‘கடவுளுடைய வார்த்தையாகிய வாளை’ திறம்பட பயன்படுத்துங்கள்
“கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற அவரது வார்த்தையை வாளாக எடுத்துக்கொள்ளுங்கள்.”—எபே. 6:17.
1, 2. பிரசங்க வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதால் நாம் என்ன செய்ய வேண்டும்?
திரளான மக்களை இயேசு ஒரு சமயம் கண்டார். அவர்களுடைய ஆன்மீகத் தேவையைப் புரிந்துகொண்டார். அப்போது தம் சீடர்களிடம், “அறுவடை மிகுதியாக இருக்கிறது, வேலையாட்களோ குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் எஜமானரிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று சொன்னார். அப்படிச் சொன்னது மட்டுமல்லாமல், “தமது பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து,” பிரசங்க வேலைக்கு அனுப்பினார்; அதாவது, “அறுவடை” வேலைக்கு அனுப்பினார். (மத். 9:35-38; 10:1, 5) பிற்பாடு, அதே வேலைக்காக ‘இன்னும் எழுபது பேரை நியமித்து, . . . இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.’—லூக். 10:1, 2.
2 பிரசங்க வேலைக்கு இன்றும்கூட அதிகமான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். 2009 ஊழிய ஆண்டில் நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 1,81,68,323. இது, உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மொத்த எண்ணிக்கையைவிட 1 கோடிக்கும் அதிகம். ஆம், வயல்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன! (யோவா. 4:34, 35) ஆகவே, இந்த அறுவடை வேலைக்கு இன்னும் அதிகமான ஆட்களை அனுப்பும்படி நாம் ஜெபம் செய்ய வேண்டும். அப்படி ஜெபம் செய்தால் மட்டும் போதாது, அந்த ஜெபத்திற்கு இசைவாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் இன்னும் திறம்பட்டவர்களாய் ஆகவும் வேண்டும்.—மத். 28:19, 20; மாற். 13:10.
3. நாம் இன்னும் திறம்பட்ட ஊழியர்களாய் ஆவதற்குக் கடவுளுடைய சக்தி எப்படி உதவும்?
3 முந்தின கட்டுரையில் சிந்தித்தபடி, நாம் யெகோவாவின் சக்தியால் வழிநடத்தப்படும்போது ‘அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச முடியும்.’ (அப். 4:31) திறம்பட்ட ஊழியர்களாகவும் ஆக முடியும். ஊழியத்தில் நம்முடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு ஒரு வழி, யெகோவா நமக்குத் தந்துள்ள மிக அருமையான கருவியாகிய பைபிளை நன்கு பயன்படுத்துவதாகும். அது கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் எழுதப்பட்டது. அதிலுள்ள செய்தி கடவுளால் அருளப்பட்டது. (2 தீ. 3:16) ஆகவே, திறம்பட்ட விதத்தில் பைபிளிலுள்ள சத்தியங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது, நாம் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுகிறோம். ஆனால், பைபிளை எப்படித் திறம்பட கற்பிக்கலாம் என்பதைச் சிந்திக்கும்முன், அதற்கு எந்தளவு வல்லமை இருக்கிறது என்று பார்ப்போம்.
‘கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது’
4. ஒரு நபரில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்த கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது?
4 கடவுளுடைய வார்த்தைக்குத்தான் எத்தனை வல்லமை! (எபி. 4:12) மனிதரால் உருவாக்கப்பட்ட எந்தவொரு வாளைக் காட்டிலும் அது கூர்மையானது; அடையாள அர்த்தத்தில், அது மனித உடலிலுள்ள எலும்புகளையும், அவற்றில் இருக்கிற மஜ்ஜையையும் ஊடுருவுமளவுக்கு வல்லமை உடையது. பைபிள் சத்தியம் ஒரு நபருடைய உள்ளத்தின் ஆழத்திற்குள் சென்று அவரது யோசனைகளையும் உணர்ச்சிகளையும் ஊடுருவி, அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அந்தச் சத்தியம் அவர்மீது பலமான செல்வாக்கு செலுத்தி அவரது சுபாவத்தை நல்ல விதத்தில் மாற்றிவிடுகிறது. (கொலோசெயர் 3:10-ஐ வாசியுங்கள்.) ஆம், ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றுகிற வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது!
