“முடியவே முடியாது!” என்று ஏதாவது உண்டா?
டைட்டானிக். பிரம்மாண்டமான, சகல வசதிகளும் கொண்ட இந்தக் கடல் வாகனம் அன்றைய கப்பல்களிலேயே அதி நவீனமானது. அது “மூழ்கவே மூழ்காது” என எல்லாரும் நினைத்தார்கள். ஆனால், ஒரு சரித்திரத்தையே உருவாக்கியது. 1912-ல் சுமார் 1,500 பேருடன் முதல்முறையாக தண்ணீரில் அடி எடுத்து வைத்தது. வடக்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்தபோது பனிப்பாறைமேல் மோதி தடம்புரண்டது. மூழ்கவே மூழ்காது என்று நினைத்த கப்பல் சில மணிநேரத்திலேயே கடலின் ஆழத்தில் மறைந்தது.
நிறைய விஷயங்களை “முடியவே முடியாது” என்று நாம் சொல்வதுண்டு. சமாளிக்க முடியாத, சாதிக்க முடியாத அல்லது புரிந்துகொள்ள முடியாத விஷயத்தை அப்படிச் சொல்வோம். இன்றைய தொழில்நுட்பம் சாதித்திருக்கிற நிறைய காரியங்கள், ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று மக்கள் நினைத்தவைதான். ஏனென்றால், அப்போது அவை மனித திறமைக்கும், யோசனைக்கும்கூட அப்பாற்பட்டதாய் இருந்தன. நிலாவில் கால்பதிக்க... செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்ப... பூமியில் இருந்தபடி அதை இயக்க... டிஎன்ஏ-வை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்க்க... உள்ளூரிலும் வெளியூர்களிலும் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் பார்க்க... முடியவே முடியாது என 50 வருடங்களுக்கு முன்புவரை நினைத்தார்கள். இன்றோ அவை சர்வ சாதாரணமாகி விட்டன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரனால்ட் ரீகன், பல்வேறு அறிவியல் துறைகளைச் சேர்ந்த, முன்னணி வகிக்கும் பெரும்புள்ளிகளிடம் பேசுகையில் இதை அழகாகத் தொகுத்து சொல்கிறார்: “நீங்கள் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள். நேற்று அசாத்தியமாக இருந்தவற்றை இன்று சாத்தியமாக்கி விட்டீர்கள்.”
வியக்க வைக்கும் வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதை மனதில் வைத்து பேராசிரியர் ஜான் ப்ராபக் இப்படிக் குறிப்பிட்டார்: “எந்தவொரு விஞ்ஞானியும் ஒரு விஷயம் நடக்கவே நடக்காது என இனிமேலும் ஆணித்தரமாகச் சொல்ல மாட்டார். மாறாக, நடந்தாலும் நடக்கலாம் என்றே சொல்வார். சாத்தியமற்றது என்று சொன்னாலும், தற்போதைய அறிவின் அடிப்படையில்தான் அப்படிச் சொல்வார்.” ஏதாவது ஒன்று சாத்தியமே இல்லை எனத் தோன்றுவதற்குக் காரணம் “ஆற்றலின் பிறப்பிடத்தைப் பற்றி நமக்குத் தெரியாதிருப்பதே. உயிரியல், உடலியல் பாடங்கள் மூலம் அதைப் பற்றி தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், கடவுளுடைய சக்திதான் ஆற்றலின் பிறப்பிடம் என்று நம் வேதம் சொல்கிறது.”
கடவுளால் முடியாதது எதுவுமில்லை
பேராசிரியர் ப்ராபக் இதைச் சொல்வதற்கு பல காலத்திற்கு முன்பே நாசரேத்தைச் சேர்ந்த மாமனிதர் இயேசு சொன்னார்: “மனிதர்களால் செய்ய முடியாத காரியங்களைக் கடவுளால் செய்ய முடியும்.” (லூக்கா 18:27) கடவுளுடைய சக்திதான் இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் வலிமையான சக்தி. எந்தத் தொழில்நுட்பத்தாலும் இதை அளவிட முடியாது. நம்முடைய பலத்தால் செய்ய முடியாதவற்றைக் கடவுளுடைய சக்தியால் நாம் செய்ய முடியும்.
மனிதர்களான நமக்கு சில சூழ்நிலைகளைச் சமாளிப்பது கடினமாகத் தெரியலாம். உதாரணத்திற்கு, நமக்கு வேண்டிய ஒருவர் இறந்துவிட்டால் அல்லது குடும்பத்தில் பிரச்சினை அத்துமீறி போய்விட்டால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது எனத் தோன்றலாம். நிராதரவாக தவித்து நிற்கலாம். அப்போது என்ன செய்வது?
