பைபிளைப் புரிந்துகொள்ளுதல்—எது உங்களுக்கு உதவும்?
‘இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்.’ (லூக்கா 10:21) பைபிளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நமக்கு சரியான மனப்பான்மை அவசியம் என்பதையே பரம பிதாவிடம் இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனத்தாழ்மையுள்ள, கற்றுக்கொள்ளும் மனமுள்ள ஜனங்கள் மாத்திரமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு புத்தகத்தை யெகோவா தந்திருப்பது அவரது ஞானத்தை வெளிப்படுத்துகிறது.
மனத்தாழ்மையை வெளிக்காட்டுவது நம்மில் அநேகருக்கு பெரும்பாடாக இருக்கிறது, ஏனென்றால் பெருமை என்ற குணத்தை நாம் எல்லாருமே வழிவழியாகப் பெற்றிருக்கிறோம். அதோடு, “கடைசி நாட்களில்” வாழ்கிறோம்; அதாவது, மக்கள் “தற்பிரியராயும் . . . வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும்” இருக்கும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-4) இந்த மனப்பான்மைகள் எல்லாமே கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. வருத்தகரமாக, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் மனப்பான்மைகள் நம்மீதும் ஓரளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அப்படியானால், பைபிளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான மனப்பான்மையை எப்படி வளர்த்துக் கொள்ளலாம்?
இருதயத்தையும் மனதையும் பக்குவப்படுத்துதல்
கடவுளுடைய ஜனங்களை வழிநடத்தி வந்த பூர்வகால தலைவரான எஸ்றா, ‘யெகோவாவின் சட்டத்தை ஆராய தன்னுடைய இருதயத்தைப் பக்குவப்படுத்தினார்.’ (எஸ்றா 7:10) நம் இருதயத்தைப் பக்குவப்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? ஆம், இருக்கிறது. முதலாவதாக, பைபிளைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளலாம். ‘தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டீர்கள்’ என சக கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 2:13) பைபிளை எழுதுவதற்கு மனிதர்களைக் கடவுள் பயன்படுத்தியபோதிலும், அவர்கள் எழுதிய விஷயங்கள் எல்லாம் கடவுளிடமிருந்தே வந்தன. மிக முக்கியமான இந்த உண்மையை உணர்ந்துகொள்ளும்போது நாம் வாசிப்பதை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கும்.—2 தீமோத்தேயு 3:16.
நம் இருதயத்தைப் பக்குவப்படுத்துவதற்கு மற்றொரு வழி ஜெபம். பைபிள் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதால், அந்த ஆவியின் உதவியோடு பைபிளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த ஆவிக்காக நாம் ஜெபிக்க வேண்டும். ‘உம்முடைய சட்டத்தை கைக்கொள்ளவும், என் முழு இருதயத்தோடு கடைப்பிடிக்கவும் புரிந்துகொள்ளும் திறனை எனக்குத் தாரும்’ என்று சங்கீதக்காரன் ஆர்வத்தோடு விண்ணப்பித்ததை கவனியுங்கள். (சங்கீதம் 119:34, NW) பைபிளில் உள்ளவற்றை நமது மனம் கிரகித்துக்கொள்வதற்காக மட்டுமல்ல, அவற்றை இருதயம் ஏற்றுக்கொள்வதற்காகவும் ஜெபிக்க வேண்டும். பைபிளைப் புரிந்துகொள்வதற்கு, திறந்த மனதோடு உண்மைகளை ஏற்றுக்கொள்வதும் அவசியம்.
சரியான மனநிலையைப் பெற நீங்கள் தியானிக்க வேண்டும். அவ்வாறு தியானிக்கையில், பைபிள் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்கு எத்தனையோ அருமையான காரணங்கள் உள்ளன; ஆனால் அவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணம், கடவுளிடம் நெருங்கிவர பைபிள் நமக்கு உதவுகிறது என்பதே. (யாக்கோபு 4:8) பல்வேறு சூழ்நிலைகளுக்கு யெகோவா எப்படிப் பிரதிபலிக்கிறார், அவரை நேசிப்பவர்களை எப்படி நெஞ்சாரப் போற்றுகிறார், அவரைவிட்டு விலகுபவர்களை எப்படி நடத்துகிறார் என்பதையெல்லாம் வாசிக்க வாசிக்க, அவர் எப்படிப்பட்டவர் என்பதை பகுத்துணருகிறோம். கடவுளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதும் அவருடன் நம் உறவைப் பலப்படுத்திக்கொள்வதுமே பைபிளைப் படிப்பதில் நம்முடைய மிக முக்கியமான நோக்கமாய் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
சரியான மனப்பான்மையைப் பெற தடைகள்
கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள எது தடையாக இருக்கலாம்? நாம் யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அவர்களுடைய நம்பிக்கைகளையே நாமும் விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருப்பது நமக்கு ஒரு பெருந்தடையாக இருக்கலாம். உதாரணமாக, சிலருடைய நம்பிக்கைகளையும் கருத்துகளையும் நீங்கள் மிக உயர்வாக கருதலாம். ஆனால், பைபிள் சத்தியத்தை உண்மையிலேயே இவர்கள் ஆதரிக்கவோ மதிக்கவோ இல்லையென்றால் என்ன செய்வீர்கள்? இத்தகைய சந்தர்ப்பங்களில், பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது ஒரு சவாலாக இருக்கலாம். அதனால்தான், நமக்கு கற்பிக்கப்பட்டுள்ள விஷயங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது.—1 தெசலோனிக்கேயர் 5:21.
