உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w08 10/15 பக். 17-20
  • ‘யெகோவா என் பெலன்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘யெகோவா என் பெலன்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சத்தியத்தைக் கண்டுபிடித்தேன்
  • பயனியர் பள்ளியும் ஆசீர்வாதங்களும்
  • கிலியட் பள்ளியில் பயிற்சி
  • “புன்னகை தேசம்”
  • புதிய துணை, புதிய நியமிப்பு
  • ‘யெகோவாவின் பலத்தில்’ சேவை செய்ததன் ஆசீர்வாதங்கள்
  • ’ஜீவனைப்பார்க்கிலும் உம்முடைய அன்புள்ள தயவு மேம்பட்டது’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • யெகோவாவுடைய சித்தத்தைச் செய்ய எனக்குக் கற்பித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • நல்ல தெரிவுகளால் நீடித்த ஆசீர்வாதம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
w08 10/15 பக். 17-20

‘யெகோவா என் பெலன்’

ஜோன் கோவில் சொன்னபடி

நான் ஜூலை 1925-ல் இங்கிலாந்திலுள்ள ஹடர்ஸ்ஃபீல்டில் பிறந்தேன். என் அப்பா, அம்மாவிற்கு நான் ஒரே குழந்தை; அதுமட்டுமல்ல, அடிக்கடி நோய்வாய்ப்பட்டுவிடுவேன். “உன்மேல் காற்று பட்டாலே உனக்கு வியாதி வந்துவிடுகிறதே!” என்று அப்பா அடிக்கடி சொல்வார். அவர் சொன்னதும் உண்மை போலத்தான் இருந்தது!

சிறுமியாக இருந்தபோது, பாதிரிமார் சமாதானத்திற்காக ஊக்கமாய் ஜெபம் செய்ததைக் கவனித்தேன். ஆனால் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தபோதோ அவர்கள் வெற்றிக்காக ஜெபம் செய்தார்கள். அதைக் கண்டு குழப்பமடைந்தேன்; பாதிரிமார்கள் மேல் சந்தேகமும் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ஆனி ராட்கிளிஃப் எங்கள் வீட்டிற்கு வந்தார். எங்கள் பகுதியில் வசித்த யெகோவாவின் சாட்சி அவர் மட்டும்தான்.

சத்தியத்தைக் கண்டுபிடித்தேன்

இரட்சிப்பு என்ற ஆங்கில புத்தகத்தை ஆனி எங்களிடம் கொடுத்துவிட்டு, ‘எங்கள் வீட்டில் பைபிள் பற்றி கலந்தாலோசிப்போம், அதற்கு நீங்களும் வாருங்களேன்’ என்று அம்மாவை அழைத்தார்.a அம்மா என்னையும் அங்கு அழைத்துச் சென்றார். அன்று கேட்ட விஷயம் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. மீட்கும் பலியைப் பற்றிதான் கலந்து பேசினார்கள்; ஆனால் என்ன ஆச்சரியம், எனக்குக் கொஞ்சம்கூட சலிப்புத் தட்டவில்லை! அதற்குப் பதிலாக, அவர்கள் பேசிய விஷயம் என் மனதிலிருந்த பல கேள்விகளுக்குப் பதில் அளித்தது. அதற்கடுத்த வாரமும் அவருடைய வீட்டிற்குச் சென்றோம். அன்று, கடைசி நாட்களின் அடையாளத்தைப் பற்றி இயேசு கூறிய தீர்க்கதரிசனம் விளக்கிக் கூறப்பட்டது. உலகில் நிலவும் மோசமான சூழ்நிலையைக் கண்ட அம்மாவும் நானும் உடனடியாக, ‘இதுதான் சத்தியம்’ என்பதைப் புரிந்துகொண்டோம். ராஜ்ய மன்றத்திற்கு வரும்படியும் அன்றே அழைக்கப்பட்டோம்.

ராஜ்ய மன்றத்தில் இருக்கையில் இளம் பயனியர்கள் சிலரைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் ஜாய்ஸ் பார்பர் (இப்போது எலிஸ்). இப்போது இவரும் இவர் கணவர் பீட்டரும் லண்டன் பெத்தேலில் சேவை செய்கிறார்கள். எல்லாருமே பயனியர் ஊழியம் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆகவே, பள்ளியில் படிக்கும்போதே ஒவ்வொரு மாதமும் 60 மணிநேரம் ஊழியம் செய்தேன்.

