நாணயங்களும் நன்னெறிகளும்—சரித்திரம் புகட்டும் பாடம்
ஏப்ரல் 7, 1630-ல், நான்கு கப்பல்களில் சுமார் நானூறு பேர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள். அவர்களில் பலர் உயர் கல்வி கற்றவர்கள், சிலர் வெற்றிகரமான தொழிலதிபர்கள். வேறு சிலரோ பார்லிமெண்ட் உறுப்பினராகவும்கூட இருந்தவர்கள். அந்தச் சமயத்தில், அவர்களுடைய தாய்நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தது, முப்பது வருட காலமாக (1618-48) ஐரோப்பாவில் நடந்துவந்த போரினால் நிலைமை இன்னும் மோசமாகியது. ஆகவே, துணிந்து அவர்கள் தங்களுடைய வீடுவாசல்களையும் உற்றார் உறவினர்களையும் வியாபாரங்களையும் விட்டுவிட்டு நல்ல வாய்ப்புகளைத் தேடிச் சென்றார்கள்.
என்றாலும், நம்பிக்கையுடன் சென்ற அந்த மக்கள் ஏதோ சந்தர்ப்பவாத வியாபாரிகள் அல்ல. அவர்கள் மத துன்புறுத்தலின் காரணமாக தப்பிச்சென்ற பக்திவைராக்கியமிக்க பியூரிடன்கள்.a தேவபக்திமிக்க ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டும், அதில் தாங்களும் தங்களுடைய சந்ததியாரும் பைபிள் தராதரங்களை விட்டுவிலகாமலேயே பொருளாதாரத்தில் செழித்தோங்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலட்சியம். மாஸசூஸெட்ஸில் இருக்கும் சேலம் என்ற துறைமுகத்தில் வந்திறங்கியபின், கடற்கரை பகுதியில் ஒரு சிறிய நிலத்தை சொந்தம் கொண்டாடினார்கள். அவர்கள் குடியேறிய அந்தப் புதிய இடத்தை பாஸ்டன் என அழைத்தார்கள்.
சமநிலைப்படுத்தும் சவால்
இந்தப் புதிய காலனியில் இருந்த மக்களின் பொருளாதாரத்தையும் சமுதாய நலனையும் முன்னேற்றுவிக்க அவர்களின் தலைவரும் ஆளுநருமான ஜான் வின்த்ராப் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார். அவர்கள் செல்வத்தையும் நன்னெறிகளையும் அடைய வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் இரண்டையுமே அடைவது சவாலாக இருந்தது. அதை உணர்ந்து, தேவபக்திமிக்க சமுதாயத்தில் செல்வத்தின் பங்கைப் பற்றி தனது கூட்டாளிகளுக்கு ஒரு நீண்ட சொற்பொழிவாற்றினார்.
செல்வத்தை நாடுவதில் எந்தத் தவறுமில்லை என மற்ற பியூரிடன் தலைவர்களைப் போலவே வின்த்ராப்பும் நம்பினார். பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவதே செல்வத்தின் முக்கிய நோக்கமென அவர் வாதிட்டார். எனவே, எந்தளவுக்கு ஒருவர் செல்வந்தராக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவரால் நன்மை செய்ய முடியும். “செல்வமே பியூரிடன்களின் மனதை மிகவும் அலைக்கழித்த விஷயமாக இருந்தது” என சரித்திராசிரியர் பெட்ரீஷியா ஓடூலி குறிப்பிடுகிறார். “அது கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு ஓர் அடையாளமாகவும், அதேசமயத்தில் பெருமை எனும் பாவத்திற்கும் . . . மற்ற பாவங்களுக்கும் வலிமைமிக்க தூண்டுகோலாகவும்கூட இருந்தது.”
