யெகோவாவிடமிருந்து முழுமையாகக் கற்றுக்கொள்கிறீர்களா?
1. யெகோவா என்ன விரும்புகிறார்?
1 நம் ‘மகத்தான போதகராகிய’ யெகோவா, அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார். (ஏசா. 30:20, NW) தம்முடைய முதல் மகனைப் படைத்த பிறகு கற்றுக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தார். (யோவா. 8:28) ஆதாம் கலகம் செய்த பிறகும்கூட, மனிதர்களுக்குக் கற்பிப்பதை யெகோவா நிறுத்திவிடவில்லை; அபூரண மனிதர்களுக்கு அன்போடு கற்றுக்கொடுத்து வந்தார்.—ஏசா. 48:17, 18; 2 தீ. 3:14, 15.
2. இன்று என்ன கல்வித் திட்டத்தை யெகோவா நடத்தி வருகிறார்?
2 வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமான கல்வித் திட்டத்தை இன்று யெகோவா நடத்தி வருகிறார். ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தபடி, உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், “யெகோவாவுடைய ஆலயமாகிய” அடையாளப்பூர்வமான ‘மலைக்கு’ ஓடி வருகிறார்கள். (ஏசா. 2:2, NW) ஏன்? கடவுளுடைய வழிகளைக் கற்றுக்கொள்வதற்காக; ஆம், யெகோவாவால் போதிக்கப்படுவதற்காக. (ஏசா. 2:3) மக்களுக்கு பைபிள் சத்தியத்தை அறிவிப்பதற்கும் கற்பிப்பதற்கும் 2010-ஆம் ஊழிய ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் 160 கோடிக்கும் அதிகமான மணிநேரத்தைச் செலவிட்டார்கள். அதோடு, ஒவ்வொரு வாரமும் உலகெங்கும் உள்ள 1,05,000-க்கும் அதிகமான சபைகளில் ஆன்மீகக் கல்வி கற்பிக்கப்படுகிறது; உண்மையும் விவேகமுள்ள அடிமை வகுப்பார் தயாரித்து அளிக்கும் ஆன்மீக அறிவொளியூட்டும் பிரசுரங்கள் 500-க்கும் அதிகமான மொழிகளில் வெளியிடப்படுகின்றன.
3. யெகோவா அளிக்கும் கல்வியிலிருந்து தனிப்பட்ட விதமாக நீங்கள் எப்படிப் பயனடைந்திருக்கிறீர்கள்?
3 முழுமையாகப் பயனடையுங்கள்: தெய்வீக கல்வித் திட்டத்திலிருந்து நாம் அடைந்த பயன் கொஞ்சநஞ்சமா என்ன! கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்றும் அவர் நம்மேல் அக்கறை வைத்திருக்கிறார் என்றும் கற்றுக்கொண்டோம். (சங். 83:17; 1 பே. 5:6, 7) ‘மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? நாம் ஏன் சாகிறோம்? சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ போன்ற மிக முக்கியமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்கிறோம். அதோடு, ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்றும் யெகோவா நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார்; இதனால் நாம் ‘செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் . . . வெற்றி காண்கிறோம்.’—யோசு. 1:8, ஈஸி டு ரீட் வர்ஷன்.
4. கடவுள் தம்முடைய ஊழியர்களுக்காகச் செய்திருக்கும் சில கல்வித் திட்டங்கள் யாவை, நாம் ஏன் யெகோவாவிடமிருந்து முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும்?
