வாழ்க்கை சரிதை
எங்களுடைய பொக்கிஷ வேட்டையில் கிடைத்த அழியாச் செல்வங்கள்
டாரதீயா ஸ்மித், டோரா வார்ட் சொன்னபடி
நாங்கள் எந்த மாதிரியான பொக்கிஷத்தைத் தேடிக்கொண்டிருந்தோம்? ‘புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதில் பங்குகொள்ள இளம் பெண்களான நாங்கள் இருவரும் தணியாத தாகத்தோடு இருந்தோம். (மத்தேயு 28:19) இந்த வேட்டையில் அழியாச் செல்வங்கள் கிடைத்தது எப்படியென்று விளக்கமாகச் சொல்கிறோம்.
டா ரதீயா: எங்களுடைய குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அது 1915-வது வருடம்; அப்போது முதல் உலகப் போர் ஆரம்பித்து கொஞ்ச காலமே ஆகியிருந்தது. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த மிச்சிகனில் உள்ள ஹெளவல் நகரத்துக்கு அருகில் நாங்கள் வசித்தோம். என்னுடைய அப்பாவுக்கு மதத்தில் நம்பிக்கையில்லை, ஆனால் அம்மா கடவுள் பயமுள்ளவர். பத்துக்கட்டளைகளை எங்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தார்; ஆனால், என்னுடைய அண்ணன் விலஸும் அக்கா வையோலாவும் நானும் எந்த சர்ச்சிலும் அங்கத்தினர்களாக இல்லாததால் அம்மாவுக்கு ஒரே கவலை.
எனக்கு 12 வயதானபோது, பிரஸ்பிட்டேரியன் சர்ச்சில் அங்கத்தினராக ஆவதற்கு நான் முழுக்காட்டுதல் பெற வேண்டுமென அம்மா முடிவு செய்தார். நான் முழுக்காட்டப்பட்ட நாள் எனக்குத் தெளிவாக ஞாபகம் இருக்கிறது. நான் முழுக்காட்டுதல் பெற்ற அதே சமயத்தில், தங்களுடைய தாயின் கரங்களில் தவழ்ந்த இரண்டு குழந்தைகளும் முழுக்காட்டுதல் பெற்றன. குழந்தைகளோடு சேர்ந்து முழுக்காட்டுதல் பெற்றபோது மிகவும் அவமானமாக உணர்ந்தேன். அந்தப் பாதிரி சில நீர்த்துளிகளை என் தலையின் மேல் தெளித்தார், எனக்குப் புரியாத சில வார்த்தைகளை முணுமுணுத்தார். சொல்லப்போனால், முழுக்காட்டுதலைப்பற்றி அந்தக் குழந்தைகள் அறிந்த அளவுக்குத்தான் நானும் அறிந்திருந்தேன்!
1932-ல் ஒரு நாள் எங்களுடைய வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது; யாரென்று பார்க்க அம்மா வாசலுக்குச் சென்றார். அதிலிருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் கொடுத்து வருவதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் தன்னை ஆல்பர்ட் ஷ்ரோடர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட சில புத்தகங்களை அவர் என் அம்மாவுக்குக் காட்டினார். அந்தப் புத்தகங்களை அம்மா பெற்றுக்கொண்டார். கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அந்தப் பிரசுரங்கள் என்னுடைய அம்மாவுக்கு உதவின.
பொக்கிஷ வேட்டை ஆரம்பம்
பிறகு அக்காவோடு தங்குவதற்காக டெட்ராய்ட்டுக்குச் சென்றேன். அங்கே என் அக்காவுக்கு பைபிள் படிப்பு எடுக்க வந்த வயதான ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். நான் என் அம்மாவோடு வீட்டில் இருந்தபோது வானொலியில் கேட்டிருந்த ஒரு வாராந்தர நிகழ்ச்சியை அவர்களுடைய கலந்துரையாடல்கள் நினைப்பூட்டின. அந்த நிகழ்ச்சி ஒரு பைபிள் பொருளின் பேரில் ஜெ. எஃப். ரதர்ஃபர்ட் கொடுத்த 15 நிமிட பேச்சாக இருந்தது; அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளைத் தலைமைதாங்கி நடத்தியவர் அவர்தான். 1937-ல் நாங்கள் டெட்ராய்ட்டில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் சபைக்குப் போக ஆரம்பித்தோம். அதற்கடுத்த வருடத்தில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.
