உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 3/15 பக். 19-23
  • யெகோவா நம் புகலிடம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நம் புகலிடம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா—பூர்வகால ஊழியர்களின் “புகலிடம்”
  • யெகோவா—இன்று நம் “புகலிடம்”
  • முடிவு காலத்தில் நம் “புகலிடம்”
  • யாக்கோபு ஆன்மீக விஷயங்களை உயர்வாக மதித்தார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • யெகோவா “சமாதானத்தை அருளும் கடவுள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • “அவர் . . . உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • பைபிள் புத்தக எண் 1—ஆதியாகமம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 3/15 பக். 19-23

யெகோவா நம் புகலிடம்

“யெகோவாவே, தலைமுறை தலைமுறைக்கும் நீங்களே எங்களுக்குப் புகலிடம்.”—சங். 90:1, NW.

எப்படிப் பதிலளிப்பீர்கள்?

  • பூர்வகால ஊழியர்களுக்கு யெகோவா எப்படி ‘புகலிடமாய்’ திகழ்ந்தார்?

  • ஆபிரகாமின் விசுவாசமுள்ள வாழ்க்கையிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • யெகோவா நம்முடைய “புகலிடம்” என எப்படிக் காட்டலாம்?

1, 2. கடவுளுடைய ஊழியர்கள் இந்த உலகில் வாழ்வதைப் பற்றி எப்படி உணர்ந்திருக்கிறார்கள், எந்தக் கருத்தில் அவர்களுக்கு “புகலிடம்” இருக்கிறது?

இந்தப் பொல்லாத உலகில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? அந்நியராய் உணருகிறீர்களா? பூர்வ காலத்திலிருந்தே யெகோவாவின் ஊழியர்கள் அந்நியரைப் போலத்தான் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, அவர்கள் கானான் தேசத்திலே பல இடங்களில் கூடாரம் போட்டுத் தங்கியபோது, “தங்களை அந்நியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் அறிவித்தார்கள்.”—எபி. 11:13.

2 அதேபோல், ‘பரலோகத்தில் குடியுரிமை’ பெற்றுள்ள கிறிஸ்துவின் சீடர்களும் இன்றைய உலகில் தங்களை ‘அந்நியர்களாகவும் தற்காலிகக் குடிகளாகவும்’ கருதுகிறார்கள். (பிலி. 3:20; 1 பே. 2:11) கிறிஸ்துவின் “வேறே ஆடுகளும்” அப்படித்தான் கருதுகிறார்கள்; கிறிஸ்து “இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.” (யோவா. 10:16; 17:16) என்றாலும், கடவுளுடைய மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பும் அன்பும் நிறைந்த ஒரு “புகலிடம்” இருக்கிறது, விசுவாசக் கண்களால் பார்க்கிறவர்களுக்கு மட்டும்தான் அது தென்படும். “யெகோவாவே, தலைமுறை தலைமுறைக்கும் நீங்களே எங்களுக்குப் புகலிடம்” என்று மோசே எழுதினார். (சங். 90:1, NW) அப்படியானால், பூர்வ காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா எப்படி ‘புகலிடமாய்’ விளங்கினார்? தம்முடைய பெயர் தாங்கிய மக்களுக்கு இன்று அவர் எப்படி ‘புகலிடமாய்’ இருக்கிறார்? எதிர்காலத்திலும் அவரே நம் புகலிடமாய் எப்படி இருப்பார்?

யெகோவா—பூர்வகால ஊழியர்களின் “புகலிடம்”

3. சங்கீதம் 90:1-ல் யெகோவா எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறார், ஏன்?

3 பைபிளில் அநேக சொல்லோவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ஓர் உதாரணம் சங்கீதம் 90:1. இதில், யெகோவா ஒரு புகலிடமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். யெகோவா பல விதங்களில் ஒரு புகலிடத்தைப் போல இருக்கிறார். உதாரணமாக, ஒரு புகலிடம் பாதுகாப்புத் தருவதைப் போலவே யெகோவாவும் தம்முடைய மக்களுக்குப் பாதுகாப்புத் தருகிறார். அவர் அன்பின் உருவாகவே இருக்கிறார் என்று பைபிள் சொல்வது பொருத்தமாக இருக்கிறது. (1 யோ. 4:8) அவர் சமாதானத்தின் கடவுளாகவும் இருக்கிறார், தம்முடைய உண்மை ஊழியர்களை ‘பாதுகாப்புடன் வாழச் செய்கிறார்.’ (சங். 4:8, பொது மொழிபெயர்ப்பு) விசுவாசமுள்ள நம் முன்னோர்களிடம் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். முதலில் ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம்.

