தேவராஜ்ய ஊழியப் பள்ளி
நோக்கம்: நற்செய்தியைச் சிறந்த விதத்தில் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் பிரஸ்தாபிகளைப் பயிற்றுவிக்கிறது.
காலப்பகுதி: வாராவாரம்.
இடம்: ராஜ்ய மன்றம்.
தகுதிகள்: கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிற, பைபிள் போதனைகளை ஏற்றுக்கொள்கிற, கிறிஸ்தவ நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: தேவராஜ்ய ஊழியப் பள்ளிக் கண்காணியிடம் மாணவர்கள் தங்களுடைய பெயரைக் கொடுக்க வேண்டும். ஷாரன் நரம்பு மண்டலச் சிதைவு நோயால் (ALS) செயலிழந்துபோயிருக்கிறார். இவர் சொல்கிறார்: “நன்கு ஆராய்ச்சி செய்யவும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசவும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி எனக்கு உதவியிருக்கிறது. அதோடு, என்னுடைய ஆன்மீகப் பசியை மட்டும் தீர்த்துக்கொண்டால் போதாது, மற்றவர்களுடைய ஆன்மீகப் பசியையும் தீர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.”
ஆர்னி நீண்ட காலமாகப் பயணக் கண்காணியாக இருக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “சின்ன வயதிலிருந்தே எனக்குத் திக்குவாய், மற்றவர்களை நேருக்குநேர் பார்த்துப் பேச முடியாமல் இருந்தது. இந்தப் பள்ளியில் சேர்ந்த பிறகுதான் எனக்குத் தன்னம்பிக்கையும் தைரியமும் வந்திருக்கிறது. மூச்சுப் பயிற்சி செய்வதற்கும், கூர்ந்து கவனிப்பதற்கும் இந்தப் பள்ளியின் மூலம் யெகோவா எனக்குக் கற்றுத்தந்திருக்கிறார். சபையிலும் ஊழியத்திலும் யெகோவாவைத் துதிக்க முடிவதற்காக நான் ரொம்பச் சந்தோஷப்படுகிறேன்.”
புதிய பெத்தேல் அங்கத்தினர்களுக்கான பள்ளி
நோக்கம்: பெத்தேலுக்குப் புதிதாக வருபவர்கள் தங்கள் சேவையைச் சிறப்பாகச் செய்ய உதவுகிறது.
காலப்பகுதி: மொத்தம் 16 வாரங்கள். வாராவாரம் 45 நிமிடங்கள்.
இடம்: பெத்தேல்.
தகுதிகள்: பெத்தேலின் நிரந்தர அங்கத்தினராக இருக்க வேண்டும். அல்லது தற்காலிகமாகச் சேவை செய்ய, அதாவது ஒரு வருடத்திற்கோ அதற்கும் அதிகமாகவோ சேவை செய்ய, பெத்தேலுக்கு வந்தவராக இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: புதிய பெத்தேல் அங்கத்தினர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
டாமிட்ரியஸ் 1980-களில் இந்தப் பள்ளியில் கலந்துகொண்டார். இவர் சொல்கிறார்: “படிக்கும் பழக்கத்தில் முன்னேற்றம் செய்யவும், பெத்தேலில் நீண்டகாலம் சேவை செய்யவும் இந்தப் பள்ளி எனக்கு உதவியது. இந்தப் பள்ளியின் போதனையாளர்களையும், இதில் கற்பிக்கப்பட்ட விஷயங்களையும், வழங்கப்பட்ட நடைமுறை ஆலோசனைகளையும் பார்த்தபோது யெகோவா என்மீது எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் பெத்தேலில் சிறப்பாகச் சேவை செய்ய உதவ விரும்புகிறார் என்பதையும் புரிந்துகொண்டேன்.”
கேட்லின் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் வழியில் காரியங்களைச் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர்மீது, அவருடைய வீட்டின் மீது, அவருடைய அமைப்பின் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு மரியாதையை இந்தப் பள்ளி அதிகரித்திருக்கிறது.”
ராஜ்ய ஊழியப் பள்ளி
நோக்கம்: சபை பொறுப்புகளையும் அமைப்பு தரும் பொறுப்புகளையும் சரிவர கையாள பயணக் கண்காணிகளுக்கு, மூப்பர்களுக்கு, சில சமயங்களில் உதவி ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. (அப். 20:28) தற்போதைய சூழ்நிலைகள், தற்காலப் பாணிகள், சபையின் உடனடி தேவைகள் ஆகியவை இந்தப் பள்ளியில் ஆலோசிக்கப்படுகின்றன. ஆளும் குழுவின் வழிநடத்துதலுக்கேற்ப சில வருடங்களுக்கு ஒருமுறை இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது.
