துன்பத்திலும் யெகோவாவின் சேவையில் இன்பம்
மார்ச்செ டா யாங்கா-வான் டென் ஹியூவல் சொன்னபடி
எனக்கு 98 வயதாகிறது. 70 வருடங்கள் சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கிறேன்; ஆனாலும், சோதனைகள் என் விசுவாசத்தை உரசிப் பார்க்கத்தான் செய்தன. இரண்டாம் உலகப்போரின்போது சித்திரவதை முகாமில் தள்ளப்பட்டேன்; நான் சோர்ந்து போயிருந்த ஒரு கட்டத்தில், தவறான ஒரு முடிவை எடுத்து விட்டேன். அதை நினைத்து, நினைத்து பின்னால் வேதனையில் புழுங்கினேன். சில வருடங்களுக்குப் பிறகு வந்த இன்னொரு சோதனை என் மனதை ரணமாக்கியது. இப்படிப் பல துன்பங்களின் மத்தியிலும் யெகோவாவுக்குச் சேவை செய்யக் கிடைத்த பாக்கியத்திற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
அக்டோபர் 1940-ல், என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஹில்வர்சம் என்ற ஊரில் நான் வசித்து வந்தேன்; இது நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமுக்குத் தென்கிழக்கில் சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அந்தச் சமயத்தில், நாசி ஆட்சியின் கட்டுப்பாட்டில் நாடு இருந்தது. நான் யாப் டா யாங்கா என்பவரைக் கரம் பிடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன, அவர் என்னைக் கண்ணுக்குக் கண்ணாக கவனித்துக்கொண்டார்; எங்களுக்கு விள்ளி என்ற மூன்று வயது செல்ல மகள் இருந்தாள். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஏழை குடும்பம் இருந்தது; எட்டுக் குழந்தைகளின் வயிற்றுப்பாட்டைக் கவனிக்கவே அந்தக் குடும்பம் திண்டாடியது. இருந்தாலும், அந்தக் குடும்பத்தார் ஓர் இளைஞரை வீட்டில் நிரந்தரமாகத் தங்க வைத்து, அவருக்கும் உணவளித்து வந்தார்கள். ‘தேவையில்லாத சுமையை அவர்கள் ஏன் இழுத்துப் போட்டுக்கொள்கிறார்கள்?’ என்று நான் யோசித்தேன். ஒருநாள் அவர்களுக்குக் கொஞ்சம் சாப்பாடு கொடுப்பதற்காக அங்கு போனபோது அந்த இளைஞர் ஒரு பயனியர் என்பதைத் தெரிந்துகொண்டேன். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி... அது நமக்குத் தரப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றி... எல்லாம் அவர் எனக்குச் சொன்னார். அவர் சொன்ன விஷயங்கள் என் மனதைத் தொட்டதால், உடனடியாக சத்தியத்தை ஏற்றுக்கொண்டேன். அதே வருடத்தில் யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெற்றேன். ஒரு வருடத்தில் என் கணவரும் சத்தியத்திற்கு வந்தார்.
சத்தியத்தில் நான் கற்றுக்குட்டிதான்; இருந்தாலும், நான் சேர்ந்திருப்பது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு என்பதை மட்டும் நன்கு புரிந்து கொண்டேன். பிரசங்க வேலை செய்ததால் ஏற்கெனவே நிறையச் சாட்சிகள் சிறையில் தள்ளப்பட்டிருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும், உடனடியாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொண்டேன்; பயனியர்களும் பயணக் கண்காணிகளும் எங்கள் வீட்டில் தங்குவதற்கு இடமளித்தோம். எங்கள் வீடு பைபிள் பிரசுரங்களின் கிடங்காகவும் ஆனது; ஆம், ஆம்ஸ்டர்டாமிலிருந்து சகோதர சகோதரிகள் கொண்டுவந்த பிரசுரங்கள் எங்கள் வீட்டில்தான் ஒளித்து வைக்கப்பட்டன. அவர்கள், பெரிய ‘கேரியர்’ வைத்த சைக்கிள்களில் நிறையப் புத்தகங்களை வைத்து அவற்றைத் தார்ப்பாயால் மூடி பெரிய கட்டாகக் கட்டி கொண்டு வருவார்கள். அந்தச் சகோதரர்களின் அன்பையும் தைரியத்தையும் என்னவென்று சொல்வது! அவர்கள் சக கிறிஸ்தவர்களுக்காகத் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்.—1 யோ. 3:16.
