யெகோவாவுக்குப் பயந்திருங்கள்—சந்தோஷமாயிருங்கள்!
“யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 112:1, NW.
1, 2. யெகோவாவுக்குப் பயப்படுவது எதைத் தரும்?
சந்தோஷம் தானாகவே வந்துவிடுவதில்லை. சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பது, நல்லதைச் செய்வது, தவறான காரியங்களை விட்டுவிலகுவது ஆகியவற்றைப் பொறுத்தே நிஜ சந்தோஷம் கிடைக்கிறது. மிகச் சிறந்த விதத்தில் வாழும் வழியைக் கற்றுத்தர, நமது படைப்பாளர் யெகோவா அவரது வார்த்தையான பைபிளை நமக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய அறிவுரையை நாடி, அதன்படி நடந்து, தேவபயத்தைக் காட்டுகையில் நாம் உண்மையிலேயே திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும்.—சங்கீதம் 23:1; நீதிமொழிகள் 14:26.
2 தவறானதைச் செய்வதற்கான தூண்டுதலைத் தவிர்ப்பதற்கும் சரியானதைச் செய்வதற்கான தைரியத்தைப் பெறுவதற்கும் உண்மையான தேவபயம் ஒருவருக்கு எப்படி உதவுகிறது என்பதை பைபிள் மற்றும் நவீனகால உதாரணங்கள் மூலம் சிந்திக்கப் போகிறோம். தேவபயம், தவறான போக்கை சரிசெய்வதற்கு உதவுவதன் மூலம் நமக்குச் சந்தோஷத்தை அளிக்க முடியும் என்பதை தாவீது ராஜாவின் உதாரணத்திலிருந்து சிந்திக்கப் போகிறோம். அதுமட்டுமல்ல, தேவபயம் என்பது பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கிற ஓர் அருமையான சொத்து என்பதையும் பார்க்கப் போகிறோம். சொல்லப்போனால், கடவுளுடைய வார்த்தை நமக்கு இவ்வாறு உறுதி அளிக்கிறது: “யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 112:1, NW.
இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெறுதல்
3. பாவங்களிலிருந்து மனந்திரும்ப தாவீதுக்கு எது உதவியது?
3 தாவீது, மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில் சரியான தேவபயத்தைக் காட்டாமல், பாவம் செய்ததைப் பற்றி முந்தின கட்டுரையில் நாம் பார்த்தோம். என்றாலும், யெகோவா கொடுத்த சிட்சைக்கு அவர் பிரதிபலித்த விதம், அவருக்குத் தேவபயமிருந்ததைக் காட்டியது. கடவுள்மீது அவருக்குப் பயபக்தியும் மரியாதையும் இருந்ததால், குற்றத்தை ஒப்புக்கொண்டு, தவறான போக்கிலிருந்து விலகி, யெகோவாவுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளத் தூண்டப்பட்டார். செய்த தவறுகளின் காரணமாக அவரும் மற்றவர்களும் துன்பப்பட்ட போதிலும், அவர் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதால் யெகோவாவின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து பெற்றார். இன்று, மோசமான பாவத்தைச் செய்த கிறிஸ்தவர்களுக்கு தாவீதின் உதாரணம் நிச்சயம் தைரியத்தை அளிக்கும்.
4. இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற தேவபயம் ஒருவருக்கு எப்படி உதவலாம்?
