கிலியட் பட்டதாரிகள் ‘கொடுப்பதில் அதிக மகிழ்ச்சியை’ காண்கிறார்கள்
ஞயிற்றுக்கிழமை, மார்ச் 6, 1994 அன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தின் பெத்தேல் குடும்பத்தினரும் விருந்தினரும் ஒரு சந்தோஷகரமான நிகழ்ச்சிக்காக—உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 96-வது வகுப்பின் பட்டமளிப்பிற்கு கூடிவந்தனர். யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழுவில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக சேவித்துவருகிற நிகழ்ச்சிநிரல் அக்கிராசனர் கார்ல் F. க்ளைன் தன்னுடைய அறிமுக குறிப்புகளில், அந்த 46 மாணவர்களிடம் கூறினார்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதில் அதிக மகிழ்ச்சி இருக்கிறது என்று இயேசு சொன்னார். அவ்வாறே உங்களுடைய மிஷனரி நியமிப்பிலும் இருக்கும்—நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 20:35.
பிரிவுபசார அறிவுரைகள்
மாணவர்களுக்காகப் பேச்சுக்கள் தொடர்ந்தன. ஊழிய இலாகா குழுவின் ஓர் அங்கத்தினரான லீயான் வீவர், “சகிப்புத்தன்மை யெகோவாவை மகிமைப்படுத்துகிறது” என்ற பொருளின்பேரில் பேசினார். நாம் எல்லாருமே சோதனைகளை எதிர்ப்படுகிறோம். (2 கொரிந்தியர் 6:3-5) “நாம் அழுத்தத்தின்கீழ் இருக்கையில், நம்மைநாமே சார்ந்திருப்பது மிகவும் எளிது,” என்று குறிப்பிட்டார் சகோதரர் வீவர். என்றபோதிலும், அவர் இவ்வாறு மாணவர்களுக்கு நினைவுபடுத்தினார்: “மனிதருக்கு ஏற்படும் சோதனைகள் என்ற முறையில் நீங்கள் எதை எதிர்ப்படவேண்டியதாக இருந்தாலும், யெகோவாவுக்கு அதில் அக்கறை இருக்கிறது. உங்களால் தாங்கிக்கொள்ள முடிவதற்கு அதிகமாக நீங்கள் சோதிக்கப்படும்படி அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.”—1 கொரிந்தியர் 10:13.
“எப்போதும் உங்கள் வேலை நியமிப்பைப் போற்றுங்கள்” என்பதே நிர்வாகக் குழுவைச் சேர்ந்த லைமன் ஸ்விங்கிளால் கொடுக்கப்பட்ட அடுத்த பேச்சின் தலைப்பாகும். இஸ்ரவேலர் எப்போதுமே தாங்கள் எங்கு வாழ்வார்கள், என்ன செய்வார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஒவ்வொரு கோத்திரத்திற்கும் தேசத்தின் ஒரு பகுதி பிரித்துக்கொடுக்கப்பட்டது; மேலும் லேவியர்கள் செய்வதற்கென்று குறிப்பிட்ட வேலைகள் நியமிக்கப்பட்டன. அதேவிதமாகவே, இன்று விசேஷித்த முழுநேர ஊழியத்தில் இருக்கும் அநேகர்—மிஷனரிகள், பெத்தேல் குடும்ப அங்கத்தினர் போன்றவர்கள்—தாங்கள் எங்கு வாழ்வார்கள், என்ன வேலையைச் செய்வார்கள் என்று தாங்களாகவே தீர்மானிப்பதில்லை. ஒருவர் தன்னுடைய நியமிப்பைக்குறித்து நிச்சயமற்ற உணர்ச்சிகளை அனுபவித்தால் என்ன செய்யலாம்? “நம் விசுவாசத்தின் பிரதான ஏதுவாகிய இயேசுவை கூர்ந்து நோக்கி, அவருடைய முன்மாதிரியை நெருங்க கவனித்தால், நீங்கள் சோர்ந்துவிடமாட்டீர்கள்,” என்று சகோதரர் ஸ்விங்கிள் சொன்னார்.—எபிரெயர் 12:1-3, NW.