செல்வமும் ஆடம்பரமும் பிறப்பிக்கும் பாவங்களைத் தவிர்ப்பதற்கு, எல்லாவற்றிலும் மிதமாகவும் தன்னடக்கமாகவும் இருக்க வேண்டுமென வின்த்ராப் அறிவுறுத்தினார். ஆனால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவருடைய சக குடிமக்களின் ஆசைக்கும், தேவபக்தியை கடைப்பிடித்து ஒருவரையொருவர் நேசிப்பதற்காக அவர்களை உந்துவிக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் இடையே சீக்கிரத்தில் மோதல் ஏற்பட்டது. தங்களுடைய சொந்த விஷயங்களில் வின்த்ராப் மட்டுமீறி தலையிடுவதை கருத்து வேற்றுமையாளர்கள் எதிர்த்து வாதாடினார்கள். தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பினர் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென மக்களைச் சிலர் தூண்ட ஆரம்பித்தார்கள். வேறு சிலரோ, தங்களுடைய சொந்த நாட்டங்களைத் தொடர அருகில் உள்ள கனெடிகட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள்.
“வாய்ப்பு, செழுமை, குடியாட்சி ஆகியவையெல்லாம் மாஸசூஸெட்ஸில் இருந்த பியூரிடன்களின் வாழ்க்கையில் வலிமை வாய்ந்த சக்திகளாக விளங்கின; இவை அனைத்தும், வின்த்ராப்பின் சமூக கொள்கைக்கு நேர் எதிராக தனிநபர்களுடைய ஆசைகளையே தூண்டிவிட்டன” என ஓடூலி கூறுகிறார். 1649-ல், ஒரு காசுகூட இல்லாதவராக தனது 61-ம் வயதில் வின்த்ராப் காலமானார். அநேக கஷ்டங்களின் மத்தியிலும் அந்தக் காலனி தாக்குப்பிடித்தபோதிலும், வின்த்ராப் உயிருடன் இருந்தவரை அவரது கனவு நனவாகவில்லை.
தேடல் தொடருகிறது
மேம்பட்ட உலகைப் படைக்க வேண்டுமென்ற ஜான் வின்த்ராப்பின் கனவு அவரோடு மடிந்துவிடவில்லை. மேம்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கும் நம்பிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் லட்சோபலட்சம் பேர் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து குடிபெயர்ந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர், பணக்காரராவது எப்படி என்ற இரகசியத்தைச் சொல்வதாக வாக்குறுதி அளிக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள், கருத்தரங்குகள், வெப்சைட்டுகள் ஆகியவற்றால் தூண்டப்பட்டு அவ்வாறு செல்கிறார்கள். நன்னெறிகளைக் கைவிடாமல் பணம் சம்பாதிப்பதற்கு, இன்றும் அநேகர் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
வெளிப்படையாகச் சொன்னால், விளைவுகள் ஏமாற்றம் அளிப்பவையாகவே இருந்திருக்கின்றன. செல்வத்தை நாடிச்செல்வோர் பெரும்பாலும் தங்களுடைய கொள்கைகளை, சிலசமயங்களில் தங்களுடைய விசுவாசத்தையும்கூட, செல்வம் எனும் பீடத்தில் பலிசெலுத்திவிடுகிறார்கள். ஆகவே, நீங்கள் இவ்வாறு கேட்பது சரியானதே: “உயர்ந்த ஒழுக்க தராதரங்களின்படி வாழ்ந்துகொண்டே ஒருவர் செல்வந்தராகவும் இருக்க முடியுமா? பொருளாதார ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் செழித்தோங்கும் தேவபயமுள்ள சமுதாயம் என்றாவது தோன்றுமா?” இந்தக் கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிக்கிறது. தயவுசெய்து பின்வரும் கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.
[அடிக்குறிப்பு]
a சர்ச் ஆஃப் இங்லாண்டில் இருந்த சில புராட்டஸ்டண்டினர், ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் செல்வாக்கை தங்களுடைய சர்ச்சிலிருந்து சுவடு தெரியாமல் நீக்க விரும்பினார்கள்; இவர்களுக்கே 16-ம் நூற்றாண்டில் பியூரிடன்கள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
படகுகள்: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck; வின்த்ராப்: Brown Brothers