உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 10/1 பக். 4-7
  • என்றென்றும் வாழ முடியும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்றென்றும் வாழ முடியும்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இழந்துபோன நித்திய வாழ்வு
  • மீண்டும் பெற்ற நித்திய வாழ்வு
  • சாகா வரம்
  • பூங்காவனப் பரதீஸில் முடிவில்லா வாழ்வு
  • நித்திய ஜீவனுக்கான ஒரே வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இனி மரணம் இருக்காது!
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • யெகோவாவின் நோக்கம் நிறைவேறும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 10/1 பக். 4-7

என்றென்றும் வாழ முடியும்

உலக மதங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களில் பெரும்பாலோர் தாங்கள் ஏதாவது ஒரு வகையில் நித்தியமாக வாழ வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் அளவிலா சந்தோஷம் அடைகிறார்கள். இதைப் பற்றி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகக் கற்பித்தாலும் அவர்கள் அனைவரும் விரும்புவது ஒன்றையே. மிகச் சிறந்த சூழலில் மரண வாசனை அறியாமல் சந்தோஷமாக வாழவே அவர்கள் விரும்புகிறார்கள். நீங்களும் அதைத்தான் விரும்புகிறீர்கள், அல்லவா? இந்த விருப்பம் மக்களிடம் இந்தளவு பரவலாகக் காணப்படுவதற்கு காரணம் என்ன? என்றென்றும் வாழ வேண்டுமென்ற கனவு என்றாவது நனவாகுமா?

ஆதியில் கடவுள் முதல் மனித ஜோடியைப் படைத்த சமயத்திலேயே என்றென்றும் வாழ வேண்டும் என்ற ஆசையை அவர்களுடைய உள்ளத்தில் வேரூன்றச் செய்ததாக பைபிள் சொல்கிறது. அது சொல்வதாவது: ‘நித்திய கால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே [கடவுள்] வைத்திருக்கிறார்.’​—⁠பிரசங்கி 3:11, NW.

அந்த முதல் மனித ஜோடி நித்தியமாக வாழ்வதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிப்பதற்கான அதிகாரம் கடவுளுக்கு உரியது என்பதை அவர்கள் மதித்திருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர்களுக்கென்றே தாம் உருவாக்கிய வீடான ஏதேன் தோட்டத்தில் ‘என்றைக்கும் உயிரோடிருப்பதற்கு’ அவர்கள் தகுதியானவர்கள் என்பதாக கடவுள் தீர்மானித்திருப்பார்.​—⁠ஆதியாகமம் 2:8; 3:22.

இழந்துபோன நித்திய வாழ்வு

தோட்டத்தில் வளரும்படி கடவுள் உருவாக்கியிருந்த மரங்களில் ‘நன்மை தீமை அறியத்தக்க’ மரமும் ஒன்றாகும். ஆதாமும் ஏவாளும் சாகாமல் இருப்பதற்கு அதன் பழத்தைச் சாப்பிடாதிருக்கும்படி கடவுள் கட்டளையிட்டதாக பைபிள் பதிவு காட்டுகிறது. (ஆதியாகமம் 2:9, 17) ஆதாமும் ஏவாளும் அந்தப் பழத்தைச் சாப்பிடாமல் இருப்பது, கடவுளுடைய அதிகாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். அதைச் சாப்பிடுவதோ, கடவுளுடைய அதிகாரத்தை அவர்கள் உதறித்தள்ளுவதைக் குறிக்கும். ஆனால் ஆதாம் ஏவாள், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் அவருடைய அதிகாரத்துக்கு எதிராகக் கலகம் செய்த ஆவி சிருஷ்டியான சாத்தானுக்குத் துணைபோனார்கள். அதனால் அவர்கள் என்றென்றும் வாழத் தகுதியற்றவர்கள் என்று கடவுள் சரியாகவே தீர்மானித்தார்.​—⁠ஆதியாகமம் 3:1-6.

அவர்களுக்கு கடவுள் அளித்தது வாழ்வு அல்லது சாவு, உயிர் அல்லது உயிரில்லாமை. அவர்களுடைய கீழ்ப்படியாமையால் ஏற்பட்ட விளைவு மரணம். மரிக்கையில் அவர்களுடைய வாழ்க்கை முடிந்து போய்விடும். எனவே, ஆதாம் ஏவாளோ அவர்களுடைய சந்ததியோ குறிப்பிட்ட மந்திர சக்தியுள்ள மருந்தினால் தொடர்ந்து உயிர் வாழ்வதோ, அழியாத ஆத்துமாவாக அலைந்து திரிவதோ முற்றிலும் சாத்தியமற்றது.a

ஆதாம் செய்த கலகத்தினால் அவனுடைய சந்ததி முழுவதும் பாதிக்கப்பட்டது. அதன் பின்விளைவுகளை அப்போஸ்தலன் பவுல் விளக்கியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.”​—⁠ரோமர் 5:12.