அதைத் தொடர்ந்து உவாட்ச்டவர் பண்ணைகள் குழுவைச் சேர்ந்த லெனார்ட் பியர்ஸன், “ஒருமுகப்படுத்தப்பட்டவர்களாய் நிலைத்திருங்கள்” என்ற பொருளைப்பற்றி பேசினார். அவர் சொன்னார்: “உங்களிடம் மிகச் சிறந்த காமரா இருக்கலாம், மிக அழகிய காட்சியும், ஒரு சிறந்த பின்னணியும் இருக்கலாம்; இருந்தும் உங்கள் காமரா ஒருமுகப்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஒரு மோசமான படமே கிடைக்கும்.” ஓர் அகல-கோண விழி ஆடியைப் போல, நம்முடைய காட்சி, செய்யப்பட்டு வருகிற உலகளாவிய பிரசங்கவேலையை உட்படுத்தவேண்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கும் காட்சியை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. “தங்கள்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துபவர்கள் தங்களுடைய நியமிப்புகளில் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள்,” என்று சகோதரர் பியர்ஸன் சொன்னார். “யெகோவாவின்மேலும் அவர் தங்களுக்குச் செய்யும்படி கொடுத்திருக்கிற வேலையின்மேலும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறவர்கள் வெற்றியடைவார்கள்.”
“நன்றியுள்ளவர்களாய் இருப்பதற்கு எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன” என்பது அடுத்த பேச்சின் தலைப்பு; இது நிர்வாகக் குழுவைச் சேர்ந்த இன்னொரு அங்கத்தினராகிய ஜான் E. பாரால் கொடுக்கப்பட்டது. “யெகோவாவுக்கான உங்கள் நன்றியுணர்வை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள். உங்களுடைய வேலை என்னவாக இருந்தாலும், மனநிறைவுக்கான மிகப் பெரிய ஊற்றுமூலங்களில் ஒன்று அதுவே” என்று சகோதரர் பார் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். ஒரு நன்றியுள்ள மனநிலை, பின்வருமாறு எழுதும்படி தாவீதை உந்துவித்தது: “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.” (சங்கீதம் 16:6) “உங்களுடைய தினசரி வாழ்க்கையில் யெகோவாவிடம் நெருக்கமாக உணர்வதில் நீங்கள் அவ்வளவு பொக்கிஷமான உடைமையை கொண்டிருக்கிறீர்கள், அதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்குமளவிற்கு அதை மிகவும் ஏற்கத்தக்கதாகக் கருதி அதற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் வரையாக, யெகோவா அந்த உறவை உங்களிடமிருந்து ஒருபோதும் எடுத்துவிடமாட்டார்” என்று சகோதரர் பார் சொன்னார்.
கிலியட் போதனையாளர் ஜாக் ரெட்ஃபர்ட், “உங்களுடைய நாக்கை எப்படி பயன்படுத்துவீர்கள்?” என்ற பொருளின்பேரில் அடுத்ததாகப் பேசவிருந்தார். யோசனையற்ற பேச்சு எவ்வளவு அழிவை ஏற்படுத்தலாம்! (நீதிமொழிகள் 18:21) நாக்கை எப்படிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்? “நீங்கள் முதலில் உங்கள் மனதைப் பயிற்றுவிக்கவேண்டும், ஏனென்றால், நாக்கு மனதையும் இருதயத்தையும் பிரதிபலிக்கிறது,” என்று சகோதரர் ரெட்ஃபர்ட் பதிலளித்தார். (மத்தேயு 12:34-37) இயேசு மிகச் சிறந்த முன்மாதிரி வைத்தார்; அவர் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்காக தம் நாக்கைப் பயன்படுத்தினார். “இன்று யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்பதற்கான பஞ்சம் இருக்கிறது,” என்று சகோதரர் ரெட்ஃபர்ட் அந்த வகுப்பாரிடம் கூறினார். “உங்களுக்கு அந்த வார்த்தைகள் தெரியும். உங்களுக்கு ‘போதிக்கப்பட்டவர்களின் நாக்கு’ இருக்கிறது. ஆகவே உங்களுடைய நாக்கு எப்போதுமே யெகோவாவுக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு மனதாலும் ஒரு இருதயத்தாலும் வழிநடத்தப்பட்டிருப்பதாக.”—ஏசாயா 50:4, NW.
“யெகோவாவின் முன்னிலையில் இருப்பதுபோல் நீங்கள் நடக்கிறீர்களா?” என்ற பேச்சில் ஜெபத்தின் முக்கியத்துவம் அழுத்திக் கூறப்பட்டது. பள்ளியின் பதிவாளர் யுலிஸிஸ் க்ளாஸ் குறிப்பிட்டார்: “ஒரு தகப்பன் தன் குடும்பத்தை ஆதரிப்பதற்காக கடினமாக உழைத்து, ஆனால் அவர்களிடம் ஒருபோதும் பேசாமலும், அன்பான உணர்வுகளைப்பற்றி சொல்லாமலும் இருந்தால், அவருடைய உள்நோக்கம் அன்பு என்பதற்கு மாறாக இன்பமற்ற கடமை என்பதாகவே அவருடைய குடும்பத்தினர் நன்றாகவே முடிவு செய்யக்கூடும். அவ்வாறே நம்மைப் பொருத்தமட்டிலும் இருக்கிறது. நாம் கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்பாக இருக்கக்கூடும். ஆனால் நாம் ஜெபிக்காவிட்டால், நாம் ஓர் அன்பான பரலோக தகப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு மாறாக வெறுமனே ஒரு வேலைக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருப்போம்.”