1940-களின் ஆரம்பத்தில் மிஷனரி பயிற்சிக்கான கிலியட் பள்ளியை நியு யார்க்கிலுள்ள செளத் லான்சிங் நகரில் ஆரம்பிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அப்பள்ளியின் சில பட்டதாரிகள் வெளிநாடுகளில் சேவை செய்ய நியமிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தபோது, ‘அது நான் கலந்துகொள்ள வேண்டிய பள்ளி’ என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதை என்னுடைய லட்சியமாக்கினேன். மற்ற நாடுகளில் “பொக்கிஷங்களை” அதாவது இயேசு கிறிஸ்துவுக்கு சீஷராக விருப்பமுள்ள மக்களைத் தேடுவது எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்!—ஆகாய் 2:6, 7.
படிப்படியாக என் லட்சியத்தை எட்டினேன்
ஏப்ரல் 1942-ல் என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐந்து சகோதரிகளுடன் சேர்ந்து ஒஹாயோவில் உள்ள ஃபின்லீ நகரத்தில் பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன். அந்த இடத்தில் ஒழுங்கான ரீதியில் கூட்டங்களை நடத்தும் ஒரு சபைகூட இருக்கவில்லை; ஆனால் ஒரு குழுவாக, கிறிஸ்தவ பிரசுரங்களிலிருந்து கட்டுரைகளைப் படிப்பதன்மூலம் நாங்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தினோம். என்னுடைய பயனியர் சேவையின் முதல் மாதத்தில் ஆர்வமுள்ள மக்களுக்கு 95 புத்தகங்களைக் கொடுத்தேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு பென்ஸில்வேனியாவில் உள்ள சேம்பர்ஸ்பர்க்கில் விசேஷ பயனியராக சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டேன். அங்கே இருந்த மற்ற ஐந்து பயனியர் சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்தேன்; ஐயவா மாகாணத்தைச் சேர்ந்த சகோதரி டோரா வார்ட்டும் அவர்களில் ஒருவர். நானும் டோராவும் பயனியர் கூட்டாளிகளானோம். நாங்கள் இருவரும் ஒரே வருடத்தில் முழுக்காட்டுதல் பெற்றிருந்தோம்; கிலியட் பள்ளியில் கலந்துகொண்டு, வெளிநாட்டில் மிஷனரியாக சேவை செய்யும் ஆசை எங்கள் இருவருக்குமே இருந்தது.
1944-ன் ஆரம்பத்தில் அந்த முக்கியமான நாள் வந்தது! நாங்கள் இருவரும் கிலியட்டின் நான்காம் வகுப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றோம். அந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் எங்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. நான் தொடர்ந்து சொல்வதற்கு முன்னால், டோரா எப்படி என்னுடைய பொக்கிஷ வேட்டையில் நீண்டகாலத் தோழியாக ஆனாரென அவர் சொல்வதைக் கேளுங்கள்.