5. பைபிள் நமக்கு எப்படியெல்லாம் வழிகாட்டுகிறது, அதனால் என்ன நன்மை விளைகிறது?
5 அதுமட்டுமா, பைபிளில் ஒப்பற்ற ஞானமும் பொதிந்திருக்கிறது. சிக்கல் நிறைந்த இவ்வுலகில் வாழ வழிகாட்டுகிற தகவல்கள் அதில் இருக்கின்றன. அது நம் காலடிக்கு ஒளியூட்டி, நம் வாழ்க்கைப் பாதையைப் பிரகாசமாக்குகிறது. (சங். 119:105) பிரச்சினைகளைச் சமாளிக்கவும், நண்பர்கள், பொழுதுபோக்கு, வேலை, உடை போன்ற விஷயங்களில் தீர்மானங்களை எடுக்கவும் பேருதவியாக இருக்கிறது. (சங். 37:25; நீதி. 13:20; யோவா. 15:14; 1 தீ. 2:9) பைபிள் நியமங்களை நாம் கடைப்பிடிக்கும்போது மற்றவர்களோடு நன்கு ஒத்துப்போவோம். (மத். 7:12; பிலி. 2:3, 4) கடவுளுடைய வார்த்தை நம்முடைய பாதைக்கு ஒளியூட்ட அனுமதித்தோம் என்றால், நாம் எடுக்கும் தீர்மானங்கள் வருங்காலத்தில் நம்மை எப்படிப் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம். (1 தீ. 6:9) கடவுள் நமக்காக வைத்திருக்கிற எதிர்கால நோக்கத்தை அது நமக்குத் தெரியப்படுத்துகிறது; அந்த நோக்கத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவுகிறது. (மத். 6:33; 1 யோ. 2:17, 18) ஆம், பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்!
6. சாத்தானுக்கு எதிரான போராட்டத்தில் பைபிள் நமக்கு எவ்வாறு வலிமைமிக்க ஆயுதமாய் இருக்கிறது?
6 சாத்தானுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற நமக்கு உதவுகிற வலிமைமிக்க ஆயுதம் பைபிள் என்பதை நினைவில் வையுங்கள். ‘கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற வாள்’ என்று அப்போஸ்தலன் பவுல் அதைக் குறிப்பிட்டார். (எபேசியர் 6:12, 17-ஐ வாசியுங்கள்.) அதைத் திறம்பட பயன்படுத்தினால், சாத்தானுடைய பிடியிலுள்ள மக்களை நம்மால் விடுவிக்க முடியும். அது உயிரைப் பறிக்கும் வாள் அல்ல, உயிரை அளிக்கும் வாள். அப்படியானால், அந்த வாளைத் திறமையாகப் பயன்படுத்த நாம் கடினமாய் முயல வேண்டும், அல்லவா?
கடவுளுடைய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துங்கள்
7. ‘கடவுளுடைய வார்த்தையாகிய வாளை’ திறம்பட பயன்படுத்த பயிற்சி பெறுவது ஏன் முக்கியம்?
7 ஒரு போர்வீரன் போராயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே போரில் அவற்றைத் திறம்பட பயன்படுத்த முடியும். நம் ஆன்மீகப் போரில் ‘கடவுளுடைய வார்த்தையாகிய வாளை’ பயன்படுத்துவதிலும் அதுவே உண்மை. “எதைக் குறித்தும் வெட்கப்படாத வேலையாளாகவும், சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துகிறவனாகவும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றவனாகவும் அவருக்குமுன் நிற்க உன்னால் முடிந்த அனைத்தையும் செய்” என்று பவுல் எழுதினார்.—2 தீ. 2:15.
8, 9. பைபிளின் ஒரு பகுதியைப் புரிந்துகொள்ள எது நமக்கு உதவும்? ஓர் உதாரணம் தருக.
