இயேசுவின் பிறப்பால் —சமாதானம் பிறப்பது எப்படி?
ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோன மேய்ப்பர்களிடம், “பூமியில் தேவனைப் பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்று தேவதூதர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இயேசுவின் பிறப்போடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனம் இது ஒன்று மட்டும்தானா? இல்லை. புதிதாகப் பிறந்திருந்த இயேசுவைப் பற்றிய வேறு செய்திகளும்கூட மரியாளிடமும் அவருடைய கணவன் யோசேப்பிடமும் சொல்லப்பட்டிருந்தன. பரலோகத்தின் தூதுவர்கள் மூலம் கடவுள் அவற்றைச் சொல்லியிருந்தார். இந்தத் தீர்க்கதரிசனங்களை ஆராய்ந்து பார்ப்பது இயேசுவின் பிறப்பைப் பற்றி இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். அதோடு, மனிதர்கள் மத்தியில் சமாதானம் பிறப்பதைக் குறித்து தேவதூதர்கள் உரைத்த தீர்க்கதரிசனத்தின் உண்மையான அர்த்தத்தையும் புரிந்துகொள்ள உதவும்.
இயேசு பிறப்பதற்கு முன்பு, ஏன், மரியாள் கர்ப்பமாவதற்கு முன்பே ஒரு தேவதூதர் அவரைச் சந்தித்தார். அவருடைய பெயர் காபிரியேல் என்பதாக பைபிள் குறிப்பிடுகிறது. “கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்” என்று மரியாளை அந்தத் தேவதூதர் வாழ்த்தினார். இதைக் கேட்டு மரியாள் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடிகிறது. ஆம், அவர் அதிக கலக்கமடைந்தார், சற்று பயந்தும்போனார். அந்தத் தேவதூதர் ஏன் அப்படிச் சொன்னார்?
காபிரியேல் மேலுமாக விளக்கினார்: “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” மரியாளோ மணமாகாத கன்னிப் பெண். எந்தவொரு ஆணுடனும் அவர் உடலுறவில் ஈடுபடவில்லை. அதனால், இது எப்படி நடக்கும் என்று மரியாள் கேட்டார். கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாரென்றும், இது சாதாரண குழந்தையாக இருக்காதென்றும் காபிரியேல் கூறினார்.—லூக்கா 1:28-35.
முன்னறிவிக்கப்பட்ட அரசர்
பண்டைய தீர்க்கதரிசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைதான் தனக்குப் பிறக்கப்போகிறது என்பதை காபிரியேல் சொன்ன வார்த்தைகளிலிருந்து மரியாள் புரிந்துகொண்டிருப்பார். அவருக்குப் பிறக்கவிருந்த மகனுக்கு “பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை” யெகோவா கொடுப்பார் என்ற செய்தி, மரியாளுக்கும் சரி வேத வசனங்களை நன்கு அறிந்துவைத்திருந்த வேறு எந்த யூதருக்கும் சரி, இஸ்ரவேலின் தாவீது ராஜாவுக்கு கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியிருக்கும்.
நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக தாவீதிடம் யெகோவா இவ்வாறு சொல்லியிருந்தார்: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்.” (2 சாமுவேல் 7:4, 16) தாவீதைக் குறித்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன். அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.” (சங்கீதம் 89:20, 29, 35, 36) எனவே, மரியாளும் யோசேப்பும் தாவீதின் வம்சத்தில் வந்ததை தற்செயலாய் நேரிட்ட ஒன்றாக நிச்சயம் சொல்லமுடியாது.
எபிரெய வேதாகமத்தில், தாவீதின் வம்சத்தில் வரும் அரச வாரிசைப் பற்றிக் குறிப்பிடுவது இந்தத் தீர்க்கதரிசனங்கள் மட்டுமே அல்ல. ஏசாயா தீர்க்கதரிசனத்தையும் மரியாள் கேள்விப்பட்டிருப்பார். அது சொல்வதாவது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”—ஏசாயா 9:6, 7.
அற்புதமான விதத்தில் ஓர் ஆண் பிள்ளை பிறக்குமென்று மரியாளிடம் காபிரியேல் அறிவித்தபோது இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டார். அந்தப் பிள்ளை தாவீது ராஜாவின் அரச வாரிசாக இருக்குமென்றும், கடவுளால் ஸ்தாபிக்கப்படும் ஓர் அரசாங்கத்தின் நித்திய, நிரந்தர வாரிசாக இருக்குமென்றும் கூறினார். எதிர்காலத்தில் இயேசு செய்யப்போகும் காரியங்களைப் பற்றி காபிரியேல் முன்னறிவித்த தீர்க்கதரிசனங்கள் நமக்கு மிகமிக முக்கியமானவையாக இருக்கின்றன.
தனக்கு மனைவியாக வரப்போகிறவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யோசேப்பு கேள்விப்பட்டபோது, தங்களது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட நினைத்தார். மரியாளின் கருவில் வளர்வது தன்னுடைய குழந்தை அல்ல என்பது யோசேப்புக்குத் தெரியும், ஏனென்றால் அவர் தன் வருங்கால மனைவியான மரியாளுடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கவில்லை. மரியாள், தான் கர்ப்பமாக இருப்பதற்கான காரணத்தை யோசேப்பிடம் விளக்கிச் சொன்னபோது அதை நம்ப யோசேப்பு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சுவிசேஷப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.”—மத்தேயு 1:20, 21.
