வாழ்க்கை சரிதை
60 ஆண்டு நட்பு... வெறும் ஓர் ஆரம்பமே!
வருடம்: 1951. காலம்: கோடைக்காலம். நேரம்: மாலை மயங்கும் நேரம். இடம்: அமெரிக்கா, நியு யார்க்கிலுள்ள இதிகா நகரம். வரிசையாக நான்கு தொலைபேசி கூண்டுகள். அவற்றில் 25 வயதுக்குட்பட்ட நான்கு வாலிபர்கள். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்துகொண்டிருந்தார்கள். ஒரு சந்தோஷமான செய்தியைச் சொல்ல மிச்சிகன், அயோவா, கலிபோர்னியா ஆகிய தொலைதூர இடங்களுக்கு ஃபோன் செய்துகொண்டிருந்தார்கள்.
1951, பிப்ரவரி மாதம். கிலியட் பள்ளியின் 17-ஆம் வகுப்பில் கலந்துகொள்ள 122 பயனியர்கள் நியு யார்க்கிலுள்ள தென் லான்ஸிங்கில் வந்திறங்கினார்கள். அவர்களில் லோயல் டர்னர், வில்லியம் (பில்) காஸ்டன், ரிச்சர்ட் கெல்சி, ரேமன் டெம்பல்டன் ஆகியோர் இருந்தார்கள். லோயலும் பில்லும் மிச்சிகனைச் சேர்ந்தவர்கள். ரிச்சர்ட் அயோவாவை சேர்ந்தவர். ரேமன் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். கொஞ்ச நாட்களுக்குள்ளேயே அவர்கள் நான்கு பேரும் இணைபிரியா நண்பர்களானார்கள்.
இடமிருந்து வலமாக: கிலியட் பள்ளியில் நண்பர்களான ரிச்சர்டு, லோயல், ரேமன், பில்
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு... மாணவர்களிடம் பேசுவதற்காக சகோதரர் நேதன் நார் வரப்போகிறார் என்ற அறிவிப்பு செய்யப்பட்டபோது மாணவர்கள் மத்தியில் உற்சாகம் பற்றிக்கொண்டது. முடிந்தால் ஒரே நாட்டில் சேவை செய்ய அந்த நான்கு பேரும் ஆசைப்பட்டார்கள். தங்கள் ஆசையை முன்னரே தெரிவித்திருந்தார்கள். மாணவர்களுடைய மிஷனரி நியமிப்பு பற்றி அந்தச் சமயத்தில் சகோதரர் நார் அறிவிக்கவிருந்தாரா? ஆம்!
அந்த நியமிப்புகளை அவர் அறிவிக்க ஆரம்பித்தபோது வகுப்பிலிருந்த மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாற்காலியின் நுனிக்கே வந்துவிட்டார்கள். முதலில் அந்த நான்கு பேர்தான் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். இதயம் படபடக்க அவர்கள் மேடை ஏறினார்கள். அவர்கள் நால்வரும் ஒரே நாட்டுக்கு நியமிக்கப்பட்டிருப்பதைக் கேட்ட பின்புதான் நிம்மதி பெருமூச்சுவிட்டார்கள்! சரி, எந்த நாட்டிற்கு? ஜெர்மனி என்று அறிவிக்கப்பட்டபோது சக மாணவர்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்! விடாமல் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள்.