காலப்பகுதி: சமீப வருடங்களில், பயணக் கண்காணிகளுக்கு இரண்டு அல்லது இரண்டரை நாட்கள், மூப்பர்களுக்கு ஒன்றரை நாட்கள், உதவி ஊழியர்களுக்கு ஒரு நாள் என இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது.
இடம்: பொதுவாக ராஜ்ய மன்றம் அல்லது மாநாட்டு மன்றம்.
தகுதிகள்: பயணக் கண்காணியாக, மூப்பராக, அல்லது உதவி ஊழியராக இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: மூப்பர்களும் உதவி ஊழியர்களும் வட்டாரக் கண்காணியிடமிருந்து அழைப்பைப் பெறுவார்கள். வட்டாரக் கண்காணிகள் கிளை அலுவலகத்திடமிருந்து அழைப்பைப் பெறுவார்கள். “இந்தப் பள்ளி மிகக் குறுகிய காலத்திற்குள் நிறையத் தகவல்களை வழங்கினாலும், யெகோவாவின் சேவையில் சந்தோஷமாகவும் ‘தைரியமாகவும்’ செயல்பட மூப்பர்களுக்கு உதவுகிறது. புதிய மூப்பர்களுக்கும் சரி நீண்டகால மூப்பர்களுக்கும் சரி, சிறந்த விதத்தில் சபையை வழிநடத்தவும், ‘ஒரே யோசனையுடன்’ இருக்கவும் இந்தப் பள்ளி கற்றுத் தருகிறது.”—க்வின் (கீழே).
“இந்தப் பயிற்சி, பைபிள் போதனைகளை நன்கு புரிந்துகொள்ள உதவி செய்வதோடு, ஆபத்துகளைக் குறித்தும் எச்சரிக்கிறது, நடைமுறை ஆலோசனைகளை அளிக்கிறது. இப்படியெல்லாம் எங்களுக்கு உதவி செய்கிற யெகோவா எவ்வளவு தங்கமானவர்.” —மைக்கெல்.
பயனியர் பயிற்சிப் பள்ளி
நோக்கம்: ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற’ பயனியர்களுக்கு உதவுகிறது.—2 தீ. 4:5.
காலப்பகுதி: இரண்டு வாரம்.
இடம்: கிளை அலுவலகத்தால் தீர்மானிக்கப்படும்; பொதுவாக ராஜ்ய மன்றத்தில் நடைபெறும்.
தகுதிகள்: ஒரு வருடமோ அதற்கு மேலாகவோ ஒழுங்கான பயனியராக இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: தகுதியுள்ள பயனியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதை வட்டாரக் கண்காணி அவர்களுக்குத் தெரிவிப்பார்.
“ஊழியத்தில் மட்டுமல்ல வாழ்க்கையில் நான் எதிர்ப்பட்ட சவால்களைச் சமாளிப்பதற்கும் இந்தப் பள்ளி எனக்கு உதவியிருக்கிறது. நான் படிக்கும் விதம், கற்பிக்கும் விதம், பைபிளைப் பயன்படுத்தும் விதம் என எல்லாமே இப்போது மாறியிருக்கிறது. முன்பைவிட இப்போது என்னால் மற்றவர்களுக்கு நிறைய உதவி செய்ய முடிகிறது, மூப்பர்களோடு ஒத்துழைக்க முடிகிறது, சபையின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடிகிறது” என்கிறார் லில்லி (வலது).
இரண்டு முறை இந்தப் பள்ளியில் கலந்துகொண்ட பிரென்டா சொல்கிறார்: “கடவுளுக்கு முழுமனதோடு சேவை செய்யவும், சரியானதைச் செய்வதில் உறுதியாக இருக்கவும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலையை வளர்த்துக்கொள்ளவும் இந்தப் பள்ளி எனக்குத் துணைபுரிந்திருக்கிறது. உண்மையிலேயே, யெகோவா தாராள குணமுள்ளவர்!”
மூப்பர்களுக்கான பள்ளி
நோக்கம்: சபைப் பொறுப்புகளைச் சரிவரக் கையாளுவதற்கும், யெகோவாவை வணங்குவதில் உட்பட்டுள்ள விஷயங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும் மூப்பர்களுக்கு உதவுகிறது.
காலப்பகுதி: ஐந்து நாட்கள்.
