கோபத்தைக் கட்டுப்படுத்தி ‘தீமையை எப்போதும் வெல்லுங்கள்’
“அன்புக் கண்மணிகளே, . . . நீங்கள் பழிக்குப் பழிவாங்காமல் . . . தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.”—ரோ. 12:19, 21.
1, 2. விமானத்தில் பயணித்த சாட்சிகள் என்ன நல்ல முன்மாதிரி வைத்தார்கள்?
யெகோவாவின் சாட்சிகளில் 34 பேர் ஒரு கிளை அலுவலக அர்ப்பண விழாவிற்காக விமானத்தில் சென்றார்கள்; வழியிலே இயந்திரக் கோளாறு ஏற்பட்டுப் பயணம் தாமதமானது. பெட்ரோல் நிரப்ப இடையே ஒரு மணிநேரம் அதை நிறுத்த வேண்டியிருந்தது; ஆனால், 44 மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது; சாப்பாடு, தண்ணீர், கழிவறை வசதிகள் என எதுவுமே போதிய அளவுக்கு இல்லாத ஒதுக்குப்புற விமான நிலையத்தில் இப்படி ரொம்பவே திண்டாட வேண்டியதாயிற்று. பயணிகள் பலர் கோபத்தில் கொதித்தெழுந்தார்கள்; விமானப் பணியாளர்களை மிரட்டினார்கள். ஆனால், அதில் பயணித்த சகோதர சகோதரிகளோ அமைதியாக இருந்தார்கள்.
2 ஒருவழியாக, இந்தச் சாட்சிகள் அர்ப்பண விழாவின் கடைசி நிகழ்ச்சி ஆரம்பிக்கவிருந்த நேரத்தில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் மிகவும் துவண்டுபோய் இருந்தபோதிலும், உள்ளூர்ச் சகோதரர்களுடன் கூட்டுறவை அனுபவிப்பதற்காக நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களோடு நேரம் செலவிட்டார்கள். விமான நிலையத்தில் அவர்கள் பொறுமையோடும் தன்னடக்கத்தோடும் நடந்துகொண்டதை மற்றவர்கள் கவனித்திருந்தார்கள்; இதை அவர்கள் பின்பு தெரிந்துகொண்டார்கள். “விமானத்தில் அந்த 34 கிறிஸ்தவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் விமான நிலையத்தில் பெரிய கலவரமே வெடித்திருக்கும்” என்று மற்ற பயணிகளில் ஒருவர் ஏர்லைன் நிறுவனத்தாரிடம் தெரிவித்தார்.
கோபம் நிறைந்த உலகில் . . .
3, 4. (அ) மூர்க்கத்தனமான கோபம் மனிதரை எப்படி ஆட்டிப்படைக்கிறது, எவ்வளவு காலமாக? (ஆ) காயீனால் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? விளக்குங்கள்.
3 இந்தப் பொல்லாத உலகில் மக்கள் எதிர்ப்படும் அழுத்தங்கள் அவர்களுடைய கோபத்தைக் கிளறலாம். (பிர. 7:7) பெரும்பாலும் இந்தக் கோபம், பகைமைக்கும் வன்முறைக்குமே வழிவகுக்கிறது. இதனால், நாடுகளுக்கு இடையேயும் நாடுகளுக்கு உள்ளேயும் போர்கள் நடக்கின்றன; அநேக வீடுகளில் குடும்பப் பிரச்சினைகள் சண்டையாக வெடிக்கின்றன. இப்படிப்பட்ட கோபமும் வன்முறையும் நேற்றைய இன்றைய கதை அல்ல. ஆதாம்-ஏவாளின் முதல் மகனான காயீன், தன்னுடைய தம்பி ஆபேலின் மீதிருந்த பொறாமையால் கோபாவேசத்தோடு அவனைத் தீர்த்துக்கட்டினான். காயீன் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தினால் அவனை ஆசீர்வதிப்பதாக யெகோவா உறுதியளித்திருந்தும் காயீன் இந்தக் கொலையைச் செய்தான்.—ஆதியாகமம் 4:6-8-ஐ வாசியுங்கள்.
