யெகோவாவின் உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
“யெகோவாவே எனக்கு உதவி அளிப்பவர், நான் பயப்பட மாட்டேன்.”—எபிரெயர் 13:6, NW.
1, 2. வாழ்க்கையில் யெகோவாவின் உதவியையும் வழிநடத்துதலையும் ஏற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?
நீங்கள் ஒரு மலைப் பாதையில் நடந்து செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் தனிமையில் செல்லவில்லை, உங்களுக்கு உதவ வழிகாட்டி ஒருவரும் உங்களுடன் வந்திருக்கிறார். வேறு எவரையும்விட அவரே மிகச் சிறந்த வழிகாட்டி. உங்களைவிட அவருக்கு அதிக அனுபவமும் பலமும் இருக்கிறது, ஆனால் அவர் பொறுமையுடன் உங்களோடு நடந்து வருகிறார். நீங்கள் சில சமயத்தில் இடறி விழுவதை அவர் கவனிக்கிறார். உங்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு, ஆபத்தான ஓரிடத்தில் செல்லும்போது உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார். அவருடைய உதவியை வேண்டாமென மறுத்துவிடுவீர்களா? நிச்சயமாகவே அப்படி மறுக்க மாட்டீர்கள்! ஏனென்றால் உங்களுடைய பாதுகாப்பு ஆபத்தில் இருக்கிறது.
2 கிறிஸ்தவர்களாகிய நாம் சவால்மிக்க ஒரு பாதையில் செல்ல வேண்டியதாக இருக்கிறது. இடுக்கமான அந்தப் பாதையில் நாம் தனியாகவே நடந்து செல்ல வேண்டுமா? (மத்தேயு 7:14) இல்லை, எவரைக் காட்டிலும் சிறந்த வழிகாட்டியாகிய யெகோவா தேவன் மனிதர்களை தம்முடன் நடந்துவர அனுமதிக்கிறார் என்று பைபிள் காட்டுகிறது. (ஆதியாகமம் 5:24; 6:9) அவ்வாறு நடந்து செல்கையில் யெகோவா அவர்களுக்கு உதவி செய்கிறாரா? “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்” என அவர் கூறுகிறார். (ஏசாயா 41:13) நாம் சிந்தித்த உதாரணத்திலுள்ள வழிகாட்டியைப் போல், யெகோவா தம்முடன் நடந்து செல்ல விரும்புகிறவர்களுக்கு அன்புடன் உதவிக் கரம் நீட்டுகிறார், நட்பையும் காட்டுகிறார். நிச்சயமாகவே நம்மில் ஒருவரும் அவருடைய உதவியை ஏற்க மறுக்க மாட்டோம்!
3. இக்கட்டுரையில் நாம் சிந்திக்கப்போகும் கேள்விகள் யாவை?
3 பூர்வ காலங்களில் யெகோவா தமது ஜனங்களுக்கு உதவிய நான்கு வழிகளைப் பற்றி முந்தைய கட்டுரையில் நாம் சிந்தித்தோம். இன்றும் அதே வழிகளில் தமது ஜனங்களுக்கு அவர் உதவி செய்கிறாரா? இத்தகைய உதவியை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை எப்படி நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்? இந்தக் கேள்விகளை நாம் இப்பொழுது சிந்திக்கலாம். அப்போது, யெகோவா உண்மையிலேயே நமக்கு உதவி அளிப்பவர் என்பதில் அதிக நம்பிக்கை பெறுவோம்.—எபிரெயர் 13:6.
தேவதூதருடைய உதவி
4. தேவதூதருடைய உதவி உண்டு என்பதில் கடவுளுடைய ஊழியர்கள் இன்று ஏன் நம்பிக்கையுடன் இருக்கலாம்?
4 யெகோவாவின் தற்கால ஊழியர்களுக்குத் தேவதூதர்கள் உதவி செய்கிறார்களா? ஆம், உதவி செய்கிறார்கள். மெய் வணக்கத்தாரை ஆபத்திலிருந்து விடுவிப்பதற்கு இன்று தேவதூதர்கள் நேரடியாக அவர்கள் முன் தோன்றுவதில்லை என்பது உண்மைதான். பைபிள் காலங்களிலும்கூட, இத்தகைய முறையில் தேவதூதர்கள் அரிதாகவே தோன்றினார்கள். அவர்கள் செய்தது மனிதரின் கண்களுக்குப் பெரும்பாலும் தெரியவில்லை, அதுவே நமது நாளிலும் உண்மையாக இருக்கிறது. என்றாலும், தேவதூதர்கள் வந்து உதவ தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்ததே கடவுளுடைய ஊழியர்களுக்கு அதிக உற்சாகம் அளித்தது. (2 இராஜாக்கள் 6:14-17) இது போன்றே நாமும் உணர நல்ல காரணம் இருக்கிறது.