மீண்டும் பெற்ற நித்திய வாழ்வு

ஆதாமுடைய சந்ததியாரின் நிலைமையை அப்போஸ்தலன் பவுல், முதல் நூற்றாண்டு அடிமைக்கு ஒப்பிட்டுப் பேசினார். சுதந்தரிக்கப்பட்ட பாவத்தினால் ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் ‘பாவத்திற்கு அடிமைகளாக’ பிறந்து மரிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பை அவர்களால் தவிர்க்க முடியாது. (ரோமர் 5:12; 6:16, 17) ஏன் அப்படிச் சொல்கிறோம்? யெகோவா அவர்களுக்குச் சட்டப்பூர்வ விடுதலை அளித்திராவிட்டால் அவர்களால் அந்தத் தீர்ப்பிலிருந்து விடுதலை பெற்றிருக்க முடியாது. அதைக் குறித்து பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “ஒரே மீறுதலினாலே [ஆதாமினாலே] எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.” ஆகவே “நீதி”யின் நிமித்தம் இயேசு, ‘எல்லாரையும் மீட்கும்பொருளாக’ தம் பரிபூரண மனித உயிரை பலியாகக் கொடுத்தார். மனிதகுலத்தை ‘ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து’ சட்டப்படி விடுவிக்க மீட்கும்பொருளுக்குச் சக்தி இருப்பதை யெகோவா அறிந்திருந்தார்.​—⁠ரோமர் 5:16, 18, 19; 1 தீமோத்தேயு 2:5, 6.

மனிதன் மரிக்காமல் வாழ்வதற்காக அவனுடைய மரபியல் தொகுப்பை விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆராய்ச்சி ஒருநாளும் வெற்றிபெறாது. ஏனென்றால் பைபிளின்படி, மனிதன் மரிப்பதற்கான முக்கியக் காரணம், உயிரியல் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக தார்மீக நெறிகளுடனும் நீதிநெறிகளுடனும் சம்பந்தப்பட்டது. இழந்துபோன நித்திய வாழ்வை மீண்டும் பெறுவதற்கான இயேசுவின் மீட்கும் பலியும் நீதிநெறியுடன் சம்பந்தப்பட்டது. இந்த மீட்கும் பலி கடவுளுடைய நீதிக்கு மட்டுமல்ல, அன்புள்ள தயவுக்கும் அத்தாட்சியாக இருக்கிறது. அப்படியானால், யார் இந்த மீட்கும் பலியிலிருந்து பயனடைந்து முடிவில்லா வாழ்வைப் பெறுவார்கள்?

சாகா வரம்

யெகோவா தேவன் “அநாதியாய் என்றென்றைக்கும்” இருக்கிறார். அவர் சாகவே மாட்டார். (சங்கீதம் 90:2) சாகா வரத்தை யெகோவா முதன்முதலில் கொடுத்தது இயேசுவுக்கே. அப்போஸ்தலன் பவுல் அதைக் குறித்து இவ்வாறு விளக்குகிறார்: “மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை . . . மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.” (ரோமர் 6:9) பூமியிலுள்ள ஆட்சியாளர்களையும் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவையும் ஒப்பிடுகையில் இயேசு மட்டுமே சாகா வரத்தைப் பெற்றிருக்கிறார் என்று சொல்லி இயேசுவை வேறுபடுத்திக்காட்டுகிறார் பவுல். இயேசு ‘என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்.’ அவருடைய ஜீவன் ‘அழியாது.’​—⁠எபிரெயர் 7:15-17, 23-25; 1 தீமோத்தேயு 6:15, 16.

சாகா வரம் பெற்றிருப்பது இயேசு மட்டுமே அல்ல. இயேசுவுடன் சேர்ந்து அரசாளும்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்களும், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட அதே சாயலில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (ரோமர் 6:5) இந்த பாக்கியம் 1,44,000 பேருக்கு அளிக்கப்பட்டிருப்பதாக அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 14:1) அவர்களும் சாகா வரத்தைப் பெறுகிறார்கள். அவர்களுடைய உயிர்த்தெழுதலைக் குறித்து பவுல் இவ்வாறு சொல்கிறார்: “மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டாது . . . எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.” இவ்விதத்தில் உயிர்த்தெழுப்பப்படுவோரை மரணம் ஆக்கிரமிக்க முடியாது.​—⁠1 கொரிந்தியர் 15:50-53; வெளிப்படுத்துதல் 20:6.

