பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறீர்களா?
“மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு.”—1 யோவான் 5:16.
1, 2. கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம்செய்ய சாத்தியம் உள்ளது என்று நமக்கு எப்படித் தெரியும்?
“ப ரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டேன் என்ற எண்ணம் என்னை ஆட்டிப்படைத்துக்கொண்டே இருந்தது” என ஒரு ஜெர்மானியப் பெண் எழுதினார். அவர், கடவுளுக்குச் சேவை செய்துவந்தபோதிலும் அந்த எண்ணம் அவரை ஆட்டிப்படைத்தது. கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு, அதாவது செயல் நடப்பிக்கும் சக்திக்கு விரோதமாக ஒரு கிறிஸ்தவர் பாவம் செய்ய சாத்தியம் உள்ளதா?
2 ஆம், யெகோவாவுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்ய சாத்தியம் உள்ளது. இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு [அதாவது, பரிசுத்த ஆவிக்கு] விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.” (மத்தேயு 12:31) அப்போஸ்தலன் பவுல் நம்மை இவ்வாறு எச்சரிக்கிறார்: ‘சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலே . . . இருக்கும்.’ (எபிரெயர் 10:26, 27) அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு.” (1 யோவான் 5:16) அப்படியானால், படுமோசமான பாவத்தைச் செய்த ஒருவர், ‘மரணத்துக்கு ஏதுவான பாவத்தை’ செய்திருக்கிறாரா இல்லையா என்று அவராகவே முடிவுசெய்து கொள்ள வேண்டுமா?
மனந்திரும்பினால் மன்னிப்பு நிச்சயம்
3. நாம் செய்த பாவத்தைக் குறித்து உள்ளப்பூர்வமாக மனம்வருந்தினால் அது உண்மையில் எதைக் காட்டும்?
3 தவறு செய்தவர்களுக்கு இறுதியான நியாயத்தீர்ப்பை வழங்குபவர் யெகோவாவே. நாம் எல்லாருமே அவருக்குக் கணக்குக்கொடுக்க வேண்டியவர்கள்தான். என்றாலும் அவர் எப்போதும் நீதிதவறாதவர். (ஆதியாகமம் 18:25; ரோமர் 14:12) நாம் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்திருக்கிறோமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர் அவரே; அப்படிச் செய்திருந்தால் தமது ஆவியை நம்மிடமிருந்து அவர் நீக்கியும் விடுவார். (சங்கீதம் 51:11) மறுபட்சத்தில், நாம் செய்த பாவத்தைக் குறித்து உள்ளப்பூர்வமாக மனம்வருந்தினால், அது நாம் உண்மையிலேயே மனந்திரும்பியிருக்கிறோம் என்பதைக் காட்டும். அப்படியென்றால், உண்மையான மனந்திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன?
4. (அ) மனந்திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன? (ஆ) சங்கீதம் 103:10-14-ல் உள்ள வார்த்தைகள் ஏன் ஆறுதல் அளிக்கின்றன?
4 மனந்திரும்புதல் என்பது, நாம் செய்த அல்லது செய்யவிருந்த பாவத்தின்பேரில் நம்முடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அதாவது, மனம்வருந்தி பாவமான வழியைவிட்டு விலகுவதை அர்த்தப்படுத்துகிறது. ஒருவேளை நாம் படுமோசமான பாவத்தைச் செய்திருந்தாலும், உண்மையிலேயே மனந்திரும்பிவிட்டோம் என்பதை வெளிக்காட்டும் நடவடிக்கைகளை எடுத்திருந்தால் சங்கீதக்காரன் பின்வருமாறு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் ஆறுதல் அடையலாம்: “அவர் [யெகோவா] நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”—சங்கீதம் 103:10-14.
5, 6. ஒன்று யோவான் 3:19-22-ன் சாராம்சம் என்ன, அதன் அர்த்தத்தை விளக்குங்கள்.
5 அப்போஸ்தலன் யோவானுடைய வார்த்தைகளும்கூட ஆறுதல் அளிக்கின்றன. அவர் இவ்வாறு சொல்கிறார்: “இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து [“தயக்கமின்றி தைரியமாகப் பேசி,” NW], அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.”—1 யோவான் 3:19-22.