5. இன்று பிரசங்க வேலையில் தேவதூதர்களும் உட்பட்டுள்ளார்கள் என்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது?
5 நாம் செய்கிற ஒரு விசேஷித்த வேலையில் யெகோவாவின் தூதர்கள் முக்கியமாக அக்கறை காட்டுகிறார்கள். அது என்ன வேலை? வெளிப்படுத்துதல் 14:6-ல் இதற்குரிய பதிலை நாம் காணலாம்: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக் கண்டேன்; அவன் பூமியில் வாசம் பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்[தான்].” இந்த ‘நித்திய சுவிசேஷம்’ ‘ராஜ்யத்தினுடைய சுவிசேஷத்துடன்’ தொடர்புடையது; இந்தச் சுவிசேஷம், இயேசு முன்னுரைத்தப்படி, இந்த ஒழுங்குமுறையின் முடிவு வருவதற்கு முன்னர் “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.” (மத்தேயு 24:14) ஆனால் பிரசங்கிக்கும் வேலையில் தேவதூதர்கள் நேரடியாக பங்குகொள்வதில்லை. மனிதருக்குத்தான் இயேசு இந்த முக்கியமான பொறுப்பைக் கொடுத்தார். (மத்தேயு 28:19, 20) இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகையில், ஞானமும் வல்லமையுமுள்ள ஆவி சிருஷ்டிகளாகிய பரிசுத்த தூதர்களுடைய உதவி நமக்கு இருப்பதை அறிவது உற்சாகமூட்டுகிறது அல்லவா?
6, 7. (அ) நம் பிரசங்க வேலையைத் தேவதூதர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை எது காட்டுகிறது? (ஆ) யெகோவாவின் தூதர்களுடைய ஆதரவை நிச்சயம் பெறலாம் என்பதில் நாம் எப்படி உறுதியாக இருக்கலாம்?
6 நம்முடைய வேலைக்குத் தேவதூதருடைய ஆதரவு இருக்கிறது என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன. உதாரணமாக, ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது, சத்தியத்தைக் கண்டுபிடிக்க உதவுமாறு கடவுளிடம் ஒருவர் ஜெபம் செய்தவுடன் அவரை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்ததைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏதோ தற்செயலாக நடந்தவை என நினைக்க முடியாதளவுக்கு மிகவும் அடிக்கடி நடக்கின்றன. தேவதூதர் அளித்த இத்தகைய உதவியால், அதிகமதிகமானோர் ‘தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்த’ கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; இதைச் செய்யும்படிதான் ‘வானத்தின் மத்தியில் பறக்கும் தேவதூதன்’ அறிவித்ததாக பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 14:7.
7 யெகோவாவின் வல்லமையுள்ள தூதர்களின் ஆதரவைப் பெற நீங்கள் ஏங்குகிறீர்களா? அப்படியானால், ஊழியத்தில் உங்களால் இயன்ற மிகச் சிறந்ததைச் செய்யுங்கள். (1 கொரிந்தியர் 15:58) யெகோவா தந்திருக்கும் இந்த விசேஷித்த வேலையை மனப்பூர்வமாகவும் முடிந்தளவுக்கு அதிகமாகவும் நாம் செய்யும்போது, அவருடைய தூதர்களின் உதவி நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.
பிரதான தேவதூதரிடமிருந்து உதவி
8. பரலோகத்தில் இயேசு வகிக்கும் உன்னத ஸ்தானம் என்ன, அது ஏன் நமக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது?
