திருமணம் என்ற வரத்தை உயர்வாய் மதியுங்கள்
“இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல, ஒரே உடலாக இருப்பார்கள்.”—ஆதி. 2:24, NW.
1. யெகோவா ஏன் நம் மரியாதைக்குரியவர்?
யெகோவா தேவனே திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர்; அவர் நம் மரியாதைக்குரியவர். அவர் நம் படைப்பாளர், பேரரசர், பரலோகத் தகப்பன்; அதனால், “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும்” கொடுப்பவர் என்று பைபிள் அவரை விவரிப்பது பொருத்தமானதே. (யாக். 1:17; வெளி. 4:11) இந்தப் பரிசுகள் அவருடைய அளவற்ற அன்பைப் பறைசாற்றுகின்றன. (1 யோ. 4:8) அவர் நமக்குக் கற்பித்திருக்கிற ஒவ்வொன்றும், நம்மிடம் கேட்கிற ஒவ்வொன்றும், நமக்குக் கொடுத்திருக்கிற ஒவ்வொன்றும் நம்முடைய நன்மைக்காகவே.—ஏசா. 48:17.
2. முதல் தம்பதியருக்கு யெகோவா என்ன அறிவுரைகளைக் கொடுத்தார்?
2 கடவுள் கொடுத்திருக்கிற “நல்ல” வரங்களில் ஒன்றுதான் திருமணம் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (ரூத் 1:9, NW; 2:12) அவர் முதன்முறையாகக் கல்யாணத்தை நடத்தி வைத்தபோது ஆதாம் ஏவாளின் மணவாழ்வு என்றும் இனிக்க சில அறிவுரைகளைக் கொடுத்தார். (மத்தேயு 19:4-6-ஐ வாசியுங்கள்.) கடவுள் தந்த அறிவுரைகளைப் பின்பற்றியிருந்தால் அவர்கள் வாழ்வில் என்றும் வசந்தம் வீசியிருக்கும். ஆனால், கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் முட்டாள்தனமாக நடந்துகொண்டதால் அவர்கள் வாழ்வில் சூறாவளி வீசத் தொடங்கியது.—ஆதி. 3:6-13, 16-19, 23.
3, 4. (அ) திருமணத்தையும் யெகோவா தேவனையும் இன்று அநேகர் எப்படி அவமதிக்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்ன உதாரணங்களைச் சிந்திப்போம்?
3 அந்த முதல் தம்பதியரைப் போலவே, இன்றும் தம்பதியர் பலர் யெகோவாவின் அறிவுரைகளை அலட்சியம் செய்துவிட்டு சுயமாகத் தீர்மானங்களை எடுக்கிறார்கள். சிலர் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஒருவருடனோ பலருடனோ சேர்ந்து வாழ்கிறார்கள் அல்லது ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்கிறார்கள். (ரோ. 1:24-32; 2 தீ. 3:1-5) திருமணம் கடவுள் தந்த வரம் என்பதையே அவர்கள் மறந்துவிடுகிறார்கள்; இப்படி அந்த வரத்தை அவமதிப்பதன் மூலம் அதைக் கொடுத்த யெகோவா தேவனையும் அவர்கள் அவமதிக்கிறார்கள்.
4 சில சமயங்களில், கடவுளுடைய மக்களில் சிலரும்கூட கல்யாணத்தைப் பற்றிய அவருடைய கண்ணோட்டத்தைச் சரிவரப் புரிந்துகொள்வதில்லை. சிலர் வேதப்பூர்வ காரணம் எதுவுமின்றி பிரிந்து வாழ அல்லது விவாகரத்து செய்யத் தீர்மானிக்கிறார்கள். இதை எப்படித் தவிர்க்கலாம்? மணவாழ்வை வலுப்படுத்துவதற்கு ஆதியாகமம் 2:24-ல் கடவுள் தந்த அறிவுரை தம்பதியருக்கு எப்படி உதவும்? திருமணத்தைப் பற்றி யோசிப்பவர்கள் அதற்காக இப்போதே எப்படித் தயாராகலாம்? யெகோவாவுக்கு மரியாதை கொடுப்பதே நிலையான மணவாழ்வுக்கு அடித்தளம் என்பதற்கு பைபிளிலிருந்து மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.