4 காயீன் அபூரணனாக இருந்தபோதிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்க அவனுக்கு வாய்ப்பிருந்தது. அவனால் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். அதனால்தான், மூர்க்கத்தனமான அந்தச் செயலுக்கு அவனே முழுப் பொறுப்பாளியானான். அவ்வாறே, நாமும் அபூரணர்களாக இருப்பதால் கோபத்தையும் கோபாவேச செயல்களையும் தவிர்ப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது. அதோடு, இந்த “கடைசி நாட்களில்” இன்னும் பல மோசமான பிரச்சினைகளும் நம்முடைய கோபமெனும் நெருப்புக்கு எண்ணெய் வார்க்கின்றன. (2 தீ. 3:1) உதாரணமாக, பொருளாதாரப் பிரச்சினைகள் நம்மை எரிச்சலடையச் செய்யலாம். கோபாவேசச் சீற்றங்களும், குடும்ப வன்முறையும் அதிகரிப்பதற்குப் பணப் பிரச்சினையையே காவல்துறையும் குடும்ப நல அமைப்புகளும் காரணம் காட்டுகின்றன.
5, 6. உலக மனப்பான்மையான கோபம் நம்மை எப்படிப் பாதிக்கலாம்?
5 அதோடு, இன்று நாம் எதிர்ப்படுகிற ஆட்களில் அநேகர், “சுயநலக்காரர்களாக,” “கர்வமுள்ளவர்களாக” இருக்கிறார்கள்; ஏன் ‘கொடூரமானவர்களாகவும்’ இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் குணங்கள் நம்மை வெகு எளிதில் தொற்றிக்கொண்டு நமக்குள் கோபத்தைத் தூண்டிவிடலாம். (2 தீ. 3:2-5) சொல்லப்போனால், திரைப்படங்களும் டிவி நிகழ்ச்சிகளும் பெரும்பாலும் பழிவாங்குதலை ஒரு வீரச் செயலாகச் சித்தரிக்கின்றன; அதோடு, வன்முறையை இயல்பானதாகவும் பிரச்சினைகளுக்கு நியாயமான பரிகாரமாகவும் சித்தரிக்கின்றன. சாதாரணமாக, திரைக்கதைகளில் வரும் வில்லன் “தக்க தண்டனையை அனுபவிக்கும்” சமயத்தைப் பார்வையாளர்கள் எதிர்நோக்கும் விதத்தில் அவை வடிவமைக்கப்படுகின்றன; பொதுவாக கதாநாயகன் கையில் கோர மரணத்தைச் சந்திக்கும் விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன.
6 இதுபோன்ற எண்ணங்கள் கடவுளுடைய வழிகளைக் கற்பிப்பதில்லை; மாறாக, ‘உலகச் சிந்தையையும்,’ கோபாவேசமிக்க ஆட்சியாளனாகிய சாத்தானுடைய சிந்தையையுமே கற்பிக்கின்றன. (1 கொ. 2:12; எபே. 2:2; வெளி. 12:12) அந்தச் சிந்தை அபூரண மனிதரின் ஆசைகளுக்குத் தீனி போடுகிறது; அது, கடவுளுடைய சக்திக்கும், அதனால் பிறப்பிக்கப்படுகிற குணங்களுக்கும் நேர் மாறானதாக இருக்கிறது. சொல்லப்போனால், கோபத்தில் பழிவாங்குவது கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனையே அல்ல. (மத்தேயு 5:39, 44, 45-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், நாம் இயேசுவின் போதனைகளை இன்னும் நன்றாக எப்படிப் பின்பற்றலாம்?
நல்ல உதாரணங்களும் கெட்ட உதாரணங்களும்
7. சிமியோனும் லேவியும் தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாதபோது என்ன நடந்தது?
