கடவுளுக்குப் பயந்து —ஞானமுள்ளவர்களாய் இருங்கள்!
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”—நீதிமொழிகள் 9:10.
1. கடவுளுக்குப் பயப்படுதல் என்ற கருத்தை புரிந்துகொள்வது ஏன் பலருக்கும் கடினமாக இருக்கிறது?
ஒருவரை தேவபயமுள்ளவரென சொல்வது ஒரு காலத்தில் பெருமையாகக் கருதப்பட்டது. இன்றோ, கடவுளுக்குப் பயப்படுவதெல்லாம் பழம்பாணி என்று பலர் நினைக்கிறார்கள்; அதோடு இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்றும் சொல்கிறார்கள். ‘கடவுள் அன்புள்ளவர் என்றால் நான் ஏன் அவருக்குப் பயப்பட வேண்டும்?’ என்றும்கூட அவர்கள் கேட்கலாம். பயம் என்பதை எதிர்மறையான ஓர் உணர்ச்சியாக, சப்தநாடியையும் ஒடுங்கிப்போக வைக்கும் ஓர் உணர்ச்சியாகக்கூட அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் உண்மையான தேவபயம், வெறுமனே உணர்ச்சியை மட்டுமே அர்த்தப்படுத்தாமல் விரிவான அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது; அதை இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.
2, 3. உண்மையான தேவபயத்தில் என்ன உட்பட்டிருக்கிறது?
2 தேவபயம் என்ற வார்த்தையை நல்ல கருத்தில் பைபிள் பயன்படுத்துகிறது. (ஏசாயா 11:3) இது, கடவுளுக்கு ஆழ்ந்த பயபக்தியை, மிகுந்த மரியாதையைக் காட்டுவதாகும்; அதாவது அவருக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற பலமான ஆசையாகும். (சங்கீதம் 115:11) கடவுளுடைய ஒழுக்க நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றிலிருந்து சற்றும் விலகாமல் இருப்பதையும், நல்லது கெட்டது பற்றி அவர் சொல்பவற்றிற்கு இணங்க வாழ விரும்புவதையும் இது உட்படுத்துகிறது. இத்தகைய பயத்தைப் பற்றி ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “கடவுளிடம் காட்டப்படும் இந்த முக்கிய மனப்பான்மை, ஞானமாக நடந்துகொள்வதற்கும் கெட்டதை எல்லாம் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.” அதனால்தான் கடவுளுடைய வார்த்தை பொருத்தமாகவே நமக்கு இவ்வாறு சொல்கிறது: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.”—நீதிமொழிகள் 9:10.
3 சொல்லப்போனால், மனிதருடைய பல்வேறு செயல்களுக்கும் தேவபயத்திற்கும் சம்பந்தமுள்ளது. தேவபயம், ஞானத்தைத் தருவதோடு சந்தோஷம், சமாதானம், செல்வம், தீர்க்காயுசு, எதிர்பார்ப்பு, பற்று, திடநம்பிக்கை ஆகியவற்றையும் தருகிறது. (சங்கீதம் 2:11; நீதிமொழிகள் 1:7; 10:27; 14:26; 22:4; 23:17, 18; அப்போஸ்தலர் 9:31) இது விசுவாசம், அன்பு ஆகியவற்றோடும் நெருங்கிய தொடர்புடையது. சொல்லப்போனால், கடவுளோடும் சக மனிதரோடுமுள்ள பந்தத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் இது உட்படுத்துகிறது. (உபாகமம் 10:12; யோபு 6:14; எபிரெயர் 11:7) நம் பரலோகத் தகப்பன் நம் ஒவ்வொருவரையும் அக்கறையோடு கவனிக்கிறார், அதோடு, நம்முடைய தவறுகளை மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கையும் தேவபயத்தில் உட்படுகிறது. (சங்கீதம் 130:4) மனந்திரும்பாத துன்மார்க்கர் மட்டுமே கடவுளுக்கு முன் நடுநடுங்க காரணம் இருக்கிறது.a—எபிரெயர் 10:26-31.