8 ஊழியத்தில் ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்த’ எது நமக்கு உதவும்? பைபிள் சொல்வதை மற்றவர்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டுமென்றால், முதலில் நாம் அதைத் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். இதற்கு, பைபிளிலுள்ள ஒரு வசனத்தின் அல்லது ஒரு பகுதியின் சூழமைவைக் கருத்தில் கொள்ள வேண்டும். சூழமைவு என்பது ஒரு வார்த்தைக்கு, வாக்கியத்திற்கு, அல்லது வசனத்திற்கு முன்போ பின்போ வருகிற வார்த்தைகளை, வாக்கியங்களை, அல்லது வசனங்களைக் குறிக்கிறது. அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள சூழமைவு உதவுகிறது.
9 ஆம், பைபிளின் ஒரு பகுதியை நாம் சரியாகப் புரிந்துகொள்ள, அதன் முன்பு அல்லது பின்பு வருகிற வசனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கலாத்தியர் 5:13-ல் காணப்படுகிற பவுலின் வார்த்தைகள் அதற்கு ஓர் உதாரணமாகும். “சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் என்பது உண்மைதான்; ஆனால், இந்தச் சுதந்திரத்தைப் பாவ இச்சைகளை நிறைவேற்றுவதற்குச் சாக்காகப் பயன்படுத்தாதீர்கள்; மாறாக, அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்யுங்கள்” என்று அவர் எழுதினார். எப்படிப்பட்ட சுதந்திரத்தைப் பற்றி பவுல் இங்கு பேசிக்கொண்டிருந்தார்? பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் கிடைக்கிற சுதந்திரத்தைப் பற்றியா, பொய்மத நம்பிக்கைகளிலிருந்து கிடைக்கிற சுதந்திரத்தைப் பற்றியா, அல்லது வேறு ஏதோவொன்றிலிருந்து கிடைக்கிற சுதந்திரத்தைப் பற்றியா? ‘திருச்சட்டத்தின் சாபத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டதால்’ கிடைக்கிற சுதந்திரத்தைப் பற்றியே பவுல் பேசிக்கொண்டிருந்தார் என அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது. (கலா. 3:13, 19-24; 4:1-5) ஆம், கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் காரணமாகக் கிடைக்கிற சுதந்திரத்தைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். அந்தச் சுதந்திரத்தை மதித்துணர்ந்தவர்கள் அன்பினால் ஒருவருக்கொருவர் அடிமைகளாக வேலை செய்தார்கள். அன்பு இல்லாதவர்களோ ஒருவரையொருவர் கடித்துக் குதறுவதுபோல் வாய்ச்சண்டையில் ஈடுபட்டார்கள்.—கலா. 5:15.
10. பைபிள் வசனங்களின் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு எப்படிப்பட்ட தகவல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும்?
10 சூழமைவு என்பது பின்னணித் தகவல்களையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளையும்கூடக் குறிக்கிறது. ஒரு வசனத்தின் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த பைபிள் புத்தகத்தை யார், எப்போது, எந்தச் சூழ்நிலையில் எழுதினார்கள் என்பதைப் போன்ற பின்னணித் தகவல்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தப் புத்தகம் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதை அறிந்துகொள்ள வேண்டும், முடிந்தால் அன்றைய சமூக, தார்மீக, மதப் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.a
11. பைபிள் வசனங்களை விளக்கும்போது நாம் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
11 ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு,’ பைபிள் சத்தியங்களைத் திருத்தமாக விளக்கினால் மட்டும் போதாது, வேறுசில காரியங்களையும் மனதில் கொள்ள வேண்டும். பைபிளைப் பயன்படுத்தி மக்களைப் பயமுறுத்தாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். பிசாசினால் சோதிக்கப்பட்ட சமயத்தில் இயேசு பைபிள் வசனங்களைப் பயன்படுத்தியதைப் போலவே நாமும் சத்தியத்தை ஆதரித்துப் பேச பைபிள் வசனங்களைப் பயன்படுத்த வேண்டும்; மற்றவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான கருவியாக அதை உபயோகிக்காதபடி கவனமாயிருக்க வேண்டும். (உபா. 6:16; 8:3; 10:20; மத். 4:4, 7, 10) அதோடு, அப்போஸ்தலன் பேதுருவின் பின்வரும் அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்: “கிறிஸ்துவை எஜமானராகவும், பரிசுத்தமானவராகவும் உங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராயிருங்கள்.”—1 பே. 3:15.
