‘அருமையான கண்காணி, அன்பான நண்பர்’
ஜான் (ஜாக்) பார். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரான இவர் டிசம்பர் 4, 2010, சனிக்கிழமை காலை தன் பூமிக்குரிய வாழ்வை முடித்தார். அவருக்கு வயது 97. “அருமையான கண்காணி” என்றும் “அன்பான நண்பர்” என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
சகோதரர் பார் ஸ்காட்லாந்திலுள்ள அபர்டீனில் பிறந்தார்; இவருடைய தாய் தந்தை இருவருமே பரலோக நம்பிக்கை உள்ளவர்கள்; அவர்களுடைய மூன்று பிள்ளைகளில் இவர்தான் கடைசியானவர். சகோதரர் பார் தன் இளவயது நாட்களைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசுவார்; அவருடைய அன்புக்குரிய அம்மாவும் அப்பாவும் வைத்த அருமையான முன்மாதிரிக்காக நன்றியுள்ளவராக இருந்தார்.
டீன் பருவத்தில் அவர் முன்பின் தெரியாதவர்களிடம் பேச மிகவும் கூச்சப்பட்டார். என்றாலும், பெரும் பாடு பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டார்; 1927-ல் அவருக்கு 14 வயதானபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் தன் அப்பாவிடம் சென்று, அவரோடு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். அதுதான் ஆரம்பம். அன்றுமுதல் அவரது மரணம்வரை, அவர் நற்செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் அறிவித்து வந்தார்.
அவரது பாசத்திற்குரிய அம்மா திடீரெனப் பெரும் விபத்துக்குள்ளாகி சாகும் நிலைக்கு வந்தபோது, அவர் வாழ்க்கையின் நோக்கத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்; 1929-ல் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்தார்; அதன்பின்பு, அதற்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெற 1934-ல் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1939-ல் இங்கிலாந்து, லண்டனிலுள்ள பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார். அதுமுதல் 71 ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டார்.
அக்டோபர் 29, 1960-ல், மில்ட்ரெட் விலட் என்ற சகோதரியை அவர் மணந்தார்; அந்தச் சகோதரி வெகு காலமாக பயனியராகவும் மிஷனரியாகவும் பக்திவைராக்கியத்துடன் ஊழியம் செய்து வந்திருந்தார். அவர் தனக்குக் கிடைத்த “அருமையான ஜோடி” என சகோதரர் பார் சொல்வார். இருவரும் இணைபிரியாத, ஆதர்ச தம்பதியாக விளங்கினார்கள்; அக்டோபர், 2004-ல் மில்ட்ரெட் தன் பூமிக்குரிய வாழ்வை முடிக்கும்வரை இருவரும் அவ்வாறே இருந்தார்கள். திருமணமானதுமுதல் ஒவ்வொரு நாளும் இருவரும் சேர்ந்து பைபிளை வாசித்து வந்திருந்தார்கள்.
சகோதரர் பாரோடு பழகியவர்களுக்கு அவருடைய பெயரைக் கேட்டதுமே நினைவுக்கு வருவது, அவரது கருத்துள்ள அறிவுரைகள்தான்; அவை எப்போதுமே சமநிலையானதாக, அன்பு கலந்ததாக, பைபிள் சார்ந்ததாக இருந்தன. அவர் கடின உழைப்பாளியாகவும் அன்பும் கரிசனையும் உள்ள கண்காணியாகவும் உண்மைத் தோழராகவும் விளங்கினார். அவர் சொன்ன குறிப்புகள், கொடுத்த பேச்சுகள், செய்த ஜெபங்கள் அனைத்துமே அவருக்கு எந்தளவு ஆன்மீக உணர்வு இருந்ததெனக் காட்டின; அவர் யெகோவாவுடன் எந்தளவு நெருக்கமாக இருந்தார் எனவும் காட்டின.
சகோதரர் பாரின் மரணம் நமக்குப் பெரும் இழப்பாக இருக்கிறபோதிலும், அவர் சாவாமை என்ற பரிசைப் பெற்றிருப்பதால் அவரோடு சேர்ந்து மகிழ்ச்சியடைகிறோம்; அந்தப் பரிசைப் பெற அவர் ஆவலோடு காத்திருந்தார், அதைப் பற்றி அடிக்கடி பேசியிருந்தார். அதைப் பெறுவதே அவரது குறிக்கோளாக இருந்தது.—1 கொ. 15:53, 54.a
[அடிக்குறிப்பு]
a ஜான் ஈ. பார் சொன்ன சுயசரிதையை, ஜூலை 1, 1987 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 26-31-ல் பாருங்கள்.