உயிர்த்தெழுதல் ஓர் அற்புத எதிர்பார்ப்பு
உயிர்த்தெழுதல் நம்பிக்கை பரவலாக இருக்கிறது. இஸ்லாமின் புனித நூலான குர்ஆனில் ஓர் அதிகாரம் முழுவதும் உயிர்த்தெழுதலைப் பற்றி பேசுகிறது. சூறா 75 இவ்வாறு சொல்கிறது: “நான் உயிர்த்தெழுதல் நாளின் மீது சத்தியம் செய்கிறேன் . . . அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதுகிறானா? . . . ‘அந்த உயிர்த்தெழுதல் நாள் எப்போது வரும்?’ என்று அவன் கேட்கிறான். இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க அவருக்கு ஆற்றல் இல்லையா?”—சூறா 75:1-6, 40.
தீமை இறுதியில் வெல்லப்படுதல், பொதுவான உயிர்த்தெழுதல், கடைசி நியாயத்தீர்ப்பு, நீதிமான்களுக்கு மறுபடியும் சுத்தமான பூமி போன்ற நம்பிக்கைகளைப் பற்றி சொராஸ்ட்ரிய மதம் போதிப்பதாக த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.
“மரித்தோரின் உடல்கள் உயிர்பெற்று, அவர்கள் மீண்டும் பூமியில் வாழ்வார்கள் என்று நம்புவதே” உயிர்த்தெழுதல் நம்பிக்கை என என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா விளக்கம் அளிக்கிறது. மனிதனுக்குள் அழியாத ஆத்துமா ஒன்றுண்டு என்ற யூத மத நம்பிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அப்புத்தகம் சொல்கிறது. “உயிர்த்தெழுதல் நம்பிக்கையும் ஆத்துமா சாவதில்லை என்ற நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று அடிப்படையில் முரண்படுபவை” என அது ஒத்துக்கொள்கிறது.
மனிதன் பலமுறை மறுபிறவி எடுக்கிறான் என இந்து மதம் கற்பிக்கிறது. இது உண்மையாக இருந்தால், மரணத்திற்கு பின்பும் வாழ்கிற ஓர் ஆத்துமா மனிதனுக்கு இருக்க வேண்டும். இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை இவ்வாறு குறிப்பிடுகிறது: “முழு உடலையும் நிரப்பும் பொருள் அழிவில்லாதது. அழிவில்லா ஆத்மாவை ஒருவராலும் அழிக்க முடியாது.”
புத்த மதம் இவ்விஷயத்தில் இந்து மதத்திலிருந்து மாறுபடுகிறது. ஏனெனில் அழியாத ஆத்துமா ஒன்று இருப்பதை அது மறுக்கிறது. என்றாலும், தூர கிழக்கைச் சேர்ந்த புத்த மதத்தினர் பலர் கூடுவிட்டு கூடுபாயும் அழியாத ஆத்துமா இருப்பதாக நம்புகின்றனர்.a
உயிர்த்தெழுதல் போதனை பற்றிய குழப்பம்
கிறிஸ்தவமண்டலத்தில் நடத்தப்படும் சவ அடக்க ஆராதனைகளில் மரணத்திற்கு பின் ஆத்துமா உயிர்வாழ்வதைப் பற்றியும், உயிர்த்தெழுதல் பற்றியும் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக, ஆங்கிலிக்கன் பாதிரிமார் வழக்கமாக பின்வரும் வார்த்தைகளை சொல்கிறார்கள்: “கடவுள் தமது பெரிதான இரக்கத்தால், நம்மை விட்டுப் பிரிந்த நம்முடைய அருமை சகோதரனின் ஆத்துமாவை எடுத்துக்கொள்ள சித்தமாயிருப்பதால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நித்திய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும் உறுதியான, நிச்சயமான நம்பிக்கையோடு நாம் அவருடைய உடலை இந்தப் பூமிக்கு கையளிக்கிறோம். மண்ணிலிருந்து மண்ணுக்கு, சாம்பலில் இருந்து சாம்பலுக்கு; தூசியிலிருந்து தூசிக்கு கையளிக்கிறோம்.”—பொது ஜெபங்களுக்கான புத்தகம்.