முழுநேரம் சாட்சிகொடுக்க ஆவல்
டோரா: என்னுடைய அம்மா, கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டுமென கடவுளிடம் ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒரு ஞாயிற்றுக்கிழமை, நானும் அம்மாவும் ஜெ. எஃப். ரதர்ஃபர்டின் ஒரு பேச்சை வானொலியில் கேட்டோம். அந்தப் பேச்சின் முடிவில், “இதுதான் சத்தியம்!” என்று அம்மா மகிழ்ச்சியில் துள்ளினார். அதன்பிறகு, விரைவில் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் படிக்க ஆரம்பித்தோம். 1935-ல் எனக்கு 12 வயதானபோது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் கொடுத்த முழுக்காட்டுதல் பேச்சைக் கேட்டேன்; என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்ற ஆசை அப்போது என் உள்ளத்தில் ஊற்றெடுத்ததை உணர்ந்தேன். மூன்று வருடங்களுக்குப் பிறகு, நான் முழுக்காட்டுதல் பெற்றேன். அப்போது நான் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை, எனினும் நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றிருந்ததால் என்னுடைய லட்சியத்தை மங்காமல் மனதில் வைத்திருக்க முடிந்தது. பயனியர் சேவையை ஆரம்பிக்க விரும்பியதால் பள்ளிப் படிப்பு எப்போது முடியுமென்று ஆவலாக இருந்தேன்.
அந்தச் சமயத்தில், நாங்கள் கூட்டுறவு கொண்டிருந்த சாட்சிகள், ஐயவா மாகாணத்திலுள்ள ஃபோர்ட் டாஜ் நகரத்தில் சபைக்கூட்டங்களுக்காகக் கூடினார்கள். கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்குக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளில் சபையில் கலந்தாலோசிப்பதற்கான கேள்விகள் இருக்கவில்லை. கேள்விகளைத் தயாரித்து காவற்கோபுர படிப்பை நடத்தும் சகோதரரிடம் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. திங்கட்கிழமை இரவுகளில், நானும் அம்மாவும் ஒவ்வொரு பாராக்களுக்கான கேள்வியைத் தயாரித்து படிப்பு நடத்துபவரிடம் கொடுத்தோம்; அவற்றில் எதைப் பயன்படுத்துவதென்று அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டார்.
அவ்வப்போது, பயணக் கண்காணி எங்கள் சபைக்கு விஜயம் செய்தார். அந்தச் சகோதரர்களில் ஒருவரான ஜான் பூத், 12 வயதான என்னை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அறிமுகப்படுத்தினார். 17 வயதில் பயனியருக்கான படிவத்தை எப்படிப் பூர்த்திசெய்ய வேண்டுமென அவரிடம் நான் கேட்டபோது அவர் எனக்கு உதவி செய்தார். வாழ்க்கையில் மீண்டும் அவரைச் சந்திப்பேனென்றும் அவர் என் நெடுநாள் நண்பராக ஆவாரென்றும் அப்பொழுது நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை!
ஒரு பயனியராக நான், முழுநேர சுவிசேஷகராக இருந்த சகோதரி டாரதீ அரான்ஸன்னுடன் பலமுறை ஊழியம் செய்திருக்கிறேன்; அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். 1943-ல் கிலியட்டின் முதல் வகுப்பிற்காக அவர் அழைக்கப்படும்வரை நாங்கள் பயனியர் கூட்டாளிகளாக இருந்தோம். அதன்பிறகு, நான் தனியாகவே என் பயனியர் சேவையைத் தொடர்ந்தேன்.
எங்களைத் தடுப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது
இரண்டாம் உலகப் போரினால் 1940-களில் தேசப்பற்று நெருப்பாய்ப் பற்றியெரிந்து கொண்டிருந்தது. அந்த வருடங்களில் நாங்கள் பல சவால்களை எதிர்ப்பட்டோம். நாங்கள் வீட்டுக்குவீடு ஊழியத்தில் ஈடுபட்டபோது, அழுகிய முட்டைகளாலும் தக்காளிப் பழங்களாலும் சிலசமயம் கற்களினாலும்கூட அடிக்கடி தாக்கப்பட்டோம்! தெருமுனையில் சந்தித்த ஆட்களிடம் காவற்கோபுரம், ஆறுதல் (இப்பொழுது விழித்தெழு!) பத்திரிகைகளைக் கொடுத்தபோது மிகக் கடினமான சோதனையை எதிர்ப்பட்டோம். மத எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட காவல் துறையினர் எங்களிடம் வந்து, ‘மறுபடியும் நீங்கள் தெருக்களில் ஊழியம் செய்வதைப் பார்த்தால் உங்களைக் கைது செய்துவிடுவோம்’ என்று மிரட்டினார்கள்.
