விசுவாசத்தைப் பலப்படுத்தும் பைபிள் கல்வி
“கடந்த ஐந்து மாதங்களாக, நமது சிருஷ்டிகரின் சிந்தனைகளைச் செவிகொடுத்து கேட்டோம், காரியங்களை அவருடைய நோக்குநிலையில் பார்க்கவும் கற்றுக்கொண்டோம்; எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நாங்கள் பொக்கிஷமாய் போற்றுகிறோம்!” என்று உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 122-ம் வகுப்பின் ஒரு மாணவர் பட்டமளிப்பு விழாவின்போது கூறினார். பள்ளியில் கலந்துகொண்ட 56 மாணவர்களுக்குமே மார்ச் 10, 2007 மறக்க முடியாத நாள்; 26 நாடுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் இவர்கள் தங்கள் மிஷனரி ஊழியத்தை சீக்கிரமாக ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.
பட்டமளிப்பு விழாவிற்கு கூடிவந்திருந்த 6,205 பேரையும் அன்புடன் வரவேற்றப் பிறகு ஆளும் குழு அங்கத்தினரான தியோடர் ஜாரஸ் இவ்வாறு கூறினார்: “இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதால் நீங்கள் ஆன்மீக ரீதியில் பலப்பட்டு, உங்கள் விசுவாசத்தில் உறுதியாவீர்கள் என நாங்கள் நிச்சயமாய் நம்புகிறோம்.” அவருக்கு அடுத்தப்படியாக பேச்சு கொடுக்கப்போகும் நான்கு சகோதரர்களையும் அவர் வரிசையாக அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் தங்கள் மிஷனரி சேவையில் வெற்றி காண்பதற்குத் தேவையான, சமயத்துக்கு ஏற்ற பைபிள் அடிப்படையிலான உற்சாகத்தையும் ஆலோசனையையும் இந்தப் பேச்சாளர்கள் அளித்தார்கள்.
மற்றவர்களுடைய விசுவாசத்தை வளர்க்கும் உற்சாக வார்த்தைகள்
அமெரிக்க கிளை அலுவலகக் குழு அங்கத்தினரான லீயான் வீவர் “நன்மையானதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 13 வருடங்களை முழுநேர ஊழியத்தில் அதாவது விசுவாசத்தை வளர்க்கும் பைபிள் கல்வி புகட்டும் வேலையில் செலவிட்டிருப்பதை அவர்களுக்கு நினைப்பூட்டினார். “அது ஒரு சிறந்த சேவை. ஏனெனில், அது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதை உட்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, நம்முடைய பரலோக தகப்பனை மகிமைப்படுத்துகிறது” என்று அவர் கூறினார். பின்னர், சகோதரர் வீவர், தொடர்ந்து ‘ஆவிக்கென்று விதைக்கும்படியும்’ ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருக்கும்படியும்’ மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.—கலாத்தியர் 6:8, 9.
ஆளும் குழு அங்கத்தினரான டேவிட் ஸ்ப்லேன், “சிறந்த அடியை எடுத்துவைக்க நிச்சயமாயிருங்கள்” என்ற தலைப்பில் பேச்சைக் கொடுக்கையில் நடைமுறையான நினைப்பூட்டுதல்களையும் அளித்தார். பின்வரும் காரியங்களைச் செய்து தங்கள் நியமிப்பை சிறப்பாக ஆரம்பிக்கும்படி புதிய மிஷனரிகளை உற்சாகப்படுத்தினார்: “நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். சிநேகப்பான்மையாக இருங்கள். குறை கண்டுபிடிப்பவர்களாய் இராதீர்கள். மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருங்கள், உள்ளூர் சகோதரர்களை மதியுங்கள்.” அவர் மேலுமாகச் சொன்னதாவது: “நீங்கள் விமானத்திலிருந்து இறங்குகையில் உங்கள் சிறந்த அடியை எடுத்து வையுங்கள், ‘நற்காரியங்களின் சுவிசேஷத்தை’ எடுத்து வரும் உங்களுடைய அழகான பாதங்களை யெகோவா ஆசீர்வதிப்பாராக.”—ஏசாயா 52:7.
கிலியட் போதனையாளரான லாரன்ஸ் போவென், “ஏமாற்றமளிக்காத ஆஸ்தி” என்ற தலைப்பில் பேசினார். யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தை நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இரண்டாம் உலகப் போரின்போது இந்த கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது என்பதை அவர் மாணவர்களுக்கு நினைப்பூட்டினார். (எபிரெயர் 11:1; வெளிப்படுத்துதல் 17:8) அதுமுதல் இந்த கிலியட் பள்ளி, மாணவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பை அளித்திருக்கிறது. இந்த உறுதியான நம்பிக்கை சத்தியத்தை ஆர்வத்துடன் அறிவிக்க பட்டதாரிகளை உந்துவிக்கிறது.