4 ஸான்யாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.a அவர் முழுநேர ஊழியராகச் சேவை செய்துவந்தபோதிலும், கெட்ட ஆட்களோடு வைத்திருந்த சகவாசத்தால் கிறிஸ்தவமற்ற நடத்தையில் ஈடுபட்டார். அதனால் சபைநீக்கம் செய்யப்பட்டார். தன்னுடைய தவறை உணர்ந்தபோது, யெகோவாவுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்தார். பிற்பாடு, சபையில் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இவை எல்லாவற்றையும் சந்தித்தபோதிலும் யெகோவாவுக்குச் சேவை செய்யும் ஆசை மட்டும் அவருக்குக் குறையவே இல்லை. காலப்போக்கில், மீண்டும் முழுநேர ஊழியத்தைத் தொடங்கினார். பிற்பாடு, அருமையான கிறிஸ்தவ மூப்பரை மணந்தார். இப்போது தன் கணவரோடு சேர்ந்து சபையில் சந்தோஷமாகச் சேவை செய்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கைப் பாதையைவிட்டு சில காலத்திற்கு விலகிப்போனதை நினைத்து அவர் வருந்துகிறபோதிலும், யெகோவாவிடம் திரும்புவதற்குத் தேவபயம் அவருக்கு உதவியதற்காகச் சந்தோஷப்படுகிறார்.
பாவம் செய்வதைவிட துன்பப்படுவதே மேல்
5, 6. இரண்டு முறையும் தாவீது ஏன் சவுலை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார் என்பதை விளக்குங்கள்.
5 மோசமான ஒரு பாவத்தைத் தவிர்க்க, தேவபயம் ஒருவருக்கு உதவுகிறதென்றால் அது எவ்வளவு பிரயோஜனமுள்ளது! தாவீதின் விஷயத்தில் இது உண்மையாய் இருந்தது. ஒருசமயம், சவுல் மூவாயிரம் பேருடன் தாவீதைத் தேடிச் சென்றபோது ஒரு குகைக்குள் நுழைந்தார். அங்குதான் தாவீதும் அவருடைய ஆட்களும் ஒளிந்திருந்தார்கள். அப்போது தாவீதின் ஆட்கள் அவரிடம் சவுலைக் கொலைசெய்யும்படி சொன்னார்கள். அவருடைய விரோதியை யெகோவாவே தாவீதின் கையில் ஒப்படைத்திருப்பதாகக் கூறினார்கள். தாவீது தவழ்ந்து சென்று சவுலுடைய சால்வையின் தொங்கலை அறுத்தார். அவர் தேவபயமுள்ளவராய் இருந்ததால், அவர் செய்த அந்தச் சிறிய காரியமே அவருடைய மனதை வதைத்தது. கோபத்தில் கொதித்துப் போயிருந்த தன் ஆட்களை தாவீது தடுத்து இவ்வாறு கூறினார்: ‘கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் . . . இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்வது’ நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.b—1 சாமுவேல் 24:1-7.
6 பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில், பாளயத்தில் சவுல் இரவிலே கூடாரமிட்டு தங்கியிருந்தபோது, “கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால்” அவரும் அவருடைய ஆட்கள் எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தாவீதும், அவருடைய சகோதரியின் மகனான துணிவுமிக்க அபிசாயும் பாளயத்தின் நடுவே சவுல் படுத்திருந்த இடத்தில் போய் நின்றார்கள். சவுலை ஒரேயடியாகத் தொலைத்துக்கட்ட அபிசாய் விரும்பினார். ஆனால் தாவீது அவரைத் தடுத்து இவ்வாறு கேட்டார்: “கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப்போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்?”—1 சாமுவேல் 26:9, 12.
7. பாவம் செய்வதிலிருந்து தாவீதை எது தடுத்தது?
7 இரண்டு முறை வாய்ப்புக் கிடைத்தும் தாவீது ஏன் சவுலைக் கொல்லவில்லை? ஏனென்றால், சவுலைக் காட்டிலும் அவர் யெகோவாவுக்கு அதிகமாக பயந்தார். சரியான தேவபயம் அவருக்கு இருந்ததால், பாவம் செய்வதைவிட தேவைப்பட்டால் துன்பப்படவே அவர் தயாராக இருந்தார். (எபிரெயர் 11:25) யெகோவா தம் ஜனங்களிடமும் தன்னிடமும் அக்கறை வைத்திருந்ததை உறுதியாக நம்பினார். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவரை நம்பும்போது சந்தோஷமும் அநேக ஆசீர்வாதங்களும் கிடைக்கும் என்றும் அவரை அலட்சியம் செய்யும்போது அவருடைய தயவு கிடைக்காது என்றும் தாவீது அறிந்திருந்தார். (சங்கீதம் 65:4) தன்னை ராஜாவாக்குவதாகக் கொடுத்த வாக்கை கடவுள் நிறைவேற்றுவார் என்பதையும் தம்முடைய உரிய காலத்தில், உரிய வழியில் சவுலை பதவியிலிருந்து நீக்குவார் என்பதையும் தாவீது அறிந்திருந்தார்.—1 சாமுவேல் 26:10.