யெகோவாவுக்குப் பயந்திருக்கக் கற்றுக்கொள்ளுதல்
4. ‘யெகோவாவுக்குப் பயந்திருக்கக் கற்றுக்கொள்வதற்கு’ எது நமக்கு உதவும்?
4 தேவபயம், ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் அடிப்படையாக இருப்பதால், நாம் எப்படி ‘யெகோவாவுக்குப் பயந்திருக்கக் கற்றுக்கொள்ளலாம்’? (உபாகமம் 17:19) கடவுளுக்குப் பயந்து நடந்த ஆண்கள், பெண்கள் பலருடைய உதாரணங்கள் “நமக்குப் போதனையாக” பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. (ரோமர் 15:4) தேவபயம் உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள, அந்த உதாரணங்களில் ஒன்றை இப்போது நாம் சிந்திக்கலாம்; அது பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீதின் உதாரணம்.
5. ஆடுகளை மேய்த்து வந்தது, தேவபயத்தைக் கற்றுக்கொள்ள தாவீதுக்கு எப்படி உதவியது?
5 இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுல் ஜனங்களுக்குப் பயந்ததாலும் தேவபயம் அவருக்கு இல்லாமல் போனதாலும் யெகோவா அவரை நிராகரித்தார். (1 சாமுவேல் 15:24-26) மறுபட்சத்தில், தாவீது வாழ்ந்த விதமும் யெகோவாவோடு அவர் வைத்திருந்த நெருங்கிய பந்தமும் அவர் உண்மையிலேயே தேவபயமுள்ளவராக இருந்தாரென காட்டுகிறது. சிறு வயதிலிருந்தே, அவர் தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்து வந்ததால் பெரும்பாலும் வெட்டவெளியில்தான் இருந்தார். (1 சாமுவேல் 16:11) அநேக இரவுகளில், நட்சத்திரங்கள் நிறைந்த வானின்கீழ் ஆடுகளோடு தங்கியது, தேவபயத்தைக் கற்றுக்கொள்ள தாவீதுக்கு உதவியிருக்க வேண்டும். அப்படித் தங்கியிருக்கையில், பிரமாண்டமான இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தபோதிலும், அவர் சரியான முடிவுக்கு வந்திருந்தார்; அதாவது கடவுள் நமது மரியாதைக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவர் என்ற முடிவுக்கு வந்திருந்தார். அதனால், பிற்பாடு அவர் இவ்வாறு எழுதினார்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.”—சங்கீதம் 8:3, 4.
6. யெகோவாவின் மகத்துவத்தை அறிந்தபோது தாவீது எப்படி உணர்ந்தார்?
6 பரந்துவிரிந்த நட்சத்திரங்கள் நிறைந்த வானோடு ஒப்பிட தான் மிகவும் சிறியவனாய் இருந்ததை உணர்ந்த தாவீது மலைத்து போனது சரியே. அது அவரை நடுநடுங்க வைப்பதற்குப் பதிலாக, இவ்வாறு யெகோவாவைப் புகழ்ந்து போற்றத் தூண்டியது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.” (சங்கீதம் 19:1) யெகோவாவிடமிருந்த பயபக்தி, தாவீதை அவரிடம் நெருங்கிவரச் செய்தது; அவருடைய பரிபூரண வழிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்றவும் தாவீதைத் தூண்டியது. அவர் யெகோவாவைப் பின்வருமாறு புகழ்ந்து பாடியபோது எப்படி உணர்ந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்: “தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன். கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.”—சங்கீதம் 86:10, 11.
7. கோலியாத்தை வீழ்த்த தேவபயம் தாவீதுக்கு எப்படி உதவியது?