இடம்: கிளை அலுவலகத்தால் தீர்மானிக்கப்படும். பொதுவாக, ராஜ்ய மன்றத்தில் அல்லது மாநாட்டு மன்றத்தில் நடைபெறும்.
தகுதிகள்: மூப்பராக இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: கிளை அலுவலகத்திடமிருந்து மூப்பர்கள் அழைப்பைப் பெறுவார்கள்.
அமெரிக்காவில் 92-வது வகுப்பில் கலந்துகொண்ட சிலருடைய குறிப்புகள்:
“இந்தப் பள்ளியிலிருந்து நான் நிறையப் பயனடைந்திருக்கிறேன். எந்தெந்த விஷயங்களில் நான் முன்னேற்றம் செய்ய வேண்டும், யெகோவாவின் ஆடுகளை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதை இந்தப் பள்ளி எனக்குக் கற்பித்திருக்கிறது.”
“வசனங்களிலுள்ள முக்கியக் குறிப்புகளை வலியுறுத்தி எல்லாருக்கும் உற்சாக ஊற்றாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.”
“எனக்குக் கிடைத்த இந்தப் பயிற்சியைக் காலமெல்லாம் பயன்படுத்தக் காத்திருக்கிறேன்.”
வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கான பள்ளி
நோக்கம்: “பேசுவதிலும் கற்பிப்பதிலும் கடுமையாய் உழைக்கிற” வட்டார, மாவட்டக் கண்காணிகள் தங்கள் சேவையை இன்னும் சிறந்த விதத்தில் செய்ய உதவுகிறது.—1 தீ. 5:17; 1 பே. 5:2, 3.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: கிளை அலுவலகத்தால் தீர்மானிக்கப்படும்.
தகுதிகள்: சகோதரர் வட்டார அல்லது மாவட்டக் கண்காணியாக இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: வட்டாரக் கண்காணிகளும் அவர்கள் மனைவிகளும் கிளை அலுவலகத்திடமிருந்து அழைப்பைப் பெறுவார்கள்.
“யெகோவாவின் அமைப்பை இயேசு அருமையாக வழிநடத்துவதைப் பற்றி அதிகமதிகமாய்த் தெரிந்துகொண்டபோது அவர்மீது எங்கள் மதிப்புமரியாதை பலமடங்கு பெருகியது. சகோதரர்களை உற்சாகப்படுத்துவதும், ஒவ்வொரு சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்துகொண்டோம். ஒரு வட்டாரக் கண்காணி அறிவுரைகளைக் கொடுத்தாலும், சில சமயங்களில் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் அவருடைய முக்கியக் குறிக்கோள்... யெகோவாவின் அன்பைச் சகோதரர்களுக்குப் புரியவைப்பதுதான் என்பதை இந்தப் பள்ளி எங்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வைத்தது.”—ஜோயல், முதல் வகுப்பு, 1999.
மணமாகாத சகோதரர்களுக்கான பள்ளி
நோக்கம்: யெகோவாவின் அமைப்பில் கூடுதலான பொறுப்புகளைக் கையாள மணமாகாத மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது. இந்தப் பள்ளியில் பட்டம் பெறும் அநேகர், தங்கள் நாட்டில் தேவை இருக்கும் இடத்தில் சேவை செய்ய நியமிக்கப்படுவார்கள். இன்னும் சிலர், அவர்களுடைய சூழ்நிலை அனுமதித்தால் வேறு நாடுகளுக்குச் சென்று சேவை செய்ய நியமிக்கப்படுவார்கள்.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: கிளை அலுவலகத்தால் தீர்மானிக்கப்படும். பொதுவாக, ராஜ்ய மன்றத்தில் அல்லது மாநாட்டு மன்றத்தில் நடைபெறும்.
தகுதிகள்: 23-லிருந்து 62-வயதுக்குட்பட்ட மணமாகாத சகோதரர்கள். தேவை அதிகம் உள்ள இடங்களில் சேவை செய்ய மனமுள்ளவர்களாகவும், ஆரோக்கியமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். (மாற். 10:29, 30) குறைந்தது இரண்டு வருடங்களாவது ஒழுங்கான பயனியராகச் சேவை செய்திருக்க வேண்டும். அதோடு, இரண்டு வருடங்களுக்காவது மூப்பராகவோ உதவி ஊழியராகவோ சேவை செய்திருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: இந்தப் பள்ளியில் சேர விரும்புகிறவர்களுக்கான தகவல்களை வழங்க வட்டார மாநாட்டில் ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது.
