“கடவுளால் எல்லாம் முடியும்”
1 உலகெங்கும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதே கிறிஸ்தவ சபையின் முக்கிய வேலை. (மத். 24:14) அது பிரமாண்டமான வேலை. அதை செய்ய நம்மிடம் உள்ளதற்கும் அதிகமான வசதிகள் தேவை என நம்மை கவனிக்கும் பலருக்குத் தோன்றலாம். இன்னும் சிலருக்கோ கேலி, எதிர்ப்பு, துன்புறுத்துதல் மத்தியிலும் இந்த வேலையை நாம் செய்து முடிப்பது நம்ப முடியாததாக தோன்றுகிறது. (மத். 24:9; 2 தீ. 3:12) இந்த வேலை செய்யவே முடியாத ஒன்று என்பதே சந்தேகவாதிகளின் அசைக்க முடியாத எண்ணம். எனினும், “கடவுளால் எல்லாம் முடியும்” என இயேசு சொன்னார்.—மத். 19:26, NW.
2 பின்பற்றுவதற்கு உகந்த முன்மாதிரிகள்: உலகமே எதிர்த்து நின்றபோதிலும் தன்னந்தனியாக இயேசு தம் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் வெற்றி காணாதிருப்பதற்கு முடிந்த அனைத்து விதத்திலும் எதிரிகள் அவரை அவமானப்படுத்தினர், இறுதியில் வேதனைமிக்க மரணத்தை சந்திக்கும்வரை அவரை கொடுமைப்படுத்தினர். எனினும், “நான் உலகத்தை ஜெயித்தேன்” என முடிவில் இயேசு நம்பிக்கையுடன் அறிவித்தார். (யோவா. 16:33) உண்மையிலேயே அற்புத சாதனை!
3 இயேசுவின் சீஷர்களும் அதே போன்ற தைரியமான மனநிலையையும் வைராக்கியத்தையும் கிறிஸ்தவ ஊழியத்தில் காண்பித்தனர். அவர்களில் அநேகர் சவுக்கால் அடிக்கப்பட்டனர், தாக்கப்பட்டனர், சிறையில் தள்ளப்பட்டனர், ஏன் மரணத்தையும் தழுவினர். எனினும் “அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷ”ப்பட்டனர். (அப். 5:41) ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கும் இந்த மலைப்பூட்டும் வேலையை எதிர்ப்புகளின் மத்தியிலும் “பூமியின் கடைசிபரியந்தமும்” அவர்கள் செய்து முடித்தனர்.—அப். 1:8; கொலோ. 1:23.
4 நம் நாளில் வெற்றி காண: சமாளிக்க முடியாததாக தோன்றும் பிரச்சினைகளின் மத்தியிலும் ராஜ்ய பிரசங்க வேலையை நாம் வைராக்கியத்துடன் பிரசங்கிக்கிறோம். தடையுத்தரவுகள், துன்புறுத்துதல், சிறைதண்டனை, நம்மை தடுத்து நிறுத்த செய்யப்படும் வன்முறை தாக்குதல்கள் மத்தியிலும் நாம் வெற்றி காண்கிறோம். இது எப்படி முடிகிறது? “பலத்தினாலுமல்ல, பராக்கிரமத்தினாலுமல்ல, என்னுடைய ஆவியினாலேயே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.” (சக. 4:6, தி.மொ.) யெகோவா நம்மோடிருக்கையில் எதுவும் நம் வேலையை தடுத்து நிறுத்த முடியாது!—ரோ. 8:31.
5 நாம் பிரசங்கிக்கையில் கூச்சமோ, பயமோ, தகுதியற்றவர் என்ற உணர்வோ தேவையில்லை. (2 கொ. 2:16, 17) ராஜ்யத்தின் நற்செய்தியை எங்கும் பிரசங்கிப்பதில் தொடர்ந்து முன்னேற நமக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. “முடியாதவற்றை” யெகோவாவின் உதவியுடன் நாம் செய்து முடிப்போம்!—லூக். 18:27, NW.