7 இஸ்ரவேல் தேசத்தை பெலிஸ்தர் தாக்க வந்தபோது, அவர்களுடைய மாவீரனான கோலியாத் இஸ்ரவேலரை நிந்தித்தான்; அவன் சுமார் மூன்று மீட்டர் உயரமுள்ளவனாய் இருந்தான். அவன் சொன்னது இதுதான்: ‘என்னோடு நேருக்குநேர் போரிட உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள்! அவன் ஜெயித்துவிட்டால் நாங்கள் உங்களைச் சேவிப்போம்.’ (1 சாமுவேல் 17:4-10) சவுலும் அவருடைய படைவீரர் அனைவரும் நடுநடுங்கிப்போனார்கள், ஆனால் தாவீது பயப்படவே இல்லை. மனிதர் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு அல்ல யெகோவாவுக்கே பயப்பட வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் கோலியாத்திடம் இவ்வாறு சொன்னார்: “சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். . . . கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது.” அதன் பிறகு, ஒரு கவணையும் கல்லையும் பயன்படுத்தி, யெகோவாவின் உதவியோடு அந்த இராட்சதனை தாவீது வீழ்த்தினார்.—1 சாமுவேல் 17:45-47.
8. தேவபயமுள்ளவர்களைப் பற்றிய பைபிள் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 தாவீதைப் போலவே நாமும் கதிகலங்க வைக்கும் கஷ்டங்களையோ விரோதிகளையோ ஒருவேளை எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கலாம். அப்படியானால், நாம் என்ன செய்யலாம்? தாவீதையும் முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதரையும் போல நாமும் தேவபயத்துடன் அவற்றைச் சமாளிக்கலாம். தேவபயம் மனித பயத்தைப் போக்கிவிடும். விரோதிகளிடமிருந்து கஷ்டங்களை எதிர்ப்பட்ட சக இஸ்ரவேலரை கடவுளுடைய உண்மை ஊழியரான நெகேமியா இவ்வாறு ஊக்குவித்தார்: ‘அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்துக் கொள்ளுங்கள்.’ (நெகேமியா 4:14) தாவீதும் நெகேமியாவும் யெகோவாவுக்கு உண்மையாயிருந்த மற்ற ஊழியர்களும் அவர் தங்களுக்குக் கொடுத்த வேலைகளை அவருடைய ஆதரவோடு நன்கு செய்து முடித்தார்கள். அவ்வாறே, நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வேலையை செய்து முடிக்க தேவபயம் நமக்கும் உதவும்.
தேவபயத்தோடு பிரச்சினைகளைச் சந்தித்தல்
9. எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எல்லாம் தாவீது தேவபயத்தைக் காட்டினார்?
9 கோலியாத்தை தாவீது கொன்ற பிறகு, யெகோவா அவருக்கு இன்னும் அநேக வெற்றிகளைத் தேடித்தந்தார். அதைக் கண்டு பொறாமைப்பட்ட சவுல், முதலில் உணர்ச்சிவசப்பட்டு தாவீதைக் கொல்ல முயன்றார்; அதன் பிறகு தந்திரமாய் அவரைத் தீர்த்துக்கட்டப் பார்த்தார்; கடைசியில், படைவீரர்களுடன் சென்று அவரைக் கொலை செய்ய முற்பட்டார். தாவீதை ராஜாவாக்கப் போவதாக யெகோவா உறுதி அளித்திருந்தபோதிலும், அந்த நாள் வரும்வரையில் அவர் பல வருடங்களுக்குத் தலைமறைவாக இருக்கவும், யுத்தங்களை நடத்தவும், காத்திருக்கவும் வேண்டியிருந்தது. இந்த எல்லா சூழ்நிலைகளிலும், அவர் மெய்க் கடவுளுக்குப் பயந்து வாழ்ந்தார்.—1 சாமுவேல் 18:9, 11, 17; 24:2.
10. ஆபத்தான சூழ்நிலையில் தாவீது எப்படித் தேவபயத்தைக் காட்டினார்?