தேவபயம் சந்தோஷத்தை அளிக்கிறது
8. பிரச்சினைகளின் மத்தியிலும் தாவீது நடந்துகொண்ட விதம் நமக்கு எப்படி ஓர் உதாரணமாகத் திகழ்கிறது?
8 கிறிஸ்தவர்களான நாம், ஏளனத்தையும் துன்புறுத்தலையும் பிற சோதனைகளையும் எதிர்பார்க்கலாம். (மத்தேயு 24:9; 2 பேதுரு 3:3) சில சமயங்களில் சக வணக்கத்தாரிடமிருந்துகூட பிரச்சினைகளை எதிர்ப்படலாம். என்றாலும், யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார், நம் ஜெபங்களைக் கேட்கிறார், உரிய காலத்தில் தம்முடைய சித்தத்திற்கு இசைய காரியங்களைச் சரிசெய்வார் என்று நாம் அறிந்திருக்கிறோம். (ரோமர் 12:17-21; எபிரெயர் 4:16) ஆகவே, நம்மை எதிர்ப்பவர்களுக்கு அல்ல, ஆனால் கடவுளுக்கே நாம் பயப்படுகிறோம்; துன்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்கு அவரையே எதிர்நோக்கி இருக்கிறோம். தாவீதைப் போல, நாம் பழிக்குப்பழி வாங்குவதுமில்லை, துன்பத்தைத் தவிர்ப்பதற்காக நீதியான நியமங்களை விட்டுக்கொடுப்பதுமில்லை. இதனால், முடிவில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. ஆனால் அந்தச் சந்தோஷம் எப்படிக் கிடைக்கிறது?
9. துன்புறுத்தலின் மத்தியிலும் தேவபயம் சந்தோஷத்தைத் தருவதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
9 ஆப்பிரிக்காவில் பல காலமாக மிஷனரி சேவை செய்துவரும் ஒரு சகோதரர் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு சகோதரியையும் அவருடைய டீனேஜ் மகளையும் எனக்குத் தெரியும். அவர்கள் கிறிஸ்தவ நடுநிலை காரணமாக அரசியல் கட்சி அட்டைகளை வாங்க மறுத்தார்கள். அவர்களை நிறையப் பேர் சேர்ந்து அடித்து நொறுக்கினார்கள். பிறகு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். ஏன் இப்படி நடந்ததென தெரியாமல் அழுதுகொண்டிருந்த தன் மகளைப் போகும் வழியில் ஆறுதல்படுத்த அந்தச் சகோதரி முயன்றார். அந்தச் சமயத்தில் அவர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய மனசாட்சி சுத்தமாக இருந்தது. பிற்பாடு, தாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததை நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஒருவேளை அவர்கள் அரசியல் கட்சி அட்டைகளை வாங்கியிருந்தால் அந்த ஆட்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கு குளிர் பானங்களைக் குடிக்கக் கொடுத்து ஆடல் பாடலோடு வீடுவரை அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்படி விட்டுகொடுத்து இணங்கிப்போயிருந்தாலோ, துளியும் சந்தோஷம் இல்லாதவர்களாக இருந்திருப்பார்கள்.” தேவபயம் அப்படிப்பட்ட துக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தது.
10, 11. ஒரு பெண் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் என்ன நல்ல பலன்களைப் பெற்றார்?
