உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 10/8 பக். 15-17
  • மதம் இன்றைய போலந்தில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மதம் இன்றைய போலந்தில்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • போலந்துகாரர்களின் கருத்து
  • மாறிவரும் தராதரங்களுடன் மாறிவரும் நடத்தை
  • உண்மையான தீர்வென்ன?
  • “போலிஷ் பிரதரன்”—ஏன் துன்புறுத்தப்பட்டனர்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • போலந்துக்குக் கிடைத்த “சிறந்த பரிசு”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள்—போலாந்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • அந்தப் படுகொலை மறக்கப்பட்ட பலியாட்கள்
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 10/8 பக். 15-17

மதம் இன்றைய போலந்தில்

போலந்திலிருந்து விழித்தெழு! நிருபர்

போலந்தின் மக்கள் அதிக மதப்பற்றுள்ளவர்கள் என்று உலகமுழுவதும் வெகுவாய் அறியப்பட்டிருக்கிறார்கள். அதோடு, அங்குள்ள ஜனத்தொகையில் சுமார் 95 சதவிகிதத்தினர் தாங்கள் ரோமன் கத்தோலிக்கர் என உரிமை பாராட்டுகின்றனர்.

இந்நாட்டில் மதக் கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியமானவை; தேசிய பாரம்பரியத்தின் ஒரு பிரிக்கமுடியாத பாகமும்கூட. முக்கியமாக கிராமப்புறங்களில் மதத் திருவிழாக்கள் கண்ணைக் கவருவதாயும் கோலாகலமாயும் நடைபெறுகின்றன; அந்த விழாக்களில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் வண்ண வண்ண உடை உடுத்தி, விளையாட்டுகளில் பங்குகொள்கின்றனர்.

அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும், புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரைகளையும், மத ஊர்வலங்களையும் பற்றி செய்தித்துறை தவறாமல் அறிக்கை செய்கிறது. ஞானஸ்நானங்கள், சர்ச்சில் நடக்கும் திருமணங்கள், திருவிழாக்கள், புதுநன்மை பெறுதல் போன்ற நிகழ்ச்சிகளும்கூட பெரிதும் மதிக்கப்படுகின்றன.

1978-ல், போலந்தைச் சேர்ந்த கரால் வாய்டிவா என்பவர் போப் இரண்டாம் ஜான் பால் ஆனார். இதனால் போலந்தில் கத்தோலிக்க மதத்திற்கு இன்னும் அதிக உத்வேகம் கிடைத்தது. போப் தன்னுடைய தாய் நாட்டிற்கு வரும்போதெல்லாம் பெருந்திரளான கும்பல்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவரை பெருமிதத்தோடு வரவேற்கின்றனர்.

போலந்திற்கு வெளியிலிருந்து இப்படிப்பட்ட எல்லா மதக் கொண்டாட்டங்களையும் கவனிப்பவர்கள், போலந்தைச் சேர்ந்த மக்கள் மிகவும் மதப் பற்றுள்ளவர்கள் எனவும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துவதில் அதிக ஆர்வமுள்ளவர்கள் எனவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனாலும், போலந்தில் இருக்கும் கத்தோலிக்க தலைவர்களும் மற்றவர்களும் அதிக கவலைகொள்கின்றனர். ஏன்? ஏனென்றால், சர்ச்சுக்கு செல்வோரில் அதிகமதிகமானோரின் மனநிலையிலும் பழக்கவழக்கங்களிலும் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன.