7 பைபிளில், கோபத்தைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான அறிவுரைகள் ஏராளம் உள்ளன; அதோடு, கோபத்தைக் கட்டுப்படுத்துவதால் வரும் நன்மைகளையும், கட்டுப்படுத்தாததால் வரும் தீமைகளையும் பற்றிய நடைமுறையான உதாரணங்களும் அதில் உள்ளன. யாக்கோபின் மகன்களாகிய சிமியோன், லேவியின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்; அவர்கள் தங்கள் தங்கை தீனாளை மானபங்கப்படுத்திய சீகேமைப் பழிவாங்கினார்கள். அவர்கள், ‘மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டதாக’ பைபிள் சொல்கிறது. (ஆதி. 34:7) அடுத்து, யாக்கோபின் மற்ற மகன்கள் சீகேமின் ஊரைத் தாக்கி, அதைச் சூறையாடினார்கள்; அதிலிருந்த பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து வந்தார்கள். தீனாளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக மட்டுமல்லாமல், தங்களுக்கு ஏற்பட்ட தலைகுனிவுக்காகவும் அப்படிச் செய்தார்கள். தங்களையும் தங்கள் அப்பாவான யாக்கோபையும் சீகேம் கேவலப்படுத்தியதாக நினைத்தார்கள். ஆனால், தன் மகன்களுடைய இந்தச் செயலை யாக்கோபு எப்படிக் கருதினார்?
8. பழிவாங்குவதைக் குறித்து சிமியோனையும் லேவியையும் பற்றிய பதிவு என்ன சொல்கிறது?
8 தீனாளுக்கு நேர்ந்ததை நினைத்து யாக்கோபு மிகவும் வேதனைப்பட்டார்; ஆனாலும், பழிவாங்கும் விதத்தில் தன் மகன்கள் நடந்துகொண்டதை அவர் கண்டனம் செய்தார். என்றாலும், சிமியோனும் லேவியும் தங்கள் செயலை நியாயப்படுத்தும் விதத்தில், “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ” என்று கேட்டார்கள். (ஆதி. 34:31) ஆனால், பிரச்சினை அதோடு முடிந்துவிடவில்லை; அவர்கள் நடந்துகொண்ட விதம் யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. இது, பல வருடங்களுக்குப் பிறகு யாக்கோபு தன் மகன்களைக் குறித்து முன்னறிவித்ததிலிருந்து தெரிகிறது; சிமியோனும் லேவியும் கோபப்பட்டு மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதால் அவர்களுடைய வம்சத்தார் இஸ்ரவேல் கோத்திரங்கள் எங்கும் சிதறடிக்கப்படுவார்கள் என்று அவர் அறிவித்தார். (ஆதியாகமம் 49:5-7-ஐ வாசியுங்கள்.) ஆம், அவர்கள் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தாமல் போனதால், கடவுளின் தயவையும் தங்களுடைய அப்பாவின் தயவையும் இழந்தார்கள்.
9. தாவீது எப்போது கோபத்தில் தவறான ஒரு செயலைச் செய்யுமளவுக்குச் சென்றார்?
9 தாவீது ராஜாவோ இதற்கு நேர்மாறாக நடந்துகொண்டார். பழிவாங்க அவருக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தன; ஆனாலும் அவர் பழிவாங்கவில்லை. (1 சா. 24:3-7) என்றாலும், ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கோபத்தில் தவறான ஒரு செயலைச் செய்யுமளவுக்குச் சென்றுவிட்டார். தாவீதின் ஆட்கள் பணக்காரனான நாபாலின் மந்தைகளையும் மேய்ப்பர்களையும் பாதுகாத்திருந்தார்கள்; அப்படியிருந்தும் ஒரு சமயம் நாபால் அவர்கள்மீது சீறிவிழுந்தார். தன்னுடைய ஆட்கள் புண்படுத்தப்பட்டதை அறிந்த தாவீது, கொலை வெறியுடன் பழிவாங்கத் துடித்தார். நாபாலையும் அவனுடைய வீட்டாரையும் தாக்குவதற்கு தன்னுடைய ஆட்களுடன் புறப்பட்டார்; நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவனோ, நடந்த சம்பவத்தை நாபாலின் புத்திசாலி மனைவியான அபிகாயிலிடம் சொல்லி உடனடியாக ஏதேனும் செய்யும்படி கேட்டுக்கொண்டான். சிறிதும் தாமதிக்காமல் அவள் நிறைய உணவுப்பொருள்களை எடுத்துக்கொண்டு தாவீதைச் சந்திக்கச் சென்றாள். நாபால் திமிராக நடந்துகொண்டதற்குப் பணிவுடன் மன்னிப்புக் கேட்டாள்; யெகோவாவிடம் தாவீதுக்கிருந்த பயபக்தியைச் சுட்டிக்காட்டி கெஞ்சினாள். அப்போது தாவீது தன் தவறைப் புரிந்துகொண்டார்; ‘நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக’ என்று சொன்னார்.—1 சா. 25:2-35.
