உண்மையாய் இருப்பதால் வரும் நன்மைகள்
சில நாடுகளில், பெர் என்று சொல்லப்படும் விதைகளின் சொரசொரப்பான உமியை சில வாண்டுகள், தங்களோடு விளையாடுகிற பிள்ளைகளின் ஸ்வெட்டர்களில் ஒட்ட வைத்து வம்பிழுப்பார்கள், அதில் அவர்களுக்குக் குஷியான குஷி. அந்த விதைகள் ஸ்வெட்டரில் நன்றாகப் பற்றிக்கொள்கின்றன, அந்தப் பிள்ளைகள் என்ன செய்தாலும்—நடந்தாலும், ஓடினாலும், உடம்பைக் குலுக்கினாலும், குதித்தாலும்—அவை உடும்புப் பிடியாய் பிடித்துக்கொள்கின்றன. அவற்றை நீக்குவதற்கான ஒரே வழி, ஒவ்வொன்றாகப் பிடுங்கிப் போடுவதாகும். பொடிசுகளுக்கு, அப்படியெல்லாம் வம்பிழுத்து குறும்பு செய்வது ஒரு பெரிய வேடிக்கை.
உண்மைதான், அந்த விதைகளின் உமி தங்கள் உடையில் ஒட்டிக்கொண்டிருப்பதை எல்லாருமே விரும்ப மாட்டார்கள், ஆனால் அவற்றின் உறுதியாய் பற்றிக்கொள்ளும் தன்மையைக் கண்டு எல்லாருமே அசந்துவிடுகிறார்கள். அத்தகைய ஒரு தன்மை உண்மையாய் நடப்பவர்களுக்கும்கூட இருக்கிறது. ஆம், உண்மையுள்ள ஒருவர் மற்றொருவரோடுள்ள உறவை நெடுநாளைக்குப் பற்றிக்கொள்கிறார். அந்த உறவில் உட்பட்டுள்ள கடமைகளையும் பொறுப்புகளையும்—மோசமான சூழ்நிலைகள் மத்தியில்கூட—உண்மையுடன் நிறைவேற்றுகிறார். “உண்மைத்தன்மை” என்ற வார்த்தை சத்தியம், பற்றுறுதி, ஈடுபாடு போன்ற நல்ல குணங்களை நம் மனதிற்குக் கொண்டு வருகிறது. மற்றவர்கள் உங்களிடம் உண்மையாய் நடந்துகொள்வதை நீங்கள் மதித்தாலும், மற்றவர்களிடம் உண்மையாய் நடந்துகொள்ள நீங்கள் திடத்தீர்மானமாய் இருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் யார் யாரிடம் உண்மையாய் நடந்துகொள்ள வேண்டும்?
திருமணத்தில் உண்மைத்தன்மை —ஓர் அடிப்படைத் தேவை
உண்மைத்தன்மை ரொம்பவே தேவைப்படுகிற ஓர் ‘இடம்’ மணவாழ்க்கையாகும், ஆனால் வருத்தகரமாக, அது அங்கு அடிக்கடி குறைவுபடுகிறது. தங்கள் திருமண உறுதிமொழிப்படி உண்மையாய் நடந்துகொள்கிற ஒரு கணவன் மனைவி, அதாவது ஒன்றாகச் சேர்ந்திருந்து, துணையின் நலனுக்காகப் பாடுபடுகிற கணவன் மனைவி, சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தேடிச்செல்கிற பயணத்தில் ஒரு முக்கிய படியை எடுத்து வைத்திருக்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனெனில் தாங்கள் மற்றவர்களிடம் உண்மையாய் நடந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பத்தோடும், மற்றவர்கள் தங்களிடம் உண்மையாய் நடந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பத்தோடுமே மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளின் திருமணம் நடந்தபோது, கடவுள் இவ்வாறு அறிவித்தார்: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான் [“தன் மனைவியைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்” NW]” இது மனைவிக்கும் பொருந்தியது; அவள் தன் கணவனைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாயும் ஒத்துழைப்பவர்களாயும் இருக்க வேண்டியிருந்தது.—ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:3-9.