4 அதுமட்டுமல்ல, ஊழியத்தில் இன்னும் அதிகம் ஈடுபடுவதற்காக தம்முடைய மக்கள் பலருக்கு யெகோவா விசேஷ கல்வித் திட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். அவை 4-6 பக்கங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. அங்கே கொடுக்கப்பட்டுள்ள சில பயிற்சி திட்டங்களில் கலந்துகொள்ள ஒருவேளை உங்கள் சூழ்நிலை இடங்கொடுக்காமல் போகலாம். என்றாலும், எதில் கலந்துகொள்ள உங்கள் சூழ்நிலை அனுமதிக்கிறதோ அதில் கலந்துகொண்டு பயனடையலாம், அல்லவா? பொதுவாக இளைஞர்களை உயர்கல்வி படிக்கும்படி பள்ளி ஆசிரியர்களும் மற்றவர்களும் ஊக்குவிக்கிறார்கள்; ஆனால், ஆன்மீக இலக்கை வைத்து உன்னதக் கல்வியை, அதாவது தெய்வீகக் கல்வியை, படிக்கும்படி நாம் அவர்களை ஊக்குவிக்கலாமே! யெகோவாவிடமிருந்து முழுமையாகக் கற்றுக்கொண்டால் சந்தோஷமாக வாழலாம், இன்றும்... என்றும்... என்றென்றும்!—சங். 119:105; யோவா. 17:3.
யெகோவாவின் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிற சில கல்வித் திட்டங்கள்
எழுத்தறிவு வகுப்புகள்
நோக்கம்: எழுதப் படிக்க சொல்லித் தருவது; முக்கியமாக, தனிப்பட்ட விதமாய் பைபிள் படிக்கவும் மற்றவர்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கவும் இது உதவும்.
காலப்பகுதி: தேவைக்கு ஏற்ப.
இடம்: ராஜ்யமன்றம்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்: பிரஸ்தாபிகளும், ஆர்வமுள்ள நபர்களும்.
எப்படிச் சேரலாம்: தேவைக்கு ஏற்ப அந்தந்த சபை மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். விருப்பமுள்ளவர்கள் அதில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஊக்குவிப்பார்கள்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி
நோக்கம்: நற்செய்தியைத் திறமையாகப் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் பிரஸ்தாபிகளுக்குப் பயிற்சி அளிப்பது.
காலப்பகுதி: தொடர்ச்சியாக.
இடம்: ராஜ்யமன்றம்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்: எல்லா பிரஸ்தாபிகளும். அதோடு, சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு... பைபிள் போதனைகளை ஏற்றுக்கொண்டு... கிறிஸ்தவ நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ்பவர்கள்.
எப்படிச் சேரலாம்: தேவராஜ்ய ஊழியப் பள்ளி கண்காணியிடம் கேளுங்கள்.
வேற்று மொழி வகுப்புகள்
நோக்கம்: நற்செய்தியை வேறொரு மொழியில் பிரசங்கிக்க பிரஸ்தாபிகளுக்குக் கற்றுக்கொடுப்பது.
காலப்பகுதி: நான்கு அல்லது ஐந்து மாதங்கள். பொதுவாக சனிக்கிழமை காலையில் ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள்.
இடம்: பொதுவாக, அருகிலுள்ள ராஜ்யமன்றம்.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்: வேறொரு மொழியில் பிரசங்கிக்க விரும்புகிற, ஆன்மீகத் தகுதியுள்ள பிரஸ்தாபிகள்.
எப்படிச் சேரலாம்: தேவைக்கு ஏற்ப கிளை அலுவலகம் ஏற்பாடு செய்யும்.
ராஜ்யமன்ற கட்டுமானம்
நோக்கம்: ராஜ்யமன்றங்களைக் கட்டுவதும், புதுப்பிப்பதும். இது ஒரு பள்ளி அல்ல. என்றாலும், இதில் கலந்துகொள்கிற வாலண்டியர்களுக்கு கட்டுமான வேலையில் உதவுகிற பல்வேறு திறமைகள் கற்றுக்கொடுக்கப்படும்.
காலப்பகுதி: வாலண்டியர்களின் சூழ்நிலையைப் பொருத்து.
இடம்: மண்டல கட்டுமானக் குழுவின் கீழுள்ள பகுதியில் எங்கு வேண்டுமானாலும். பேரழிவால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளில் உதவி செய்ய சில வாலண்டியர்கள் அழைக்கப்படுவார்கள்.