8 யெகோவா நமக்கு மற்றொரு வகையான தேவதூதருடைய உதவியையும் தருகிறார். ‘சூரியனைப் போன்ற முகமுடைய’ ‘பலமுள்ள தூதனைப்’ பற்றி வெளிப்படுத்துதல் 10:1 விவரிக்கிறது. தரிசனத்தில் காணப்பட்ட இந்தத் தூதர், பரலோகத்தில் அதிகாரத்தையும் மகிமையையும் பெற்றுள்ள இயேசு கிறிஸ்து என்பதில் சந்தேகமில்லை. (வெளிப்படுத்துதல் 1:13, 16) இயேசு உண்மையில் ஒரு தேவதூதரா? ஆம், ஒரு கருத்தில் அவர் ஒரு தேவதூதரே, ஏனென்றால் அவர் பிரதான தூதராக இருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:16) பிரதான தூதர் என்றால் என்ன? அந்த வார்த்தை ‘முதன்மையான தூதர்’ அல்லது ‘தலைமை தூதர்’ என்பதை குறிக்கிறது. யெகோவாவின் ஆவி குமாரர்களில் இயேசுவே மாபெரும் வல்லமை வாய்ந்தவர். யெகோவா தமது தூதர்களின் சேனைகள் அனைத்திற்கும் மேலாக அவரை நியமித்திருக்கிறார். இந்தப் பிரதான தூதர் உதவி அளிப்பதில் சிறந்து விளங்குகிறார். என்னென்ன விதங்களில்?
9, 10. (அ) நாம் பாவம் செய்யும்போது இயேசு எவ்வாறு நமக்கு உதவி அளிப்பவராக இருக்கிறார்? (ஆ) இயேசுவின் முன்மாதிரியால் நமக்கு என்ன உதவி கிடைக்கிறது?
9 வயதுசென்ற அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் பாவஞ் செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” அதாவது, உதவி அளிப்பவராக இருக்கிறார். (1 யோவான் 2:1) முக்கியமாக ‘பாவம் செய்யும்போது’ இயேசு நமக்கு உதவி அளிப்பவராக இருக்கிறார் என ஏன் யோவான் கூறினார்? நாம் அனுதினமும் பாவம் செய்கிறோம், அந்தப் பாவம் மரணத்திற்கு வழிநடத்துகிறது. (பிரசங்கி 7:20; ரோமர் 6:23) என்றாலும், இயேசு நம்முடைய பாவங்களுக்காக தமது உயிரையே பலியாக கொடுத்தார். இரக்கமுள்ள நமது பிதாவினிடத்தில் நமக்காக பரிந்து பேச அவருடைய பக்கத்தில் இருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் இத்தகைய உதவி தேவை. அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ளலாம்? நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, இயேசுவின் பலியின் அடிப்படையில் மன்னிப்பை நாட வேண்டும். பாவங்களைத் திரும்பத் திரும்ப செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
10 நமது சார்பாக மரித்தது மட்டுமல்லாமல், நமக்காக பரிபூரண முன்மாதிரியையும் இயேசு வைத்தார். (1 பேதுரு 2:21) அவருடைய முன்மாதிரி, வினைமையான பாவங்களைத் தவிர்த்து யெகோவா தேவனைப் பிரியப்படுத்தும் விதமாக வாழ்வதற்கு நமக்கு உதவி செய்து, சரியான பாதையில் நடத்துகிறது. இத்தகைய உதவிக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் அல்லவா? உதவிக்கு மற்றொரு உதவியையும் தருவதாக இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
பரிசுத்த ஆவியின் உதவி
11, 12. யெகோவாவின் ஆவி என்பது என்ன, அது எந்தளவு வல்லமையுடையது, இன்று அது நமக்கு ஏன் தேவை?
11 இயேசு இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: “நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (யோவான் 14:16, 17) இந்த “சத்திய ஆவி,” அதாவது பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல, ஆனால் ஒரு சக்தி—யெகோவாவின் செயல்நடப்பிக்கும் சக்தி. இது எல்லையற்ற வல்லமையுடையது. இந்த அண்டத்தைப் படைப்பதில், வியத்தகு அற்புதங்களை நடப்பிப்பதில், தமது சித்தத்தை தரிசனங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதில் இந்த சக்தியையே யெகோவா பயன்படுத்தினார். இன்று யெகோவா தமது ஆவியை அத்தகைய திட்டவட்டமான வழிகளில் பயன்படுத்தாததால், அது நமக்குத் தேவையில்லை என அர்த்தமாகுமா?