போலந்துகாரர்களின் கருத்து

ஆனால் போலந்தைச் சேர்ந்த கத்தோலிக்க குருவர்க்கத்தின் பிரசித்திபெற்ற பிரதிநிதிகளும் பத்திரிகையாளர்களும் சமூக ஆராய்ச்சியாளர்களும், இன்றைய போலந்தில் கத்தோலிக்க மதத்தின் நிலைமையைப் பற்றி மிகவும் வித்தியாசமான கருத்தைத் தெரிவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? குற்றச்செயல் அதிகரிப்பு, ஒழுக்க தராதரங்களின் சீர்கேடு, சர்ச்சின் போதனைகளிலும் பழக்கங்களிலும் அக்கறை குறைதல் ஆகியவற்றைப் பற்றி பெரும்புள்ளிகள் கடும் வார்த்தைகளில் அறிக்கைவிடுவது சர்வசாதாரணமாகி வருகிறது. பிரபலமான இந்த ரோமன் கத்தோலிக்க மதம் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதைப் பற்றியே சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன.

உதாரணமாக, போலந்தைச் சேர்ந்த ஒரு பிஷப்பான யூசெஃப் க்லெம்ப் மக்களிடையே சமயச்சார்பின்மை வளர்ந்துவருவதைக் கவனித்தார். மேலும், நாட்டில் அதிகரித்து வரும் புறமதத்தைச் சார்ந்துகொள்ளுதல் என்ற அலையை எதிர்க்கும்படியும் கூறினார். எழுத்தாளரான வாய்செக் ச்சூடி, இந்தச் சூழ்நிலைப் பற்றிய ஒரு முழுமையான ஆராய்ச்சியின் அறிக்கையை கத்தோலிக்க பத்திரிகையான வாட்டில் வெளியிட்டார். அவர் கூறியதாவது: ‘பாதிரிமார்களையும் சமூகவியலாளர்களையும் மத உளவியலாளர்களையும் அநேக வருடங்களாக தொல்லைப்படுத்திவரும் ஒரு பிரச்சினைக்கு நாம் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். அதுவே மத வாழ்க்கைக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு. சர்ச்சில் ஒரு சொற்பொழிவை நீங்கள் கேட்கிறீர்கள்; ஆனால் அங்கிருந்து வெளியே வந்ததும் கடவுளுடைய வார்த்தையை முழுமையாக மறந்துவிட்டு மற்றொரு உலகத்திற்குள் சென்றுவிடுகிறீர்கள். அதுவே அன்றாட வாழ்க்கையின் போராட்டங்கள் நிறைந்த உலகமாகும். அந்த உலகத்தில் கடவுளே இல்லை என்பதைப் போல நீங்கள் வாழ்க்கை நடத்துகிறீர்கள்.’

இப்பிஸ்காபல் கான்ஃபரென்ஸின் உப தலைவரான தலைமை பிஷப் ஹென்ரிக் ம்யூஷின்ஸ்கீ கூறுகிறார்: “சுவிசேஷமானது நம்முடைய உள்ளான மனிதனை மாற்றத் தவறியிருக்கிறது. போலந்து மக்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள். அவர்களில் அநேகர் கிறிஸ்தவத்தை ஒரு மதமாக அல்ல, வெறும் பழக்கமாகவே கருதுகிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.”

மாறிவரும் தராதரங்களுடன் மாறிவரும் நடத்தை

சர்ச்சைச் சேர்ந்த பெரும்புள்ளிகளின் இப்படிப்பட்ட கூற்றுகள், பொதுமக்களின் தராதரங்களிலும் நடத்தையிலும் ஏற்படும் பெரும் மாற்றங்களைப் பற்றி அவர்கள் அதிக கவலைகொள்கிறார்கள் என்பதையே காண்பிக்கின்றன அல்லவா? அதற்கு ஒரு காரணம், இன்றைய கவலைகள் முற்காலங்களிலிருந்த மதப்பற்றை ஒதுக்கித்தள்ளியிருப்பதே.