ஐந்து மாதங்கள் கழித்து, 1940, பிப்ரவரி 11-ஆம் தேதி, ப்ராட்ஃபர்டில் நடந்த ஒரு வட்டார மாநாட்டில் அம்மாவும் நானும் முழுக்காட்டுதல் பெற்றோம். நாங்கள் ஒரு புது மதத்தில் சேர்ந்ததை அப்பா எதிர்க்கவில்லை; என்றாலும், அவர் ஒரு சாட்சியாக மாறவேயில்லை. ஏறக்குறைய நான் முழுக்காட்டுதல் எடுத்த சமயத்தில்தான் தெரு ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. பத்திரிகைகள் அடங்கிய பையையும் விளம்பர அட்டைகளையும் ஏந்திக்கொண்டு ஊழியம் செய்தேன். ஒரு சனிக்கிழமை அன்று, சந்தடி நிறைந்த கடைத்தெருப் பகுதியில் நின்று ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. மனித பயம் என்னைவிட்டுப் போகாததால், என் பள்ளியில் படித்தவர்கள் எல்லாருமே அந்தப் பக்கமாய்ப் போனதுபோலவே இருந்தது.

1940-ஆம் வருடத்தில் எங்கள் கம்பெனி (அக்காலத்தில் சபை அப்படித்தான் அழைக்கப்பட்டது) இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் விளைவாக, என் நண்பர்களில் பெரும்பாலானோர் அடுத்த கம்பெனிக்கு சென்றுவிட்டனர். இதைப் பற்றி கம்பெனி ஊழியரிடம் (இன்றைய நடத்தும் கண்காணி) புலம்பினேன். அவரோ, “உனக்கு இளம் நண்பர்கள் வேண்டுமென்றால், ஊழியம் செய்து அவர்களைக் கண்டுபிடித்துக்கொள்” என்றார். நானும் அதையே செய்தேன்! சீக்கிரத்திலேயே, எல்சீ நோபலைச் சந்தித்தேன். அவள் சத்தியத்திற்கு வந்துவிட்டாள்; என் நெருங்கிய தோழியுமானாள்.

பயனியர் பள்ளியும் ஆசீர்வாதங்களும்

படித்து முடித்ததும் ஒரு கணக்கரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். என்றாலும், முழுநேர ஊழியர்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தைக் கண்ணாரக் கண்டதால், ஒரு பயனியராகச் சேவைசெய்ய வேண்டுமென்ற என் ஆசையும் அதிகரித்தது. மே 1945-ல் விசேஷ பயனியராக சந்தோஷத்தோடு சேவைசெய்ய ஆரம்பித்தேன். நான் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்த அன்றைய தினமே, நாள் முழுக்க மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. என்றாலும், ஊழியம் செய்வதிலேயே மூழ்கிவிட்டதால் மழையைப் பற்றி கவலைப்படவே இல்லை. சொல்லப்போனால், தினந்தோறும் எனது சைக்கிளை மிதித்து ஊழியத்திற்குச் சென்றது நல்ல உடற்பயிற்சியாய் இருந்தது, அதுவே என் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது. எனது எடை எப்போதுமே 42 கிலோவிற்குக் குறைவாகத்தான் இருந்தது; என்றாலும், பயனியர் ஊழியத்தை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே இல்லை. ‘யெகோவா என் பெலன்’ என்பதை இத்தனை வருடங்களாக என் வாழ்க்கையில் நிஜமாகவே ருசித்திருக்கிறேன்.—சங். 28:7.