4, 5. ஆபிரகாமுக்குக் கடவுள் எப்படிப் புகலிடமாய் விளங்கினார்?

4 யெகோவா ஆபிரகாமிடம், “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும் . . . விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்று சொன்னார். அப்போது ஆபிரகாமின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்? ஒருவேளை அவர் கவலைப்பட்டிருப்பாரா? அப்படியென்றால், யெகோவா சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவருடைய கவலையெல்லாம் பஞ்சாய்ப் பறந்திருக்கும்: “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; . . . உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்.”—ஆதி. 12:1-3.

5 ஆபிரகாமுக்கும் அவருடைய வம்சத்தாருக்கும் ஒரு புகலிடமாய் இருப்பதாக யெகோவா வாக்கு கொடுத்தார், அந்த வாக்கைக் காப்பாற்றினார். (ஆதி. 26:1-6) உதாரணமாக, எகிப்தின் ராஜா பார்வோனும் கேராரின் ராஜா அபிமெலேக்கும் சாராளின் கற்பைச் சூறையாடவும் ஆபிரகாமைக் கொலை செய்யவும் நினைத்தபோது அதைத் தடுத்து நிறுத்தினார். இதே பிரச்சினையை ஈசாக்கும் ரெபேக்காளும் எதிர்ப்பட்டபோது அவர்களையும் பாதுகாத்தார். (ஆதி. 12:14-20; 20:1-14; 26:6-11) “அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் [யெகோவா] இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்” என நாம் வாசிக்கிறோம்.—சங். 105:14, 15.

“உன்னைக் கைவிடுவதில்லை”

6. யாக்கோபிடம் ஈசாக்கு என்ன செய்யச் சொன்னார், அப்போது யாக்கோபு என்ன யோசித்திருக்கலாம்?

6 அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவர்தான் ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபு. அவர் திருமணம் செய்ய வேண்டிய கட்டம் வந்தபோது அவருடைய தகப்பனாகிய ஈசாக்கு அவரிடம், “நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள்” என்று சொன்னார். (ஆதி. 28:1, 2) ஈசாக்கின் சொல்லுக்கு யாக்கோபு உடனடியாகக் கீழ்ப்படிந்தார். கானானில் வாழ்ந்துவந்த தன்னுடைய குடும்பத்தாரின் பாதுகாப்பு நிழலைவிட்டு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஆரானுக்குப் பயணமானார், அதுவும் தன்னந்தனியாய். (ஆதி. 28:10) அப்போது அவர், ‘நான் எப்போது திரும்பி வருவேன்? என் மாமா என்னை அன்பாக வரவேற்பாரா, தெய்வபக்தியுள்ள பெண்ணை எனக்குக் கொடுப்பாரா?’ என்றெல்லாம் யோசித்திருக்கலாம். இதுபோன்ற யோசனைகள் ஒருவேளை யாக்கோபின் மனதை அலைக்கழித்திருந்தால், பெயர்செபாவிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரத்திலுள்ள லூஸ் நகரை அடைந்தவுடன் அவையெல்லாம் நீங்கியிருக்கும். அங்கு என்னதான் நடந்தது?

7. கடவுள் ஒரு கனவின் மூலம் யாக்கோபுக்கு எப்படி நம்பிக்கை அளித்தார்?