உண்மைதான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த சம்பவம் அது. அப்படியானால், மணவாழ்க்கையில் உண்மைத்தன்மையோடு நடந்துகொள்வது பழங்கால பாணியா? பெரும்பாலோர் இல்லை என்றே பதிலளிப்பார்கள். திருமணத்தில் உண்மைத்தன்மையோடு நடந்துகொள்வது மிக முக்கியம் என 80 சதவீதத்தினர் கருதியதை ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். அதன் பிறகு, ஆண்களிடமும் பெண்களிடமும் உள்ள மிகவும் விரும்பத்தக்க குணங்களைக் கண்டுபிடிக்க இரண்டாவது முறையாக ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. பெண்களிடம் தங்களை மிகவும் கவர்ந்த ஐந்து குணங்களைப் பட்டியலிடுமாறு ஆண்கள் கோஷ்டி ஒன்றிடம் கேட்கப்பட்டது, அதேபோல் ஆண்களிடம் தங்களை மிகவும் கவர்ந்த ஐந்து குணங்களைப் பட்டியலிடுமாறு பெண்கள் கோஷ்டி ஒன்றிடம் கேட்கப்பட்டது. ஆண்கள் பெண்கள் இரு தரப்பினருமே உண்மைத்தன்மையைத்தான் மிக உயர்ந்த குணமாகக் கருதினார்கள்.
ஆம், உண்மையாய் நடந்துகொள்வது வெற்றிகரமான மணவாழ்க்கைக்குப் பலமான ஓர் அஸ்திவாரமாக இருக்கிறது. ஆனால், சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி, உண்மைத்தன்மை என்ற நல்ல குணம் அடிக்கடி புகழப்படுகிறதே தவிர, அது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. உதாரணத்திற்கு, பல நாடுகளில் விவாகரத்து விகிதம் உயர்ந்திருப்பது தம்பதிகள் உண்மையற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது. இந்தப் பாணியை மணமான தம்பதியர் எவ்வாறு தவிர்க்கலாம், ஒருவருக்கொருவர் எவ்வாறு கடைசிவரை உண்மையுள்ளவர்களாக இருக்கலாம்?
உண்மைத்தன்மை மணவாழ்க்கையின் ஆயுளைக் கூட்டுகிறது
மணமான தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் ஈடுபாட்டை ஒருவருக்கொருவர் உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும்போது உண்மைத்தன்மை காண்பிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, “என்னுடைய” என்று சொல்வதற்குப் பதிலாக “நம்முடைய” என்று சொல்வதுதான் பொதுவாக அவர்களுக்கு நல்லது; அதாவது, “நம்முடைய நண்பர்கள்,” “நம்முடைய குழந்தைகள்,” “நம்முடைய வீடு,” “நம்முடைய அனுபவங்கள்” என இதுபோல சொல்வதுதான் நல்லது. வீடு, வேலை, பிள்ளை வளர்ப்பு, பொழுதுபோக்கு, விடுமுறை, மத சம்பந்தப்பட்ட காரியங்கள் என எதைப் பற்றியாவது திட்டமிடுகையிலும், தீர்மானங்கள் எடுக்கையிலும், கணவன் மனைவி இருவருமே ஒருவர் மற்றொருவருடைய உணர்ச்சிகளையும் ஆலோசனைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 11:14; 15:22.
மணத்துணையில் ஒருவர் மற்றவரை தேவைப்படுபவராக, விரும்பப்படுபவராக உணர வைக்கும்போது உண்மைத்தன்மை காட்டப்படுகிறது. தன் மணத்துணை எதிர்பாலார் ஒருவரிடம் அளவுக்கதிகமான விதத்தில் கவனம் செலுத்துவதைப் பார்க்கும் ஒரு கணவனுக்கோ மனைவிக்கோ ஒருவித பாதுகாப்பற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. ஆண்கள் தங்களுடைய ‘இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திருக்கும்படியே’ பைபிள் அறிவுறுத்துகிறது. தன் மனைவி அல்லாத வேறொருத்தியின் கவனத்தைக் கவருவதற்கான ஆசை ஒருக்காலும் தன் மனதில் எழாதவாறு ஒரு கணவன் பார்த்துக்கொள்ள வேண்டும். வேறொரு பெண்ணுடன் படுக்கைக்குச் செல்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “ஸ்திரீயுடனே விபசாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்.” உண்மைத்தன்மையின் இதே உயர்ந்த தராதரம் ஒரு மனைவியிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.—நீதிமொழிகள் 5:18; 6:32.