எப்போதும் உண்மையாய் இருக்க...
5, 6. சகரியா-எலிசபெத் தம்பதியருக்கு எது சோதனையாய் இருந்திருக்கலாம், அவர்கள் உண்மையாய் இருந்ததால் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்?
5 சகரியாவும் எலிசபெத்தும் கடவுளுக்கு உண்மையாய் வாழ்ந்து வந்தார்கள். ஒருவருக்கொருவர் தேவபக்தி இருக்கிறதா என்பதைப் பார்த்தே மணம் செய்துகொண்டார்கள். குருத்துவப் பணிகளை சகரியா உண்மையோடு செய்து வந்தார்; அவர்கள் இருவரும் தங்களால் முடிந்தவரை திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தார்கள். கடவுளுக்கு நன்றியுடன் இருக்க அவர்களுக்கு எத்தனையோ விஷயங்கள் இருந்தன. ஒருவேளை யூதாவிலுள்ள அவர்களுடைய வீட்டுக்கு நீங்கள் சென்றிருந்தால், அங்கு ஏதோ குறைவுபடுவதை சீக்கிரத்தில் கவனித்திருப்பீர்கள். ஆம், அவர்களுக்குப் பிள்ளை செல்வங்கள் இல்லை. எலிசபெத் மலடியாக இருந்தார்; அதோடு, அந்தத் தம்பதியர் வயதானவர்களாகவும் இருந்தார்கள்.—லூக். 1:5-7.
6 பூர்வ இஸ்ரவேலில், பிள்ளைப்பேறு பெரும் பாக்கியமாகக் கருதப்பட்டது; அதுமட்டுமல்ல, குடும்பங்கள் பெரும்பாலும் பெரியவையாக இருந்தன. (1 சா. 1:2, 6, 10; சங். 128:3, 4) அந்தக் காலத்தில், ஓர் இஸ்ரவேலன் தன் மனைவி மலடியாக இருந்தால் பொதுவாக விவாகரத்து செய்வது வழக்கம். ஆனால், சகரியா தன் மனைவிக்கு உண்மையாய் இருந்தார். அவரோ அவருடைய மனைவியோ திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள வழிதேடவில்லை. பிள்ளையில்லாத குறை அவர்களை வாட்டினாலும், ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு உண்மையாய்ச் சேவை செய்து வந்தார்கள். பிற்பாடு, வயது சென்ற காலத்தில் அவர்களுக்கு யெகோவா அற்புதமாய்ப் பிள்ளைச் செல்வத்தைக் கொடுத்து அளவில்லாமல் ஆசீர்வதித்தார்.—லூக். 1:8-14.
7. வேறெந்த விஷயத்தில் எலிசபெத் உண்மையோடு நடந்துகொண்டார்?
7 மற்றொரு விஷயத்திலும் எலிசபெத் உண்மையோடு நடந்துகொண்டது பாராட்டுக்குரியது. எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறந்தபோது சகரியாவால் பேச முடியவில்லை; ஏனென்றால், முன்பு தேவதூதர் சொன்னதை அவர் நம்பாமல் போனதால் ஊமையாகியிருந்தார். ஆனால், குழந்தைக்கு “யோவான்” என பெயரிடும்படி யெகோவாவின் தூதன் சொல்லியிருந்ததை சகரியா தன் மனைவிக்கு ஏதோவொரு விதத்தில் தெரிவித்திருக்க வேண்டும். அக்கம்பக்கத்தாரும் உறவினர்களும் குழந்தைக்கு அதன் அப்பாவின் பெயரை வைக்க விரும்பினார்கள். ஆனால், எலிசபெத் தன் கணவனின் பேச்சைக் கேட்டு அவருக்கு உண்மையாய் நடந்தார். “வேண்டாம்! இவனுக்கு யோவான் என்றே பெயர் வைக்க வேண்டும்” எனச் சொன்னார்.—லூக். 1:59-63.