“ஏன் திரளானோர் கடவுளுடைய மக்களுடன் கூட்டுறவு கொள்கின்றனர்,” என்ற பொருளின்பேரில் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த தீயடோர் ஜரஸ் பேசினார். ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் யெகோவாவின் அமைப்பிற்குள் திரண்டு வருகின்றனர். (சகரியா 8:23) யெகோவாவின் சாட்சிகளைக் கடவுளுடைய மக்களாக அடையாளங்காட்டுவது எது? முதலாவதாக, அவர்கள் முழு பைபிளையும் கடவுளுடைய வார்த்தையாக ஏற்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:16) இரண்டாவதாக, அவர்கள் அரசியலில் நடுநிலைமை வகிக்கிறார்கள். (யோவான் 17:16) மூன்றாவதாக, அவர்கள் கடவுளுடைய நாமத்திற்குச் சாட்சி பகருகிறார்கள். (யோவான் 17:26) நான்காவதாக, அவர்கள் சுயதியாக அன்பை வெளிக்காட்டுகிறார்கள். (யோவான் 13:35; 15:13) இந்த நற்சான்றுகளுடன் நாம் தைரியமாக ‘நம்மை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கலாம்.’—1 பேதுரு 2:9.
இந்தக் கிளர்ச்சியூட்டும் பேச்சுக்களுக்குப்பின், எல்லா 46 மாணவர்களும் பட்டங்களைப் பெற்றனர். அவர்கள் உலகைச் சுற்றி 16 தேசங்களுக்குச் செல்லும்படி நியமினம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
பல்வகையான பிற்பகல் நிகழ்ச்சிநிரல்
பிற்பகல், பெத்தேல் குழுவைச் சேர்ந்த டானல்ட் க்ரெப்ஸால் ஒரு சுருக்கமான காவற்கோபுர படிப்பு நடத்தப்பட்டது. பின்னர், “ஞானமானது பெருஞ்சத்தமாய் வீதியிலே நின்று கூப்பிடுகிறது,” என்ற தலைப்பை உடைய ஒரு நிகழ்ச்சியை அந்தப் பட்டதாரிகள் அளித்தனர். (நீதிமொழிகள் 1:20, NW) தெருவிலும் வியாபார பகுதிகளிலும் சாட்சிகொடுத்தலில் தங்களுக்குக் கிடைத்த பலன்தரும் அனுபவங்களை அவர்கள் மறுபடியும் நடித்துக் காண்பித்தனர். உண்மையில், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு தைரியத்தை வரவழைத்துக்கொள்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். “அறுவடை செய்யும் தூதர்களின் கைகளிலுள்ள அரிவாள்களாக நம்மை நினைத்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று ஒரு பட்டதாரி சொன்னார். “நம்முடைய திறமைகள் எவ்வளவு கூர்மையானவையாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமான வேலையை அந்தத் தூதர்கள் நம்மைவைத்துச் செய்யமுடியும்.” (வெளிப்படுத்துதல் 14:6-ஐ ஒப்பிடுங்கள்.) இந்த மாணவர் நிகழ்ச்சி ஒரு ஸ்லைடு படக்காட்சியையும் உட்படுத்தியது; இந்த வகுப்பைச் சேர்ந்த பட்டதாரிகள் அனுப்பப்பட்டிருக்கும் தேசங்களில் மூன்றாகிய பொலிவியா, மால்டா, தைவான் ஆகிய இடங்களுக்கு ஒரு கல்விபுகட்டும் சுற்றுலாவிற்கு அக்காட்சி வந்திருந்தோரைக் கொண்டுசென்றது.
அடுத்ததாக, 17 வருடங்கள் மிஷனரிகளாக இருந்த வாலஸ் மற்றும் ஜேன் லிவரன்ஸ் பேட்டிகாணப்பட்டனர். அக்டோபர் 1993-ல் அவர்கள் உவாட்ச்டவர் பண்ணைகளுக்கு அழைக்கப்பட்டனர்; சகோதரர் லிவரன்ஸ் இப்போது கிலியட் போதனையாளர்களில் ஒருவராக அங்கு பணிபுரிகிறார்.