12 இல்லவே இல்லை! ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ வாழ்வதால், முன்னொருபோதையும்விட இப்போது நமக்கு யெகோவாவின் ஆவி அதிகமாக தேவை. (2 தீமோத்தேயு 3:1, NW) சோதனைகளின் மத்தியிலும் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை அது நமக்குத் தருகிறது. மேலும், யெகோவாவிடமும் நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமும் நம்மை நெருங்கி வரச் செய்யும் மிகச் சிறந்த குணங்களை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23) அப்படியானால், யெகோவா தரும் இந்த அருமையான உதவியிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
13, 14. (அ) யெகோவா தமது ஜனங்களுக்குப் பரிசுத்த ஆவியை மனப்பூர்வமாக கொடுக்கிறார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்? (ஆ) பரிசுத்த ஆவியாகிய பரிசை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை எத்தகைய செயல் மூலம் நாம் காட்டக்கூடும்?
13 முதலாவதாக, பரிசுத்த ஆவிக்காக நாம் ஜெபிக்க வேண்டும். “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என இயேசு கூறினார். (லூக்கா 11:13) ஆம், யெகோவாவைவிட மிகச் சிறந்ததோர் தகப்பனை நம்மால் கற்பனை செய்துபார்க்க முடியாது. பரிசுத்த ஆவிக்காக நாம் அவரிடம் உள்ளப்பூர்வமாக கேட்டால், இந்தப் பரிசை நமக்குத் தராமல் மறுத்துவிடுவார் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். அப்படியானால், அதற்காக நாம் கேட்கிறோமா? ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவிக்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும்.
14 இரண்டாவதாக, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு இசைய நடக்க வேண்டும்; அப்போதுதான் நாம் அந்தப் பரிசை ஏற்றுக்கொள்வதாக அர்த்தம். உதாரணத்திற்கு, கிறிஸ்தவர் ஒருவர் ஆபாசமான படங்களைப் பார்க்கும் பழக்கத்தை எதிர்த்து போராடுவதாக வைத்துக்கொள்வோம். இந்த மோசமான பழக்கத்தை விட்டொழிக்க பரிசுத்த ஆவிக்காக அவர் ஜெபம் செய்திருக்கிறார். கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்து ஆலோசனையை நாடியிருக்கிறார்; இழிவான படங்களின் பக்கத்தில்கூட போகாதிருக்கும்படி அந்த மூப்பர்கள் அவருக்கு அறிவுரை கொடுத்திருக்கிறார்கள். (மத்தேயு 5:29) அவர்களுடைய அறிவுரையைப் புறக்கணித்து, ஆசை வரும்போதெல்லாம் இப்படிப்பட்ட படங்களை அவர் பார்த்துக் கொண்டே இருந்தால்? பரிசுத்த ஆவியின் உதவிக்காக ஜெபம் செய்வதற்கு இசைவாக அவர் செயல்படுகிறாரா? அல்லது, கடவுளுடைய ஆவியை விசனப்படுத்தி பரிசுத்த ஆவியாகிய பரிசை இழந்துவிடும் ஆபத்தில் இருக்கிறாரா? (எபேசியர் 4:30) நாம் எல்லாரும் யெகோவாவிடமிருந்து வரும் இந்த அருமையான உதவியைத் தொடர்ந்து பெற நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து உதவி
15. பைபிளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நாம் எப்படி காண்பிக்கலாம்?
15 அநேக நூற்றாண்டுகளாக யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு பைபிளானது உதவி அளிக்கும் ஊற்றுமூலமாக இருந்திருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, உதவி அளிப்பதில் அது எந்தளவு வலிமைமிக்கது என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும். அந்த உதவியை ஏற்றுக்கொள்வது முயற்சியை உட்படுத்துகிறது. பைபிள் வாசிப்பதை நாம் ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
16, 17. (அ) கடவுளுடைய சட்டத்தை வாசிப்பதால் வரும் பலன்களை சங்கீதம் 1:2, 3 எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) சங்கீதம் 1:3 எவ்வாறு கடின உழைப்பை சித்தரித்துக் காட்டுகிறது?
16 தேவபக்தியுள்ள ஒரு மனிதனைப் பற்றி சங்கீதம் 1:2, 3 இவ்வாறு கூறுகிறது: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” இந்த வசனத்தின் முக்கிய கருத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? இந்த வார்த்தைகளை வாசித்தவுடன், இவை அமைதலான ஒரு சூழலை அருமையாக விவரிக்கின்றன என முடிவு செய்வது வெகு எளிது. நதிக்கரையில் வளரும் மரத்தின் நிழலில் மத்தியான வேளையில் ஒரு குட்டித் தூக்கம் போட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும்! ஆனால் ஓய்வெடுப்பதைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பதற்காக இந்தச் சங்கீதம் இதை விவரிப்பதில்லை. அதற்கு முற்றிலும் வித்தியாசமான ஒன்றை, அதாவது கடின உழைப்பை அது சித்தரித்துக் காட்டுகிறது. எப்படி?