10 உயிரின் பரிசுத்தத்தன்மைக்கு மதிப்பு கொடுப்பது சம்பந்தமான சோதனைகளை எதிர்ப்படுகையிலும் தேவபயத்தைக் காட்டுவது சந்தோஷத்தில் விளைவடைகிறது. மேரி என்ற பெண் மூன்றாவது முறை கர்ப்பமானபோது, கருக்கலைப்பு செய்யும்படி டாக்டர் சொன்னார். “உங்களுடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது. எந்த நேரத்திலும் உங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடலாம், அப்போது 24 மணிநேரத்திற்குள் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. பிள்ளையும் இறந்துவிடும். எப்படியானாலும், எந்தக் குறையும் இல்லாமல் பிள்ளை பிறக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என அவர் சொன்னார். யெகோவாவின் சாட்சிகளோடு மேரி பைபிளைப் படித்து வந்திருந்தார், ஆனால், முழுக்காட்டுதல் பெற்றிருக்கவில்லை. “இருந்தாலும், நான் யெகோவாவை சேவிக்கவே முடிவு செய்திருந்தேன். என்ன நேர்ந்தாலும் அவருக்குக் கீழ்ப்படியத் தீர்மானமாய் இருந்தேன்” என மேரி சொல்கிறார்.—யாத்திராகமம் 21:22, 23.
11 கர்ப்ப காலத்தில் அவர், பைபிளைப் படிப்பதிலும் குடும்பத்தைக் கவனிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டார். கடைசியில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. “முதல் இரண்டு முறையைவிட இந்த முறை பிரசவத்தின்போது கொஞ்சம் கஷ்டப்பட்டபோதிலும், பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படவில்லை” என மேரி சொல்கிறார். தேவபயம், நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ள மேரிக்கு உதவியது. அவர் சீக்கிரத்திலேயே முழுக்காட்டுதல் பெற்றார். அந்த ஆண் குழந்தை வளர்ந்தபோது, அவனும் யெகோவாவுக்குப் பயப்பட கற்றுக்கொண்டான். இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்றில் அவன் சேவை செய்துவருகிறான்.
‘யெகோவாவுக்குள் உங்களைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள்’
12. தேவபயம் தாவீதை எப்படித் திடப்படுத்தியது?
12 யெகோவா மீதுள்ள பயம், தவறு செய்வதிலிருந்து மட்டுமே தாவீதைத் தடுக்கவில்லை. கஷ்டமான சூழ்நிலைகளில் உறுதியோடும் ஞானமாகவும் செயல்பட அவரைப் பலப்படுத்தியது. சவுலிடமிருந்து தப்பிக்க, தாவீதும் அவருடைய ஆட்களும் பெலிஸ்தரின் நாட்டிலுள்ள சிக்லாக் எனும் நகரத்திலே ஒரு வருடம், நான்கு மாதங்கள் தஞ்சம் புகுந்தார்கள். (1 சாமுவேல் 27:5-7) ஒருசமயம் தாவீதும் அவருடைய ஆட்களும் இல்லாத சமயத்தில், கொள்ளையடிக்க வந்த அமலேக்கியர் நகரத்தைச் சுட்டெரித்துப்போட்டு, அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும், மந்தைகளையும் கொண்டு சென்றுவிட்டார்கள். தாவீதும் அவருடைய ஆட்களும் திரும்பி வந்தபோது, நடந்த சம்பவத்தைப் பார்த்து சத்தமிட்டு அழுதார்கள். அவருடைய ஆட்களின் துக்கம் கோபமாக மாறியபோது, தாவீதின்மேல் கல்லெறிய வேண்டுமென பேசிக்கொண்டார்கள். அவர் மிகுந்த வேதனையில் இருந்தபோதிலும், சோர்ந்துவிடவில்லை. (நீதிமொழிகள் 24:10) அவர் தேவபயமுள்ளவராய் இருந்ததால், யெகோவாவிடம் வேண்டினார், ‘கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டார்.’ கடவுளுடைய உதவியோடு தாவீதும் அவருடைய ஆட்களும் அமலேக்கியரை முறியடித்து அவர்கள் கொண்டுபோன அனைத்தையும் மீட்டார்கள்.—1 சாமுவேல் 30:1-20.
