூதர்களை யெகோவா பயன்படுத்தினார். எத்தியோப்பிய மந்திரிக்கு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிப்பதற்கு பிலிப்புவை ஒரு தேவதூதன் வழிநடத்தினார், அந்த மந்திரி முழுக்காட்டப்பட்டார். (அப்போஸ்தலர் 8:26, 27, 36, 38) குறுகிய காலத்திற்குப்பின், விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாருக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பது கடவுளுடைய சித்தமாக இருந்தது. ஒரு தரிசனத்தில், தேவ பயமுடைய புறஜாதியானாகிய கொர்நேலியுவுக்கு ஒரு தூதன் தோன்றி, அப்போஸ்தலன் பேதுருவை வரவழைக்கும்படி கூறினார். கொர்நேலியுவின் ஆட்கள் பேதுருவைக் கண்டபோது, “கொர்நேலியு . . . உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளை பெற்றார்” என்று சொன்னார்கள். பேதுரு அழைப்பை ஏற்று அவர்களுடன் சென்றார்; அதன் விளைவாக, விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார் முதன்முதலாக கிறிஸ்தவ சபையின் பாகமானார்கள். (அப்போஸ்தலர் 10:22, 44-48) நல்மனமுடைய ஒருவரை சந்திக்க ஒரு தேவதூதர் உங்களுக்கு உதவியிருக்கிறார் என்பதை அறிகையில் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!
பரிசுத்த ஆவியால் வரும் உதவி
12, 13. (அ) பரிசுத்த ஆவி தங்களுக்கு உதவும் என்பதை நம்புவதற்கு இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு ஏன் நல்ல காரணம் இருந்தது? (ஆ) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குப் பரிசுத்த ஆவி எந்த விதத்தில் வல்லமை அளித்தது?
12 இயேசு தாம் மரிப்பதற்கு சற்று முன்பு அப்போஸ்தலர்களிடம் பேசுகையில், அவர்கள் உதவியின்றி கைவிடப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார். பிதாவானவர் ‘பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை’ அதாவது, ஒரு சகாயரை அவர்களுக்குத் தருவார் என்றார். (யோவான் 14:26) பரிசுத்த ஆவி தங்களுக்கு உதவும் என்பதை அப்போஸ்தலர்கள் நம்புவதற்கு நல்ல காரணம் இருந்தது. சொல்லப்போனால், சக்திகளிலேயே பலத்த சக்தியாகிய பரிசுத்த ஆவியை யெகோவா பயன்படுத்தி தம் மக்களுக்கு உதவியதைக் காட்டும் ஏகப்பட்ட உதாரணங்கள் பைபிளில் உள்ளன.
13 அநேக சந்தர்ப்பங்களில், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய பரிசுத்த ஆவி மனிதருக்கு வல்லமை அளித்தது. இஸ்ரவேலரை விடுவிப்பதற்கு பரிசுத்த ஆவியே நியாயாதிபதிகளுக்கு வல்லமை அளித்தது. (நியாயாதிபதிகள் 3:9, 10; 6:34) எல்லாவித எதிர்ப்பின் மத்தியிலும் தைரியத்துடன் தொடர்ந்து பிரசங்கிக்க அதே ஆவியே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் வல்லமை அளித்தது. (அப்போஸ்தலர் 1:8; 4:31) ஊழியத்தை செய்து முடிப்பதில் அவர்கள் அடைந்த வெற்றி, பரிசுத்த ஆவியின் செயல்பாட்டிற்கு வலிமைமிக்க சான்றளித்தது. ‘படிப்பறியாதவர்களும் பேதைமையுள்ளவர்களும்,’ அன்று அறியப்பட்டிருந்த உலகெங்கும் ராஜ்ய செய்தியைப் பரப்ப முடிந்ததற்கு இதைத் தவிர வேறென்ன காரணமிருக்க முடியும்?—அப்போஸ்தலர் 4:13; கொலோசெயர் 1:23.
14. யெகோவா தமது மக்களுக்கு அறிவொளியூட்ட எவ்வாறு பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தினார்?