8, 9. (அ) உண்மையாய் இருப்பது எப்படித் திருமண பந்தத்தைப் பலப்படுத்துகிறது? (ஆ) எந்தெந்த விஷயங்களில் தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கலாம்?
8 சகரியா-எலிசபெத் போலவே, இன்று அநேக தம்பதியர் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைகிறார்கள், பல பிரச்சினைகளையும் எதிர்ப்படுகிறார்கள். ஒருவருக்கொருவர் உண்மையாய் இல்லாவிட்டால் இல்லற வாழ்வு சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். சரசம், ஆபாசம், கள்ளத்தொடர்பு போன்றவை தம்பதியரின் ஆத்மார்த்த உறவில் விரிசலை உண்டாக்கிவிடும், ஒருவருக்கொருவர் வைத்திருக்கிற நம்பிக்கையையும் தவிடுபொடி ஆக்கிவிடும். இப்படி நம்பிக்கை சிதையும்போது அன்பு தணிய ஆரம்பிக்கிறது. ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பது குடும்பத்திற்கு வேலியாய் அமைகிறது; இது தேவையில்லாத பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் அண்டவிடாமல் தடுக்கிறது. இவ்வாறு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கும்போது எந்தப் பயமுமின்றி பாதுகாப்பாய் இருக்க முடியும், மனம்விட்டு பேசவும் முடியும்; இதனால் அவர்கள் மத்தியில் அன்பு வளர்ந்து விருட்சமாகும். ஆம், ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பது முக்கியம்.
9 “ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்” என்று ஆதாமிடம் யெகோவா சொன்னார். (ஆதி. 2:24, NW) இதன் அர்த்தம் என்ன? திருமணத்திற்குப் பிறகு நண்பர்களோடும் உறவினர்களோடும் உள்ள உறவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இருவருமே தங்கள் நேரத்தையும் கவனத்தையும் துணைக்குத்தான் கொடுக்க வேண்டும். மணத் துணைக்கு மேலாக நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. குடும்பத்தில் தீர்மானங்கள் எடுக்கும்போதோ கருத்துவேறுபாடுகள் ஏற்படும்போதோ பெற்றோர்கள் தலையிட அனுமதிக்கக் கூடாது. தம்பதியர் இருவரும் சேர்ந்திருக்க வேண்டும். இதுவே கடவுளுடைய கட்டளை.
10. ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்க தம்பதியருக்கு எது உதவும்?
10 சத்தியத்தில் இல்லாத துணையையுடைய தம்பதியர்கூட ஒருவருக்கொருவர் உண்மையாய் இருப்பது பலனளிக்கும். சத்தியத்தில் இல்லாத கணவரையுடைய ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “என் கணவருக்குக் கீழ்ப்பட்டிருக்கவும் ஆழ்ந்த மரியாதை காட்டவும் யெகோவா எனக்குக் கற்றுக்கொடுத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. ஒருவருக்கொருவர் உண்மையாய் இருந்ததால் எங்களுடைய 47 வருட மணவாழ்க்கையில் அன்பும் மரியாதையும் வேரூன்றியிருக்கிறது.” (1 கொ. 7:10, 11; 1 பே. 3:1, 2) எனவே, உங்கள் மணத் துணையைச் சந்தோஷமாய் வைத்துக்கொள்ள முயலுங்கள். ‘இந்த உலகத்திலேயே நீதான்/நீங்கள்தான் எனக்கு ரொம்ப முக்கியம்’ என்பதைச் சொல்லிலும் செயலிலும் உங்கள் துணைக்குக் காட்டுங்கள். முடிந்தவரை உங்கள் இருவரின் நடுவிலே யாரும், எதுவும் குறுக்கிட இடங்கொடுக்காதீர்கள். (நீதிமொழிகள் 5:15-20-ஐ வாசியுங்கள்.) “கடவுள் எதிர்பார்க்கிறபடி நாங்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் நடந்துகொள்வதால் எங்கள் மணவாழ்வு மகிழ்ச்சியாயும் திருப்தியாயும் இருக்கிறது” என்று 35 வருடங்களுக்கும் மேலாக சந்தோஷமாய் வாழ்கிற ரான், ஜேனட் தம்பதியர் சொல்கிறார்கள்.
