சந்தோஷத்திற்கு நம்பகமான ஒரு வழிகாட்டி
“சந்தோஷத்தை அடைய நாடுவது” எல்லாருக்குமே இருக்கும் உரிமை. இது, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் சுதந்திர உறுதிமொழியை உருவாக்கியவர்களின் கருத்து. ஆனால் ஓர் இலட்சியத்தை நாடுவதற்கும் அதை அடைவதற்கும் வித்தியாசம் உண்டு. அநேக இளைஞர்கள் கலைநிகழ்ச்சிகளிலும் விளையாட்டுகளிலும் நட்சத்திரங்களாகத் திகழும் இலட்சியத்தை அடைய நாடுகிறார்கள். இருந்தாலும், எத்தனை பேருடைய இலட்சிய கனவுகள் உண்மையிலேயே நிறைவேறியிருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியுமா? “நீங்கள் வெற்றியடைவது ரொம்ப கஷ்டம்தான்” என்கிறார் ஒரு பிரபல பாடகர்; இவரும்கூட முன்னணிப் பாடகராவதற்குப் பாடுபட்டவர்.
நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்கள் என்றால் சோர்ந்துவிடாதிருக்க ஒரு நல்ல காரணம் இருக்கிறது. சரியான வழியில் சந்தோஷத்தை நாடினால் அதை நிச்சயம் அடைவீர்கள். ஏன் அப்படிச் சொல்லலாம்? முந்தின கட்டுரை, ‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது. (1 தீமோத்தேயு 1:11) சந்தோஷத்திற்கான உங்களுடைய நாட்டம் ஏமாற்றத்தில் முடிவடையாதிருக்க பைபிள் மூலம் அவர் ஆலோசனை கொடுக்கிறார். வருத்தம் உண்டாக்குகிற சாதாரண காரியங்களைச் சமாளிக்க அவர் உங்களுக்கு உதவ முடியும். உதாரணமாக, அன்புக்குரிய ஒருவர் இறக்கையில், யெகோவா எவ்வாறு ஆறுதல் அளிக்கிறாரென இப்போது சிந்தித்துப் பார்க்கலாம்.
அன்புக்குரிய ஒருவர் இறக்கையில்
சாவைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா? அது பிள்ளைகளிடமிருந்து பெற்றோரையும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளையும் பிரித்து விடுகிறது. உற்ற நண்பர்களையும் பிரித்து, நெருங்கிப் பழகும் அக்கம்பக்கத்தாரிடையே பீதியை ஏற்படுத்தி விடுகிறது. சந்தோஷமான ஒரு குடும்பத்தில் சாவு நடந்துவிட்டால் அக்குடும்பமே சோகத்தில் மூழ்கிவிடுகிறது.
சாவு என்பது துயரமான ஒரு சம்பவமென்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்த உண்மையை சிலர் மறுத்து, அதை ஓர் ஆசீர்வாதமாகச் சித்தரிக்கிறார்கள். ஆகஸ்ட் 2005-ல் மெக்சிகோ வளைகுடாவை கேட்ரீனா சூறாவளி தாக்கியபோது என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அதற்குப் பலியான ஒருவருடைய சவ அடக்கத்தின்போது ஒரு பாதிரியார் சொன்னது இதுதான்: “கேட்ரீனா அவருடைய உயிரைப் பறிக்கவில்லை. கடவுள்தான் அவரைப் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார்.” மற்றொரு சந்தர்ப்பத்தில், அம்மாவை இழந்த ஒரு சிறுமியிடம், ‘நீ கவலைப்படாதே, உன் அம்மாவை கடவுள் பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டார்’ என ஆஸ்பத்திரியிலிருந்த கிளார்க் நல்மனதோடு சொன்னார். அந்தச் சிறுமியோ, “என்கிட்டேயிருந்து அம்மாவை அவர் ஏன் பிரிக்கணும், ஏன்?” என்று சொல்லி கதறி அழுதாள்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது: இறந்தவர்களைப் பற்றி அவர்கள் சொல்லும் இப்படிப்பட்ட தவறான கருத்துகள், இழப்புக்கு ஆளானவர்களை ஆறுதல்படுத்துவதில்லை. ஏன்? ஏனெனில், இந்தக் கருத்துகள் சாவைப் பற்றிய உண்மையைத் தெரிவிப்பதில்லை. அன்புக்குரியவர்களை அதிர்ச்சியூட்டும் விதத்திலும் மிகுந்த வேதனைதரும் விதத்திலும் அவர்களுடைய குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கடவுள் பறிக்கிறார் என்று அவர்கள் சொல்வதுதான் இன்னும் வருந்தத்தக்க விஷயம். கடவுளை, ஆறுதலின் உறைவிடமென வர்ணிப்பதற்குப் பதிலாக, சாவுக்குக் காரணமான வில்லனென வர்ணிக்கிறார்கள். ஆனால், சாவைப் பற்றிய உண்மையைக் கடவுளுடைய வார்த்தை விளக்குகிறது.