இந்தக் குறிப்பு, பைபிள் உயிர்த்தெழுதலைப் பற்றி போதிக்கிறதா அல்லது அழியாத ஆத்துமாவைப் பற்றி போதிக்கிறதா என புரியாமல் குழம்பும்படி செய்யும். என்றாலும், பிரெஞ்சு புராட்டஸ்டன்ட் பேராசிரியர் ஆஸ்கார் குல்மேனின் குறிப்பை கவனியுங்கள். அழியாத ஆத்துமாவா அல்லது மரித்தோரின் உயிர்த்தெழுதலா? என்ற தன் பிரெஞ்சு நூலில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: “மரித்தோரின் உயிர்த்தெழுதல் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கும், அழியாத ஆத்துமா என்ற கிரேக்க நம்பிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. . . . கிறிஸ்தவம் இவ்விரண்டு நம்பிக்கைகளையும் பிற்பாடு ஒன்றுசேர்த்தபோதிலும், இன்று ஒரு சாதாரண கிறிஸ்தவர் அவற்றை முழுமையாகப் புரியாமல் குழம்புகிறபோதிலும், நானும் பெரும்பாலான அறிஞர்களும் உண்மையென கருதுபவற்றை மறைக்க எந்தக் காரணமும் இல்லை. . . . புதிய ஏற்பாட்டின் உயிர்நாடியும் கருத்தும் உயிர்த்தெழுதலில் வைக்கும் விசுவாசத்தின் பேரில்தான் முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறது. . . . முழுவதுமாக இறந்துபோன ஒரு நபர் கடவுளுடைய புதிய படைப்பாக மறுபடியும் உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்.”
மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி பொதுவாகவே மக்கள் குழம்பிப் போயிருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, பைபிளுக்குக் கவனம் செலுத்த வேண்டும்; மனிதனைப் படைத்தவரான யெகோவா தேவன் வெளிப்படுத்தியுள்ள சத்தியங்கள் அதில் உள்ளன. உயிர்த்தெழுதலைப் பற்றிய பல பதிவுகள் பைபிளில் உள்ளன. அவற்றில் நான்கு பதிவுகளை நாம் இப்போது ஆராய்ந்து பார்த்து, அவை உயிர்த்தெழுதலைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதைக் கவனிக்கலாம்.
“ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்”
கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய கடிதத்தில், விசுவாசமுள்ள பெண்கள் “சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்” என்று குறிப்பிட்டார். (எபிரெயர் 11:35) அந்தப் பெண்களில் ஒருவர் மத்தியதரைக் கடலோரத்தில் சீதோனுக்கு அருகில் பெனிக்கேய நகரமாகிய சாறிபாத்தில் வாழ்ந்த விதவை. கடவுளுடைய தீர்க்கதரிசியான எலியாவை அவள் வரவேற்று கொடிய பஞ்சத்தின்போதும் அவருக்கு உணவளித்து உபசரித்தாள். வருத்தகரமாக, அவளுடைய மகன் வியாதிப்பட்டு மரித்துப் போனான். உடனடியாக, எலியா தான் தங்கியிருந்த மேலறைக்கு அவனைத் தூக்கிச் சென்று, அவனுக்கு உயிரளிக்கும்படி யெகோவாவிடம் மன்றாடினார். ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்தப் பையன் “பிழைத்தான்.” எலியா அந்தப் பையனின் தாயிடம் திரும்பி வந்து, “பார், உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்” என்றார். அவள் எவ்வாறு பிரதிபலித்தாள்? “நீர் தேவனுடைய மனுஷன் என்றும் உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும் இதினால் இப்போது அறிந்திருக்கிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.—1 இராஜாக்கள் 17:22-24.
சாறிபாத்திற்குத் தெற்கே கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரத்தில் தயாள குணமுள்ள ஒரு தம்பதியர் வாழ்ந்து வந்தனர்; எலியாவுக்குப் பிறகு தீர்க்கதரிசியாக சேவை செய்த எலிசாவை அவர்கள் கவனித்துக் கொண்டனர். அந்தப் பெண் அவளுடைய சொந்த ஊரான சூனேமில் முக்கியமானவளாக இருந்தாள். அந்தத் தம்பதியர் தங்கள் வீட்டு மேலறையில் எலிசாவைத் தங்க அனுமதித்தனர். பிள்ளைகள் இல்லையே என்ற கவலை அவர்களுக்கு இருந்தது, அவளுக்கு ஒரு மகன் பிறந்தபோது அந்தக் கவலை ஆனந்தக் களிப்பாக மாறியது. அந்தப் பையன் வளர்ந்தபோது, அறுப்பு அறுக்கிறவர்களோடு வயலில் இருக்கும் தன் தகப்பனிடம் அடிக்கடி செல்வான். திடீரென ஒருநாள் விபரீதம் நிகழ்ந்தது. அந்தப் பையன் தனக்குத் தலை வலிப்பதாகக் கதறினான். ஒரு வேலைக்காரன் அவனை உடனடியாக வீட்டிற்கு கூட்டிக்கொண்டுச் சென்றான். அவனுடைய தாய் அவனைத் தன் மடியில் கிடத்தினாள். தாயின் மடியில் இருந்தபடியே அந்தப் பையனின் உயிர் பிரிந்தது. கலங்கிப்போன அவனுடைய தாய் எலிசாவை உதவிக்கு அழைக்கத் தீர்மானித்தாள். எலிசா தங்கியிருந்த கர்மேல் மலைக்குச் செல்வதற்காக ஒரு வேலைக்காரனோடு வடமேற்கை நோக்கிப் பயணித்தாள்.