1933 முதல், ஹிட்லரின் அடாவடி ஆட்சியின் கீழ் ஜெர்மானிய சாட்சிகள் பட்ட வேதனைகளைச் சொல்லி மாளாது. ஜெர்மானிய சாட்சிகளின் வைரம் பாய்ந்த விசுவாசத்தைக் கண்டு உலகின் எட்டுத் திக்கிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகள் வியந்து நின்றார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய சகோதரர்களுக்காகத் துணிமணி பார்சல்களையும், கேர் (CARE) என்ற தொண்டு நிறுவனத்திடமிருந்து பெற்ற உணவுப் பார்சல்களையும் அனுப்பி வைத்ததெல்லாம் அநேக மாணவர்களுக்கு ஞாபகம் வந்தது. அசைக்க முடியாத விசுவாசத்திற்கும், மனவுறுதிக்கும், நெஞ்சுரத்திற்கும், யெகோவா மீதிருந்த உறுதியான நம்பிக்கைக்கும் ஜெர்மானிய சாட்சிகள் இலக்கணமாய்த் திகழ்ந்தார்கள். அந்த அன்புச் சகோதர சகோதரிகளை நேருக்கு நேர் பார்த்து நட்பு பாராட்ட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டதாக லோயல் சொல்கிறார். எல்லோருடைய ஆச்சரியத்திற்கும் ஆர்ப்பரிப்பிற்கும் இப்போது உங்களுக்கு அர்த்தம் புரிந்திருக்கும். அந்த நான்கு பேரும் ஏன் மகிழ்ச்சியாக ஃபோன் செய்தார்கள் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஜெர்மனிக்குப் போகும் வழியில்
ரேமன் ராஜ்ய ஊழியப் பள்ளியை நடத்துகிறார்
1951, ஜூலை 27 அன்று நியு யார்க்கின் ஈஸ்ட் ரிவர் துறைமுகத்திலிருந்து ஹோம்லாண்ட் என்ற நீராவிக் கப்பல் புறப்பட்டது. இதில் 11 நாட்களுக்கு அந்த நான்கு பேரும் பயணித்தார்கள். சகோதரர் ஆல்பர்ட் ஷ்ரோடர், ஜெர்மன் மொழியில் அவர்களுக்குச் சில அறிமுக வாக்கியங்களைச் சொல்லிக் கொடுத்திருந்தார். கிலியட் பள்ளி போதனையாளர்களில் அவரும் ஒருவர். அவர் பிற்பாடு ஆளும் குழு அங்கத்தினர் ஆனார். இப்போது, கப்பலில் அவர்களைச் சுற்றிலும் ஜெர்மானியர்களே இருந்தார்கள். அதனால், ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆனால், பயணிகள் ஒவ்வொருவரும் ஜெர்மன் மொழியை ஒவ்வொரு விதமாகப் பேசினார்கள். பாவம், அவர்கள் நான்கு பேரும் என்னதான் செய்வார்கள்!
கடல் பயணத்திற்கே உரிய சில அவதிகளை அவர்கள் அனுபவித்தார்கள், என்றாலும் ஒருவழியாக ஆகஸ்ட் 7-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை ஜெர்மனியிலுள்ள ஹேம்பர்க் நகரில் கால்பதித்தார்கள். போர் ஓய்ந்து ஆறு வருடங்களே ஆகியிருந்தன. போரினால் ஏற்பட்ட தடயங்கள் இன்னும் இருந்தன. அந்தக் கசப்பான காட்சியைப் பார்த்த நான்கு பேருக்கும் மனம் கனத்தது. வீஸ்பாடன் நகரத்தில் அன்று ஜெர்மனி கிளை அலுவலகம் இருந்ததால் இரவு ரயில் ஏறி மறுநாள் காலை அங்கு சென்றார்கள்.
ரிச்சர்டு விஸ்பேடனில் உள்ள பெத்தேலில் அட்ரஸோகிராஃபில் வேலை செய்கிறார்
புதன் கிழமை காலையில் முதன்முதலாக ஒரு ஜெர்மானிய சாட்சியைச் சந்தித்தார்கள். அவருடைய பெயர் ஹன்ஸ்... அசல் ஜெர்மன் பெயர்! அவர்தான் ரயில் நிலையத்திலிருந்து அவர்களை பெத்தேலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, ஆங்கிலமே சுத்தமாகத் தெரியாத வயதான ஒரு சகோதரியிடம் அவர்களை விட்டுவிட்டுச் சென்றார். சத்தமாகப் பேசினால் புரியாத பாஷையும் புரிந்துவிடும் என்று நினைத்துக்கொண்டு அந்தச் சகோதரி குரலை உயர்த்தி உயர்த்திப் பேசினார். ஆனால், அவரும் சரி அந்த நான்கு சகோதரர்களும் சரி, விழிபிதுங்கி நின்றார்களே தவிர மொழி புரியவில்லை. ஒருவழியாக, கிளை அலுவலக ஊழியரான சகோதரர் ஏரிக் ஃப்ராஸ்ட் அங்கு வந்து அவர்களை அன்புடன் வரவேற்றார். அவர் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தபோதுதான் இந்த நால்வர் முகமும் மலர்ந்தது.
