பண்டைய மண் ஓடுகள் பைபிள் பதிவை ஊர்ஜிதப்படுத்துகின்றன
க டவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் பைபிள் எழுதப்பட்டது. (2 தீமோத்தேயு 3:16) மக்கள், இடங்கள், பண்டைய காலத்தில் நிலவிய மதம் மற்றும் அரசியல் சூழ்நிலை ஆகியவற்றைப்பற்றி அது தரும் தகவல்கள் அனைத்துமே திருத்தமானவை. பைபிள் நம்பகமான புத்தகம் என்பதை நிரூபிக்க தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் எதுவுமே தேவையில்லை. இருந்தாலும், பைபிள் பதிவுகளை நாம் நன்கு புரிந்துகொள்ள அவை உதவுகின்றன.
பூர்வகால இடங்களைத் தோண்டுகையில், மண்பாண்டங்களின் உடைந்த ஓடுகளே ஆராய்ச்சியாளர்கள் கைகளில் அதிகம் சிக்கின. எகிப்து, மெசபடோமியா உட்பட, மத்திய கிழக்கில் உள்ள பூர்வ கால இடங்கள் பலவற்றில் இந்த மண் ஓடுகளே எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவை விலை மலிவானவையாய் இருந்தன. இப்போது எழுதுவதற்குக் காகிதங்களைப் பயன்படுத்துவதைப் போல, அப்போது ஒப்பந்தங்கள், கணக்குப் பதிவுகள், விற்பனை விவரங்கள் போன்றவற்றை எழுத மண் ஓடுகள் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக, இவற்றில் எழுத மை பயன்படுத்தப்பட்டது. சில ஓடுகளில் ஒரேவொரு வார்த்தைதான் காணப்பட்டது. இன்னும் சிலவற்றில் பல வரிகள் அல்லது பத்திகள் காணப்பட்டன.
பைபிள் காலப்பகுதியைச் சேர்ந்த பல மண் ஓடுகள், இஸ்ரேலில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தப்பட்டபோது கிடைத்திருக்கின்றன. பொ.ச.மு. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த மண் ஓடுகள் மூன்று இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை நமக்கு அதிக ஆர்வத்துக்குரியதாய் இருப்பதற்குக் காரணம், பைபிளில் காணப்படும் பல்வேறு சரித்திர தகவல்களை இவை ஊர்ஜிதப்படுத்துவதே. இவை சமாரிய மண் ஓடுகள், ஆராத் மண் ஓடுகள், லாகீஸ் மண் ஓடுகள் என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. இவை ஒவ்வொன்றையும்பற்றி இப்போது அறிந்துகொள்ளலாம்.
சமாரிய மண் ஓடுகள்
பொ.ச.மு. 740-ல் சமாரியாவை அசீரியர்கள் வீழ்த்தும்வரை, இது இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகராய் இருந்தது. சமாரியா உருவான விதத்தை 1 இராஜாக்கள் 16:23, 24 பின்வருமாறு குறிப்பிடுகிறது: “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில் [பொ.ச.மு. 947], உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, . . . சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு . . . சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.” ரோமர்களின் ஆட்சிக் காலம்வரை அந்த நகரம் நிலைத்திருந்தது; அப்போது அதன் பெயர் சபாஸ்டி என்று மாற்றப்பட்டது. கடைசியில், பொ.ச. ஆறாம் நூற்றாண்டில் அது அடியோடு அழிந்தது.
1910-ஆம் ஆண்டு, தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தும் ஒரு குழுவினர், பண்டைய சமாரியா இருந்த இடத்தைத் தோண்டியபோது நிறைய மண் ஓடுகளைக் கண்டுபிடித்தார்கள். இவை பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையென அவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். சமாரியாவின் சுற்றுவட்டாரங்களிலிருந்து எண்ணெய், திராட்சை ரசம் ஆகியவை அங்கு கொண்டுவரப்பட்டதாக அந்த ஓடுகளில் காணப்பட்ட வாசகங்கள் தெரிவிக்கின்றன. பூர்வ எழுத்துப்பொறிப்புகள்—பைபிள் காலத்தைப் பறைசாற்றும் குரல்கள் என்ற ஆங்கில புத்தகம் இந்தக் கண்டுபிடிப்பைக் குறித்துப் பின்வருமாறு சொல்கிறது: “1910-ல் கண்டுபிடிக்கப்பட்ட 63 மண் ஓடுகள் . . . பூர்வ இஸ்ரவேலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்புகளில் மிக முக்கியமானவையாய்க் கருதப்படுவது சரியானதே. இந்த ஓடுகளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் முக்கியமாய் இருப்பதால் அல்ல. . . . மாறாக, இஸ்ரவேலரின் பெயர்கள், வம்சங்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் ஆகியவை எக்கச்சக்கமாகக் காணப்பட்டதே இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம்.” பைபிளிலுள்ள தகவல்களை இவை எவ்வாறு ஊர்ஜிதப்படுத்துகின்றன?