17 நிழல் தரும் இந்த மரம் ஏதோ எதேச்சையாக ஆற்றங்கரையில் வளருகிற மரமல்ல என்பதை கவனியுங்கள். இது கனிதரும் மரம்; வளமான இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ‘நீர்க்கால்களின் ஓரமாக’ ‘நடப்பட்ட’ மரம். இந்த ஒரு மரம் எப்படி பல நீர்க்கால்களின் பக்கத்தில் இருக்க முடியும்? எப்படியென்றால், பழமரத் தோட்டத்து எஜமானர் தன் அருமையான மரங்களின் வேர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச பல வாய்க்கால்களைத் தோண்டக்கூடும். ஆ, இப்பொழுது தெளிவாக புரிகிறது! ஆன்மீக கருத்தில் அந்த மரத்தைப் போல் நாம் செழித்தோங்கினால், அது நமது சார்பாக செய்யப்பட்டுள்ள பெரும் வேலையின் காரணமாகும். நமக்கு சத்தியம் எனும் சுத்தமான நீரை கொண்டுவருகிற ஓர் அமைப்புடன் தொடர்புகொண்டு வருகிறோம். ஆனால் நம்முடைய பாகத்தை நாம் செய்ய வேண்டும். இந்த விலையேறப் பெற்ற தண்ணீரை நன்றாக உறிஞ்சிக்கொள்ள வேண்டும், அதாவது கடவுளுடைய வார்த்தையின் சத்தியங்களை நம்முடைய மனதிலும் இருதயத்திலும் பதிய வைக்க நாம் தியானிக்கவும் ஆராயவும் வேண்டும். இவ்வாறு, நாமும் நல்ல கனியைப் பிறப்பிக்க முடியும்.
18. நம் கேள்விகளுக்கு பைபிளின் பதில்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?
18 வெறுமனே அலமாரியில் பைபிள் தூங்கிக்கொண்டிருந்தால் அதில் நமக்கு ஒரு பிரயோஜனமுமில்லை. கண்களை மூடிக்கொண்டு டக்கென்று ஒரு பக்கத்தைத் திறந்து அதில் நம் கேள்விக்குப் பதில் கிடைக்குமாவென எதிர்பார்ப்பதற்கு அதில் எந்த மந்திர சக்தியுமில்லை. நாம் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில், புதையலைத் தேடுகிறது போல ‘தேவனை அறியும் அறிவைத்’ தேட வேண்டும். (நீதிமொழிகள் 2:1-5) நம்முடைய தேவைகளுக்குரிய வேதப்பூர்வ ஆலோசனையைப் பெற பெரும்பாலும் ஊக்கமாகவும் கவனமாகவும் ஆராய வேண்டும். இதற்கு பைபிள் அடிப்படையிலான அநேக பிரசுரங்கள் நம்மிடம் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஞானம் எனும் மணிக்கற்களை ஆவலுடன் தோண்டி எடுக்கையில், நாம் உண்மையிலேயே யெகோவாவின் உதவியைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
சக விசுவாசிகளிடமிருந்து வரும் உதவி
19. (அ) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளிலிருந்து வரும் உதவியை சக விசுவாசிகள் மூலம் கொடுக்கப்படும் உதவியாக ஏன் கருதலாம்? (ஆ) நம்முடைய பத்திரிகைகளிலுள்ள குறிப்பிட்ட ஒரு கட்டுரை மூலம் நீங்கள் எவ்வாறு உதவி பெற்றீர்கள்?