நாங்கள் சாட்சி கொடுப்பதை நிறுத்த மறுத்துவிட்டதால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டோம். நாங்கள் விடுவிக்கப்பட்ட பிறகு, அதே தெருமுனைக்குச் சென்று அதே பத்திரிகைகளைக் கொடுத்தோம். பொறுப்பில் இருந்த சகோதரர்களின் அறிவுரைப்படி எங்களுடைய நிலைநிற்கையை ஆதரிக்க ஏசாயா 61:1, 2 வசனங்களைப் பயன்படுத்தினோம். ஒரு சமயம், ஓர் இளம் காவலர் என்னிடம் வந்தபோது நடுங்கியவாறே அந்த வசனங்களை அவரிடம் சொன்னேன். திடீரென அவர் திரும்பி அந்தப் பக்கம் போய்விட்டார்! எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. தேவதூதர்கள் எங்களைப் பாதுகாத்ததுபோல் தோன்றியது.
மறக்கமுடியாத நாள்
மிஸ்செளரியில் உள்ள செ. லூயிஸில், 1941-ல் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய ஐந்து நாள் மாநாட்டில் கலந்துகொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மாநாட்டின்போது, சகோதரர் ரதர்ஃபர்ட் 5 முதல் 18 வயதுள்ள எல்லாப் பிள்ளைகளையும் அரங்கத்தின் முக்கியப் பகுதிக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் கூடினார்கள். சகோதரர் ரதர்ஃபர்ட் தன்னுடைய கைக்குட்டையை அசைத்து எங்களை வரவேற்றார். நாங்களும் கையசைத்தோம். ஒரு மணிநேரப் பேச்சிற்குப் பிறகு அவர் இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய சித்தத்தைச் செய்ய ஒப்புக்கொண்டதோடு, இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் தெய்வீக அரசாங்கத்தை ஆதரித்து கடவுளுக்கும் அவர் நியமித்த ராஜாவுக்கும் கீழ்ப்படிய ஒப்புக்கொண்டிருக்கும் பிள்ளைகளே, தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்.” ஒரே சமயத்தில் 15,000 பிள்ளைகளும் எழுந்து நின்றார்கள்; அவர்களில் நானும் ஒருத்தி. அவர் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அது அளிக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதற்கு முழுமூச்சாய் ஈடுபடப்போகிற அனைவரும் தயவு செய்து “ஆம்!” என்று சொல்லுங்கள்.” நாங்கள் அனைவரும் ‘ஆம்’ என்றோம், அதைத் தொடர்ந்து, இடிமுழக்கம்போன்ற கரவோசை எழும்பியது.
பிறகு, பிள்ளைகள்a என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது; நாங்கள் அனைவரும் ஒரே நீண்ட வரிசையில் மேடைக்குப் பக்கத்தில் நின்றோம்; சகோதரர் ரதர்ஃபர்ட் புதிய புத்தகத்தில் ஆளுக்கொரு பிரதியை எங்களுக்கு மேடையிலிருந்து வழங்கினார். அது மெய்சிலிர்க்க வைத்தது! அன்று புத்தகத்தைப் பெற்றவர்களில் அநேகர் இன்று உலகம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அவருடைய நீதியைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்வதன்மூலம், வைராக்கியமாக யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள்.—சங்கீதம் 148:12, 13.
தனியாகவே மூன்று வருடங்கள் பயனியர் ஊழியம் செய்தபிறகு, சேம்பர்ஸ்பர்கில் விசேஷ பயனியராக சேவை செய்ய நியமிப்பைப் பெற்றபோது நான் எவ்வளவாய் மகிழ்ச்சியில் பூரித்துப்போனேன்! அங்குதான் டாரதீயாவைச் சந்தித்தேன், சீக்கிரத்திலேயே நாங்கள் இருவரும் இணைபிரியாத தோழிகளானோம். அப்போது இளமைக்கே உரிய துடிப்போடும் சுறுசுறுப்போடும் இருந்தோம். பிரசங்க வேலையில் இன்னும் அதிகமாய் ஈடுபட பேராவல் கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் நீடித்த ஒரு பொக்கிஷ வேட்டையில் இறங்கினோம்.—சங்கீதம் 110:3.