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றிய பிறகு, அதைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். மனாசே கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட பிராந்தியத்தில் சமாரியா அமைந்திருந்தது. யோசுவா 17:1-6-ன்படி, மனாசேயின் பேரனான கிலெயாத்தின் வழிவந்த பத்து வம்சங்களுக்கு இந்தப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கிலெயாத்தின் மகன்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், செகேம், செமீதா ஆகியோருக்கு அங்கே இடம் ஒதுக்கப்பட்டது. ஆறாவது நபரான எப்பேருக்கு, பேரன்கள் இல்லாததால் அவருடைய ஐந்து பேத்திகளான மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.—எண்ணாகமம் 27:1-7.
இவற்றில் ஏழு குடும்பங்களின் பெயர்களை சமாரிய மண் ஓடுகளில் காணமுடிகிறது. கிலெயாத்தின் மகன்கள் ஐந்து பேரின் பெயர்களும், எப்பேரின் பேத்திகளான ஒக்லாள், நோவாள் ஆகியோரின் பெயர்களும் இவற்றில் காணப்படுகின்றன. “சமாரிய மண் ஓடுகளில் உள்ள பெயர்களை வைத்து மனாசே கோத்திரத்தில் வந்த வம்சத்தாருக்கும், அவர்கள் குடியிருந்ததாய் பைபிளில் குறிப்பிடப்படுகிற இடங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பைபிள் தவிர இதை விளக்குகிற மற்றொரு அத்தாட்சி இதுவாகும்” என்று NIV ஆர்க்கியலாஜிக்கல் ஸ்டடி பைபிள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் தெரிவிக்கிறது. இஸ்ரவேல் கோத்திரங்களின் ஆரம்ப கால சரித்திரத்தை விளக்கும் பைபிள் பதிவு நம்பகமானது என்பது இந்த மண் ஓடுகளிலிருந்து தெளிவாகிறது.
இஸ்ரவேலரின் மத சூழல்பற்றி பைபிள் தரும் தகவல்களையும் சமாரிய மண் ஓடுகள் நிரூபிப்பதாகத் தெரிகிறது. இவை எழுதப்பட்ட சமயத்தில், யெகோவாவின் வழிபாட்டை கானானிய தெய்வமான பாகாலின் வழிபாட்டோடு சம்பந்தப்படுத்தியிருந்தார்கள். பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில், எழுதப்பட்ட ஓசியா தீர்க்கதரிசனமும் இஸ்ரவேலர் மனந்திரும்பும் காலத்தைப்பற்றி முன்னுரைத்தது. அப்போது, யெகோவாவை இஸ்ரவேலர் “ஈஷி,” அதாவது, என் கணவர் என்று அழைப்பார்கள் என்றும் இனிமேலும், “பாகாலி” அதாவது, என் உரிமையாளர் என அழைக்க மாட்டார்கள் என்றும் முன்னுரைத்தது. (ஓசியா 2:16, 17) சமாரிய மண் ஓடுகளில் காணப்பட்ட சிலருடைய பெயர்கள் “பாகால் என் தகப்பன்,” “பாகால் பாடுகிறான்,” “பாகால் பலசாலி,” “பாகால் நினைந்தருளுகிறான்” போன்ற அர்த்தங்களைத் தந்தன. ஏதோவொரு விதத்தில் யெகோவாவின் பெயர் இணைக்கப்பட்ட 11 பெயர்கள் காணப்பட்டால், 7 பெயர்கள் ‘பாகாலின்’ பெயரை உடையதாய் இருந்தன.
