உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகள்—போலாந்து
பால்டிக் முதல் கருங்கடல் வரையாக உள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் 1989-ன் இலையுதிர் காலத்தில் துண்டுகளாக உடைய ஆரம்பித்தன. இரும்புத் திரை தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள தேசங்கள் தன்னிச்சையான போக்கை மேற்கொள்ள ஆரம்பித்தன. இவற்றில் ஒன்று, சுருள் சுருளாக குன்றுகளையும், தட்டையான சமவெளிகளையும் கரடுமுரடான மலைகளையும் கொண்ட போலாந்து.a
போலாந்து மக்கள் கடின உழைப்பாளிகள், போலாந்து உலகுக்கு குறிப்பிடத்தக்க ஓவியர்களையும் அறிவியல் அறிஞர்களையும் உருவாக்கித் தந்திருக்கிறது. ஆனால் அதற்கும் மேலாக, இப்பொழுது கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்போரின் வளர்ந்துவரும் ஒரு சேனை அங்கு இருக்கிறது.
பொய்யை வெளிப்படுத்துவதில் தைரியம்
போலாந்தில் பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் அநேகர் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய உறவினர்கள் அல்லது அயலகத்தார், சிலருக்கு தடையாக இருக்கிறார்கள். உதாரணமாக ரோகளாவின் அருகாமையில், அக்கறை காட்டிய ஒரு பெண்மணி அவளுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அவள்மீது அழுத்தங்களைக் கொண்டுவந்த போது யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிப்பதை நிறுத்திவிட்டாள். இருந்தபோதிலும், அவளுடைய பருவவயது மகள், பொய் மதத்தை வெளிப்படுத்தும் தொடர் கட்டுரைகளை காவற்கோபுர பத்திரிகையில் படித்தாள். இது சத்தியத்தில் அவளுடைய அக்கறையைத் தூண்டியது.
ஆறு மாத கால பைபிள் படிப்புக்குப் பின்னர், இந்த இளம் பெண், பொய் மதத்தோடுள்ள தொடர்புகள் அனைத்தையும் முறித்துக்கொள்ள தீர்மானித்தாள். தன்னுடைய தீர்மானத்தைத் தெரிவிக்க தன்னுடைய சர்ச் பாதிரியிடம் சென்றாள். பின்வருமாறு எழுதிக்கொடுக்கும்படி அவர் அவளிடம் சொன்னார்: “K—— P——ஆகிய நான், கத்தோலிக்க விசுவாசத்தைத் துறந்துவிட ஒப்புக்கொள்கிறேன்.”
அதைத் தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று, இந்த வாக்கியம் சர்ச்சில் வாசிக்கப்பட்டது. இந்தப் பெண்ணின் தாத்தா மயங்கிவிழுந்தார், பாட்டி கதறி அழுதாள். என்றாலும் இந்தப் பங்கைச் சேர்ந்த மற்றவர்கள் கவரப்பட்டு பின்வருமாறு சொன்னார்கள்: “கடைசியாக, நம்முடைய சர்ச்சில் அதிகமாக பொய்கள் இருப்பதை சொல்வதற்கு எவரோ ஒருவருக்குத் தைரியம் இருக்கிறது.” தைரியமுள்ள இந்தப் பருவவயதுப் பெண் இப்பொழுது நம்முடைய முழுக்காட்டப்பட்ட ஆவிக்குரிய சகோதரியாக இருக்கிறாள், தன்னுடைய கிராமத்தில் ஏழு பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கிறாள்.
‘அவர்களுடைய கனிகளினாலே’
கையாவீ இ போமோஷி என்ற வாராந்தர பத்திரிகை “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பிரசுரித்திருந்தது. கிறிஸ்தவமண்டலத்திலுள்ள வணக்கத்தார் “உண்மையில் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் மத நியமங்களை அத்தனை முக்கியமானதாக கருதுவதில்லை. அவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் வெகு முனைப்பான வேறுபாடுகள் இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் சொல்வதைச் செய்கிறார்கள், பைபிள் கட்டளையிடுவதையே சொல்கிறார்கள்,” என்பதாக கட்டுரையின் ஒரு பகுதி சொன்னது.