நாங்கள் விசேஷ பயனியர் சேவையை ஆரம்பித்து சில மாதங்களுக்குப் பிறகு, கிலியட் பள்ளியின் முதல் வகுப்புப் பட்டதாரியான ஆல்பர்ட் மான் என்பவரைச் சந்தித்தோம். அவருக்கு வெளிநாட்டில் நியமிப்பு கிடைத்திருந்ததால் புறப்படத் தயாராக இருந்தார். வெளிநாடுகளில் எங்கு நியமிக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படி அவர் எங்களை ஊக்கப்படுத்தினார்.
இருவரும் பள்ளியில்
டோரா, டாரதீயா: மிஷனரிகளாவதற்காக எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டபோது நாங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்போம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! பள்ளியின் முதல் நாள், சகோதரர் ஆல்பர்ட் ஷ்ரோடர் எங்களுடைய பெயர்களைப் பதிவு செய்தார். அவர்தான் 12 வருடங்களுக்கு முன்னால் டாரதீயாவின் அம்மாவுக்கு, வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைக் கொடுத்தார். ஜான் பூத்தும் அங்கு இருந்தார். அப்போது அவர், ராஜ்ய பண்ணையில் (கிங்டம் ஃபார்மில்), பண்ணை ஊழியராக சேவை செய்து கொண்டிருந்தார். பண்ணை இருந்த இடத்தில்தான் கிலியட் பள்ளியும் இருந்தது. பிற்பாடு, இருவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினர்களாக சேவை செய்தார்கள்.
கிலியட் பள்ளியில், நாங்கள் பைபிளின் ஆழமான சத்தியங்களைப் படித்தோம். அது அற்புதமான பயிற்சியாக இருந்தது. எங்களுடைய வகுப்பில் 104 மாணவர்கள் இருந்தார்கள். அவர்களில் முதன்முதலாக ஐக்கிய மாகாணத்திற்கு வெளியிலிருந்து வந்த ஒரு மாணவரும் இருந்தார்; அவர் மெக்சிகோவிலிருந்து வந்தவர். நாங்கள் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தோம், அவரோ ஆங்கில மொழியை இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தார். சகோதரர் நேதன் ஹெச். நார் வெளிநாட்டு நியமிப்புகளை எங்களுக்கு அளித்த அந்த நாள் எங்களுக்கு எவ்வளவு சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது தெரியுமா! அநேகர் மத்திய, தென் அமெரிக்காவுக்குச் செல்லும்படி நியமிப்பைப் பெற்றார்கள்; நாங்களோ சிலிக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டோம்.
சிலியில் பொக்கிஷ வேட்டை
நாங்கள் சிலிக்குச் செல்வதற்கான விசா கிடைப்பதற்கு நெடுநாள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே, ஜனவரி 1945-ல் பட்டம் பெற்ற பிறகு ஒன்றரை வருடங்களுக்கு வாஷிங்டன், டி.ஸி.-யில் பயனியராக சேவை செய்தோம். எங்களுக்கு விசா கிடைத்த பிறகு, ஒன்பது மிஷனரிகள் அடங்கிய எங்கள் குழு சிலிக்குப் பயணப்பட்டது. அவர்களில் ஏழு பேர் கிலியட்டின் முன்னாள் பட்டதாரிகளாக இருந்தார்கள்.