ஆராத் மண் ஓடுகள்
குறைவாக மழை பெய்யும் நெகெப் பகுதியில் பூர்வ நகரமான ஆராத் அமைந்திருந்தது. இது எருசலேமிற்குத் தெற்கே வெகு தொலைவில் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆராத் நகர் இருந்த இடத்தைத் தோண்டியபோது, இஸ்ரவேலரது ஆறு கோட்டைகள் வரிசையாக இருப்பது தெரியவந்தது. இவை சாலொமோனின் ஆட்சி காலம் தொடங்கி (பொ.ச.மு. 1037-998) பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர் எருசலேமை அழித்தது வரையான காலப்பகுதிக்குரியவை. பைபிள் காலங்களைச் சேர்ந்த எக்கச்சக்கமான மண் ஓடுகளை ஆராய்ச்சியாளர்கள் இங்கே கண்டுபிடித்திருக்கிறார்கள். எபிரெயு, அரமேயிக், இன்னும் பிற மொழி எழுத்துக்கள் உள்ள 200 பொருள்கள் அவற்றில் இருந்தன.
ஆசாரிய குடும்பங்களைப்பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை ஆராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மண் ஓடுகளில் சில உறுதிப்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, யாத்திராகமம் 6:24-லிலும் எண்ணாகமம் 26:11-லிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘கோராகின் குமாரரைப்பற்றி’ ஓர் ஓடு தெரிவிக்கிறது. சங்கீதங்கள் 42, 44-49, 84, 85, 87, 88 ஆகியவற்றின் மேற்குறிப்புகள், இவை ‘கோராகின் புத்திரரால்’ எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. பஸ்கூர், மெரேமோத் ஆகியோரது ஆசாரிய குடும்பங்களின் பெயர்களும் ஆராத் மண் ஓடுகளில் காணப்படுகின்றன.—1 நாளாகமம் 9:12; எஸ்றா 8:33.
மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். எருசலேமை பாபிலோனியர் அழிப்பதற்குச் சற்று முன்னான காலப்பகுதிக்குரியதாய் சொல்லப்படும் கோட்டையின் இடிபாடுகளில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மண் ஓடு ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது அந்தக் கோட்டையின் தலைவருக்கு எழுதப்பட்டிருந்தது. வேதாகமத்தின் சூழமைவு என்ற ஆங்கில பிரசுரம், அந்த மண் ஓட்டில் பின்வரும் தகவல் இருந்ததாய்ச் சொல்கிறது: “என்னுடைய ஆண்டவன் எல்யாசிப்புக்கு. யாவே [யெகோவா] உம்முடைய நலனில் அக்கறை காட்டுவராக. . . . நீங்கள் எனக்குக் கட்டளையிட்ட காரியங்களைப் பொறுத்தவரை: அனைத்தும் நன்றாக நடக்கின்றன: அவன் யாவேயின் ஆலயத்தில் தங்கியிருக்கிறான்.” இங்கு குறிப்பிடப்படும் ஆலயம் சாலொமோனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்தான் என்பதாக பல அறிஞர்கள் நம்புகிறார்கள்.
லாகீஸ் மண் ஓடுகள்
எருசலேமிற்கு தென்மேற்கே 43 கிலோமீட்டர் தொலைவில் அரண் சூழ்ந்த பண்டைய நகரமான லாகீஸ் உள்ளது. 1930-ல் தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டபோது, நிறைய மண் ஓடுகள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் குறைந்தபட்சம் 12 ஓடுகள் கடிதங்களாக இருந்தது தெரியவந்தது. “[பாபிலோன் ராஜாவின்] தாக்குதலை எதிர்கொள்ள, யூதா தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில் நிலவிய அரசியல் சூழலையும் பொதுவாகக் காணப்பட்ட நெருக்கடி நிலையையும் விளக்குவதால் . . . இவை மிக முக்கியமானவையாய்” கருதப்பட்டன.
ஓர் உதவி அதிகாரிக்கும், யாவாஷ் என்பவருக்கும் இடையிலான கடிதங்கள் மிக முக்கியமானவையாய் கருதப்படுகின்றன. யாவாஷ் அநேகமாக லாகீஸின் படைத் தளபதியாய் இருந்திருக்கலாம். இந்தக் கடிதங்களில் காணப்படும் எழுத்துநடை, அதே காலப்பகுதியில் வாழ்ந்த எரேமியா தீர்க்கதரிசியின் எழுத்துநடைக்கு ஒத்திருந்தது. அந்த நெருக்கடியான காலகட்டத்தைப் பற்றிய பைபிளின் விவரிப்பை, இந்தக் கடிதங்களில் இரண்டு எவ்வாறு ஊர்ஜிதப்படுத்துகின்றன என்பதைக் கவனிப்போம்.
“பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்” என்று எரேமியா 34:7-ல் எரேமியா தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார். லாகீஸில் கிடைத்த கடிதங்களை எழுதியவர்களில் ஒருவர் இதைத்தான் குறிப்பிடுவதாய் தெரிகிறது. “அசெக்காவை எங்களால் பார்க்க முடியவில்லை. ஆகவே, . . . லாகீஸின் [நெருப்பு] சமிக்கைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என அவர் எழுதுகிறார். பாபிலோனியர் வசம் அசெக்கா வீழ்ந்துவிட்டதையும் லாகீஸ் அடுத்ததாக விழவிருந்ததையுமே இது அர்த்தப்படுத்துவதாக அநேக அறிஞர்கள் நினைக்கிறார்கள். இந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள ‘நெருப்பு சமிக்கைகளைப்’ பற்றிய குறிப்பு சுவாரஸ்யமானது. இதுபோன்ற தகவல் தொடர்பு முறை புழக்கத்தில் இருந்ததாக எரேமியா 6:1-னும்கூட குறிப்பிடுகிறது.
பாபிலோனுக்கு எதிராக யூதா ராஜா கலகம் செய்தபோது, எகிப்தின் உதவியைப் பெற அவர் முயன்றதாக, தீர்க்கதரிசிகளான எரேமியாவும் எசேக்கியேலும் சொல்கிறார்கள். லாகீஸில் கிடைத்த மற்றொரு கடிதம் இதற்கு அத்தாட்சி அளிப்பதாக நம்பப்படுகிறது. (எரேமியா 37:5-8; 46:25, 26; எசேக்கியேல் 17:15-17) இந்தக் கடிதம் பின்வருமாறு சொல்கிறது: “இப்போது தங்கள் ஊழியனுக்கு பின்வரும் தகவல் கிடைத்திருக்கிறது: எல்நாத்தானின் மகனான தளபதி கான்யாஹு எகிப்திற்குப் போக தெற்கு நோக்கிச் சென்றிருக்கிறார்.” இதை, எகிப்தின் ராணுவ உதவியைப் பெறுவதற்கான முயற்சியாகவே அறிஞர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள்.
எரேமியா புத்தகத்தில் இருக்கும் பல பெயர்களை லாகீஸ் மண் ஓடுகளில் காணமுடிகிறது. நேரியா, யசினியா, கெமரியா, எல்நாத்தான், ஓசாயா ஆகியோரின் பெயர்கள் அதில் காணப்படுகின்றன. (எரேமியா 32:12; 35:3; 36:10, 12; 42:1) இந்தப் பெயர்கள் பைபிளில் காணப்படும் அதே நபர்களைத்தான் குறிப்பிடுகின்றனவா என்பது சரியாகத் தெரியவில்லை. அந்தக் காலப்பகுதியில் எரேமியா வாழ்ந்ததால், இவை இரண்டுக்கும் இடையில் காணப்படும் ஒற்றுமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுவான ஒற்றுமை
சமாரியா, ஆராத், லாகீஸ் மண் ஓடுகள் பைபிளில் காணப்படும் எண்ணற்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்துகின்றன. இவற்றில் குடும்பப் பெயர்கள், இடங்களின் பெயர்கள், அச்சமயத்தில் நிலவிய மதம் மற்றும் அரசியல் சூழல் ஆகியவை அடங்கும். இந்த மூன்று வகை மண் ஓடுகளிலும் ஒரு முக்கியமான அம்சம் பொதுவாகக் காணப்படுகிறது.
ஆராத், லாகீஸ் மண் ஓடுகளில் காணப்படும் கடிதங்களில், “யெகோவா உமக்கு சமாதானத்தை அருளுவாராக” என்பது போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன. லாகீஸில் கிடைத்த ஏழு கடிதங்களில், கடவுளுடைய பெயர் மொத்தம் 11 முறை காணப்படுகிறது. அதோடு, இந்த மூன்று வகை ஓடுகளிலும் இருந்த அநேக எபிரெய பெயர்களில், யெகோவா என்ற பெயர் சுருக்க வடிவத்தில் காணப்பட்டது. அந்தக் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் கடவுளுடைய பெயரை அன்றாடம் பயன்படுத்தியது இதிலிருந்து ஊர்ஜிதமாகிறது.
[பக்கம் 13-ன் படம்]
எல்யாசிப் என்பவருக்கு எழுதப்பட்ட இந்த மண் ஓடு, ஆராத் இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது
[படத்திற்கான நன்றி]
Photograph © Israel Museum, Jerusalem; courtesy of Israel Antiquities Authority
[பக்கம் 14-ன் படம்]
கடவுளுடைய பெயர் காணப்படும் லாகீஸ் கடிதம்
[படத்திற்கான நன்றி]
Photograph taken by courtesy of the British Museum