7 லூஸ் நகரில் யாக்கோபின் கனவில் யெகோவா தோன்றி, ‘நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை’ என்றார். (ஆதி. 28:15) இந்தக் கனிவான வார்த்தைகள் யாக்கோபுக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்திருக்கும்! கடவுள் தம் வாக்கை எப்படிக் காப்பாற்றுவார் என்பதைப் பார்க்கும் ஆவலோடு அவர் தெம்புடன் நடப்பதை உங்களுடைய மனக்கண்ணில் காண முடிகிறதா? நீங்கள் வெளிநாட்டில் ஊழியம் செய்வதற்காக உங்கள் குடும்பத்தைவிட்டு வந்திருக்கிறீர்களா? அப்படியானால், யாக்கோபின் மனதில் அலைமோதிய உணர்ச்சிகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அதோடு, யெகோவா உங்களைக் கண்ணுக்குக் கண்ணாகக் காத்து வருவதை அனுபவப்பூர்வமாய் உணரவும் முடியும்.

8, 9. யாக்கோபுக்கு யெகோவா எப்படி ‘புகலிடமாய்’ இருந்தார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

8 யாக்கோபு ஆரானை அடைந்தவுடன், அவருடைய மாமா லாபான் அவரை அன்போடு வரவேற்றார்; பின்பு, லேயாளையும் ராகேலையும் அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் பிற்பாடு, யாக்கோபைச் சுரண்டிப்பிழைக்கப் பார்த்தார்; பத்துத் தடவை அவருடைய சம்பளத்தை மாற்றினார்! (ஆதி. 31:41, 42) இருந்தாலும், எப்போதும்போல் யெகோவா தன்னைக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் யாக்கோபு இந்த அநியாயங்களைச் சகித்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை, யெகோவா அவரைக் கவனித்துக்கொண்டார். சொல்லப்போனால், கானான் தேசத்துக்குத் திரும்பிப் போகும்படி யாக்கோபிடம் கடவுள் சொன்னபோது, “திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும்” அவரிடம் இருந்தன. (ஆதி. 30:43) யாக்கோபு மனம் நெகிழ்ந்துபோய் கடவுளிடம் இப்படிச் சொன்னார்: “அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.”—ஆதி. 32:10.

9 “யெகோவாவே, தலைமுறை தலைமுறைக்கும் நீங்களே எங்களுக்குப் புகலிடம்” என்று கடவுளிடம் மோசே சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை, அல்லவா? (சங். 90:1, NW) இன்றும்கூட இந்த வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன; ஏனென்றால், அவர் “நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல.” ஆம், யெகோவா தேவன் இன்றும்கூட தம்முடைய விசுவாசமுள்ள ஊழியர்களுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தருகிற புகலிடமாய் இருந்துவருகிறார். (யாக். 1:17) எப்படி என்று பார்ப்போம்.

யெகோவா—இன்று நம் “புகலிடம்”

10. யெகோவா தம்முடைய ஊழியர்களுக்குத் தொடர்ந்து புகலிடமாய் இருக்கிறார் என்று நாம் ஏன் உறுதியாய் நம்பலாம்?

10 இதைக் கற்பனை செய்து பாருங்கள்: உலகம் முழுக்க ஊடுருவியிருக்கிற ஒரு சட்டவிரோத கும்பலுக்கு எதிராக நீங்கள் நீதிமன்றத்தில் சாட்சி சொல்கிறீர்கள். அதன் தலைவன் பெரிய கில்லாடி, செல்வாக்குள்ளவன், ஈவிரக்கமில்லாதவன், பொய்யன், கொலைகாரன். நீங்கள் சாட்சி சொன்னபின் நீதிமன்ற வாசலைவிட்டு வெளியே வரும்போது எப்படி உணருவீர்கள்? பாதுகாப்பாகவா? இல்லவே இல்லை. சொல்லப்போனால், உங்களுக்குப் பாதுகாப்புத் தரச் சொல்லி அதிகாரிகளிடம் கேட்பீர்கள். இது யெகோவாவின் ஊழியர்களுடைய நிலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கிறது; ஏனென்றால், அவர்கள் யெகோவாவின் பரம விரோதியான சாத்தானுக்கு அஞ்சாமல் அவனை அம்பலப்படுத்துகிறார்கள்; யெகோவாவின் சார்பாகத் தைரியமாய்ச் சாட்சி சொல்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:17-ஐ வாசியுங்கள்.) ஆனால், கடவுளுடைய மக்களின் வாயைச் சாத்தானால் அடைக்க முடிந்திருக்கிறதா? இல்லை! உண்மையில் நாம் தொடர்ந்து ஆன்மீக ரீதியில் செழித்தோங்குகிறோம்; அதற்கு ஒரே காரணம்: யெகோவா நமக்கு அடைக்கலமாகவும் ‘புகலிடமாகவும்’ இருந்துவருகிறார், முக்கியமாக இந்தக் கடைசி நாட்களில். (ஏசாயா 54:14, 17-ஐ வாசியுங்கள்.) சாத்தான் நம்மை ஏமாற்றிவிடாதபடி ஜாக்கிரதையாக இருந்தால், எப்போதும் யெகோவா நம்முடைய புகலிடமாய் இருப்பார்.