சாவை ஓர் எதிரி என பைபிள் அழைக்கிறது. மனிதரை ஆட்சி செய்யும் ஓர் அரசனுக்கு அதை ஒப்பிடுகிறது. (ரோமர் 5:17; 1 கொரிந்தியர் 15:26) எந்தவொரு மனிதனும் எதிர்த்து நிற்க முடியாதளவு சக்தி படைத்த ஓர் எதிரி அது; ஆகவே சாவைச் சந்திக்கிற ஒவ்வொருவரும் அந்த எதிரியின் பிடியில் சிக்குகிற எண்ணற்றோரில் ஒருவராக ஆகிறார். அன்புக்குரியவர் இறக்கும்போது நமக்கு ஏற்படும் துக்கமும் தவிப்பும் இந்த பைபிள் சத்தியம் முற்றிலும் உண்மை என்பதை நிரூபிக்கிறது. இப்படிப்பட்ட உணர்ச்சிகள் இயல்பானவை என்பதை அது உறுதிப்படுத்துகிறது. இருந்தாலும், சாவு எனும் இந்த எதிரியைப் பயன்படுத்தி நம் அன்புக்குரியவர்களை கடவுள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்கிறாரா? அதற்கு பைபிள் தரும் பதிலைப் பார்க்கலாம்.
பிரசங்கி 9:5, 10 இவ்வாறு குறிப்பிடுகிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. . . . நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதாளம் என்பது என்ன? பொதுவாக, இறந்தவர்கள் புதைக்கப்படுகிற பிரேதக்குழியே அது. பிரேதக்குழியிலுள்ள இறந்தவர்கள் முற்றிலும் செயலற்றவர்களாக இருக்கிறார்கள்; அவர்களால் அசையவோ, உணரவோ, சிந்திக்கவோ முடியாது. அவர்கள் ஆழ்ந்து தூங்குகிறவர்களைப் போல் இருக்கிறார்கள். ஆக, நம் அன்புக்குரியவர்களை தம்மோடு வைத்துக்கொள்வதற்காக கடவுள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அவர்கள் பிரேதக்குழியில் உயிரற்றவர்களாகவே கிடக்கிறார்கள்.
இயேசுவும்கூட இந்த உண்மையைத் தம் நண்பர் லாசரு இறந்தபோது உறுதிப்படுத்தினார். சாவை அவர் தூக்கத்திற்கு ஒப்பிட்டார். சர்வவல்லமையுள்ள கடவுளோடு இருப்பதற்காகப் பரலோகத்திற்கு லாசரு சென்றிருந்தால், மீண்டும் சாவதற்காக அவரை இந்தப் பூமியில் இயேசு உயிர்த்தெழுப்பியது இரக்கமற்ற செயலாக இருந்திருக்கும். லாசருவை அடக்கம் செய்த இடத்தில் நின்றுகொண்டு, உரத்த சத்தமாய் “லாசருவே, வெளியே வா” என்று இயேசு கூப்பிட்டார் என தேவ ஆவியால் எழுதப்பட்ட பைபிள் சொல்கிறது. “அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்” என்று அது தொடர்ந்து சொல்கிறது. லாசரு மீண்டும் உயிரடைந்தார். அவர் இந்தப் பூமியைவிட்டு வேறெங்கும் செல்லவில்லை என்பதை இயேசு அறிந்திருந்தார். கல்லறையில் உயிரற்றவராகவே அவர் கிடந்திருந்தார்.—யோவான் 11:11-14, 34, 38-44.
பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சம்பவம், சாவை கொடுத்து மனிதரைப் பூமியிலிருந்து பரலோகத்திற்குக் கடவுள் எடுத்துக்கொள்வதில்லை என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆகவே, அவர் நமக்குத் துக்கத்தை உண்டாக்குவதில்லை என்பதை அறிந்துகொள்ளும்போது நாம் அவரிடம் நெருங்கி வருகிறோம். சாவு எனும் எதிரியால் நமக்கு ஏற்படுகிற துயரத்தையும் பாதிப்பையும் அவர் நன்கு புரிந்துகொள்கிறாரென நம்பலாம். இறந்தவர்கள் எரிநரகத்திலோ உத்தரிக்கும் ஸ்தலத்திலோ வேதனை அனுபவிப்பதில்லை, மாறாக கல்லறையில் உயிரற்ற நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையை பைபிள் உறுதிப்படுத்துகிறது. ஆகவே, இறந்து போன நம் அன்பானவர்களைப் பற்றி யோசிக்கும்போது, அவர்கள் எங்கு இருக்கிறார்களென நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை, கடவுளை வெறுக்க வேண்டியதுமில்லை. அதுமட்டுமல்ல, பைபிளின் வாயிலாக, மற்றொரு ஆறுதலையும் யெகோவா நமக்கு அளிக்கிறார்.
சந்தோஷத்திற்கு வழிநடத்தும் நம்பிக்கை
உண்மையான சந்தோஷத்திற்கு முக்கியமாய் தேவைப்படுவது நம்பிக்கையே என்பதை நாம் இதுவரை பார்த்த வசனங்கள் எல்லாம் சுட்டிக்காட்டுகின்றன. பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள “நம்பிக்கை” என்ற வார்த்தை, நல்லது நடக்குமென்ற உறுதியான எதிர்பார்ப்பைக் குறிக்கிறது. இந்த நம்பிக்கை இப்போதும்கூட நமக்குச் சந்தோஷத்தைத் தரலாம்; எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள, லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பிய சம்பவத்தை நாம் மீண்டும் சிந்திக்கலாம்.
இயேசு அந்த அற்புதத்தை நடத்தியதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம்: மார்த்தாள், மரியாள், நண்பர்கள் ஆகியோரின் துயரத்தைப் போக்குவதாகும். அதன் மூலம் அன்புக்குரிய லாசருவுடன் மீண்டும் கூட்டுறவை அனுபவிக்க அவர்களால் முடிந்தது. ஆனால், மிக முக்கியமான இரண்டாவது காரணத்தை மார்த்தாளிடம் இயேசு சொன்னார்: “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா”? (யோவான் 11:40) ஜெ. பி. ஃபிலிப்ஸ் எழுதிய த நியூ டெஸ்டமென்ட் இன் மாடர்ன் இங்லீஷ் பைபிள் இந்த வசனத்தின் ஒரு பகுதியை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “கடவுளால் செய்ய முடிந்த அற்புதத்தை” காண்பாய். லாசருவை உயிர்த்தெழுப்பியதன் மூலம், எதிர்காலத்தில் யெகோவாவால் என்ன செய்ய முடியும், அவர் என்ன செய்வார் என்பதற்கான ஒரு முற்காட்சியை இயேசு அளித்தார். ‘கடவுளால் செய்ய முடிந்த அற்புதத்தை’ விளக்கும் இன்னும் சில வசனங்களைப் பார்க்கலாம்.