மணவாழ்வில் ஒற்றுமையாய் இருக்க...
11, 12. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் (அ) வீட்டில், (ஆ) வேலையில், (இ) ஊழியத்தில் எப்படி ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்தார்கள்?
11 அப்போஸ்தலன் பவுல் தன் உற்ற நண்பர்களான ஆக்கில்லா-பிரிஸ்கில்லா பற்றிப் பேசியபோது எப்போதும் இருவரையும் சேர்த்தே குறிப்பிட்டார். கணவனும் மனைவியும் ‘ஒரே உடலாக இருக்க வேண்டும்’ என்று கடவுள் சொன்ன வார்த்தைக்கு இந்தத் தம்பதியர் இலக்கணமாகத் திகழ்ந்தார்கள். (ஆதி. 2:24) வீட்டில், வேலையில், ஊழியத்தில் அவர்கள் எப்போதும் இணைந்தே செயல்பட்டார்கள். உதாரணத்திற்கு, பவுல் முதன்முறையாக கொரிந்து நகரத்திற்கு வந்தபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரை அன்போடு வரவேற்று வீட்டில் தங்க வைத்தார்கள்; அதற்குப் பிறகும்கூட சில காலத்திற்கு பவுல் தன் ஊழிய வேலைகளுக்காக அவர்களுடைய வீட்டையே மையமாகப் பயன்படுத்தினார். பின்னர் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எபேசுவுக்கு மாறிச் சென்றபோது, தங்களுடைய வீட்டில் சபைக் கூட்டங்களை நடத்த இடமளித்தார்கள்; அப்பொல்லோ போன்ற புதியவர்கள் சத்தியத்தில் முன்னேறுவதற்கு சேர்ந்தே உதவினார்கள். (அப். 18:2, 18-26) பக்திவைராக்கியமுள்ள இந்தத் தம்பதியர் ரோமாபுரிக்குச் சென்றபோதும் தங்கள் வீட்டில் சபைக் கூட்டங்கள் நடத்த இடமளித்தார்கள். பின்னர், அவர்கள் எபேசுவுக்குத் திரும்பி வந்து சகோதரர்களைப் பலப்படுத்தினார்கள்.—ரோ. 16:3-5.
12 சில காலத்திற்கு, அவர்கள் பவுலோடு சேர்ந்து கூடாரத் தொழிலிலும் ஈடுபட்டார்கள். இந்த வேலையிலும் அவர்கள் போட்டியோ சண்டையோ போடாமல் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்தார்கள். (அப். 18:3) என்றாலும், ஆன்மீகக் காரியங்களில் ஒன்றுசேர்ந்து அதிக நேரம் செலவிட்டதால்தான் அவர்களுடைய மணவாழ்க்கை பலப்பட்டது. கொரிந்துவிலும் சரி, எபேசுவிலும் சரி, ரோமாபுரியிலும் சரி, இவர்கள் ‘கிறிஸ்து இயேசுவின் சேவையில் . . . சக வேலையாட்கள்’ என்றே எல்லாராலும் அறியப்பட்டார்கள். (ரோ. 16:3) இவர்கள் சென்ற இடமெல்லாம் ஊழிய வேலையில் தோளோடு தோள் சேர்ந்து செயல்பட்டார்கள்.
13, 14. (அ) எந்தெந்த சூழ்நிலைகள் மணவாழ்வின் ஒற்றுமையைக் குலைத்துப்போடலாம்? (ஆ) ‘ஒரே உடல்’ போல் தங்கள் பந்தத்தைப் பலப்படுத்த தம்பதியர் என்ன செய்யலாம்?