திருமணத்தில் இப்படி உண்மைத்தன்மை காண்பிப்பதில் பிரயோஜனம் இருக்கிறதா? ஆம், நிச்சயமாக! திருமணத்தை அது ஸ்திரப்படுத்துகிறது, நீடிக்க வைக்கிறது, மணத்துணைகள் இருவருமே தனிநபர்களாக நன்மை அடையும்படியும் செய்கிறது. உதாரணத்திற்கு, ஒரு கணவன் தன் மனைவியின் நலனுக்காக உண்மையோடு உழைக்கும்போது, அவளுடைய மனதில் பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது, இதன் காரணமாக தன்னுடைய குணங்களை அவளால் மிகச் சிறந்த விதத்தில் வெளிக்காட்ட முடிகிறது. கணவனுடைய விஷயத்திலும் இதுவே உண்மை. தன் மனைவியிடம் உண்மையாய் நடந்துகொள்ள வேண்டுமென்ற தீர்மானம், தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நீதியான நியமங்களை உறுதியாகக் கடைப்பிடிக்க அவருக்கு உதவுகிறது.
ஒருவேளை கணவனும் மனைவியும் கஷ்டமான ஒரு சூழ்நிலையில் இருந்தால், உண்மைத்தன்மை இருவரையும் பாதுகாப்பாக உணர வைக்கும். மறுபட்சத்தில், உண்மைத்தன்மை இல்லாத திருமணத்தில் பிரச்சினைகள் எழும்போது, அது அடிக்கடி பிரிவில் முடியும் அல்லது விவாகரத்தில் முடியும். அத்தகைய ஒரு படியை எடுப்பது, பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் வேறு பிரச்சினைகளையே கிளப்பிவிடும். 1980-களின்போது, பிரபல ஃபேஷன் அறிவுரையாளர் ஒருவர் தன் மனைவி மக்களைவிட்டுப் பிரிந்துபோனார். அப்படிப் பிரிந்துபோன பிறகு, தனிக்கட்டையாக அவர் சந்தோஷத்தைக் கண்டாரா? இருபது வருடங்களுக்குப் பின் அவர் இவ்வாறு மனம் திறக்கிறார்: “தனிமையில் வாடினேன், அமைதியில்லாமல் தவித்தேன், தூக்கமில்லாமல் அல்லாடினேன், [என்] குழந்தைகளுக்கு ‘குட்நைட்’ சொல்ல ஏங்கினேன்.”
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உண்மைத்தன்மை
பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் நடந்துகொள்ளும்போது, அந்த நல்ல குணம் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ‘தொற்றிக்கொள்வதற்கான’ வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. உண்மைத்தன்மையும் அன்பும் உள்ள ஒரு குடும்பத்தில் வளர்க்கப்படுகிற பிள்ளைகள், பிற்காலத்தில் தங்கள் மணத்துணையிடமும் முதுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிற தங்கள் பெற்றோரிடமும் பொறுப்பாக நடந்துகொள்வார்கள், அது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.—1 தீமோத்தேயு 5:4, 8.
ஆனால், பிள்ளைகளுக்கு முன்னர் பெற்றோர்கள்தான் எப்போதும் சுகவீனமாகி விடுவார்கள் எனச் சொல்ல முடியாது. சிலசமயங்களில், பிள்ளைகளுக்கு உண்மையான கவனிப்பு தேவைப்படலாம். ஹெர்பர்ட் கெர்ட்ருட் தம்பதிக்கு அத்தகைய நிலைமையே ஏற்பட்டது; அவர்கள் இருவரும் 40 வருடங்களுக்கும் மேல் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்களுடைய மகன், டீட்மார், தன் வாழ்நாள் முழுக்க தசை நலிவு வியாதியால் அவதிப்பட்டான். நவம்பர் 2002-ல் இறந்துபோவதற்கு முன், ஏழு வருடங்கள் அவனுக்கு இராப்பகலாகக் கவனிப்பும் பராமரிப்பும் தேவைப்பட்டன. அவனுடைய எல்லாத் தேவைகளையும் அவனுடைய பெற்றோர் அன்பாகக் கவனித்துக்கொண்டார்கள். அவனுக்குத் தேவைப்பட்ட மருத்துவ இயந்திரம் ஒன்றை வீட்டில் வாங்கி வைத்து, அதற்கான மருத்துவப் பயிற்சியையும் பெற்றுக்கொண்டார்கள். ஆம், குடும்பத்தில் உண்மைத்தன்மை காட்டியதில் அவர்கள் அருமையான முன்மாதிரிகள்!