யோவான் 5:28, 29-ல் (NW) இயேசு இவ்வாறு சொன்னார்: “இதைக் குறித்து நீங்கள் வியப்படைய வேண்டாம்; ஏனெனில் காலம் வருகிறது, அப்போது ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.” நம் அன்புக்குரியவர்கள் உட்பட, பாதாளத்திலுள்ள இறந்தவர்கள் எல்லாருமே உயிர்த்தெழுப்பப்படுவார்கள். இந்த அற்புத சம்பவத்தைப் பற்றி அப்போஸ்தலர் 24:15 இன்னும் கூடுதலான விளக்கத்தை அளிக்கிறது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்கள்.’ ஆகவே, ‘அநீதிமான்களும்கூட,’ அதாவது யெகோவாவைப் பற்றி அறியாமலும் அவரைச் சேவியாமலும் இறந்துபோன அநேகரும்கூட, எதிர்காலத்தில் கடவுளுடைய இரக்கத்தைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுவார்கள்.
இந்த உயிர்த்தெழுதல் எங்கு நடக்கும்? சங்கீதம் 37:29 இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” அதன் அர்த்தத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! சாவினால் குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டவர்கள் இந்தப் பூமியில் மீண்டும் ஒன்றுசேருவார்கள். இறந்துபோன உங்கள் அன்பானவர்களோடு மீண்டும் ஒன்றுசேர்ந்து இருப்பதை நினைத்துப் பார்க்கையில், உங்கள் இதயத்தில் நிச்சயம் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.
நீங்கள் சந்தோஷமாயிருக்க யெகோவா விரும்புகிறார்
உங்கள் பிரச்சினைகளின் மத்தியிலும் யெகோவா உங்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தரும் இரண்டு வழிகளை நாம் சிந்தித்தோம். ஒரு வழி, பைபிள் வாயிலாக, பிரச்சினைகளை வெற்றிகரமாய் சமாளிப்பதற்கான அறிவையும் அறிவுரையையும் அவர் தருகிறார். ஒருவருடைய இறப்பினால் நாம் படுகிற துயரத்தைச் சமாளிப்பதற்கு மட்டுமல்ல, பொருளாதார, உடல்நல பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குக்கூட பைபிளின் ஆலோசனை நமக்கு உதவும். சமுதாயத்தில் நடக்கிற அநீதிகளையும் அரசியல் குழப்பங்களையும் சகிப்பதற்கு அது பலத்தைத் தரும். அதன் அறிவுரையை வாழ்க்கையில் பின்பற்றினால், உங்களுடைய சொந்த பிரச்சினைகளை சமாளிக்கவும் அது உங்களுக்கு உதவும்.
இரண்டாவது வழி, பைபிளை ஆழ்ந்து படிப்பதன் மூலம், மனித சமுதாயத்தால் அளிக்க முடியாத, ஒப்பற்ற நம்பிக்கையை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். இறந்துபோன நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் உயிர்த்தெழுதலும் அந்த நம்பிக்கையில் அடங்குமென பைபிள் குறிப்பிடுகிறது. வெளிப்படுத்துதல் 21:3, 4 வசனங்கள் இன்னும் அதிகமான விவரத்தைத் தருகின்றன: “தேவன்தாமே அவர்களோடேகூட [மனிதகுலத்தோடுகூட] இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” உங்களுடைய வாழ்க்கையில் வருத்தம் தரக்கூடிய எதுவுமே சீக்கிரத்தில் ஒழிந்துவிடும் என்பதை இது குறிக்கிறது. பைபிளில் காணப்படும் வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் நிறைவேறும், அதன் நிறைவேற்றத்தை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். ஒளிமயமான அந்த எதிர்காலத்தைப் பற்றி அறிந்திருப்பதுதானே ஆறுதல் அளிக்கிறது. இறப்புக்குப்பின் என்றென்றும் துன்பப்பட வேண்டியதில்லை என்பதை அறிந்திருப்பது நீங்கள் சந்தோஷமாய் இருப்பதற்குக் காரணத்தை அளிக்கிறது.