சர்வவல்ல கடவுள்மீது விசுவாசம் வைத்து, அவருடைய சக்திக்காக ஜெபிக்க வேண்டும். அதோடு, அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், மலைபோல் தோன்றும் தடைகளையும் தாண்ட உதவி கிடைக்கும். இயேசு சொன்ன தெம்பளிக்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எவனாவது இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய் கடலுக்குள் விழு’ என்று சொல்லி, அது நடக்குமென்று சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே நடக்கும்.” (மாற்கு 11:23) ஆம், கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றினால்... அவருடைய சக்தியின் உதவியை நாடினால்... சமாளிக்கவே முடியாதென தோன்றும் சூழ்நிலையையும் சமாளிக்க முடியும் அல்லது தாங்கிக்கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு, திருமணமாகி 38 வருடங்கள் ஆகியிருந்த ஒருவர் புற்று நோயில் தன் மனைவியைப் பறிகொடுத்தார். அப்படியே இடிந்துபோய் விட்டார். தனிமையில் வாழவே முடியாது என நினைத்தார். சில சமயங்களில் செத்துவிட அவர் மனம் துடித்தது. ‘மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடப்பதுபோல்’ உணர்ந்தார். (சங்கீதம் 23:4) அதுபோன்ற சமயங்களில் கண்ணீர்விட்டு ஜெபித்தார், தினமும் பைபிள் வாசித்தார், அடிக்கடி கடவுளுடைய சக்திக்காக வேண்டினார். தனிமையைச் சமாளிக்கவே முடியாது என்ற எண்ணத்தை நீக்க இவையே கைகொடுத்தன என்று அவர் உறுதியாகச் சொல்கிறார்.
ஒரு தம்பதியருடைய மணவாழ்க்கை முறியும் நிலையில் இருந்தது. அந்தக் கணவர் சரியான முரடன். அவருக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்தன. அவரோடு வாழவே முடியாது என மனைவி நினைத்தார். தற்கொலைக்கு முயன்றார். பிற்பாடு, அந்தக் கணவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். படிக்க படிக்க கெட்ட பழக்கங்களையும் மூர்க்க குணத்தையும் விரட்டியடித்தார். நம்பவே முடியாதளவுக்கு மாற்றங்கள் செய்ததைப் பார்த்து அவருடைய மனைவி மலைத்துப்போனார்.
போதைப்பொருள்களுக்கும் ஒழுக்கக்கேட்டுக்கும் அடிமையாயிருந்த மற்றொருவர், அந்தப் பழக்கங்களிலிருந்து தன்னால் மீளவே முடியாது என நினைத்து கவலைப்பட்டார். “மதிப்பு மரியாதை எல்லாம் போயிடுச்சி” என்று சொல்கிறார். “கடவுளே... நீங்க எங்கேயோ இருக்கீங்கன்னு தெரியும். தயவுசெய்து எனக்கு உதவுங்க!” என்று சொல்லி உருக்கமாக ஜெபம் செய்தார். அவருடைய ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தார். நம்பவே முடியாதளவுக்கு மாற்றங்களைச் செய்தார். “அடிக்கடி குற்றவுணர்வு என் மனசை வாட்டும், நான் எதுக்கும் லாயக்கில்லாதவன்னு நெனப்பேன். சில நேரத்துல ரொம்ப சோர்ந்து போயிடுவேன். இருந்தாலும், மனசை அலைக்கழிக்கிற எண்ணங்கள விரட்டியடிக்க பைபிள் எனக்கு உதவியிருக்கு. ராத்திரி தூக்கமில்லாம படுத்திருக்கும்போது பைபிள் வசனங்கள மனசுகுள்ள சொல்லுவேன். என் மனச சுத்தப்படுத்துறதுக்கு இதுதான் ரொம்ப உதவியா இருக்கு.” இப்போது அவர் கல்யாணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். கடவுளுடைய வார்த்தைக்கு எந்தளவு சக்தி இருக்கிறது என்பதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அவரும் அவருடைய மனைவியும் மும்முரமாக உதவுகிறார்கள். தன்னுடைய மோசமான வாழ்க்கை இந்தளவுக்கு மாறுமென்று இவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது, நம் வாழ்க்கையில் சாதிக்க முடியாத காரியங்களை எல்லாம் அவருடைய சக்தியால் சாதிக்க முடியும் என்பதை இந்த அனுபவங்கள் காட்டுகின்றன. “அதுக்கெல்லாம் விசுவாசம் வேணும்” என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். உண்மைதான், “விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது” என்று பைபிளும் சொல்கிறது. (எபிரெயர் 11:6) இப்படி யோசித்துப் பாருங்கள்: உங்களுக்கு ஒரு நல்ல நண்பர் இருக்கிறார், அவர் ஒருவேளை பேங்க் மேனேஜராக அல்லது பெரிய உத்தியோகத்தில் இருக்கலாம். அவர் உங்களிடம், “நீ எதுக்கும் கவலைப்படாதே. என்ன தேவைப்பட்டாலும் என்கிட்ட வா” என்று சொல்கிறார். அவர் கொடுத்த வாக்கு உங்களுடைய மனதுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கும்! ஒருவேளை எதிர்பாராத விதமாக நண்பரின் சூழ்நிலை மாறினால் சொன்னபடி அவரால் செய்ய முடியாது. அவர் இறந்துவிட்டாலோ எல்லாம் அத்தோடு முடிந்துவிடும். மனிதர்களைப் போல் கடவுளுடைய சூழ்நிலை எதிர்பாராத விதமாக மாறாது. “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—லூக்கா 1:37, பொது மொழிபெயர்ப்பு.