“சீக்கிரமா வந்துடுவீங்களா அம்மா?”
நான் ஞானஸ்நானம் எடுத்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன; அந்தச் சமயத்தில் ஒரு நாள் மூன்று போலீஸ் அதிகாரிகள் எங்கள் வீட்டு வாசலில் நிற்பதைப் பார்த்தேன். அவர்கள் உள்ளே புகுந்து வீடு முழுவதும் சோதனையிட்டார்கள். நாங்கள் பிரசுரங்கள் வைத்திருந்த அறையை அவர்கள் பார்க்கவில்லை; ஆனால், எங்கள் படுக்கைக்குக் கீழ் மறைத்து வைத்திருந்த சில புத்தகங்களைப் பார்த்துவிட்டார்கள். உடனே தங்களுடன் ஹில்வர்சம் காவல் நிலையத்திற்கு நடையைக் கட்டும்படி உத்தரவிட்டார்கள். என் மகளைக் கட்டியணைத்து போய் வருவதாக அவளிடம் சொன்னபோது, “சீக்கிரமா வந்துடுவீங்களா அம்மா?” என்று கேட்டாள். அதற்கு “சீக்கிரமா வந்துவிடுகிறேன், செல்லம்” என்று சொன்னேன். ஆனால், 18 மாதங்களுக்குப் பிறகே அவளைத் திரும்பவும் என் கைகளில் அள்ளி அணைக்க முடிந்தது; அந்த மாதங்களில் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு போலீஸ் அதிகாரி என்னை விசாரிப்பதற்காக ஆம்ஸ்டர்டாமுக்கு ரயிலில் அழைத்துச் சென்றார். என்னை விசாரித்தவர்கள் ஹில்வர்சம் ஊரைச் சேர்ந்த மூன்று பேரை நிறுத்தி அவர்கள் யெகோவாவின் சாட்சிகளா என்பதை என் வாயிலிருந்து வரவழைக்க முயன்றார்கள். “அவர்களில் ஒருவரை மட்டுமே எனக்குத் தெரியும். அவர் எங்கள் பால்காரர்” என்று சொன்னேன். நான் சொன்னது உண்மைதான்; ஏனென்றால், அந்தச் சகோதரர் எங்களுக்கு பால் கொண்டு வந்து தருவார். “ஆனால், அவர் யெகோவாவின் சாட்சியா என்று அவரையே கேளுங்கள், என்னிடம் கேட்காதீர்கள்” என்றேன். நான் எந்தப் பிடியும் கொடுக்காததால் அவர்கள் என்னை முகத்தில் அறைந்து சிறையில் தள்ளினார்கள்; அங்கு இரண்டு மாதங்கள் இருந்தேன். நான் இருந்த இடத்தை என் கணவர் கண்டுபிடித்தபோது, சில துணிமணிகளையும் சாப்பிடுவதற்கு சில உணவுப் பொருள்களையும் கொண்டுவந்தார். பிறகு, ஆகஸ்ட் 1941-ல் ஜெர்மனியிலுள்ள பெர்லினுக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராவன்ஸ்புரூக் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டேன்; அது பெண்களைப் படுமோசமாக நடத்தும் ஒரு முகாம் என்பது எல்லாருக்குமே தெரியும்.