கடவுளுடைய ஊழியர்களுக்குத் தேவதூதர்கள் ஆதரவும் பாதுகாப்பும் அளிக்கிறார்கள்

11. விசுவாசமுள்ள முன்னோர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

11 இன்னொரு விஷயத்திலும், விசுவாசமுள்ள முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் கானான் தேசத்தில் வாழ்ந்தபோதிலும், அந்த மக்களுடன் ஒட்டி உறவாடவில்லை. அவர்களுடைய பொல்லாத செயல்களை, ஒழுக்கங்கெட்ட செயல்களை, வெறுத்தார்கள். (ஆதி. 27:46) ‘எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது’ என்ற நீண்ட பட்டியல் அவர்களுக்குத் தேவைப்படவில்லை, நியமங்களின்படி அவர்கள் வாழ்ந்தார்கள். யெகோவாவையும் அவருடைய பண்புகளையும் பற்றி என்ன அறிந்திருந்தார்களோ அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. முடிந்தவரை இந்த உலகத்தோடு ஒத்துவாழலாம் என அவர்கள் நினைக்கவில்லை. அதைவிட்டு முழுவதும் ஒதுங்கியிருக்கவே பார்த்தார்கள். ஏனென்றால், யெகோவாவைத் தங்களுடைய புகலிடமாக ஆக்கியிருந்தார்கள். நமக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரி! நண்பர்களையும் பொழுதுபோக்கையும் தேர்ந்தெடுப்பதில் விசுவாசமுள்ள முன்னோர்களை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், சபையிலுள்ள சிலர் ஓரளவுக்காவது சாத்தானின் உலகத்தில் பாதுகாப்பாக வாழ்வதுபோல் உணர்கிறார்கள். அதுபோன்ற எண்ணம் உங்கள் மனதில் கொஞ்சம் எட்டிப் பார்த்தாலும், அதைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். இந்த உலகம் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். அது அவனுடைய அன்பற்ற மனப்பான்மையை... சுயநலமிக்க சிந்தையை... வெளிப்படுத்துகிறது.—2 கொ. 4:4; எபே. 2:1, 2.

12. (அ) யெகோவா தம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு என்னென்ன ஆன்மீக ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்? (ஆ) அவற்றைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

12 சாத்தானின் தந்திரங்களைச் சமாளிக்க வேண்டுமானால், யெகோவா செய்திருக்கிற எல்லா ஆன்மீக ஏற்பாடுகளையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்காக, அதாவது தம்மைப் புகலிடமாக ஏற்றுக்கொண்டவர்களுக்காக, கிறிஸ்தவக் கூட்டங்கள், குடும்ப வழிபாடு போன்ற ஏற்பாடுகளை அவர் செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, மேய்ப்பர்களை “பரிசுகளாக” நமக்குத் தந்திருக்கிறார்; வாழ்க்கைச் சவால்களைச் சமாளிக்க நாம் திணறும்போது இவர்கள் ஆதரவும் ஆறுதலும் தருகிறார்கள். (எபே. 4:8-12) பல வருடங்களாக ஆளும் குழுவின் அங்கத்தினராக இருந்த சகோதரர் ஜார்ஜ் கேங்கஸ் இப்படி எழுதினார்: “[கடவுளுடைய மக்களோடு] இருக்கும்போது என் குடும்பத்தாரோடு ஒரு புகலிடத்தில் இருப்பதுபோல்... ஆன்மீகப் பூஞ்சோலையில் இருப்பதுபோல்... உணர்கிறேன்.” நீங்களும் அப்படித்தான் உணருகிறீர்களா?