13 ஆம், இலக்குகளை வைப்பதிலும் வேலைகளைச் செய்வதிலும் ஒன்றுசேர்ந்து உழைப்பது மணவாழ்வைப் பலப்படுத்துகிறது. (பிர. 4:9, 10) ஆனால், தம்பதியர் பலர் ஒன்றுசேர்ந்து செலவிடும் நேரம் குறைவுதான்; ஏனென்றால், இருவரும் வெவ்வேறு இடங்களில் நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள். இன்னும் சிலர் வேலைக்காகத் தொலைதூரம் பயணம் செய்கிறார்கள் அல்லது குடும்பத்துக்காக சம்பாதிக்க தம்பதியரில் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். வீட்டிலும்கூட, தம்பதியர் சிலர் டிவியில், பொழுதுபோக்கில், விளையாட்டில், வீடியோ கேம்ஸில், அல்லது இன்டர்நெட்டில் மூழ்கிவிடுவதால் தனித்தனியாக ஆளுக்கொரு மூலையில் இருக்கிறார்கள். உங்கள் வீட்டிலும் அப்படித்தானா? அப்படியென்றால், நீங்கள் இருவரும் சேர்ந்து நேரம் செலவிட சூழ்நிலைகளை மாற்றியமைக்க முடியுமா? சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, தோட்டத்தைப் பராமரிப்பது போன்றவற்றை ஒன்றாகச் சேர்ந்து செய்ய முடியுமா? பிள்ளைகளை அல்லது வயதான பெற்றோர்களை இருவரும் சேர்ந்து கவனித்துக்கொள்ள முடியுமா?
14 மிக முக்கியமாக, வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் தவறாமல் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள். உதாரணமாக, ஒன்றாகச் சேர்ந்து தினவசனத்தைச் சிந்தியுங்கள், குடும்ப வழிபாட்டில் ஈடுபடுங்கள்; உங்களுடைய எண்ணங்களும் இலக்குகளும் ஒரேபோல் இருக்க இவையெல்லாம் அருமையான வாய்ப்புகள். ஊழியத்திலும் ஒன்றாகச் சேர்ந்து ஈடுபடுங்கள். சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு மாதமோ ஒரு வருடமோ ஒன்றாகச் சேர்ந்து பயனியர் சேவை செய்ய முயலுங்கள். (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) கணவருடன் சேர்ந்து பயனியர் சேவை செய்த ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிட, மனம்விட்டுப் பேச பயனியர் ஊழியம் எங்களுக்கு வாய்ப்பளித்தது. ஆன்மீக ரீதியில் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற இலக்கு எங்கள் இருவருக்குமே இருந்ததால் நாங்கள் எதைச் செய்தாலும் சேர்ந்தே செய்கிறோம் என்ற உணர்வு ஏற்பட்டது. அதனால், அவரை என் கணவராக மட்டுமல்ல உயிர் நண்பராகவும் பார்க்க முடிந்தது.” ஆன்மீகக் காரியங்களில் நீங்கள் சேர்ந்து ஈடுபடும்போது, உங்களுடைய விருப்பங்கள், முன்னுரிமைகள், பழக்கங்கள் எல்லாமே படிப்படியாக உங்களுடைய துணையோடு ஒத்துப்போகும்; அப்போது ஆக்கில்லா-பிரிஸ்கில்லா போல, எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் செயல்களிலும் ‘ஒரே உடலாக’ இருப்பீர்கள்.
கடவுளுக்குப் பிரியமாய் நடக்க...
15. திருப்தியான மணவாழ்க்கைக்குத் திறவுகோல் எது? விளக்குங்கள்.
15 மணவாழ்வில் கடவுளுக்கு முதலிடம் கொடுப்பது முக்கியம் என்பதை இயேசு அறிந்திருந்தார். முதல் திருமணத்தை யெகோவா நடத்தி வைத்ததை அவர் பார்த்தார். கடவுளுடைய அறிவுரைகளைக் கேட்டு நடந்தவரை ஆதாமும் ஏவாளும் சந்தோஷமாய் இருந்ததைக் கவனித்தார்; அவற்றை அவர்கள் மீறியபோது விளைந்த விபரீதத்தையும் கண்கூடாகப் பார்த்தார். எனவே, பூமியில் இயேசு மக்களுக்குக் கற்பித்தபோது ஆதியாகமம் 2:24-ல் தம்முடைய தகப்பன் கொடுத்த அறிவுரையை அவர் மீண்டும் சொன்னார். அந்த அறிவுரையோடு, “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்றும் சேர்த்துச் சொன்னார். (மத். 19:6) ஆக, யெகோவாவிடமுள்ள ஆழ்ந்த மரியாதையே மகிழ்ச்சியும் திருப்தியும் ததும்பும் மணவாழ்க்கைக்கு இன்றும் ஒரு திறவுகோலாக விளங்குகிறது. இந்த விஷயத்தில் இயேசுவின் பூமிக்குரிய பெற்றோரான யோசேப்பும் மரியாளும் தலைசிறந்த உதாரணம்.