“தைரியமாயிரு”
எங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதாக ஓர் ஆவணத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தால் வீட்டிற்கு அனுப்பிவிடுவதாக அங்குள்ள அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால், நான் அதில் கையெழுத்து போடவே இல்லை. அதனால், என்னிடம் இருந்ததை எல்லாம் அவர்களிடம் கொடுக்க வேண்டியதாயிற்று; அங்கிருந்த குளியலறைக்குச் சென்று நான் உடுத்தியிருந்த எல்லாவற்றையும் கழற்றிக் கொடுக்க வேண்டியதாயிற்று. அங்கு நெதர்லாந்தைச் சேர்ந்த சில சகோதரிகளைப் பார்த்தேன். ஊதா நிறத்தில் முக்கோண அடையாளச் சின்னம் தைக்கப்பட்ட முகாம் ஆடையை எங்களுக்குக் கொடுத்தார்கள், ஒரு தட்டும், டம்ளரும், கரண்டியும்கூட கொடுத்தார்கள். முதல் நாள் இரவு தற்காலிகமாய் தங்குவதற்கு ஒரு பாசறையில் எங்களை அடைத்தார்கள். என்னைக் கைது செய்ததற்குப் பிறகு முதன்முறையாக நான் வாய்விட்டு அழுதது அன்றுதான். “என்ன நடக்கப் போகிறதோ, எத்தனை நாள்தான் இங்கு இருக்கப் போகிறேனோ” என்றெல்லாம் நினைத்து தேம்பித் தேம்பி அழுதேன். உண்மையைச் சொன்னால், அந்தச் சமயத்தில் யெகோவாவுடன் எனக்கு அந்தளவு நெருக்கமான பந்தம் இல்லை; ஏனென்றால், நான் சத்தியத்திற்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. நான் இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அடுத்த நாள் அட்டெண்டன்ஸ் எடுத்த சமயத்தில் டச் சகோதரி ஒருவர் நான் சோகமாக இருந்ததைக் கவனித்திருக்க வேண்டும். அவர் என்னிடம் “தைரியமாயிரு, மனசை தளர விட்டுவிடாதே! நம்மை யாரால் என்ன செய்ய முடியும்?” என்று சொன்னார்.
அட்டெண்டன்ஸ் எடுத்த பிறகு எங்களை மற்றொரு பாசறைக்கு மாற்றினார்கள்; அங்கு எங்களை வரவேற்க ஜெர்மனியையும் நெதர்லாந்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான சகோதரிகள் இருந்தார்கள். அந்த ஜெர்மானிய சகோதரிகளில் சிலர் ஒரு வருடத்திற்கும் மேலாக அந்தப் பாசறையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு இருந்தது எனக்கு அதிக தெம்பூட்டியது, அது உண்மையிலேயே எனக்குள் தைரியத்தை விதைத்தது. அந்த முகாமிலிருந்த மற்ற பாசறைகளைவிட நாங்கள் தங்கியிருந்த பாசறை ரொம்பவே சுத்தமாக இருந்ததும்கூட என் மனதுக்கு இதமாக இருந்தது. எங்களுடைய பாசறை சுத்தமாக இருந்ததுபோக திருட்டோ, கெட்ட வார்த்தைகளோ, சண்டையோ இல்லாத இடம் என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்குப் பேர்பெற்றிருந்தது. முகாமில் எங்களுடைய நிலைமை படுமோசமாக இருந்தாலும், நாங்கள் தங்கியிருந்த பாசறை சேறும் சகதியுமான கடலுக்கு நடுவே சுத்தமாகப் பளிச்செனத் தெரியும் தீவைப் போல இருந்தது.
முகாமில் வாழ்க்கை
முகாமில் நாங்கள் கால் வயிறு அரை வயிறு சாப்பிட்டாலும் முதுகு ஒடிய வேலை பார்க்க வேண்டியிருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும், அதன்பிறகு காவலர்கள் அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பிப்பார்கள். அந்த நேரத்தில் மழை வெயில் என்று பார்க்காமல் ஒரு மணிநேரம் வெளியில் நிற்க வைப்பார்கள். நாள் முழுக்க கஷ்டப்பட்டு வேலை செய்த பிறகு மாலை ஐந்து மணிக்குத் திரும்பவும் அட்டெண்டன்ஸ் எடுப்பார்கள். பிறகு, கொஞ்சம் சூப்பும் ரொட்டியும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வோம்; உடம்பெல்லாம் அடித்துப் போட்டதைப் போல இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் நான் பண்ணைகளில் வேலை பார்த்தேன்; கோதுமை கதிர்களை அறுக்க வேண்டும், சாக்கடைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், பன்றிப்பட்டிகளைக் கழுவிவிட வேண்டும். அந்த வேலைகளெல்லாம் பாரமாகவும் அருவருப்பாகவும் இருந்தாலும் என்னால் தினமும் செய்ய முடிந்தது; ஏனென்றால், எனக்கு வயதும் இருந்தது பலமும் இருந்தது. அதோடு, நான் ராஜ்ய பாடல்களைப் பாடிக்கொண்டே வேலை பார்த்தது எனக்குத் தெம்பூட்டியது. இருந்தாலும், என் கணவரையும் மகளையும் பார்க்க தினமும் என் மனம் துடியாய் துடித்தது.