“இந்தப் பயிற்சியில் முழுமையாக என்னை ஈடுபடுத்தியதால், யெகோவாவுடைய சக்தியின் உதவியோடு என்னால் பெரிய மாற்றங்களைச் செய்ய முடிந்தது” என்று அமெரிக்காவில் நடந்த 23-வது வகுப்பில் கலந்துகொண்ட ரிக் சொல்கிறார். “யெகோவா ஒரு நியமிப்பைக் கொடுக்கும்போது, அதைச் செய்வதற்குத் தேவையான சக்தியையும் கொடுப்பார். என்மீது கவனம் செலுத்தாமல், அவருடைய சித்தத்தைச் செய்வதில் கவனம் செலுத்தினால் அவர் என்னைப் பலப்படுத்துவார் என்பதைப் புரிந்துகொண்டேன்” என்றும் சொல்கிறார்.
“இன்று கடவுளுடைய அமைப்பு செயல்படுகிற விதத்தை ஓர் அற்புதம் என்றுதான் நான் சொல்லுவேன். கடவுளுடைய சேவையில் இன்னும் நிறையச் செய்வதற்கு இந்தப் பயிற்சி என்னைத் தயார்படுத்தியிருக்கிறது. அதோடு, யெகோவாவுக்கும் என் சகோதரர்களுக்கும் சேவை செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது என்ற அடிப்படை உண்மையை அநேக பைபிள் உதாரணங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்” என்கிறார் ஜெர்மனியில் சேவை செய்யும் ஆண்ட்ரேயாஸ்.
கிறிஸ்தவ தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி
நோக்கம்: கிறிஸ்தவ தம்பதிகளை இன்னும் முழுமையாய்ப் பயன்படுத்திக்கொள்ள யெகோவா தம்முடைய அமைப்பின் மூலம் அவர்களுக்கு விசேஷப் பயிற்சி அளிக்கிறார். இந்தப் பள்ளியின் பட்டதாரிகள் தங்கள் நாட்டில் தேவை அதிகம் உள்ள இடங்களில் ஊழியம் செய்ய நியமிக்கப்படுவார்கள். சூழ்நிலை அனுமதித்தால், சிலர் வேறு நாட்டிலும்கூட ஊழியம் செய்ய நியமிக்கப்படலாம். இப்பள்ளியின் பட்டதாரிகள் சிலர், தொலைதூர இடங்களிலும் ஒதுக்குப்புறப் பகுதிகளிலும் ஊழியத்தைத் தொடங்குவதற்கு அல்லது விரிவாக்குவதற்குத் தற்காலிக விசேஷ பயனியர்களாக நியமிக்கப்படலாம்.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: இப்பள்ளி அமெரிக்காவில் நடைபெறுகிறது; செப்டம்பர் 2012 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிளை அலுவலகங்களிலும் நடைபெறும். பொதுவாக ராஜ்ய மன்றத்தில் அல்லது மாநாட்டு மன்றத்தில் நடைபெறும்.
தகுதிகள்: 25-லிருந்து 50 வயதுக்குட்பட்ட தம்பதிகள். ஆரோக்கியமானவர்கள். தேவை அதிகம் உள்ள இடங்களில் சேவை செய்ய முடிந்தவர்கள். ‘அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்’ என்ற மனநிலை உள்ளவர்கள். (ஏசா. 6:8) மணமாகி இரண்டு வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும். அதோடு, இரண்டு வருடங்களாவது முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அந்தச் சகோதரர் மூப்பராகவோ உதவி ஊழியராகவோ இரண்டு வருடங்களாவது சேவை செய்திருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: இப்பள்ளியில் சேர விரும்புகிறவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்க மாவட்ட மாநாட்டில் ஒரு கூட்டம் நடத்தப்படும். உங்கள் நாட்டில் அந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றால், கிளை அலுவலகத்திற்கு எழுதி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
“யெகோவாவின் சேவையில் தங்களை முழுமையாய் அர்ப்பணிக்க விரும்பும் தம்பதிகளுக்கு இந்த எட்டு வாரப் பயிற்சி கடவுள் தந்த மிகப் பெரிய பரிசு, இது அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றிவிடும்! எங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கத் தீர்மானித்திருக்கிறோம். இதனால் எங்கள் நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த முடிகிறது.”—எரிக் மற்றும் காரினா (கீழே), முதல் வகுப்பு, 2011.
உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி
நோக்கம்: ஜனத்தொகை அதிகமுள்ள பிராந்தியங்களில் ஊழியம் செய்ய, வட்டாரக் கண்காணிகளாகச் சேவை செய்ய அல்லது பெத்தேலில் சேவை செய்ய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. ஊழிய வேலையும், கிளை அலுவலக வேலையும் சீராகச் செயல்பட உதவுகிறது.
காலப்பகுதி: ஐந்து மாதங்கள்.
இடம்: உவாட்ச்டவர் கல்வி மையம், பாட்டர்சன், நியு யார்க், அமெரிக்கா.
தகுதிகள்: ஏற்கெனவே ஏதாவதொரு விசேஷ முழுநேர ஊழியத்தில் உள்ள தம்பதிகள்—அதாவது, விசேஷ பயனியர்கள், பயணக் கண்காணிகள், பெத்தேல் ஊழியர்கள், அல்லது கிலியட் பயிற்சி பெறாத மிஷனரிகள். இதுபோன்ற சேவையில் மூன்று வருடங்களாவது இருந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: இந்தப் பள்ளிக்கு விண்ணப்பிக்கும்படி கிளை அலுவலகக் குழுவினர் தம்பதிகளிடம் கேட்டுக்கொள்வார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த லாடேவும், மானிக்கும் இப்போது ஆப்பிரிக்காவில் சேவை செய்கிறார்கள். “உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று சேவை செய்யும் விதத்தில் கிலியட் பள்ளி எங்களை வடிவமைத்திருக்கிறது. அன்பான சகோதர சகோதரிகளோடு சேவை செய்வதற்கு எங்களைத் தயார்படுத்தியிருக்கிறது” என்று லாடே சொல்கிறார்.
மானிக் சொல்கிறார்: “கடவுளுடைய வார்த்தையிலிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடிக்கும்போது என்னுடைய சேவையில் அதிக மகிழ்ச்சி காண்கிறேன். யெகோவா என்மீது காட்டும் அன்பிற்கான அத்தாட்சியாக அதைக் கருதுகிறேன்.”
கிளை அலுவலகக் குழுவினர் மற்றும் அவர்களது மனைவிகளுக்கான பள்ளி
நோக்கம்: பெத்தேல் இல்லங்களை மேற்பார்வை செய்ய, சபை சம்பந்தப்பட்ட காரியங்களைக் கவனிக்க, வட்டாரங்களையும் மாவட்டங்களையும் மேற்பார்வை செய்ய கிளை அலுவலகக் குழுவினருக்குப் பயிற்சி அளிக்கிறது. பிரசுரங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது, அனுப்புவது போன்றவற்றை மேற்பார்வை செய்யவும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: உவாட்ச்டவர் கல்வி மையம், பாட்டர்சன், நியு யார்க், அமெரிக்கா.
தகுதிகள்: சகோதரர் கிளை அலுவலகக் குழுவிலோ நாட்டு ஆலோசனைக் குழுவிலோ அல்லது அந்தப் பொறுப்பில் இருந்து செயல்படுகிறவராகவோ இருக்க வேண்டும்.
எப்படிச் சேர்வது: சகோதரர்களும் அவர்களது மனைவிகளும் ஆளும் குழுவிடமிருந்து அழைப்பைப் பெறுவார்கள்.
லோயல் மற்றும் காரா 25-வது வகுப்பில் பயிற்சி பெற்றவர்கள். இப்போது நைஜீரியாவில் சேவை செய்கிறார்கள். “நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், எந்த வேலை எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் யெகோவாவுடைய வழியில் காரியங்களைச் செய்தால்தான் அவரைப் பிரியப்படுத்த முடியும் என்பதை இந்தப் பள்ளி என் மனதில் ஆழமாய்ப் பதிய வைத்திருக்கிறது” என்கிறார் லோயல். “யெகோவா தம்முடைய ஊழியர்களிடம் காட்டும் அன்பை நாமும் மற்றவர்களிடம் காட்டுவது முக்கியம் என்பதை இந்தப் பள்ளி எங்களுக்குக் கற்பித்திருக்கிறது” என்றும் சொல்கிறார்.
“ஒரு குறிப்பை என்னால் எளிய முறையில் விளக்க முடியவில்லை என்றால், அதைப் பற்றி நான் முதலாவது தெளிவாகக் கற்றுக்கொள்ள வேண்டும். பிறகுதான் மற்றவர்களுக்குப் போதிக்க வேண்டும் என்ற விஷயத்தை வகுப்பில் கற்றுக்கொண்டேன். அதை நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்” என்கிறார் காரா.