விசேஷ பயனியராக இருந்ததால் புதிய சபைகளை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு சாட்சிகளே இல்லாத இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். இங்கிலாந்தில் மூன்று வருடமும், பிறகு அயர்லாந்தில் மூன்று வருடமும் சேவை செய்தேன். அயர்லாந்திலுள்ள லிஸ்பர்னில் இருந்தபோது, புராட்டஸ்டன்ட் சர்ச்சில் உதவி குருவாயிருந்த ஒருவரோடு பைபிளைப் படித்தேன். பைபிளின் அடிப்படைப் போதனைகளைப் பற்றிய சத்தியத்தை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டபோது அதை சர்ச் அங்கத்தினர்களோடு அவர் பகிர்ந்துகொண்டார். அதைக் கேட்ட சிலர் சர்ச் மேலதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆகவே, ஏன் அவ்வாறு போதிக்கிறார் என்று அவரை அழைத்துக் கேட்டனர். நான் இதுவரை போதித்து வந்ததில் நிறைய விஷயங்கள் பொய்யானவை என்பதை அவர்களிடம் சொல்ல வேண்டியது என் கிறிஸ்தவக் கடமையென்று உணர்ந்தேன் என அவர் கூறினார். அவருடைய குடும்பத்தார் அவரைப் கடுமையாக எதிர்த்தபோதிலும் தன்னை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்து மரணம்வரை உண்மையோடு சேவித்தார்.

அடுத்ததாக, அயர்லாந்திலுள்ள லார்ன் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டேன். என்னோடு பயனியராகச் சேவை செய்தவர் 1950-ல் நியு யார்க்கில் நடந்த ‘தேவராஜ்ய அதிகரிப்பு’ மாநாட்டிற்குச் சென்றிருந்ததால் அங்கு ஆறு வாரங்கள் தனியாகவே ஊழியம் செய்தேன். மாநாட்டிற்குச் செல்ல வேண்டுமென்று நான் மிகவும் விரும்பியதால் தனியாக ஊழியம் செய்வது கடினமாக இருந்தது. என்றாலும், அந்த வாரங்களில் ஊழியத்தில் அநேக உற்சாகமூட்டும் அனுபவங்களைப் பெற்றேன். 20-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு நம் பிரசுரத்தைப் பெற்றிருந்த, வயதான ஒருவரைச் சந்தித்தேன். அத்தனை வருடங்களாக அவர் அதைத் திரும்பத் திரும்ப வாசித்திருந்ததால் அதை மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தார். அவரும் அவருடைய மகனும் மகளும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

கிலியட் பள்ளியில் பயிற்சி

1951-ஆம் வருடத்தில் கிலியட் பள்ளியின் 17-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். அது அப்போது நியு யார்க்கிலுள்ள சௌத் லான்சிங்கில் அமைந்திருந்தது. இங்கிலாந்திலிருந்து இன்னும் பத்து பயனியர்களும் அந்தப் பள்ளிக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் பெற்ற பைபிள் கல்வியை எவ்வளவாய் அனுபவித்து மகிழ்ந்தேன்! அந்தக் காலத்தில், சபையில் நடந்த தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு சகோதரிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. கிலியட் பள்ளியிலோ சகோதரிகளாகிய எங்களுக்கும்கூட பேச்சு கொடுக்கவும் அறிக்கைகள் வாசிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் வெலவெலத்துப்போனோம்! முதல் முறையாக பேச்சு கொடுத்த சமயத்தில் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, குறிப்புத்தாளைப் பிடித்திருந்த என் கை நடுங்கிக்கொண்டே இருந்தது. போதனையாளரான சகோதரர் மாக்ஸ்வெல் பிரண்ட் கிண்டலாக இவ்வாறு கூறினார்: “நல்ல பேச்சாளர்கள் ஆரம்பத்தில் நடுங்குவதைப் போலவே நீங்களும் நடுங்கினீர்கள். ஆனால், ஆரம்பத்தில் மட்டுமல்ல பேச்சை முடிக்கும்வரை நடுங்கினீர்கள்.” போகப்போக அந்தப் பள்ளியில், மற்றவர்கள் முன்பு பேச்சு கொடுப்பதில் நாங்கள் அனைவருமே முன்னேறினோம். சீக்கிரத்திலேயே எங்கள் பயிற்சி முடிந்து, பட்டம்பெற்றதும் நாங்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். நானோ தாய்லாந்திற்கு அனுப்பப்பட்டேன்!