“தகுதி உள்ளவர்களை அவர்களுடைய வயதான வருடங்களில் கனம்பண்ணுதல்” என்ற தலைப்பை உடைய ஒரு நான்கு-காட்சி அளிப்பு தொடர்ந்தது. மக்கள் வயதாகையில், பயனற்றவர்களாகி, கைவிடப்படுவார்கள் என்ற பயம் அவர்களுடைய தன்னம்பிக்கையை அரிக்கக்கூடும். (சங்கீதம் 71:9) சபையிலுள்ள எல்லாரும் அப்படிப்பட்ட உண்மையான வயதானோரை எப்படி ஆதரிக்கலாம் என்பதை இந்த உருக்கமான அளிப்பு காண்பித்தது.
முடிவான பாட்டிற்கும் ஜெபத்திற்கும் பின், ஜெர்ஸி நகர அசெம்பிளி மன்றத்திலும் மற்ற துணை மன்றங்களிலும் கூடிவந்திருந்த மொத்தமான 6,220 பேரும் புத்துணர்ச்சி அளிக்கப்பட்டவர்களாய் உணர்ந்தனர். தங்களுடைய புதிய நியமனங்களில் இந்தப் பட்டதாரிகள் நிலைக்க எங்கள் ஜெபங்கள் தொடர்ந்திருக்கின்றன. அவர்கள் கொடுப்பதினால் வரும் அதிக மகிழ்ச்சியை தொடர்ந்து அனுபவிப்பார்களாக.
[பக்கம் 26-ன் பெட்டி]
வகுப்புப் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 9
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 16
மாணவர்களின் எண்ணிக்கை: 46
சராசரி வயது: 33.85
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 16.6
முழுநேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 12.2
[பக்கம் 27-ன் பெட்டி]
மால்டாவின்மீது விசேஷ கவனம்
கிறிஸ்தவமண்டலம் மால்டாவில் பல வருடங்களுக்கு பைபிள் சத்தியம் பேசப்படாதபடி அடக்கிவைத்தது. 1947-ல் எட்டாவது வகுப்பில் பட்டம்பெற்ற ஃபிரெட்ரிக் ஸ்மெட்லியும் பீட்டர் ப்ரைடிலுமே அங்கு கடைசியாக அனுப்பப்பட்ட கிலியட் மிஷனரிகள் ஆவர். என்றாலும், அவர்கள் சென்றடைந்து கொஞ்ச காலத்திலேயே கைதுசெய்யப்பட்டு, மால்டாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1948-ன் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (1948 Yearbook of Jehovah’s Witnesses) இவ்வாறு அறிக்கைசெய்கிறது: “இந்த இரு மிஷனரிகளும் ரோமன் கத்தோலிக்க படிநிலை அமைப்பின் காரணமாகவே, தங்களுடைய ஊழிய வேலைகளைச் செய்வதில் செலவிட்ட அளவு நேரத்தை நீதிமன்றங்களிலும் தேசத்து அதிகாரிகளுடனும் செலவிட்டிருக்கின்றனர். மால்டா கத்தோலிக்கர்களுக்கு உரியது என்றும் மற்ற எவரும் வெளியேற வேண்டும் என்றும் அந்தப் பாதிரிமார் சொல்கின்றனர்.” இப்போது, சுமார் 45 வருடங்களுக்குப் பின், கிலியடின் 96-வது வகுப்பிலிருந்து நான்கு மிஷனரிகள் மால்டாவிற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
[பக்கம் 26-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் பட்டம் பெறும் 96-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) ஏலர்ஸ், P.; கீஸி, M.; ஸெல்மன், S.; சூஸ்பெரெகீ, J.; ரோ, S.; ஜாக்ஸன், K.; ஸ்காட், T. (2) லியர், T.; கார்ஸீயா, I.; கார்ஸீயா, J.; ஃபெர்னாண்டெஸ், A.; டேவட்ஸன், L.; லீடமன், P.; கிப்ஸன், L.; ஹுவரஸ், C. (3) ஃபவுட்ஸ், C.; பாஸ்ட்ரானா, G.; க்ளாஸன், D.; ஃபெர்னாண்டெஸ், L.; வால்ஸ், M.; ட்ரெஸன், M.; பாஸ்ட்ரானா, F.; பர்க்ஸ், J. (4) பர்க்ஸ், D.; ஸ்காட், S.; ஜாக்ஸன், M.; மாரி, H.; ஹுவரஸ், L.; சூஸ்பெரெகீ, A.; ப்ரூஷான், C.; ரோ, C. (5) ஸெல்மன், K.; லீடமன், P.; டேவட்ஸன், C.; மாரி, S.; வால்ஸ், D.; ட்ரெஸன், D.; ஸ்காஃப்ஸ்மா, G.; லியர், S. (6) க்ளாஸன், T.; கிப்ஸன், T.; கீஸி, C.; ஏலர்ஸ், D.; ஃபவுட்ஸ், R.; ஸ்காஃப்ஸ்மா, S.; ப்ரூஷான், L.