மார்க் நூமர் என்ற இன்னொரு கிலியட் பள்ளி போதனையாளர், “நீங்கள் யாரைப் போலவோ இருக்கிறீர்கள்” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் பேசினார். தன்னுடைய நியமிப்பில் விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிக்காட்டிய எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்போரின் கவனத்தை அவர் திருப்பினார். 1 இராஜாக்கள் 19:21-ன் அடிப்படையில் சகோதரர் நூமர் தன் கருத்தை கூறினார்: “எலிசா தன் வாழ்வில் மாற்றங்களைச் செய்து, தன் தனிப்பட்ட விருப்பங்களை இரண்டாம் இடத்தில் வைத்துவிட்டு, யெகோவாவின் நோக்கத்தை அறிவிக்க மனமுள்ளவராய் இருந்தார்.” எலிசாவைப் போன்ற மனப்பான்மையை வெளிக்காட்டியதற்காக பட்டதாரிகளை அவர் பாராட்டினார், தங்களுடைய புதிய நியமிப்பிலும் அதையே செய்யும்படி உற்சாகப்படுத்தினார்.
விசுவாசம் தைரியமாகப் பேச உதவுகிறது
கிலியட் பள்ளியில் கல்வி பயிலும் காலத்தில் இந்த எதிர்கால மிஷனரிகள் தங்கள் விசுவாசத்தை பலப்படுத்திக் கொண்டதோடு, வார இறுதி நாட்களில் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதிலும் கலந்துகொண்டார்கள். இதில் கிடைத்த சிறந்த அனுபவங்களை கிலியட்டின் இன்னொரு போதகரான வாலஸ் லிவரன்ஸ் கையாண்ட பகுதியில் அவர்கள் கூறினார்கள், நடித்தும் காட்டினார்கள். “நாங்கள் விசுவாசித்தோம், ஆகையால் பேசினோம்” என்ற தலைப்பில் அவர் பேசியது, 2 கொரிந்தியர் 4:13-ல் உள்ள அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டுவந்தது.
இதைத் தொடர்ந்து பெத்தேல் அங்கத்தினர்களான டான்யெல் பார்ன்ஸும் சார்ல்ஸ் வுட்டியும் இப்போது மிஷனரிகளாக சேவை செய்பவர்களையும் முன்பு மிஷனரிகளாக சேவை செய்தவர்களையும் பேட்டி கண்டார்கள். இந்தப் பேட்டிகள், யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்கிறவர்களை அவர் கவனித்துக்கொள்கிறார் என்பதையும் ஆசீர்வதிக்கிறார் என்பதையும் சிறப்பித்துக் காட்டின. (நீதிமொழிகள் 10:22; 1 பேதுரு 5:7) ஒரு மிஷனரி இவ்வாறு கூறினார்: “கிலியட் பள்ளியில் நாங்கள் பெற்ற கல்வியின் மூலமாக யெகோவாவின் கவனிப்பை நானும் என் மனைவியும் உண்மையிலேயே அனுபவித்தோம். அது எங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தியது என்பதில் சந்தேகமே இல்லை. மிஷனரிகள் உட்பட கடவுளுடைய எல்லா ஊழியர்களும் சோதனைகளையும், பிரச்சினைகளையும், கவலைகளையும் எதிர்ப்படவிருப்பதால் விசுவாசம் மிக மிக அவசியம்.”
விசுவாசத்தை வளர்க்கும் பைபிள் சத்தியத்தை தொடர்ந்து அறிவியுங்கள்
பட்டமளிப்பு விழாவின் முடிவில், ஆளும் குழு அங்கத்தினரான சாம்யெல் ஹெர்ட் “உங்கள் சகோதரர்களை தொடர்ந்து பலப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் பேசியது பொருத்தமாக இருந்தது. கிலியட் மாணவர்கள் பெற்ற இந்தக் கல்வியின் நோக்கம் என்ன? “யெகோவாவைத் துதிப்பதற்கு உங்கள் நாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பகுதியில் அவருடைய சத்தியங்களை எவ்வாறு போதிக்க வேண்டும் என்பதையும் உங்கள் சகோதர சகோதரிகளை விசுவாசத்தில் கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதையும் உங்களுக்குக் கற்பிப்பதே இந்தப் பள்ளியின் நோக்கம்” என்று சகோதரர் ஹெர்ட் கூறினார். என்றபோதிலும், நாவு தீங்குள்ளதையும் விளைவிக்கும் என்பதை மாணவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். (நீதிமொழிகள் 18:21; யாக்கோபு 3:8-10) நாவை உபயோகிப்பதில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றும்படி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். ஒரு சமயம், இயேசு பேசியதைக் கேட்ட பிறகு அவருடைய சீஷர்கள், அவர் “வேதவாக்கியங்களை நமக்கு விளக்கங்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா” என்று கூறினார்கள். (லூக்கா 24:32) “உங்கள் வார்த்தைகள் கட்டியெழுப்புகிறவையாக இருந்தால், நீங்கள் நியமிக்கப்படுகிற பிராந்தியத்தில் உள்ள சகோதர சகோதரிகளின் இருதயங்களை அவை தொடும்” என்று சகோதரர் ஹெர்ட் கூறினார்.