இவ்விஷயத்தில் கடவுள் அளித்திருக்கும் விளக்கம் உண்மையிலேயே குறிப்பிடத்தகுந்தது. தேவதூதர்கள், ஆவி சிருஷ்டிகளாக இருக்கிறபோதிலும்கூட அவர்களுக்கு சாகா வரம் அளிக்கப்படவில்லை. சாத்தானின் கலகத்தில் சேர்ந்துகொண்ட ஆவி சிருஷ்டிகள் அழிக்கப்படுவார்கள் என்ற விஷயத்திலிருந்து இது தெளிவாகிறது. (மத்தேயு 25:41) மறுபட்சத்தில், இயேசுவின் உடன் அரசர்களோ சாகா வரத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர்களுடைய உண்மைத்தன்மையில் யெகோவா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

அப்படியென்றால், இதுவரை உயிர்வாழ்ந்தவர்களில் ஒரு சிறு தொகுதியான 1,44,000 பேர் மட்டுமே என்றென்றும் வாழ்வார்களா? இல்லை. ஏன் என்பதைப் பார்க்கலாம்.

பூங்காவனப் பரதீஸில் முடிவில்லா வாழ்வு

முடிவில்லா வாழ்வைப் பெறப்போகிற திரளான மக்கள் பூங்காவனப் பரதீஸ் பூமியில் வாழும் அழகிய காட்சியை பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் நம் மனக்கண் முன் நிறுத்துகிறது. உயிர்த்தெழுப்பப்படுகிற இறந்தவர்களும் அங்கு இருக்கிறார்கள், வாலிபத்திலிருந்த ஆரோக்கியமும் பலமும் அவர்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9; 20:12, 13; 21:3, 4) ‘பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவன் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறது.’ இந்த நதியினிடம் அவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். இந்நதியின் கரையோரத்தில் “ஜீவவிருட்சம் இருந்தது, . . . . அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவை.” ஆக, யெகோவா தேவன் அன்புடன் விடுக்கும் அழைப்பாவது: “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”​—⁠வெளிப்படுத்துதல் 22:1, 2, 17.

இந்த வசனத்தில் குறிப்பிடப்படுகிற மரங்களும் தண்ணீரும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இரசவாதிகள் தேடின மந்திர சக்தியுள்ள ஜீவாமிர்தமுமல்ல, ஆராய்ச்சியாளர்கள் தேடின இளமை ஊற்றும் அல்ல. மாறாக, ஆதியில் இருந்த பரிபூரண நிலைக்கு மனிதனை மீண்டும் கொண்டுவருவதற்கு இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் செய்துள்ள ஏற்பாடுகளையே அவை குறிக்கின்றன.

கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு பூமியில் நித்திய ஜீவனை அளிக்க வேண்டும் என்ற கடவுளின் நோக்கம் மாறவில்லை. யெகோவா உண்மையுள்ளவராக இருப்பதால் அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும். சங்கீதம் 37:29 சொல்வதாவது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” இந்த வாக்குறுதி, சாகா வரத்தைப் பெற்று பரலோகத்திற்கு செல்வோருடன் சேர்ந்து நம்மையும் இவ்வாறு சொல்லத் தூண்டுகிறது: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் [நித்தியத்தின், NW] ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?”​—⁠வெளிப்படுத்துதல் 15:3, 4.

என்றென்றும் வாழும் அருமையான பரிசைப் பெற நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்றால் ‘நித்தியத்தின் ராஜாவிற்கு’ உண்மையுள்ளவர்களாயும் கீழ்ப்படிதலுள்ளவர்களாயும் இருங்கள். யெகோவாவைப் பற்றியும் நமக்கு நித்திய வாழ்வைச் சாத்தியமாக்கியுள்ள இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சரி எது தவறு எது என்பதற்கு கடவுள் விதித்திருக்கும் தராதரங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் அனைவருக்கும் “நித்திய ஜீவன்” என்ற பரிசு வழங்கப்படும்.​—⁠யோவான் 17:3.

[அடிக்குறிப்பு]

a ஆத்துமா அழியாமை குறித்த போதனை பற்றி விவரமாகத் தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் 6-வது அதிகாரத்தை தயவுசெய்து பாருங்கள்.