10 ஒரு சந்தர்ப்பத்தில், பெலிஸ்த பட்டணமாகிய காத்தின் ராஜாவான ஆகீசிடத்தில் தாவீது அடைக்கலம் தேடினார். அது கோலியாத்தின் ஊர். (1 சாமுவேல் 21:10-15) இந்த ராஜாவின் ஊழியக்காரர், தாவீதை தங்கள் தேசத்தின் எதிரி என எல்லார் முன்பாகவும் தெரிவித்துவிட்டார்கள். அந்த ஆபத்தான சூழ்நிலையில் தாவீது எப்படி நடந்துகொண்டார்? தன்னுடைய பாரத்தையெல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டினார். (சங்கீதம் 56:1-4, 11-13) அங்கிருந்து தப்புவதற்கு பைத்தியம் பிடித்தவரைப்போல் அவர் பாசாங்கு செய்தார்; இருந்தாலும், தன்னுடைய முயற்சிகளுக்குப் பலன் அளித்ததும், தன்னைக் காப்பாற்றியதும் யெகோவாவே என்பதை தாவீது அறிந்திருந்தார். அவர் முழு இருதயத்தோடு யெகோவாவை சார்ந்திருந்ததும் அவர்மேல் நம்பிக்கையாய் இருந்ததும், அவர் உண்மையிலேயே தேவபயமுள்ளவர் என்பதைக் காட்டின.—சங்கீதம் 34:4-6, 9-11.
11. பிரச்சினைகள் வரும்போது தாவீதைப் போல தேவபயத்தை நாம் எப்படிக் காட்டலாம்?
11 பிரச்சினைகளைச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை நம்புவதன் மூலம் தாவீதைப் போல நாமும் தேவபயத்தைக் காட்டலாம். “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்” என தாவீது சொன்னார். (சங்கீதம் 37:5) இது, நம் பிரச்சினைகளை யெகோவாவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, அவர் சரிசெய்யட்டும் என்று நம் பங்கில் எந்த முயற்சியும் எடுக்காதிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. உதவிக்காக தாவீது ஜெபம் செய்துவிட்டு, தன் பங்கில் முயற்சி எடுக்காமல் இருந்துவிடவில்லை. தனக்கு யெகோவா கொடுத்த திறமையையும் புத்தியையும் பயன்படுத்தி பிரச்சினைகளைச் சமாளித்தார். ஆனாலும், வெற்றிக்கு மனித முயற்சி மட்டும் போதாது என்பதை தாவீது அறிந்திருந்தார். நம்மைப் பொறுத்ததிலும் இது உண்மையாய் இருக்கிறது. நம்முடைய சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்த பிறகு, மற்றவற்றை யெகோவாவிடம் விட்டுவிட வேண்டும். சொல்லப்போனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யெகோவாவைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறெதுவும் நம்மால் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சமயத்தில்தான், தனிப்பட்ட விதத்தில் தேவபயத்தை நாம் வெளிக்காட்ட வேண்டும். இதயப்பூர்வமாக தாவீது இவ்வாறு சொன்னதிலிருந்து நாம் ஆறுதல் அடையலாம்: “கர்த்தருடைய இரகசியம் [“யெகோவாவோடு அன்யோன்யம்,” NW] அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.”—சங்கீதம் 25:14.
12. நம்முடைய ஜெபங்களை நாம் ஏன் முக்கியமானதாகக் கருத வேண்டும், எப்படிப்பட்ட மனோபாவத்தை நாம் ஒருபோதும் வெளிக்காட்டக் கூடாது?
12 ஆகவே, நம் ஜெபங்களையும் கடவுளோடுள்ள நம் பந்தத்தையும் முக்கியமானதாய் கருத வேண்டும். ஜெபத்தில் யெகோவாவை நாம் அணுகும்போது, “அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6; யாக்கோபு 1:5-8) அவர் நமக்கு உதவுகையில், அப்போஸ்தலன் பவுலுடைய ஆலோசனைப்படி, ‘நன்றியறிதலுள்ளவர்களாய்’ இருக்க வேண்டும். (கொலோசெயர் 3:15, 17) அபிஷேகம் செய்யப்பட்ட அனுபவமிக்க ஒரு கிறிஸ்தவர் விவரித்த சிலரைப் போல நாம் ஒருபோதும் இருக்கக் கூடாது: “ஒரு வெயிட்டரைப் போல் பரலோகத்தில் கடவுள் நின்றுகொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது தேவைப்படுகையில் கை சொடுக்கி அவரை அழைக்கும்போது அவர் வரவேண்டும் என்றும், காரியம் முடிந்ததும் அவர் போய்விட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.” இப்படிப்பட்ட மனோபாவம் தேவபயம் இல்லாததை வெளிக்காட்டுகிறது.
தேவபயம் இல்லாமல் போனபோது
13. கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு தாவீது எப்போது மரியாதைக் காட்டத் தவறினார்?
