வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“சபைகளில் . . . ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்” என அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது, அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவச் சபைக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் [இருப்பதுபோல] . . . சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை.” (1 கொரிந்தியர் 14:33, 34) இதை நாம் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, பவுல் கொடுத்த ஆலோசனையின் சூழமைவைச் சிந்தித்துப்பார்ப்பது உதவியாக இருக்கும்.
1 கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தில், கிறிஸ்தவக் கூட்டங்கள் சம்பந்தமான விஷயங்களையே பவுல் கலந்தாலோசித்தார். அத்தகைய கூட்டங்களின்போது என்னவெல்லாம் சிந்திக்கப்பட வேண்டுமென்று அதில் விவரித்தார், அதோடு அந்தக் கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்தார். (1 கொரிந்தியர் 14:1-6, 26-34) கூடுதலாக, கிறிஸ்தவக் கூட்டங்களின் நோக்கத்தை, அதாவது ‘சபைக்கு பக்திவிருத்தி உண்டாக்க’ வேண்டுமென்ற நோக்கத்தை, அவர் வலியுறுத்தினார்.—1 கொரிந்தியர் 14:4, 5, 12, 26.
‘பேசாமல் இருக்க’ வேண்டுமென்ற பவுலின் கட்டளை 1 கொரிந்தியர் 14-ம் அதிகாரத்தில் மூன்று முறை உள்ளது. ஒவ்வொரு முறையும் சபையிலுள்ள வெவ்வேறு தொகுதியினருக்காக அது கொடுக்கப்பட்டது; ஆனால், மூன்று முறையும் ஒரே காரணத்திற்காக, அதாவது “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்பட” வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக, கொடுக்கப்பட்டது.—1 கொரிந்தியர் 14:40.
முதலாவது, பவுல் இவ்வாறு சொன்னார்: ‘யாராவது அந்நிய பாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும் ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.’ (1 கொரிந்தியர் 14:27, 28) இப்படிப்பட்ட ஒரு நபர் சபையில் பேசவே கூடாதென பவுல் அர்த்தப்படுத்தவில்லை, மாறாக சில நேரங்களில் அவர் பேசாமல் இருக்க வேண்டும் என்றே அர்த்தப்படுத்தினார். யாருக்கும் புரியாத ஒரு மொழியில் அவர் பேசினால், கூட்டங்களின் நோக்கமே, அதாவது பக்திவிருத்தி உண்டாக்க வேண்டுமென்ற நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.
இரண்டாவது, பவுல் இப்படிக் குறிப்பிடுகிறார்: ‘தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்று பேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.’ முதலில் பேசிய தீர்க்கதரிசி கூட்டங்களில் பேசவே கூடாது என இது அர்த்தப்படுத்தவில்லை, ஆனால் சில நேரங்களில் அவர் பேசாமல் இருக்க வேண்டியிருந்தது. அப்போதுதான் அற்புத வெளிப்படுத்துதல்களைப் பெற்றிருக்கும் வேறொரு நபர் சபையாரிடம் பேச முடியும், அதோடு சபை கூட்டங்களின் நோக்கம்—‘எல்லாரும் ஊக்கம் பெற’ வேண்டுமென்ற நோக்கம்—நிறைவேறும்.—1 கொரிந்தியர் 14:26, 29-31; NW.
மூன்றாவது, கிறிஸ்தவப் பெண்களுக்காக மட்டுமே பவுல் இவ்வாறு சொன்னார்: ‘சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்.’ (1 கொரிந்தியர் 14:34) சகோதரிகளுக்கு பவுல் ஏன் இப்படியொரு கட்டளையைக் கொடுத்தார்? சபையின் ஒழுங்கை காத்துக்கொள்வதற்கே. அவர் இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.”—1 கொரிந்தியர் 14:35.