இதைப் புரிந்துகொள்ள போலந்தில் நடந்த ஒரு சமூகவியல் ஆராய்ச்சியைக் கவனியுங்கள். வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கிறார்கள் என்று போலந்துக்காரர்களிடம் கேட்டபோது முதலிடத்தைப் பெற்றது குடும்பமே. அதற்கு பிறகு, நேர்மை, நீதி, தயவு, நம்பத்தக்க தன்மை ஆகியவை இடம்பெற்றன. கடவுளையும் மதத்தையும் பற்றிய காரியங்கள் எல்லாம் 16-வது இடத்திற்கு தள்ளப்பட்டன. இதன் விளைவாகத்தான் விசுவாசிகளென உரிமைபாராட்டுபவர்கள் உட்பட அனைவரிடத்திலேயும் சர்ச்சுக்கு செல்வது குறைந்து வருகிறது.

சர்ச் போதகங்கள் பெருமளவில் நிராகரிக்கப்படுவதாக வரும் புள்ளிவிவரங்களைப் பற்றியும்கூட போலந்தின் பிஷப்புகள் அதிக கவலைகொள்கின்றனர். உதாரணமாக, யாக்யெலான்ஸ்கீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரெனா பாராவிக் மத விவகாரங்களைப் பற்றி ஓர் ஆய்வு செய்தார். அதில், 50 சதவிகிதத்தினர் மட்டுமே மரணத்திற்கு பிறகு வாழ்க்கைப் பற்றி நம்பினதாகவும், 47 சதவிகிதத்தினர் பாதிரிமார்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டுமென உணர்ந்ததாகவும், 64 சதவிகிதத்தினர் விவாகரத்தை ஆதரித்ததாகவும் கண்டறிந்தார்.

விப்ராஸ்ட் என்ற பத்திரிகையில் வெளிவந்த மற்றொரு ஆராய்ச்சியின்படி, “கருத்தடைச் சாதனங்களை உபயோகிக்கக்கூடாது என சர்ச் தடைசெய்கிறது; ஆனால் 69 சதவிகித போலந்து மக்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். 56 சதவிகிதத்தினர் கருக்கலைப்பைத் தடைசெய்யக்கூடாது என்று எதிர்க்கின்றனர்; திருமணத்திற்கு முன்னான பாலுறவை 54 சதவிகிதத்தினர் அங்கீகரிக்கின்றனர்.” தற்போது சர்ச்சுக்குள் காணப்படும் பிரிவினைகளையே இவை சுட்டிக்காட்டுகின்றன அல்லவா?

கடந்த இருபது ஆண்டுகளாக கம்யூனிஸத்தை எதிர்த்ததால் சர்ச் பெருமதிப்பை சம்பாதித்தது. ஆனால் இப்பொழுதோ, அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் சர்ச் தொடர்ந்து தலையிடுவதன் காரணமாக கோபதாபத்தை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது. இதன் காரணமாக சர்ச் அங்கத்தினர்களுக்கும் குருமார்களுக்கும் இடையே உள்ள பிளவு இன்னும் அதிகரிக்கிறது.

உண்மையான தீர்வென்ன?

1989-ல் ஏற்பட்ட பெரும் அரசியல் மாற்றங்களுக்கு முன்புவரை, நடத்தைக்கான திட்டவட்டமான சட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்தி வந்தது. ஆனால் அதில் பெரும்பாலானவை இப்போது இல்லை. புதிய அரசியல் அமைப்பானது குடியாட்சியையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் தந்திருக்கிறது. அதேசமயத்தில் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரமோ வாழ்க்கைக்கான போராட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு திடீர் மாற்றத்திற்கு போலந்து மக்கள் தயாராகவே இல்லை என்று அநேகர் நினைக்கின்றனர். அவர்களிடம் குறைவுபட்டது என்ன?

இன்றைய உலகில் ஒழுக்கரீதியிலும் ஆவிக்குரிய விதத்திலும் உயிர்வாழ உறுதியான விசுவாசம் தேவை; வெறும் மத பழக்கங்கள் அல்லது சடங்குகளில் சார்ந்த மேலோட்டமான விசுவாசம் மட்டுமே போதாது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைப் பற்றிய தனிப்பட்ட அறிவிலும் புரிந்துகொள்ளுதலிலும் சார்ந்த விசுவாசத்தை ஒவ்வொரு நபரும் பெறவேண்டும்.