அடுத்ததாக, பட்டதாரிகள் தங்கள் சான்றிதழ்களைப் பெற்றார்கள். பிறகு, மாணவர்கள் சார்பிலிருந்து நன்றி மடல் வாசிக்கப்பட்டது. அது இவ்வாறு வாசித்தது: “மிஷனரிகளாக எங்களுடைய நியமிப்பில் உண்மையுடன் முழுமூச்சாய் ஈடுபட நாங்கள் கற்றதை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருப்பதை நாங்கள் உணருகிறோம். பூமியின் கடையாந்திரங்களுக்குப் போக நாங்கள் தயாராய் இருக்கையில், எங்களுடைய முயற்சிகள் நம்முடைய மகத்தான போதகரான யெகோவா தேவனுக்கு பெருமுழக்கத்தோடு துதி சேர்க்கக்கடவது என நாங்கள் ஜெபிக்கிறோம்.” அங்கு கூடி வந்திருந்தோர் மனப்பூர்வமாய் கரகோஷம் எழுப்பினார்கள். உண்மையிலேயே, இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அனைவரின் விசுவாசமும் கட்டியெழுப்பப்பட்டது.
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
“உங்கள் வார்த்தைகள் கட்டியெழுப்புகிறவையாக இருந்தால், நீங்கள் நியமிக்கப்படுகிற பிராந்தியத்தில் உள்ள சகோதர சகோதரிகளின் இருதயங்களை அவை தொடும்.”
[பக்கம் 15-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 9
அனுப்பப்பட்ட நாடுகள்: 26
மாணவர்கள்: 56
சராசரி வயது: 33.4
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16.8
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13
[பக்கம் 16-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 122-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஹெளவிட், ஆர்.; ஸ்மித், பி.; மார்ட்டினஸ், ஏ.; பாட்ஸோபான், எஸ்.; கீட்டாமூரா, வை.; லாட், சி. (2) ஃபிட்லர், ஐ.; பிஸ்லி, கே.; மாட்காவிச், சி.; பெல், டி.; லிப்பன்காட், டபிள்யு. (3) ஸைட்ஸ், டபிள்யு.; ஆனஸன், ஏ.; டோவ்ஸ், எல்.; ஃபூஸானோ, ஜி.; ராதிரிகெஸ், சி.; யூ, ஜே. (4) ஸோபோமிஹின், எம்.; தாமஸ், எல்.; காசன், எஸ்.; டாபா, வி.; பெர்டா, ஏ.; வின், சி.; டாப்ராவால்ஸ்கி, எம். (5) யூ, ஜே., டாபா, ஜே.; மிக்ஸர், எச்.; நியூடன், எம்.; ராதிரிகெஸ், எஃப்.; மிக்ஸர், என். (6) லாட், எம்.; லிப்பின்காட், கே.; மார்ட்டினஸ், ஆர்.; ஹாப், ஏ.; ஸ்காம்ப், ஆர்.; பாட்ஸோபான், எல்.; டோவ்ஸ், எஸ். (7) ஹெளவிட், எஸ்.; கீட்டாமூரா, யூ.; நியூடன், டி.; ஹாப், ஜே.; ஸைட்ஸ், ஜே.; தாமஸ், டி. (8) ஸோபோமிஹின், எல்.; மாட்காவிச், ஜே.; ஃபூஸானோ, பி.; வின், ஜே.; ஸ்காம்ப், ஜே.; ஆனஸன், டி.; டாப்ராவால்ஸ்கி, ஜே. (9) ஃபிட்லர், பி.; பெல், ஈ.; பிஸ்லி, பி.; ஸ்மித், பி.; பெர்டா, பி.; காசன், எம்.