13, 14. நல்ல தீர்மானங்கள் எடுப்பதற்கு தேவபயம் ஒரு கிறிஸ்தவருக்கு எப்படி உதவியது?
13 இன்றும்கூட கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாமீது நம்பிக்கையும் உறுதியுடன் செயல்படுவதற்கு தைரியமும் தேவைப்படுகிற சூழ்நிலைகளை எதிர்ப்படுகிறார்கள். உதாரணமாக, கிறிஸ்டினா என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுமியாக இருந்தபோது அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துவந்தார். ஆனால், இசை நிகழ்ச்சிகளில் பியானோ வாசிப்பவராக ஆவதற்கு ஆசைப்பட்டார். அதற்காக பெரும் முயற்சி எடுத்தார். அதேசமயத்தில், பிரசங்க வேலையில் ஈடுபட சங்கோஜப்பட்டார்; முழுக்காட்டுதல் பெறுகையில் வரும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள பயந்தார். கடவுளுடைய வார்த்தையை அவர் தொடர்ந்து படிக்கையில் அதன் செல்வாக்கை உணர்ந்தார். ஆம், யெகோவாமீது பயத்தை வளர்ப்பது எப்படியென்பதை அவர் கற்றுவந்தார்; தம்முடைய ஊழியர்கள் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் தம்மை நேசிக்க வேண்டுமென யெகோவா எதிர்பார்ப்பதை அவர் அறிந்துகொண்டார். (மாற்கு 12:30) இது யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கவும் முழுக்காட்டுதல் பெறவும் அவரைத் தூண்டியது.
14 ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு உதவிகேட்டு யெகோவாவிடம் கிறிஸ்டினா ஜெபித்தார். “இசை நிகழ்ச்சிகளில் பியானோ வாசிப்பதற்கு நான் பல இடங்களுக்குப் பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்; ஒரு வருஷத்தில் குறைந்தது 400 இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும். அதனால் அந்த வேலையை விட்டுவிட்டு ஒரு டீச்சராக ஆவதற்குத் தீர்மானித்தேன். அதன் மூலம் என்னுடைய தேவைகளையும் கவனித்துக்கொள்ள முடியும், முழுநேர ஊழியமும் செய்ய முடியும்” என்று கிறிஸ்டினா சொல்கிறார். அந்தச் சமயத்தில், அந்நாட்டின் பிரபல இசை அரங்கில் முதன்முறையாக பியானோ வாசிப்பதற்கு அவர் ஏற்கெனவே சம்மதித்திருந்தார். “அதுதான் நான் பங்கேற்ற முதலும் கடைசியுமான இசை நிகழ்ச்சியாக இருந்தது” என்று அவர் சொல்கிறார். அதன் பிறகு ஒரு கிறிஸ்தவ மூப்பரை மணந்தார். அவர்கள் இருவரும் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகத்தில் சேவைசெய்து வருகிறார்கள். சரியான தீர்மானங்கள் எடுக்க தனக்கு யெகோவா பலம் அளித்ததற்காகவும் தன்னுடைய நேரத்தையும் சக்தியையும் அவருடைய சேவையில் பயன்படுத்த முடிவதற்காகவும் அவர் சந்தோஷப்படுகிறார்.
ஓர் அருமையான சொத்து
15. தாவீது தன் பிள்ளைகளுக்கு என்ன சொத்தைக் கொடுக்க விரும்பினார், அதை அவர் எப்படிக் கொடுத்தார்?