12, 13. ‘ஆழமாக வேரூன்றியிருக்கிற’ எவற்றை பைபிள் சத்தியம் தகர்த்தெறியும்? ஓர் உதாரணம் தருக.
12 சரியாகப் பயன்படுத்தப்படுகிற சத்திய வார்த்தை எதைச் சாதிக்கும்? (2 கொரிந்தியர் 10:4, 5-ஐ வாசியுங்கள்.) ‘ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறியும்,’ அதாவது பொய்க் கோட்பாடுகள், தீய பழக்கங்கள், மனித ஞானத்தைப் பறைசாற்றும் தத்துவங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தும். ஆகவே, “கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்குகிற” எல்லாக் கருத்துகளையும் பைபிளைப் பயன்படுத்தி நாம் தகர்த்தெறிந்துவிடலாம்; அதோடு, மக்களின் சிந்தனையைச் சத்தியத்திற்கு இசைவாகச் சீராக்கிவிடலாம்.
13 இந்தியாவில் வசிக்கிற 93 வயதான பெண்மணியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் சிறுவயதிலிருந்தே மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருந்தார். வெளிநாட்டில் வசிக்கிற அவருடைய மகனோடு கடிதத்தின் மூலம் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்; யெகோவாவைப் பற்றியும் அவருடைய வாக்குறுதிகளைப் பற்றியும் உடனடியாக ஏற்றுக்கொண்டார். என்றாலும், மறுபிறப்பைப் பற்றித் தன் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்த கருத்துகளை அவரால் அகற்ற முடியவில்லை; அதனால், இறந்தோரின் நிலை பற்றி அவருடைய மகன் எழுதிய பைபிள் கருத்துகளை எதிர்த்து வாதிட்டார். “பைபிள் சொல்கிற இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மனிதனுக்குள் ஏதோவொன்று அழியாமல் வாழ்கிறது என்றே எல்லா மதங்களும் கற்பிக்கின்றன. உடல் அழிந்தாலும் ஆத்துமா ஏறக்குறைய 84,00,000 முறை மறுபிறவி எடுக்கிறது. இது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? மற்றெல்லா மதங்களும் சொல்வது தவறா?” என்று வாதிட்டார். கடவுளுடைய வார்த்தையாகிய வாள், இப்படி ஆழமாக வேரூன்றியிருக்கிற நம்பிக்கையையும்கூட வேரறுக்குமா? இறந்தோரின் நிலை பற்றி அவருடைய மகன் பலமுறை விளக்கிய பிறகு, சில வாரங்கள் கழித்து அவர் இவ்வாறு எழுதினார்: “மரணத்தைப் பற்றிய உண்மை இப்போதுதான் எனக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்துபோன நம் அன்பானவர்களைத் திரும்பவும் பார்ப்போம் என்ற நம்பிக்கையை அறிந்துகொண்டதால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வந்தால் நன்றாக இருக்கும்!”
கடவுளுடைய வார்த்தையைப் பக்குவமாய்ப் பயன்படுத்துங்கள்
14. பக்குவமாக எடுத்துச்சொல்வது எதை அர்த்தப்படுத்துகிறது?
14 ஊழியத்தில் பைபிளைத் திறம்பட பயன்படுத்துவதற்கு, வசனங்களை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது; அவற்றைப் ‘பக்குவமாக எடுத்துச்சொல்லவும்’ வேண்டும்; பவுல் அதைத்தான் செய்தார். (அப்போஸ்தலர் 19:8, 9; 28:23-ஐ வாசியுங்கள்.) ‘பக்குவமாக எடுத்துச்சொல்வது’ ஒருவருடைய இருதயத்தைச் சென்றெட்டும் விதத்தில் எடுத்துச்சொல்வதை அர்த்தப்படுத்துகிறது. ஒரு விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச்சொல்லும்போது அதைக் கேட்கிறவர், ‘முழு நம்பிக்கை வைத்து அதை மனதார ஏற்றுக்கொள்கிறார்.’ பைபிள் போதனை ஒன்றை ஒருவரிடம் நாம் பக்குவமாக எடுத்துச்சொல்லும்போது, அந்தப் போதனை அவருடைய இருதயத்தைச் சென்றெட்டவும், அதை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் உதவுகிறோம். எனவே, நாம் சொல்கிற பைபிள் சத்தியங்களை அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பக்குவமாக எடுத்துச்சொல்ல வேண்டும். அதைப் பின்வரும் வழிகளில் செய்யலாம்.