நட்புக்கு உண்மைத்தன்மை அவசியம்
“மணத்துணை இல்லாமல் ஒரு நபர் சந்தோஷமாக இருக்கலாம், ஆனால் ஒரு நண்பன் இல்லாமல் அந்த நபரால் சந்தோஷமாக இருக்க முடியாது” என்கிறார் பிர்கிட். ஒருவேளை இதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். நீங்கள் மணமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒரு நல்ல நண்பரின் உண்மைத்தன்மை உங்கள் இதயத்துக்கு இதமூட்டும், உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். ஒருவேளை நீங்கள் மணமானவர் என்றால், உங்களுடைய மிக நெருங்கிய நண்பர் உங்கள் மணத்துணையாகத்தான் இருக்க வேண்டும்.
நமக்குப் பரிச்சயமான ஒரு நபரை நம்முடைய நண்பர் என்று சொல்லிவிட முடியாது. பக்கத்து வீட்டுக்காரர்கள், சக வேலையாட்கள், அவ்வப்போது சந்திக்கிற நபர்கள் என நமக்குப் பரிச்சயமானவர்கள் நிறைய பேர் இருக்கலாம். ஆனால், உண்மையான நட்புக்கு நேரம், சக்தி, உணர்ச்சிப்பூர்வ ஈடுபாடு ஆகியவை தேவைப்படுகின்றன. ஒருவருடைய நண்பராக இருப்பது கௌரவத்தை அளிக்கிறது. அத்தகைய நட்பு பல நன்மைகளைக் கொடுக்கிறது, என்றாலும், அதில் பொறுப்புகளும் உட்பட்டிருக்கின்றன.
நம்முடைய நண்பரோடு நல்ல பேச்சுத்தொடர்பை வைத்திருப்பது மிகவும் அவசியம். சில சமயங்களில் ஏற்படும் ஏதோவொரு தேவை அத்தகைய பேச்சுத்தொடர்பைத் தூண்டுவிக்கிறது. “எனக்கோ என் தோழிக்கோ ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நாங்கள் இருவரும் வாரத்திற்கு ஓரிரு முறை ஃபோனில் பேசிக்கொள்வோம். என்னுடைய பிரச்சினைகளையெல்லாம் காதுகொடுத்துக் கேட்க ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமே மனதிற்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது” என விளக்குகிறார் பிர்கிட். நட்புக்கு தூரம் ஒரு முட்டுக்கட்டை அல்ல. கெர்டாவும் ஹெல்காவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார்கள், ஆனால் கடந்த 35 வருடங்களுக்கும் மேல் அவர்கள் நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். “நாங்கள் தவறாமல் கடிதம் எழுதிக்கொள்வோம்” என விளக்குகிறார் கிர்டா. “சோகமானாலும், சந்தோஷமானாலும் எங்கள் அனுபவங்களையும், மனதில் புதைந்துள்ள உணர்ச்சிகளையும் அதில் பரிமாறிக்கொள்வோம். ஹெல்காவிடமிருந்து கடிதம் வந்துவிட்டால் போதும், எனக்குத் தலைகால் புரியாது. எங்கள் இருவரின் யோசனையும் எப்போதும் ஒன்றுபோலவே இருக்கும்” என்கிறார் மேலுமாக.
நட்புக்கு உண்மைத்தன்மை அத்தியாவசியம். ஒரேவொரு உண்மையற்ற நடத்தை போதும், அது நீண்ட நாளைய உறவுகளைக்கூட அறுத்துப் போட்டுவிடும். நண்பர்கள் அந்தரங்கமான விஷயங்களில்கூட ஒருவருக்கொருவர் புத்திமதி அளித்துக்கொள்வது சகஜமே. அவர்கள் மனம்விட்டு பேசிக்கொள்வார்கள், எங்கே கேவலமாக நினைத்துவிடுவாரோ நம்பிக்கை துரோகம் செய்து விடுவாரோ என்ற பயமில்லாமல் பேசிக்கொள்வார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.