அவள் வந்த விஷயத்தை அறிந்துகொண்டதும் தீர்க்கதரிசி தனது வேலைக்காரன் கேயாசியை முன்னதாக அனுப்பினார். அந்தப் பையன் உண்மையிலேயே இறந்திருப்பதை அவன் கண்டான். அவனைத் தொடர்ந்து எலிசாவும் அந்தப் பெண்ணும் சென்றனர். அவர்கள் கடைசியில் சூனேமுக்கு வந்து சேர்ந்தபோது என்ன நடந்தது? 2 இராஜாக்கள் 4:32-37-ல் உள்ள பதிவு இவ்வாறு விவரிக்கிறது: “எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக் கிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, கிட்டே போய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின் மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப்படுத்துக் கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப்போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான். அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டு வா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான். அப்பொழுது அவள் உள்ளே போய் அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.”
இந்தச் சம்பவம் கடவுளுடைய வல்லமையால் நடந்ததுதான் என்பதை சாறிபாத் விதவையைப் போல, சூனேமிய பெண்ணும் அறிந்திருந்தாள். கடவுள் தங்களுடைய பாசத்திற்குரிய மகனை உயிரோடு எழுப்பியபோது இவ்விரண்டு பெண்களும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
இயேசுவின் ஊழியத்தின்போது உயிர்த்தெழுதல்கள்
சுமார் 900 ஆண்டுகளுக்குப் பிறகு, சூனேமுக்கு வடக்கே சிறிது தொலைவில், நாயீன் என்ற கிராமத்திற்கு வெளியே ஓர் உயிர்த்தெழுதல் நடந்தது. இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் கப்பர்நகூமிலிருந்து பயணித்து நாயீன் ஊர் வாசலுக்கு அருகே வந்தபோது, ஒரு சவ அடக்க ஊர்வலத்தைக் கண்டார்கள். ஒரே மகனை இழந்த ஒரு விதவையை இயேசு கண்டார். அழாமல் இருக்கும்படி அவளை கேட்டுக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது என்பதை மருத்துவரான லூக்கா விவரிக்கிறார்: “[இயேசு] கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.” (லூக்கா 7:14, 15) இந்த அற்புதத்தைக் கண்ணாரக் கண்டவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். இந்த உயிர்த்தெழுதலைப் பற்றிய செய்தி தெற்கே யூதேயாவிலும் சுற்றியிருந்த பட்டணங்களிலும் பரவியது. முழுக்காட்டுபவரான யோவானின் சீஷர்கள்கூட அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, அதை யோவானிடம் அறிவித்தது ஆர்வத்திற்குரிய விஷயம். ஆகவே, இயேசுவைக் கண்டு, எதிர்பார்க்கப்பட்ட மேசியா அவர்தானா என்று விசாரிக்கும்படி யோவான் தனது சீஷர்களை அனுப்பினார். அவர்களிடம் இயேசு, “நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது” என்றார்.—லூக்கா 7:22.
இயேசு தம் நெருங்கிய நண்பரான லாசருவை உயிர்த்தெழுப்பியதுதான் அவருடைய உயிர்த்தெழுதல் அற்புதங்களிலேயே மிகப் பிரபலமானதாகும். லாசருவின் விஷயத்தில், அவர் இறந்த உடனேயே அவருடைய வீட்டிற்கு இயேசு செல்ல முடியவில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகுதான் இயேசு பெத்தானியாவைச் சென்றடைந்தார். கல்லறையின் வாயிலில் மூடி வைக்கப்பட்டிருந்த கல்லை எடுத்துப் போடும்படி இயேசு சொன்னபோது, மார்த்தாள் இவ்வாறு கூறினாள்: “ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே.” (யோவான் 11:39) லாசருவின் உடல் அழுகிப்போனாலும் அவரை உயிர்த்தெழுப்புவதற்கு அது தடையாக இருக்கவில்லை. இயேசு கட்டளையிட்டவுடனே, ‘மரித்தவர் வெளியே வந்தார். அவர் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. அவர் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது.’ இயேசுவின் எதிரிகள் அதன் பிறகு செய்த காரியங்கள் லாசரு உண்மையிலேயே உயிரோடு எழுப்பப்பட்டார் என்பதை நிரூபித்தன.—யோவான் 11:43, 44; 12:1, 9-11.