13. எபிரெயர் 11:13-ல் இருந்து நாம் என்ன முக்கியப் பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

13 விசுவாசமுள்ள முன்னோரிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிற மற்றொரு பாடம், தங்களைச் சுற்றியுள்ள மக்களிலிருந்து அவர்கள் வித்தியாசமாய் நடந்துகொண்டதே. முதல் பாராவில் பார்த்தபடி, “தாங்கள் குடியிருந்த தேசத்தில் தங்களை அந்நியர்கள் என்றும், தற்காலிகக் குடிகள் என்றும் [எல்லோருக்கும்] அறிவித்தார்கள்.” (எபி. 11:13) மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக நடந்துகொள்ள நீங்கள் திடத்தீர்மானமாய் இருக்கிறீர்களா? அப்படிச் செய்வது சில சமயத்தில் போராட்டமாக இருக்கலாம். ஆனால், கடவுளுடைய உதவியாலும் சக கிறிஸ்தவர்களின் ஆதரவாலும் நீங்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும். நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் வையுங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிற எல்லோருமே ஒருவித மல்யுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது! (எபே. 6:12) இருந்தாலும், யெகோவாவில் நம்பிக்கை வைத்து அவரை நம் புகலிடமாக ஆக்கினால் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும்.

14. யெகோவாவின் ஊழியர்கள் எந்த “நகரத்திற்காக” காத்திருந்தார்கள்?

14 மற்றொரு முக்கியமான விஷயம்: ஆபிரகாமைப்போல் கண்களைப் பரிசின்மீது பதிய வைக்க வேண்டும். (2 கொ. 4:18) ‘கடவுளே கட்டியமைத்த உறுதியான அஸ்திவாரங்கள் உள்ள நகரத்திற்காக ஆபிரகாம் காத்திருந்தார்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 11:10) அந்த ‘நகரமே’ மேசியானிய அரசாங்கம். ஆபிரகாம் அந்த “நகரத்திற்காக” காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு கருத்தில், நாம் அதற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அது இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்கிறது. விரைவில், இந்தப் பூமியும் அந்த அரசாங்கத்தின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த அரசாங்கத்தை நீங்கள் எந்தளவு நிஜமான ஒன்றாகக் கருதுகிறீர்கள்? வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை... இன்றைய உலகை நீங்கள் பார்க்கும் விதத்தை... எதற்கு முன்னுரிமை தருகிறீர்கள் என்பதை... அது பாதிக்கிறதா?—2 பேதுரு 3:11, 12-ஐ வாசியுங்கள்.

முடிவு காலத்தில் நம் “புகலிடம்”

15. இன்றைய உலகத்தை நம்புகிறவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

15 சாத்தானின் உலகம் முடிவை நெருங்குகையில், அதன் ‘வேதனைகள்’ பல மடங்காகப் பெருகும். (மத். 24:7, 8) மிகுந்த உபத்திரவத்தின்போது நிலைமை இன்னும் மோசமடையும் என்பது உறுதி. அடிப்படை வசதிகள் முற்றிலும் முடங்கிப் போகும், மக்கள் உயிருக்குப் பயந்து வாழ்வார்கள். (ஆப. 3:16, 17) அவர்கள் எதற்கும் வழிதெரியாமல் தத்தளிப்பார்கள்; ஒரு அர்த்தத்தில், “மலைகளிலுள்ள கற்பாறைகளின் இடுக்குகளிலும் குகைகளிலும்” அடைக்கலம் தேடுவார்கள். (வெளி. 6:15-17) ஆனால், நிஜமான குகையிலும் சரி, மலைபோன்ற அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளிலும் சரி, அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது.

16. கிறிஸ்தவச் சபையை நாம் எப்படிக் கருத வேண்டும், ஏன்?