தலைநகரான சாண்டியாகோவை நாங்கள் சென்றடைந்தபோது பல சகோதரர்கள் எங்களை வரவேற்க வந்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு எங்களை ஊக்கப்படுத்திய கிலியட் பட்டதாரியான ஆல்பர்ட் மானும் அவர்களில் ஒருவராக இருந்தார். நாங்கள் அங்கு செல்வதற்கு ஒரு வருடம் முன்புதான் அவரும் கிலியட்டின் இரண்டாம் வகுப்பு பட்டதாரியான ஜோசஃப் ஃபேராரீயும் சிலிக்கு வந்திருந்தார்கள். நாங்கள் சிலிக்குச் சென்றபோது அங்கே 100-க்கும் குறைவான பிரஸ்தாபிகளே இருந்தார்கள். நாங்கள் நியமிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய இடத்தில் அதிக பொக்கிஷங்களைத் தேடிக் கண்டுபிடிக்க அதாவது, நேர்மை இருதயமுடைய பலரைத் தேடிக் கண்டுபிடிக்க பேராவலோடு இருந்தோம்.
சாண்டியாகோவில் இருந்த ஒரு மிஷனரி இல்லத்தில் சேவை செய்ய நியமிக்கப்பட்டோம். ஒரு பெரிய மிஷனரி குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வது எங்களுக்குப் புது அனுபவம். ஊழியத்தில் குறிப்பிட்ட மணிநேரங்களை எட்டுவதோடுகூட மிஷனரி குடும்பத்திற்காகச் சமைப்பதற்கு எல்லா மிஷனரிகளும் வாரத்தில் ஒரு நாள் நியமிக்கப்பட்டோம். அதில் சில தர்மசங்கடமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பட்டோம். ஒரு சமயம், பசியோடு இருந்த குடும்பத்திற்குக் காலை சிற்றுண்டியாக சூடான ரொட்டி தயாரித்தோம், ஆனால் அடுப்பிலிருந்த ரொட்டியை எடுத்தபோது சகிக்கவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் அடித்தது. ரொட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பேக்கிங் பவுடருக்குப் பதிலாக சமையல் சோடாவைப் பயன்படுத்தியிருந்தோம்! காலியாக இருந்த பேக்கிங் பவுடர் டப்பாவில் யாரோ சமையல் சோடாவைப் போட்டிருந்தார்கள்.
ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளும்போது நாங்கள் செய்த பிழைகள் எங்களுக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தின. ஒரு பெரிய குடும்பத்துடன் பைபிள் படிப்பு நடத்திவந்தபோது நாங்கள் என்ன பேசுகிறோமென்று புரியாததால் அவர்கள் கிட்டத்தட்ட படிப்பை நிறுத்திவிடும் அளவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய சொந்த பைபிள்களில் வசனங்களை எடுத்துப் பார்த்ததால் ஒருவழியாக சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள்; பிறகு அவர்களில் ஐந்து பேர் சாட்சிகளானார்கள். அந்தக் காலங்களில், புது மிஷனரிகளுக்காக மொழிப்பயிற்சித் திட்டம் எதுவும் இருக்கவில்லை. போனவுடன் நேரடியாகவே ஊழியத்தை ஆரம்பித்துவிட்டோம்; நாங்கள் பிரசங்கித்த மக்களிடமிருந்தே மொழியைக் கற்றுக்கொள்ள முயன்றோம்.
நிறைய வேதப்படிப்புகளை நடத்தினோம்; எங்கள் மாணவர்களில் அநேகர் வேகமாக மாற்றங்களைச் செய்தார்கள். மற்றவர்களிடமோ நாங்கள் அதிக பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. நாங்கள் சந்தித்தவர்களில் டேரேஸா டெலோ என்ற இளம்பெண் சத்தியத்தின் செய்தியை ஆர்வத்துடன் கேட்டாள்; “தயவுசெய்து, மீண்டும் வந்து அதிகமாகச் சொல்லுங்கள்” என்றாள். 12 முறை சென்று பார்த்து அவளைக் காணாமல் திரும்பி வந்தோம். மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. பிறகு, சாண்டியாகோவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை மாநாடு முடிந்து கிளம்புகையில், “மிஸ் டோரா, மிஸ் டோரா” என்று யாரோ கூப்பிட்டார்கள். நாங்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கே டேரேஸா இருந்தாள். அவள் தன் அக்காவைப் பார்ப்பதற்கு அந்தத் தெருவைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது மாநாடு நடைபெற்ற அந்த அரங்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காண தற்செயலாக வந்திருந்தாளாம். மீண்டும் அவளைச் சந்தித்தது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! பைபிள் படிப்புக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம்; அதன்பிறகு வெகுவிரைவிலேயே அவள் முழுக்காட்டுதல் பெற்றாள். பிற்பாடு அவள் ஒரு விசேஷ பயனியராக ஆனாள். இப்போது 45 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்னும் டேரேஸா விசேஷ பயனியராக சேவை செய்துவருகிறாள்.—பிரசங்கி 11:1.