6 நாம் சகோதர அன்பைக் காட்டுவதாலும் பழக்கமாக பாவம் செய்யாமல் இருப்பதாலும் ‘சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்திருக்கிறோம்.’ (சங்கீதம் 119:11) ஏதோவொரு காரணத்தினால், நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளெனத் தீர்த்தாலும்கூட, “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்பதை நினைவில் வைக்க வேண்டும். யெகோவா நமக்கு இரக்கம் காட்டுகிறார்; ஏனெனில், நம்முடைய ‘மாயமற்ற சகோதர சிநேகத்தையும்’ பாவத்திற்கு எதிரான நம் போராட்டத்தையும் அவரது சித்தத்தைச் செய்ய நாம் எடுக்கும் முயற்சியையும் அவர் அறிந்திருக்கிறார். (1 பேதுரு 1:22) நாம் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, சகோதர அன்பைக்காட்டி, வேண்டுமென்றே பாவம் செய்யும் போக்கில் செல்லாமல் இருந்தால் நம்முடைய இருதயம் ‘நம்மைக் குற்றவாளிகளெனத் தீர்க்காது.’ ஜெபத்தின்மூலம் நம்மால் ‘தயக்கமின்றி தைரியமாக தேவனிடத்தில் பேச’ முடியும்; நாம் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதால் அவர் நம் ஜெபத்திற்குப் பதிலளிப்பார்.
பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தவர்கள்
7. ஒருவர் செய்த பாவம் மன்னிக்க முடிந்ததா இல்லையா என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
7 மன்னிக்க முடியாத பாவங்கள் யாவை? இதற்கு விடைகாண, பைபிள் உதாரணங்கள் சிலவற்றை நாம் பார்க்கலாம். நாம் செய்த படுமோசமான பாவங்களிலிருந்து மனந்திரும்பியபோதிலும் அவற்றைக் குறித்தே சதா நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த பைபிள் உதாரணங்கள் நமக்கு நிச்சயம் ஆறுதல் அளிக்கும். ஒருவர் எவ்வகையான பாவத்தைச் செய்திருக்கிறார் என்பதைப் பொறுத்தல்ல, மாறாக, அவர் என்ன உள்நோக்கத்துடன் அந்தப் பாவத்தைச் செய்திருக்கிறார், அவரது இருதய நிலை எப்படிப்பட்டதாய் இருந்தது, அதை எந்தளவுக்குத் துணிச்சலுடன் செய்திருக்கிறார் ஆகியவற்றைப் பொறுத்தே அது மன்னிக்க முடிந்த பாவமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இந்த விஷயத்தையும் இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.
8. முதல் நூற்றாண்டிலிருந்த யூத மதத் தலைவர்கள் சிலர் எவ்வாறு பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தார்கள்?
8 முதல் நூற்றாண்டில், தீய எண்ணத்தோடு இயேசு கிறிஸ்துவை எதிர்த்த யூத மதத் தலைவர்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். யெகோவாவை கௌரவிக்கும் விதத்தில் இயேசு அற்புதங்களைச் செய்தபோது கடவுளுடைய ஆவி அவரில் செயல்பட்டதை அவர்கள் பார்த்தார்கள். அப்படியிருந்தும், கிறிஸ்துவின் விரோதிகளாயிருந்த அவர்கள் பிசாசாகிய சாத்தானுடைய வல்லமையினாலேயே அவர் அற்புதங்களைச் செய்ததாகச் சொன்னார்கள். இயேசுவைப் பொறுத்தவரை, கடவுளுடைய பரிசுத்த ஆவியை அவர்கள் இவ்வாறு தூஷித்ததன்மூலம், “இம்மையிலும் மறுமையிலும்” மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்தார்கள்.—மத்தேயு 12:22-32.
9. தூஷணம் என்பது என்ன, அதைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?
9 தூஷணம் என்பது அவதூறான, நற்பெயரைக் கெடுக்கிற, தீய பேச்சாகும். பரிசுத்த ஆவி கடவுளிடமிருந்து வருகிறபடியால், அவருடைய ஆவிக்கு விரோதமாகப் பேசுவது யெகோவாவுக்கு விரோதமாகப் பேசுவதற்கே சமமாகும். மனந்திரும்பாமல் அவ்வகையான பேச்சில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத பாவமாகும். அத்தகைய பாவத்தைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகள், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயலை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களை அவர் குறிப்பிடுவதையே காட்டுகின்றன. ஏனெனில், யெகோவாவின் ஆவி இயேசுவின் மூலமாகச் செயல்படுவதை அவருடைய எதிரிகள் பார்த்தார்கள், ஆனால் அது பிசாசின் வல்லமை என்று சொன்னார்கள்; இவ்வாறு, பரிசுத்த ஆவியைத் தூஷித்தார்கள். ஆகவே இயேசு இவ்வாறு அறிவித்தார்: “ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்.”—மாற்கு 3:20-29.
10. யூதாஸை “கேட்டின் மகன்” என்று இயேசு ஏன் அழைத்தார்?
10 யூதாஸ்காரியோத்தின் விஷயத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவன் நேர்மையற்ற பாதையில் சென்றான்; தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பணப்பையிலிருந்து திருடினான். (யோவான் 12:5, 6) பிற்பாடு, அவன் யூத அதிகாரிகளிடம் சென்று 30 வெள்ளிக்காசுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்க உடன்பட்டான். அவரைக் காட்டிக்கொடுத்த பிறகு, அவனது நெஞ்சம் குறுகுறுத்தது என்னவோ உண்மைதான்; ஆனால் வேண்டுமென்றே செய்த அந்தப் பாவத்திலிருந்து அவன் மனந்திரும்பவே இல்லை. அதனால், உயிர்த்தெழுதலைப் பெற அவன் தகுதியற்றவன் ஆனான். ஆகவேதான், “கேட்டின் மகன்” என்று இயேசு அவனை அழைத்தார்.—யோவான் 17:12; மத்தேயு 26:14-16.
அவர்கள் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை
11-13. பத்சேபாளின் விஷயத்தில் தாவீது ராஜா எவ்வாறு பாவம் செய்தார், கடவுள் அதைக் கையாண்ட விதத்திலிருந்து நாம் எப்படி ஆறுதல் அடையலாம்?
11 ஏதோவொரு சமயத்தில் படுமோசமான பாவத்தைச் செய்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு சபையிலுள்ள மூப்பர்களிடமிருந்து ஆன்மீக உதவியைப் பெற்றிருந்தாலும், கடவுளுடைய சட்டத்தை மீறியதை நினைத்து நினைத்து மனம் வெந்துகொண்டிருக்கலாம். (யாக்கோபு 5:14) அப்படிப்பட்ட நிலையில் நாம் இருந்தால், பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்ற சிலரைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பதன்மூலம் நன்மை அடையலாம். அவர்களைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
12 உரியாவின் மனைவியான பத்சேபாளின் விஷயத்தில் தாவீது ராஜா படுபயங்கரமான பாவத்தைச் செய்தார். அந்த அழகிய பெண் குளித்துக்கொண்டிருந்ததை பக்கத்து மாடியிலிருந்து பார்த்துவிட்ட தாவீது, தன்னுடைய அரண்மனைக்கு அவளை அழைத்துவரச் செய்து அவளுடன் உடலுறவு கொண்டார். தான் கர்ப்பமானதை அவள் தெரிவித்தபோது, தாவீது தான் செய்த விபச்சாரக் குற்றத்தை மூடிமறைப்பதற்காக உரியாவை அவளுடன் உறங்க வைப்பதற்குத் திட்டமிட்டார். அவருடைய திட்டம் பலிக்காமல் போகவே, போரில் உரியா மடிந்துபோவதற்கு ஏற்பாடு செய்தார். அதன்பிறகு, பத்சேபாளை தன்னுடைய மனைவியாக்கிக்கொண்டார்; ஆனால், அவருக்குப் பிறந்த பிள்ளையோ இறந்துபோனது.—2 சாமுவேல் 11:1-27.
13 தாவீது-பத்சேபாள் விவகாரத்தை யெகோவா கையாண்டார். தாவீது மனந்திரும்பியதையும் அவரோடு தாம் செய்திருந்த ராஜ்ய உடன்படிக்கையையும் கருத்தில் கொண்டு கடவுள் அவரை மன்னித்திருப்பதாகத் தெரிகிறது. (2 சாமுவேல் 7:11-16; 12:7-14) பத்சேபாளும்கூட மனந்திரும்புதலைக் காட்டியிருக்க வேண்டும்; அதனால்தான், சாலொமோன் ராஜாவின் தாயாகவும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையாகவும் ஆவதற்கான பாக்கியத்தை அவள் பெற்றாள். (மத்தேயு 1:1, 6, 16) நாம் பாவம் செய்திருந்து இப்போது உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியிருந்தால் யெகோவா அதைக் கவனிக்கிறார் என்பதை நினைவில்கொள்வது நல்லது.
14. யெகோவா எந்தளவுக்கு மன்னிக்கிறார் என்பது மனாசே ராஜாவின் விஷயத்தில் எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது?
14 யெகோவா எந்தளவுக்கு மன்னிக்கிறார் என்பதும் யூதாவின் ராஜாவான மனாசேயின் விஷயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவர், யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார். பாகாலுக்குப் பலிபீடங்களைக் கட்டினார், “வானத்தின் சேனையையெல்லாம்” பணிந்துகொண்டார், அதுமட்டுமின்றி, ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களில் பொய்க் கடவுட்களுக்குப் பலிபீடங்களையும் கட்டினார். தன்னுடைய மகன்களை நெருப்பில் சுட்டெரித்துப் பலியாக்கினார், ஆவியுலகப் பழக்கவழக்கங்களை ஊக்குவித்தார்; யெகோவா, ‘இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும் பொல்லாப்பானதை’ செய்யும்படி யூதா மற்றும் எருசலேமின் குடிகளை அவர் தூண்டினார். கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அறிவித்த எச்சரிப்புச் செய்திகளுக்குக் கவனம் செலுத்தாமற்போனார். கடைசியில், அசீரிய ராஜா அவரைச் சிறைபிடித்துச் சென்றான். சிறையில் இருக்கையில், அவர் மனந்திரும்பி தாழ்மையோடு கடவுளிடம் ஜெபம் செய்துவந்தார். கடவுள் அவரை மன்னித்து எருசலேமில் மீண்டும் அரியணையில் ஏற்றினார். அங்கே அவர் மெய் வணக்கத்தை மீண்டும் தழைக்கச் செய்தார்.—2 நாளாகமம் 33:2-17.
15. யெகோவா ‘தாராள மனதுடன்’ மன்னிக்கிறவர் என்பதை அப்போஸ்தலன் பேதுருவின் வாழ்க்கையில் நடந்த என்ன சம்பவம் காட்டுகிறது?
15 பல நூற்றாண்டுகளுக்குப்பின், அப்போஸ்தலன் பேதுரு இயேசுவை மறுதலித்ததன்மூலம் கொடிய பாவத்தைச் செய்தார். (மாற்கு 14:30, 66-72) என்றாலும், யெகோவா அவரை ‘தாராள மனதுடன்’ மன்னித்தார். (ஏசாயா 55:7, பொது மொழிபெயர்ப்பு) ஏன்? ஏனெனில் அவர் உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பினார். (லூக்கா 22:62) ஐம்பது நாட்களுக்குப் பிறகு, பெந்தெகொஸ்தே நாளில் இயேசுவைப்பற்றி தைரியமாய் சாட்சிகொடுக்க பேதுருவுக்கு விசேஷ வாய்ப்பு கிடைத்தது; இது கடவுள் அவரை மன்னித்தார் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியாக இருந்தது. (அப்போஸ்தலர் 2:14-36) அப்படியானால், இன்று உண்மையிலேயே மனந்திரும்புகிற கிறிஸ்தவர்களை கடவுள் மன்னிக்கப்போவதில்லை என்று நினைப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு” என சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 130:3, 4.
பாவத்தைப் பற்றிய பயத்தைத் தணித்தல்
16. எவற்றின் அடிப்படையில் கடவுள் மன்னிக்கிறார்?
16 இதுவரை பார்த்த உதாரணங்கள், பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டோம் என்ற பயத்தைத் தணிக்க நமக்கு உதவுகின்றன. மனந்திரும்புகிறவர்களை யெகோவா மன்னிக்கிறார் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுகின்றன. கடவுளிடம் ஊக்கமாய் ஜெபிப்பதே மிக முக்கியமான காரியம். நாம் பாவம் செய்திருந்தால், இயேசுவின் மீட்கும்பலியின் அடிப்படையிலும் யெகோவாவின் இரக்கம், மனித அபூரணம், நம் உண்மையான சேவை ஆகியவற்றின் அடிப்படையிலும் மன்னிக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கலாம். அவர் அளவற்ற கருணையுள்ளவர் என்பதால், மன்னிப்பு கிடைக்குமென்ற உறுதியுடன் அவரிடம் மன்னிப்பு கேட்கலாம்.—எபேசியர் 1:7.
17. பாவம் செய்த நாம் கடவுளோடு உள்ள பந்தத்தைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?
17 பாவம் செய்துவிட்டதால், யெகோவாவுடன் நமக்கிருந்த பந்தமே அறுந்துவிட்டது என்ற கவலையில் அவரிடம் ஜெபம் செய்யவே முடியாமற்போனால் என்ன செய்வது? இதன் சம்பந்தமாக, சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “[அப்படிப்பட்ட ஒருவன்] சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.”—யாக்கோபு 5:14, 15.
18. ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டாலும்கூட அவர் செய்த பாவம் ஏன் மன்னிக்க முடியாததாய் இருக்க வேண்டிய அவசியமில்லை?
18 தவறுசெய்த ஒருவர் அந்தச் சமயத்தில் மனந்திரும்பாததால் அவர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும்கூட, அவருடைய பாவம் மன்னிக்க முடியாததாய் இருக்க வேண்டிய அவசியமில்லை. கொரிந்துவில், தவறு செய்ததற்காக சபைநீக்கம் செய்யப்பட்டிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவரைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்தத் தண்டனையே போதும். ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்ய வேண்டும்.” (2 கொரிந்தியர் 2:6-8; 1 கொரிந்தியர் 5:1-5) என்றாலும், தவறு செய்தவர்கள் கடவுளோடு உள்ள பந்தத்தை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கு, கிறிஸ்தவ மூப்பர்கள் பைபிளிலிருந்து கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு உண்மையிலேயே மனந்திரும்பியதற்கான அத்தாட்சியை அளிக்க வேண்டும். அவர்கள் ‘மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்க’ வேண்டும்.—லூக்கா 3:8.
19. ‘விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாய்’ இருப்பதற்கு எது நமக்கு உதவும்?
19 பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறோம் என்ற எண்ணம் வருவதற்குக் காரணம் என்ன? எப்போதும் அளவுக்குமீறி ஜாக்கிரதையாய் நடந்துகொள்வதாலோ உடலும் மனதும் பலவீனப்பட்டதாலோ இப்படிப்பட்ட எண்ணம் வரலாம். அப்போது, ஜெபம் செய்வதும் ஓய்வெடுப்பதும் உதவலாம். முக்கியமாக, கடவுளைச் சேவிப்பதை நிறுத்திவிடும்படி சாத்தான் நம்மைச் சோர்வடையச் செய்வதற்கு நாம் இடங்கொடுக்கக்கூடாது. துன்மார்க்கனின் மரணத்தையே யெகோவா விரும்புவதில்லை; அப்படியிருக்க தம்முடைய ஊழியர்களில் ஒருவரைக்கூட இழக்க அவர் விரும்ப மாட்டார். ஆகவே, பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறோமென நாம் அஞ்சினால், ஆறுதலைத் தருகிற சங்கீதங்களைப்போன்ற பைபிள் பகுதிகளை தொடர்ந்து வாசித்துவர வேண்டும். சபை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், ராஜ்ய பிரசங்க வேலையிலும் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்வது, ‘விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாய்’ இருப்பதற்கும் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துவிட்டோம் என்ற அச்சத்தைப் போக்குவதற்கும் நமக்கு உதவும்.—தீத்து 2:2.
20. பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை என்பதை உணர்ந்துகொள்வதற்கு ஒருவர் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
20 பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறோமென அஞ்சுகிற எவரும் தங்களைத் தாங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘பரிசுத்த ஆவியை நான் தூஷித்தேனா? நான் செய்த பாவத்திலிருந்து உண்மையிலேயே மனந்திரும்பினேனா? கடவுள் மன்னிப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதா? நான், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கிடைக்கிற அறிவொளியை விட்டுவிலகிய விசுவாசதுரோகியா?’ பெரும்பாலும் இத்தகைய ஆட்கள், தாங்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியை தூஷிக்கவோ விசுவாசதுரோகிகளாக மாறவோ இல்லை என்பதை உணர்ந்துகொள்வார்கள். அவர்கள் மனந்திரும்பியவர்களாக, யெகோவா மன்னித்துவிட்டார் என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படியானால், அவர்கள் யெகோவாவுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது.
21. அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?
21 பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை என்பதை உணர்கையில் அது நமக்கு எவ்வளவாய் ஆசுவாசம் அளிக்கும்! என்றாலும், பரிசுத்த ஆவியோடு சம்பந்தப்பட்ட சில கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படவிருக்கின்றன. உதாரணமாக, ஒருவேளை நாம் இவ்வாறு கேட்கலாம்: ‘நான் உண்மையில் கடவுளுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறேனா? அதன் கனியை என் வாழ்க்கையில் வெளிக்காட்டுகிறேனா?’
உங்கள் பதில்?
• பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம்செய்ய சாத்தியம் உள்ளது என நாம் ஏன் சொல்கிறோம்?
• மனந்திரும்புதல் என்பதன் அர்த்தம் என்ன?
• இயேசு பூமியிலிருந்தபோது பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தவர்கள் யார்?
• மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துவிட்டோமென்ற அச்சத்திலிருந்து எவ்வாறு விடுபடலாம்?
[பக்கம் 17-ன் படம்]
இயேசு அற்புதங்களைச் செய்தது சாத்தானுடைய வல்லமையினால்தான் என்று சொன்னவர்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்தார்கள்
[பக்கம் 18-ன் படம்]
இயேசுவை பேதுரு மறுதலித்தது மன்னிக்கமுடியாத பாவமல்ல