13 கஷ்டப்படுகையில் யெகோவாவின் உதவியை தாவீது பெற்றபோது, தேவபயம் இன்னும் அதிகமானது, அவர் மீதுள்ள நம்பிக்கையும் உறுதியானது. (சங்கீதம் 31:22-24) என்றாலும், மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில், போதிய தேவபயம் அவருக்கு இல்லாமற்போனது; அதனால் சில விபரீதங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்தர்ப்பம், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்த சமயமாகும். அப்போது, கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்தின்படி பெட்டியை லேவியர்கள் தோளில் சுமந்து வருவதற்குப் பதிலாக, வண்டியில் ஏற்றி வர ஏற்பாடு செய்தார். ஊசா அந்த வண்டியை நடத்தி வருகையில் பெட்டி சாய்ந்துவிடாதபடி அதைப் பிடித்தபோது, அவனுடைய “துணிவினிமித்தம்,” அதாவது அவபக்தியான செயலின் நிமித்தம், அந்த இடத்திலேயே செத்தான். ஆம், ஊசா பெரும் தவறைச் செய்தான்; இருந்தாலும், அப்படிப்பட்ட விபரீதம் நடப்பதற்குக் காரணம் கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு தாவீது தகுந்த மரியாதை காட்டத் தவறியதே. தேவபயம் என்பது அவருடைய ஏற்பாடுகளின்படி காரியங்களைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது.—2 சாமுவேல் 6:2-9; எண்ணாகமம் 4:15; 7:9.
14. இஸ்ரவேலரை தாவீது தொகையிட்டதால் என்ன நடந்தது?
14 பிற்பாடு, சாத்தானுடைய ஏவுதலால், இஸ்ரவேலரில் யுத்தத்திற்குச் செல்லத்தக்கவர்களை தாவீது தொகையிட்டார். (1 நாளாகமம் 21:1) இவ்வாறு செய்ததன் மூலம், தேவபயத்தைக் காட்டத் தவறினார். இதனால், 70,000 இஸ்ரவேலர் மடிந்தார்கள். இதற்காக யெகோவாவிடம் தாவீது மன்னிப்பு கேட்டபோதிலும், அவரும் ஜனங்களும் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.—2 சாமுவேல் 24:1-16.
15. தாவீது ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கு எது காரணமாய் இருந்தது?
15 மற்றொரு சந்தர்ப்பத்தில் தாவீது தற்காலிகமாக தேவபயத்தைக் காட்டத் தவறியதால், உரியாவின் மனைவியான பத்சேபாளுடன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டார். விபசாரம் செய்வதோ பிறனுடைய மனைவி மீது ஆசைப்படுவதோகூட தவறு என்பதை தாவீது அறிந்திருந்தார். (யாத்திராகமம் 20:14, 17) பத்சேபாள் குளித்துக்கொண்டிருக்கையில் அவளை தாவீது பார்த்ததுதான் பிரச்சினைக்கு ஆரம்பமாய் இருந்தது. சரியான தேவபயம் இருந்திருந்தால், அவர் தன்னுடைய பார்வையையும் எண்ணங்களையும் வேறுபக்கமாய்த் திருப்பியிருந்திருப்பார். அதற்குப் பதிலாக, வக்கிர ஆசைகள் தேவபயத்தை அமுக்கிப்போடும்வரை அவர் ‘பார்த்துக்கொண்டே இருந்ததாக’ தெரிகிறது. (மத்தேயு 5:28; 2 சாமுவேல் 11:1-4) தன்னுடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவா முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதை தாவீது நினைத்துப் பார்க்கத் தவறினார்.—சங்கீதம் 139:1-7.
16. தான் செய்த தவறினால் என்னென்ன விபரீதங்களை தாவீது அனுபவித்தார்?