19 யெகோவாவின் மானிட ஊழியர்கள் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் உதவியின் ஊற்றாக இருந்திருக்கின்றனர். இன்று இந்த உதவி அளிப்பதை யெகோவா நிறுத்திவிட்டாரா? இல்லவே இல்லை. நம்முடைய சக விசுவாசிகளிடமிருந்து சரியான சமயத்தில் நமக்குத் தேவையான உதவியைப் பெற்ற சந்தர்ப்பங்களை நாம் ஒவ்வொருவரும் நிச்சம் நினைத்துப் பார்க்க முடியும். உதாரணமாக, உங்களுக்குத் தேவைப்பட்ட சமயத்தில் உங்களை ஆறுதல்படுத்திய அல்லது உங்களுடைய பிரச்சினையைத் தீர்க்க உதவிய அல்லது உங்கள் விசுவாசத்திற்குச் சவாலாக எழுந்த நிலைமையை சமாளிக்க உதவிய காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையிலுள்ள ஏதாவது கட்டுரையை உங்களால் ஞாபகப்படுத்திக் பார்க்க முடிகிறதா? “ஏற்ற சமயத்தில் உணவு” அளிப்பதற்கு நியமிக்கப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலம் அந்த உதவியை யெகோவா உங்களுக்குக் கொடுத்தார்.—மத்தேயு 24:45-47, NW.
20. எந்த வழிகளில் கிறிஸ்தவ மூப்பர்கள் ‘மனிதரில் வரங்களாக’ இருக்கிறார்கள்?
20 ஆனால், இன்னும் நேரடியான உதவியையே சக விசுவாசிகளிடமிருந்து பெரும்பாலும் நாம் பெறுகிறோம். கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் கொடுக்கும் பேச்சு நம் இருதயத்தைத் தொடுகிறது, அல்லது அவருடைய மேய்ப்பு சந்திப்பு கஷ்டமான ஒரு சூழலை சமாளிக்க உதவுகிறது, அல்லது அவர் தரும் அன்பான அறிவுரை நம்முடைய பலவீனத்தை உணர்ந்து கொள்ளவும் அதை சமாளிக்கவும் உதவுகிறது. மூப்பர் ஒருவர் கொடுத்த உதவிக்கு கிறிஸ்தவர் ஒருவர் நன்றி தெரிவித்து இவ்வாறு எழுதினார்: “வெளி ஊழியம் செய்தபோது, எனக்காக ஒரு மூப்பர் நேரம் செலவிட்டு என்னுடைய கஷ்டங்களை கேட்டார். யாரிடமாவது மனந்திறந்து பேசுவதற்குக் கேட்டு முந்தின நாள் இராத்திரியில்தான் யெகோவாவிடம் ஜெபித்திருந்தேன். அடுத்த நாள் இந்தச் சகோதரர் என்னிடம் கரிசனையுடன் பேசினார். பல ஆண்டுகளாக யெகோவா எவ்வாறு எனக்கு உதவி செய்து வந்திருக்கிறார் என்பதை உணர அவர் எனக்கு உதவினார். இந்த மூப்பரை யெகோவா என்னிடம் அனுப்பியதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.” ஜீவனுக்கான பாதையில் நாம் சகித்து நிலைத்திருப்பதற்கு உதவ இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா அளித்த ‘மனிதரில் வரங்களே’ தாங்கள் என்பதை இத்தகைய எல்லா வழிகளிலும் கிறிஸ்தவ மூப்பர்கள் காண்பிக்கிறார்கள்.—எபேசியர் 4:8, NW.
21, 22. (அ) சபையிலுள்ளவர்கள் பிலிப்பியர் 2:4-லுள்ள அறிவுரையைப் பின்பற்றும்போது என்ன விளைவடைகிறது? (ஆ) சின்னச் சின்ன தயவான செயல்களும்கூட ஏன் முக்கியமானவை?
21 “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்று ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்தக் கட்டளையை மூப்பர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவரும் பின்பற்ற விரும்புகிறார். (பிலிப்பியர் 2:4) கிறிஸ்தவ சபையிலுள்ளவர்கள் இந்த அறிவுரையைப் பின்பற்றும்போது, அருமையான விதத்தில் தயவான செயல்கள் விளைவடைகின்றன. உதாரணமாக, ஒரு குடும்பத்தினருக்கு இடிமேல் இடியாக திடீரென பல சோதனைகள். தகப்பனார் தன்னுடைய சிறிய மகளை கடைக்குக் கூட்டிக்கொண்டு போயிருந்தார். வரும் வழியில் அவர்கள் வாகன விபத்திற்குள்ளானார்கள். மகள் இறந்துவிட்டாள், தகப்பனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய சமயத்தில் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் அவர் இருந்தார். தனியாக அவரை கவனிக்க முடியாதளவுக்கு அவருடைய மனைவி உணர்ச்சி ரீதியில் அதிக மனவேதனைக்குள்ளானார். துயரத்தில் ஆழ்ந்திருந்த இவர்களை சபையிலுள்ள ஒரு தம்பதியினர் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து பல வாரங்களுக்கு கவனித்துக் கொண்டார்கள்.