கிறிஸ்தவர்கள் பரிசுத்த வேத எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிறவர்களாக இருக்கவேண்டும் என போப் இரண்டாம் ஜான் பால்கூட சமீபத்தில் ஒப்புக்கொண்டார். “கடவுளுடைய வார்த்தையுடன் அதிக ஆழமான, தொடர்ச்சியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்”ளும்படி அவர் கூறினார். அவர் மேலுமாக சொன்னார்: “பரிசுத்த வேதாகமத்தை வாசிக்க கற்றுக்கொள்வது ஒரு விசுவாசிக்கு அடிப்படையாகும்; அதுவே ஏணியின் முதல் படி. அதைத் தொடர்ந்து தியானித்தலும் ஊக்கமான ஜெபமும் வருகின்றன. சத்தியத்தைத் தேடும் யாவரும் . . . ஜீவ வார்த்தையின் அப்பத்தால் தன்னை ஒவ்வொரு நாளும் போஷித்துக்கொள்ள வேண்டும்” என போப் உற்சாகப்படுத்தினார்.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில், இன்று இருப்பதைப் போல வாழ்க்கை அவ்வளவு பிஸியாகவும் நிச்சயமில்லாமலும் இருக்கவில்லை. ஆனாலும்கூட, பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் தம்முடைய சீஷர்களைச் சுற்றியிருந்த சீர்கெட்ட ஆவிக்குரிய நிலைமையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்படி கடவுளிடம் ஜெபித்தார்: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வார்த்தையே சத்தியம்.” (யோவான் 17:17, NW) பைபிள் “சத்திய”மாக இருப்பதற்கு காரணம் அது கடவுளுடைய வார்த்தை, மனிதனுடையதல்ல. அப்போஸ்தலன் பவுல் ஒரு சபைக்கு எழுதினார்: “நீங்கள் கடவுளுடைய வார்த்தையை எங்களிடமிருந்து கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷனுடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாகவே ஏற்றுக்கொண்[டீர்கள்] . . . அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்.”—1 தெசலோனிக்கேயர் 2:13, NW.

பைபிள் “கடவுளுடைய வார்த்தை”யாகவும் “சத்திய”மாகவும் இருப்பதால், இந்த உலகத்தில் நம்மை பலப்படுத்திக்கொள்ள தேவைப்படுவதை அது நமக்கு கொடுக்கமுடியும். பைபிள்தானே கூறுகிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் ஏவப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் முழுவதும் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்ய முழு தகுதிபெற்றவனாகவும் இருக்கும்படி, அவைகள் போதிப்பதற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், காரியங்களை சீர்திருத்துவதற்கும், நீதியில் சிட்சிப்பதற்கும் பிரயோஜமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17, NW.

நேர்மையும் புத்திக்கூர்மையும் உள்ள அநேகர் பைபிளைத் தனிப்பட்ட விதமாக படிப்பது, கடவுளிலும் அவருடைய நோக்கத்திலும் உறுதியான விசுவாசத்தை வளர்ப்பதற்கான ஆதாரமென கண்டிருக்கின்றனர். இவ்வாறு போலந்தில் மட்டுமல்ல உலகமுழுவதிலும் நடைபெறுகிறது. லௌகீக ஆசை அதிகரித்துக்கொண்டே போகும் ஓர் உலகத்தில் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ இப்படிப்பட்ட விசுவாசம்தான் அவர்களைப் பலப்படுத்துகிறது.

[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]

“போலந்து மக்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவர்கள்.”—போலந்தைச் சேர்ந்த ஒரு தலைமை பிஷப்

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

சர்ச்சின் போதகங்கள் அதிகளவில் அசட்டை செய்யப்படுகின்றன

[பக்கம் 15-ன் வரைப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

போலந்து

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்