ஆகஸ்ட் மாதக் கடைசியில், அந்த நான்கு பேரும் வாழ்க்கையிலேயே முதன்முறையாக ஜெர்மன் மொழி மாநாட்டிற்குச் சென்றார்கள். அந்த மாநாடு ப்ராங்ஃபர்ட் நகரத்தில் நடைபெற்றது. அதன் தலைப்பு, “சுத்தமான வணக்கம்.” 47,432 பேர் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். 2,373 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இதையெல்லாம் பார்த்தபோது அந்த நான்கு மிஷனரி சகோதரர்களுக்குள்ளும் ஒரு வேகம் கிளம்பியது. பிரசங்க வேலையைச் செய்ய வேண்டுமென்ற ஆசை அதிகரித்தது. ஆனால், சில நாட்களுக்குப் பிறகு சகோதரர் நார், அவர்கள் நால்வரும் பெத்தேலில் தங்கி வேலை செய்ய வேண்டுமெனச் சொல்லிவிட்டார்.
தங்கள் நியமிப்பில் கிடைத்த சந்தோஷம், யெகோவா எப்போதுமே மிகச் சிறந்ததைத்தான் செய்வார் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஆழப் பதித்தது
முன்பு ஒருமுறை ரேமனுக்கு அமெரிக்க பெத்தேலில் சேவை செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், மிஷனரி சேவை மீதிருந்த காதலால் அந்த வாய்ப்பை மறுத்திருந்தார். ரிச்சர்டும் பில்லும்கூட பெத்தேல் சேவையைப் பற்றி யோசித்ததே இல்லை. ஆனால், அந்த நியமிப்பில் கிடைத்த சந்தோஷம், யெகோவா எப்போதுமே மிகச் சிறந்ததைத்தான் செய்வார் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் ஆழப் பதித்தது. சொந்த விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், யெகோவாவின் வழிநடத்துதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே ஞானமானது என்பதை இவர்களுடைய உதாரணம் கற்பிக்கிறது. இதைப் புரிந்துகொண்டால், யெகோவாவுக்காக நாம் எங்கே வேலை செய்தாலும் சரி, என்ன வேலை செய்தாலும் சரி சந்தோஷமாய் இருப்போம்.
ஃபெர்போடன்!
இந்த அமெரிக்க சகோதரர்களிடமிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம் என்று ஜெர்மனி பெத்தேல் அங்கத்தினர்கள் ஆசையாய் இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் எல்லோரும் பெத்தேல் டைனிங் ஹாலுக்கு வந்தபோது அவர்களுடைய ஆசைக் கனவு கலைந்தது. சகோதரர் ஃப்ராஸ்ட் ஜெர்மன் மொழியில் அவருக்கே உரிய பாணியில் உற்சாகமாக ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார். பெரும்பாலோர் கப்சிப் என்று இருந்தார்கள், குனிந்த தலை நிமிராமல் தட்டையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த நான்கு சகோதரர்களுக்கும் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், தங்களைப் பற்றித்தான் ஏதோ சொல்கிறார் என்பது புரிந்தது. அதனால், ஃபெர்போடன்! (அதன் அர்த்தம், தடை!) என்று சகோதரர் ஃப்ராஸ்ட் உறுதியான குரலில் சொல்லிவிட்டு, மீண்டும் அதையே உரக்கச் சொன்னபோது அந்த நால்வருக்கும் தர்மசங்கடமாக இருந்தது. ‘ஏன் இவர் இப்படிக் கோபமாகப் பேசுகிறார், நாம் என்ன செய்துவிட்டோம்?’ என அவர்கள் குழம்பினார்கள்.
மேலே: சகோதரர் ஃப்ராஸ்டும் (வலது) மற்றவர்களும் சகோதரர் நாரை (இடது) சந்தித்தபோது; வலது
சாப்பாட்டு வேளைக்குப் பிறகு எல்லோரும் தங்கள் தங்கள் அறைகளுக்கு மடமடவென்று போய்விட்டார்கள். பின்னர், ஒரு சகோதரர் விஷயத்தை விளக்கினார்: “எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால், நீங்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் கற்றுக்கொள்ளும்வரை உங்களிடம் ஆங்கிலத்தில் பேச எங்களுக்குத் தடை விதித்திருப்பதாக சகோதரர் ஃப்ராஸ்ட் சொன்னார்.”