சபையில் சொல்லப்பட்ட விஷயங்களைக் குறித்து சில சகோதரிகள் ஒருவேளை தர்க்கம் செய்திருக்கலாம். இத்தகைய கலக மனப்பான்மையை ஒதுக்கித்தள்ள பவுலுடைய ஆலோசனை சகோதரிகளுக்கு உதவியது; அதோடு, யெகோவாவின் தலைமைத்துவ ஏற்பாட்டில்—குறிப்பாக தங்கள் கணவர்மார் சம்பந்தப்பட்ட தலைமைத்துவ ஏற்பாட்டில்—தங்களுக்குரிய ஸ்தானத்தை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளவும் உதவியது. (1 கொரிந்தியர் 11:3) அதுமட்டுமல்ல, சகோதரிகள் அவ்வாறு பேசாதிருப்பதன் மூலம் சபையில் போதகர்களாக இருக்க தாங்கள் ஆசைப்படுவதில்லை என்பதைக் காண்பிப்பார்கள். சபையிலே ஒரு பெண் போதிப்பது சரி அல்ல என்பதை தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் பின்வருமாறு காண்பித்தார்: “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 2:12.
அப்படியானால், சபை கூட்டங்களில் ஒரு கிறிஸ்தவப் பெண் பேசவே கூடாது என்று அர்த்தமா? இல்லை. பவுலுடைய காலத்தில் கிறிஸ்தவப் பெண்கள் சில சந்தர்ப்பங்களில் சபையிலே ஜெபம் செய்ததுண்டு அல்லது தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு; ஒருவேளை பரிசுத்த ஆவியின் உந்துவிப்பால் அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், தங்கள் தலையை முக்காடிடுவதன் மூலம் தங்கள் ஸ்தானத்தை ஒப்புக்கொண்டார்கள்.a (1 கொரிந்தியர் 11:5) அதோடு, பவுலுடைய நாட்களிலும் சரி, நம்முடைய நாட்களிலும் சரி, சகோதரர்களோடு சேர்ந்து சகோதரிகளும் தங்கள் நம்பிக்கையைக் குறித்து யாவருக்கும் அறிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். (எபிரெயர் 10:23-25) வெளி ஊழியத்தில் மட்டுமல்ல, சபை கூட்டங்களிலும் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை அறிவிக்கிறார்கள்; சபையில், வாய்ப்பளிக்கப்படும்போது நன்கு தயாரித்த பதில்களைச் சொல்வதன் மூலமும், மாணாக்கர் பேச்சுக்கான அல்லது நடிப்புக்கான நியமிப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
எனவே, சபையில் ஓர் ஆண் வகிக்கும் பங்கை ஏற்றுக்கொள்ள முயலாதிருக்கும் அர்த்தத்திலும், சபையாருக்குப் போதிக்காதிருக்கும் அர்த்தத்திலுமே கிறிஸ்தவப் பெண்கள் ‘பேசாமல் இருக்கிறார்கள்.’ சபையில் போதிப்பவர்களுடைய அதிகாரத்தை எதிர்த்து சவால்விடக்கூடிய விவாதத்திற்குரிய கேள்விகளை அவர்கள் எழுப்புவதில்லை. மாறாக, சபையில் தங்களுக்குள்ள பங்கை நிறைவேற்றுவதன் மூலம், சமாதானத்தைக் கட்டிக்காக்க அவர்கள் பெரிதும் உதவுகிறார்கள்; அப்போது சபை கூட்டங்களிலே ‘சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படுகிறது.’—1 கொரிந்தியர் 14:26, 33.
[அடிக்குறிப்பு]
a நவீன காலங்களிலும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சபையில் முழுக்காட்டப்பட்ட ஓர் ஆணுடைய பொறுப்பை ஒரு சகோதரி ஏற்க வேண்டியிருந்தால், முதிர்ச்சிவாய்ந்த சகோதரிகள் அவ்வாறே முக்காடிட்டுக்கொள்கிறார்கள்.—2002, ஜூலை 15 தேதியிட்ட காவற்கோபுரத்தில் 26-ம் பக்கத்தைக் காண்க.