உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 6/15 பக். 3-4
  • வேலை பற்றிய இரண்டகநிலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேலை பற்றிய இரண்டகநிலை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடின உழைப்பு Vs. வேலைப் பித்து
  • வேலை ஆசீர்வாதமா சாபமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • வேலை பற்றி சமநிலையான நோக்கை வளர்ப்பது எப்படி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • வேலை செய்யுமிடத்தில் பெண்கள்—சோதனைகளும் சவால்களும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 6/15 பக். 3-4

வேலை பற்றிய இரண்டகநிலை

“வேலைகள்! செய்வதற்கு இன்னும் எவ்வளவோ சிறந்த வேலைகள் நமக்கு இருக்கின்றன என்பதை அறிவதே அளவிலா மகிழ்ச்சி.”​—⁠கேத்தரீன் மேன்ஸ்ஃபீல்டு, ஆசிரியர் (1888-1923).

வேலை பற்றிய இதே உயர்ந்த கண்ணோட்டம் உங்களுக்கும் இருக்கிறதா? வேலை பற்றிய உங்களுடைய கண்ணோட்டம் என்ன? வேலை என்பது​—⁠ஹாயாக இருக்கும் வாரயிறுதி நாட்களைத் தவிர​—⁠சதா செக்குமாடு போல் சுற்றிசுற்றி வரவேண்டிய ஒன்று என நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது கிட்டத்தட்ட வேலைக்கு அடிமையாகி, அதுவே கதியென்று ஆகிவிட்டீர்களா?

கண் விழித்திருக்கும் சமயத்தில் பெரும்பாலான நேரத்தை வேலைக்கே அநேகர் அர்ப்பணித்து விடுகிறார்கள். நாம் எங்கே வாழ்கிறோம், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை நம்முடைய வேலை தீர்மானிக்கலாம். இளமை முதல் முதுமை வரை, அநேகருடைய வாழ்க்கையில் முக்கியமாக வேலையே ஆதிக்கம் செலுத்துகிறது. நம்மில் சிலர் உழைப்பால் வருகிற பெரும் திருப்தியை அடைகிறோம். மற்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை அல்லது அந்தஸ்தை வைத்து வேலையின் மதிப்பை எடைபோடுகிறார்கள், வேறு சிலரோ வெறுமனே பொழுதைப் போக்குவதற்கான ஒன்றாக அல்லது வீணான ஒன்றாக கருதுகிறார்கள்.

வாழ்வதற்காக வேலை செய்கிறவர்களும் வேலை செய்வதற்காகவே வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்; வேலையில் அல்லது வேலையால் சாகிறவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, “போர்கள், போதைப்பொருள் மற்றும் மதுபானத்தை”விட வேலை அதிக வேதனையையும் மரணத்தையும் உண்டாக்குகிறது என்பதாக சமீபத்தில் வெளிவந்த ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இதன் சம்பந்தமாக த கார்டியன் என்ற லண்டன் செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்தது: “வேலை சம்பந்தப்பட்ட விபத்துகளால் அல்லது வியாதியால் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் சாகிறார்கள். . . . தூசி, இரசாயனங்கள், இரைச்சல் மற்றும் வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் புற்றுநோயும் இருதய நோய்களும் ஸ்ட்ரோக்குகளும் உண்டாகின்றன.” சிறார் அடிமைத்தனமும் கட்டாய அடிமைத்தனமும் தற்போதைய வேலை சூழ்நிலைகளைப் படம்பிடித்துக் காட்டும் இரண்டு கோர நிஜங்களாகும்.

அதோடு, “ஒரேயடியாக களைத்துப்போதல்” (supernova burnout) என மனநோய் மருத்துவர் ஸ்டீவன் பெர்க்ளஸ் அழைக்கும் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. உயர்ந்த அந்தஸ்தை எட்டிப்பிடித்துவிட்ட கடின உழைப்பாளி ஒருவர் கடைசியில் “சதா பயம், மனஅழுத்தம், மனத்தளர்ச்சி அல்லது மனவுளைச்சல் போன்றவற்றைத்தான் அனுபவிக்கிறார்; இந்த வேலையிலிருந்து அவர் தப்பவும் முடியாது, மனதிருப்தியை அடையவும் முடியாது என்ற எண்ணத்தாலே இவையெல்லாம் ஏற்படுகின்றன” என அவர் விவரிக்கிறார்.

