“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
சுய தியாகம் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருகிறது
இந்த மூன்று உதாரணங்களையும் சற்று கவனியுங்கள். கேமருனில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்கிறார். மற்றவர்களைப் பலப்படுத்துவதற்காக, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலைகளிலும் சேறும் சகதியும் நிறைந்த ஆபத்தான பகுதிகளிலும் மணிக்கணக்காக பயணம் செய்கிறார். ஜிம்பாப்வேயில், ஒதுக்குப்புற பகுதியில் வாழும் மக்களுக்குப் போதிப்பதற்காக இரண்டு சகோதரர்கள் 15 கிலோமீட்டர் நடந்து செல்கிறார்கள். பெருக்கெடுத்தோடும் நதிகளைக் கடக்க வேண்டியிருப்பதால் தங்களுடைய உடைகளையும் காலணிகளையும் தலைமீது வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாகக் கடக்கிறார்கள். வேறோரு இடத்தில், ஒரு பெண் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து ஒரு நர்ஸை சந்திக்கச் செல்கிறார். ஏனெனில் பைபிளைப் படிக்க அந்த நர்ஸுக்கு அப்போதுதான் ஒரு மணிநேரம் ஒதுக்க முடிகிறது.
இந்த மூன்று உதாரணங்களிலும் என்ன ஒற்றுமை இருக்கிறது? இவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகள், பைபிள் சத்தியங்களை முழுநேரமாகப் போதிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள். முழுநேர ஊழியத்தில் ஒழுங்கான பயனியர்கள், விசேஷப் பயனியர்கள், மிஷனரிகள், பயணக் கண்காணிகள், உலகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பெத்தேல் வாலண்டியர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்களுடைய சுய தியாக மனப்பான்மைதான் இதில் தனிச்சிறப்புவாய்ந்த அம்சம்.a
சரியான உள்நோக்கம்
“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” என்று தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்ன அறிவுரையை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள். (2 தீமோத்தேயு 2:15) ஆனால், முழுநேர ஊழியம் செய்ய பல்லாயிரக்கணக்கான சாட்சிகளைத் தூண்டியிருப்பது எது?
யெகோவாவுக்கு முழுநேரம் சேவை செய்வதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்கும்போது, கடவுள் மீதும் சக மனிதர் மீதுமுள்ள அன்பும்தான் அதற்குக் காரணம் என்று பதில் அளிக்கிறார்கள். (மத்தேயு 22:37-39) இது மிகப் பொருத்தமான பதில். ஏனெனில் அன்பு என்ற உள்நோக்கம் இல்லையென்றால், எப்பேர்ப்பட்ட முயற்சியும் வீணாகத்தான் போகும்.—1 கொரிந்தியர் 13:1-3.
சுய தியாக சேவை
“ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை [“வாதனையின் கழுமரத்தை,” NW] எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” என்று இயேசு விடுத்த அழைப்பை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 16:24) ஒருவர் தன்னை வெறுப்பது என்பது யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் தன்னுடைய உரிமையாளர்கள் என்று மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு அவர்களுடைய வழிநடத்துதலின்படி நடப்பதை அர்த்தப்படுத்துகிறது. இப்படிச் செய்திருக்கும் அநேகர், சுய தியாக மனப்பான்மையோடு முழுநேர ஊழியத்தில் ஈடுபட தூண்டப்பட்டிருக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் அநேகர், யெகோவாவுக்கு இன்னும் அதிகமாய் ஊழியம் செய்ய மாபெரும் முயற்சிகளை எடுக்கிறார்கள். பிரேசிலில், சாவோ போலோ என்ற இடத்தில் முழுநேர பயனியராக ஊழியம் செய்யும் 56 வயதான ஷூல்யா என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்: “ஒரு சீன சகோதரர் எனக்கு ஃபோன் செய்து, சீன மொழியைக் கற்றுக்கொள்ள விருப்பமா என்று கேட்டார். இந்த வயதில் ஒரு புதிய மொழியை என்னால் கற்றுக்கொள்ள முடியுமா என்று முதலில் யோசித்தேன். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று என்னால் சீன மொழியில் பிரசங்கிக்க முடிகிறது.”