கிறிஸ்தவ மனப்பான்மை
10. பழிவாங்குவது சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் என்ன மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும்?
10 சிமியோன்-லேவி, தாவீது-அபிகாயில் ஆகியோரைப் பற்றிய சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? கட்டுக்கடங்காத மூர்க்கத்தனமான கோபத்தை யெகோவா வெறுக்கிறார் என்பதையும் சமாதானமாய் இருக்க எடுக்கும் முயற்சிகளை அவர் ஆசீர்வதிக்கிறார் என்பதையும் தெளிவாகக் காட்டுகின்றன. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள். அன்புக் கண்மணிகளே, ‘பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிலடி கொடுப்பேன் என்று யெகோவா சொல்கிறார்’ என எழுதப்பட்டுள்ளதால், நீங்கள் பழிக்குப் பழிவாங்காமல் அதைக் கடவுளுடைய கடுங்கோபத்திற்கு விட்டுவிடுங்கள். ‘உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்; இப்படிச் செய்யும்போது நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பீர்கள்.’ தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.”—ரோ. 12:18-21.a
11. ஒரு சகோதரி எப்படிக் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டார்?
11 நாம் அந்த அறிவுரையைப் பின்பற்றலாம். உதாரணத்திற்கு, ஒரு சகோதரி தான் வேலை செய்கிற இடத்திலுள்ள புதிய மேனேஜரைப் பற்றி ஒரு மூப்பரிடம் குறைபட்டுக்கொண்டார். அவர் தன்னிடம் நியாயமில்லாமல் கடுகடுவென நடந்துகொள்வதாகச் சொன்னார். அவர் மீதுள்ள கோபத்தால் வேலையை விட்டுவிட நினைத்தார். ஆனால், அவசரப்பட்டு எதையும் செய்துவிட வேண்டாமென அந்தச் சகோதரியிடம் மூப்பர் சொன்னார். மேனேஜர் அப்படி நடந்துகொண்டபோது அந்தச் சகோதரியும் பதிலுக்குக் கோபத்தை வெளிக்காட்டியிருப்பார், அதுவே நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார். (தீத். 3:1-3) ஒருவேளை அந்தச் சகோதரி வேறொரு வேலைக்குப் போனாலும், கடுகடுவென இருப்பவர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம் என்பதை மூப்பர் அந்தச் சகோதரிக்குப் புரிய வைத்தார். இயேசு கற்பித்த விதமாக, தன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென அந்தச் சகோதரி எதிர்பார்க்கிறாரோ அப்படியே அவர் மேனேஜரிடம் நடந்துகொள்ள வேண்டுமென மூப்பர் அறிவுரை கூறினார். (லூக்கா 6:31-ஐ வாசியுங்கள்.) அதற்கு முயற்சி செய்வதாக அந்தச் சகோதரி சொன்னார். பலன்? கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அந்த மேனேஜர் கனிவாக நடந்துகொள்ள ஆரம்பித்தார், அந்தச் சகோதரி செய்கிற வேலையைக்கூட அவர் வாயாரப் பாராட்டினார்.
12. கிறிஸ்தவர்கள் மத்தியில் தலைதூக்கும் பிரச்சினைகள் முக்கியமாய் ஏன் வேதனை அளிக்கலாம்?