16. யோசேப்பு-மரியாள் தம்பதியர் எப்படிக் கடவுளுக்குப் பிரியமாய் நடந்தார்கள்?
16 மரியாளிடம் யோசேப்பு கருணையும் மரியாதையும் காண்பித்தார். மரியாள் கர்ப்பமாக இருந்ததை அறிந்தபோது, தேவதூதர் அதைக் குறித்து அவரிடம் தெரிவிப்பதற்கு முன்பே, அவளை இரக்கத்துடன் நடத்த விரும்பினார். (மத். 1:18-20) இந்தத் தம்பதியர் ரோம அரசனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள், முடிந்தவரை திருச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள். (லூக். 2:1-5, 21, 22) எருசலேமில் நடைபெற்ற முக்கியப் பண்டிகைகளில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது அவசியமாக இருந்தாலும் யோசேப்பும் மரியாளும் வருடாவருடம் தங்கள் குடும்பத்தோடு அங்கு போனார்கள். (உபா. 16:16; லூக். 2:41) கடவுள் பக்திமிக்க இந்தத் தம்பதியர் இப்படிப் பல வழிகளில் யெகோவாவுக்குப் பிரியமாக நடந்தார்கள்; ஆன்மீகக் காரியங்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டினார்கள். இயேசுவை வளர்ப்பதற்காக இந்தத் தம்பதியரை யெகோவா தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை.
17, 18. (அ) தம்பதியர் எவ்வாறு ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கலாம்? (ஆ) இது அவர்களுக்கு எப்படி உதவும்?
17 தம்பதியரான நீங்களும் அவர்களைப் போலவே கடவுளுக்குப் பிரியமாய் நடக்கிறீர்களா? உதாரணத்திற்கு, முக்கியத் தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு முதலாவது பைபிள் நியமங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்களா? அவற்றைக் குறித்து ஜெபம் செய்கிறீர்களா? அதன் பிறகு, முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களின் அறிவுரைகளை நாடுகிறீர்களா? அல்லது, உங்கள் சொந்த இஷ்டப்படி... குடும்பத்தாரும் நண்பர்களும் சொல்கிறபடி... பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்கிறீர்களா? திருமணம், இல்லறம் சம்பந்தமாக அடிமை வகுப்பார் வெளியிட்டிருக்கிற பிரசுரங்களிலுள்ள நடைமுறையான ஆலோசனைகளைப் பின்பற்ற முயற்சி செய்கிறீர்களா? அல்லது, உள்ளூர் பழக்கவழக்கங்களையும் உலகத்தாரின் அறிவுரைகளையும் பின்பற்ற முயற்சி செய்கிறீர்களா? ஒன்றுசேர்ந்து தவறாமல் ஜெபம் செய்கிறீர்களா, பைபிள் படிக்கிறீர்களா? ஆன்மீக இலக்குகள் வைத்திருக்கிறீர்களா? வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டிய விஷயங்களைக் குறித்து இருவரும் பேசுகிறீர்களா?