எங்களுக்குச் சாப்பாடு கொஞ்சமாகக் கிடைத்தாலும் தினமும் ஒரு துண்டு ரொட்டியையாவது எடுத்து வைத்துக்கொள்வோம்; அதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் பைபிள் விஷயங்களைக் கலந்து பேசும்போது கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிட முடிந்தது. எங்களிடம் பைபிள் பிரசுரம் ஒன்றுகூட இல்லை, ஆனாலும் வயதிலும் விசுவாசத்திலும் முதிர்ச்சியுள்ள ஜெர்மானிய சகோதரிகள் ஆன்மீக விஷயங்களை விளக்கியபோது நான் ஆர்வத்தோடு கேட்டேன். கிறிஸ்துவின் மரண நினைவு நாளைக்கூட நாங்கள் அனுசரித்தோம்.
கவலை, வருத்தம், பிறகு உற்சாகம்
சில சமயங்களில், நாசிக்கள் நடத்திய போருக்குத் துணைபோகும் சில வேலைகளைச் செய்யும்படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம். அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகித்ததால் சகோதரிகள் எல்லாரும் அந்த வேலையைச் செய்ய மறுத்தார்கள்; நானும் அவர்களைப்போல் தைரியமாக மறுத்துவிட்டேன். அதற்குத் தண்டனையாக எங்களுக்கு சில நாட்களுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை, அதோடு அட்டெண்டன்ஸ் எடுத்தபோது மணிக்கணக்காக வெளியில் நிற்க வேண்டியிருந்தது. ஒரு சமயம் குளிர்காலத்தில், ஹீட்டர் வசதி எதுவுமின்றி 40 நாட்களுக்குப் பாசறையில் அடைத்து வைக்கப்பட்டோம்.
யெகோவாவின் சாட்சிகளான நாங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுத்துவிடுவதாக ஆவணத்தில் கையெழுத்து போட்டால் விடுதலை செய்யப்படுவோம் என அதிகாரிகள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ராவன்ஸ்புரூக்கில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓட்டிய பிறகு, நான் ரொம்பவே துவண்டுபோய்விட்டேன். கணவரையும் மகளையும் பார்க்காமல் இனியும் என்னால் இருக்க முடியாது என்ற கட்டத்தில் காவலர்களிடம் சென்று, ‘நான் இனிமேலும் ஒரு பைபிள் மாணாக்கர் இல்லை’ என்று எழுதப்பட்டிருந்த ஆவணத்தைக் கேட்டு வாங்கி அதில் கையெழுத்திட்டேன்.