12 உண்மைக் கிறிஸ்தவராக இல்லாத ஒருவரிடமிருந்து இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால் நாம் அவற்றைக் குறித்து ஆச்சரியப்பட மாட்டோம். சாத்தானுடைய உலகில் பெரும்பாலும் நியாயமற்ற விதமாகவே நடத்தப்படுவோம் என்பதையும், பொல்லாதவர்கள் நம்முடைய கோபத்தைக் கிளறிவிடுகையில் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். (சங். 37:1-11; பிர. 8:12, 13; 12:13, 14) ஆனால், சபையிலுள்ள ஒரு சகோதரரிடமிருந்தோ சகோதரியிடமிருந்தோ பிரச்சினைகள் வந்தால் அது மனதுக்கு ரொம்பவே வேதனை அளிக்கலாம். “யெகோவாவின் ஜனங்கள் குற்றம் செய்பவர்கள்தான் என்ற உண்மையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை; இது, சத்தியத்திற்குள் வர எனக்கு மிகப் பெரிய தடையாக இருந்தது” என்று ஒரு சகோதரி சொன்னார். அன்பும் அக்கறையும் காட்டாத ஓர் உலகைவிட்டு நாம் வெளியே வந்திருப்பதால், கிறிஸ்தவச் சபையிலுள்ள எல்லாருமே ஒருவரையொருவர் அன்புடன் நடத்துவார்களென எதிர்பார்க்கிறோம். எனவே, சபையில் பொறுப்பான ஸ்தானத்திலுள்ள ஒரு சக கிறிஸ்தவர் யோசிக்காமல் பேசும்போதோ நடந்துகொள்ளும்போதோ நாம் புண்பட்டுவிடலாம் அல்லது கோபப்பட்டுவிடலாம். ‘யெகோவாவின் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட காரியங்களும் நடக்குமா?’ என்று நாம் யோசிக்கலாம். சொல்லப்போனால், இப்படிப்பட்ட காரியங்கள் அப்போஸ்தலர்களின் காலத்தில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில்கூட நடந்திருக்கின்றன. (கலா. 2:11-14; 5:15; யாக். 3:14, 15) நாம் அப்படிப் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
13. பிரச்சினைகளை நாம் சமாளிக்க வேண்டியது ஏன், எப்படி?
13 முந்தைய பாராவில் குறிப்பிடப்பட்ட அந்தச் சகோதரி இவ்வாறு சொன்னார்: “யாராவது என்னைப் புண்படுத்தினால் அவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமெனத் தெரிந்துகொண்டேன். இது எப்போதுமே எனக்கு உதவியாக இருக்கிறது.” நாம் ஏற்கெனவே வாசித்தபடி, நம்மைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுமாறு இயேசு கற்றுக்கொடுத்தார். (மத். 5:44) அப்படியென்றால், நம்முடைய ஆன்மீகச் சகோதர சகோதரிகளுக்காக நாம் எந்தளவு ஜெபம் செய்ய வேண்டும்! ஓர் அப்பா தன்னுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்; அப்படியே, யெகோவாவும் பூமியிலுள்ள தம்முடைய ஊழியர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக நடந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து சமாதானமாகவும் சந்தோஷமாகவும் என்றென்றும் வாழும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்; அவ்வாறு வாழ்வதற்கு இப்போதே யெகோவா நமக்குக் கற்பிக்கிறார். அவர் கொடுத்திருக்கிற அருமையான வேலையைச் செய்வதில் நாம் ஒத்துழைக்க வேண்டுமென விரும்புகிறார். எனவே, பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்வோமாக அல்லது மற்றவர்களுடைய குற்றத்தை ‘மன்னித்து’ விட்டுவிட்டு ஒற்றுமையாய்த் தொடர்ந்து முன்னேறுவோமாக. (நீதிமொழிகள் 19:11-ஐ வாசியுங்கள்.) பிரச்சினைகள் தலைதூக்கும்போது நம் சகோதரர்களைவிட்டு விலகிப்போவதற்குப் பதிலாக, கடவுளுடைய மக்கள் மத்தியில் நிலைத்திருக்க, அதாவது யெகோவாவின் ‘நித்திய புயங்களில்’ பத்திரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும்.—உபா. 33:27.
எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொள்வதால் வரும் பலன்கள்
14. பிரிவினை ஏற்படுத்த சாத்தான் எடுக்கும் முயற்சிகளை நாம் எப்படி எதிர்த்துப் போராடலாம்?