சாட்சிகளின் தோற்றத்தை பெயர் கிறிஸ்தவர்களுடையதோடு வேறுபடுத்திக் காட்டிவிட்டு, அறிக்கை தொடர்ந்து இவ்வாறு சொன்னது: “பெயர் கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தின் இன்றியமையாத சத்தியங்களையும் நியமங்களையும் பெரும்பாலும் அறியாதவர்களாக, அநேகமாக அவற்றைப் பின்பற்றாதவர்களாக இருக்கின்றனர். . . . தங்களுடைய மனநிலையின் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் தங்கள் சொற்கள் மற்றும் செயல்களில் இணக்கமாயிருப்பதை வெளிப்படுத்துகிறார்கள். இவ்விதமாக தாங்கள் ‘கள்ள தீர்க்கதரிசிகள்’ அல்ல, ஆனால் மாறாக தங்கள் கனிகளினால் அறியப்படக்கூடியவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள். ‘முட்செடிகளில் திராட்சப்பழங்களையும் முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் மக்கள் ஒருபோதும் பறிப்பதில்லை அல்லவா?’ (மத்தேயு 7:15-20).”
தன்னுடைய மகன் கத்தோலிக்க சர்ச்சை விட்டு யெகோவாவின் சாட்சியாகிவிட்டதைக் குறித்து வருத்தப்பட்டு சியாசுக்கா என்ற வாராந்தர பத்திரிகைக்கு ஒரு பெண்மணி கடிதம் எழுதியிருந்தாள். பதிப்பாசிரியரின் ஆலோசனை என்னவாக இருந்தது? “உங்கள் மகன் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொண்டு, அவர்களுடைய விசுவாசத்தைக் கற்று அதை ஏற்றுக்கொண்டிருந்தால், அது மொத்தத்தில் அவனுடைய தீர்மானமாக இருக்கிறது, இது ஒப்புக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட வேண்டும். . . . இந்த மதத் தொகுதி, அவர்களுடைய அசாதாரணமான ஒருமைப்பாடு மற்றும் ஆழமான தொகுதிப் பிணைப்புகள், உயர்ந்த நேர்மையுணர்வு சமுதாய வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளை நெருக்கமாகப் பின்பற்றுவது, கடைசியாக, தங்களுடைய சத்தியத்துக்கு இணக்கமாக வாழும் திறமை, மனமார ஏற்றுக்கொண்ட மதிப்பீடுகளை நடைமுறையில் செய்துமுடித்தல் போன்ற அநேக அழகான மற்றும் சமுதாயத்தில் விரும்பத்தக்க அம்சங்களைத் தனித்தன்மைகளாகக் கொண்டுள்ளது. இவை விலைமதிப்புள்ள நற்பண்புகளாகும்.”
[அடிக்குறிப்புகள்]
a கூடுதலான தகவலுக்கு, 1994 யெகோவாவின் சாட்சிகளின் நாட்காட்டி (1994 Calendar of Jehovah’s Witnesses) காண்க.
[பக்கம் 9-ன் படம்]
நாட்டு தகவல்கள்
1993 ஊழிய ஆண்டு
சாட்சிகொடுப்பவர்களின் உச்ச எண்ணிக்கை: 1,13,551
விகிதம்: 1 சாட்சிக்கு 339
நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தோர்: 2,35,642
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 7,961
சராசரி பைபிள் படிப்புகள்: 79,131
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 8,164
சபைகளின் எண்ணிக்கை: 1,397
கிளை அலுவலகம்: நாடாஸின்
[பக்கம் 9-ன் படம்]
1948-ல் லோட்ஜ்-ல் போலாந்தின் கிளை அலுவலகம்
[பக்கம் 9-ன் படம்]
முன்னாளைய கிழக்கு ப்ரஷ்யாவில் அறிவிப்பு அட்டைகள் கொண்டு செய்யப்பட்ட சாட்சிக்கொடுக்கும் வேலை, ஜீன் 1948
[பக்கம் 9-ன் படம்]
போலாந்து பெத்தேல் பணியாளர் குழாமின் எழுபத்திரண்டு அங்கத்தினர்கள், ஜனவரி 1993
[பக்கம் 9-ன் படம்]
நாடாஸினில் புதிய கிளை