கடவுளுடைய வார்த்தையை நீங்கள் சரியான விதத்தில் போதிக்கிறீர்களா?
1 பூமியில் இதுவரை வாழ்ந்திருந்த போதகர்களிலேயே இயேசு கிறிஸ்துவே மிகப் பெரிய போதகராக இருந்தார். மக்களின் இதயங்களைத் தொடும்வகையில், அவர்களுடைய உணர்ச்சிகளைக் கிளறிவிடும்விதத்தில், நல்ல காரியங்களைச் செய்யப்பழகிக்கொள்ள அவர்களை உந்துவிக்கும்ரீதியில் பேசினார். (மத். 7:28, 29) தமது போதனைக்கு எப்பொழுதுமே கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாக உபயோகித்தார். (லூக். 24:44, 45) அவருக்குத் தெரிந்திருந்த எல்லாவற்றிற்கும் அவரால் போதிக்க முடிந்த எல்லாவற்றிற்கும் யெகோவா தேவனுக்கே புகழை உரித்தாக்கினார். (யோவா. 7:16) கடவுளுடைய வார்த்தையை சரியான விதத்தில் போதித்ததன்மூலம் தமது சீஷர்களுக்கு மிகச் சிறந்த ஒரு முன்மாதிரியை அவர் வைத்தார்.—2 தீ. 2:15, NW.
2 கடவுளுடைய வார்த்தையை திறம்பட்ட விதத்தில் போதித்ததன்மூலம் அப்போஸ்தலன் பவுலும் ஒரு தனிச் சிறப்புவாய்ந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். வெறும் வேதவசனங்களை மற்றவர்களுக்கு வாசித்துக் காண்பித்ததைவிட அவர் அதிகத்தைச் செய்தார்; வாசித்தவற்றிற்கு விளக்கமளித்து, நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, இயேசுவே கிறிஸ்து என்று கடவுளுடைய வார்த்தையிலிருந்து அத்தாட்சியளித்தார். (அப். 17:2-4) அதேபோல், சாதுரியமான பேச்சாளரும் சீஷருமான அப்பொல்லோ ‘வேதாகமங்களில் வல்லவராக’ இருந்து, சத்தியத்தை வல்லமைவாய்ந்த வகையில் அளிப்பதற்கு அவற்றைச் சரியான விதத்தில் விளக்கினார்.—அப். 18:24, 28.
3 கடவுளுடைய வார்த்தையின் போதகராக இருங்கள்: நவீனகால ராஜ்ய அறிவிப்பாளர்கள் பைபிளிலிருந்து எடுத்துக்காட்டி, நியாயங்காட்டிப் பேசுவதன்மூலம் உண்மை மனதுள்ள ஜனங்களுக்கு போதிப்பதில் மிகச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு சகோதரரால், பாஸ்டர் ஒருவரிடமும் அவருடைய பங்கிலுள்ள மூன்று அங்கத்தினர்களிடமும் துன்மார்க்கர்களின் மற்றும் நீதிமான்களின் முடிவு என்ன என்பதன்பேரில் நியாயங்காட்டிப் பேசுவதற்கு எசேக்கியேல் 18:4-ஐ தொடர்புள்ள மற்ற வசனங்களோடு பயன்படுத்த முடிந்திருக்கிறது. அதன் விளைவாக, சர்ச்சின் சில அங்கத்தினர்கள் படிக்கத் தொடங்கினர், அவர்களில் ஒருவர் இறுதியில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். மற்றொரு சந்தர்ப்பத்தில், யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ், பிறந்தநாட்கள் ஆகியவற்றைக் கொண்டாடுவதில்லை என்பதை, ஆர்வம் காண்பித்த ஒரு பெண்ணின் எதிர்க்கும் கணவனிடம் விளக்கும்படி ஒரு சகோதரி கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த சகோதரி நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் இருந்து பதில்களை நேரடியாக வாசித்தபோது, அந்த நபர் அதை ஒத்துக்கொண்டதாக சொன்னார். அவருடைய மனைவியோ தன் கணவன் ஒத்துக்கொண்டதை அறிந்தபோது, “நாங்கள் உங்களுடைய கூட்டங்களுக்கு வருவோம்,” என்று சொல்லுமளவுக்கு பூரித்துப்போனார். அவருடைய கணவனும் சம்மதம் தெரிவித்தார்!
4 கிடைக்கக்கூடிய உதவியைப் பயன்படுத்துங்கள்: கடவுளுடைய வார்த்தையை போதிப்பதில் உதவிசெய்ய நம் ராஜ்ய ஊழியம் மற்றும் ஊழியக் கூட்ட நிகழ்ச்சிநிரல் சிறந்த வழிநடத்துதலை அளிக்கின்றன. ஆலோசனையாக பிரசுரித்து நடித்துக் காட்டப்படுகிற பல்வேறு அளிப்புமுறைகளுக்காக அநேக பிரஸ்தாபிகள் பாராட்டுதலைத் தெரிவித்திருக்கின்றனர். அவை சமயத்திற்கு மிகவும் ஏற்றவையாகவும் பலன்தருபவையாகவும் இருந்திருக்கின்றன. கடவுளுடைய வார்த்தையில் விவரிக்கப்பட்டுள்ள 70-க்கும் அதிகமான முக்கிய விஷயங்களை எவ்வாறு சரியாக விளக்குவது என்பதன்பேரில் ஏராளமான கருத்துக்கள் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் புதியவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை பைபிள் போதனைகள் எல்லாவற்றையும் ரத்தினச்சுருக்கமாகத் தருகிறது. திறம்பட்ட போதகர்கள் வேதவசனங்களை தகுந்த வகையில் அறிமுகப்படுத்தி, வாசித்து, பொருத்திக் காண்பிப்பார்கள் என்பதை தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் புத்தகத்தில் படிப்புகள் 24 மற்றும் 25 காண்பிக்கின்றன. எளிதில் நமக்குக் கிடைக்கும் இந்த உதவிகளையெல்லாம் நாம் நன்கு உபயோகிக்கவேண்டும்.
5 கடவுளுடைய வார்த்தையை நாம் சரியான விதத்தில் போதிக்கும்போது, அது “ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்,” போதிக்கப்படுபவர்களுடைய “இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என்பதைக் காண்போம். (எபி. 4:12) அதில் நாம் கண்டுமகிழும் வெற்றியானது, எப்பொழுதையும்விட அதிக தைரியத்தோடு சத்தியத்தைப் பற்றி பேச நம்மை உந்துவிக்கும்!—அப். 4:31.