அந்தப் பிள்ளை “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை” இரட்சிக்கும் விதத்தை யோசேப்பு எந்தளவு புரிந்துகொண்டார் என்பதைக் குறித்து பைபிள் எதுவும் சொல்வதில்லை. இருந்தாலும், தாயாகப்போகும் மரியாள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை யோசேப்புக்கு புரியவைப்பதற்கு இந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. தேவதூதன் சொன்னபடியே யோசேப்பு, மரியாளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அக்காலத்தில் இந்தச் செயல் திருமணத்திற்கு இணையாகக் கருதப்பட்டது.
தேவதூதர் யோசேப்பிடம் அப்படிச் சொன்னதன் மூலம் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை பைபிளிலுள்ள மற்ற தகவல்களை வைத்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் ஒரு கலகக்கார தேவதூதன் யெகோவாவின் அரசதிகாரத்திற்கு எதிராகச் சவால்விட்டான். இந்தக் கலகக்கார தூதன், கடவுளின் ஆட்சியில் நியாயம் இல்லை என்றும், சோதனைகளை எதிர்ப்படுகையில் எந்தவொரு மனிதனும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவனாக இருக்கமாட்டான் என்றும் சவால்விட்டான்; இப்படிப் பல விஷயங்களின் பேரில் அவன் சவால் எழுப்பியிருப்பதை எபிரெய வேதாகமத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். (ஆதியாகமம் 3:2-5; யோபு 1:6-12) யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கத் தவறிய அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவன்தான் ஆதாம். அவன் செய்த பாவத்தின் விளைவாக, மனிதர்கள் எல்லாருமே பாவத்தைச் சுதந்தரித்தார்கள். அந்தப் பாவத்தின் விளைவாக மரணத்தையும் சந்திக்கிறார்கள். (ரோமர் 5:12; 6:23) என்றாலும், மனித தகப்பனின் உதவியின்றி இயேசு பிறந்ததால் அவர் பாவத்தைச் சுதந்தரிக்கவில்லை. அவர் தமது பரிபூரண உயிரை மனமுவந்து அளித்ததால் ஆதாம் இழந்ததை மீட்டுத்தரும் சரிசமமான மீட்கும் பொருளாக ஆனார். அதன் மூலம் மனிதர்களைப் பாவங்களிலிருந்து விடுவித்து, நித்தியமாக வாழும் எதிர்பார்ப்பை அவர்களுக்கு அளிக்க முடிந்தது.—1 தீமோத்தேயு 2:3-6; தீத்து 3:6, 7; 1 யோவான் 2:25.
இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில், பாவத்திலிருந்து விடுபட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சிறிய அளவில் மக்கள் காணும்படி செய்தார். எல்லாவிதமான உடல் உபாதைகளையும் அவர் குணப்படுத்தினார், ஏன், மரித்தவர்களையும் உயிருக்கு கொண்டுவந்தார். (மத்தேயு 4:23; யோவான் 11:1-44) இந்த அற்புதங்கள், எதிர்காலத்தில் அவர் செய்யப்போகும் காரியங்களுக்கு முன்நிழலாக இருந்தன. இயேசு தாமே இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய [என்னுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும். அப்பொழுது . . . [அவர்கள்] எழுந்து வெளியே வருவார்கள்.’—யோவான் 5:28, 29.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் உயிர்த்தெழுதல் பற்றிய இந்த வாக்குறுதி, இயேசுவின் பிறப்பு, குறிப்பாக அவரது இறப்பு நமக்கு ஏன் மிக முக்கியம் என்பதை விளக்குகிறது. “உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே” கடவுள் தம் மகனை இந்த உலகத்திற்கு அனுப்பினதாக யோவான் 3:17 கூறுகிறது. அருமையான இந்தச் செய்தி இயேசு பிறந்த இரவன்று தங்கள் மந்தைகளைக் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் சொல்லப்பட்ட செய்திக்கு நம் கவனத்தை மறுபடியும் திருப்புகிறது.
“மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”
“கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்” பிறந்திருக்கும் செய்தியை தேவதூதர்கள் அறிவித்தபோது மனிதகுலத்துக்கு உண்மையிலேயே அது “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி”யாக இருந்தது. (லூக்கா 2:10, 11) அந்தப் பிள்ளையே கடவுளுடைய மக்கள் வெகு காலமாய் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மேசியா, ஒரு பெரிய தீர்க்கதரிசி, ஓர் ஆட்சியாளர் எல்லாமே. (உபாகமம் 18:18; மீகா 5:2) பூமியில் அவருடைய வாழ்க்கையும் மரணமும் யெகோவாவின் சர்வலோக அரசதிகாரமே சரியென நிரூபிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். அதனால்தான், “பரலோகத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்று தேவதூதர்களால் சொல்ல முடிந்தது.—லூக்கா 2:14, ஈஸி டு ரீட் வர்ஷன்.