சகோதரர் ஃபராஸ்ட்டின் வார்த்தைக்கு பெத்தேல் குடும்பத்தினர் உடனடியாகக் கட்டுப்பட்டார்கள். இதனால், புதிதாய் வந்த நால்வரும் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதுமட்டுமல்ல, அன்பான சகோதரர் ஒருவர் ஏதாவது ஆலோசனை கொடுத்தால், ஆரம்பத்தில் அதைப் பின்பற்றுவது கஷ்டமாய் இருந்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்த்தியது. சகோதரர் ஃப்ராஸ்ட்டின் கட்டளை கெடுபிடியாக இருந்தபோதிலும் யெகோவாவின் அமைப்பு மீதும் சகோதரர்கள் மீதும் அவருக்கு இருந்த அக்கறையையும் அன்பையும் அது படம்பிடித்துக் காட்டியது.a அந்த நான்கு பேரும் போகப்போக அவரை நேசிக்கத் தொடங்கியதில் ஆச்சரியமே இல்லை!
மற்ற நண்பர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டோம்
1952-ல் விடுமுறைக்காக சுவிட்சர்லாந்து சென்றபோது
தேவபயமுள்ள நண்பர்களிடமிருந்து நல்ல நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளும்போது யெகோவாவுக்கு இன்னும் நெருங்கிய நண்பர்களாக ஆவோம். ஜெர்மானிய சகோதர சகோதரிகளிடமிருந்து (அவர்களுடைய பெயர்களைப் பட்டியலிட பக்கம் போதாது) அந்த நான்கு பேரும் நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். ஒருவரிடமிருந்து ஒருவரும் நிறையக் கற்றுக்கொண்டார்கள். ரிச்சர்ட் சொல்கிறார்: “லோயல் ஜெர்மன் மொழியை ஓரளவு கற்றுக்கொண்டு சமாளித்தார். ஆனால், நாங்கள் மூன்று பேரும் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தோம். எங்களில் லோயல்தான் மூத்தவர். அதனால், மொழி சம்பந்தமாக என்ன சந்தேகம் வந்தாலும் நாங்கள் அவரைத்தான் கேட்போம்; எல்லா விஷயத்திலும் அவர்தான் எங்களுக்கு முன்மாதிரியாக இருந்து எங்களை வழிநடத்தினார்.” பழைய நினைவுகளுக்குள் நீந்திச் சென்ற ரேமன் இவ்வாறு சொல்கிறார்: “ஜெர்மனிக்கு வந்து ஒரு வருடமான பின்பு முதன்முறையாக விடுமுறைக்குச் செல்ல நாங்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெத்தேல் சகோதரர் ஒருவர் தனக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் தங்கிக்கொள்ளும்படி சொன்னார். ‘அப்பாடா, இரண்டு வாரம் நிம்மதியாக இருக்கலாம்; ஜெர்மன் மொழி பேச வேண்டியதில்லை’ என்றிருந்தேன். ஆனால், லோயல் இருப்பதை மறந்துவிட்டேன். தினமும் ஜெர்மன் மொழியில்தான் தினவசனத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார்! நான் எவ்வளவோ முயன்று பார்த்தேன், அவர் மசியவில்லை. ஆனால், ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டோம். நம்மை வழிநடத்துகிறவர்கள் அக்கறையோடு சொல்லும் விஷயங்களைக் கேட்டு நடக்க வேண்டும்—நமக்குக் கஷ்டமாக இருந்தாலும்கூட! இந்த மனப்பான்மை நிறைய விதத்தில் எங்களுக்கு நன்மை அளித்திருக்கிறது, அமைப்பு தரும் ஆலோசனைகளுக்குச் சந்தோஷமாகக் கீழ்ப்படிய உதவியிருக்கிறது.”
நல்ல குணங்கள் பளிச்சிடும்போது, அந்த நான்கு பேரும் ஒருவரையொருவர் பாராட்டக் கற்றுக்கொண்டார்கள். பிலிப்பியர் 2:3 அதைத்தான் சொல்கிறது: ‘மனத்தாழ்மையோடு இருங்கள்; மற்றவர்களை உங்களைவிட மேலானவர்களாகக் கருதுங்கள்.’ அவர்கள் நான்கு பேரில் பில் அதிக திறமைசாலியாக இருந்ததால், மற்ற மூவராலும் செய்ய முடியாத வேலைகளை அவரிடம்தான் கொடுத்தார்கள். அந்தளவு அவர்மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. “சவாலான சந்தர்ப்பங்களில், முக்கியத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய இக்கட்டான கட்டத்தில் நாங்கள் மூவரும் பில்லிடம்தான் போய் நிற்போம்” என்கிறார் லோயல். “என்ன பிரச்சினை வந்தாலும் எங்கள் எல்லோருக்கும் பிடித்தமான விதத்தில் அதைக் கையாளுகிற திறமையும் தைரியமும் பில்லுக்கு இருந்தது. எங்களுக்கு இருக்கவில்லை” என்றும் சொல்கிறார்.