15 “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்” என தாவீது எழுதினார். (சங்கீதம் 34:11) ஒரு தகப்பனாக இருந்த தாவீது, தன்னால் முடிந்த அருமையான சொத்தை, அதாவது உண்மையான, சமநிலையான, உள்ளப்பூர்வமான தேவபயத்தை, தன் பிள்ளைகளுக்குக் கொடுக்கத் தீர்மானமாய் இருந்தார். அவர் சொல்லிலும் சரி செயலிலும் சரி, யெகோவாவைக் கறாரானவராகவோ கொடூரமானவராகவோ, குற்றங்கண்டுபிடிக்கிறவராகவோ சித்தரிக்கவில்லை. மாறாக, அன்பானவராக, அக்கறையுள்ளவராக, பூமியிலுள்ள தம் பிள்ளைகளை மன்னிக்கிற தகப்பனாக அவரைச் சித்தரித்தார். “தவறாக எடுத்துவைத்த அடிகளைக் கணக்கு வைப்பவன் யார்?” என தாவீது கேட்டார். அதன் பிறகு, யெகோவா நம்முடைய தவறுகளை எப்போதும் துருவி ஆராய்பவரல்ல என தான் நம்புவதை வெளிக்காட்டும் விதத்தில் அவர் இவ்வாறு சொன்னார்: “அறியாமல் செய்யும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்!” அதிக முயற்சி எடுத்தால், தன்னுடைய சொல்லும் சிந்தனையும் யெகோவாவுக்குப் பிரியமானதாக இருக்குமென தாவீது உறுதியாய் நம்பினார்.—சங்கீதம் 19:12, 14, பையிங்டன்.
16, 17. யெகோவாவுக்குப் பயப்பட தங்களுடைய பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படிக் கற்றுக்கொடுக்கலாம்?
16 தாவீது இன்றைய பெற்றோருக்கு ஓர் உதாரணமாய் திகழ்கிறார். ரால்ஃப் என்பவரும் அவருடைய தம்பியும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் சத்தியத்தில் சந்தோஷமாக நிலைத்திருக்கும் விதத்தில் எங்களுடைய அப்பா அம்மா எங்களை வளர்த்தார்கள். நாங்கள் சிறுவர்களாக இருக்கையில், சபை விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசும்போது எங்களையும் சேர்த்துக்கொண்டார்கள். அதனால் சத்தியத்தில் நாங்களும் அவர்களைப் போல அதிக ஆர்வம் காட்டினோம். யெகோவாவின் சேவையில் சிறந்ததைச் செய்ய முடியுமென்ற நம்பிக்கையை எங்களுக்கு ஊட்டி வளர்த்தார்கள். சொல்லப்போனால், ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்பட்ட ஒரு நாட்டில்தான் நாங்கள் பல வருடங்கள் வாழ்ந்தோம். அங்கு புதிய சபைகளை உருவாக்குவதற்கு உதவினோம்.
17 “நாங்கள் சரியான பாதையில் செல்ல எது உதவியதென்றால், எங்களுடைய பெற்றோர் கெடுபிடியான சட்டங்களைப் போடவில்லை. அதோடு, யெகோவா அவர்களுக்கு நிஜமானவராகவும், ரொம்பவே பாசமுள்ளவராகவும், நல்லவராகவும் இருந்தார் என்ற உண்மையும் எங்களுக்கு உதவியது. யெகோவாவைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளவும் அவருக்குப் பிரியமாக நடக்கவும் அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் காட்டிய உண்மையான தேவபயத்தையும் அன்பையும் பார்த்து நாங்கள் கற்றுக்கொண்டோம். நாங்கள் ஏதாவது தவறு செய்தபோதுகூட, யெகோவா இனி உங்களிடம் அன்புகாட்டப் போவதில்லை என்று சொல்லி எங்கள் மனதை நோகடித்ததுமில்லை, கோபத்தில் அநாவசியமான கட்டுப்பாடுகளை வைக்கவுமில்லை. பெரும்பாலான சமயங்களில், எங்களுடன் உட்கார்ந்து பேசினார்கள். எங்களுடைய இருதயத்தில் பதியும்படி சொல்லிக்கொடுக்க அம்மா முயற்சி செய்த சில சமயங்களில் அவருடைய கண்களே கலங்கியிருக்கின்றன. அப்படிச் சொல்லிக்கொடுத்ததற்குப் பலனும் கிடைத்தது. யெகோவாவுக்குப் பயப்படுவது அருமையான ஒன்று என்பதையும் அவருடைய சாட்சியாக இருப்பது சந்தோஷமும் இன்பமுமானது, பாரமானதல்ல என்பதையும் எங்கள் பெற்றோருடைய சொல்லிலும் செயலிலுமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.”—1 யோவான் 5:3.