இயேசுவின் தாய் மரியாள் இப்படிப்பட்ட ஒரு சவாலை எதிர்ப்பட்டார். அவர் யூத பாரம்பரியத்தின்படி வளர்க்கப்பட்டிருந்தார். மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தைக் கவனமாய் கடைப்பிடித்து வந்தார், யூத ஜெபாலயத்திற்கும் சென்றார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தனது பெற்றோர் கற்றுத்தந்த வழிபாட்டு முறையை கடவுள் இனிமேல் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை பிற்காலத்தில் உணர்ந்துகொண்டார். இதன் காரணமாக, இயேசுவின் போதனையை ஏற்றுக்கொண்டு, முதன்முதலில் கிறிஸ்தவ சபையுடன் சேர்ந்துகொண்ட அங்கத்தினர்களில் ஒருவராக ஆனார். (அப்போஸ்தலர் 1:13, 14) இதனால், மரியாள் தனது பெற்றோருக்கோ அவர்களது பாரம்பரியங்களுக்கோ அவமரியாதை காட்டினார் என்று அர்த்தமாகாது. மாறாக, அது கடவுள் மீதுள்ள அன்பின் வெளிக்காட்டாகவே இருந்தது. பைபிளிலிருந்து நாம் பயனடைய வேண்டுமென்றால், வேறு எவருக்கும் அல்ல, மரியாளைப் போல, கடவுளுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்.
வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இன்றைக்கு அநேகர் பைபிள் சத்தியத்திற்கு மதிப்பு கொடுப்பதில்லை. பொய்யிலே வேரூன்றிய மதப் பாரம்பரியங்களைப் பின்பற்றுவதில் சிலர் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களுடைய சொல்லிலும் செயலிலும் சத்தியத்திற்கு அவமரியாதை காட்டுகிறார்கள். இதனால், பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு உங்கள் பங்கில் சில தியாகங்கள் செய்வது அவசியம்; உங்களுடைய நண்பர்களோடு, அல்லது அக்கம்பக்கத்தாரோடு, சக வேலையாட்களோடு, ஏன், உங்களுடைய குடும்பத்தினரோடுகூட, உங்களுக்குக் கருத்துவேறுபாடு எழலாம். (யோவான் 17:14) என்றாலும், சாலொமோன் ஞானி இவ்வாறு எழுதினார்: “சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே.” (நீதிமொழிகள் 23:23) சத்தியத்தை நீங்கள் உயர்வாய் மதித்தால், பைபிளைப் புரிந்துகொள்ள யெகோவா உங்களுக்கு உதவி செய்வார்.
பைபிளின் வழிநடத்துதலை வாழ்க்கையில் பின்பற்ற அநேகருக்கு விருப்பமில்லை. இதுவும்கூட பைபிள் செய்தியைப் புரிந்துகொள்ள தடையாக இருக்கிறது. இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. . . . அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள்.’ (மத்தேயு 13:11, 15) இயேசு பிரசங்கித்ததைக் கேட்டவர்களில் பெரும்பாலோர் மந்தமாக இருந்தார்கள், அதாவது மாற்றம் செய்ய அவர்களுக்கு மனமில்லை. ஆனால் இயேசு சொன்ன ஓர் உவமையில் வரும் வியாபாரி எவ்வளவு வித்தியாசமானவராக இருந்தார்! உயர்ந்த மதிப்புடைய முத்தைக் கண்டுபிடித்தபோது, அதை வாங்குவதற்காக தன்னிடமிருந்த எல்லாவற்றையும் அவர் உடனடியாக விற்றுவிட்டார். பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்வதை நாமும் அந்தளவுக்கு மதிப்புமிக்கதாக கருத வேண்டும்.—மத்தேயு 13:45, 46.