தகுதிகள்: ஞானஸ்நானம் பெற்ற சகோதர சகோதரிகள், மூப்பர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் கட்டுமான வேலையில் திறமை பெற்றவர்களாகவோ பெறாதவர்களாகவோ இருக்கலாம்.
எப்படிச் சேரலாம்: ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்ட வாலண்டியர் விண்ணப்பத்தை (A-25-E) மூப்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.
பயனியர் பயிற்சி பள்ளி
நோக்கம்: ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற’ பயனியர்களுக்கு உதவுவது.—2 தீ. 4:5.
காலப்பகுதி: இரண்டு வாரங்கள்.
இடம்: கிளை அலுவலகம் தீர்மானிக்கும். பொதுவாக அருகிலுள்ள ராஜ்யமன்றம்.
தகுதிகள்: குறைந்தபட்சம் ஒரு வருடமாவது ஒழுங்கான பயனியர் செய்தவர்கள்.
எப்படிச் சேரலாம்: தகுதியுள்ள பயனியர்கள் இந்தப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், இதைப் பற்றி வட்டாரக் கண்காணி தெரிவிப்பார்.
புதிய பெத்தேல் அங்கத்தினர்களுக்கான பள்ளி
நோக்கம்: புதிய பெத்தேல் அங்கத்தினர்கள் தங்களுடைய சேவையை வெற்றிகரமாகச் செய்ய உதவுவது.
காலப்பகுதி: வாராவாரம் ஒரு மணிநேரம், பதினாறு வாரங்களுக்கு நடைபெறும்.
இடம்: பெத்தேல்.
தகுதிகள்: பெத்தேல் குடும்பத்தின் நிரந்தர அங்கத்தினர்கள் அல்லது தற்காலிக வாலண்டியர்களாக நீண்டகாலம் சேவை செய்பவர்கள் (ஒரு வருடமோ அதற்கு அதிகமாகவோ இருப்பவர்கள்).
எப்படிச் சேரலாம்: தகுதியுள்ள பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
ராஜ்ய ஊழியப் பள்ளி
நோக்கம்: சபை பொறுப்புகளையும் அமைப்பு சார்ந்த பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்ற மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் உதவுவது. (அப். 20:28) ஆளும் குழு தீர்மானிக்கிறபடி, சில வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
காலப்பகுதி: சமீப காலமாக, மூப்பர்களுக்கு ஒன்றரை நாட்களும் உதவி ஊழியர்களுக்கு ஒரு நாளும் நடத்தப்படுகிறது.
இடம்: பொதுவாக, அருகிலுள்ள ராஜ்யமன்றம் அல்லது மாநாட்டு மன்றம்.
தகுதிகள்: மூப்பர்களாகவோ உதவி ஊழியர்களாகவோ இருப்பவர்கள்.
எப்படிச் சேரலாம்: தகுதியுள்ள மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் வட்டாரக் கண்காணி அழைப்பார்.
மூப்பர்களுக்கான பள்ளிa
நோக்கம்: சபை பொறுப்புகளை மூப்பர்கள் சரிவர நிறைவேற்ற உதவுவது.
காலப்பகுதி: ஐந்து நாட்கள்.
இடம்: கிளை அலுவலகம் தீர்மானிக்கும்; பொதுவாக, அருகிலுள்ள ராஜ்யமன்றம் அல்லது மாநாட்டு மன்றம்.
தகுதிகள்: மூப்பர்களாக இருப்பவர்கள்.
எப்படிச் சேரலாம்: தகுதியுள்ள மூப்பர்கள் கிளை அலுவலகத்தால் அழைக்கப்படுவார்கள்.
வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கான பள்ளிb
நோக்கம்: மிகத் திறமையாகச் சபைகளை வழிநடத்தவும்... ‘கடவுளுடைய வார்த்தையைக் குறித்துப் பேசுவதிலும் கற்பிப்பதிலும் கடுமையாய் உழைக்கவும்...’ மந்தையை நன்றாக மேய்க்கவும்... வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகளுக்கு உதவுவது.—1 தீ. 5:17; 1 பே. 5:2, 3.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: கிளை அலுவலகம் தீர்மானிக்கும்.