அதை அறிந்த சகோதரிகள் சிலர், என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள். என்றாலும், ஹேட்விக், கெர்ட்ரூட் என்ற வயதான ஜெர்மானிய சகோதரிகள் இருவர் என்னைத் தேடி வந்து என்மீது உயிரையே வைத்திருப்பதாகத் தைரியம் சொன்னார்கள். பன்றிப்பட்டியில் நாங்கள் வேலை செய்தபோது, யெகோவாவுக்கு உத்தமமாய் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதன் மூலம் அவர்மீதுள்ள அன்பை எப்படிக் காட்டலாம் என்பதையும் எனக்கு மென்மையாக எடுத்துச் சொன்னார்கள். ஒரு தாயைப் போல அவர்கள் என்மீது காட்டிய அக்கறையும் பாசமும் என் மனதைத் தொட்டன.a நான் செய்தது தவறு என்று எனக்குத் தெரியும்; அதனால், நான் கையெழுத்திட்ட ஆவணத்தை ரத்து செய்ய நினைத்தேன். என்னுடைய ஆவணத்தை ரத்து செய்யும்படி அதிகாரிகளிடம் கேட்கப்போவதாக ஒருநாள் சாயங்காலம் ஒரு சகோதரியிடம் சொன்னேன். நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை முகாம் அதிகாரி கேட்டிருக்க வேண்டும்; ஏனென்றால், அன்று சாயங்காலமே திடீரென்று என்னை விடுதலை செய்து ரயிலில் நெதர்லாந்திற்கு அனுப்பி வைத்தார்கள். மேற்பார்வையாளர் ஒருவர் என்னிடம் “நீங்கள் இப்போதும் ஒரு பீபல்ஃபார்ஷர்தான் (பைபிள் மாணாக்கர்தான்), அதிலிருந்து நீங்கள் விலகவே மாட்டீர்கள்” என்று சொன்னார்; அவருடைய முகம் இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. “ஆமாம், நான் பீபல்ஃபார்ஷராகத்தான் இருப்பேன், யெகோவாவின் விருப்பமும் அதுதான்” என்று அவரிடம் சொன்னேன். இருந்தாலும், ‘அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதற்கு நேர்மாறாக எப்படி நடந்துகொள்வேன்’ என்றே யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த ஆவணத்தில் எழுதப்பட்டிருந்த இன்னொரு குறிப்பு இதுதான்: “இன்டர்நேஷனல் பைபிள் ஸ்டூடன்ஸ் சொஸைட்டியின் சார்பாக நான் இனி ஒருபோதும் செயல்பட மாட்டேன் என்று இதன்மூலம் உறுதி கூறுகிறேன்.” இருந்தாலும், நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிந்திருந்தது! ஜனவரி 1943-ல், வீட்டிற்குத் திரும்பியதுமே பிரசங்க வேலையை மறுபடியும் செய்ய ஆரம்பித்தேன். அப்படிச் செய்யும்போது நாசி அதிகாரிகளிடம் மீண்டும் மாட்டிக்கொண்டால், முன்பைவிட கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்தான்.
யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாக இருக்க வேண்டும் என்ற இதயப்பூர்வமான ஆசையை இன்னும் அதிகமாக வெளிக்காட்ட நினைத்தேன்; அதனால், பிரசுரங்களைக் கொண்டுவருபவர்களும் பயணக் கண்காணிகளும் எங்கள் வீட்டில் தங்குவதற்கு நானும் என் கணவரும் திரும்பவும் இடம் கொடுத்தோம். யெகோவாமீதும் அவருடைய மக்கள்மீதும் எனக்கிருக்கும் அன்பைக் காட்டுவதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்ததால் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்!
வாழ்வில் பேரிடி
போர் முடிவடைவதற்குச் சில மாதங்களுக்கு முன், எங்கள் வாழ்வை ஒரு பேரிடி தாக்கியது. அக்டோபர் 1944-ல் எங்கள் மகள் விள்ளியைத் திடீரென நோயொன்று படுக்கையில் தள்ளிவிட்டது. டிப்தீரியா என்ற நோய் (தொண்டை அடைப்பான் நோய்) அவளைத் தாக்கியது. உடல்நிலை ரொம்பவே மோசமடைந்து மூன்றே நாட்களில் கண்ணை மூடிவிட்டாள். அப்போது அவளுக்கு ஏழு வயதுதான்.