16 பத்சேபாளிடம் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதில் தாவீதுக்கு ஒரு மகன் பிறந்தான். அதன் பிறகு சீக்கிரத்திலேயே அவருடைய பாவத்தை உணர்த்த நாத்தான் தீர்க்கதரிசியை யெகோவா அனுப்பினார். தவறை அவர் உணர்ந்தபோது, மீண்டும் தேவபயமுள்ளவரானார், தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டார். தன்னைப் புறக்கணியாமலும் பரிசுத்த ஆவியை தன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இருக்கும்படி யெகோவாவிடம் அவர் மன்றாடினார். (சங்கீதம் 51:7, 11) தாவீதை யெகோவா மன்னித்து, அவருடைய தண்டனையைக் குறைத்தபோதிலும், அவருடைய செயலினால் விளைந்த எல்லா விபரீதங்களிலிருந்தும் அவரைக் காப்பாற்றவில்லை. அவருக்குப் பிறந்த மகன் இறந்தான், அதைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்தைப் பிரச்சினைகளும் துயரங்களும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்தன. தேவபயத்தைக் காட்டத் தவறியதால் வந்த கதியைப் பாருங்கள்!—2 சாமுவேல் 12:10-14; 13:10-14; 15:14.
17. பாவம் செய்வதால் வரும் பிரச்சினைகளை உதாரணத்துடன் விளக்குங்கள்.
17 இன்றும்கூட, ஒழுக்க விஷயங்களில் தேவபயத்தை இழந்தால் இதுபோன்ற மோசமான, தொடரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். உதாரணமாக, ஓர் இளம் மனைவி, வெளிநாட்டில் வேலை பார்க்கிற தன்னுடைய கணவர் தனக்கு துரோகம் இழைத்ததை அறிந்தபோது எவ்வளவு துடித்துப்போயிருப்பார் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அதிர்ச்சியும் துக்கமும் தாங்க முடியாமல், முகத்தைப் பொத்திக்கொண்டு கதறி அழுதாள். அவளுடைய நம்பிக்கையையும் மரியாதையையும் அவர் மீண்டும் பெறுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? உண்மையிலேயே தேவபயத்தைக் காட்டும்போது அப்படிப்பட்ட விபரீதங்களைத் தவிர்க்க முடியும்.—1 கொரிந்தியர் 6:18.
தேவபயம் பாவத்திலிருந்து நம்மைத் தடுக்கிறது
18. சாத்தானுடைய இலட்சியம் என்ன, அதை அடைவதற்கு என்ன முறையை அவன் பயன்படுத்துகிறான்?
18 இந்த உலகத்தின் ஒழுக்க நெறிகளை சாத்தான் மிகத் தீவிரமாகச் சீர்குலைத்து வருகிறான்; முக்கியமாக, உண்மை கிறிஸ்தவர்களைப் பாழ்ப்படுத்த அவன் விரும்புகிறான். அதற்காக, இருதயத்தையும் மனதையும் அடைவதற்கு முக்கிய வழியாக இருக்கும் புலன்களை, குறிப்பாக, கண்களையும் காதுகளையும் அவன் தவறான காரியங்களில் ஈடுபடுத்துகிறான். (எபேசியர் 4:17-19) எதேச்சையாக, ஒழுக்கக்கேடான படங்களைப் பார்க்கவோ, ஒழுக்கங்கெட்ட ஆட்களைச் சந்திக்கவோ அல்லது ஒழுக்கக்கேடான வார்த்தைகளைக் கேட்கவோ நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
19. சோதனையைச் சமாளிக்க தேவபயம் ஒரு கிறிஸ்தவருக்கு எவ்வாறு உதவியது?
19 ஐரோப்பாவைச் சேர்ந்த ஆன்ட்ரேb என்பவரைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம். அவர் ஒரு கிறிஸ்தவ மூப்பராகவும், குடும்பஸ்தராகவும், டாக்டராகவும் இருக்கிறார். அவர் இரவு முழுக்க ஆஸ்பத்திரியில் வேலை பார்க்க வேண்டியிருந்த சமயத்தில் கூடவேலை பார்த்த பெண்கள் தங்களுடன் ‘உறவாட’ அழைப்புவிடுக்கும் வகையில் துண்டு சீட்டுகளில் காதல் சின்னமான இருதயத்தை வரைந்து அவற்றை அவருடைய தலையணையில் மாறிமாறி குத்தி வைத்தார்கள். அவர்களுடைய அழைப்புகளுக்கு அவர் அடிபணியவே இல்லை. அதுமட்டுமல்ல, அந்த ஒழுக்கங்கெட்ட சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக வேறு இடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தேவபயம் இருந்ததால் அவர் மிக ஞானமாக நடந்துகொள்ள முடிந்தது, அநேக ஆசீர்வாதங்களையும் பெற முடிந்தது. இப்போது ஆன்ட்ரே தனது நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் பகுதிநேர சேவை செய்துவருகிறார்.