14 நற்செய்தியை அறிவிக்க விடாமல் நம்மைத் தடுக்கும் விதத்தில், குடும்பங்களிலும் சபைகளிலும் நிலவும் சந்தோஷத்தைக் குலைத்துப்போட சாத்தானும் அவனுடைய கெட்ட தூதர்களும் மும்முரமாய் முயற்சி செய்கிறார்கள். சபையிலோ வீட்டிலோ ஏற்படும் பிரிவினைகளால் பெரும் பாதிப்பு விளையும் என்பதை அறிந்து சண்டை மூட்டிவிட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். (மத். 12:25) அவர்களுடைய தீய செல்வாக்கை எதிர்ப்பதில், நாம் பவுலின் பின்வரும் அறிவுரையைப் பின்பற்றுவது நல்லது: ‘நம் எஜமானரின் ஊழியக்காரன் சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்ள வேண்டும்.’ (2 தீ. 2:24) “மனிதர்களோடு அல்ல, . . . பொல்லாத தூதர் கூட்டத்தோடு” நமக்குப் போராட்டம் உண்டு என்பதை நினைவில் வையுங்கள். இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற, “சமாதானத்தின் நற்செய்தி” எனும் காலணி உட்பட, ஆன்மீகக் கவசத்தை முழுமையாக நாம் அணிந்துகொள்வது அவசியம்.—எபே. 6:12-18.
15. சபைக்கு வெளியே உள்ள விரோதிகள் நம்மைப் பல விதங்களில் தாக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
15 சபைக்கு வெளியே உள்ள யெகோவாவின் விரோதிகள், சமாதானமாக வாழ்கிற அவருடைய மக்களைப் பல விதங்களில் மூர்க்கத்தனமாகத் தாக்குகிறார்கள். இவர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளை உடல் ரீதியில் தாக்குகிறார்கள். வேறு சிலர் மீடியாக்களில் அல்லது நீதிமன்றங்களில் அவர்களுக்கு எதிராக இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமென இயேசு தம் சீடர்களிடம் கூறினார். (மத். 5:11, 12) அப்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? நாம் ஒருபோதும் சொல்லிலோ செயலிலோ ‘தீமைக்குத் தீமை செய்யக்கூடாது.’—ரோ. 12:17; 1 பேதுரு 3:16-ஐ வாசியுங்கள்.
16, 17. ஒரு சபையார் என்ன நெருக்கடியான சூழ்நிலையை எதிர்ப்பட்டார்கள்?
16 பிசாசு நமக்கு எவ்வளவு பிரச்சினைகளைக் கொண்டு வந்தாலும், ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுவதன் மூலம்’ நாம் சிறந்த சாட்சி கொடுக்கலாம். உதாரணத்திற்கு, பசிபிக் தீவிலுள்ள ஒரு சபையார் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்புக்காக ஒரு மன்றத்தை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அங்கிருந்த சர்ச் அதிகாரிகள் இதை அறிந்தபோது தங்களுடைய சர்ச்சின் ஆராதனையை அதே மன்றத்தில் அதே நேரத்தில் நடத்தத் தீர்மானித்தார்கள்; அதற்காகத் தங்கள் ஆட்களை அந்த மன்றத்தில் கூடிவரும்படி சொன்னார்கள். என்றாலும் தலைமை போலீஸ் அதிகாரி, அந்த நேரத்தில் அந்த மன்றத்தைச் சாட்சிகளுக்குக் கொடுத்துவிட வேண்டுமென்று சர்ச் அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், சாட்சிகள் நினைவுநாள் அனுசரிப்பை நடத்துவதற்குரிய நேரம் வந்தபோது அந்த மன்றம் சர்ச் அங்கத்தினர்களால் நிரம்பி வழிந்தது, ஆராதனையும் ஆரம்பமானது.