“மணலில்” பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தல்
நாங்கள், 1959-ல் “மணல் முனை” என்ற அர்த்தமுடைய புன்டா ஏரினாஸில் சேவை செய்யும்படி நியமிப்பைப் பெற்றோம்; இது சிலியின் 4,300 கிலோமீட்டர் நீளமான கடற்கரையின் தென்கோடியில் இருக்கிறது. புன்டா ஏரினாஸ் ஒரு வித்தியாசமான பகுதி. கோடை மாதங்களில் பகல் நீண்டதாயிருக்கும், சூரிய வெளிச்சம் இரவு 11:30 மணிவரை இருக்கும். பல நாட்கள் அங்கு ஊழியம் செய்தோம், ஆனால் இடைஞ்சல்கள் இல்லாமல் இல்லை; கோடை காலத்தில் அன்டார்டிக்கிலிருந்து ஆக்ரோஷமாக காற்று வீசும். குளிர்காலத்தில் கடுமையான பனி இருக்கும், பகல் குறுகியதாக இருக்கும்.
இந்த இக்கட்டுகள் மத்தியிலும் புன்டா ஏரினாஸ் மனதை மயக்கும் அழகுடன் காட்சியளிக்கிறது. கோடை காலத்தில், மேற்கு வானில் அலையலையாய்ச் செல்லும் மழை மேகங்களின் ஊர்வலம் இடைவிடாமல் நடக்கும். அவை எப்போதாவது, ஒரு வண்டித் தண்ணீரை உங்கள் தலையில் ஊற்றும்; பிறகு காற்று வந்து, உங்கள் நனைந்த தலையை உலர்த்தும். சூரியன், மேகங்களை ஊடுருவி அழகுத் தோரணமாய் வானவில்லைக் காட்டும். இந்த வானவில்கள் சிலசமயங்களில் மணிக்கணக்காக நீடிப்பதுண்டு; மழை மேகங்களினூடே சூரியன் சிரிக்கையில் அவை மறைந்தும் தெரிந்தும் வேடிக்கை காட்டுவதுமுண்டு.—யோபு 37:14.
அந்தச் சமயத்தில் புன்டா ஏரினாஸில் சொற்ப பிரஸ்தாபிகளே இருந்தார்கள். சகோதரிகளாக இருந்த நாங்களே உள்ளூரில் இருந்த சிறிய சபையில் கூட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. எங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசிர்வதித்தார். முப்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு, இந்தப் பகுதியைப் பார்க்க வந்திருந்தபோது செழித்தோங்குகிற ஆறு சபைகளையும் மூன்று ராஜ்ய மன்றங்களையும் பார்த்தோம். இந்தத் தெற்குக் கடற்கரை மணலில் ஆன்மீகப் பொக்கிஷங்களைக் கண்டுபிடிக்க யெகோவா எங்களை அனுமதித்ததில் எவ்வளவு சந்தோஷம்!—சகரியா 4:10.