கடின உழைப்பு Vs. வேலைப் பித்து

அதிக மணிநேரம் உழைப்பவர்கள் பலரைக் கொண்ட இந்த உலகில், கடின உழைப்பாளிகளையும் வேலைப் பித்தர்களையும் வேறுபடுத்திக் காண்பது பயனுள்ளது. வேலைப் பித்தர்கள் பலர், ஆபத்துகளும் அசம்பாவிதங்களும் நிகழக்கூடிய இவ்வுலகில் தாங்கள் வேலை செய்யுமிடத்தை ஒரு புகலிடமாகவே கருதுகிறார்கள்; கடின உழைப்பாளிகளோ வேலையை முக்கியமான ஒரு கடமையாக, சிலசமயங்களில் திருப்திதரும் ஒரு கடமையாக கருதுகிறார்கள். வேலைப் பித்தர்கள் தங்கள் வாழ்க்கையின் மற்றெல்லா அம்சங்களையும் வேலை நெருக்கிப்போட அனுமதித்துவிடுகிறார்கள்; கடின உழைப்பாளிகளோ கம்ப்யூட்டரை ‘ஆஃப்’ செய்வது எப்போது, தங்களுடைய கவனத்தை வேறுதிசையில் திருப்புவது எப்போது, தங்களுடைய திருமண நாளை கொண்டாடுவது எப்படி என்பதை அறிந்திருக்கிறார்கள். வேலைப் பித்தர்கள் மிதமிஞ்சி வேலை செய்வதில் திருப்தியடைந்து, அதுவே தங்களுக்கு ஒரு ‘கிக்’ தருவதாக உணருகிறார்கள்; கடின உழைப்பாளிகளோ அவ்வாறு உணருவதில்லை.

இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நவீன சமுதாயம் தெளிவற்றதாக ஆக்கிவிடுகிறது. ஏனென்றால் மிதமிஞ்சி வேலை செய்வதையே அது கவர்ச்சியாக ஆக்குகிறது. மோடம்கள், செல்போன்கள், பேஜர்கள் ஆகியவை இருப்பதால் வேலை செய்யுமிடத்திற்கும் வீட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடலாம். எந்தவொரு இடமும் வேலை செய்யுமிடமாக இருக்கையில், எந்தவொரு நேரமும் வேலை செய்யும் நேரமாக இருக்கையில், சிலர் மாய்ந்து மாய்ந்து வேலை செய்வார்கள்.

இத்தகைய ஆரோக்கியமற்ற மனப்பான்மை காரணமாக சிலர் என்ன செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்? அதிகமாய் வேலை செய்கிறவர்களும் அதிகமான வேலை பாரத்தால் நெருக்கப்படுகிறவர்களும் ஆன்மீகத்தை வேலை செய்யுமிடத்திற்குக் கொண்டுவந்து மதத்தையும் புரொஃபஷனல் வாழ்க்கையையும் ஒன்றுசேர்க்கும் போக்கை சமுகவியலாளர்கள் பகுத்துணர்ந்திருக்கிறார்கள். “ஆன்மீகத்தையும் வேலையையும் ஒன்று சேர்ப்பது ஒரு ‘ட்ரென்டாக’ ஆகியிருக்கிறது” என சான் பிரான்ஸிஸ்கோ எக்ஸாமினர் அறிக்கை செய்தது.

அமெரிக்காவில் உயர் தொழில்நுட்பத் துறையின் கேந்திரமாக விளங்கும் ‘சிலிக்கான் வேலி’யைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த அறிக்கை ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “குறைந்த வேலையாட்களே இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் வாகனம் நிறுத்துமிடங்கள் காலியாக இருப்பது அதிகரித்து வருகிறது. மாறாக, மாலைநேரத்தில் பைபிள் படிப்புகள் நடத்துமிடங்களில் வாகனம் நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிகின்றன.” இது எவ்வளவு முக்கியத்துவமுடையதாக இருந்தாலும் சரி, வேலை பற்றிய தங்களுடைய கண்ணோட்டத்தில் பைபிள் சிறந்த பங்கு வகிப்பதை உலகெங்கிலும் அநேகர் கண்டுபிடித்திருக்கிறார்கள்; இதனால் வேலையில் அதிக சமநிலையோடு இருந்து வாழ்க்கையை நடத்த முடிந்திருக்கிறது.

வேலை பற்றிய சமநிலையான கண்ணோட்டத்தைப் பெற பைபிள் எப்படி நமக்கு உதவ முடியும்? நவீன காலத்தில், வேலை செய்யுமிடத்தில் உண்டாகும் சவால்களை வெற்றிகரமாய் சமாளிக்க உதவும் வேதப்பூர்வ நியமங்கள் ஏதாவது நமக்கு இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை அடுத்துவரும் கட்டுரை ஆராயும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்