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

நிறைவேறா ஆசை

மெசொப்பொத்தாமியாவைச் சேர்ந்த கில்காமேஷின் வீரகாவியம் பொ.ச.மு. இரண்டாம் ஆயிரமாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. ஒரு வீரர் என்றென்றும் இளமையாக இருப்பதற்கு மேற்கொண்ட தேடலைப் பற்றி அது விவரிக்கிறது. ஆத்துமா அழியாது என்று நம்பிய பூர்வ எகிப்தியர்கள், ஆத்துமா மறுபடியும் வந்து உடலை பயன்படுத்திக்கொள்வதற்காக தைலமிட்டு அதைப் பாதுகாத்துவைத்தனர். மனிதருடைய மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருப்பதாக எகிப்தியர்கள் நம்பினார்கள். ஆகவே, சில எகிப்திய கல்லறைகளில் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையில் தேவைப்படக்கூடிய எல்லாப் பொருள்களுமே குவிக்கப்பட்டிருந்தன.

ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கை கிட்டத்தட்ட பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்தே சீன இரசவாதிகள் மத்தியில் இருந்துவருவதாகத் தெரிகிறது, மந்திர சக்தியுள்ள மருந்துகளை உட்கொள்வதன் மூலம் சாகாமல் இருக்க முடியும் என்ற நம்பிக்கை பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்தே இருந்துவருவதாகத் தெரிகிறது. இடைக்கால ஐரோப்பிய மற்றும் அரேபிய இரசவாதிகள் தாங்களே சொந்தமாக ஜீவாமிர்தத்தைத் தேடி மருந்து தயாரிக்க முயற்சி செய்தார்கள். அவர்களுடைய மருந்துக் கலவைகளில் ஆர்செனிக், பாதரசம், கந்தகம் ஆகியவற்றின் ரசாயன உப்புகள் இருந்தன. அவர்களில் எத்தனைப் பேர் மருந்து என்ற பெயரில் விஷத்தைக் குடித்தார்களோ, யாருக்குத் தெரியும்!

இவைபோக, இளமை ஊற்று இருப்பதாக ஒரு காலத்தில் கட்டுக்கதைகளும் பரவியிருந்தன. அந்த ஊற்றிலிருந்து குடிப்பவர்கள் எல்லாருமே மீண்டும் இளமையாகிவிடுவார்கள் என சொல்லப்பட்டது.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

முடிவில்லா வாழ்வு​—⁠சலிப்பூட்டுமா?

முடிவில்லா வாழ்வு சலிப்பூட்டுமென சிலர் வாதாடுகிறார்கள். திரும்பத் திரும்ப அதே அர்த்தமற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட்டே நித்திய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாய் வீணாக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் இன்றைய வாழ்வு அநேகருக்கு சலிப்பூட்டுவதாகவும் அர்த்தமற்றதாகவும் தோன்றுகிறது. ஆகவே இன்றைய வாழ்க்கைமுறைகளும் நிலைமைகளுமே என்றென்றுமாகத் தொடருமென அவர்கள் ஒருவேளை நினைக்கலாம். என்றாலும், கடவுள் மீண்டும் நிலைநாட்டப்போகும் பூங்காவனப் பரதீஸில் மனிதர்கள், “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்று அவர் வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 37:11) அப்படிப்பட்ட வாழ்க்கை யெகோவாவின் படைப்புகளைப் பற்றி மனிதன் நன்கு தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும். அதுமட்டுமல்ல, இன்று நாம் எத்தனையோ திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கோ, ஆராய்ச்சிகள் செய்வதற்கோ ஆசைப்பட்டாலும் அவை நிறைவேறாமல் போகலாம்; அந்த எல்லா ஆசைகளும் கடவுள் தரப்போகும் அந்த வாழ்க்கையில் நிறைவேறும்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மரபியல் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ஆப்ரே டி க்ரே என்பவர் மக்களின் வாழ்நாளை அதிகரிப்பது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்தார். அவர் சொல்வதாவது: “நன்றாகப் படித்து, கற்ற விஷயங்களை நடைமுறைப்படுத்தும் மக்கள், வாழ்க்கையை சலிப்பூட்டுவதாக ஒருபோதும் நினைப்பதில்லை. அதோடு, கற்றுக்கொள்வதற்கு புதுப்புது காரியங்கள் இருந்துகொண்டே இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்கிறார்கள்.” அப்படியிருந்தாலும், “தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்” என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது.​—⁠பிரசங்கி 3:⁠11.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்