“அகன்ற கடற்கரையில்” அதிகமான பொக்கிஷங்கள்
புன்டா ஏரினாஸில் மூன்றரை வருடங்கள் சேவை செய்த பிறகு, துறைமுக நகரமான வால்பரைஸோவில் சேவைசெய்ய நியமிக்கப்பட்டோம். அந்த நகரம் 41 குன்றுகளால் ஆனது; அவை, பசிபிக் பெருங்கடலைப் பார்த்தவாறு ஒரு விரிகுடாவைச் சுற்றி அமைந்திருக்கின்றன. அந்தக் குன்றுகளில் ஒன்றான, “பெரிய கடற்கரை” என்ற அர்த்தமுடைய ப்ளாயா ஆன்சாவில் மும்முரமாய் ஊழியத்தில் ஈடுபட்டோம். நாங்கள் அங்கிருந்த 16 வருடங்களில், இளம் கிறிஸ்தவர்களாக இருந்த சிலர் ஆன்மீக ரீதியில் வளர்ந்துவருவதைப் பார்த்தோம்; இன்று அவர்கள் பயணக் கண்காணிகளாகவும் சிலி முழுவதும் உள்ள சபைகளில் கிறிஸ்தவ மூப்பர்களாகவும் சேவை செய்கிறார்கள்.
அடுத்ததாக நாங்கள் வீன்யா தெல் மாருக்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டோம். அங்கு மூன்றரை ஆண்டுகள் சேவை செய்தோம். பிறகு மிஷனரி இல்லத்தை ஒரு பூகம்பம் வந்து சேதப்படுத்தியது. அதனால், 40 வருடங்களுக்கு முன்னால் எங்களுடைய மிஷனரி சேவையை ஆரம்பித்த இடமான சாண்டியாகோவிற்கே திரும்பினோம். அதற்குள் அங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டிருந்தது; பழைய கிளை அலுவலகக் கட்டடம், நாட்டில் மீதமிருந்த மிஷனரிகளுக்கு இல்லமாக மாறியிருந்தது. பிறகு, அந்த இல்லம் ஊழியப் பயிற்சிப் பள்ளிக்கான இடமாகப் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சமயத்தில், யெகோவா தமது அன்புள்ள தயவை மீண்டும் எங்கள்மேல் காட்டினார். மிஷனரிகளாக இருந்த எங்களில் வயதான ஐந்து பேர் பெத்தேலில் இருப்பதற்காக அழைக்கப்பட்டோம். 15 வித்தியாசமான நியமிப்புகளில் சிலியில் சேவைசெய்த காலப்பகுதியில், 100-க்கும் குறைவாகவே இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை சுமார் 70,000-ஆக உயர்ந்ததை நாங்கள் கண்டிருக்கிறோம். சிலியில் 57 வருடங்களாக பொக்கிஷங்களைத் தேடியது எவ்வளவு சந்தோஷமான விஷயம்!
இத்தனை அதிகம் பேரைத் தேடிக் கண்டுபிடிக்க யெகோவா எங்களை அனுமதித்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம். பொக்கிஷமாய் இருக்கும் இவர்களை யெகோவா தொடர்ந்து தம்முடைய அமைப்பில் பயன்படுத்துகிறார் என்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் சேர்ந்து 60 வருடங்களுக்கு மேல் யெகோவாவுக்குச் சேவை செய்ததிலிருந்து, தாவீது ராஜா உணர்ச்சிபொங்க எழுதிய இந்த வார்த்தைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். அவர் இவ்வாறு எழுதினார்: “உமக்குப் பயந்தவர்களுக்கு . . . நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”—சங்கீதம் 31:19.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சில் இல்லை.
[பக்கம் 9-ன் படங்கள்]
2002-ல் டாரதீயா 1943-ல் ஊழியத்தில்
[பக்கம் 10-ன் படம்]
1942-ல் ஐயவாவிலுள்ள ஃபோர்ட் டாஜில் தெரு ஊழியம்
[பக்கம் 10-ன் படம்]
2002-ல் டோரா
[பக்கம் 12-ன் படம்]
1946-ல் சிலியிலுள்ள மிஷனரி இல்லத்திற்கு வெளியில் டாரதீயாவும் டோராவும்