22 ஆனால் எல்லா தயவான செயல்களும் இதுபோன்ற துயரத்தையும் தியாகத்தையும் உட்படுத்தும் ஒன்றாக இருக்காது. நமக்கு கிடைக்கும் உதவி சிலசமயங்களில் மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் அந்தத் தயவான செயல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை நாம் போற்றுகிறோம் அல்லவா? ஒரு சகோதரரின் அல்லது சகோதரியின் அன்பான வார்த்தையோ செயலோதான் அந்தச் சமயத்தில் உங்களுக்குத் தேவையான உதவியாக இருந்ததென நீங்கள் உணர்ந்த சந்தர்ப்பங்கள் உண்டா? இப்படிப்பட்ட வழிகளில் யெகோவா பெரும்பாலும் நம்மை கவனித்துக்கொள்கிறார்.—நீதிமொழிகள் 17:17; 18:24.
23. ஒருவருக்கொருவர் உதவ நாம் முயற்சி செய்யும்போது அதை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
23 மற்றவர்களுக்கு உதவ உங்களை ஒரு கருவியாக யெகோவா பயன்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்களா? இந்த பாக்கியம் உங்களுக்குத் திறந்திருக்கிறது. சொல்லப்போனால், உங்களுடைய பங்கில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா உயர்வாக மதிக்கிறார். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என அவருடைய வார்த்தை கூறுகிறது. (நீதிமொழிகள் 19:17) நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு உதவும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது. (அப்போஸ்தலர் 20:35) இத்தகைய உதவியை அளிப்பதால் அல்லது பெறுவதால் வரும் சந்தோஷம், வேண்டுமென்றே தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்கிறவர்களுக்குக் கிடைப்பதில்லை. (நீதிமொழிகள் 18:1) ஆகவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் வருவோமாக.—எபிரெயர் 10:24, 25.
24. யெகோவா நடப்பித்த அற்புதமான கடந்தகால செயல்களை நாம் காணாததால் ஏன் எதையோ இழந்தவர்களாக உணர வேண்டிய அவசியமில்லை?
24 யெகோவா நமக்கு உதவும் வழிகளைச் சிந்தித்துப் பார்த்தது ஆனந்தம் அளிக்கிறது அல்லவா? கடந்த காலத்தைப் போல் இப்போது யெகோவா தமது நோக்கங்களை நிறைவேற்ற மகத்தான அற்புதங்களை நடப்பிப்பதில்லை என்றாலும், நாம் எதையோ இழந்ததைப் போல் உணர வேண்டிய அவசியமில்லை. நாம் உண்மையுடன் நிலைத்திருப்பதற்குத் தேவையான எல்லா உதவியையும் யெகோவா நமக்குத் தருகிறார் என்பதே முக்கியமான காரியம். நாம் எல்லாரும் விசுவாசத்துடன் சகித்திருந்தால், யெகோவா நடப்பிக்கப் போகும் சரித்திரம் காணாத மிக அற்புதமான செயல்களை, மகத்தான செயல்களைப் பார்க்க உயிரோடிருப்போம்! யெகோவாவின் அன்பான உதவியை ஏற்றுக் கொள்வதற்கும் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கும் உறுதியுடன் இருப்போமாக. அப்பொழுது, “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்ற 2005-ம் ஆண்டின் வருடாந்தர வசனத்தின் வார்த்தைகளை நாம் எதிரொலிப்போம்.—சங்கீதம் 121:2, NW.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இன்று நமக்குத் தேவைப்படும் உதவியை யெகோவா எவ்வாறு தருகிறார்—
• தேவதூதர்களின் மூலம்?
• பரிசுத்த ஆவியின் மூலம்?
• ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தையின் மூலம்?
• சக விசுவாசிகளின் மூலம்?
[பக்கம் 18-ன் படம்]
பிரசங்க வேலையைத் தேவதூதர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிவது உற்சாகமூட்டுகிறது
[பக்கம் 21-ன் படம்]
நமக்குத் தேவைப்படும் ஆறுதலை அளிக்க நம் சக விசுவாசிகளில் ஒருவரை யெகோவா பயன்படுத்தக்கூடும்