18. உண்மைக் கடவுளுக்குப் பயப்படுவதால் நாம் எதைப் பெற்றுக்கொள்வோம்?
18 ‘தாவீதுடைய கடைசி வார்த்தைகளில்’ இதுவும் அடங்கும்: “நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, . . . சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்.” (2 சாமுவேல் 23:1, 3, 4) தாவீதின் மகனும் அவருக்குப் பின் ராஜாவானவருமான சாலொமோன் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனால்தான் தனக்கு “கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை” தரும்படியும் ‘நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கும்’ திறனைத் தரும்படியும் யெகோவாவிடம் கேட்டார். (1 இராஜாக்கள் 3:9; NW) யெகோவாவுக்குப் பயப்படுவது ஞானத்தையும் சந்தோஷத்தையும் தரும் என்பதை சாலொமோன் அறிந்திருந்தார். பிற்பாடு, அவர் பிரசங்கி புத்தகத்தின் முடிவில் இவ்வாறு தொகுத்துக் கூறினார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” (பிரசங்கி 12:13, 14) இந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்துவோமானால், “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன்” ஞானமும் சந்தோஷமும் மட்டுமல்ல, “ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்வோம்.—நீதிமொழிகள் 22:4.
19. “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்னவென்பதைப் புரிந்துகொள்வதற்கு எது நமக்கு உதவும்?
19 யெகோவாவின் உண்மை ஊழியர்களுடைய வாழ்க்கையில் சரியான தேவபயம் சிறந்த பங்கு வகிக்கிறது என்பதை பைபிளிலும் நவீன காலத்திலும் காணப்படும் உதாரணங்களிலிருந்து நாம் அறிந்துகொண்டோம். அத்தகைய பயம், நம் பரலோகத் தகப்பனுக்குப் பிரியமில்லாததைச் செய்யாதவாறு தடுப்பதோடு, நம் எதிரிகளைச் சமாளிப்பதற்குத் தைரியத்தையும் சோதனைகளை மற்றும் கஷ்டங்களைச் சகிப்பதற்குப் பலத்தையும் தருகிறது. ஆகவே, சிறியோர்முதல் பெரியோர்வரை நாம் எல்லாருமே கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிப்போமாக. கற்றதைத் தியானிப்போமாக. தவறாமல் இருதயப்பூர்வமாக ஜெபம்செய்து யெகோவாவிடம் நெருங்கி வருவோமாக. இவ்வாறு செய்வதன் மூலம் “தேவனை அறியும் அறிவைக்” கண்டடைவது மட்டுமல்லாமல் “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்னவென்பதையும் புரிந்துகொள்வோம்.—நீதிமொழிகள் 2:1-5.
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b ஒருவேளை இந்தச் சந்தர்ப்பத்தில்தான் 57 மற்றும் 142-ஆம் சங்கீதங்களை தாவீது இயற்றியிருக்கலாம்.
நீங்கள் விளக்க முடியுமா?
தேவபயம் எப்படி
• மோசமான பாவத்திலிருந்து மனந்திரும்ப ஒருவருக்கு உதவுகிறது?
• சோதனைகளின்போதும் துன்புறுத்தலின்போதும் சந்தோஷத்தை அளிக்கிறது?
• கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நம்மைப் பலப்படுத்துகிறது?
• பிள்ளைகளுக்கு ஓர் அருமையான சொத்தாக இருக்கிறது?
[பக்கம் 26-ன் படம்]
யெகோவா மீதுள்ள பயம் சவுல் ராஜாவைக் கொலை செய்வதிலிருந்து தாவீதைத் தடுத்தது
[பக்கம் 29-ன் படங்கள்]
கடவுள் பயம் என்பது பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்க முடிந்த ஓர் அருமையான சொத்து