தித்திக்கும் திருமணங்கள்
ஒருவர்பின் ஒருவராக நான்கு பேரும் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தார்கள். அவர்கள் இணைபிரியா தோழர்கள் ஆனதற்குக் காரணம், யெகோவாவையும் முழுநேர ஊழியத்தையும் நேசித்ததே! அதனால், அப்படிப்பட்ட நேசத்தை வெளிக்காட்டிய பெண்களையே கல்யாணம் பண்ணத் தீர்மானித்தார்கள். பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது என்பதை முழுநேர ஊழியம் அவர்களுக்குக் கற்றுத் தந்திருந்தது. கடவுளுடைய காரியங்களுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும், தனிப்பட்ட ஆசைகளுக்கு அல்ல என்பதையும் கற்றுத் தந்திருந்தது. அதனால்தான், விருப்பப்பட்டு முழுநேர ஊழியம் செய்துகொண்டிருந்த சகோதரிகளைக் கரம்பிடித்தார்கள். இப்படி... உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நான்கு ஜோடிகள் இனிதாய் இணைந்தன.
நட்போ... திருமணமோ... அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதில் யெகோவா முக்கிய நபராக இருக்க வேண்டும். (பிர. 4:12) பிற்காலத்தில், பில்லும் ரேமனும் மரணத்தில் தங்கள் மனைவிகளைப் பறிகொடுத்தார்கள். என்றாலும், அருமைத் துணைவியின் அன்பையும் ஆதரவையும் அனுபவித்த திருப்தி அவர்கள் இருவருக்குமே இருந்தது. பில் மறுமணம் செய்துகொண்டார்; ஆம், முழுநேர ஊழியம் செய்ய தனக்குத் தோள்கொடுத்த ஒரு சகோதரியைத் துணைவியாக்கிக்கொண்டார். லோயலும் ரிச்சர்டும் தங்கள் மனைவிகளுடன் சந்தோஷமாய் இருக்கிறார்கள்.
பின்வந்த வருடங்களில் அவர்களுக்குக் கிடைத்த நியமனங்கள், அவர்களை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்பிவிட்டன. ஜெர்மனி, ஆஸ்திரியா, லக்ஸம்பர்க், கனடா, அமெரிக்கா என்று வெவ்வேறு நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தன. அதனால், முன்புபோல் ஒன்றாக நேரம் செலவிட அவர்களால் முடியவில்லை. என்றாலும், தொலைதூரம் அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை. எப்போதும் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு சுக துக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். (ரோ. 12:15) இதுபோன்ற நண்பர்கள் அமைவது மிகமிக அரிது. நல்முத்தான நண்பர்கள் நமக்கு அமைந்தால், அவர்களை நாம் நழுவ விட்டுவிடக் கூடாது. நல்ல நண்பர்கள் யெகோவா தரும் பரிசுகள். (நீதி. 17:17, NW ) இன்றைய உலகில் உண்மையான நண்பர்கள் கிடைப்பது ரொம்பக் கஷ்டம். ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளான நமக்கு, அந்தக் கவலையே இல்லை. உலகெங்குமுள்ள சகோதர சகோதரிகள் நமக்கு நண்பர்களாக இருக்கிறார்கள், அதைவிட முக்கியமாக யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நண்பர்களாக இருக்கிறார்கள்.
எல்லோரையும் போலவே இந்த நான்கு நண்பர்களும் முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையைக் கடந்துவந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, மனைவியை இழந்து தவித்திருக்கிறார்கள், பயங்கரமான வியாதிகளால் அவதிப்பட்டிருக்கிறார்கள், வயதான பெற்றோரைப் பராமரிக்க சிரமப்பட்டிருக்கிறார்கள், முழுநேர சேவையில் இருந்துகொண்டு பிள்ளையை வளர்த்தெடுக்க கஷ்டப்பட்டிருக்கிறார்கள், புதிய நியமிப்புகள் கிடைத்தபோது பயந்துபோயிருக்கிறார்கள். இன்று முதுமையோடு மல்லுக்கட்டிவருகிறார்கள். ஆனால், அருகிலுள்ள... தொலைவிலுள்ள... நண்பர்களின் உதவியோடு எந்தச் சவாலையும் சமாளித்துவிடலாம் என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.
இணைபிரியா நண்பர்கள்—என்றென்றும்!
