வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆயிரவருட அரசாட்சியின் இறுதியில் நடக்கும் கடைசிக்கட்ட சோதனைக்குப் பிறகு, மனிதர்கள் பாவம் செய்யவோ மரணமடையவோ முடியுமா?
பதிலைத் தெரிந்துகொள்ள, வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள பின்வரும் இரண்டு வசனங்களை கவனிக்கலாம்: “மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.” (வெளிப்படுத்துதல் 20:14) “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:4.
சம்பவங்கள் எப்படி வரிசையாக நடக்கப்போகின்றன என்பதைக் கவனியுங்கள். அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பவர்கள், உயிர்த்தெழுப்பப்படுபவர்கள், அர்மகெதோனுக்குப் பிறகு பிறப்பவர்கள் ஆகியோர் “புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படி” நியாயந்தீர்க்கப்படுவார்கள். அதாவது, அந்த ஆயிரவருடங்களில் யெகோவா மனிதகுலத்திடம் எதிர்பார்ப்பவற்றின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இதன்பிறகே “மரணமும் பாதாளமும்” அக்கினிக்கடலில் தள்ளப்படும். (வெளிப்படுத்துதல் 20:12, 13) இயேசுவின் ஆயிரவருட அரசாட்சியில் நிறைவேறப்போகும் மற்றொரு தரிசனத்தை அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் 21-ம் அதிகாரத்தில் பதிவு செய்திருக்கிறார். இது ஆயிரவருட நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில் முழுமையாக நிறைவேறும். ராஜ்யத்தை இயேசு தம்முடைய பிதாவிடம் ஒப்படைப்பார். அப்போது, எந்த மத்தியஸ்தரும் இல்லாமல் யெகோவா மனிதகுலத்தோடு முழுமையான விதத்தில் தங்குவார். யெகோவா அடையாள அர்த்தத்தில் ‘அவருடைய ஜனங்களுடன்’ நிரந்தரமாகவும் நேரடியாகவும் தங்குவார். மனிதகுலத்தின்மீது கிறிஸ்துவின் மீட்கும் பலியின் நன்மைகள் முழுமையாக பொழியப்படும். அதன் விளைவாக, அவர்கள் பரிபூரணத்தை அடைவார்கள். அப்போது, “இனி மரணமுமில்லை” என்ற வாக்குறுதி முழுமையாய் நிறைவேறும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
மேலே சொல்லப்பட்டிருக்கிற இந்த மரணம் என்பது ஆதாமிய மரணத்தைக் குறிக்கிறது, இது கிறிஸ்துவின் மீட்கும் பலியால் துடைத்தழிக்கப்படும். (ரோமர் 5:12-21) மனிதகுலம், முதல் மனிதனிடமிருந்து சுதந்தரித்த மரணம் அழிக்கப்படும். அதனால், மனிதர்கள் ஆதாம் படைக்கப்பட்டபோது இருந்தது போலவே இருப்பார்கள். ஆதாம் பரிபூரணமாக இருந்தான்; ஆனால் அவன் சாகவே மாட்டான் என்பதை அது அர்த்தப்படுத்தவில்லை. ஆதாமிடம் “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 2:17) இந்த மரணம் வேண்டுமென்றே செய்த பாவத்தின் விளைவாக இருந்தது. ஆயிரவருட ஆட்சியின் இறுதியில் நடக்கும் கடைசிக்கட்ட சோதனைக்குப் பிறகும் மனிதர்கள் தெரிவுசெய்யும் சுதந்திரத்தைக் கொண்டிருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 20:7-10) அதனால், யெகோவாவுக்கு தொடர்ந்து சேவை செய்வதா வேண்டாமா என்பதை அவர்களால் தெரிவுசெய்ய முடியும். எனவே, ஆதாமைப் போல யாரும் கீழ்ப்படியாமல் போக மாட்டார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
கடைசிகட்ட சோதனைக்குப் பிறகு மரணமும் பாதாளமும் இல்லாத அந்தச் சமயத்தில் ஒருவர் கலகம் செய்தால் என்ன நடக்கும்? அந்தச் சமயத்தில், ஆதாமிய மரணம் இருக்காது. உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் இருக்கும் மனிதர்களின் பொதுப் பிரேதக்குழியான பாதாளமும் இருக்காது. இருந்தாலும், கலகம் செய்வோரை அக்கினிக் கடலில், உயிர்த்தெழுதல் நம்பிக்கையில்லாமல் யெகோவாவால் அழிக்க முடியும். அந்த மரணம் ஆதாமும் ஏவாளும் சந்தித்த மரணம் போல் இருக்கும்; ஆதாமிடமிருந்து மனிதர்கள் சுதந்தரித்த மரணம் போல் இருக்காது.
என்றாலும், அப்படி நடக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. கடைசிகட்ட சோதனையிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கும் ஆதாமிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கும். அவர்கள் முழுமையாக சோதிக்கப்பட்டிருப்பார்கள். கடைசிக்கட்ட சோதனை முழுமையாக இருக்கும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். ஏனெனில், மனிதர்களை எப்படி முற்றிலும் சோதித்தறிவது என்பது யெகோவாவுக்குத் தெரியும். தெரிவுசெய்யும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் எவரும் கடைசிக்கட்ட சோதனையில் அழிந்துபோவார்கள் என்று நாம் உறுதியாய் நம்பலாம். இப்படியாக, கடைசிக்கட்ட சோதனையில் தப்பிப்பவர்கள் கடவுளுக்கு எதிராக கலகம் செய்து, அழிக்கப்படுவது சாத்தியமே; என்றாலும், அப்படி நடப்பது அரிதே.
[பக்கம் 31-ன் படம்]
கடைசிக்கட்ட சோதனைக்குப் பிறகு என்ன அர்த்தத்தில் மனிதர்கள் ஆதாமைப் போல இருப்பார்கள்?