“பிந்தின ஆதாம்” அதாவது, கடைசி ஆதாம் என்று பைபிள் குறிப்பிடும் இயேசு, மிகக் கடுமையான சோதனையை எதிர்ப்பட்டாலும் மனிதனால் யெகோவாவுக்கு உண்மையுள்ளவனாக இருக்க முடியும் என்பதைச் செயலில் காட்டினார். (1 கொரிந்தியர் 15:45) இவ்விதமாக, சாத்தான் படுமோசமான பொய்யன் என்பதை அவர் நிரூபித்தார். இதைக் கண்டு பரலோகத்திலுள்ள உத்தம தூதர்கள் மகிழ்ந்தார்கள்.
இப்போது, இந்தக் கேள்விக்கு மறுபடியும் நம் கவனத்தைத் திருப்பலாம்: “இயேசு பிறந்த இரவன்று தேவதூதர்கள் அறிவித்த அந்த வாழ்த்துச் செய்தி நிறைவேறும் என்பதற்கு ஏதேனும் ஆதாரப்பூர்வ நம்பிக்கை இருக்கிறதா?” ஆம், நிச்சயம் இருக்கிறது! பூமி முழுவதையும் பூங்காவனப் பரதீஸாக மாற்றுவதன் மூலம் கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்; அப்போது, உலகெங்கும் சமாதானம் நிலவுவது உறுதி. அத்தகைய சூழலில் எல்லா மக்களும் அன்பாகவும் உண்மையாகவும் நடந்துகொள்வார்கள். தம்முடைய பேரரசதிகாரத்தை எதிர்க்கும் அனைவரையும் துடைத்தழிப்பதன் மூலமும் யெகோவா தம் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவார். இந்தச் செய்தி, யெகோவாவின் தராதரங்கள் தவறு எனச் சொல்லும் சாத்தானுடன் சேர்ந்துகொள்பவர்களுக்கு நற்செய்தியல்ல, அழிவின் செய்தியே.—சங்கீதம் 37:11; நீதிமொழிகள் 2:21, 22.
இதைச் சற்று கவனியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமும் சமாதானமும் உண்டாகட்டும் என்பதாக மேய்ப்பர்களிடம் தேவதூதர்கள் கூறவில்லை. மாறாக, ‘பூமியில் தேவனைப் பிரியப்படுத்தும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்’ என்றே கூறினார்கள். அதாவது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய கிருபையைப் பெற்றிருக்கும் மக்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும் என்பதாகக் கூறினார்கள். யெகோவாவை உள்ளப்பூர்வமாக விசுவாசிப்பவர்களே இயேசுவின் உண்மையான சீஷர்களாக, அவரைப் பின்பற்றுகிறவர்களாக ஆகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களும் பெண்களும் தாராள குணமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் நடந்துகொள்கிறார்கள்; வருடத்தின் சில நாட்களுக்கு மட்டுமல்ல, வருடமெல்லாம் அப்படி நடந்துகொள்கிறார்கள்.
வருடமெல்லாம் கிறிஸ்துவின் சீஷர்களாக
இயேசு பிரசங்கித்த நற்செய்தியின் வலிமை எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அநேகர் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் கிறிஸ்தவ நியமங்களைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். முன்பு சுயநலவாதிகளாக இருந்தவர்கள் இன்று திருந்தி, ‘என் சூழ்நிலையில் இயேசு இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?’ என்று கேட்கிறார்கள். முன்பு சொத்துபத்துக்களுக்கும் சுகபோகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இன்று ஆன்மீக காரியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள்; அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் செய்கிற மக்கள் வருடமெல்லாம் தாராள குணத்தையும் அன்பையும் வெளிக்காட்ட முயற்சி செய்கிறார்கள். இதைத்தானே உண்மைக் கிறிஸ்தவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்?
அந்தத் தேவதூதர்கள் கூறிய சமாதான செய்தியின் அர்த்தத்தைக் குறித்தும் முக்கியத்துவத்தைக் குறித்தும், நல்மனம் படைத்த எல்லா மனிதர்களும் சற்று சிந்தித்துப் பார்த்து அதற்கிசைய நடந்திருந்தால் இந்த உலகம் சிறந்து விளங்கியிருக்கும்; இதில் துளியும் சந்தேகமில்லை.
கடவுளுடைய கிருபையைப் பெற்றவர்கள் உண்மையான சமாதானத்துடன் என்றென்றும் வாழ்வார்கள்; இதை இயேசுவின் பிறப்போடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்கள் உறுதியளிக்கின்றன. அப்படி வாழத்தானே நீங்களும் ஆசைப்படுகிறீர்கள்? இயேசு பிறந்தபோது சமாதானத்தைக் குறித்து அறிவிக்கப்பட்ட மகத்தான அந்தத் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின்போது வெறுமனே சொல்லப்படும் அர்த்தமற்ற வார்த்தையாக அது இனி இராது. அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடையும். சமாதானம் என்றென்றைக்கும் நிலவும்.
[பக்கம் 7-ன் படங்கள்]
வருடமெல்லாம் கிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க முடியும், இருக்க வேண்டும்