வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூர்வ இஸ்ரவேலின் அரசரான சாலொமோன் வயதான காலத்தில் கடவுளுக்கு உண்மையற்றவராக ஆனதால், அவருக்கு உயிர்த்தெழுதல் இல்லையென முடிவு செய்யலாமா?—1 இராஜாக்கள் 11:3-9.
விசுவாசமுள்ள ஆண்கள், பெண்கள் சிலருடைய பெயர்கள் பைபிளில் பட்டியலிடப்பட்டுள்ளன, அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. என்றாலும், பெயரிடப்பட்டுள்ள ஒவ்வொரு தனிநபரும் உயிர்த்தெழுப்பப்படுவார்களா மாட்டார்களா என அது திட்டவட்டமாகச் சொல்வதில்லை. (எபிரெயர் 11:1-40) ஆனால் சாலொமோனுடைய விஷயத்தில், மரிக்கும்போது அவருக்கு என்ன நடந்தது என்பதையும் உண்மையுள்ள சிலர் மரித்தபோது என்ன நடந்தது என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் கடவுள் கொடுக்கும் நியாயத்தீர்ப்பு என்னவாக இருக்கும் என நாம் தெரிந்துகொள்ளலாம்.
இறந்தவர்களுக்கு இரண்டு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைபிள் சொல்கிறது—ஒன்று தற்காலிக மரணம், மற்றொன்று நித்திய மரணம். உயிர்த்தெழுதலுக்குத் தகுதியற்றவர்களென நியாயந்தீர்க்கப்படும் ஆட்கள் “கெஹென்னா”வுக்குள் அல்லது ‘அக்கினிக் கடலுக்குள்’ தள்ளப்படுவார்கள். (மத்தேயு 5:22, NW; மாற்கு 9:47, 48, NW; வெளிப்படுத்துதல் 20:14) முதல் தம்பதியரான ஆதாம் ஏவாள், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்து, கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியபோது நோவாவின் காலத்தில் மரித்தவர்கள், சோதோம் கொமோரா குடிமக்கள் போன்றோர் இவர்களில் அடங்குவர்.a உயிர்த்தெழுப்பப்படப் போகிற மரித்தவர்கள் மனிதகுலத்தின் பொதுப் பிரேதக்குழியான ஷியோலுக்குள் அல்லது ஹேடீஸுக்குள் போவார்கள். அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசும்போது பைபிள் இவ்வாறு கூறுகிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:13.
எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விசுவாசமுள்ள ஆட்கள் உயிர்த்தெழுதலுக்காக ஷியோல் அல்லது ஹேடீஸில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆபிரகாம், மோசே, தாவீது போன்ற கடவுளுடைய ஊழியர்கள் இவர்களில் அடங்குவர். அவர்களுடைய மரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது கவனியுங்கள். ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம் பண்ணப்படுவாய்.” (ஆதியாகமம் 15:15) மோசேயிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப் போகிறாய்.” (உபாகமம் 31:16) சாலொமோனுடைய தகப்பன் தாவீதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.” (1 இராஜாக்கள் 2:10) எனவே, ஒருவர் ஷியோலுக்குள், அதாவது மனிதகுலத்தின் பொதுவான பிரேதக்குழிக்குள், போய்விட்டார் என்பதற்குரிய மற்றொரு வடிவமே ‘பிதாக்களோடே அடக்கம் பண்ணப்படுதல்’ என்ற சொற்றொடராகும்.
சாலொமோன் இறந்தபோது அவருக்கு என்ன நடந்தது? “சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்” என பைபிள் பதிலளிக்கிறது. (1 இராஜாக்கள் 11:42, 43) எனவே, சாலொமோன் ஷியோலுக்குள் அல்லது ஹேடீஸுக்குள் இருக்கிறார், அதிலிருந்து அவர் உயிர்த்தெழுப்பப்படுவார் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகத் தெரிகிறது.
‘அவர்கள் தங்களுடைய பிதாக்களோடே அடக்கம் பண்ணப்பட்டார்கள்’ என பைபிள் திட்டவட்டமாக சொல்கிறவர்களுக்கு உயிர்த்தெழுதல் சாத்தியமுண்டு என்பதை இந்த முடிவு காட்டுகிறது. சொல்லப்போனால், சாலொமோனுக்குப் பின்வந்த அரசர்களில் அநேகர் உண்மையற்றவர்களாக இருந்தபோதிலும், அவர்களைப் பற்றியும் பைபிள் இவ்வாறே சொல்கிறது. இது நம்ப முடியாத ஒன்றல்ல, ஏனென்றால் ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’ (அப்போஸ்தலர் 24:15) என்றாலும், “பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும்” எழுந்து வந்த பின்னரே யார் உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் உறுதியாகத் தெரிந்துகொள்வோம். (யோவான் 5:28, 29) எனவே, முற்காலத்தில் வாழ்ந்தவர்களில் யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், யார் உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள் என்பதைக் குறித்து அடித்துக் கூறுவதற்குப் பதிலாக, யெகோவா எடுக்கும் பரிபூரண தீர்மானத்தில் நம்பிக்கை வைத்து அவருக்குக் காத்திருப்போமாக.
[அடிக்குறிப்பு]