15. பைபிள்மீது மதிப்பு ஏற்படும் விதத்தில் அதனிடம் ஒருவருடைய கவனத்தை எப்படித் திருப்புவீர்கள்?
15 கடவுளுடைய வார்த்தைமீது மதிப்பு ஏற்படும் விதத்தில் அதனிடம் கவனத்தைத் திருப்புங்கள். ஒரு நபரிடம் நாம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாம்; அவர் பதிலளித்த பிறகு, ‘முதலில் இதைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்வோம்’ எனச் சொல்லலாம். அல்லது, ‘இந்தக் கேள்விக்குக் கடவுள் சொல்கிற பதில் என்னவென்று பார்ப்போமா?’ என்று கேட்கலாம். பின்பு, அது சம்பந்தமான ஒரு வசனத்தைக் காட்டலாம். இப்படிச் செய்தோமென்றால், பைபிள் கடவுளால் அருளப்பட்ட புத்தகம் என்பதைச் சிறப்பித்துக் காட்டுவோம்; அதன்மீது மிகுந்த மதிப்பு ஏற்படுவதற்கு உதவுவோம். முக்கியமாக, கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவருக்கு பைபிள் போதனைகள் தெரியாமல் இருந்தால், அப்படிச் செய்வது மிகவும் அவசியம்.—சங். 19:7-10.
16. வசனங்களைத் தெளிவாக விளக்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
16 வசனங்களை வாசிப்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள்; அவற்றை விளக்குங்கள். மக்களுக்குக் கற்பிக்கும்போது, வேதவசனங்களிலிருந்து ‘மேற்கோள்கள் காண்பித்து விளக்குவது’ பவுலின் வழக்கமாக இருந்தது. (அப். 17:3) பொதுவாக, ஒரு வசனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் இருக்கும்; எனவே, பேசிக்கொண்டிருக்கும் குறிப்பை வலியுறுத்துகிற வார்த்தைகளை மட்டுமே அழுத்திக் காட்ட வேண்டியது அவசியம். முக்கியக் குறிப்பை வலியுறுத்துகிற வார்த்தைகளை மறுபடியும் சொல்வதன் மூலம் அல்லது அவற்றைக் கண்டுபிடிக்க உதவுகிற கேள்விகளைக் கேட்பதன் மூலம் அவ்வாறு அழுத்திக் காட்டுங்கள். பின்பு அவற்றை விளக்குங்கள். அதன்பின், அந்த வசனத்தை எப்படி வாழ்க்கையில் பொருத்தலாம் எனப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள்.
17. நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நீங்கள் எவ்வாறு வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசலாம்?