“புன்னகை தேசம்”

தாய்லாந்தில் என்னோடு ஊழியம் செய்வதற்காக அஸ்டிரிட் ஆன்டர்சன் நியமிக்கப்பட்டதை யெகோவா தந்த பரிசாகவே கருதினேன். சரக்குக் கப்பலில் அங்கு போய்ச் சேர ஏழு வாரம் பிடித்தது. அதன் தலைநகரான பேங்காக்கில் கால்வைத்தபோது, அதன் கடைத்தெருக்கள் ஜனசந்தடி நிறைந்து இருப்பதையும் கால்வாய்களே அதன் தெருக்களாக இருப்பதையும் கண்டோம். 1952-ல் தாய்லாந்தில் 150-க்கும் குறைவான பிரஸ்தாபிகளே இருந்தார்கள்.

‘தாய்’ மொழியில் இருந்த காவற்கோபுரத்தை முதன்முதலாகப் பார்த்தபோது, ‘இந்த மொழியை எப்படித்தான் கற்றுக்கொள்ளப் போகிறோமோ?’ என்றே நினைத்தோம். வார்த்தைகளைச் சரியான தொனியில் உச்சரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. உதாரணமாக, காவயூ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது தொனியை முதலில் ஏற்றி, பிறகு இறக்கினால் “அரிசி” என்று அர்த்தம்; சற்று அழுத்திச் சொன்னால் “செய்தி” என்று அர்த்தம். ஆகவே, ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக ஊழியத்தில் ஈடுபட்டபோது, “நல்ல செய்தி கொண்டு வருகிறேன்” என்று சொல்வதற்கு பதிலாக, “நல்ல அரிசி கொண்டு வருகிறேன்” என்று சொல்லி வந்தோம்! இப்படிப் பல முறை தப்பும் தவறுமாகப் பேசினாலும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மொழியைக் கற்றுக்கொண்டோம்.

தாய் இன மக்கள் மிகவும் நேசமானவர்கள். ஆகவே, தாய்லாந்து “புன்னகை தேசம்” என அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமானது. முதன்முதலாக, கோரட் (தற்போது, நாக்கன் ராசஷீமா) நகரத்தில் சேவைசெய்ய நியமிக்கப்பட்டோம். அங்கு இரண்டு வருடங்கள் இருந்தோம். பிறகு, ச்யாங் மைய் நகரத்திற்கு அனுப்பப்பட்டோம். தாய் இன மக்களில் பெரும்பாலோர் புத்த மதத்தினர் என்பதால் பைபிளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. கோரட் நகரில் இருக்கையில் அங்கிருந்த போஸ்ட் மாஸ்டரோடு பைபிளைப் படித்தேன். முற்பிதாவான ஆபிரகாமைப் பற்றி ஒருமுறை கலந்துபேசினோம். ஆபிரகாம் என்ற பெயர் ஏற்கெனவே அவருக்குப் பரிச்சயமான பெயர் என்பதால் உற்சாகமாகத் தலையசைத்தார். ஆனால், அவர் வேறொரு ஆபிரகாமைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார் என்பது கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. அவர் நினைத்துக்கொண்டிருந்ததோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன்!

நேர்மை மனமுள்ள தாய் இன மக்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதேசமயம், எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் சந்தோஷத்தைக் கண்டடையலாம் என்பதை அவர்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அது மிகவும் உபயோகமான பாடமாய் இருந்தது; ஏனெனில், கோரட்டிலிருந்த முதல் மிஷனரி இல்லத்தில் மின்சாரமும் இருக்கவில்லை, குழாய்த் தண்ணீரும் இருக்கவில்லை. அப்படிப்பட்ட இடங்களில் இருக்கையில், “பரிபூரணமடையவும் குறைவுபடவும்” கற்றுக்கொண்டோம். அப்போஸ்தலன் பவுலைப்போல, ‘என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ என்பதை அனுபவத்தில் கண்டோம்.—பிலி. 4:12, 13, NW.