18 மணவாழ்வில் 50 வருடங்களைச் சந்தோஷமாய்க் கழித்த ராய் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா எங்களுடைய மணவாழ்வில் ஒருவராக, ‘முப்புரி நூலில்’ ஒருவராக இருப்பதால் எங்களால் சரிசெய்ய முடியாத பிரச்சினையே இருந்ததில்லை.” (பிரசங்கி 4:12-ஐ வாசியுங்கள்.) டேனி, ட்ரீனா தம்பதியரும் இதை ஆமோதிக்கிறார்கள். “நாங்கள் ஒன்றுசேர்ந்து கடவுளுக்குச் சேவை செய்திருப்பதால் எங்கள் மணவாழ்க்கை செழித்தோங்கியிருக்கிறது” என்று சொல்கிறார்கள். இவர்கள் 34 வருடங்களுக்கு மேலாக தங்கள் இல்வாழ்வில் இனிமை காண்கிறார்கள். எப்போதுமே உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தால், நீங்கள் வெற்றிகாண அவர் உதவி செய்வார், ஆசீர்வாதத்தையும் அள்ளி வழங்குவார்.—சங். 127:1.
கடவுள் தந்த வரத்தை உயர்வாய் மதிக்க...
19. திருமணம் என்ற வரத்தை கடவுள் ஏன் தந்தார்?
19 இன்று அநேகர் தங்களுடைய சந்தோஷத்தைத்தான் பெரிதாகக் கருதுகிறார்கள். ஆனால், யெகோவாவின் ஊழியர்கள் அப்படியல்ல. கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவர் கொடுத்திருக்கும் ஒரு வரம்தான் கல்யாணம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (ஆதி. 1:26-28) ஆதாமும் ஏவாளும் அந்த வரத்திற்கு மதிப்புக் கொடுத்திருந்தால், இந்த முழு பூமியும் பூஞ்சோலையாக மாறியிருக்கும்; சந்தோஷமும் நீதியுமுள்ள அவருடைய ஊழியர்களால் நிறைந்திருக்கும்.
20, 21. (அ) திருமணத்தை நாம் ஏன் புனிதமாகக் கருத வேண்டும்? (ஆ) அடுத்த வாரக் கட்டுரையில் எந்த வரத்தைப் பற்றிச் சிந்திப்போம்?
20 மிக முக்கியமாக, இல்லற வாழ்க்கையை யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பதற்கான வாய்ப்பாக அவருடைய ஊழியர்கள் கருதுகிறார்கள். (1 கொரிந்தியர் 10:31-ஐ வாசியுங்கள்.) நாம் பார்த்தபடி, உண்மையாய் இருப்பது, ஒற்றுமையாய்ச் செயல்படுவது, கடவுளுக்குப் பிரியமாய் நடப்பது ஆகியவையே மணவாழ்வைத் தாங்கி நிறுத்தும் தூண்கள். ஆகவே, நாம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அதைப் பலப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாலும் சரி, அதில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்ய உழைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அது கடவுளுடைய புனிதமான ஏற்பாடு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், மணவாழ்வில் தீர்மானங்கள் எடுக்கும்போது பைபிளின் அடிப்படையில் எடுக்க எல்லா முயற்சியும் செய்வோம். இவ்வாறு, திருமணம் என்ற வரத்திற்கு மட்டுமல்ல அதைக் கொடுத்த யெகோவா தேவனுக்கும் மதிப்புக் கொடுப்போம்.
21 திருமணம் மட்டுமே யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் வரம் அல்ல. கல்யாணம் செய்துகொண்டால் மட்டுமே வாழ்வில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் என்பதும் உண்மை அல்ல. கடவுள் கொடுத்திருக்கும் மற்றொரு அருமையான வரத்தைப் பற்றி, அதாவது மணம் செய்துகொள்ளாமல் இருப்பதைப் பற்றி, அடுத்த கட்டுரையில் காண்போம்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• மணமான கிறிஸ்தவர்கள் எப்படி உண்மையாய் நடந்துகொள்ள வேண்டும்?
• ஒற்றுமையாய் வேலை செய்வது மணவாழ்வை எப்படிப் பலப்படுத்தும்?
• தம்பதியர் கடவுளுக்குப் பிரியமாய் நடக்க உதவும் சில வழிகள் யாவை?
• திருமணத்தை ஆரம்பித்து வைத்த யெகோவாவுக்கு நாம் எப்படி மரியாதை காட்டலாம்?
[பக்கம் 15-ன் படங்கள்]
எல்லாவற்றையும் ஒன்றுசேர்ந்து செய்வது தம்பதியர் ஒற்றுமையாய் இருக்க உதவும்