இந்த நான்கு உயிர்த்தெழுதல் பதிவுகளிலிருந்து நாம் எதைப் புரிந்து கொள்கிறோம்? உயிர்த்தெழுப்பப்பட்ட ஒவ்வொருவருமே அதே நபராக உயிருக்கு வந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய நெருங்கிய உறவினர்களாலும்கூட அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட எவருமே தாங்கள் இறந்துபோன அந்தக் குறுகிய காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசவில்லை. வேறொரு உலகிற்குச் சென்றதாக எவரும் சொல்லவில்லை. அவர்கள் அனைவரும் நல் ஆரோக்கியத்துடன் திரும்பி வந்ததாக தோன்றியது. இயேசு தாமே குறிப்பிட்டபடி, அவர்கள் கொஞ்ச நேரம் உறக்கத்திலிருந்து எழுந்து வந்ததைப் போலவே உணர்ந்தார்கள். (யோவான் 11:11) என்றபோதிலும், சில காலத்திற்குப் பிறகு, அவர்கள் மறுபடியும் மரித்தார்கள்.
அன்பானவர்களோடு ஒன்றுசேர்தல் —ஓர் அற்புத எதிர்பார்ப்பு
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஓயனின் பரிதாபமான சாவுக்குச் சில காலத்திற்குப் பிறகு, தெரிந்தவர் ஒருவர் வீட்டிற்கு அவனுடைய அப்பா சென்றிருந்தார். அங்கே இருந்த ஒரு மேஜையில், யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுப் பேச்சைப் பற்றிய நோட்டீஸ் ஒன்றைக் கண்டார். “மரித்தோர் எங்கே இருக்கிறார்கள்” என்ற தலைப்பைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆர்வம். அவர் மனதைக் குடைந்து கொண்டிருந்த கேள்விதான் அது. அவர் அந்தப் பொதுப் பேச்சைக் கேட்கச் சென்றார், பைபிள் தரும் உண்மையான ஆறுதலைக் கண்டடைந்தார். மரித்தோர் கஷ்டப்பட்டுக் கொண்டில்லை என்பதை அவர் கற்றுக்கொண்டார். குழந்தை ஓயனும் மரித்தவர்கள் எல்லாரும், நரகத்தில் வாதிக்கப்படுவதற்குப் பதிலாக, அல்லது பரலோகத்தில் ஒரு ஏஞ்சலாக இருப்பதற்குக் கடவுளால் எடுத்துக் கொள்ளப்படுவதற்குப் பதிலாக, உயிர்த்தெழுப்பப்படும் வரையில் கல்லறையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.—பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4.
உங்கள் குடும்பத்தை விபரீதம் தாக்கியிருக்கிறதா? இறந்துபோன உங்கள் அன்பானவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும், அவர்களை மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறதா என்றும் ஓயனின் அப்பாவைப் போல நீங்களும் யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், உயிர்த்தெழுதலைப் பற்றி கூடுதலாக பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைக் கவனிக்கும்படி உங்களை அழைக்கிறோம். ‘உயிர்த்தெழுதல் எப்போது நடக்கும்? அதிலிருந்து குறிப்பாக யார் பயனடைகிறார்கள்?’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அவற்றையும் பிற கேள்விகளையும் பற்றிய கலந்தாலோசிப்பிற்கு, பின்வரும் கட்டுரைகளைத் தயவுசெய்து வாசியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட கடவுளைத் தேடி புத்தகத்தில் பக்கங்கள் 150-4-ஐக் காண்க.
[பக்கம் 5-ன் படம்]
சூனேமியாளின் மகனை உயிர்த்தெழுப்புவதற்கு எலிசாவை யெகோவா பயன்படுத்தினார்
[பக்கம் 5-ன் படம்]
சிறுவனுக்கு உயிரளிக்கும்படி யெகோவாவிடம் எலியா மன்றாடினார்
[பக்கம் 6-ன் படம்]
நாயீன் ஊர் விதவையின் மகனை இயேசு உயிர்த்தெழுப்பினார்
[பக்கம் 7-ன் படம்]
உயிர்த்தெழுதல், அன்பானவர்களை மீண்டும் ஒன்றுசேர்க்கும்