புதிய துணை, புதிய நியமிப்பு

1945-ஆம் வருடத்தில் லண்டன் சென்றிருந்தேன். அந்தச் சமயத்தில், சில பயனியர்களோடும் பெத்தேல் அங்கத்தினர்களோடும் சேர்ந்து பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தோம். அவர்களுள் ஆலன் கோவிலும் ஒருவர்; அதற்கு சிறிதுகாலம் கழித்து அவர் 11-வது கிலியட் பள்ளிக்குச் சென்றிருந்தார். முதலில் பிரான்சிற்கும் பின்னர் பெல்ஜியத்திற்கும் நியமிக்கப்பட்டார்.b பிற்பாடு, நான் தாய்லாந்தில் மிஷனரியாக இருந்தபோது, அவரை மணந்துகொள்வதற்கு என் விருப்பத்தைக் கேட்டார். நானும் சம்மதித்தேன்.

பெல்ஜியத்திலுள்ள ப்ருஸ்ஸெல்ஸில் ஜூலை 9, 1955-ல் எங்கள் திருமணம் நடந்தது. எங்கள் தேன்நிலவிற்கு பாரிஸ் செல்ல வேண்டுமென்ற ஆசை வெகு நாளாகவே எனக்கு இருந்தது. ஆகவே, திருமணத்திற்கு அடுத்த வாரம் பாரிஸில் நடக்கவிருந்த மாநாட்டிற்கும் செல்லலாம் என்று திட்டமிட்டோம். ஆனால், நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தவுடன், மாநாடு முழுவதற்கும் மொழிபெயர்ப்பாளராக சேவிக்கும்படி என் கணவரிடம் கேட்டார்கள். ஆகவே, ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே அவர் கிளம்பிவிடுவார்; நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அவர் வந்துசேர இரவு வெகுநேரம் ஆகிவிடும். ஆகவே, என் ஆசைப்படி தேன்நிலவை பாரிஸில்தான் அனுபவித்தோம்; ஆனால், அவர்தான் என் பக்கத்தில் இல்லை, பெரும்பாலான சமயம் மேடையிலேயே இருந்தார்! ஆனாலும், சகோதர, சகோதரிகளுக்காக என் கணவர் சேவை செய்வதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இவ்வாறு, எங்கள் திருமணத்தில் யெகோவா முக்கிய நபராக இருந்தால் நாங்கள் நிச்சயமாகவே சந்தோஷமாக இருப்போம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.

திருமணத்திற்குப் பிறகு, புதிய பிராந்தியமாகிய பெல்ஜியத்தில் ஊழியம் செய்தேன். பெல்ஜியத்தைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அங்கு ஓயாமல் யுத்தம் நடந்ததென்று மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பெல்ஜியத்திலுள்ள பெரும்பாலான மக்கள் சமாதானப் பிரியர்கள் என்பதை சீக்கிரத்திலேயே அறிந்துகொண்டேன். அந்நாட்டின் தென் பகுதியில் பிரெஞ்சு மொழி பேசப்பட்டதால் அதையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

பெல்ஜியத்தில் 1955-ல் சுமார் 4,500 பிரஸ்தாபிகள் இருந்தனர். நானும் என் கணவரும் பெத்தேலிலும் பயண வேலையிலுமாக ஏறக்குறைய 50 வருடங்கள் கழித்தோம். முதல் இரண்டரை வருடங்களுக்கு, மழை-வெயிலென்றும், மேடு-பள்ளமென்றும் பார்க்காமல் நாங்கள் சைக்கிளிலேயே பயணம் செய்தோம். அந்தக் காலம் முழுவதும், ஏறக்குறைய 2,000 சகோதர, சகோதரிகளின் வீடுகளில் தங்கியிருக்கிறோம்! உடலில் பலம் இல்லாவிட்டாலும் தங்கள் முழு பலத்தோடு யெகோவாவைச் சேவித்த அநேக சகோதர, சகோதரிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அடிக்கடி எனக்குக் கிடைத்தது. அவர்களுடைய முன்மாதிரியைக் கண்டு, நானும் சேவையில் மனம்தளர்ந்து விடக்கூடாது என்பதை எப்போதும் நினைப்பூட்டிக்கொண்டேன். சபைகளைச் சந்தித்த ஒவ்வொரு வார முடிவிலும் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம். (ரோ. 1:11, 12) என் கணவர் எனக்கு உண்மையான தோழராக இருந்தார். பிரசங்கி 4:9, 10 சொல்வது எவ்வளவு உண்மை! அது சொல்வதாவது: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்.”