20, 21. (அ) பாவம் செய்வதைத் தவிர்க்க தேவபயம் எப்படி நமக்கு உதவும்? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதை ஆராய்வோம்?
20 கெட்ட எண்ணங்களிலேயே மூழ்கியிருப்பது ஆபத்தானது. அப்படியிருப்பவர், தான் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதற்காக யெகோவாவுடன் உள்ள அருமையான பந்தத்தைக்கூட உதறித்தள்ள தயாராக இருக்கிறார். (யாக்கோபு 1:14, 15) மறுபட்சத்தில், நாம் யெகோவாவுக்குப் பயப்படுவோமானால், நம்முடைய ஒழுக்கத்தைக் கெடுத்துப்போடுகிற ஆட்கள், இடங்கள், காரியங்கள், பொழுதுபோக்குகள் ஆகியவற்றிலிருந்து நாம் விலகுவோம், ஏன் அந்த இடத்தைவிட்டே வெளியேறிவிடுவோம். (நீதிமொழிகள் 22:3) அதனால் நமக்குத் தர்மசங்கடமான நிலை ஏற்படலாம், தியாகங்களும் செய்ய வேண்டியிருக்கலாம்; என்றாலும், கடவுளுடைய தயவை இழந்துபோவதோடு ஒப்பிட இவை எல்லாம் அற்பமானவையே. (மத்தேயு 5:29, 30) அப்படியானால், எவ்வகையான ஆபாச காட்சிகள் உட்பட, ஒழுக்கக்கேடான எதையும் வேண்டுமென்றே பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்; ‘மாயையை [அதாவது, வீணானவற்றை] பாராதபடி நம் கண்களை விலக்க’ வேண்டும். தேவபயத்தில் இந்த அம்சமும் நிச்சயமாகவே உட்பட்டிருக்கிறது. அப்படிச் செய்வோமானால், யெகோவா ‘நம்மை உயிர்ப்பிப்பார்,’ நமக்கு உண்மையில் தேவைப்படும் அனைத்தையும் தருவார்.—சங்கீதம் 84:11; 119:37.
21 ஆம், உண்மையான தேவபயத்துடன் செயல்படுவதே எப்போதும் ஞானமான வழியாகும். அது உண்மையான சந்தோஷத்திற்கும் ஊற்றுமூலமாக இருக்கிறது. (சங்கீதம் 34:9) அடுத்த கட்டுரையில் இதை விளக்கமாக ஆராயலாம்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு! ஜனவரி 8, 1998 இதழில், “பைபிளின் கருத்து: அன்பான கடவுளுக்கு நீங்கள் எவ்விதம் பயப்பட முடியும்?” என்ற கட்டுரையைக் காண்க.
b பெயர் மாற்றப்பட்டுள்ளது.
விளக்க முடியுமா?
• தேவபயத்தில் என்னென்ன கிறிஸ்தவ குணங்கள் உட்பட்டுள்ளன?
• தேவபயம் எப்படி மனித பயத்தைப் போக்குகிறது?
• ஜெபத்தைக் குறித்த சரியான கண்ணோட்டம் நமக்கு இருப்பதை எப்படிக் காட்டலாம்?
• தேவபயம் எப்படி பாவம் செய்யாதபடி நம்மைத் தடுகிறது?
[பக்கம் 23-ன் படம்]
யெகோவாவின் படைப்புகளைக் கவனித்ததன் மூலம் தேவபயத்தை தாவீது கற்றுக்கொண்டார்
[பக்கம் 24-ன் படங்கள்]
வசீகரமான காட்சியை நீங்கள் எதேச்சையாக பார்த்தால் என்ன செய்வீர்கள்?