புறமதப் பண்டிகை கிறிஸ்தவ பண்டிகையாக முடியுமா?
இ த்தாலியில் 2004-ஆம் வருடத்தின் குளிர்காலத்தில், கிறிஸ்மஸ் சமயத்தில் சூடான ஒரு விவாதம் நடைபெற்றது. கிறிஸ்மஸ் பாரம்பரியங்களைப்பற்றிக் குறிப்பிடுவதைக் குறைக்க வேண்டும் அல்லது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்துக்கு கல்வித்துறையைச் சேர்ந்த சிலரும் ஆசிரியர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். கத்தோலிக்கர்களாகவோ புராட்டஸ்டன்டினராகவோ இல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை பள்ளிகளில் அதிகரித்து வருவதால் இந்தக் கருத்தை அவர்கள் முன்வைத்தார்கள். ஆனால், கல்வித்துறையைச் சேர்ந்த மற்றவர்களும் பிற துறையைச் சேர்ந்தவர்களும் அந்தப் பாரம்பரியங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்றும் அவற்றை முற்றிலும் பாதுகாக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்கள்.
சரி, இந்தக் கருத்து வேறுபாடு ஒருபுறமிருக்கட்டும்; ஆனால், பெரும்பாலான கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள் பிறந்த கதைதான் என்ன? முன்னர் குறிப்பிடப்பட்ட விவாதம் உச்சக்கட்டத்தை எட்டியபோது, லாஸேர்வாடோரே ரோமானோ என்ற வாடிகன் செய்தித்தாள் சில ருசிகர தகவல்களைக் கொடுத்தது.
கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிற தேதியைக் குறித்து அந்தக் கத்தோலிக்க செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “சரித்திரப்படி பார்த்தால், இயேசு பிறந்த தேதி எதுவென்று சரியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், ரோம வரலாறும், அந்தக் காலப்பகுதியில் செய்யப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், அதற்குப் பின்வந்த நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளும் இந்தத் தேதியைத் துல்லியமாகக் குறிப்பிடவில்லை. . . . எல்லாரும் அறிந்திருக்கும் டிசம்பர் 25 என்ற தேதி நான்காம் நூற்றாண்டில் ரோம திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. புறமத வழிபாட்டில் ரோமர்கள் ஈடுபட்டிருந்த அந்தக் காலப்பகுதியில், இந்த நாள் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது . . . ஏற்கெனவே, கான்ஸ்டன்டைனின் அரசாணையால் ரோமில் கிறிஸ்தவ மதத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது. எனினும், சூரியக் கடவுளை . . . பற்றிய புராணக்கதையை அநேகர் தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்தார்கள். முக்கியமாய் போர் வீரர்கள் மத்தியில் இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட பண்டிகைகள் அனைத்தும் மக்கள் பின்பற்றி வந்த பாரம்பரியங்களில் இருந்து தோன்றியவை. இவை அனைத்தும் டிசம்பர் 25-ல் கொண்டாடப்பட்டு வந்தன. இதனால், அந்த நாளை கிறிஸ்தவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக ஆக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் ரோம திருச்சபைக்கு ஏற்பட்டது. எனவே, சூரியக் கடவுளுக்குப் பதிலாக, நீதியின் சூரியனாக உண்மையில் திகழும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.”
இப்பொழுது, கத்தோலிக்கப் பாரம்பரியத்தின் ஓர் அம்சமாய் ஆகியிருக்கும் கிறிஸ்மஸ் மரத்தைப்பற்றி என்ன சொல்லலாம்?
பசுமையான மரங்கள் பலவற்றிற்கு, உதாரணமாக, “ஊசியிலை மரத்தின் கிளைகள் போன்றவற்றிற்கு நோய்களைத் தடுக்கும் மந்திர அல்லது மருத்துவ சக்தி இருப்பதாக” பண்டைய காலத்தில் கருதப்பட்டதென அந்தக் கத்தோலிக்க செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை குறிப்பிட்டது. “கிறிஸ்மஸுக்கு முந்திய நாளான டிசம்பர் 24-ஆம் தேதி, ஆதாம் ஏவாளையும் பூங்காவன பூமியில் இருந்த மரத்தையும் பற்றிய அந்தப் பிரபலமான கதையைச் சொல்லி அச்சம்பவத்தை மக்கள் நினைவுகூர்ந்தார்கள் . . . அந்த மரம் ஆப்பிள் மரமாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், குளிர்காலத்தில் ஆப்பிள் மரத்தை வைப்பது பொருந்தாதென நினைத்ததால் ஊசியிலை மரம் மேடையில் அலங்கரிக்கப்பட்டு, அதில் சில ஆப்பிள் பழங்கள் செருகி வைக்கப்பட்டன; அதுமட்டுமின்றி, பாவத்திலிருந்து மனிதரை மீட்பதற்காக எதிர்காலத்தில் இயேசு வரவிருந்ததை அடையாளப்படுத்தும் விதத்தில் மெல்லிய அப்பங்கள் அதில் தொங்கவிடப்பட்டன. நொறுக்கப்பட்ட ரொட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அப்பங்கள் விசேஷ வடிவங்களில் செய்யப்பட்டன. பூசையில் பயன்படுத்தப்படும் அப்பங்களைப் போலவே இந்த புளிப்பில்லாத அப்பங்களும் இயேசுவின் உடலை அடையாளப்படுத்தின. அதேபோல, குழந்தைகளுக்கென இனிப்புகளும் பரிசுப் பொருள்களும் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டன” என்றும் அது குறிப்பிட்டது. அதற்குப் பின் வந்த காலத்தைப்பற்றி என்ன சொல்லலாம்?
16-ஆம் நூற்றாண்டில், கிறிஸ்மஸ் மரத்தைப் பயன்படுத்தும் பாரம்பரியத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு ஜெர்மனி என்றால் “கிறிஸ்மஸ் மரத்தை கடைசியாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று; அதைப் பயன்படுத்துவது புராட்டஸ்டன்டினரின் பழக்கம் என்ற செய்தி பரவலாக இருந்ததும் அதற்கு ஒரு காரணமாகும். கிறிஸ்மஸ் மரத்திற்குப் பதிலாக கிறிஸ்மஸ் குடில் [இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் காட்சி] வைக்கப்பட வேண்டும் என்றும் கருதப்பட்டது” என்று லாஸேர்வாடோரே ரோமானோ செய்தித்தாள் சுட்டிக்காட்டியது. போப் ஆறாம் பால் என்பவர், இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் குடிலுக்கு அருகே “மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரத்தை [ரோமிலுள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில்] வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.”
பண்டைய புறமதங்களிலிருந்து தோன்றிய அடையாளச் சின்னங்களுக்கும் பண்டிகைகளுக்கும் மதத் தலைவர்கள் கிறிஸ்தவ சாயம் பூசுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” என்று அறிவுறுத்துவதன்மூலம் உண்மைக் கிறிஸ்தவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்பதை பைபிள் தெளிவுபடுத்துகிறது.—2 கொரிந்தியர் 6:14-17.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
கிறிஸ்மஸ் மரமும் (எதிர்ப்பக்கம்) வாடிகனில் இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் குடிலும்
[படத்திற்கான நன்றி]
© 2003 BiblePlaces.com
[பக்கம் 9-ன் படம்]
சூரியக் கடவுள்
[படத்திற்கான நன்றி]
Museum Wiesbaden