தகுதிகள்: வட்டார அல்லது மாவட்ட கண்காணிகளாக இருப்பவர்கள்.
எப்படிச் சேரலாம்: தகுதியுள்ள பயணக் கண்காணிகளும் அவர்களது மனைவிகளும் கிளை அலுவலகத்தால் அழைக்கப்படுவார்கள்.
மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளிc
நோக்கம்: மணமாகாத மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் கூடுதலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக்குகிறது. இதில் பட்டம் பெறுபவர்கள் தங்களது நாட்டிலேயே தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்ய நியமிக்கப்படுவார்கள். ஒருசிலர், வேறொரு நாட்டில் சேவை செய்ய மனமுள்ளவர்களாக இருந்தால், அங்கு நியமிக்கப்படலாம்.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: கிளை அலுவலகம் தீர்மானிக்கும்; பொதுவாக, அருகிலுள்ள ராஜ்யமன்றம் அல்லது மாநாட்டு மன்றம்.
தகுதிகள்: சபையிலுள்ளவர்களுக்குச் சேவை செய்ய விருப்பமுள்ள... தேவை அதிகமுள்ள இடங்களில் ஊழியம் செய்ய விருப்பமுள்ள... நல்ல உடல்நிலையில் இருக்கிற... 23 முதல் 62 வயதுக்குட்பட்ட மணமாகாத சகோதரர்கள். (மாற். 10:29, 30) உதவி ஊழியராகவோ மூப்பராகவோ தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் சேவை செய்திருக்க வேண்டும்.
எப்படிச் சேரலாம்: உங்கள் கிளை அலுவலகப் பிராந்தியத்தில் இந்தப் பள்ளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், வட்டார மாநாட்டின்போது ஒரு கூட்டம் நடத்தப்படும்; விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். கூடுதலான தகவல்கள் இந்தக் கூட்டத்தில் கிடைக்கும்.
கிறிஸ்தவ தம்பதிகளுக்கான பைபிள் பள்ளிd
நோக்கம்: தம்பதிகளுக்கு விசேஷப் பயிற்சி அளிப்பது; யெகோவாவுக்கும் அவரது அமைப்புக்கும் இன்னும் முழுமையாகச் சேவை செய்ய உதவுவது. இதில் பட்டம் பெறுகிற பெரும்பாலானோர், தங்களது நாட்டில் தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்ய நியமிக்கப்படுவார்கள். ஒருசிலர், வேறொரு நாட்டில் சேவை செய்ய மனமுள்ளவர்களாக இருந்தால், அங்கே நியமிக்கப்படலாம்.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: முதல் சில வகுப்புகள் தற்போது அ.ஐ.மா, நியு யார்க் பாட்டர்சனிலுள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் நடைபெறுகிறது. பிற்பாடு, அந்தந்த கிளை அலுவலகம் தீர்மானிக்கிற இடங்களில் நடத்தப்படும்; பொதுவாக, அருகிலுள்ள ராஜ்யமன்றம் அல்லது மாநாட்டு மன்றம்.
தகுதிகள்: 25 முதல் 50 வயதுக்குட்பட்ட தம்பதிகள். நல்ல உடல்நிலையில் இருக்க வேண்டும்; தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் இருக்க வேண்டும்; ‘இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்’ என்ற மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். (ஏசா. 6:8) அதோடு, திருமணமாகி இரண்டு வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும், தற்போது தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாவது முழுநேர சேவையில் இருக்க வேண்டும்.
எப்படிச் சேரலாம்: உங்கள் கிளை அலுவலகப் பிராந்தியத்தில் இந்தப் பள்ளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டால், விசேஷ மாநாட்டின்போது ஒரு கூட்டம் நடத்தப்படும்; விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். கூடுதலான தகவல்கள் இந்தக் கூட்டத்தில் கிடைக்கும்.
உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி
நோக்கம்: மிஷனரி சேவைக்காக பயனியர்களுக்கும் முழுநேர ஊழியர்களுக்கும் பயிற்சி அளிப்பது.
காலப்பகுதி: ஐந்து மாதங்கள்.
இடம்: உவாட்ச்டவர் கல்வி மையம், பாட்டர்சன், நியு யார்க், அ.ஐ.மா.
தகுதிகள்: ஞானஸ்நானம் பெற்று மூன்று வருடங்கள் ஆன கிறிஸ்தவ தம்பதிகள்; இதற்கான முதல் விண்ணப்பம் அளிக்கும்போது, 21 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும், திருமணமாகி இரண்டு வருடங்களாவது ஆகியிருக்க வேண்டும். தற்போது தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாவது முழுநேர சேவையில் இருக்க வேண்டும். நல்ல உடல்நிலையில் இருக்க வேண்டும். (மிஷனரிகளாக கருதப்படுகிறவர்கள் உட்பட) வெளிநாட்டில் சேவை செய்கிற பயனியர்கள்; பயணக் கண்காணிகள்; பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள்; ஊழியப் பயிற்சிப் பள்ளி, மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி, கிறிஸ்தவ தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி ஆகியவற்றில் கலந்துகொண்டு பட்டம் பெற்றவர்களும்கூட தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.
எப்படிச் சேரலாம்: தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிளை அலுவலகங்களின் கீழுள்ள பிராந்தியத்தில், இந்தப் பள்ளியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மாவட்ட மாநாட்டின்போது ஒரு கூட்டம் நடத்தப்படும். கூடுதலான தகவல்கள் இந்தக் கூட்டத்தில் கிடைக்கும். உங்கள் நாட்டில் நடக்கிற மாவட்ட மாநாடுகளில் இந்தக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றாலும் இந்தப் பள்ளியில் கலந்துகொள்ள நீங்கள் விரும்பினால் கூடுதல் தகவலுக்காக கிளை அலுவலகத்திற்கு எழுதலாம்.
கிளை அலுவலகக் குழுவினர் மற்றும் அவர்களது மனைவிகளுக்குமான பள்ளி
நோக்கம்: கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்பவர்கள், பெத்தேல் இல்லங்களை சிறப்பாக நிர்வகிக்க... சபைகள் சம்பந்தமான ஊழிய வேலைகளைக் கவனிக்க... தங்களது பிராந்தியங்களிலுள்ள வட்டாரங்களையும் மாவட்டங்களையும் மேற்பார்வை செய்ய... பிரசுரங்களை மொழிபெயர்ப்பது, அச்சடிப்பது, சபைகளுக்கு அனுப்புவது போன்ற வேலைகளை மேற்பார்வை செய்ய... பெத்தேலிலுள்ள பல்வேறு துறைகளை மேற்பார்வை செய்ய.... உதவுவது.—ஏசா. 6:8.
காலப்பகுதி: இரண்டு மாதங்கள்.
இடம்: உவாட்ச்டவர் கல்வி மையம், பாட்டர்சன், நியு யார்க், அ.ஐ.மா.
தகுதிகள்: கிளை அலுவலகக் குழு அல்லது நாட்டு ஆலோசனைக் குழுவில் சேவை செய்பவர்கள் அல்லது இந்தப் பொறுப்புகளுக்குத் தகுதியுள்ளவர்கள்.
எப்படிச் சேரலாம்: தகுதியுள்ள சகோதரர்களும் அவர்களது மனைவிகளும் ஆளும் குழுவால் அழைக்கப்படுவார்கள்.
a இந்தப் பள்ளி தற்போது எல்லா நாட்டிலும் இல்லை.
b இந்தப் பள்ளி தற்போது எல்லா நாட்டிலும் இல்லை.
c இந்தப் பள்ளி தற்போது எல்லா நாட்டிலும் இல்லை.
d இந்தப் பள்ளி தற்போது எல்லா நாட்டிலும் இல்லை.