17 வலுக்கட்டாயமாக அங்கிருந்தவர்களை வெளியேற்ற போலீஸார் தயாரானபோது, நம்முடைய மூப்பர்கள் ஒருவரிடம் சர்ச் தலைவர் வந்து, “இங்கே இந்த நேரத்தில் ஏதாவது விசேஷ நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார். அந்தச் சகோதரர் நினைவுநாள் அனுசரிப்பை நடத்தவிருந்ததாகச் சொன்னபோது அவர், “அப்படியா? அதைப் பற்றி எனக்குத் தெரியாதே!” என்று பதிலளித்தார். அப்போது ஒரு போலீஸ்காரர், “இன்றைக்குக் காலையிலேயே நாங்கள் அதைப் பற்றி உங்களிடம் சொன்னோமே!” என்று தெரிவித்தார். அப்போது அந்த சர்ச் தலைவர் அந்தச் சகோதரரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக்கொண்டே, “இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? இந்த மன்றம் நிறைய ஆட்கள் இருக்கிறார்களே! எங்கள் எல்லாரையும் போலீஸாரைவிட்டுத் துரத்தியடிக்கப் போகிறீர்களா?” என்று கேட்டார். சாட்சிகள் மற்றவர்களைத் துன்புறுத்துகிறவர்கள் என்று காட்டுவதற்காக அவர் தந்திரமாகத் திட்டமிட்டிருந்தார்! நம்முடைய சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
18. கோபமூட்டப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், என்ன பலன்கள் கிடைத்தன?
18 சர்ச் ஆராதனையை அரை மணிநேரத்திற்கு நடத்திக்கொள்ளட்டும் என்று சகோதரர்கள் விட்டுக்கொடுத்தார்கள்; அதன் பின் நினைவுநாள் அனுசரிப்பை நடத்தத் தீர்மானித்தார்கள். அரை மணிநேரத்திற்கும் அதிகமாக அந்த ஆராதனை நீடித்தது; சர்ச் அங்கத்தினர்கள் எல்லாரும் மன்றத்தைவிட்டுப் போன பிறகே நினைவுநாள் அனுசரிப்பு நடத்தப்பட்டது. மறுநாள், விசாரணைக் குழுவை அரசு கூட்டியது. உண்மைகளையெல்லாம் ஆராய்ந்த பிறகு, பிரச்சினைக்குக் காரணம் சாட்சிகள் அல்ல, சர்ச் தலைவர்தான் என்பதை சர்ச் அறிவிக்கும்படி அந்தக் குழு ஆணையிட்டது. அதோடு, அந்த நெருக்கடியான சூழ்நிலையைப் பொறுமையாகக் கையாண்டதற்கு அந்தக் குழு யெகோவாவின் சாட்சிகளுக்கு நன்றி தெரிவித்தது. ‘எல்லாரோடும் சமாதானமாய்’ இருப்பதற்குச் சாட்சிகள் எடுத்த முயற்சிகள் நல்ல பலன்களைக் கொடுத்தன.
19. மற்றவர்களோடு சமாதானமாய் இருப்பதற்கு இன்னொரு வழி என்ன?
19 மற்றவர்களோடு எப்போதும் சமாதானமாய் இருப்பதற்கு இன்னொரு வழி இனிமையாகப் பேசுவதாகும். இனிமையாகப் பேசுவது என்றால் என்ன, அவ்வாறு பேச நாம் எப்படிப் பழகிக்கொள்ளலாம், எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் அவ்வாறு பேசலாம் என்பது அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a இந்த ‘நெருப்புத் தணல்,’ பண்டைய காலங்களில் தாதுப்பொருள்களிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்க அவற்றின் மேலேயும் கீழேயும் வைக்கப்பட்ட நெருப்புத் தணலையே குறிக்கிறது. நம்மிடம் கனிவற்ற விதத்தில் நடந்துகொள்கிறவர்களிடம் நாம் கனிவாக நடந்துகொள்ளும்போது அவர்களுடைய மனம் இளகி, அவர்களுடைய நல்ல குணங்கள் தென்பட ஆரம்பிக்கலாம்.
விளக்க முடியுமா?
• இன்று உலகிலுள்ள மக்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள்?
• கோபத்தைக் கட்டுப்படுத்துவதாலும் கட்டுப்படுத்தாததாலும் வரும் விளைவுகளுக்கு பைபிள் உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.
• சக கிறிஸ்தவர்கள் நம்மைப் புண்படுத்தும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
• சபைக்கு வெளியே உள்ள விரோதிகள் நம்மைப் பல விதங்களில் தாக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 16-ன் படம்]
சிமியோனும் லேவியும் கோபத்தில் பழிவாங்கிய பிறகே நிம்மதி அடைந்தார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
கனிவு காட்டும்போது மற்றவர்களுடைய மனம் இளகலாம்