16 என்றாலும், தங்கள் ‘புகலிடமாகிய’ யெகோவா தேவன் தருகிற பாதுகாப்பை அவருடைய மக்கள் தொடர்ந்து அனுபவிப்பார்கள். ஆபகூக் தீர்க்கதரிசியைப் போல அவர்கள் ‘யெகோவாவுக்குள் மகிழ்ந்திருப்பார்கள். தங்கள் ரட்சிப்பின் கடவுளுக்குள் களிகூருவார்கள்.’ (ஆப. 3:18, திருத்திய மொழிபெயர்ப்பு) அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில், என்னென்ன விதங்களில் யெகோவா நமக்கு ‘புகலிடமாய்’ திகழ்வார்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரவேலரைப் போலவே, ‘திரள் கூட்டமும்’ ஒழுங்கமைக்கப்பட்டிருப்பார்கள், தெய்வீக வழிகாட்டுதலைப் பின்பற்ற எப்போதும் தயாராக இருப்பார்கள். (வெளி. 7:9; யாத்திராகமம் 13:18-ஐ வாசியுங்கள்.) அந்த வழிகாட்டுதல் தேவராஜ்ய முறையில், ஒருவேளை சபை வாயிலாக, கிடைக்கலாம். சொல்லப்போனால், உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான சபைகள், ஏசாயா 26:20-ல் (வாசியுங்கள்) முன்னறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பான ‘அறைகளோடு’ சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சபைக் கூட்டங்களை நீங்கள் முக்கியமாய்க் கருதுகிறீர்களா? சபை மூலம் யெகோவா தருகிற வழிகாட்டுதலை உடனடியாக ஏற்று நடக்கிறீர்களா?—எபி. 13:17.

17. இறந்துபோன உண்மை ஊழியர்களுக்குக்கூட யெகோவா எப்படி ‘புகலிடமாய்’ திகழ்கிறார்?

17 மிகுந்த உபத்திரவத்திற்கு முன்னால் இறந்துவிடுகிற உண்மை ஊழியர்களும்கூட தங்கள் ‘புகலிடமாகிய’ யெகோவாவின் மனதில் பத்திரமாய் இருப்பார்கள். எப்படி? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இறந்து பல காலம் கழித்து யெகோவா மோசேயிடம், ‘நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன்’ என்றார். (யாத். 3:6) இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டிய பின்பு, இயேசு கூடுதலாக இப்படிச் சொன்னார்: “கடவுளைப் பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள்; அதனால் அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார்.” (லூக். 20:38) ஆம், யெகோவாவின் உண்மை ஊழியர்கள் இறந்துவிட்டாலும்கூட அவர் பார்வையில் உயிருள்ளவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவது நிச்சயம்.—பிர. 7:1.

18. புதிய உலகில், யெகோவா தம்முடைய மக்களுக்கு விசேஷ விதத்தில் எப்படி ‘புகலிடமாய்’ இருப்பார்?

18 மிக விரைவில் வரப்போகிற புதிய உலகில் யெகோவா தம்முடைய மக்களுக்கு இன்னொரு கருத்திலும் ‘புகலிடமாய்’ திகழ்வார். “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்” என்று வெளிப்படுத்துதல் 21:3 சொல்கிறது. ஆரம்பத்தில், இந்தப் பூமியை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய இயேசுவை யெகோவா பயன்படுத்துவார். ஆயிரமாண்டின் முடிவில், இந்தப் பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிய பின்பு இயேசு இந்த அரசாங்கத்தைத் தம்முடைய தகப்பனிடம் ஒப்படைத்துவிடுவார். (1 கொ. 15:28) அதன்பின், பரிபூரண மனிதகுலத்துக்கு இயேசு மத்தியஸ்தராக இருக்க வேண்டிய அவசியம் இருக்காது; யெகோவா அவர்களுடன் இருப்பார். எப்பேர்ப்பட்ட அற்புதமான நம்பிக்கை! அதுவரை, யெகோவாவை நம் ‘புகலிடமாய்’ ஆக்குவதன் மூலம் உண்மையுள்ள முன்னோர்களைப் பின்பற்றுவோமாக!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்