நம்முடைய சிந்தனைகள், உணர்ச்சிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது நம் நண்பர்கள் செல்வாக்கு செலுத்துவதால், நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப வாழ்பவர்களையே நம் நண்பர்களாக ஆக்கிக்கொள்வது முக்கியம். உதாரணமாக, உங்களுக்கு இருக்கும் அதே நம்பிக்கைகளையும், அதே ஒழுக்க நெறிகளையும், நல்லது கெட்டது பற்றிய அதே தராதரங்களையும் உடையவர்களே உங்கள் நண்பர்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் உங்கள் இலட்சியங்களை அடைய உங்களுக்கு உதவுவார்கள். அது ஒருபுறமிருக்கட்டும், உங்களுக்கு இருக்கும் அதே தராதரங்களும் ஒழுக்க நெறிகளும் இல்லாத ஒருவரிடம் நீங்கள் எதற்காக நெருங்கிப் பழக வேண்டும்? சரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தைக் காண்பிக்க பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”—நீதிமொழிகள் 13:20.
உண்மையாய் இருக்க கற்றுக்கொள்ளலாம்
பெர் விதைகளின் சொரசொரப்பான உமியை ஒருவருடைய துணியில் ஒட்ட வைக்க ஒரு பிள்ளை கற்றுக்கொள்ளும்போது, மீண்டும் மீண்டும் அதே விளையாட்டை விளையாட அவன் ஆசைப்படுவான். உண்மையாய் நடந்துகொள்ளும் ஒரு நபரைப் பற்றியும் அதே விதமாகச் சொல்லலாம். ஏன்? ஏனெனில், உண்மைத்தன்மையை அதிகமதிகமாகக் காண்பிக்க கற்றுக்கொள்ளும்போது, அது அவருக்கு அதிகமதிகமாக எளிதாகிவிடுகிறது. ஒரு நபர் சிறு வயதிலிருந்தே தன் குடும்பத்தாரிடம் உண்மையாய் நடந்துகொள்ள கற்றுக்கொண்டால், பிற்காலத்தில் உண்மைத்தன்மையுள்ள நட்புகளை வளர்த்துக்கொள்வது அவருக்கு எளிதாக இருக்கும். காலப்போக்கில், அத்தகைய பலமான, நீடித்த நட்புகள் தன் திருமண வாழ்க்கையில் உண்மைத்தன்மை காண்பிக்க அவருக்குக் கைகொடுக்கும். அதோடு, எல்லா நட்பையும்விட மிக முக்கியமான ஒரு நட்பில் உண்மைத்தன்மை காட்டவும் அவருக்கு உதவும்.
நம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் யெகோவா தேவன்மீது அன்புகூர வேண்டும் என்பதுதான் கட்டளைகளிலேயே மிகப்பெரிய கட்டளை என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:30) அப்படியானால், கடவுளுக்கு நம்முடைய உண்மைத்தன்மையை முழுமையாகக் காண்பிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம். யெகோவா தேவனிடம் உண்மையாய் இருப்பது அபரிமிதமான ஆசீர்வாதங்களை அள்ளித்தரும். அவர் ஒருபோதும் நம்மைத் தத்தளிக்க விடமாட்டார், நமக்கு ஏமாற்றமளிக்கவும் மாட்டார், ஏனெனில், “நான் உண்மையுள்ளவர்” என்று தம்மைப் பற்றி அவர் சொல்கிறார். (எரேமியா 3:12, NW) ஆம், கடவுளிடம் உண்மைத்தன்மை காண்பிப்பது என்றென்றுமே ஆசீர்வாதங்களை அள்ளித்தரும்.—1 யோவான் 2:17.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
ஒரு நல்ல நண்பரின் உண்மைத்தன்மை உங்கள் இதயத்துக்கு இதமூட்டும்
[பக்கம் 5-ன் படம்]
உண்மைத்தன்மையுள்ள குடும்ப அங்கத்தினர்கள் பரஸ்பர தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள்