போலந்துக்குக் கிடைத்த “சிறந்த பரிசு”
ஹோ யன்ஸாலர்னின் சிற்றரசரான ஆல்ப்ரெக்ட் ஜூலை 6, 1525 அன்று லுத்தரன் மதத்தை ப்ரஷ்யாவின் தேசிய மதமாக அறிவித்தார். அந்தச் சமயத்தில், சிற்றரசரால் ஆளப்பட்ட ப்ரஷ்யா, போலந்து ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆல்ப்ரெக்ட் அந்த அறிவிப்பைச் செய்தபோது, ஐரோப்பாவிலேயே மார்ட்டின் லூத்தருடைய போதனைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட முதல் நாடாக ப்ரஷ்யா ஆனது.
கிழக்கு ப்ரஷ்யாவின் தலைநகரான கேனிக்ஸ்பர்க்கை புராட்டஸ்டன்ட் கலாச்சார மையமாக ஆக்கவேண்டுமென விரும்பினார் ஆல்ப்ரெக்ட். அந்நகரில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவி லுத்தரன் போதனைகள் அடங்கிய பதிவுகளைப் பல மொழிகளில் அச்சிட ஆதரவளித்தார். இந்தச் சிற்றரசர் மானியமாகப் பெற்ற இடங்களிலிருந்த போலந்து நாட்டினர் அவரவர் மொழியில் பரிசுத்த வேதாகமம் வாசிக்கப்படுவதைக் கேட்க வேண்டும் என்றும் 1544-ல் ஆணை பிறப்பித்தார். ஆனால், அப்போது போலிஷ் மொழியில் எந்த பைபிள் மொழிபெயர்ப்பும் இருக்கவில்லை.
‘சாதாரண நடையில்’ ஒரு மொழிபெயர்ப்பு
இந்தக் குறையைப் போக்க, ஆல்ப்ரெக்ட் ஒரு மொழிபெயர்ப்பாளரைத் தேட ஆரம்பித்தார். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை போலிஷ் மொழியில் மொழிபெயர்க்க திறமை படைத்த ஒருவரை அவர் தேட ஆரம்பித்தார். சுமார் 1550-ல், எழுத்தாளரும், புத்தக விற்பனையாளரும், அச்சடிப்பவருமான யான் ஸெக்லூட்ஸ்யான் என்பவரை இந்தப் பணிக்காக ஊதியத்திற்கு அமர்த்தினார். அவர் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். புராட்டஸ்டன்ட் போதனைகளைப் பரப்பி கத்தோலிக்க சர்ச்சை எரிச்சலூட்டுவதற்குப் பெயர் பெற்றிருந்தவர். பார்க்கப்போனால், தன்னுடைய மத நம்பிக்கைகளைப் பரப்பியதற்காக விசாரணை செய்யப்படவிருந்த சமயத்தில், அங்கிருந்து தப்புவதற்காக ஏற்கெனவே கேனிக்ஸ்பர்க்கிற்குச் சென்றவர்.
போலிஷ் மொழி வேதாகமத்தை வெளியிடுவதில் யான் ஸெக்லூட்ஸ்யான் ஆர்வமாக இருந்தார். அவர் இந்தப் பணியை ஏற்று ஒரு வருடத்திற்குள்ளேயே மத்தேயு சுவிசேஷத்தின் முதல் பிரதிகள் பிரசுரிக்கப்பட்டன. இந்தப் பதிப்பில் விளக்க குறிப்புகளும் ஓரக்குறிப்புகளும் இடம்பெற்றிருந்தன; இவை சில பகுதிகளுக்குச் சாத்தியமான வேறு மொழிபெயர்ப்புகளையும் அளித்தன. அதற்குப்பின் சீக்கிரத்திலேயே, நான்கு சுவிசேஷங்களையும் உடைய ஒரு பதிப்பு அச்சிடப்படுவதை ஸெக்லூட்ஸ்யான் மேற்பார்வை செய்தார். மூன்றே வருடங்களில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுவதும் அச்சிடப்படும்படி பார்த்துக்கொண்டார்.
திருத்தமான ஒரு மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கு மொழிபெயர்ப்பாளர் கிரேக்க பதிவுகளை ஒப்பிட்டிருக்கிறார். மேலுமாக, லத்தீன் மொழிபெயர்ப்புகளும் “வேறு சில மொழிபெயர்ப்புகளும் ஒப்பிடப்பட்டதாக” 1551-ஆம் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மொழிபெயர்ப்பு “சரளமாகவும், நேர்த்தியான உரைநடையிலும்” இருப்பதாக 16-ஆம் நூற்றாண்டின் போலிஷ் மொழி பற்றிய ஆய்வுகள் என்பதன் நூலாசிரியரான ஸ்டானீஸ்லாஃப் ரோஸ்பான்ட் வர்ணித்தார். அந்த மொழிபெயர்ப்பாளர் ‘இலக்கிய மொழிநடையை’ தன் மொழிபெயர்ப்பில் நுழைக்க முயற்சி செய்யவில்லை. அதற்கு மாறாக, ‘தினசரி பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும்’ போலிஷ் வார்த்தைகளைப் பயன்படுத்த முற்பட்டதாக ரோஸ்பான்ட் கூறுகிறார்.
ஸெக்லூட்ஸ்யான் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்தபோதிலும், பைபிளின் மொழிபெயர்ப்பாளர் அவர் அல்ல என்பதையே அத்தாட்சி காண்பிக்கிறது. அப்படியானால், புலமைவாய்ந்த அந்த மொழிபெயர்ப்பாளர் யார்? சுமார் 23 வயது மதிக்கத்தக்க ஸ்டானீஸ்லாஃப் மூர்ஷினாவ்ஸ்கீ என்பவரையே ஸெக்லூட்ஸ்யான் இந்தக் கடினமான பணிக்காக ஊதியத்திற்கு அமர்த்தியிருந்தார்.
மூர்ஷினாவ்ஸ்கீ ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவருக்குப் போதிய வயதானதும் கிரேக்கு மற்றும் எபிரேய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்காக அவருடைய அப்பா அவரை கேனிக்ஸ்பர்க்கிற்கு அனுப்பினார். பின்னர், ஜெர்மனியிலுள்ள விரட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் மூர்ஷினாவ்ஸ்கீ சேர்ந்துகொண்டார். அங்குதான் ஒருவேளை அவர் மார்டின் லூத்தரை சந்தித்திருக்க வேண்டும். ஃபிலிப் மெலாங்தன் என்பவருடைய பேச்சுகளை இந்த இளம் மாணவர் கேட்டார். கிரேக்கையும் எபிரேயுவையும் கற்று தேர்ச்சி பெற இந்த மாணவருக்கு அவர் உதவி செய்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இத்தாலியில் அவர் தொடர்ந்த படிப்பை முடித்துவிட்ட பிறகு, கேனிக்ஸ்பர்க்கிற்கு திரும்பிய மூர்ஷினாவ்ஸ்கீ சிற்றரசராகிய ஆல்ப்ரெக்ட் அளித்த பணியில் ஈடுபட்டார்.
“மூர்ஷினாவ்ஸ்கீ ஊக்கத்தோடும் திறமையோடும் செயல்பட்டார்; ஆனாலும், தன்னிடமாக கவனத்தை ஈர்க்கவுமில்லை, பிரபலமான ஸ்தானத்தை நாடவுமில்லை, தலையங்க பக்கத்தில் தன் பெயரைப் பதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளவுமில்லை” என மார்யா கோஸாவ்ஸ்கா என்பவர் போலிஷ் மொழியில் பைபிள் என்ற தனது புத்தகத்தில் எழுதுகிறார். “லத்தீனையும் சரி போலிஷையும் சரி, நான் எதையுமே உருப்படியாக எழுதுவதில்லை” என்று தன் திறமைகளைக் குறித்து அந்த இளம் மனிதர் எழுதுகிறார். இப்படித் தன்னுடைய திறமைகளைக் குறித்து மூர்ஷினாவ்ஸ்கீக்கு ஒருபக்கம் சந்தேகம் இருந்தாலும், போலந்து மக்களுக்கு கடவுளுடைய வார்த்தையைக் கிடைக்கச் செய்வதற்கு அவர் காரணமாய் இருந்திருக்கிறார். தாங்கள் வெளியிட்ட மொழிபெயர்ப்பு போலந்துக்குக் கிடைத்த “சிறந்த பரிசு” என்பதாக அவருடைய கூட்டாளியாகிய ஸெக்லூட்ஸ்யான் விவரித்தார்.
மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்று
போலிஷ் மொழியில் இந்த பைபிள் முதலில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் இன்னும் அநேக மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. 1994-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பும், 1997-ல் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் முழு பதிப்பும் போலிஷ் மொழியில் வெளியிடப்பட்டன. தங்களிடமாகக் கவனத்தை ஈர்க்காத மொழிபெயர்ப்பாளர்கள், திருத்தமாகவும், அதே சமயம் இன்றைய மக்களின் சாதாரண மொழிநடையில் கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்க்கவும் முயன்றிருக்கிறார்கள், 16-ஆம் நூற்றாண்டின் மொழி நடையில் அல்ல.
இன்று பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ சுமார் 2,400 மொழிகளில் கிடைக்கிறது. கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான ஒரு மொழிபெயர்ப்பு உங்கள் சொந்த மொழியில் இருக்குமானால், அதுவே நீங்கள் பெறத்தக்க மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்றாக இருக்கும்; உங்களை வழிநடத்துவதற்கு யெகோவா தேவனிடமிருந்து நீங்கள் பெற்றிருக்கும் ஒரு பரிசு அது!—2 தீமோத்தேயு 3:15-17.
[பக்கம் 20-ன் படம்]
ஸ்டானீஸ்லாஃப் மூர்ஷினாவ்ஸ்கீயின் நினைவுக்கல், இவர் போலிஷ் மொழியில் ‘புதிய ஏற்பாட்டை’ மொழிபெயர்த்த ஒருவர்
[பக்கம் 21-ன் படம்]
ஸ்டானீஸ்லாஃப் மூர்ஷினாவ்ஸ்கீ மொழிபெயர்த்த மத்தேயு புத்தகத்தின் 3-ஆம் அதிகாரம்
[படத்திற்கான நன்றி]
Dzięki uprzejmości Towarzystwa Naukowego Płockiego