லோயல், ரேமன், பில், ரிச்சர்டு ஆகியோர் முறையே 18, 12, 11, 10 வயதுகளில் ஞானஸ்நானம் எடுத்தார்கள். இந்த நால்வரும் 17-21-க்கு இடைப்பட்ட வயதில் முழுநேர சேவையை ஆரம்பித்தார்கள். எவ்வளவு அருமையான முன்மாதிரிகள்! “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என்று பிரசங்கி 12:1 சொல்கிறபடியே வாழ்ந்து காட்டினார்கள்.
நீங்கள் ஓர் இளம் சகோதரரா? அப்படியானால், முழுநேர ஊழியத்தில் ஈடுபட யெகோவா விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போது, இந்த நான்கு நண்பர்களைப் போலவே நீங்களும் யெகோவாவின் அளவற்ற கருணையினால் ஏராளமான பாக்கியங்களைப் பெறுவீர்கள். ஆம், வட்டாரக் கண்காணியாக, மாவட்டக் கண்காணியாக, மண்டலக் கண்காணியாக, பெத்தேல் அங்கத்தினராக, கிளை அலுவலகக் குழு உறுப்பினராக, ராஜ்ய ஊழியப் பள்ளியிலும் பயனியர் பயிற்சிப் பள்ளியிலும் போதனையாளராக, சிறிய, பெரிய மாநாடுகளில் பேச்சுகளைக் கொடுப்பவராக ஆவீர்கள். தங்களுடைய சேவையால் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்திருப்பதை அறிந்து இந்த நால்வரும் அளவில்லா ஆனந்தம் அடைகிறார்கள்! யெகோவாவின் அன்பான அழைப்புக்குச் செவிகொடுத்து தங்கள் இளம் வயதிலேயே முழுமூச்சோடு அவருக்குச் சேவை செய்ய முன்வந்ததால்தான் இந்தப் பாக்கியத்தையெல்லாம் பெற்றிருக்கிறார்கள்.—கொலோ. 3:23.
இடமிருந்து வலமாக: ரிச்சர்டு, பில், லோயல், ரேமன்; 1984-ல் செல்ட்டர்ஸ் கிளை அலுவலகத்தில் புதிய கட்டிடங்களின் அர்ப்பண விழாவின்போது
லோயல், ரிச்சர்டு, ரேமன் ஆகிய மூவரும் இப்போது ஜெர்மனியிலுள்ள செல்ட்டர்ஸ் பெத்தேலில் மீண்டும் ஒன்றாகச் சேவை செய்கிறார்கள். வருந்தத்தக்க விஷயம்... அமெரிக்காவில் விசேஷ பயனியராகச் சேவை செய்துவந்த பில் 2010-ல் இறந்துவிட்டார். மரணம், அந்த நால்வருடைய 60 ஆண்டுகால அபூர்வ நட்பைச் சிதைத்துவிட்டது! ஆனால், நம்முடைய அன்பான கடவுளாகிய யெகோவா தம் நண்பர்களை ஒருபோதும் மறப்பதில்லை. மரணத்தால் தற்காலிகமாகப் பிரிக்கப்படுகிற நண்பர்கள் எல்லோருமே கடவுளுடைய அரசாங்கத்தில் மீண்டும் ஒன்றுசேர்வார்கள் என நாம் நம்பிக்கையாயிருக்கலாம்.
“நம்முடைய 60 ஆண்டுகால நட்பில் ஒரு சிறிய கீறல் விழுந்ததாகக்கூட எனக்கு நினைவில்லை”
இறப்பதற்குக் கொஞ்சநாள் முன்பு பில் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய 60 ஆண்டுகால நட்பில் ஒரு சிறிய கீறல் விழுந்ததாகக்கூட எனக்கு நினைவில்லை. நம்முடைய நட்பு எனக்கு எப்போதும் தித்திப்பு.” இதைப் படித்து முடித்த மற்ற மூன்று நண்பர்கள், புதிய உலகத்திலும் தங்கள் நட்பு தொடரும் என்பதை மனதில் வைத்து இவ்வாறு சொன்னார்கள்: “நம் நட்பு வெறும் ஓர் ஆரம்பமே.”
a சகோதரர் ஃப்ராஸ்ட்டின் சுவாரஸ்யமான வாழ்க்கை சரிதை ஏப்ரல் 15, 1961 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர இதழில் பக்கங்கள் 244-249-ல் வெளிவந்துள்ளது.