கற்றுக்கொள்ளும் மனமுடையவர்களாய் இருப்பது ஒரு சவால்
பைபிளைப் புரிந்துகொள்வதில் மிகப் பெரிய சவால் கற்றுக்கொள்ளும் மனமுடையவர்களாய் இருப்பதாகும். தன்னைவிட தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவரிடமிருந்து புதிய கருத்துகளைக் கற்றுக்கொள்வது ஒருவருக்கு கடினமாக இருக்கலாம். இயேசுவின் அப்போஸ்தலர்கள்கூட ‘கல்வியறிவு இல்லாதவர்களாகவும் சாதாரண’ மனிதர்களாகவுமே இருந்தார்கள். (அப்போஸ்தலர் 4:13) இதற்குரிய காரணத்தை பவுல் விளக்கினார்: “சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.” (1 கொரிந்தியர் 1:26, 27) உங்களைவிட தாழ்ந்த நிலையிலுள்ள ஒருவர் உங்களுக்குக் கற்பிக்கும்போது மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்வது ஒருவேளை சவாலாக இருக்கலாம். ஆனால், கடவுள் உங்களுக்குக் கற்பிக்க அவரை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துகிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். நம்முடைய ‘மகத்தான போதகரான’ யெகோவாவினால் கற்பிக்கப்படுவதைவிட மதிப்புமிக்க ஒன்று எதாவது இருக்கிறதா என்ன?—ஏசாயா 30:20, NW; 54:13.
தாழ்ந்த நிலையிலிருந்த ஒருவரிடமிருந்து அறிவுரை பெறுவது நாகமான் என்ற சீரிய நாட்டு படைத் தளபதிக்கு சவாலாக இருந்தது. தன்னுடைய குஷ்டரோகம் குணமடைய வேண்டுமென விரும்பி, யெகோவாவின் தீர்க்கதரிசியான எலிசாவைப் பார்க்கச் சென்றார். ஆனால் குணமடைவதற்கு என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகள் ஒரு வேலைக்காரன் மூலம் நாகமானுக்குக் கொடுக்கப்பட்டன. சொல்லப்பட்ட விஷயமும் தெரிவிக்கப்பட்ட விதமும் நாகமானுக்கு கோபமூட்டியது, அவரால் மனத்தாழ்மையை காட்ட முடியவில்லை. அதனால், கடவுளுடைய தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படிய அவர் முதலில் மறுத்துவிட்டார். ஆனால் பிற்பாடு தனது மனப்பான்மையை மாற்றிக்கொண்டார், அதனால் குணமடைந்தார். (2 இராஜாக்கள் 5:9-14) இதே போன்ற சவாலை பைபிள் வாசிக்கும்போது நாமும் எதிர்ப்படுகிறோம். ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் குணப்படுத்தப்படுவதற்கு நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவேளை கற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நமக்கு மனத்தாழ்மை இருக்கிறதா? கற்றுக்கொள்ளும் மனமுள்ளவர்களே பைபிளைப் புரிந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெறமுடியும்.
எத்தியோப்பிய ராணி கந்தாகே என்பவரின் கீழ் அதிகாரியாக பணிபுரிந்த ஒருவர் சிறந்த மனநிலையைக் காட்டினார். அவர் தன்னுடைய ரதத்தில் ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது பிலிப்பு என்ற சீஷன் ஓடிப்போய் ரதத்தில் ஏறிக்கொண்டார். அவர் வாசித்துக்கொண்டிருந்த பகுதியின் அர்த்தம் புரிகிறதா என்று பிலிப்பு அவரிடம் கேட்டார். “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்”? என்று அந்த அதிகாரி மனத்தாழ்மையுடன் கூறினார். கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொண்டபோது, அவர் முழுக்காட்டப்பட்டார். அதற்குப்பின், அவர் ‘சந்தோஷத்தோடே தன் வழியே போனார்.’—அப்போஸ்தலர் 8:27-39.
பொதுவாக, யெகோவாவின் சாட்சிகளும் சாதாரண ஜனங்கள்தான். அவர்கள் ஒவ்வொரு வாரமும் 60 லட்சத்திற்கும் அதிகமானோரின் வீடுகளில் பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். பைபிளைப் படிப்பதும் அதை புரிந்துகொள்வதும் அளவில்லாத ஆனந்தத்தைத் தருகிறது என்பதை லட்சோப லட்சம்பேர் கண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பைபிள் மிகச் சிறந்த வாழ்க்கை முறையை கற்பிக்கிறது, மனிதவர்க்கத்தினருக்கான ஒரே நம்பிக்கையை விளக்குகிறது, கடவுளைப் பற்றி நன்கு அறிந்துகொள்வது எப்படி என்பதை சுட்டிக்காட்டுகிறது. பைபிளைப் புரிந்துகொள்வதன் மூலம் நீங்களும் இன்பம் காணலாமே.
[பக்கம் 7-ன் படம்]
தாழ்ந்த ஊழியக்காரன் கொடுத்த அறிவுரைகளை ஏற்றுக்கொள்வது நாகமானுக்கு கஷ்டமாக இருந்தது
[பக்கம் 7-ன் படம்]
பைபிளைப் புரிந்துகொள்வது நம் இதயத்திற்கு இதமளிக்கிறது