17 நம்பிக்கை ஏற்படும் விதத்தில் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுங்கள். இருதயப்பூர்வமாக வேண்டுகோள் விடுப்பதன் மூலமாகவும், தர்க்க ரீதியில் பேசுவதன் மூலமாகவும் பவுல் ‘வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்.’ (அப். 17:2, 4) அவ்வாறே, நீங்களும் மற்றவர்களின் இருதயத்தைச் சென்றெட்டும் விதத்தில் பேச முயலுங்கள். அவர்கள்மீது அக்கறையை வெளிக்காட்டும் விதத்தில் கனிவாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களுடைய இருதயத்தில் உள்ளவற்றை ‘மொண்டெடுங்கள்.’ (நீதி. 20:5) முகத்தில் அடித்தாற்போல் பேசுவதைத் தவிருங்கள். தெளிவாகவும் தர்க்க ரீதியாகவும் பேசுங்கள். போதுமான அத்தாட்சிகளை அளியுங்கள். நீங்கள் சொல்வதெல்லாம் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வசனங்களை அடுத்தடுத்து வாசித்துக்கொண்டே போகாமல், ஒரு வசனத்தை வாசித்துவிட்டு அதை நன்கு விளக்குவது நல்லது. கூடுதல் அத்தாட்சிகளை அளிப்பது, ‘உங்கள் பேச்சை அதிக பக்குவமாக்கும்.’ (நீதி. 16:23, NW) சில சமயங்களில், ஆராய்ச்சி செய்து அதிகமான தகவல்களை அளிக்க வேண்டியிருக்கலாம். உதாரணத்திற்கு, ஆத்துமா அழியாது என்ற பொய்ப் போதனை எங்கும் பரவியிருப்பதற்கான காரணங்களைப் பற்றி 93 வயதான அந்தப் பெண்மணி அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. அந்தப் போதனை எப்படி ஆரம்பமானது, உலகின் பெருவாரியான மதங்களுக்குள் எப்படி நுழைந்தது என்ற தகவல்களையெல்லாம் அவருடைய மகன் சொன்னபோது பைபிள் போதனையை அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.b
கடவுளுடைய வார்த்தையைத் திறம்பட பயன்படுத்திக்கொண்டே இருங்கள்
18, 19. ‘கடவுளுடைய வார்த்தையாகிய வாளை’ நாம் ஏன் திறம்பட பயன்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்?
18 “இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருக்கிறது” என பைபிள் குறிப்பிடுகிறது. பொல்லாதவர்கள் மேன்மேலும் மோசமாகிக்கொண்டே வருகிறார்கள். (1 கொ. 7:31; 2 தீ. 3:13) ஆகவே, “கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற அவரது வார்த்தையை வாளாக” பயன்படுத்தி, “ஆழமாக வேரூன்றியவற்றை” நாம் தகர்த்தெறிந்துகொண்டே இருப்பது அவசியம்.
19 பைபிளின் வலிமைமிக்க செய்தியைப் பயன்படுத்தி, பொய்ப் போதனைகளை நாம் தகர்த்தெறிவதாலும், நல்மனமுள்ளோரின் இருதயத்தைச் சென்றெட்டுவதாலும் எவ்வளவாய்ச் சந்தோஷப்படுகிறோம்! ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் நம் கைகளில் இருப்பது அரும்பெரும் பாக்கியமே! வேரூன்றப்பட்ட எந்தவொரு போதனையைவிட அதன் செய்தி வலிமைமிக்கது. எனவே, கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கிற அவரது வார்த்தையாகிய வாளை நம்முடைய பிரசங்க வேலையில் திறம்பட பயன்படுத்துவதற்கு ஊக்கமாய் முயற்சி செய்வோமாக!
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் புத்தகங்களைப் பற்றிய பின்னணித் தகவல்களைப் பெறுவதற்கு, ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ புத்தகமும், வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகங்களும், காவற்கோபுர பத்திரிகைகளில் காணப்படுகிற “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது” என்ற தலைப்பிலுள்ள கட்டுரைகளும் அபாரமான கருவிகள்.
b நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 5-16-ஐக் காண்க.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• கடவுளுடைய வார்த்தைக்கு எந்தளவு வல்லமை இருக்கிறது?
• நாம் எப்படி ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்தலாம்’?
• பைபிளின் செய்தி “ஆழமாக வேரூன்றியவற்றை” என்ன செய்யும்?
• ஊழியத்தில் பக்குவமாகப் பேச நீங்கள் இன்னும் எவ்வாறு முயற்சி செய்யலாம்?
[பக்கம் 12-ன் பெட்டி/படம்]
கடவுளுடைய வார்த்தையிலிருந்து பக்குவமாகக் கற்பிக்க. . .
▪ அதன்மீது மதிப்பை ஏற்படுத்துங்கள்
▪ வசனங்களை விளக்குங்கள்
▪ நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நியாயங்காட்டிப் பேசி, இருதயத்தைச் சென்றெட்டுங்கள்
[பக்கம் 11-ன் படம்]
‘கடவுளுடைய வார்த்தையாகிய வாளை’ திறம்பட பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்