ஒரே மகளைப் பறிகொடுத்தபோது நாங்கள் அப்படியே இடிந்துபோய்விட்டோம். அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட வலியோடு ஒப்பிட, ராவன்ஸ்புரூக்கில் நான் சந்தித்த சோதனையெல்லாம் ஒன்றுமேயில்லை. இருந்தாலும், வேதனையில் ரணமாகியிருந்த எங்கள் நெஞ்சத்திற்கு சங்கீதம் 16:8-லுள்ள வார்த்தைகள் எப்போதும் ஆறுதலின் அருமருந்தாக இருந்தன. “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்று அந்த வசனம் சொல்கிறது. உயிர்த்தெழுதலைக் குறித்து யெகோவா தந்திருக்கும் வாக்குறுதியில் நானும் என் கணவரும் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தோம். சத்தியத்தில் நிலைத்திருந்தோம், அதோடு நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் எப்போதும் வைராக்கியத்துடன் ஈடுபட்டோம். 1969-ல் என் கணவர் இறந்துவிட்டார்; யெகோவாவுக்குச் சந்தோஷத்தோடு சேவை செய்ய அவர் எனக்கு வாழ்நாளெல்லாம் பேருதவியாய் இருந்தார்.
ஆசீர்வாதங்களும் சந்தோஷங்களும்
கடந்த பல ஆண்டுகளில், எனக்குப் பெரும் சந்தோஷத்தை அளித்த ஒன்று, முழுநேர ஊழியர்களுடன் எப்போதும் கூட்டுறவு வைத்திருந்ததுதான். போர் நடந்த காலங்களில், எங்கள் சபையைச் சந்திக்க வந்த பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் தங்குவதற்கு எங்கள் வீட்டுக் கதவு எப்போதும் திறந்தே இருந்தது. சொல்லப்போனால், பயண ஊழியம் செய்து வந்த மார்ட்டன், நேல் காப்டைன் தம்பதியர் 13 வருடங்கள் எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார்கள்! சகோதரி நேல் வியாதியில் படுத்த படுக்கையாகிவிட்டபோது அவர் இறக்கும்வரை மூன்று மாதங்களுக்கு நான் பக்கத்திலேயே இருந்து அவரைக் கவனித்துக்கொண்டேன். அந்தத் தம்பதியரோடும் சபையிலுள்ள அன்பான சகோதர சகோதரிகளோடும் நெருங்கிப் பழகியது, நாம் இப்போது அனுபவிக்கும் ஆன்மீகப் பூஞ்சோலையில் மன ரம்மியமாய் இருக்க எனக்கு உதவியிருக்கிறது.
1995-ல் ராவன்ஸ்புரூக்கில் நடந்த ஒரு நினைவு விழாவிற்கு நான் அழைக்கப்பட்டேன்; அது என் வாழ்க்கையில் குதூகலத்தை அளித்த ஒரு சம்பவம். என்னுடன் முகாமிலிருந்த சகோதரிகளை அங்கு சந்தித்தேன்; அவர்களைப் பார்த்து 50 வருடங்களுக்கும் மேலாகியிருந்தது! அவர்களோடு இருந்தது நெஞ்சை விட்டு நீங்காத ஓர் அனுபவம், நெஞ்சை நெகிழ வைத்த ஓர் அனுபவம்; அதோடு, இறந்துபோன அன்பானவர்களுடன் மீண்டும் இணையப்போகும் நாளுக்காகக் காத்திருக்க ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு அது நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.
‘வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறுவோம்’ என்று ரோமர் 15:4-ல் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். அந்த நம்பிக்கையைக் கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; துன்பத்திலும் யெகோவாவின் சேவையில் இன்பம் காண அது எனக்கு உதவியிருக்கிறது.
[அடிக்குறிப்பு]
a அந்தச் சமயத்தில் தலைமை அலுவலகத்துடன் சகோதரர்கள் எந்தத் தொடர்பும் வைக்க முடியாதிருந்ததால், நடுநிலை வகிப்பது சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் கையாண்டார்கள். அதனால்தான், முகாமிலிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொண்டார்கள்.
[பக்கம் 10-ன் படம்]
1930-ல் யாப்புடன்
[பக்கம் 10-ன் படம்]
ஏழு வயதில் எங்கள் மகள் விள்ளி
[பக்கம் 12-ன் படம்]
1955-ல் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். முதல் வரிசையில் இடப்பக்கத்தில் இரண்டாவதாக நான்