இதற்கு மரியா என்பவரின் உதாரணத்தைப் பார்க்கலாம்: பல வருடங்களுக்கு முன், அவருடைய கணவர் புற்றுநோயால் அவதிப்பட்டு கொஞ்ச கொஞ்சமாக அவர் கண் முன்னாலேயே இறந்துபோனார். கணவனைப் பறிகொடுத்த துக்கத்திலிருந்து மீளுவதற்குள் பண நெருக்கடியில் சிக்கினார். அதனால் அவரும் அவருடைய மூன்று மகள்களும் குடியிருந்த வீட்டை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தனக்கும் புற்றுநோய் வந்திருப்பதை மரியா அறிந்தார். அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன, அதனால் தினம்தினம் வேதனையில் அவஸ்தைப்படுகிறார். இந்தப் பிரச்சினைகளின் மத்தியிலும் அவர் நம்பிக்கையான மனநிலையோடு இருக்கிறார்; இது மற்றவர்களையும் உற்சாகப்படுத்த அவரைத் தூண்டுகிறது. அவருடைய சந்தோஷத்தின் இரகசியம் என்ன?
மரியா இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு பிரச்சினை வரும்போது அதைப் பற்றியே யோசித்து மனதைக் குழப்பிக்கொள்ள மாட்டேன். ‘ஏன் எனக்கு இந்தப் பிரச்சினை வந்தது? நான் ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறேன்? ஏன் எனக்கு வியாதி வந்தது?’ போன்ற கேள்விகளை நான் கேட்டுக்கொள்வதில்லை. வேண்டாத காரியங்களை யோசித்தால் நம்முடைய சக்திதான் பறிபோகும். அதற்குப் பதிலாக, யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் என் சக்தி எல்லாவற்றையும் செலவிடுகிறேன். அது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது.”
பைபிள் தரும் நம்பிக்கை மரியாவுக்கு எப்படி உதவுகிறது? மனிதருக்கு வரும் நோய்களையும் மற்ற பிரச்சினைகளையும் யெகோவா முற்றிலுமாக நீக்கப் போகிற காலம் வருமென்பதில் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார். சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்குச் செல்லும்போது, நம்பிக்கையிழந்த நிலையிலிருக்கும் புற்றுநோயாளிகளிடம் பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றி பேசுகிறார். அந்த நம்பிக்கை மரியாவுக்கு எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது? அவர் சொல்கிறார்: “பைபிளில் எபிரெயர் 6:19 சொல்வதை நான் அடிக்கடி சிந்தித்துப் பார்க்கிறேன். அங்கு பவுல், நம்பிக்கை நம் ஆத்துமாவுக்கு நங்கூரமாயிருப்பதாக விவரிக்கிறார். அந்த நங்கூரம் இல்லையென்றால், புயல்காற்றில் அடித்துச் செல்லப்படுகிற படகைப்போல் இருப்போம். ஆனால் அந்த நங்கூரத்தோடு பிணைக்கப்பட்டிருந்தால், புயல் போன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டாலும் பாதுகாப்பாக இருப்போம்.” ‘பொய்யுரையாத தேவன்’ அளித்திருக்கிற ‘நம்பிக்கையே’ சந்தோஷமாயிருக்க மரியாவுக்கு உதவுகிறது; அந்த தேவன், ‘நித்திய ஜீவனைக் குறித்து வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்.’ இந்த நம்பிக்கை உங்களுக்கும் உதவும்.—தீத்து 1:3.
பைபிளை ஆழ்ந்து படிப்பதன் மூலம் பிரச்சினைகளின் மத்தியிலும் நீங்கள் உண்மையான சந்தோஷத்தை அடைய முடியும். இருந்தாலும், அதன் நடைமுறை பயனைக் குறித்த சில சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கலாம். உங்களை உண்மையிலேயே சந்தோஷமாய் வைத்துக்கொள்வதற்கு உதவும் பதில்களை பைபிளிலிருந்தே அளிக்க யெகோவாவின் சாட்சிகள் தயாராய் இருக்கிறார்கள். யெகோவா அளிக்கும் அந்த நம்பிக்கை நிறைவேற நீங்கள் காத்திருக்கும்போது, பின்வருமாறு விவரிக்கப்படுகிறவர்களில் ஒருவராக நீங்களும் இருக்க முடியும்: அவர்கள் “சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.”—ஏசாயா 35:10.
[பக்கம் 5-ன் படம்]
பைபிள் சத்தியம் மட்டுமே துயரத்தைத் தணிக்கும்
[பக்கம் 7-ன் படம்]
பைபிள் தரும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை சந்தோஷத்தை அளிக்கும்