“இதை நம்புகிறாயா?”
கடவுளால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு எக்கச்சக்கமான சான்றுகள் உள்ளன. சிலவற்றைக் கவனியுங்கள்.
சாராள் என்ற 90 வயது மூதாட்டிக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று சொல்லப்பட்டபோது அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால், அது உண்மையில் நடந்தது. அவருடைய சந்ததியார்தான் இஸ்ரவேலர். யோனா என்பவரை பெரிய மீன் ஒன்று விழுங்கிவிட்டது, மூன்று நாட்கள் அதன் வயிற்றில் உயிரோடு இருந்தார். அந்தச் சம்பவத்தை அவரே எழுதினார். ஐத்திகு என்ற இளைஞன், வீட்டு மாடியின் ஜன்னலிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டான். அவன் உயித்தெழுப்பப்பட்டதைப் பற்றி லூக்கா பதிவு செய்தார். அவர் ஒரு மருத்துவராக இருந்ததால் அந்த இளைஞன் வெறுமனே மயக்கமடையவில்லை, இறந்துவிட்டான் என்பதைத் திட்டவட்டமாக குறிப்பிட்டார். இவையெல்லாம் கட்டுக்கதை அல்ல. கவனமாக ஆராய்ந்து படித்தால் நிஜம் என்பது புலப்படும்.—ஆதியாகமம் 18:10-14; 21:1, 2; யோனா 1:17; 2:1, 10; அப்போஸ்தலர் 20:9-12.
இயேசு தன்னுடைய சிநேகிதி மார்த்தாளிடம் வியக்க வைக்கும் இந்தக் குறிப்பைச் சொன்னார்: ‘உயிரோடிருந்து என்மீது விசுவாசம் வைக்கிற எவனும் இறந்துபோகாமல் இருப்பான்.’ நம்ப முடியாததாகத் தோன்றும் இந்த வாக்கைக் கொடுத்த பின், “இதை நம்புகிறாயா?” என்ற சிந்திக்க வைக்கும் கேள்வியையும் கேட்டார். நாமும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கேள்வி இது.—யோவான் 11:26.
பூமியில் முடிவில்லா வாழ்வு—சாத்தியமா?
நீண்ட ஆயுளைப் பற்றி ஆய்வு செய்த இருவர் இவ்வாறு எழுதினார்கள்: “இன்றைய வாழ்க்கையைவிட நீண்ட கால வாழ்க்கை, அதுவும் முடிவில்லா வாழ்க்கை, தூரமில்லை.” வயதாகி மரிப்பதற்குக் காரணம் செல்கள் செயலிழப்பதோ, உடல் வலுவிழப்பதோ, அல்லது உடலின் வேறு செயல்பாடுகளோ அல்ல, கண்டறியப்படாத வேறொரு காரணத்தினால்தான் உடல் செயல்படாமல் சட்டென ஸ்தம்பித்துவிடுகிறது என த நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா விளக்கமளிக்கிறது. a
அறிவியல்பூர்வமான இந்தக் காரணங்கள் நம் ஆர்வத்தைத் தூண்டலாம். ஆனால், முடிவில்லா வாழ்வு சாத்தியம் என்பதை நம்புவதற்கு வலுவான காரணத்தை பைபிள் தருகிறது. உயிரின் ஊற்றுமூலரான நம் படைப்பாளர் யெகோவா தேவன், ‘மரணத்தை ஜெயமாக விழுங்க’ போவதாக வாக்கு கொடுக்கிறார். (சங்கீதம் 36:9; ஏசாயா 25:8) இதை நீங்கள் நம்புகிறீர்களா? இது யெகோவாவின் வாக்கு. அவரால் பொய் சொல்ல முடியவே முடியாது.—தீத்து 1:2, 3. (w12-E 06/01)
[அடிக்குறிப்பு]
a முதுமை மற்றும் ஆயுள்காலம் பற்றி இன்னும் நன்கு தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட மே 2006 விழித்தெழு! இதழில் “பல்லாயிரமாண்டு வாழ...?” என்ற அட்டைப்பட கட்டுரைகளைப் பாருங்கள்.
[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]
“நேற்று அசாத்தியமாக இருந்தவற்றை இன்று சாத்தியமாக்கி விட்டீர்கள்.” —ரனால்ட் ரீகன்
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
இனி வாழ்க்கையை ஓட்ட முடியவே முடியாது என தோன்றினால் யாருடைய உதவியை நாடலாம்?
[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]
NASA photo