உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 3/15 பக். 3-4
  • இயேசுவின் உலகளாவிய செல்வாக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவின் உலகளாவிய செல்வாக்கு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இதே தகவல்
  • இயேசு கிறிஸ்து யார்?
    இயேசு கிறிஸ்து யார்?
  • எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கிறிஸ்தவம் தோல்வி அடைந்துவிட்டதா?
    விழித்தெழு!—2007
  • நிஜ இயேசு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 3/15 பக். 3-4

இயேசுவின் உலகளாவிய செல்வாக்கு

‘சுவிசேஷங்களில் பதிவு செய்துள்ளவற்றை வைத்துப் பார்த்தால், இயேசு தனி நபர்களிடமும் பெரிய கூட்டத்தினரிடமும் சொல்லிய எல்லா விஷயங்களையும், இரண்டே மணிநேரத்தில் சொல்லி முடித்திருக்க முடியும். ஆனால் அவர் சொன்ன அந்த கொஞ்சநஞ்ச விஷயங்கள்கூட அந்தளவு அதிகமாக உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, மனதைத் தொட்டு, இருதயத்தை ஆழமாக ஊடுருவிச் சென்றன. அதனால், அவரைப் போல் வேறு யாரும் உலகத்தில் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அடித்துக் கூற முடியும்’ என்று எட்கர் குட்ஸ்பீட் என்ற பைபிள் மொழிபெயர்ப்பாளர் எழுதினார்.

பொ.ச. 33-ம் வருடம் இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தை முடித்தபோது, ஆண்களும் பெண்களுமாக குறைந்தது 120 சீஷர்கள் அவருக்கு இருந்தார்கள். (அப்போஸ்தலர் 1:15) இன்று இருநூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தங்களை கிறிஸ்தவர்களென சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் லட்சக்கணக்கானோர் அவரை ஒரு தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே அவருடைய போதனைகள் மனிதர் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்பதில் துளியும் சந்தேகமில்லை.

உலகளவில் இயேசுவுக்குச் செல்வாக்கு இருப்பதை பிற மதத் தலைவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ஹைமன் எனலோ என்ற யூத மத ரபீ இவ்வாறாக எழுதினார்: “மத சரித்திரத்தைப் பொறுத்தவரை, இயேசு மிகப் பிரபலமானவர், மிக அதிகமாக ஆராயப்பட்டிருப்பவர், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர்.” மேலும் அவர் இவ்வாறு கூறினார்: “இயேசு மனிதரில் ஏற்படுத்திய தாக்கத்தை யாரால்தான் அளவிட்டுச் சொல்ல முடியும்? அவர் காட்டிய அன்பு, அவர் அளித்த ஆறுதல், அவர் செய்த நற்செயல்கள், அவர் ஊக்குவித்த நம்பிக்கை, சந்தோஷம் என இவை அனைத்தும் மனித சரித்திரத்தில் ஈடிணையற்றவை. இதுவரை வாழ்ந்த பிரபலமான, நல்மனம் படைத்த அனைவரையும் எடுத்துக்கொண்டால்கூட, இயேசுவைப் போன்று உலகளாவிய விதத்தில் அபிமானத்தையும் செல்வாக்கையும் பெற்றவர் ஒருவரும் இல்லை. அவர் சரித்திரத்திலேயே மிகவும் மனங்கவரத்தக்க நபராக ஆகியிருக்கிறார்.” இந்துவான மோகன்தாஸ் கே. காந்தி இவ்வாறு சொன்னார்: “மனிதத் தொண்டாற்றியவர்களில் இயேசுவுக்கு நிகர் ஒருவருமில்லை என நினைக்கிறேன். சொல்லப்போனால் கிறிஸ்தவத்தில் எந்தக் குறையும் இல்லைதான். குறையெல்லாம் கிறிஸ்தவர்களாகிய உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுடைய போதனைகளுக்கு ஏற்ப வாழ நீங்கள் முயற்சி எடுப்பதுகூட இல்லை.”

கிறிஸ்தவமண்டலத்தார் இயேசுவின் போதனைகளின்படி வாழ்வதில்லை என்பதற்கு நீண்ட சரித்திரமே இருக்கிறது. கிறிஸ்தவ சரித்திராசிரியரான சிசல் ஜான் காடூ இவ்வாறு குறிப்பிட்டார்: “சர்ச்சுகளில் படிப்படியாக அதே சமயத்தில் நிலையாக ஒழுக்க சீர்குலைவு நிகழ்வதை கி.பி. 140-⁠ம் வருடம் . . . முதற்கொண்டே கிறிஸ்தவ தலைவர்கள் கவனித்து வந்திருக்கிறார்கள்.” அவர் மேலும் சொன்னதாவது: “ஆரம்பத்தில் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்ட ஒழுக்கநெறி தளர்ந்து கொண்டே வந்தது, இறுதியில் உலகத்துடன் ஒத்துப்போவதில்தான் முடிந்தது.”

நான்காம் நூற்றாண்டில் ரோம பேரரசரான கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மாறியபோது, இந்த ஒழுக்க சீர்குலைவு உச்சத்தை எட்டியது. “கான்ஸ்டன்டைனுடன் கூட்டு சேர்ந்தபோது சர்ச் எல்லா விஷயத்திலும் ஒத்திணங்கிப் போனதை சரித்திராசிரியர்கள் கவனிக்காமல் இல்லை, சில சமயங்களில் கண்டனமும் செய்திருக்கிறார்கள்” என்று காடூ எழுதினார். அதற்குப் பின்னான நூற்றாண்டுகளில், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் கிறிஸ்துவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் வெட்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

ஆகவே கவனிக்க வேண்டிய கேள்விகள் என்னவென்றால்: இயேசு உண்மையில் எதைப் போதித்தார்? அவருடைய போதனைகள் நம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்?

[பக்கம் 3-ன் படம்]

“மனிதத் தொண்டாற்றியவர்களில் இயேசுவுக்கு நிகர் ஒருவருமில்லை என நினைக்கிறேன்.”​—⁠மோகன்தாஸ் கே. காந்தி

[பக்கம் 3-ன் படம்]

“வேறு யாரும் உலகத்தில் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.”​—⁠எட்கர் குட்ஸ்பீட்

[படத்திற்கான நன்றி]

Culver Pictures

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்