‘யெகோவாவின் பலத்தில்’ சேவை செய்ததன் ஆசீர்வாதங்கள்

எங்களுடைய பல வருட ஊழியத்தில், யெகோவாவைச் சேவிக்க அநேகருக்கு உதவியதால் நானும் என் கணவரும் பெருமகிழ்ச்சி அடைந்தோம். உதாரணமாக, 1983-ல் ஆன்ட்வர்ப்பிலுள்ள பிரெஞ்சு மொழி சபையைச் சந்தித்தபோது ஒரு குடும்பத்தாரோடு தங்கினோம். ஜயர் (தற்போது காங்கோ மக்கள் குடியரசு) நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் பாண்டிவிலா என்ற இளம் சகோதரரும் அவர்களோடு தங்கியிருந்தார். அவர், மேல் படிப்பிற்காக பெல்ஜியம் வந்திருந்தார். அவர் எங்களிடம், “யெகோவாவின் சேவைக்காக உங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறீர்கள்! உங்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது” என்றார். என் கணவர் அவரிடம், “எங்களைப் பார்த்து பொறாமைப்படுவதாகக் கூறுகிறீர்கள், ஆனால் இந்த உலகத்தின் வேலையைத்தானே நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களுக்கே இது முரணாகத் தோன்றவில்லையா?” என்று கேட்டார். சுற்றிவளைக்காமல் கேட்ட அந்தக் கேள்வி பெஞ்சமினை யோசிக்க வைத்தது. ஜயர் திரும்பிய பின்னர் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த அவர் தற்போது அந்நாட்டின் கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார்.

1999-ல் எனது உணவுக் குழாயிலிருந்த சீழ்ப்புண் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அதற்குப் பிறகு எனது எடை 30 கிலோவைத் தாண்டவில்லை. அதனால், உண்மையிலேயே வலுவற்ற ஒரு ‘மண்பாண்டமாக’ இருந்தேன். என்றாலும், “மகத்துவமுள்ள வல்லமை”யை யெகோவா எனக்குக் கொடுத்ததற்காக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகும்கூட என் கணவரோடு பயண ஊழியத்தில் செல்ல யெகோவாவே என்னைப் பலப்படுத்தினார். (2 கொ. 4:7) பிறகு, மார்ச் 2004-ல் என் கணவர் தூக்கத்திலேயே இறந்துவிட்டார். அவர் இல்லாத தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது; இருந்தாலும், அவர் யெகோவாவின் நினைவில் இருப்பதை எண்ணி மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.

இன்று எனக்கு 83 வயதாகிறது. அவற்றில் 63-க்கும் அதிகமான வருடங்களை முழுநேர ஊழியத்தில் செலவிட்டிருக்கிறேன். இன்றும் தவறாமல் ஊழியத்திற்குச் செல்கிறேன், வீட்டிலேயே பைபிள் படிப்பு ஒன்றை நடத்துகிறேன். யெகோவாவின் அற்புதமான நோக்கத்தைப் பற்றி பேச தினமும் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடுவதில்லை. ‘1945-ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்திருக்கவில்லை என்றால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?’ என்று சில சமயங்களில் யோசிப்பேன். அப்போது என் உடல்நிலை மோசமாக இருந்ததால் பயனியர் ஊழியம் செய்யாமல் இருந்திருக்கலாம். என்றாலும், இளவயதிலேயே பயனியர் செய்ய ஆரம்பித்ததற்காக இன்று மிகவும் சந்தோஷப்படுகிறேன்! நம் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தால் அவர் நமக்குப் பலமளிப்பார் என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டிருக்கிறேன்.

[அடிக்குறிப்புகள்]

a இந்தப் புத்தகம் 1939-ல் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சில் இல்லை.

b சகோதரர் கோவிலின் வாழ்க்கைச் சரிதை மார்ச் 15, 1961, தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்தது.

[பக்கம் 18-ன் படம்]

மிஷனரி தோழியான அஸ்டிரிட் ஆன்டர்சனுடன் (வலது)

[பக்கம் 18-ன் படம்]

என் கணவரோடு பயண ஊழியத்தில், 1956

[பக்கம் 20-ன் படம்]

2000-ல் என் கணவரோடு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்