பெரு நாட்டில், யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “சமீப ஆண்டுகளில், நியமிக்கப்படாத பிராந்தியங்களுக்குக் குடிமாறிச் சென்று நூற்றுக்கணக்கான ஒழுங்கான பயனியர்கள் ஊழியம் செய்துவருகிறார்கள். இவ்வாறு, தைரியத்தையும் சுய தியாக மனப்பான்மையையும் அவர்கள் வெளிகாட்டுகிறார்கள். அத்தகைய தொலைதூர பிராந்தியங்களில் அடிப்படை வசதிகள்கூட கிடையாது, அதோடு வேலை வாய்ப்புகளும் மிகக் குறைவு. இந்தச் சகோதர சகோதரிகள் தங்களுடைய நியமிப்புகளில் நிலைத்திருக்க, தங்களால் முடிந்த எல்லாத் தியாகங்களையும் மனமுவந்து செய்கிறார்கள். மிக முக்கியமாக, ஊழியத்தில் அவர்களுடைய முயற்சிகளுக்குப் பல இடங்களில் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. இந்த ஒழுங்கான பயனியர்களின் சுய தியாக மனப்பான்மையால் புதுப்புது தொகுதிகள் உருவாகியிருக்கின்றன என்று பயணக் கண்காணிகள் அறிக்கை செய்துள்ளார்கள்.”
சக விசுவாசிகளுக்கு உதவி செய்வதற்காக கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய உயிரைக்கூட பணயம் வைத்திருக்கிறார்கள். (ரோமர் 16:3, 4) ஆப்பிரிக்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வட்டாரக் கண்காணி இவ்வாறு சொல்கிறார்: “கலகக்காரர்களால் அபகரிக்கப்பட்ட பிராந்தியத்திற்கும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்திற்கும் இடையே பல இடங்களில் சாலை அடைப்புகள் போடப்பட்டிருந்தன. அதில் கடைசி அடைப்பை எட்டுவதற்கு முன்பு, நானும் என் மனைவியும் கலகக்கார படைத்தலைவர்கள் நால்வரிடம் சிக்கிக்கொண்டோம். அவர்களும் அவர்களுடைய காவலாளிகளும் எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்களுடைய அடையாள அட்டைகளைக் கேட்டார்கள். அதைப் பார்த்தபோது நாங்கள் அரசாங்க பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டார்கள்; அதனால் அவர்களுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. வேவுபார்க்க வந்தவன் என்று உடனே என்மீது குற்றம்சாட்டினார்கள். என்னை ஒரு குழிக்குள் தள்ளுவதற்குத் தீர்மானித்தார்கள். நாங்கள் யார் என்று அவர்களுக்கு விளக்கிய பிறகு ஒருவழியாக எங்களைப் போக அனுமதித்தார்கள்.” சுய தியாக மனப்பான்மை காட்டிய இத்தம்பதியர், எல்லாக் கஷ்டங்களையும் சமாளித்து வெவ்வேறு சபைகளுக்கு விஜயம் செய்தார்கள்; இப்படி இவர்கள் விஜயம் செய்வதற்கு அந்தச் சபைகளில் இருப்பவர்கள் எந்தளவு நன்றியுள்ளவர்களாய் இருந்திருப்பார்கள் என்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்!
சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. (ஏசாயா 6:8) பக்திவைராக்கியமுள்ள இவர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய தங்களுக்குக் கிடைத்திருக்கும் விசேஷ வாய்ப்பை எண்ணி பூரிப்படைகிறார்கள். இன்றும், இதுபோன்ற சுய தியாக மனப்பான்மை காட்டுகிற லட்சக்கணக்கானோர் யெகோவாவைத் துதிக்கிறார்கள். இதனால் அவர்களை யெகோவா அபரிமிதமாய் ஆசீர்வதிக்கிறார். (நீதிமொழிகள் 10:22) அப்படிப்பட்ட ஆசீர்வாதமும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அத்தகைய கடின உழைப்பாளிகள் சங்கீதக்காரனைப் போலவே உணருகிறார்கள்; ஆம், “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.—சங்கீதம் 121:2, NW.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2005-ல், நவம்பர்/டிசம்பர் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
‘உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமாய் தங்களை [அர்ப்பணிப்பார்கள்].’—சங்கீதம் 110:3
[பக்கம் 8-ன் பெட்டி]
பயபக்தியுள்ள தமது ஊழியர்களை யெகோவா நெஞ்சார நேசிக்கிறார்
“கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.”—1 கொரிந்தியர் 15:58.
“உங்கள் கிரியையையும் நீங்கள் . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.