14 யெகோவா தமது மக்களுக்கு அறிவொளியூட்டுவதற்கும் இந்தப் பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தினார். கடவுளுடைய ஆவியின் உதவியால், பார்வோனுடைய தீர்க்கதரிசன அர்த்தமுள்ள கனவுகளுக்கு யோசேப்பினால் அர்த்தம் சொல்ல முடிந்தது. (ஆதியாகமம் 41:16, 38, 39) தம்முடைய நோக்கங்களை பெருமையுள்ளோருக்கு மறைத்து தாழ்மையுள்ளோருக்கு வெளிப்படுத்த யெகோவா தமது ஆவியைப் பயன்படுத்தினார். (மத்தேயு 11:25) ஆகவே, “தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு” யெகோவா ஆயத்தம் பண்ணுகிற காரியங்கள் சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்.” (1 கொரிந்தியர் 2:7-10) பரிசுத்த ஆவியின் உதவியால் மாத்திரமே கடவுளுடைய சித்தத்தை ஒருவர் உண்மையில் புரிந்துகொள்ள முடிந்தது.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் உதவி
15, 16. ஞானமாக செயல்பட என்ன செய்யும்படி யோசுவாவிற்குச் சொல்லப்பட்டது?
15 யெகோவாவின் ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தை ‘உபதேசத்திற்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கிறது,’ அதோடு கடவுளுடைய ஊழியர்கள் ‘எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவர்களாக இருக்கும்படிக்கும்’ உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த கடவுளுடைய வார்த்தையால் அவருடைய பூர்வகால ஜனங்கள் எவ்வாறு உதவி அளிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய பல உதாரணங்கள் பைபிளில் உள்ளன.
16 கடவுளுடைய வணக்கத்தாருக்கு சிறந்த வழிநடத்துதல் கொடுப்பதற்கு வேதவசனங்கள் உதவி செய்தன. இஸ்ரவேல் ஜனத்தாரை வழிநடத்தும் பொறுப்பு யோசுவாவுக்குக் கொடுக்கப்பட்டபோது, அவரிடம் இவ்வாறு சொல்லப்பட்டது: “[மோசேயால் எழுதப்பட்ட] இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” ஞானத்தை அற்புதகரமாக மனதில் உதிக்கச் செய்வதாக யோசுவாவுக்குக் கடவுள் வாக்குறுதி அளிக்கவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, ‘நியாயப்பிரமாண புஸ்தகத்தில்’ எழுதியிருப்பவற்றை யோசுவா வாசிக்கவும் தியானிக்கவும் செய்யும் பட்சத்தில் புத்திமானாய் நடந்துகொள்வார் என சொல்லப்பட்டது.—யோசுவா 1:8; சங்கீதம் 1:1-3.
17. அப்போது வரை எழுதப்பட்டிருந்த கடவுளுடைய வார்த்தை எவ்வாறு தானியேலுக்கும் யோசியா ராஜாவுக்கும் உதவியது?
17 கடவுளுடைய வார்த்தை அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கும் உதவியது. உதாரணமாக, எருசலேம் எவ்வளவு காலத்திற்குப் பாழாய் கிடக்கும் என்பதை எரேமியாவின் புஸ்தகத்திலிருந்து தானியேல் அறிந்துகொண்டார். (எரேமியா 25:11; தானியேல் 9:2) யூதாவின் ராஜாவான யோசியாவின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அந்த சமயத்திற்குள் தேசம் யெகோவாவைவிட்டு வழிவிலகிப் போயிருந்தது, நியாயப்பிரமாணச் சட்டத்தை ராஜாக்கள் சொந்தமாக நகலெடுத்து அதிலுள்ளதை பின்பற்றத் தவறிவிட்டனர். (உபாகமம் 17:18-20) ஆனால், ஆலயம் பழுதுபார்க்கப்பட்ட சமயத்தில், அநேகமாக மோசேயால் எழுதப்பட்ட ‘நியாயப்பிரமாண புஸ்தகம்’ கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி முடிக்கப்பட்ட மூலப்பிரதியாக ஒருவேளை இது இருந்திருக்கலாம். யோசியா அதிலுள்ளவற்றை வாசிக்க கேட்ட பிறகு, தேசம் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதிலிருந்து எவ்வளவு தூரம் வழி விலகியிருந்தது என்பதை உணர்ந்துகொண்டார், அதனால் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டதன்படி செய்வதற்காக உறுதியான நடவடிக்கைகளை எடுத்தார். (2 இராஜாக்கள் 22:8; 23:1-7) பூர்வ காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஜனங்களுக்கு, அப்போது வரை எழுதப்பட்டிருந்த வேத வார்த்தைகள் உதவி செய்தன என்பது தெளிவாக தெரிகிறது அல்லவா?
சக விசுவாசிகள் மூலம் உதவி
18. மெய் வணக்கத்தார் ஒருவர் பிறருக்கு உதவி செய்யும்போது அதற்கு யெகோவாவே ஊற்றுமூலர் என ஏன் சொல்லலாம்?
18 யெகோவா தரும் உதவி பெரும்பாலும் சக விசுவாசிகள் மூலம் வருகிறது. மெய் வணக்கத்தார் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்கிறபோதெல்லாம், உண்மையில் கடவுளே அந்த உதவிக்கு ஊற்றுமூலர் என்று சொல்லலாம். ஏன்? இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, கடவுளுடைய பரிசுத்த ஆவி உட்பட்டுள்ளது. அந்த ஆவியின் செயல்பாட்டைத் தேடுகிறவர்களுக்கு அது அன்பு, நற்குணம் ஆகியவற்றை உள்ளிட்ட கனியைத் தருகிறது. (கலாத்தியர் 5:22, 23) ஆகவே, கடவுளுடைய ஊழியர்களில் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்ய உந்துவிக்கப்படும்போது அது யெகோவாவின் ஆவி கிரியை செய்வதற்கு அத்தாட்சியாகும். இரண்டாவதாக, நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். (ஆதியாகமம் 1:26) தயவு, இரக்கம் போன்றவை உள்ளிட்ட அவருடைய பண்புகளைப் பிரதிபலிக்கும் திறமை நமக்கு இருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. எனவே, யெகோவாவின் ஊழியர் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்யும்போதெல்லாம், யாருடைய சாயல் பிரதிபலிக்கப்படுகிறதோ அவரே இத்தகைய உதவிக்கு உண்மையான ஊற்றுமூலர்.
19. பைபிள் பதிவின்படி, சக விசுவாசிகள் மூலம் யெகோவா எப்படி உதவினார்?
19 பைபிள் காலங்களில், சக விசுவாசிகள் மூலம் யெகோவா எப்படி உதவினார்? பெரும்பாலும் தமது ஊழியர்களில் ஒருவர் பிறருக்கு ஆலோசனை வழங்கும்படி யெகோவா செய்தார். இப்படித்தான் உயிர்காக்கும் அறிவுரையை பாருக்கிற்கு எரேமியா கொடுத்தார். (எரேமியா 45:1-5) சில சந்தர்ப்பங்களில், மெய் வணக்கத்தார் சக விசுவாசிகளுக்குப் பொருளாதார உதவியளிக்க உந்துவிக்கப்பட்டார்கள். உதாரணமாக, மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமிருந்த கிறிஸ்தவர்கள் எருசலேமிலிருந்த சகோதரர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இத்தகைய தாராள குணத்தால் ‘தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டானது’ என அப்போஸ்தலன் பவுல் கூறினார்.—2 கொரிந்தியர் 9:11.
20, 21. எத்தகைய சூழ்நிலைமையில் அப்போஸ்தலன் பவுல் ரோமிலிருந்த சகோதரர்களால் பலப்படுத்தப்பட்டார்?
20 ஒருவரையொருவர் பலப்படுத்தவும் உற்சாகமூட்டவும் யெகோவாவின் ஊழியர்கள் எவ்வாறு முயற்சி எடுத்தார்கள் என்பதைப் பற்றிய பதிவுகள் முக்கியமாக இருதயத்தைத் தொடுபவையாக இருக்கின்றன. அப்போஸ்தலன் பவுலைப் பற்றிய ஓர் உதாரணத்தை கவனியுங்கள். கைதியாக ரோமுக்குச் சென்றபோது, ஏப்பியன் வே என்ற ரோம நெடுஞ்சாலை வழியாக பவுல் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின் கடைசி கட்டம் பயங்கர கஷ்டமாக இருந்தது, ஏனென்றால் சகதி நிறைந்த தாழ்நிலத்தின் வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது.a ரோம சபையிலிருந்த சகோதரர்கள் பவுல் வருவதை அறிந்திருந்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? பவுல் வந்துசேர்ந்த பிறகு வரவேற்கலாம் என நினைத்து அதுவரை தங்களுடைய வீடுகளிலேயே சொகுசாக காத்திருந்தார்களா?
21 இந்தப் பயணத்தின்போது பவுலுடன் சென்ற பைபிள் எழுத்தாளர் லூக்கா என்ன நடந்தது என்பதை நமக்குச் சொல்கிறார்: “அவ்விடத்திலுள்ள [ரோமிலுள்ள] சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம் வரைக்கும், சிலர் மூன்று சத்திரம் வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.” இந்தக் காட்சியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? பவுல் வருவதைக் கேள்விப்பட்டு, அவரை சந்திக்க ரோமிலிருந்து சகோதரர்கள் பயணப்பட்டார்கள். அந்தச் சகோதரர்களில் சிலர் அப்பியுபுர சந்தையில், அதாவது ரோமைவிட்டு சுமார் 74 கிலோமீட்டர் தொலைவிலிருந்த பிரபலமானதோர் சத்திரத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள். மீதமுள்ள சகோதரர்கள் மூன்று சத்திரம் என்ற இடத்தில் காத்துக் கொண்டிருந்தார்கள், இது ரோமிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலிருந்த சத்திரம். பவுல் எப்படி பிரதிபலித்தார்? ‘அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்’ என லூக்கா அறிவிக்கிறார். (அப்போஸ்தலர் 28:15) சற்று கற்பனை செய்து பாருங்கள்—இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருந்த அந்தச் சகோதரர்களைப் பார்த்ததே பவுலுக்குப் பலம் மற்றும் ஆறுதலின் ஊற்றாக விளங்கியது! இந்த ஆதரவுக்கு பவுல் யாருக்கு நன்றி தெரிவித்தார்? இதற்கு ஊற்றுமூலரான யெகோவா தேவனுக்கு நன்றி செலுத்தினார்.
22. 2005-ம் ஆண்டிற்கான வருடாந்தர வசனம் என்ன, அடுத்த கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
22 தெளிவாகவே, யெகோவா உதவி அளிப்பவர் என்பதை ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தை காட்டுகிறது. அவருக்குச் சமானமாக உதவி அளிப்பவர் யாருமில்லை. “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்ற சங்கீதம் 121:2-லுள்ள (NW) வார்த்தைகளை யெகோவாவின் சாட்சிகள் 2005-ம் ஆண்டிற்கான தங்களுடைய வருடாந்தர வசனமாக வைத்திருப்பது பொருத்தமாகவே இருக்கிறது. ஆனால் இன்று யெகோவா எப்படி நமக்கு உதவுகிறார்? இது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a இந்தப் பயணத்தின் அசௌகரியங்களைப் பற்றி இதே வழியில் பயணம் செய்த ரோம கவிஞர் ஹாரஸ் (பொ.ச.மு. 65-8) குறிப்பிட்டார். அப்பியு சந்தையைப் பற்றி ஹாரஸ் வர்ணித்தபோது, “படகோட்டிகளும் கஞ்சத்தனமான சத்திரக்காரர்களும் நிறைந்த நெரிசல்மிக்க இடம்” என்றார். அதோடு, “தொல்லைமிக்க கொசுக்களையும் தவளைகளையும்” பற்றியும் “சகிக்க முடியாத” தண்ணீரைப் பற்றியும் முறையிட்டார்.
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
எந்த வழிகளில் யெகோவா—
• தேவதூதர்கள் மூலம் உதவி அளித்தார்?
• பரிசுத்த ஆவியின் மூலம் உதவி அளித்தார்?
• ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையின் மூலம் உதவி அளித்தார்?
• சக விசுவாசிகள் மூலம் உதவி அளித்தார்?
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
2005-ம் ஆண்டிற்கான வருடாந்தர வசனம்: “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்.”—சங்கீதம் 121:2, NW.
[பக்கம் 16-ன் படம்]
ரோமிலிருந்த சகோதரர்களிடமிருந்து பெற்ற உதவிக்காக கடவுளுக்குப் பவுல் நன்றி தெரிவித்தார்